ராக்கெட் தாதா - எதிர் வெளியீடு
- உயிர்மெய்யார்

- Oct 2, 2025
- 10 min read
Updated: Oct 5, 2025

அட்டைப்படத்திலிருந்து துவங்குகிறேன்.
ஓர் ஆடையில்லாத இளம்பெண், தலைகுனிந்தபடி சோகமாக இருக்கிறாள். இவள் நிர்வாண உடலைச் சுற்றி பல ஊக்குகள் இருக்கின்றன. பெண்களின் வாழ்வியல் வலியைச் சொல்ல முனைவதாக நான் கருத்தில் எடுத்துக் கொள்கிறேன். பதினொரு சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு கையில் வந்து சேர்ந்ததும், நூலின் தலைப்பான ‘ராக்கெட் தாதா’ என்ற பெயர் புதுமையாக இருந்தது. ஆர்வமுடன் படித்தேன். ஆனால் இனி ராக்கெட்டை நினைக்கும் போது இனி இந்த நூல் நினைவு தான் வரும் என்று நினைக்கிறேன்.
வெளிப்படையாக பாலியலை பேசாத சமூகத்தில், இப்படிப்பட்ட கதைகளை எழுதுவதன் மூலமாகத்தான் பாலியலும் ஒரு வாழ்வியல் அங்கம் என்று உணரவைக்க முடியும், அதனாலேயே நம் அடுத்த தலைமுறையினரைக் காப்பாற்ற முடியும் என்று ஒரு சாராரும், இப்படி எழுதுவது ஒரு ஃபேஷன் ஆகி விட்டது, இது வரையறையைத்தாண்டிச் சென்று பண்பாட்டை இழிவுபடுத்தும் இலக்கியம் என்று மற்றொரு சாராரும் போட்டிப் போட்டுக் கொண்டு விவாதிக்கக் கூடிய பட்டிமன்றத்திற்குத் தோதுவான சிறுகதைத் தொகுப்பு இது.
நூலின் எழுத்தாளர் ஜி. கார்ல் மார்க்ஸ் அவர்களுடைய கற்பனைத் திறனையும் மொழி வளத்தையும் கண்டு ஆச்சரியப்பட்டேன். அக மகிழ்ந்தேன். எல்லா கதைகளுமே பெண்களை மையப்படுத்தியதாக இருக்கிறது. படைப்பாளனைப் பற்றி விமர்சனம் செய்வது என் வேலையில்லை. படைப்புகளை பொது வெளியில் போட்டுவிட்டதால், அதைப் பற்றி ஒரு வாசகனாக விமர்சனம் செய்வதே என் வேலை. நானும் பச்சைப் பச்சையாகச் சொல்லிவிடுவது என்று துணிந்து விட்டேன்.
பிராமண சட்டநாதனும் பறைச்சி சந்திராவும்
‘நிழல்’ கதையிலிருந்து தொடங்கலாம் என்றிருக்கிறேன். அக்ரஹாரத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பு “மகாலிங்க ‘படையாட்சி” க்குச் சொந்தமானது. சட்டநாதன் ஓய்வு பெற்ற ஒரு பிராமணர். தோப்பில் வெட்டுத் தேங்காயைப் பொறுக்க வருகிறாள் “பறைச்சி சந்திரா”. பிராமணருக்கு பறைச்சி மேல் காமம். அவள் உண்டாகிவிடுகிறாள். சட்டநாதன் தன் நண்பரின் உதவியுடன் (!) முறைப்பையன் ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். சந்திராவுக்கு மூக்கும் முழியுமாக சட்டநாதன் போலவே ஒரு பையன் பிறக்கிறான். அவனை சட்டநாதன் தன்னோடு சென்னைக்கு அழைத்துப் போய் நண்பர் வீட்டில் வளர்க்கிறார். ஒரு நாள் அவன் இறந்து விட, அவன் உடலை எடுத்து வந்து மறுபடி அந்த நண்பரின் உதவியுடன் (!) அந்தத் தோட்டத்தில் புதைக்கிறார். இப்பொழுது அந்தத் தோட்டத்தின் எதிரே உள்ள அவரது வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் பொழுது, மங்கலாக நிழல் போல ஒரு பையனின் உருவம் வருகிறது. இவ்வளவும் தெரியாத அவர் மனைவியோடு வெத்தலை பாக்கு போடுகிறார். இது தான் கதை. கதையின் ஓரிடத்தில் சந்திரா, தன் மகனை சட்டநாதனிடம் காண்பித்து விட்டு, “இவன நீங்க தொடுவீங்களா?” என்று கேட்கிறாள்.
