ஈராக்கின் கிறிஸ்து - தொகுப்பும் மொழியாக்கமும் - கார்த்திகைப் பாண்டியன்
- உயிர்மெய்யார்

- Sep 11
- 9 min read

இதில் உள்ள 5 கதைகளைப் படித்த அனுபவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் மூன்று கதைகளுக்கான கதைச்சுருக்கங்கள் கீழே உள்ளன.
அம்மா
நாற்பத்தியொரு ஸ்தூபிகள் கதையைப் படிக்கும் போது உங்கள் தாய் உங்கள் அருகில் அமரந்து உங்களையேப் பார்த்துக்கொண்டிருப்பாள். ஏனென்றால் ஒரு தாய் என்றாலே அவள் தன் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பற்றிக் கனவு காணுபவளாகவே இருக்கிறாள்.
என் அம்மாவை இங்கு நினைத்துக்கொள்கிறேன். என் அம்மா, கடும் பொருளாதார நெருக்கடியிலும், ஒன்பது பிள்ளைகளைப் பெற்று அதில் தலைச்சன் பையன் இறந்து மீதி இருந்த எட்டு குழந்தைகளையும் வளர்க்க வேண்டியக் கட்டாயத்தில், ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு கனவு வைத்திருந்தாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் எல்லாப் பிள்ளைகளுக்கும் பெயர் சூட்டுவதிலிருந்து, பள்ளியில் சேர்ப்பதிலிருந்து, பாடம் சொல்லிக்கொடுப்பதிலிருந்து, குளிப்பாட்டி, சோறூட்டி, நல்ல ஒழுக்கம் சொல்லிக் கொடுப்பது வரை அவர் செய்வது, நான்காவது பிள்ளையாகப் பிறந்து, மகன்களில் பெரிய பையனாக இருந்து நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
அப்பாவின் அரசாங்க வேலையால் அடிக்கடி பணி இட மாற்றத்தை அழகாகக் கையாண்டு, அம்மாவோடு பிறந்த ஏழு பேரோடு வளர்ந்து, அப்பாவோடு பிறந்த ஆறு பேரோடும் வாழ்ந்து, ஒன்பது பிள்ளைகளைப் பெற்று, தனது 92 ஆவது வயதிலும் இன்றைக்கும் (2025) வாழ்ந்துக் கொண்டிருக்கும் அம்மாவை நினைத்தால் வியப்பே மேலிடுகிறது.
அப்பாவின் சகோதர, சகோதரிகளுக்குப் பிறந்த குழந்தைகளையும் விட்டுக் கொடுக்காமல், அம்மாவின் சகோதர, சகோதரிகளுக்குப் பிறந்த குழந்தைகளையும் விட்டுக் கொடுக்காமல், எல்லா நல்ல நிகழ்ச்சிகளிலும், கெட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று இத்தனை பௌர்ணமியையும் அமாவாசையையும், அம்மா கடந்து வந்திருப்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது.
என் அம்மா என்ன கனவு கொண்டிருந்திருப்பார்? என்றைக்காவது இந்த வறுமை ஒழியாதா? பிள்ளைகள் நன்கு படித்து நல்ல வேலைக்குப் போய், ஒழுக்கமான உயர்ந்த குடும்பங்களைக் கட்ட வேண்டும் என்று தான் தினமும் பிரார்த்தித்திருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவ்வளவையும் ஓய்வின்றி செய்தார். அது மட்டுமல்ல, அவர் கனவு ஒவ்வொன்றாக நிறைவேறும் போதும் அதனைப் பார்த்து மகிழ்ச்சியுற்றிருக்கிறார்.
மனைவி
என் மனைவியை ஓர் அம்மாவாக எண்ணிப் பார்க்கிறேன். ஓர் தாய் என்றால் அதற்கு மிகப் பொருத்தமான ஓர் ஆளை இவ்வுலகத்தில் காட்டுங்கள் என்றால், கொஞ்சமும் தயக்கமில்லாமல் என் மனைவியை நோக்கி என் விரல்கள் நீளும்.
ஏன் அப்படி?
