top of page

கட்டுரை 16 - கல்விக் கோட்பாடுகள் - இன்றைய கல்விமுறை, இணையவழிக் கல்விமுறை, உயிர்மெய் கல்விமுறை

Updated: Jan 9, 2022


Source: https://www.thehindu.com/news/national/tamil-nadu/safe-practices-for-online-learning-what-the-experts-say/article31966452.ece

  1. முன்னுரை

மனிதர்கள் மட்டுமல்லாமல் எல்லா உயிர்களுமே தமது வாழ்நாளில் ‘கற்றல்’ நடவடிக்கையில் தங்களைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. தென்னந்தோப்பில் ஒரு தென்னை மரம் சூரிய ஒளிக்காக சற்றே ஒதுங்கி வளரும் போதும், கல்லை எடுப்பது போல் குனிந்து பாசாங்கு செய்யும் போது நாய் பதுங்கி ஓடும்போதும், கம்பை எடுத்ததும் மாணவர் கைகட்டி வாய்ப் பொத்தி நிற்கும்போதும் இதையே உறுதிப்படுத்துகிறது. இருந்தாலும் இக்கட்டுரையில் மனிதகுலத்தின் கற்றல் பற்றி மட்டுமே நம்மைச் சுருக்கிக் கொள்வோம்.


செயல்வழிக் கற்றல், ஆய்வுவழிக் கற்றல், கலைவழிக் கற்றல் மற்றும் சூழல்வழிக் கற்றல் என்கிற நான்கு வழிமுறைகளையும் தேவையான அளவில் கலந்துக் கற்கும் போது, கற்பவனுக்கு சுயமெய்யறிவும் அருட்கருணையும் பொங்குகிறது. இந்த கற்றல்முறையை உயிர்மெய் கல்விமுறை எனக் கட்டுரை ஆசிரியர் அழைக்கிறார்.


ஆனால் பாரம்பரிய கல்வி முறையில் இப்படிப்பட்ட உயிர்ப்பானக் கற்றல் நடைபெறுவது இல்லை. மாறாக, மாணவர்கள் கற்றலில் பங்கெடுக்காத ஒரு வழிப்பாதையாக கற்றல் இருக்கிறது. உபகரணங்களும் தொழிற்நுட்பமும் துணைக்கருவிகளாகத் தான் பயன்படுகின்றனவேத் தவிர அவை மையத்திற்கு வரவில்லை.


இருபத்தியோராம் நூற்றாண்டு வேறு சவால்களை முன் வைக்கிறது. உலகமாயமாக்கப்பட்ட பொருளாதார, சமூக கலாச்சார அரசியல் சூழலில் கற்றல் கற்பித்தல் இணையத்தை மையப்படுத்தியிருக்க வேண்டிய அவசியத்துக்கு மனிதகுலத்தைத் தள்ளிக் கொண்டுச் சென்றிருக்கிறது. இயந்திரங்களை மையப்படுத்திய வாழ்க்கை முறை முன்னிறுத்தப்படும் போது, கற்றல் கற்பித்தலும் அந்த வளையத்திற்குள் இழுத்து வரப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.


இங்குதான் இடைவெளியே உள்ளது. பாரம்பரியக் கல்விமுறை இருபத்தியோராம் நூற்றாண்டு சவாலை எதிர்கொள்ள உதவுமா? இணையக் கல்விமுறை போதுமானதா? அல்லது பாரம்பரியக் கல்விமுறையில் சில மாற்றங்களைச் செய்து அதோடு இணையவழிக் கல்விமுறையையும் இணைத்து உயிர்மெய் கல்விமுறையை முன்னெடுக்க வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களையே இக்கட்டுரை அலசுகிறது.


  1. கருதுகோள்

நீடித்த நிலைத்த வாழ்விற்கு பாரம்பரிய கல்விமுறையில் சில மாற்றங்களைச் செய்து அதோடு இணையகல்வி முறையையும் இணைத்து, உயிர்மெய் கல்வி முறையை முன்னெடுக்க வேண்டும்.


  1. இருபத்தியோராம் நூற்றாண்டின் நிலை

    1. பொருளாதார உலகமயமாக்கல்

      1. சந்தை

இன்றைய உலகம் சந்தையை மையப்படுத்தியே இயங்குகிறது. உற்பத்தியாளர்களாகவோ அல்லது நுகர்வோர்களாகவோ தான் ஒவ்வொரு மனிதரும் பார்க்கப்படுகிறார்கள். உற்பத்திமுறைக்கு உறுதுணையாக இருப்பது எப்படி என்று மாணவர்கள் கற்ற வண்ணம் இருக்கிறார்கள். அதோடு ஊடகங்கள் வாயிலாக எல்லோரையும் நுகர்வோர்களாக மாற்றும் பணியும் நடந்து கொண்டே இருக்கிறது.


உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலுக்குப் பிறகு பண்டங்களையும், சேவைகளையும், தொழிலாளர்களையும் பெறவும், தரவும் ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளை அண்டி இருக்க வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாடு, குறிப்பிட்ட பண்டத்தில் தன்னிறைவு பெற்றிருந்தாலும், அதேப் பண்டத்தை வேறு நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் உலகமயமாக்கல் தள்ளியிருக்கிறது. சான்றாக 2018-19ம் ஆண்டு இந்தியா ‘பருப்பு’ உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்தப் போதும் (23 மில்லியன் டன்) மேலும் 5.6 மில்லியன் டன் பருப்பை தான்சானியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்ததால் விவசாயிகள் சரியான விலைக்கு விற்க முடியவில்லை. [3]


ஒரே மாதிரியான பொருட்களை, ஒரே வாணிகச்சங்கத்திடமிருந்து உலக மக்கள் அனைவரும் பெறக்கூடிய வசதியை இருபத்தியோராம் நூற்றாண்டு வழிவகை செய்திருக்கிறது. உதாரணத்திற்கு ‘மெக்டோனல்ஸ்’ உணவு அல்லது ‘கொக்கோ கோலா’ குளிர் பானம் உலகின் மூலை முடுக்கிலெல்லாம் அதே அளவோடும் சுவையோடும் கிடைக்கிறது. [1]


பொருளைச் செய்யக்கூடிய தொழிற்நுட்பமோ அல்லது தரவுகளை கையாளக்கூடிய தொழிற்நுட்பமோ உலகளாவிய அளவில் பண்டமாக மாற்றப்பட்டு விட்டதால், ஒரே தொழிற்நுட்பத்தைக் கொண்டு உலகில் எந்த மூலையிலிருந்தாலும் அதைப் பயன்படுத்தி உற்பத்திச் செய்யவோ, நுகரவோ முடியும். சான்றாக, அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட (48 மணி நேரம் செய்த வேலையை வெறும் 20 நிமிடங்களில்) நீரைச் சுத்திகரிக்கும் புதிய தொழிற்நுட்பம் பல நாடுகளிலும் புதிய புரட்சியை செய்ய முனைந்திருக்கிறது. [4]


இவைத் தவிர, ஒரு யோசனை அல்லது கருத்து ஒட்டு மொத்த மனித குலத்திற்கான சொத்தாக எளிதாக மாறிவிடுகிறது. காப்புரிமையின் அடிப்படையில் ஒரு யோசனை பதிவு செய்யப்படும் போது அதை வாங்கும் எவரும் பயன்படுத்திக் கொள்ளமுடிகிறது. அதனால் புதிய கண்டுபிடிப்புகள் நிறைய வருவதற்கு வழிவகையாகிறது.