தீண்டாமை என்பது வசதிக்காக வைத்துக் கொள்கிற சம்பிரதாயம் என்று சமூகத்தைக் குனிய வைத்துக் கொட்டுகிறாள் சந்திரா. வேலைக்கு வரும் சந்திராவை ஏமாற்றி உறவு வைத்து, கர்ப்பம் தரிக்க வைத்து, அதை மறைக்க முறைப்பையனோடு கல்யாணம் செய்து வைத்து, பிள்ளையை அவளிடமிருந்து பிரித்து, எங்கோ அநாதையாக வாழவைத்து, செத்ததும் யாருக்கும் தெரியாமல் புதைத்து, மனைவியிடம் அதை மறைத்து, இப்பொழுது மனைவியோடு சர்வ சாதாரணமாக வெத்தலை பாக்கு போட்டுக்கொண்டிருக்கிறார், பகலில் தன் ஜாதியற்ற கவர்னருக்குக்கூட துணியைத் தூக்கிப் போடுகிற ஜாதியைச் சேர்ந்த சட்டநாதன். என்ன கொடுமை சார் இது!
ஆண் குறியில் அரசு ஸ்டிக்கர்
அடுத்து, ‘கிறக்கம்’ என்ற கதை. சாராயக்கடையின் அவலத்தை எடுத்துக் கூறுகிற கதை. ஒரு குவார்ட்டருக்காக கண்கள் பூத்திருந்து, கவலையுடன் காத்திருந்து, ஓசிக்குடி குடிப்பதற்கு ‘எதையும் தடவிக் கொடுக்க’ தயாராய் இருக்கும் ஒரு சோம்பேறிக் கூட்டத்தை கண்ணில் கொண்டு வருகிறார். ‘எதையும் தடவிக் கொடுக்கத் தயாராய் இருக்கும்’ என்று நான் எழுதும் போது நான் ஓர் இலக்கிய எழுத்தாளன் இல்லையோ என்ற கவலை வருகிறது. அவரைப்போல வெளிப்படையாக எழுதக் கூசுகிறதே என்று நினைக்கத் தோன்றுகிறது. கதையைப் படிக்காதவர்கள், நீங்கள் கதையைப் படிக்கும் போது, இப்படியும் எழுதலாமா? என்ற அதிர்ச்சி எனக்கு வந்ததை நீங்கள் உணர்வீர்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. நீங்களே கதையைப் படித்துச் சொல்லுங்கள்.
ஒரிஜினல் குடியில் ‘கரைசல்’ கலப்பதை விளக்கமாக விவரிக்கிறார். ரகுபதி தான் கதையின் ஹீரோ. அவனும் குடிக்கு அடிமை தான். கடையைத் திறந்ததும் எல்லோரும் ஒருவரை ஒருவர் இடைவெளியில்லாமல் நின்றும் தள்ளிக்கொண்டும் முண்டியடித்து சரக்கை வாங்குகிறார்கள். (இந்த இடத்திலும் ஒன்று இலக்கியத் தரத்தோடு எழுதியிருப்பார்…நீங்களே படித்துக் கொள்ளுங்கள்) ஆட்டுக்கறி வாங்கப் போன ரகுபதி, நண்பனோடு சரக்கு அடித்து விட்டு, வீட்டுக்கு வந்து மனைவியிடம் கறியைத் தருகிறான். இருவரும் கட்டிப்பிடித்துக்கொள்ள, அவள் கைலியை அவிழ்க்க, அவன் ஆண் குறியில் டாஸ்மாக் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது என்று கதை நிறைவுறுகிறது.
அரசின் ஸ்டிக்கர் ஒட்டும் விளம்பரக் கலாச்சாரத்தை கிண்டல் செய்வதாக எடுத்துக் கொள்ளலாம். குடிப்பதற்கான சரக்கு பற்றியும், சரக்கு விற்கும் இடத்தைப் பற்றியும், குடிகார அடிமைகள் பற்றியும், குடிக்கு அடிமையான பிறகு வரும் பழக்க வழக்கத்தைப் பற்றியும் விலாவாரியாக சொல்லப்படுகிறது. குடி குடியைக் கெடுக்கும் என்பது எவ்வளவு உண்மை! அதற்கு ஓர் அரசாங்கம். என்ன கொடுமை சார் இது!