தாய் என்றால் அளவிடமுடியாத, அடைக்குந் தாழ் இல்லாத அன்பு என்று தானே பொருள். என் மனைவியும் அப்படித்தான். அவரோடு பழகியிருந்தீர்களென்றால், நிச்சயம் உங்கள் தலையை வேகமாக “ஆமாம்! ஆமாம்!!” என்ற ஆட்டுவீர்கள். கொடுப்பது தான் அவரது வாழ்க்கைத் தத்துவம். எதுவாக இருந்தாலும் கொடுக்க வேண்டும். அதுவும் எளிய மக்கள் என்றால், இல்லாதவர்கள் என்றால், மனம் கசிந்து உருகிவிடுவார். கையில் காதிலிருந்து கழற்றிக் கொடுப்பதிலிருந்து, பையில் பணத்தில் மிச்சம் வைக்காமல் கொடுக்கக் கூடிய மனசு.
இவரும் ஒரு தாயாக கனவு கண்டார். தன் பிள்ளைகள் உலகிலேயே கவனிக்கக்கூடிய ஆட்களாக உயர வேண்டும். அதே நேரம் மனித நேயமிக்க, ஒழுக்கமிக்க, பண்புள்ள மனிதர்களாக வாழ வேண்டும். இது தான் அவர் கண்ட கனவு. அதற்காக இருபத்தி நான்கு மணி நேரமும் ஓயாது உழைத்தார். உழைக்கிறார். அதில் ஒரு சிறப்பு என்னவென்றால், அந்த உழைப்பை மகிழ்ச்சியோடு, சிரிப்பலைகளோடு செய்வார்.
இன்னும் பல தாய்களைப் பற்றி என்னால் சொல்ல முடியும். கட்டுரையின் அளவு கருதி என் அம்மாவோடும், என் மனைவியோடும் நிறுத்திக் கொள்கிறேன்.
இந்தக் கதையில் வரும் அந்தத் தாயின் கனவும் அந்த மகனின் இழப்பும் வலியைக் கொடுக்கிறது. ஒழுக்கமான மனிதனாக வளரவேண்டும் என்பதிலிருந்து, அவனுக்கு ஒரு திருமணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்பது வரை அவள் கனவு கண்டாள். ஆனால், அதைப் பார்க்காமலேயே மரணித்தது மனதிற்குள் சோகத்தை வரவழைக்கிறது. வாயிலில் ஒரு இளம்பெண்ணை கதையாசிரியர் அறிமுகப்படுத்துகிறார். கடைசி வரை அவளுக்கு வாயில் திறக்கப்படாமலேயே இருக்கிறது. ஒருவேளை, அவனுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கான குறியீடோ?
அவன் சிறுவனாக இருந்தபொழுது, அவனுக்குப் பலக் கதைகளைச் சொல்கிறாள். அப்படிச் சொன்ன கதைகளில் ஒன்று தான் நாற்பத்தியொரு ஸ்தூபிகள் பற்றிய கதை. மசூதிகளில் உள்ள ஸ்தூபிகள் பற்றிச் சொல்வாள். அவர்கள் ஊரில் இருக்கும் ஐம்பத்தொரு மசூதிகளில் நாற்பத்தியொரு மசூதிகளில் தான் ஸ்தூபிகள் இருக்கிறதென்று சொல்வாள்.
கதைக் களமான மருத்துவமனைக்கு வருவோம். காலனியாதிக்கக் காலத்தில் அது சுத்தமாகவும், இரைச்சலின்றி இருந்ததாகவும் அவனது மாமா சொல்லியிருக்கிறார். ஆனால் இப்பொழுது அப்படி இல்லை. வெள்ளக்காரன் இருந்தப்ப எல்லாம் நல்லா இருந்துச்சி என தமிழகத்திலும் சிலப் பெரியவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். காலனியாதிக்க காலம் சிறப்பாக இருந்ததாகவே ஒரு கருத்து கட்டமைக்கப்படுகிறதே ஏன்? இப்பொழுது நிலமை மிகவும் மோசமாகிக்கொண்டே வருகிறது என்று சொல்வது மெய்தோனோ?
மருத்துவமனையில் வாயிற் காப்போன், பணம் வாங்கிக்கொண்டு, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத வேளையிலும் உள்ளே விடுகிறான். அல்லது கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு, வெளியேற வேண்டிய நேரத்தைத் தாண்டியும் உள்ளே இருக்க அனுமதிக்கிறான். அறபு உலகத்தில் லஞ்சம்!
கதை மனசை என்னவோ செய்கிறது!