அதோடு நில்லாமல், திறமையுள்ள வேலையாட்கள் ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்கும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும் எளிதாகச் சென்று தங்கள் அறிவையும் உழைப்பையும் கொடுத்து, தாங்களும் முன்னேறி, தாங்கள் சார்ந்திருக்கும் நிறுவனம் மற்றும் தேசத்தையும் முன்னேறும்படி செய்யமுடிகிறது.


இருபத்தியோராம் நூற்றாண்டைப் புரிந்துக் கொள்ள முயற்சிக்கும் போது சந்தையைப் பற்றி மேற்சொன்ன கருத்துக்களைப் புரிந்துக் கொள்வது இன்றியமையாததாகிறது. இருபத்தியோராம் நூற்றாண்டு பொருளாதாரக் களத்தில் செய்கிற பெரும் மாற்றத்தைப் போலவே பண்பாட்டு தளத்திலும் சொல்லக்கூடிய மாற்றத்தைச் செய்து வருகிறது.


அவைகள் என்னனென்னவென்று பார்ப்போம்.


2. கலாச்சாரம்

ஒரு சமூகத்திற்கு அடையாளம் அதன் மொழி. ஒரு மொழிக்குள்ளே, அதன் எழுத்துக்களில், வார்த்தைகளில், வாக்கியங்களில், இலக்கணத்தில், இலக்கியத்தில் அச்சமூகத்தின் நாகரீகம், வரலாறு, பண்பாடு எல்லாம் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு மொழி பொது உலக மொழியாக அரச மரியாதையோடு வலம் வந்துக் கொண்டிருக்கிறது. ஆம்! ஆங்கில மொழி இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. பல மொழிகள் அழிந்து வருகின்றன. அருகி வருகின்றன.


2018ம் வருடம் பிப்ரவரி 19ம் தியதி தினமணி பத்திரிக்கையில் வந்தச் செய்தியொன்றில், இந்தியாவில் மட்டும் 42 மொழிகள் அழியும் நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஆங்கில வளர்ச்சியும் இதனுள் ஒன்று என்பதை ஆங்கில பள்ளிகள் வருடாவருடம் அதிகமாகிக் கொண்டிருப்பதை வைத்து கருத வாய்ப்பு இருக்கிறது. [5]


ஒரு சமூகத்தின் உணவு என்பது அச்சமூகத்தின் அடையாளங்களுள் முக்கியமான ஒன்று. இருபத்தியோராம் நூற்றாண்டில் தேசிய உணவுகளைப் பின் தள்ளிவிட்டு, அமெரிக்கச் சீன உணவுகள் உலக அளவில் பிரச்சாரம் பண்ணப்பட்டு பரப்பப்படுகிறது. பாரம்பரிய இன உணவுகள் மறக்கடிக்கப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களுக்காக கையில் இருக்கக் கூடிய தொழிற்சாலைகளை மையப்படுத்திய உப்பு சீனி கொழுப்பு மற்றும் இரசாயனம் கலந்த பதப்படுத்தப்பட்ட உணவு, இன்றைக்கு பாரம்பரிய இன உணவுகளை திட்டமிட்டே நமது சாப்பாட்டு இலையிலிருந்து தள்ளிவிட்டிருப்பதாக சைமன் மிஷேல் என்பவர் தனது ‘உணவு அரசியல்’ என்கிற கட்டுரையில் ஆதாரங்களோடு விளக்குகிறார். [6]


இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவு, மரபு சார்ந்த இயற்கையான ஆரோக்கிய உணவுகளை புறந்தள்ளுவது மட்டுமல்லாமல் நீரிழிவு மாரடைப்பு மற்றும் புற்றுநோய்களுக்கு வழிவகுப்பதாகக் கூறுகிறார். இதன் மூலம் மறுபடியும் இரசாயன வழி பன்னாட்டு கம்பெனிகளின் லாபம் சார்ந்த மருத்துவத் துறைக்கு மனித குலத்தை திருப்பிவிடுவதாக அவரே குற்றம் சாட்டுகிறார். [6]

இதேப்போக்கு, இசை மற்றும் கலைகளுக்கும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் பொருந்தும் என்பதை நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற பெருகம்பெனிகளின் சமீப கால வரவுகளிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம்.


இவ்வாறு மரபுசார்ந்த மொழி, உணவு, மருந்து, இசை, இலக்கியம் போன்றவையெல்லாம் இரண்டாம்பட்சம் எனவும், இல்லாதொழிந்தால் நலம் என்பது போலவும் போகிற போக்குக்கு எளிதாக வழிவகுப்பவைகளில் மிக முக்கியமானது அதிவேகமாக வளர்ந்து வரும் இணையவழி கட்டமைப்பு. ஆகவே அந்த இணைய வழி கட்டமைப்பைப் பற்றிச் சற்று ஆராய்வோம்.

B. இணையவழி கட்டமைப்பு

நடப்பு ஆண்டுகளில் நான்காவது தொழிற்புரட்சி நடந்து கொண்டிருப்பதை சமூக பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.


முதலாவது தொழிற்புரட்சி மனிதன் விலங்குகள் மற்றும் இயற்கையிலிருந்து கிடைத்த பொருட்கள் சேர்ந்து செய்த உற்பத்தி வேலைகளை மற்றும் சமூக நடவடிக்கைகளை இயந்திரங்களைக் கொண்டு செய்ய முற்பட்ட போது நடந்தது. [2] உதாரணமாக மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டிக் கொண்டு பயணம் செய்வது குறைந்து, மகிழுந்து கொண்டு பயணம் செய்ததைச் சொல்லலாம். அல்லது ஏர் மற்றும் மாடுகள் கொண்டு நிலத்தை உழுவதை விட்டுவிட்டு டிராக்டர் கொண்டு உழுததைச் சொல்லலாம். இது 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் நடந்தது.


இரண்டாவது தொழிற்புரட்சி மின்சாரம் கண்டுபிடித்தபோது துவங்கியது. அதுவரை நீர் மற்றும் நீராவி கொண்டு உற்பத்தியும் மற்ற சமூக நடவடிக்கைகளும் நடந்துக் கொண்டிருந்த போது, மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதும் எல்லாம் மாறத் தொடங்கியது. [2] ஆறுகளில் வந்து வாய்க்கால் வழி வழிந்து ஓடி ஏற்றம் கொண்டு நீரிறைத்த காலம் மலையேறி மின்சார மோட்டார்கள் மூலம் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டி நிலத்தடி நீர் வயல்களுக்கு வந்து சேர்ந்தது. நிலக்கரி போட்டு, புகை கக்கி நீராவியால் ஓடிக்கொண்டிருந்த புகை வண்டி மின்சாரம் கொண்டு ஓடும் தொடர்வண்டியானது. இது நடந்தது 20ம் நூற்றாண்டு தொடக்கத்தில்.