கல்யாணத்திற்கு முந்தைய காதலன் மூலம் குழந்தை
‘சுமை’ கதை. ஜெயந்தி கதை நாயகி. எட்டு மாதத்தில் பிறந்த இருபது நாள் சிசுவை ஒரு கத்தியால் அறுத்துப் போட்டு விட்டு உட்கார்ந்திருக்கிறாள். போலீஸ்காரர்கள் வருகிறார்கள். விசாரிக்கிறார்கள். கண்ணன் கணவன். பக்கத்து மில்லில் வேலை பார்க்கிறான். கண்ணன் வந்து, “ஏண்டி இப்படி பண்ண?” என்று கேட்டுவிட்டு அழுகிறான். ஜெயந்தியை ஸ்டேஷனுக்கு கொண்டு போகிறார்கள்.
ஃப்ளாஷ் பேக். மில்லில் அக்கௌண்டன்ட் கண்ணன். ஜெயந்தி பேக்கிங் செக்ஷன். அப்பொழுது பழக்கம். கல்யாணம் பண்ணிக்கலமா? என்று கேட்கிறான். இவள் இன்னொருவனோட இருக்கிற பழக்கத்தைச் சொல்லி வேண்டாம் என்கிறாள். ஆனால் சாதி வேறுபாட்டால், பழகியவன் இனி இவளோடு உறவு வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேறு கல்யாணம் செய்து கொள்கிறான். ஆனால் அதற்குள் இவள் கர்ப்பமாகிவிட்டாள். மறுபடி கண்ணன் தன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா எனக் கேட்டு ஜெயந்தி சம்மதித்து இருவரும் ஒன்றாக வாழ்கிறார்கள்.
இன்றையக் கதைக்கு வருவோம். போலீஸ் ஸ்டேஷன். ஜெயந்தியை காவல் நிலையத்தில் லாக்கப் அறையில் அடைத்து விடுகிறார்கள். தண்ணீர் கேட்கிறாள். இவன் ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து வந்து அவளுக்குக் கொடுக்கிறான் என்று கதை நிறைவுறுகிறது.
சுமை என்று கதைக்குப் பெயர் வைத்திருக்கிறார். வேலை செய்யும் இடத்தில் ஜெயந்திக்கு ஒருவனோடு பழக்கம் ஏற்படுகிறது. உறவு கொள்கிறாள். ஆனால் அவன் சாதியைச் சொல்லி, “என் குடும்பத்தில் வேறு சாதி பெண் என்று தெரிந்தால் என்னை வெட்டிப் போட்டு விடுவார்கள்” என்று சொல்லி, இவளைக் கழற்றி விடுகிறான். ஆனால் கண்ணன் அதைத் தெரிந்தும் திருமணம் செய்து கொள்கிறான். கழற்றிவிட்டவன் வேறு கல்யாணம் செய்து கொண்ட இரண்டாவது நாள் அவனால் கர்ப்பம் தரிக்கப்பட்ட குழந்தை ‘சுமை’ யாகத் தெரிகிறது அவளுக்கு. அந்தச் சுமையின் கழுத்தை அறுத்ததற்குப் பதில், கழற்றிவிட்டவனின் கழுத்தை அறுத்திருக்கலாம். என்ன கொடுமை சார் இது!
குடும்பத்தோடு வாழாமல் குடும்பத்திற்காக வாழ
அடுத்து, ‘ராக்கெட் தாதா’ கதை. ராக்கெட் தாதா என்ற பட்டப் பெயர் கொண்ட தாவூத் இப்ராஹீம் தான் கதை நாயகன். சவுதி அரேபியாவில் இருக்கும் அலுமினிய உருக்காலையில் பல வருடங்களாக வேலை செய்கிறான். ஒரு பத்துக்குப் பத்து அறையில், மேலும் கீழும் இருக்கிற நான்கு கட்டில்களில், நான்கு பேரில் ஒருவனாக இருக்கிறான். மெஹ்ருன்னிஸா தாவூத்தின் மனைவி. இருபது வயது மெஹ்ருன்னிஸாவுடன் திருமணம் ஆகி இரண்டே மாதத்தில் சவுதி அரேபியாவுக்குப் பயணம். ஐந்தாண்டுகள் கழித்துத் தான் முதல் பயணமாக வீட்டிற்கு வருகிறான். வரும் போது முதல் மகன் நஸீருக்கு ஐந்து வயது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜைனத் என்கிற மகள் பிறக்கிறாள்.
இப்பொழுது தாவூத்திற்கு அறுபது வயது ஆகிவிட்டது. மகள் ஜைனத்திற்கும் திருமணம் ஆகிவிட்டது. மகன் நஸீருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவ்வளவு நாட்கள் தாவூத் சவுதியிலேயே வேலை செய்து வருகிறான். இன்றைக்கு இந்தியாவிற்கு வரவேண்டிய நாள். வீட்டில் உள்ளவர்களுக்கு தருவதற்காக கடையில் போய் பொருட்களை வாங்கி வருவதில் தான் கதைத் தொடங்குகிறது.