கல்வி
விசாரணை என்ற கதை. கல்வி பற்றியும் பேச்சுரிமை பற்றியும் எந்தக் கருத்தை வைத்திருக்கிறீர்கள் என்பதை மறுவாசிப்பு செய்ய இந்தக் கதை தூண்டுகிறது. முதலில் இன்றையக் கல்வி பற்றி பேசிவிடுவோம். பிறகு அடக்குமுறைக்கு எதிராகப் பேசுதல் (பேச்சுரிமை) பற்றி பேசுவோம்.
என்றென்றைக்கும் அறிவு என்பது பொது சொத்தாக இருந்ததில்லை. அது அதிகாரத்தின் கையில் தான் இருந்திருக்கிறது. இருக்கிறது. பணம், அந்தஸ்து, அதிகாரம் எல்லாம் எங்கே குவிகிறதோ, அங்கு தரவுகளும், ஆய்வுகளும், அறிவும் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. அதிகாரத்தில் இருப்போர், தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்காக கல்வி முறையை பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இந்தக் கதையில், “அரசாங்க குமாஸ்தாக்களையே பல்கலைக்கழகங்களில் தயாரிக்கிறோம்” என்று கதை நாயகன் பேராசிரியர் அஹமத்தின் எண்ணுகிறார்.
நான் பள்ளியிலும், பிறகு கல்லூரிகளிலும், அடுத்து பல்கலைக்கழகத்திலும் பணி செய்த பொழுது, இதைக் கண்கூடாகக் கண்டேன். தொழில் மற்றும் வணிகத்திற்குத் தேவையான அறிவை திரட்டுவதும், அதற்கான அறிவையும், திறனையும் மாணாக்கர்களுக்கு அளிப்பதும், அப்படி கொடுப்பதற்கான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளிப்பதும் தான் கல்வி முறையாக பல சமூகங்களில், பல காலங்களில் இருந்திருக்கிறது.
ஆனால் கல்வி என்பது எப்படி இருக்க வேண்டும்?
இயற்கையின் உண்மையை உணர்வதே, அறிவதே கல்வி. இயற்கையின் பகுதியான மனிதன் தன்னை உணர்வே, அறிவதே கல்வி.
ஆனால் இன்றையக் கல்வி, ஒரு சாரார் வசதியாக இருக்க, சில தரவுகளையும், சில திறன்களையும் தெரிந்துக் கொள்வதே கல்வி என ஆக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தரம் பிரித்து, சிறந்த “அறிவாளிகளை” சிறந்த குமாஸ்தாக்களாக ஆக்கிக் கொள்கிறது இன்றைய அதிகார முறை.
உரிமை
இன்றையக் கல்வியிலல்லாது, வேறு முறைகளில் உண்மையை உணர்ந்த ‘அத்னான்’ போன்ற சிலர், அந்த உண்மையை உரைக்கும் போது, அதிகாரத்திற்கு அது பிடிக்காது. அதனால் தான் அத்னான் பேசுகிற, எழுதுகிற உண்மை அந்தத் துறைத் தலைவருக்குப் பிடிக்கவில்லை. எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் என்று மட்டும் அல்ல, ஓவியம், இசை, பாட்டு என எந்தத் துறையிலிருப்போரும் உண்மை பேசினால் அதிகாரத்திற்குப் பிடிக்காது. அதனால் தான் “அத்னான்” துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக் கொள்கிறான். ஓவியல் நபீல் சலீமையும் அழைத்து விசாரித்து தண்டனை கொடுக்கப்படுகிறது.
ஒழுக்கம் என்கிற பெயரில் ஒடுக்கியே வளர்கிற பள்ளிக் குழந்தைகள், பெரிதாக அடக்குமுறையை எதிர்த்துப் பேசுவதில்லை. அப்படி பேசுவதற்கு அவர்களுக்குப் பயிற்சி இல்லை. சுயசிந்தனை, சுயமரியாதை போன்ற வார்த்தைகள் அவர்கள் அகராதியில் இல்லை.
இந்தக் கதையில், அஹமத் தன் அறைக்குப் போகிறார். துப்பாக்கியை எடுத்து, அத்வானின் சுட்ட அதே இடத்தில், கழுத்தில் வைத்து துப்பாக்கியின் குதிரையைச் சுண்டி இறந்து போகிறார். அது தேவையா? வேறு வழி இல்லாத அளவுக்கு சூழ்நிலை இறுக்குகிறதா?