மூன்றாம் தொழிற்புரட்சி 1959களில் மின்னணு இயந்திரங்கள் வந்து மின்சார இயந்திரங்களைப் பின்னுக்குத் தள்ளியபோது துவங்கியது. கணிணியின் பயன்பாடு விரைவாக எல்லாத்தளத்திலும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. [2] மாடுகட்டிப் போரடித்தக் காலம் போய், டிராக்டர் உழுத காலத்தோடு மின்னணு மூலமாக அரிசியில் கருப்பு அரிசியையும் கல்லையும் வெள்ளை அரிசியிலிருந்து பிரிக்கும் தொழிற்நுட்பம் வந்தது. கணிணி, உற்பத்தி வரிசையில் மிக முக்கிய இடத்தை வகிக்கத் தொடங்கியது. புதிய கணிணி மென்பொருட்கள் ஆட்கள் மற்றும் இயந்திரங்கள் வேலை செய்வதை வெகுவாகக் குறைத்து புதிய பரிமாணத்தைக் காட்டியது.


நான்காவது தொழிற்புரட்சி, இணையம் உலகத்தை ஆளத் துவங்கிய இருபத்தியோராம் நூற்றாண்டில் துவங்கியது. எண்முறை (digital) தொழிற்நுட்பம் கணிணிகளை கையாள்வதற்கும் இணைய வசதியை பயன்படுத்துவதற்கும் பயன்பட ஆரம்பித்தது. கூடவே இந்த நான்காம் தொழிற்புரட்சியைப் பற்றி ஆழமாக ஆராய்வது எதிர்கால கற்றல் நடவடிக்கைக்கு யோசனைகள் சொல்ல உசிதமாக இருக்கும். அதில் பொருட்கள் இணைப்பு, நிகழ்கால தரவுகள் மற்றும் இயந்திர கற்றல் ஆகிய சிலவற்றைப் பற்றி ஆழ்ந்து தெரிந்துக் கொள்வது நல்லது.

1. பொருட்கள் இணைப்பு

இணைய தொழிற்நுட்பம் மூலமாக உலகில் உள்ள எல்லா மின்னணு இயந்திரங்களும், அவை ஒவ்வொன்றுக்கும் ஒர் எண் கொடுக்கப்பட்டு இணைக்கப்படும். [2] உதாரணமாக என் வீட்டில் இணைய வசதியுடன் கூடிய ஒரு மின்னணு குளிர்சாதனப்பெட்டி இருக்கிறதாக வைத்துக் கொள்வோம். அதில் நான் வாங்கி வைத்திருக்கும் ஏதாவது ஒரு காய்கறி குறையும்போதோ அல்லது இல்லாது போகும்போதோ என் குளிர்சாதனப் பெட்டியே நான் எப்பொழுதும் இணைய வழியாக பொருட்கள் வாங்கும் கடைக்கு அறிவிக்கும். அந்தக்கடை இணையவழியே அந்தப் பொருளை டிரோன் மூலமாக அனுப்பும். டிரோன் என் வீட்டுக் கதவைத் தட்ட, என் வீட்டில் உள்ள ரோபோ என்கிற மனித இயந்திரம் அதன் வருகையை முன்கூட்டியே தெரிந்திருப்பதால் கதவைத் திறந்து பொருளை வாங்கி குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துவிடும். ஏனென்றால் சம்பந்தப்பட்ட பொருட்கள் எல்லாமே இணையத்தால் இணைக்கப்பட்டிருக்கும். அதனால் இந்த நடவடிக்கைகள் எல்லாவற்றையும் என் கைபேசி மூலம் நான் அவ்வப்போது தெரிந்துக் கொள்ளலாம். இவ்வாறு என் வீட்டில் உள்ள மின்னணு இயந்திரங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, உலகத்தில் உள்ள மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் தேவைப்படுகிற இடத்தில் எல்லாம் இணைக்கப்படும்.


2. நிகழ்கால தரவுகள்

இவ்வாறு வீட்டில் மட்டுமல்ல அலுவலகம் தொழிற்சாலை என்று எல்லாத் தனிமனித வியாபார, வணிக, உற்பத்தி, கல்வி, அரசாங்க நிறுவனங்களில் உள்ள மின்னணு இயந்திரங்களும் இணையம் வழி இணைக்கப்படும் போது என்ன நடக்கும்? ஒரு செயல்பாட்டின் நிகழ்கால தரவுகளை அந்தந்த வினாடியிலேயே ஒருவர் அறிந்துக் கொள்ளமுடியம். யார் என்ன எங்கு எவ்வளவு உற்பத்தி செய்வது, எவ்வளவு வாங்குவது என உடனுக்குடன் தெரிந்துக் கொண்டே இருக்க முடியும். [2]


3. இயந்திரக் கற்றல்

இயந்திரங்கள் இணைக்கப்பட்டு நிகழ்காலத் தரவுகளை உடனுக்குடன் தருவது மட்டுமல்ல மின்னணு இயந்திரங்களின் வேலை. அவைகள் தொடர்ந்துக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். எப்படி? செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் தங்கள் அனுபவத்தை வைத்துக் கொண்டு மனித ஊடாடல் இல்லாமலேயே புதிய கட்டளைகளைத் தாங்களே தமக்குக் கற்பித்துக் கொள்வதும் நடக்கும்.

இவையெல்லாமே இந்த இருபத்தியோராம் நூற்றண்டில் நடந்துக் கொண்டே இருக்கிறது. மனிதகுலம் இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளைத் துவங்கிவிட்டு பெருமையுடன் இணையவழி கட்டமைப்பை வளர்க்கும் பணியில் மும்மரமாக இருக்கிறது.

இவ்வாறு உலகமயமாதலும் இணையவழி கட்டமைப்பும் இணைந்து பீடுநடை போடும் போது வேறொன்று அதற்கு அத்தயாவசியம் ஆகிறது. அதுவென்ன? மனிதகுலம் முழுவதும் புரிந்து கொள்ளும் ஒற்றைக் கலாச்சாரம்.

அதைப்பற்றி தொடர்ந்து ஆராய்வோம்.


C. ஒற்றைக் கலாச்சாரம்

ஒற்றைக் கலாச்சாரம் என்ன சொல்கிறது?


வெளிக் கலாச்சாரங்கள் செல்வாக்குப் பெற்று தமது தேசிய கலாச்சாரத்தை அழித்துவிடாமல் பாதுகாக்கும் நோக்கில், வெளிக் கலாச்சாரங்களை வெறுத்துவிட்டு, தமது தேசியக் கலாச்சாரத்தை மட்டும் தூக்கிப் பிடிக்கும் பழக்கம் இன்று நேற்று வந்ததல்ல. எல்லா காலத்திலும் எல்லா தேசிய இனங்களும் செய்கிற நடவடிக்கை தான்.