நாற்பது வருட சவுதி வாழ்க்கையில் இளவயது மெஹ்ருன்னிஸாவை நினைத்து அறையில் சுய இன்பம் காண்பது அவர் வழக்கம். ஒரு தடவை, மேல் கட்டிலில் ஒருவன் இருந்ததைக் கவனிக்காமல், அப்படிச் செய்ததால், ‘ராக்கெட் தாதா’ என்று அவனுக்குப் பட்டப் பெயர் வந்தது என்று கதை நிறைவுறுகிறது. (இனி ராக்கெட்டைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் இந்த ஞாபகம் வந்து தொலைக்கப் போகிறது.)
ஆனால், தாவூது போன்றவர்களின் வாழ்க்கை நிதர்சனம் இது தான். குடும்பத்துக்காக வாழ்வதாக நினைத்து, குடும்பத்தோடு வாழ முடியாத நிலை. இப்படி ஒரு நிலைக்கு தாவூதையும், மெஹ்ருன்னிஸாவையும் தள்ளிவிட்டது யார்? என்ன கொடுமை சார் இது?
நான் உன்னை ஏமாற்ற...நீ என்னை ஏமாற்ற
‘சித்திரங்கள்’ கதை. சுந்தரும் திவ்யாவும் கதை மாந்தர்கள். இவர்களுக்குத் திருமணம் ஆகி அஸ்வின் என்கிற எட்டு வயது பையன் இருக்கிறான். அஸ்வின் நான்கு வயதாக இருக்கும் போது, திவ்யா வேலை செய்யும் அலுவலகத்தில் ஒரு சுற்றுலா செல்கிறார்கள். அப்பொழுது கூட வேலை செய்யும் ரியாஸூடன் திவ்யாவுக்கு காதல் இருந்தது. இருவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். அதை திவ்யா தன் கைப்பையில் வைத்திருக்கிறாள். ஒரு நாள் சுந்தர் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து விடுகிறான். கடந்த நான்கு வருடங்களாக, ஒரே வீட்டில் இருந்தாலும், சண்டையும் சச்சரவுமாக வாழ்க்கைப் போய்க்கொண்டிருக்கிறது.
அன்றைக்கு ஒரு நாள், அந்த புகைப்படத்தை மகன் அஸ்வினுடன் காண்பித்து விடுவேன் என்று சுந்தர் மிரட்டுகிறான். “நீ ஒரு தேவடியான்னு அவன் தெரிஞ்சிக்கனும்” என்று சொல்வதில் கதைத் துவங்குகிறது. எட்டு வயது அஸ்வின் சுந்தரைக் கண்டாலே ஒதுங்கிப் போகிறான். அது ஏன் என்று சுந்தருக்குப் புரியவில்லை. அதனால் தான் அந்தப் போட்டோவைக் காண்பித்து பையனைத் தன் பக்கம் இழுக்க, சுந்தர் துடித்தான்.
அஸ்வினுக்கு அப்பாவைப் பிடிக்காமல் போய்விட்டது. ஏனென்றால் நான்கு வருடங்களாக, திவ்யா தன் மகனிடம், “அப்பாவுக்கு ரகசியமாக ஒரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது” என்று பொய் சொல்லி வளர்த்திருக்கிறாள் என்று கதை நிறைவுறுகிறது.
தன் தனிப்பட்ட உறவுகளில் இருக்கிற குளறுபடியில், தந்தைக்கும் மகனுக்குமான உறவில் விரிசல் கொணரும் தாய். மனைவியின் அதீத உறவுகளால், மனதளவில் பிரிந்து போன கணவன், ஒரு சான்றை மகனிடம் காண்பித்து, மனைவியைக் கட்டுக்குள் கொண்டவரத் துடிக்கும் தந்தை. மகன் என்ன பாவம் செய்தான்? இப்படி நடக்கிற குடும்பங்கள் இருக்கத்தான் செய்கிறது. என்ன கொடுமை சார் இது?