அயல் விவசாயி என்கிற கதையின் பாணி மிகவும் நன்றாக இருந்தது. இன்றைய நாள் நடப்பதை வெவ்வெறு காட்சிகளாகக் காண்பித்து, அவைகளினூடே முன் கதையை சொல்லி வந்தது சிறப்பாக இருந்தது.
குடியுரிமையற்றவர்கள்
உம் அப்துல்லாவின் மகன் கேட்கிறான்: “மாரிஷ் என்பது யார் அம்மா?” என்கிற கேள்வியை கதைத் துவக்கத்திலிருந்து முடிவு வரைக் கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஐக்கிய அமீரகத்தில் 30 வருடம் உழைத்தும், வாழ்ந்தும் அடையாளம் இல்லாமல், மறுபடி தன் சொந்த நாடான ஒமனுக்கேப் போக முடியாமல் தன்னையே சிதைத்துக் கொள்கிற மாரிஷ், அங்கு மட்டும் அல்ல, உலகம் முழுக்க இருக்கிறான். மாரிஷ் போன்றவர்கள், ஆயிரக்கணக்கில் குடியுரிமை இல்லாமல் இருக்கிறார்கள். கடவுச்சீட்டோ அல்லது வேறு எந்த அடையாளமோ இல்லாமல் இருக்கிறார்கள்.
மலேசியாவில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது ஒரு விடுமுறை சமயத்தில், மியான்மாரிலிருந்து வந்து படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர், வீட்டிற்குச் செல்லாமல், பல்கலைக்கழக விடுதியிலேயே இருந்தார். வீட்டிற்கு ஏன் போகவில்லை என்று கேட்டேன். அப்பொழுது தான் அவர் ரோஹிங்யா மக்களைப் பற்றிச் சொன்னார்.
ரோஹிங்யாக்கள்
“ரோஹிங்யா மக்கள் மியான்மரில் உள்ள சிறுபான்மை முஸ்லீம் மக்கள். மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் தான் பெரும்பாலும் வசிக்கிறார்கள். இவர்களுக்கு தேசிய அடையாளம் கிடையாது. பல வன்முறைகளை அவர்கள் எதிர் கொள்கிறார்கள். அரசால் குடியுரிமை மறுக்கப்பட்டு, அரசற்றவர்களாக (stateless) வாழ்கின்றனர். (1982-இன் மியான்மர் குடியுரிமைச் சட்டம் ரோஹிங்யாக்களை 135 அங்கீகரிக்கப்பட்ட இனங்களில் ஒரு பகுதியாகக் கருதவில்லை, இதனால் அவர்கள் அரசற்றவர்களாக ஆனார்கள்.) இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யாக்கள் மியான்மரை விட்டு வெளியேறி, பங்களாதேஷ் மற்றும் பிற நாடுகளில் ஆவணமற்ற அகதிகளாக வாழ்கின்றனர். (ஐ.நா. அறிக்கைகள், ரோஹிங்யாக்கள் மீதான வன்முறைகளை "இனப்படுகொலை நோக்கங்களுடன்" நடந்தவை என விவரிக்கின்றன.) எங்கள் குடும்பம் அதில் ஒன்று. ஆனால் இப்பொழுது அங்கு பிரச்னையாக இருக்கிறது. என் ஊருக்கு நான் போக முடியாது. எங்கள் ஊரில் உள்ளவர்களும் வெளியில் வர முடியாது.(மலேசியா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் ஆவணமற்ற அகதிகளாக வாழும் ரோஹிங்யாக்கள், அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு இல்லாமல் துன்பப்படுகின்றனர்)” என்றார்.
மாரிஷ் மியான்மரில் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?
அரசற்ற தாய்லாந்தினர்
தாய்லாந்தில், பல இன சிறுபான்மையினர் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர்ந்தோர், குறிப்பாக ஆவணமற்ற பெற்றோரின் குழந்தைகள் மற்றும் அகதிகள், அரசற்றவர்களாக (stateless) உள்ளனர். இதனால், அவர்கள் அடிப்படை உரிமைகளான கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, மற்றும் சட்டப் பாதுகாப்பு போன்றவற்றைப் பெற முடியாமல் உள்ளனர்.