ஆனால் இன்று என்ன நடக்கிறது? உலக அளவில் ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே உடை அணியும் முறை, ஒரே மருத்துவ முறை, ஒரே உற்பத்தி முறை, ஒரே மதம், ஒரே சித்தாந்தம், ஒரே நுகர்வு மனப்பான்மை, ஒரே அறிவுக் களஞ்சியம், ஒரே இசை, ஒரே பொழுதுபோக்கு ஆகியவை வரவேண்டி சில ஆதிக்கச் சக்திகள் தங்கள் வலையை விரிக்கத் தொடங்கியதன் விளைவு, பல தேசியவினங்கள் பயத்தில் இருக்கின்றன. [7,8]


கலாச்சார பன்முகத்தன்மை அழிக்கப்பட்டு, ஒற்றைக் கலாச்சாரத்தை, ஏனைய கலாச்சாரங்கள், பயத்தினாலோ பொருளாதார நிர்ப்பந்தத்தினாலோ அறியாமையினாலோ தழுவிக்கொள்ளவும் செய்கின்றன. இந்தப்போக்கு சர்வதேசியளவிலும் தேசியளவிலும் கூட நடக்கிறது. இது உலகமயமாதலின் ஒரு பாதிப்பாகவும் இணைய கட்டமைப்பின் தேவையாகவும் பார்க்கலாம்.


இப்படி ஒற்றைக் கலாச்சாரத்தை மற்றையக் கலாச்சாரங்களின் மேல் திணிக்க ஆதிக்க சக்திகள் இரவும் பகலும் உற்பத்தியில் ஈடுபட வேண்டியிருக்கிறது. இயற்கையை அளவுக்கதிமாக சுரண்ட வேண்டியிருக்கிறது. இப்படி இயற்கையின் மீது நடத்தும் அதீத வெறியாட்டம் காலநிலை மாற்றத்தில் போய் முடிகிறது. அப்படி காலநிலை மாற்றத்தில் என்னதான் நடக்கிறது?


D. காலநிலை மாற்றம்

மனிதன் காடார்ந்த (wild) விலங்குகளை அழித்து மனிதத் தேவைக்காக விலங்குகளை பணியவைக்கப்படும் (tamed) வேலையில் மும்மரமாக இருக்கிறான். உலக வெப்ப அளவு வரலாறு காணாத அளவுக்கு அதிகமாகி இருக்கிறது. அதிமாகிக் கொண்டும் இருக்கிறது. கடல் மட்டம் உயர்கிறது. வளங்கள் குறைந்துக் கொண்டே இருக்கின்றன. ஆர்க்டிக் உறைபனி உருகத் தொடங்கிவிட்டது. மீத்தேன் வாயுவின் அளவு அதிகமாகி ஓசோன் படலம் பிளவுபட்டிருக்கிறது. இதன் விளைவுகள் மோசமாகவும் அபாயகரமாகவும் இருக்கப் போகிறது. மிதமான பொருளாதாரம் கொண்டு, வீணாக்குவதைக் குறைத்து எளிய வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் மனிதகுலம் இருக்கிறது. [9]


இந்த பின்புலத்தோடு கல்விச் சூழலை அணுக வேண்டியிருக்கிறது.


V. இன்றைய கல்வி முறையின் நிலை

A. கற்றல்முறையும் பாடத்திட்டமும்

கற்றல் என்பதைவிட கற்பித்தல் என்பதே பெரும்பாலான பள்ளிகளில் நடைபெறுகிறது. ஆசிரியரை மையப்படுத்திய கற்றல் நடவடிக்கையாக இப்பொழுது இருக்கிறது என்பதே இதன் பொருள். கற்றல்முறை ஒருவழிப்பாதையாக, ஆசிரியரே தகவல் தெரிந்தவராகவும் அதை மாணவர்களின் தலையில் இறக்குபவராகவும் இருக்கிறார். எவ்வளவு பாடப் பொருட்களைக் கொண்டு அல்லது தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த தகவல் இறக்கும் வேலையைச் செய்தாலும் அது மாணவர்களின் சுயசிந்தனைக்கு வழிவகுக்கவில்லை.

பாடத்திட்டம் அரசாங்கத்தின் அறிவுரையின் பேரில் நாட்டின் தொழில் மற்றும் வியாபாரச் சூழலுக்கு ஏற்றாற் போல உருவாக்கப்படுகின்றன. வளர்கிற அல்லது மாறுகிற வணிகச் சூழலுக்குத் தேவையான அறிவும் திறனும் கொடுக்கிறவைகளாக இருக்கின்றன. சமூகமயமாக்கலுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை சுயவெளிப்பாட்டிற்கு கொடுப்பதில்லை.


B. வீட்டுப்பாடமும் தேர்வும்

தனிமனிதக் கற்றலுக்கு வீட்டுப்பாடங்கள் உதவுகின்றன என்றாலும் குழந்தைகள் மிகுந்த சுமைக்கு ஆளாகிறார்கள் என்பதை யதார்த்தத்தைப் பார்க்கும் பொழுது புரிந்துக்கொள்ள முடியம். வீட்டில் பெற்றோர்களோடும் மற்றவர்களோடும் பழகிப் பண்பாட்டைக் கற்றுக் கொள்ளும் நேரமும், ஓய்வுக்கான நேரமும் திருடப்படுகிறது. இது மனஉளைச்சலைத் தருகிறது.


திறன் மற்றும் அறிவு அடைவு பெற்றிருப்பதை மதிப்பீடு செய்துக் கொள்வது நலம் தான். அது மற்றவர்களோடு போட்டி போடுவதற்கு அல்ல. தன்னைத்தானே அறிந்துக் கொள்வதற்காக இருக்கவேண்டும். ஆனால் இன்று மதிப்பெண்களை மையப்படுத்தியே எல்லா நகர்வுகளும் இருக்கின்றன. ஒழுக்கத்தையும் பண்பாட்டையும், உதவி செய்யும் மனப்பான்மையையும் மதிப்பீடு செய்யும் கருவிகளைப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.


C. ஏற்றத்தாழ்வுகளும் வன்முறைகளும்

பாடத்திட்டங்களும் கற்றல் முறையும் தேர்வும் மாணவர்களை ரகம் வாரியாகப் பிரிக்கிறது. மாணவர்களுக்குள் போட்டியையும் பொறாமையையும் ஏற்படுத்துகிறது. சுயநல சுபாவத்தை அதிகப்படுத்துகிறது. பிற்காலத்தில் சமூகத்திலுள்ள வெவ்வேறு அடுக்குகளில் போய் அமர்ந்து கொள்ளும் வண்ணம் இந்த ஏற்றத்தாழ்வு அவர்களை உந்தித் தள்ளுகிறது.


இப்படி சகமாணவரை எதிரியாக பாவிக்கும் மனப்பான்மை ஊக்குவிக்கப்படுவதாலும் சுயநலமூட்டி வளர்க்கப்படுவதாலும், பயத்தையும் வெட்கத்தையும் கோழைத்தனத்தையும் உருவாக்குவதாலும், மன அழுத்தமும் உளைச்சலும் வெளிப்படுத்த அதிகாரப் போக்கை சிலர் கையிலெடுப்பதாலும், வன்முறை காட்சிகள் பள்ளிகளில் அரங்கேறுகின்றன. பாலியல் பலாத்காரங்களும் போதைமருந்துக்கு அடிமையாவதும் குறையவில்லை.