இலக்கியவாதிகளின் கற்பனை வாழ்க்கையும் அட்டக்கத்தி வாளும்
காஃபி ஷாப் கதை. சோஃபியும் சுகிதாவும் நண்பிகள். சமூக ஊடகங்களில் தங்களையே புதைத்துக் கொள்ளும் கதை மாந்தர்கள் இவர்கள். ஒரு காஃபி ஷாப்பில் சோஃபி சுகிதாவுக்காக காத்திருக்கிறாள். அப்படி காத்திருக்கும் நேரத்தில் எழுத்தாளர்கள் நிரம்பிய இலக்கியக் கூட்டங்களில், மூத்த எழுத்தாளர்களுக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் இடையே நடக்கும் ‘கலகத்தை’ப் பற்றி விவரிப்பதில் கதைத் துவங்குகிறது. அப்படிப்பட்ட நூல் அறிமுகக் கூட்டத்தில், ஓர் இளங்கவி ஒரு மூத்த எழுத்தாளனை அறைந்து விடுகிறான். அந்த இளங்கவி முகநூலில் கவிதைகள் போல ஒன்றை எழுதி வருபவன். அந்த இளங்கவி மேல் தான் சுகிதாவுக்கு அப்போது காதல். சோஃபியும் சுகிதாவும் சமூக ஊடகங்கள் மூலமாகத் தான் இலக்கிய உலகுக்கு அறிமுகம் ஆகியிருந்தார்கள்.
காஃபி ஷாப்புக்கு சுகிதா வந்து சோஃபியுடன் சேர்ந்துக் கொள்கிறாள். அந்த இளங்கவியும் வந்து சேர்கிறான். ஆனால் அவன் பதட்டமாக இருக்கிறான். இலக்கிய தரவுகளைப் பெற உண்டாக்கியிருந்த புது ஆப் (App) ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும், எந்தப் பொத்தானை அழுத்தினாலும், இவன் கை நீட்டிய மூத்த எழுத்தாளரின் குரல் கேட்பதாகவும், அந்தக் குரலில் யதார்த்தத்தின் அப்பட்டம் வெளிப்படுவதாகவும் கதை நிறைவுறுகிறது.
இலக்கியக் கூட்டங்கள் என்கிற பெயரில் நடக்கும் பித்தலாட்டங்களை, முகமூடி ஆளுமைகளை, எழுத்தாளர், கிண்டலுடனும் கேலியுடனும் பரிகாசம் செய்கிறார். இலக்கியவாதிகள் தனி உலகில் தான் வாழ்கின்றனரோ? இலக்கியவாதிகள் செயல்பாட்டாளர்களாக மாறாத பட்சத்தில் இது தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கும். என்ன கொடுமை சார் இது?
வாழ்க்கை: மனதில் ரோமியோ. வெளியில் அம்பி
கற்படிகள் கதை. ராமமூர்த்தி, சுப்ரமணியனின் வீட்டுக்கு வருகிறார். அவரது மனைவி வசந்தாவைப் பார்க்கவேண்டும். ஒரு வேலைக்காரப் பெண் வந்து கதவைத் திறக்கிறார். உள்ளே ஒரு திண்ணையில் காத்திருக்கிறார். காத்திருக்கும் அந்த நேரத்தில் வீட்டின் முன்னே இருந்த சிறு தோட்டத்தில் வாழைக்கன்றுகள் நடுவதற்காகக் கட்டிவைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார். ராமமூர்த்தியின் மனைவியைப் பற்றிய நினைவு வருகிறது. தன் குடும்பத்தில், விவசாயம் பொய்த்துப் போய், பிள்ளைகளிடையே மரியாதைக் குறைந்து, மனைவி ஆழமான அமைதிக்குப் போய்விட்ட நிலையை நினைத்துப் பார்க்கிறார். பணம் இல்லை. வேலை இல்லை. அதே நேரம், இளம் பிராயத்தில் சுப்ரமணி வங்கி வேலைக்குத் தன்னை தயார் செய்து கொண்டிருந்த போது, ராமமூர்த்தி வசந்தாவிற்கு (சுப்ரமணியின் தற்போதைய மனைவிக்கு) காதல் கடிதங்களை எழுதிக் கொண்டிருந்ததும், பத்தாயத்தில் சாய்த்து முத்தம் கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது. தன்னையே நொந்துக் கொள்கிறார். எதற்கு அந்த வசந்தாவை மறுபடி பார்க்க வந்திருக்கிறோம் என்ற தெளிவில்லாமல் காத்திருக்கிறார். தோற்றுப் போன வாழ்வில் திரும்ப வசந்தம் வேண்டும் என்று கேட்க வந்திருக்கிறோமா என யோசிக்கிறார்.