2024-இல், தாய்லாந்தில் சுமார் 5,00,000 அரசற்ற மக்கள் உள்ளனர், இதில் பெரும்பாலோர் மலைவாழ் இனங்கள் மற்றும் மியான்மரிலிருந்து வந்த அகதிகளாவர் என்று UN news கூறுகிறது. அதே வருடத்தில், 1,69,241 குழந்தைகள் அரசற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் பெரும்பாலும் இன சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்கள் என்றும் UNICEF கூறுகிறது. அகா, லாஹு, கரென், மற்றும் ஹ்மோங் போன்ற மலைவாழ் இனங்கள், வடக்கு மற்றும் மேற்கு தாய்லாந்தில் வாழ்கின்றனர். இவர்கள் பலர் பிறப்பு பதிவு இல்லாமல் அல்லது ஆவணமற்ற பெற்றோரின் குழந்தைகளாக இருப்பதால் அரசற்றவர்களாக உள்ளனர். இதனால், அவர்கள் பள்ளிகளில் உயர்கல்வி உதவித்தொகை பெற முடியாது மற்றும் வேலைவாய்ப்புகளில் பாகுபாடு எதிர்கொள்கின்றனர் என்று University of San Diego செய்திக் குறிப்பில் குறிப்பிடப்படுகிறது.
மாரிஷ் தாய்லாந்தில் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?
பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தவர்கள்
பாகிஸ்தானில், குறிப்பாக கராச்சியில், சுமார் 12 லட்சம் பாகிஸ்தானிய வங்காளியர் (பிஹாரிகள்) குடியுரிமையில்லாமல் அரசு அற்றவர்களாக வாழ்கின்றனர். இவர்கள் 1971-இல் வங்காளதேசப் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தவர்களின் வழித்தோன்றல்கள், ஆனால் இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் சுமார் 7,75,000 ஆவணமற்ற ஆப்கான் அகதிகள் வாழ்கின்றனர், இவர்கள் பல தசாப்தங்களாக மோதல்களைத் தவிர்க்க ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி வந்தவர்கள். இந்த அரசற்ற மக்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, மற்றும் சட்டப் பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகளை அணுக முடியாமல், பாகுபாடு மற்றும் சமூக விலக்கலை எதிர்கொள்கின்றனர் என்று UNCHR கூறுகிறது.
மாரிஷ் பாகிஸ்தானில் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?
ஐரோப்பாவில் குடியிருப்பில்லாதவர்கள்
ஐரோப்பாவில், லாட்வியா மற்றும் எஸ்டோனியாவில், 1991-இல் சோவியத் யூனியன் சரிந்த பிறகு, பல இன ரஷ்யர்கள் அரசற்றவர்களாக (stateless) ஆனார்கள். இவர்கள் சோவியத் குடியுரிமையை இழந்து, புதிய சுதந்திர நாடுகளான லாட்வியா மற்றும் எஸ்டோனியாவில் குடியுரிமை பெற முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், இந்த நாடுகளின் குடியுரிமைச் சட்டங்கள், மொழி மற்றும் வரலாற்றுத் தேர்வுகள் மற்றும் குடியிருப்பு நிபந்தனைகள் ஆகியவை ஆகும். இதனால், இவர்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு மற்றும் வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளை இழந்துள்ளனர். லாட்வியாவில் 180,000-க்கும் மேற்பட்டவர்களும், எஸ்டோனியாவில் சுமார் 68,000 பேரும் அரசற்றவர்களாக உள்ளனர் என்று Statistics Norway கூறுகிறது.
மேலும் பங்களாதேஷில் கிட்டத்தட்ட பத்து இலட்சம் பேரும், சிரியாவில் ஒண்ணரை இலட்சம் பேரும், உகாண்டாவில் எழுபது ஆயிரம் பேரும், என பல நாடுகளில் உள்ள குடியுரிமையற்றவர்களின் எண்ணிக்கையை அது கொடுக்கிறது.
மாரிஷ் போன்றோர் இப்படி பல நாடுகளில் தவிப்பதைக் காணமுடிகிறது. அவர்களுக்கு ஒரு விடிவு காலம் வரவேண்டும்.
பெண்களின் நினைவாற்றல்
அவரும் அலாரம் கடிகாரமும் கதையில் அலாரம் அலறுவதற்கு முன் அவன் எழுந்துக் கொள்கிறான். மணி அதிகாலை நான்கு. அன்றைக்கு வேலைக்குப் போகவேண்டும். அவனுடைய அம்மா, அத்தை, தங்கை என எல்லோரும் ஏதாவது ஓர் உதவி செய்து கொண்டேயிருக்கிறார்கள். ஓர் அங்கியைப் போட எத்தனிக்கும் போது, “அதை மேலாளரைப் பார்க்கும் போது போட்டாய். மற்றதைப் போடு” என்று அம்மா சொல்கிறாள். பெண்களுக்கு எப்படி இவ்வளவு தூரம் நினைவில் இருக்கிறது என்று மலைத்துப் போகிறான்.