D. உள்கட்டமைப்பு

இன்றுள்ள பள்ளிகளில் விளையாடும் வசதியும் நூலக வசதியும் ஆய்வுக்கூடங்கள் வசதியும் கழிப்பறை வசதியும் கூட்ட அறை வசதியும் இணைய வசதியும் பள்ளி உணவு விடுதி வசதியும் வாகன வசதியும் காற்றும் நீரும் வெளிச்சமும் போதுமானது கிடைப்பதில்லை என்பது தான் உண்மை. சீரான உள் கட்டமைப்பு சீரான கற்றலுக்கு உதவும். போதுமற்ற உள்கட்டமைப்பை வைத்துக்கொண்டு அறிவார்ந்த மற்றும் ஒழுக்கமான சமூகத்தை எதிர்பார்க்க முடியுமா?

E. ஆசிரியர்கள்

இன்றைக்கு உள்ள ஆசிரியர்களும், அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் பேராசிரியர்களும் இந்தக் கல்விமுறையில் உருவானவர்கள்தான். அதனால் இந்தக் கல்விமுறையின் விழுமியங்கள்தான் அவர்களுக்கும் இருக்கும்.


F. லாபநோக்கம்

அறிவையும் திறனையும் பண்பாட்டையும் கற்றுக்கொடுப்பதை நோக்கமாக கொள்வதைவிட லாபத்தை ஈட்டுவதையே நோக்கமாகக்கொண்டு பலப் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள் ஏனோதானோவென்று நடப்பதும், தனியார் பள்ளிகள் லாப நோக்கோடு நடப்பதும் ஆபத்து இல்லையா?


ஆக, வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்கிற பழமொழிக்கிணங்க நடக்கும் கல்விமுறை பணமும் பதவியும் அதிகாரமும் உள்ளவர்களுக்குச் சேவை செய்யும் துறையாகவே இருக்கிறது. இது தொடரவேண்டுமா? என்பதே கேள்வி. இந்தச் சூழலில் இணையவழிக்கல்வியும் பரவலாக முன்வைக்கப்படும்போது அதன் கூறுகளையும் ஆராய்ந்து விடுவது நல்லது.


VI. இணையவழிக் கல்வி முறையின் கூறுகள்

A. உள்கட்டமைப்பு மாற்றம்

ஓர் ஆசிரியர் கரும்பலகை அருகை நின்றுக் கொண்டு வரிசை வரிசையாக அவரை நோக்கி அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு அச்சடிக்கப்பட்டப் புத்தகத்தை வைத்துக்கொண்டு பாடத்தை விளக்குகிற காலம் போய்விட்டதை உணரமுடிகிறது. மாணவர்கள் பங்கெடுக்கிற தோதுக்கு வகுப்பறைகள் மாற்றப்பட்டு வருகின்றன. மாணவர்கள் கூட்டாக சிலப் பணிகளை தாங்களே செய்துக் கற்கும்முறை கூட வந்துவிட்டது. அது மட்டுமா? வீட்டில் இருந்தபடியே தங்கள் கணிணிகளில் ஆசிரியர்கள் அனுப்பும் பாடங்களை குறிப்பெடுத்து கற்றுத் தங்கள் புரிதலை வெவ்வேறு முறைகளில் மற்றவர்களோடு வெளிப்படுத்தும் முறையும் வந்துவிட்டது. இன்னும் பள்ளிக்குச் செல்லாமலேயே ஆசிரியர்கள் அவர்கள் வீட்டில் இருந்தபடியும் மாணவர்கள் அவரவர்கள் வீட்டில் இருந்தபடியும் கற்கும் சூழலும் வந்துவிட்டது.

இது ஆரம்பம் தான். கற்பனை செய்துப் பாருங்கள். அச்சடிக்கப்பட்ட நூலுக்குப் பதில் கைபேசியிலோ, Tabலோ பாடம் இருக்க, மாணவன் தான் விரும்பும் இடத்தில் (வீட்டிலோ, பள்ளியிலோ அல்லது வேறு எங்குமோ) இருந்து கொண்டு 3டி கண்ணாடி அணிந்து பூகோளப் பாடத்தைப் படிக்கும் வாய்ப்பு உலகிலுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் வராமலாப் போய்விடும்?


செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் பெரிதாக்கப்பட்ட உண்மை (Augmented Reality) போன்ற தொழிற்நுட்பங்கள் மூலம் ஒவ்வோரு மாணவரும் தனிப்பட்ட அனுபவத்தைப் பெற முடியம். அவரவர் வேகத்திற்கேற்ப கற்றலும் மதிப்பீடும் நடக்க முடியும். [10]


B. ஆசிரியர்கள் பங்கு

பாரம்பரிய வகுப்பில் இருந்தது போல பாடநூலை விளக்கும் ஆசிரியர் விலகிவிடுவார். மாறாக ஒவ்வொரு மாணவரும் தனிப்பட்ட அளவில் கற்கும் விதமாக ஆசிரியர்கள் முக்கிய கருத்துப்படிவங்களையும் யோசனைகளையும் முன் வைப்பவராக விளங்குவார். அக்கருத்துக்களை எல்லோரும் எளிதில் புரிந்துக் கொள்ளும் விதம் திறமைப் படைத்தவராக இருப்பார். அதோடு மாணவரை கற்றலில் ஊக்கப்படுத்துவபராகவும் திகழ்வார். அது மட்டுமல்ல சமீபத்திய மின்னணு தொழிற்நுட்பங்களைப் புரிந்துக் கொண்டு சிறப்பாகப் பயன்படுத்துபவராகவும் இருப்பார்.


C. பாடத்திட்டம்

பல சவால்களை எதிர்நோக்கும் இன்றைய மற்றும் நாளைய உலகப் பிரச்னைகளுக்குப் பதில் காணும் விதமாக பாடத்திட்டம் அமையும். மின்னணு தொழிற்நுட்பத்தை மையப்படுத்தி உலகம் இயங்க ஆரம்பித்துவிட்டபடியால் பாடத்திட்டம் மின்னணு இயந்திரங்களைப் புரிந்துக் கொள்வது பற்றியும், மின்னணு இயந்திரங்களைக் கொண்டு கற்பது எப்படி என்பது பற்றியும், உலகமயமாக்கலின் தாக்கத்தால் வெவ்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்களோடு பணி செய்வது பற்றியும், தனியார்மயமாக்கலின் தாக்கத்தால் புதியக் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பது எப்படி என்பது பற்றியும், மனிதர்களோடும் இயந்திரங்களோடும் வெற்றிகரமான தகவல்தொடர்பு செய்வது எப்படியென்பது பற்றியும் இருக்கும்.


Robots என்கிற இயந்திர மனிதர்களை உருவாக்குவது மற்றும் இயக்குவது பற்றியும், செயற்கை நுண்ணறிவு பற்றியும், தானியங்கி இயந்திரங்களை உருவாக்குவது மற்றும் இயக்குவது பற்றியும், இதற்கெல்லாம் மென்பொருள் செய்து கணிணிகளை இயக்குவது பற்றியும் பாடத்திட்டம் அமையும். [11]


தற்போது இருக்கும் வேலைவாய்ப்பில் 51% தானியங்கி வேலையாக மாறிவிடும் என McKinsely Global Institute இருக்கும் 740 வேலைகளை ஆராய்ந்து விட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. [11] அதனால் பாடத்திட்டமும் எதிர்கால வேலைகளுக்கு மாணவர்களை தயாரிக்கும் விதமாகவே இருக்கும்.