வசந்தா வருகிறாள். நடு அறையில் உட்கார்ந்து சம்பிரதாய உரையாடல் நடக்கிறது. நீண்ட மௌனம் வந்த போது, “இந்தப் பக்கம் வந்தேன்…சும்மா பாத்துட்டு போகலாமின்னு….” “அப்படியா?” என்று அவள் எழுகிறாள். பிறகு மண்வெட்டி கேட்டு வாங்கி ஒரு வாழைக் கன்றை நடுகிறார். வசந்தா ஒரு பையில் அரிசி கொடுத்து விட, அதை பக்கத்து கோயிலின் அருகே உள்ள குளத்து படிக்கட்டுகளில் அமர்ந்து தூவுகிறார். மீன்கள் வந்து தின்கின்றன என்று கதை நிறைவுறுகிறது.
இன்னுமொரு இளைய வயது காதல். ஒவ்வொருவரும், வெளியில் சொல்ல முடியாத பல்வேறு நினைவுகளைச் சுமந்துக்கொண்டு, இயல்பில் வேறு ஒன்றை வெளிப்படுத்திக்கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் எனக் கதை அறிவுறுத்துகிறது. வாழ்வில் பிக்கல் பிடுங்கலிலிருந்து சற்றே ஓய்வு பெற, கொஞ்சம் அத்து மீறத் துடிக்கும் மனித உணர்வை அப்பட்டமாகக் காட்டுகிறது. என்ன கொடுமை சார் இது?
மகள் செத்துவிடுவாளா?
சுமித்ரா கதை. கோவிந்தன் ஒரு கல்யாணத் தரகர். ஜாதகமும் கணிக்கத் தெரியும். ஒரு செவிட்டு ஜோசியர் இருந்தார். ஒரு மாப்பிள்ளையின் ஜாதகத்தைக் கொடுக்க, அதைப் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் எழுந்து போய் விடுகிறார். இரண்டு நாட்களில் அந்தப் பையன் இறந்து போகிறான். இறந்து போகிற ஒருவனுக்கு ஜாதகம் கணித்து என்ன பிரயோசனம் என்று தெரிகிற அளவுக்கு ஞானம் அவருக்கு.
மளிகைக்கடை வைத்திருந்த கோவிந்தன், அப்படிப்பட்டவர்களிடம் பழகி, கொஞ்சம் கொஞ்சமாக கல்யாணத் தரகராகிவிட்டார். அவருக்கு நான்கு மகள்கள். முதல் மகள் சுமித்ரா சமைகிறாள். அடுத்து நித்யா ருதுவானாள். பிறகு வாணி வயதுக்கு வந்தாள். நான்காவது கடைக்குட்டி என்னேரமும் ஆகலாம். சுமித்ராவுக்கு மாப்பிள்ளையைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அமையவில்லை. அடிக்கடி சுமித்ரா கொல்லைப்புறம் உள்ள கிணற்றடிக்குப் போகிறாள். அங்கு உள்ள கல்லில் உட்கார்ந்துக் கொண்டு கிணற்றுத் தண்ணீரைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறாள்.
ஒரு நாள் ஜாதகத்தை மிகச் சரியாக கணிக்கும் செவிட்டு ஜோசியரைப் பார்க்க, வேறு ஒருவருக்காகப் போகிற போது, மனைவியின் யோசனையில், சுமித்ராவின் ஜாதகத்தையும் எடுத்துப் போகிறார் கோவிந்தன். மாப்பிள்ளையின் ஜாதகத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, தவறுதலாக தனது மகள் சுமித்ராவின் ஜாதகத்தைக் கொடுத்துவிடுகிறார். “இந்தப் பொண்ணு…இந்நேரம்…” என்று ஜோசியர் சொல்ல, வீட்டிற்கு கிளம்புகிறார். சுமித்ரா அந்தக் கிணற்றடியில் உட்கார்ந்திருக்கிறாள். “சாகல்லாம் மாட்டேம்பா..” என்று அவள் சொல்வதோடு கதை நிறைவுறுகிறது.
மிக அழகாகப் பின்னப்பட்ட கதை. நம்பிக்கைத் தரும் முடிவு. ஆனால் நிறைவேறாத திருமண பந்தம். என்ன கொடுமை சார் இது!
கணவனோடு சண்டை. கண்டவனோடு உறவு
லட்டு கதை. லட்டு தன் முப்பதுகளில் இருக்கும் ஒரு பெண். அவள் யாரோ ஒருவருடன் தனிமையில் அந்தரங்கமாகப் படுத்திருக்கிறாள். அந்த யாரோ அவளது கணவன் இல்லை. கலவியில் ஈடுபட்டிருக்கும் போது ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவள் பேசுகிற தொனியிலிருந்து, அது ஒருவேளை அவளது கணவனிடமிருந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. எங்கு என்ன செய்கிறாள் என்று சொல்லாமல் வைத்துவிடுகிறாள்.