என் மனைவியைக் குறித்து இது போன்று நான் திகைத்திருக்கிறேன். இது அவர்கள் அன்றைக்கு இதற்காகக் கொடுத்தது. அது இவர்கள் அன்றைக்கு அதற்காகத் தந்தது. என்று அச்சுப் பிசகாமல், நிறம், அளவு, ஆள், நாள், சூழல் விவரணங்களை எப்படி இவர் சொல்கிறார் என்று அசந்துப் போயிருக்கிறேன்.
கதவு தட்டப்படுகிறது
அவன் பெயர் ஃபாதி. சவரம் செய்துக் கொண்டிருக்கும் போது, யாரோ “ஃபாதி எழுந்துவிட்டீரா?” என்று கேட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். அத்தையும் அவனும் போய் கதவைத் திறக்கும் போது, அந்த யாரோ இருளில் மறைந்து விட்டார்கள். ஃபாதியின் வேலை மிக முக்கியமானதாகத் தான் இருக்கும் இல்லையென்றால் அரசாங்கத்திலிருந்து இத்தனைக் காலையில் வந்து எழுப்புவார்களா? என்று அத்தை பெருமை பேசுகிறாள். இரண்டு முட்டைகளை சாப்பிடுகிறான். ஊர் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவன் வீட்டை விட்டு கிளம்புகிறான்.
பகலில் இரைச்சலாகக் கிடக்கும் ஒரு சந்தையை, தற்பொழுது ஆளரவமற்ற நிலையில் கடந்து, ஊருக்கு அந்தப் பக்கம் இருக்கும் ரயில் நிலையத்திற்குச் செல்கிறான். புதிய முதலாளி கொடுத்த டிக்கெட்டைக் கொண்டு ரயிலில் ஏறுகிறான். பணித்தளத்திற்குச் சென்று வேலையில் இறங்கிய பொழுது அவன் மிகப்பெரிய கம்பெனியில் ஒரு தூசு போல உணர்கிறான். இப்பொழுது அத்தை அவனைப் பார்த்தால், “இவனுக்கு இரண்டு முட்டைகளே அதிகம்” என்று நினைத்திருப்பாள் என்ற நகைச்சுவை ரசிக்கும்படி இருந்தது. சரி தானே! வீட்டில் ஓர் இயக்கம். ஒரு சூழல். ஓர் உறவுப் பின்னல். ஆனால் வேலையில் வேறோர் இயக்கம். வேறொரு சூழல். வேறோர் உறவுப் பின்னல்.
யாரது?
தினமும் அலாரத்திற்கு முன் எழுந்திருப்பது. யாரோ ஒருவர் கதவைத் தட்டி எழுந்துவிட்டாரா எனப் பார்ப்பது. சவரம் செய்துக் கொண்டு, முட்டை தின்று விட்டு, சந்தையைத் தாண்டி, ரயிலில் ஏறி…. என பத்து மாதங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால் கதவைத் தட்டுபவரைப் பார்க்கவேயில்லை. அவருக்கென்று ஒரு பெயர் இருக்கவேண்டுமே… இன்றைக்குப் பார்த்துவிடுவது என்று முடிவு செய்கிறான்.
அன்றைக்கு கதவைத் தட்டும் போதே திறந்து விடுகிறான். ஒரு நடுத்தர வயது மனிதர் ஒரு கருப்பு அங்கியில் இருக்கிறார். வீட்டிற்குள் அழைக்கிறான். “இல்லை. இன்னும் பலரை எழுப்பி விட வேண்டும்” என்று சொல்லிவிட்டு இருளுக்குள் மறைகிறார்.