D. தொழிற்நுட்ப அறிவு

இப்பொழுதும் கூட நூறு வருடங்களுக்கு முன்பு கற்றுக் கொடுத்த, மொழி, கணக்கு, அறிவியல், வரலாறு, பூகோளம், சமூக அறிவியல் என, பழையப் பாடங்களையே நேரடி வகுப்புகளில் பாடமாக நடத்தப்படுகிறது.


எதிர்கால சவால்களை நோக்கும் போது இவை போதாது. தொழிற்நுட்ப அறிவு கொண்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, படைப்பாற்றலுடன் சிந்திப்பது, கூட்டாகச் செயல்படுவது, மின்னணு வன் மற்றும் மென் பொருட்களை உருவாக்குவது போன்றவை உடனடியான தேவையாக இருக்கிறது.

கணிணி அறிவு என்பது மென் பொருட்களுக்கு குறியீடுகள் உருவாக்குவது மட்டுமல்ல, கணக்கீட்டுச் சிந்தனை (Computational thinking), இடைமுக வடிவமைப்பு (Interface design), தரவு பகுப்பாய்வு (Data analysis), இயந்திரக் கற்றல் (Machine learning), இணைய பாதுகாப்பு (Cyber security ), வலைப்பின்னல் (Networking), மற்றும் இயந்திர மனிதர்கள் (Robotics) போன்றவைகளும் அடங்கும். [11]

E. ஊடாடும் கற்றல் (Interactive learning)

ஆசிரியரும் மாணவரும், ஒரு மாணவரும் இன்னொரு மாணவரும், குழுவாக மாணவர்களும் இணைந்து கற்கும் பாணி அதிகரித்து விட்டது. அது மட்டுமல்ல, மனிதர்களும் இயந்திரங்களும் ஊடாடி கற்கும் நிலை இன்னுமதிகரிக்கும். யாரோ ஒருவர் பேச, மற்றவர்கள் அமைதியாக கேட்பதும் பிறகு கேட்டதை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது என்பதும் நகைக்கக்கூடிய முறையாக மாறிவிட்டது.


பங்கெடுத்துக் கற்றுக் கொள்வது என்பது பழக்கமாகிப் போய்விடும். கலந்துரையாடலில் பங்கெடுப்பது, கலைகள் மூலமாக பங்கெடுப்பது, தொழிற்நுட்பத்தை கையாளும் போது பங்கெடுப்பது என கற்றல் இனிமையாக மாறிவிடும். ஊடாடும் கற்றல் என்பது விமர்சனபூர்வமான சிந்தனையைத் தூண்டிவிடும். விமர்சன பூர்வமான சிந்தனைதான் பகுப்பாய்வு பகுத்தறிவுக்கு வழிவகுக்கும். [12]


VII. உயிர்மெய் கல்வி முறையின் கூறுகள்

உயிர்மெய் கல்வி என்பது ஒருவர் வாழும் இடம் மற்றும் காலச்சூழலில் அறம், பொருள், இன்பம் அறிந்து வீடு பேறு பெறுவதே. அதாவது கல்வி கற்போரது பண்பாட்டுச் சூழலை, அதன் வரலாறை, அதன் மேன்மையை, அதன் மேம்பாட்டை மையப்படுத்தியதாக இருக்கவேண்டும். கற்போரது இயற்கைச் சூழலைப் புரிந்து அதை வளப்படுத்துவதாக இருக்கவேண்டும். அது மட்டுமின்றி கற்போரது கூட்டான சமூக அறிவு நியாய தர்க்கங்களை கற்கக் கூடியதாகவும், வாழ்கின்ற சமூகத்தில் வளங்களைப் பயன்படுத்தி வாழ்வது எப்படி எனத் தெரிந்து கொள்ளக்கூடியதாகவும் அச்சமூகம் உணர்வார்ந்த நிலையில் வெளிப்படுத்தியுள்ள கலை இலக்கிய வெளிப்பாடுகளை அறிந்துக் கொள்ளக் கூடியதாகவும், இதனால் சமூகத்தில் விழிப்புணர்வும், மகிழ்ச்சியும், மேம்பாடும், வளர்ச்சியும் அடையக் கூடியதாகவும் இருப்பதே உயிர்மெய் கல்வி. அதன் கூறுகளைக் கீழேக் காண்போம்.


A. செயல் வழிக் கற்றல்.

ஐவன் பாவ்லவ் என்கிற ரஷ்ய அறிவியலாளர் 1870களில் மிருகங்களும் மனிதர்களும் தங்களது சூழலில் ஏற்படுகிற தூண்டுதலுக்கு அனிச்சையாக எதிர்வினையாற்றுகிறார்கள் என்று நாய், எலும்புத்துண்டு, மணி அடிக்கும் சப்தம், நாயின் எச்சில் போன்றவற்றை வைத்துக் கண்டு பிடித்தார்.


அதை அடிப்படியாக வைத்து 1920ல் ஜான் பிராடுஸ் வாட்சன், குட்டி ஆல்பர்ட் பரிசோதனையின் மூலம் நடத்தையியல் கற்றல் தத்துவத்தில் இணைக்கிறார்.


ஆக, கற்றலில் ஐம்புலன்களின் பங்கை மட்டும் வைத்து சிந்திக்கும் போது நடத்தையியல் கற்றல் தத்துவம் முக்கியமாகிறது. எப்படி மிதிவண்டியைத் தொடாமலேயே அதை ஓட்டக் கற்றுக் கொள்ள முடியாதோ, அது போல செயல் மூலம் கற்றல், ஐம்புலன்கள் மூலம் தகவல் பெற்று பகுத்தறிவாலும் உணர்வு நிலையாலும் புத்தறிவு பெறுவது செயல் வழிக்கல்வி. அதன் மூலம் பெறும் அறிவு பட்டறிவு.


அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவைகளில் ‘பொருள்’ என்பது நேரடியாக பட்டறிவோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.


B. ஆய்வு வழிக் கற்றல்

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர். (குறள் விரி 427)

நன்மை எது தீமை எது எனப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் தீமையை விலக்கி நன்மையை கொள்வது மட்டுமல்ல, காரண காரியங்களின் பின்விளைவுகளை அறிந்துக் கொள்வதும் அறிவு எனத் தமிழர்கள் அறுதியிட்டார்கள்.


2400 ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் பிளேட்டோ தனது ‘ரிபப்ளிக் புக் 4’ என்கிற நூலில் குகை மனிதர்கள் பற்றிய ஓர் உவமானக் கதையைச் சொல்லி, கல்வியின் நோக்கம் ஒருவருக்கு உண்மையைச் சொல்லிக் கொடுப்பதல்ல, மாறாக உண்மையை நோக்கி பயணிக்க வைப்பதே என்கிறார். அதாவது புலனறிவு மட்டுமல்ல, சுயசிந்தனையுடன் கூடிய பகுத்தறிவும் தேவை என்கிறார்.


நாம் முன்பு குறிப்பிட்ட ‘நடத்தையியல் கற்றல் தத்துவத்தோடு’ (Behaviourism) அறிவாற்றல் இயல்பியல் (Cognitivisim) கற்றல் தத்துவத்தை 1950 களில் Paivio, Gagne, Gardner போன்றோர் முன்னெடுத்தனர். அனுபவத்திலிருந்து மட்டும் அல்லாமல் மாணவரின் மனத்திலேயே நடக்கும் செயலாகக் கற்றல் முன்னிறுத்தப்பட்டது.