அவளுக்கு மூன்று வயதில் நவீன் என்ற ஒரு பையன் இருந்து, இறந்திருக்கிறான். அவளது கணவனுக்கும் அவளுக்கும் சரியான புரிதல் இல்லாததால், ஜூரம் அடித்த நவீனுக்கு இருவருமே மருந்தை கொடுத்ததால், அதீதி மருந்து உட்கொண்டதால், அவன் இறந்து போய்விட்டான். அந்த சோகத்தை மறைக்க, யாரோ ஒருவருக்கு போன் செய்து வரவழைத்து அவள் உல்லாசமாக இருக்கிறாள் என்று கதை நிறைவுறுகிறது. இந்தக்கதையை நான் சரியாகப் புரிந்துக் கொண்டேனா என்று ஒரு சிறிய குழப்பம் இருக்கத்தான் செய்கிறது.
கதை பாணி சுவாரஸ்யமாக இருக்கிறது. வாசகனோடு எழுத்தாளர் உரையாடுகிறார். வாசகனை கதைக்குள் இழுக்கிறார். கதையின் மாந்தர்கள் செய்யும் செயலுக்கும் அவர்கள் எண்ணத்திற்கும் வாசகனை வம்படியாக தங்கள் கருத்துகளைச் சொல்லத் தூண்டுகிறார். கதையொன்று நிகழும் போது, அதன் மேலே எழுத்தாளனும் வாசகனும் ஒருவரையொருவர் அந்த நிகழ்வின் மேல் தங்கள் எண்ணங்களைப் போட்டு, கட்டிப் புரண்டு கொள்ள வைக்கிறார். நல்ல உத்தி. பிளவு ஏற்பட்ட குடும்ப உறவால், மகன் இறக்க, அதற்காக இன்னொருவனோடு படுக்கையா? என்ன கொடுமை சார் இது!
புரியாத புதிர்
அடுத்து ‘படுகை’க் கதை. ஒரு சப் இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு டிரைவர் சேர்ந்து ஸ்டேஷன்லேர்ந்து கொள்ளிட ஆற்றங்கரைக்குப் பயணிக்கிறார்கள். ஒருவனை வலைவீசிப் பிடிக்க. தேவடியாப் பையன், கண்டாரோலி மொவன் என்று சொல்லும் போதே சப் இன்ஸ்பெக்டரின் கோபம் புரிகிறது.
பிடிக்கப் போகும் ஆள் இன்னும் வரவில்லை. ஆனால் அவனை வாசகன் உருவகப்படுத்திக்கொள்ள பலவற்றைச் சொல்லிப் போகிறார். அவனோட இடதுகையில பிச்சிவா இருக்கும். விசும்பு மாதிரி இருந்தாலும் பளிச்னு துள்ளுவான். சப் இன்ஸ்பெக்டர் ஒரு புதரில் ஒளிந்திருப்பார். அப்பொழுது ஓர் இலையை பிய்த்து விடுவார். ஆனால் அதை மணலில் போட்டு அமுக்கிவிடுவார். ஏனென்றால் அந்த வாசனைத் தெரிந்து அவன் ஓடிவிடுவான் என அவர் நினைக்கிறார். அப்படி அந்த நிலத்தைப் பற்றிய ஞானம் அவனுக்கு. அதைப் போலவே அவன் வருகிறான். ஆற்றில் நிற்கிறான். இவர்கள் உஷாராகிவிடுகிறார்கள். அப்பொழுது ஒரு பெண் வந்த அவனிடம் ஏதோ சொல்கிறாள். அவள் அங்கேயே நின்று விடுகிறாள். இவன் தொடர்ந்து அக்கரையை நோக்கி நடக்கிறான். சரியான இடத்தில் வந்ததும் முதல் கான்ஸ்டபிள் அவன் மீது பாய்கிறான். அவன் கீழே விழ, இரண்டாவது கான்ஸ்டபிளும் அவன் மீது விழுந்து அமுக்குகிறான். அதே நேரத்தில் அவள் சிறிய கத்தியோடு பாய, அது சப் இன்ஸ்பெக்டரின் தோளில் இறங்குகிறது. அடுத்த ஐந்து நிமிடத்தில் அவனையும் அவளையும் தனித்தனியாக கைகளைப் பிணைத்து விடுகிறார்கள். அவளின் புடவையைக் கொண்டு சப் இன்ஸ்பெக்டரின் இரத்தத்தைத் துடைக்கிறார்கள். பிறகு டிரைவர் நிற்கும் இடத்தை நோக்கிச் செல்கிறார்கள். ஆனால் அங்கு டிரைவர் செத்துக் கிடக்கிறான்.