அப்துல்லா என்கிற புதிய நண்பரிடம் அவரைப் பற்றி விசாரிக்கிறான். ஃபௌத் என்பவனது தந்தை தான் அவர். அவர் சந்தையில் ஒரு நூல் கடை வைத்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஃபௌத், இதே போல வேலைக்குப் போகும் போது, சற்றுத் தாமதமாக ஓடிச் சென்று, ரயிலில் ஏற எத்தனிக்கிறான். ஆனால் கைப்பிடி நழுவி ரயிலின் சக்கரங்களில் அடிபட்டு இறந்து போகிறான். அதனால் அன்றையிலிருந்து அவர் அதிகாலை எழுந்து, அந்தக் கிராமத்திலிருந்து வேலைக்குக் கிளம்பும் மற்று இளைஞர்களை முன்னமேயே கதவைத் தட்டி எழுப்பிவிடுகிறார் என்று அப்துல்லா சொல்கிறான்.
இந்த இடத்தில், நூலை மேசை மீது வைத்துவிட்டேன். கதையைத் தொடர்ந்துப் படிக்க மனமில்லை. என்ன மனிதர் இவர்!
இப்பொழுதெல்லாம் அவன் அலாரம் வைப்பதில்லை. அந்த மனிதரின் கதவுத் தட்டலுக்குக்காகக் காத்திருக்கத் துவங்கியிருந்தான்.
பிறர்நேயம்
சில நாட்கள் கழித்து, ஒரு மழை நாள் வந்தது. அன்றைக்கு மழையின் காரணமாக சற்றே தாமதமாக வந்தது கதவு தட்டல். “இன்னும் பத்து நிமிடங்களே உள்ளன. ரயில் நிலையத்திற்கு ஓடு” என்றார். சந்தையைத் தாண்டி விரைந்த போது, ஃபௌத் சக்கரங்களுக்கிடையே அடிபட்டு இறந்த காட்சி முன்னுக்கு வந்தது. ரயிலில் ஏறிவிட்டான். ஆனால் ரயில், ஏதோ சில தொழிற்நுட்பக்காரணங்களால் தாமதமாகவே கிளம்பியது. அது அவனுக்கு நல்லதாகப் போய்விடுகிறது. அப்பொழுது தான் அவன் கவனித்தான் அந்த நடுத்தர வயது மனிதனும், மழையில் நனைந்த அங்கியோடு அங்கே நிற்கிறார். அவன் சரியான நேரத்திற்கு வந்து ரயிலைப் பிடித்துவிட்டானா என்று பார்க்கத்தான் அங்கு வந்ததாக இவன் நினைத்துக் கொள்கிறான்.
அடுத்த இரண்டு நாட்கள் அவர் வந்து கதவு தட்டவேயில்லை. சந்தைக்குச் சென்று அவருடையில் கடையில் விசாரிக்க போக, கடை மூடியிருந்தது. அப்துல்லாவோடு அவர் வீட்டுக்குச் செல்ல…ஓர் அறையில் அவர் இறந்து கிடந்தார்.
எதிர்பார்த்த முடிவாக இருந்தாலும், மகன் இறந்த பிறகு, மற்றவர்களை முன்னமேயே எழுப்பிவிடும் அவரது கதவு தட்டும் ஒலி என் காதில் நுழைந்து மனதை பிசைந்துக் கொண்டேயிருக்கிறது.
வீராப்பு
பத்தாவது நாளில் புலி என்கிற கதையில் வீராப்புடன் கூடிய புலி இருக்கிறது. அந்தப்புலி கூண்டில் அடைபட்டுக்கிடக்கிறது. அதற்கு உணவு கொடுப்பவன் மற்றவர்களிடம், “காட்டில் புலி தன் வீரத்தைக் காட்டும். ஆனால் என் கையில் உணவு இருக்கிறது. அதனால் என்னிடம் எப்படி தன்மையாக நடந்துக் கொள்ளப் போகிறது என்று பாருங்கள்” என்று சொல்கிறான். புலி அதிகாரத்தோடு உணவைக் கேட்க, தயங்கி தாழ்ச்சியோடு கேள் என்கிறான். அது மறுக்கிறது. உணவு கொடுக்காமல் போகிறான்.
பசியும் மறுப்பும்
அடுத்த நாள். பசியென்பதை ஒத்துக் கொள் என அவன் சொல்ல, ஆமாம் பசிக்கிறது என புலி சொல்ல நிறைய மாமிசம் கொடுக்கிறான்.
மூன்றாவது நாள். நான் ஆணையிடுவதைச் செய்யவேண்டும் என்று சொல்கிறான். புலி மறுக்கிறது. நில் என்றால் நிற்க வேண்டும். இவ்வளவு தானே என்று புலி ‘நில்’ என்றவுடன் நிற்கிறது. மாமிசம் கொடுக்கிறான்.