அதைத் தொடர்ந்து John Dewey, Jean Piaget, Lev Vygotsky போன்றோர் ஆக்கபூர்வ இயல்பியல் (Constructivism) கற்றல் தத்துவத்தை முன்வைத்தனர். வெறும் மனத்தில் நடக்கும் செயல் மட்டும் அல்ல கற்றல், மாறாக சூழலோடு வைக்கிற தொடர்பில் எழுவதே கற்றல் என கற்றல் தத்துவத்தில் வலு சேர்க்கப்பட்டது. கற்பவர் தானே அர்த்தங்களை உருவாக்கிக் கொள்கிறார் எனப்புரிந்துக் கொள்ள முடிந்தது.


C. கலைவழிக் கற்றல்

கலைவழிக் கற்றல் என்பதை உணர்வு வழிக் கற்றல் என்றும் சொல்லலாம். ஏனென்றால் கலை மூலம் கருத்து, உணர்வு என்கிற ஊடகம் மூலமே பயணிக்கிறது.


ஐம்புலன்கள் பற்றிய நடத்தையியல் அடிப்படையில் கற்றலைப் புரிந்துக் கொள்வது செயல்வழிக் கல்வி.


பகுத்தறிவு பற்றிய அறிவாற்றல் இயல்பியல் மற்றும் ஆக்கபூர்வ இயல்பியல் அடிப்படையில் கற்றலைப் புரிந்துக் கொள்வது ஆய்வு வழிக் கல்வி.


கூடுதலாக உணர்வுசார் நுண்ணறிவியல் அடிப்படையில் கற்றலைப் புரிந்துக் கொள்வது கலைவழிக் கல்வி. அதாவது, ஒருவருக்குள் நடக்கும் உணர்ச்சி (உடல் சார்ந்தது) மற்றும் உணர்வுகளை (மனம் சார்ந்தது) புரிந்துக் கொள்வதோடு மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள உயிர்களின் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் புரிந்து, விழிப்புணர்வோடு அவைகளை மேலாண்மை செய்வதே உணர்வுசார் நுண்ணறிவு ஆகும்.


உணர்வின் இயல்பை திருமூலர் திருமந்திரத்தில் இப்படி சொல்கிறார்.

‘முழங்கி எழுவன மும்மத வேழம்

அடக்க அறிவென்னும் கோட்டையை வைத்தேன்.

பழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்

கொழுத்த வேழம் குலைக்கின்ற வாறே. (பாடல் 2010)

மாயையால் மருண்டு மதம் கொண்ட புலன்களை அடக்க அறிவு என்னும் கோட்டையை அமைத்தேன். ஆனால் அவை அந்தக் கோட்டையைத் தாண்டி பெருங்கேட்டினை விளைவித்து ஓடின என்கிறார். அப்படிப்பட்டது உணர்வுகளின் பலம்.


1995களில் Daniel Goleman, Emotional Intelligence என்கிற நூலை எழுதி இந்தக் கற்றல் தத்துவத்தை பிரபலபடுத்தினர்.

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப (தொல்காப்பியம் 1197) என்கிற எட்டு உணர்வுகளையும் தன்னிலும் பிறரிலும் பிறவற்றிலும் கண்டறிதலும் ஒழுங்குபடுத்தலும் கலைவழிக்கல்வி எனப்படுகிறது.


D. சூழல்வழிக் கற்றல்

இங்குச் சூழல், தனிமனிதனின் அகச் சூழலையும், வாழ்கிற கற்றல் சூழலையும், நிலம், பொழுது, என்கிற வாழ்நிலை சுற்றுச் சூழலையும் குறிக்கிறது. இதையே தமிழர் அகத்திணை, புறத்திணை எனப் பிரித்தனர். இல்லத்தில் சொந்த வாழ்க்கையில் ஏற்படுகிற

புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல்

ஊடல், அவற்றின் நிமித்தம் என்றிவை

தேடும் காலை திணைக்கு உரிபொருளே (தொல். பொருள். அகத். 16)

எனத் தமிழர்கள் பிரித்து வைத்தனர்.


புறச்சூழல் என்பது இல்லத்தை விட்டு வெளியே நடப்பது. வீரம், போர், வெற்றி, ஈகை, புகழ், ஒழுக்கம், பறை, தூது என அரசியல், நட்பு, பொருளாதாரம், வாணிகம், நாகரீகம், பண்பாடு போன்ற தளங்களில் நடப்பவை.

அகத்திணையில் கூறப்பட்டுள்ள முதற்பொருளும் (நிலம், பொழுது), கருப்பொருளும் (தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, தொழில், யாழ் போன்றவைகள்) இங்கேச் சூழல் என்கிற பொருளில் கருதப்படுகிறது.


கல்வியை இரண்டு பாணிகளில் அணுகலாம். ஒன்று, இவ்வுலகம் பிரச்சனைகளால் ஆனது. ஆகவேக் கூடி அனைவரும் அதற்குத் தீர்வு காணவேண்டும் என்கிறப் போக்கு. இதை அறிவு பாணி எனக் கொள்ளலாம். இன்னொன்று இவ்வுலகம் இனிய அனுபவங்களால் ஆனது. ஆகவே தன்னையும் சுற்றியுள்ளோரையும் சுற்றியுள்ளதையும் புரிந்து இணைந்து மேம்படுத்தி வாழ வேண்டும் என்கிற பாணி. இதை உணர்வு பாணி எனக் கொள்ளலாம்.


அறிவு பாணியை அடிப்படையாக வைத்து இருபத்தியோராம் நூற்றாண்டு திறன்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஆகவே கற்பதின் நோக்கம் கற்பவர், மற்றவர்களோடு இணைந்து பிரச்சனையை ஆராய்ந்து தீர்வு காண்பதாக புரிந்துக் கொள்ளப்படுகிறது. அதனால் தர்க்க ரீதியான திறனாய்வு சிந்தனையும், உள்ளுணர்வினால் உந்தப்பட்ட ஆக்கபூர்வமான சிந்தனையும் கொண்டு, தொடர்புத் திறனும் கூடிப் பணி செய்யும் திறனுடனும் பிரச்சனைகளை ஆராய்ந்து, தொழிற்நுட்ப அறிவுடன் தீர்வு காண்பது கற்றல் என முடிவாகிறது.


உணர்வு பாணியை அடிப்படையாக வைத்து,

தன்னையறிவாம ஃதன்றிப்

பின்னையறிவது பேயறி வாகுமே (திருமந்திரம் 2318)

என்கிற திருமூலரின் கூற்றுப்படி தன்னையறிந்து தன்னைச் சுற்றியுள்ள ஐம்பூதங்களை அறிவது. இந்த அறிவை தனக்குள் பயணிப்பது மூலமாகவும், சூழலை உற்று நோக்கி அதோடு இணைந்து இருப்பதன் மூலமாகவும் வாழ்வதே கற்றல் எனக் கொள்ளலாம்.


E. சுய மெய்யறிவு பெறல்

இயற்கையிலேயே எல்லா மனிதர்களுக்குள்ளும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆவல் புதைந்திருக்கிறது என அரிஸ்டாடில் கூறுகிறார். அந்த ஆவல் தான் கற்றலுக்கு ஆதாரம்.

கைப்பொருளின் தன்னில் மெய்ப்பொருள் கல்வி

எனக் கொன்றைவேந்தன் 22வது பாடலில் சொல்வது போல, தனது பிண்டத்தின் மற்றும் அண்டத்தின் மெய்ப்பொருளைக் காண்பதுதான் கல்வியாக அமையும். இதையே திருவள்ளுவர்

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள் விரி 423)

என்றுச் சொல்கிறார். மெய்ப்பொருளை சொல்லிக் கொடுப்பது அறிவு அல்ல. காண்பது அறிவு. ஒவ்வொருவரும் தன்னுள் அதனைக் கண்டுக்கொள்ள வேண்டும்.


அறியாமை தளையிலிருந்து விடுதலை பெறுவதே கல்வி. ஆக, நாம் முன்பே குறிப்பிட்டிருந்தபடி, உயிர்மெய் கல்வி என்பது ஒருவர் வாழும் இடம் மற்றும் காலச்சூழலில் அறம், பொருள், இன்பம் அறிந்து வீடுபேறு பெறுவதே. அதாவது கல்வி கற்போரது பண்பாட்டுச் சூழலை அதன் மேன்மையை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். கற்போரது இயற்கைச் சூழலைப் புரிந்து அதை வளப்படுத்துவதாக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி கற்போரது கூட்டான சமூக அறிவு நியாய தர்க்கங்களை கற்கக் கூடியதாகவும், வாழுகின்ற சமூகத்தில் வளங்களைப் பயன்படுத்தி வாழ்வது எப்படி எனத் தெரிந்து கொள்ளக்கூடியதாகவும் அச்சமூகம் உணர்வார்ந்த நிலையில் வெளிப்படுத்தியுள்ள கலை இலக்கிய வெளிப்பாடுகளை அறிந்துக் கொள்ளக்கூடியதாகவும் இதனால் சமூகத்தில் மகிழ்ச்சியும் நீடித்த நிலைத்த வளர்ச்சியடையக் கூடியதாகவும் இருப்பதே உயிர்மெய்க் கல்வி.


VIII முடிவுரை

இன்றைய சந்தையை மையப்படுத்திய உலகமயமாக்க உலகில், மரபுசார்ந்த மொழி, உணவு, மருந்து, இசை, இலக்கியம் போன்றவை அழிந்துக்கொண்டிருக்கும் நேரத்தில், நான்காவது தொழிற்புரட்சியாக இணையக் கட்டமைப்பு மனித வாழ்க்கையை தழுவி மேலாண்மை செலுத்துகிற காலத்தில், ஒற்றை கலாச்சாரவாதம் ஓங்கி ஓலிக்கிற சமயத்தில், காலநிலை மாற்றத்தால் மனித குலம் இன்னுமொரு உயிரழிப்பை நோக்கிப் பயணிக்கும் வேளையில், ஏற்றத்தாழ்வுகளையும் வன்முறைகளையும் உட்படுத்திய இன்றைய பாரம்பரிய கல்விமுறை விடுதலை உணர்வு கொண்ட கற்போரை உருவாக்காது.


இணையவழிக் கல்விமுறையினால் உள்கட்டமைப்பு மாற்றங்கள் மாறி, ஆசிரியர்களின் பங்கும், பாடத்திட்டமும் மாறி, தொழிற்நுட்பத்தால் கற்றல், ஊடாடும் கற்றலாக மாறிய சூழலில் இருபத்தியோராம் நூற்றாண்டு சவால்களை சந்திக்கும் வண்ணம் திறமை கொண்ட மாணாக்கரை உருவாக்க எத்தனிப்பதை உணரமுடிகிறது.


ஆனால் அது போதாது. செயல் வழியும், ஆய்வு வழியும், கலைவழியும், சூழல் வழியும் கற்று சுயமெய்யறிவு பெற்று, விடுதலை உணர்வும், திறமையும், மனதில் கருணையும் கொண்ட மனிதநேயர்களை உருவாக்குகிற உயிர்மெய் கல்விமுறையே நீடித்த நிலைத்த மனிதகுல வாழ்விற்குத் தேவை.


**********

சாத்துணை


  1. Park, D. What is globalisation. as retrieved from https://www.b2binternational.com/publications/globalisation-and-marketing/ as on 15.05.2020

  2. Schwab. K. (2016. Jan 14) The fourth industrial revolution: what it means, how to respond. as retrieved from https://www.weforum.org/agenda/2016/01/the-fourth-industrial-revolution-what-it-means-and-how-to-respond/ as on 15.05.2020

  3. Jitendra. (2019. July 12) India exports pulses despite self reliance. as retrieved from https://www.downtoearth.org.in/news/agriculture/india-importing-pulses-despite-self-reliance-65602 as on 15.05.2020

  4. Chui, G. (2016. Aug 17) Engineers invent a device that purifies water quickly using sun power. as retrieved from https://engineering.stanford.edu/magazine/article/engineers-invent-device-purifies-water-quickly-using-sun-power as on 16.05.2020

  5. DIN. (2018. Feb 19) இந்தியாவில் அழியும் நிலையில் 40 மொழிகள். மத்திய அரசு. as retrieved from https://www.dinamani.com/india/2018/feb/19/ as on 16.05.2020

  6. Simon, M. EatDrink Politics. Food Politics. as retrieved from http://www.eatdrinkpolitics.com/about/resources/food-politics/ as on 17.05.2020

  7. Viswanathan, B. (2017. Aug 28. ) Is Globalisation creating single world culture. as retrieved from https://www.forbes.com/sites/quora/2017/08/28/is-globalization-creating-a-single-world-culture/#59d3ad8b3bd3 as on 17.05.2020

  8. Wikipedia. Cultural homogenisation. as retrieved from https://en.wikipedia.org/wiki/Cultural_homogenization as on 17.05.2020

  9. Parisutham, John B. (2014) கற்போர் கையில் கல்வி, Published by Manitham Publishers, 12, Narmada Street, Yagappa Nagar, Thanjavur, India [இன்றையக்கல்வி முறையின் நிலை பகுதி]

  10. Shenoy, R. VR, AR and AI will transform universities. Here’s how. as retrieved from https://unbound.upcea.edu/online-2/online-education/vr-ar-and-ai-will-transform-universities-heres-how/ as on 18.05.2020.

  11. Partovi, H. ( 2018. Sep 17) Why schools should teach the curriculum of the future , not the past. as retrieved from https://www.weforum.org/agenda/2018/09/why-schools-should-teach-the-curriculum-of-the-future-not-the-past/ as on 19.05.2020.

  12. Wikipedia. Interactive learning. as retrieved from https://en.wikipedia.org/wiki/Interactive_Learning#:~:text=Interactive%20Learning%20is%20a%20pedagogical,virtual%20communication%2C%20particularly%20by%20students. as on 20.05.2020

  13. Parisutham, J (2018) மெய்கல்வி, Published by Published by Manitham Publishers, 12, Narmada Street, Yagappa Nagar, Thanjavur, India [உயிர்மெய் கல்வி முறையின் கூறுகள் பகுதி]


***************

92 views0 comments
bottom of page