உறுமலும் மியாவும்
நான்காவது நாள். நான் பசியோடு இருக்கிறேன். என்னை நில் என்று ஆணையிடு என்று புலி கேட்கிறது. இல்லை பூனைக்குட்டி போல் மியாவ் என்று கத்து என்கிறான். அது கேவலமாக இருக்கும். வேணுமென்றால் உறுமுகிறேன் என்று உறுமுகிறது. அவன் விடவில்லை. மியாவ் என்ற கத்த கற்றுக்கொள் என்று சொல்லிவிட்டு, புலியை பசியோடு விட்டுவிட்டுப் போகிறான். புலி காட்டை நினைத்துக் கொள்கிறது.
ஐந்தாவது நாள். மியாவ் என்று கத்தினால் புத்தம் புது மாமிசம் கிடைக்கும் என்கிறான். புலி மியாவ் என்று கத்தியது. மாமிசம் கொடுத்தான்.
கனைப்பும் அவமானமும்
ஆறாவது நாள். அவன் கூண்டருகே வந்ததுமே புலி மியாவ் என்று கத்தியது. “கழுதையைப் போல கனை” என்கிறான். நான் புலி. என்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படும். இப்படிக் கனைப்பது அவமானம் என்றது புலி. அவன் போய்விட்டான். புலி காட்டை நினைத்துக் கொள்கிறது.
ஏழாவது நாள். கழுதையைப் போல் கனைத்தால் இறைச்சி உண்டு என்கிறான். புலி கழுதையைப் போல் கனைக்கிறது. கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லி விட்டு கொஞ்சம் மாமிசம் கொடுத்து விட்டுப் போகிறான்.
நகரமும் குடிகளும்
எட்டாவது நாள். நான் ஓர் உரையைப் பேசுவேன். உரையில் முடிவில் கைதட்ட வேண்டும் என்றான். சரி என்றது புலி. ஏதோ ஒரு நியாயத்தைப் பற்றிப் பேசுகிறான். எனக்குப் புரியவில்லை என்கிறது புலி. இருந்தாலும் தட்டி வைக்கிறேன் என்று ஒப்புக்குத் தட்டியது. ம்ஹூம்! இது சரி இல்லை. நீ உற்சாகமாகக் கைத் தட்டவில்லை என்று சொல்லிவிட்டு உணவு ஒன்றும் தராமல் போய்விடுகிறான்.
ஒன்பதாவது நாள். ஒரு பை நிறைய வைக்கோலை வீசுகிறான். பசியில் அது சாப்பிட முயற்சிக்கிறது. அதன் சுவையில் அருவருப்புடன் முதலில் நகர்ந்தாலும், பிறகு அதற்கு பழகிக்கொண்டு வைக்கோலைச் சாப்பிடுகிறது.
பத்தாவது நாள். புலி குடிமகனாகவும், கூண்டு நகரமாகவும் மாறியது எனக் கதை நிறைவுறுகிறது.
கதை முழுவதுமே ஓர் உவமானம். சராசரி வாழ்க்கையை நினைக்கும் போது அவமானம். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்கிற பழமொழியை இந்த அரசாங்கமும், பெரு கம்பெனிகளும், மதத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் பொய்யாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
******
உசாத்துணை
1. ‘Historic development’ in Thailand as it moves to end statelessness for nearly 500,000 people. (2024, Nov 1). UN News. Retrieved from https://news.un.org/en/story/2024/11/1156396.
2. Breaking the silence on statelessness. (nd.) UNICEF, Thailand. Retrieved from https://www.unicef.org/thailand/endstatelessness.
3. Joy K. Park, John E. Tanagho & Mary E. Gaudette, Global Crisis Writ Large: The Effects of Being Stateless in Thailand on Hill-Tribe Children. 10 San Diego Int'l L.J. 495 (2009). Available at: https://digital.sandiego.edu/ilj/vol10/iss2/8.
4. Pakistan, Key statistics. The UN Refugee Agency. UNHCR. Retrieved. https://www.unhcr.org/where-we-work/countries/pakistan
5. Brunborg, Helge. (2024 May 6). International statistics on statelessness. Statistics Norway. Retrieved. https://www.ssb.no/en/befolkning/innvandrere/artikler/international-statistics-on-statelessness



Comments