அவன் ஏற்கனவே டிரைவரைக் கொலை செய்துவிட்டு, துணையாளுடன் இவர்களின் இருப்பிடத்தை நோக்கி துணிவாக வந்திருக்கிறான். ஜீப்பின் சக்கரங்களில் இருந்த காற்றைப் பிடுங்கி விட்டிருக்கிறான். போலீஸ்காரர்கள் மறைந்து இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவன் அங்கே தைரியமாக வருகிறான். அவனோடு வந்தவள் சப் இன்ஸ்பெக்டரை குத்துகிறாள். இவன் யார். ஏன் இவனைப் பிடிக்க வருகிறார்கள் என்றெல்லாம் கதையில் சொல்லப்படவில்லை. ஆனால் கொள்ளிடக்கரை அரசியலைத் தெரிந்தவர்களுக்கு இவன் யாராக இருக்கும் என்று யூகிக்கலாம். ஆக, துணிவும் வீரமும் யாரிடம் இருக்கிறது என்ற கேள்வியோடு கதை முடிகிறது. இருட்டில் சொல்லப்படுகிற கதை, மர்மமாகவே இருக்கிறது. என்ன தான் இந்தக் கதை சொல்ல வருகிறது? மூளை கசங்கிப் போனது தான் மிச்சம். என்ன கொடுமை சார் இது!
இந்தப் பெண்ணுடலில் இத்தனை ஊக்குகளா?
பிரார்த்தனை கதை. பல உருவகங்களுடன் பெண்கள் மீது போடப்பட்டிருக்கும் நேரடி மற்றும் மறைமுக வன்முறைகளைப் பேசுகிறது. எழுத்தாளரின் மொழி ஆற்றல் அதீதமாக வெளிப்படுகிறது. உலகியல் வாழ்க்கைப் பற்றிய தரவுகள் பலவற்றை கற்பனை வளத்தோடு உருவகப்படுத்தியிருக்கிறார். எடுத்துக்காட்டாக, “பிரார்த்தனா! உன் மீது அடுக்கப்பட்டிருக்கும் கற்களை ஒவ்வொன்றாகச் சரியச் செய்ய வேண்டும். அதன் மீது வரையப்பட்டிருக்கும் நாமத்தை, பட்டையை, பூத கணங்களின் திறந்த வாயை, கால் தூக்கியிருக்கும் உன்மத்த நடனத்தின் லாவகத்தை, நீண்ட கூந்தலுடைய அப்பொற்சித்திரத்தை…….தேவியின் சொரூபத்தை, காளியின் பச்சையை, …….கொய்த தலையுடன் கால் தூக்கி பிரேதம் மீது நிற்கும் கொலையழகின் பேரன்பை…” என்று பெண்களின் மீது சுமத்தப்பட்ட மத நம்பிக்கைகளை, சடங்குகளை, புராணங்களை, கதைகளை உதறச் சொல்கிறார்.
பாலியல் பிரச்னைகள்.
திருமணம் மீறிய உறவுகள். காதல் குளறுபடிகள். போராட்டக்களத்தில் பெண்கள் இப்படித்தான் எல்லா கதைகளுமே போகிறது.
நிழல் கதையில், மனைவியுடன் வாழும் சட்டநாத அய்யர், திருட்டுத்தனமாக பட்டியலினத்து சந்திராவுடன் சேர்ந்து பையனைப் பெற்று, அவன் சாவும் போது, வெளியுலகத்துக்குத் தெரியாமல் தோட்டத்தில் புதைக்கிறார்.
கிறக்கம் கதையில், ரகுபதி நிரம்ப குடித்து விட்டு போதையில் தன் மனைவியோடு சேரும் போது, சுருங்கிய ஆண்குறியில் அரசாங்கத்தின் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது.
சுமை கதையில் ஜெயந்திக்கு, மில்லில் கூட வேலை செய்யும் ஒரு பையனுடன் உறவு. அப்பொழுதே கர்ப்பம். இருபதி நாள் சிசுவின் கழுத்தை அறுத்துவிட்டு ஜெயிலுக்குப் போகிறாள்.
ராக்கெட் தாதா கதையில், தாவூத்திற்கு குடும்பத்திலிருந்து பிரிந்து தனிமையில் வாழவேண்டிய சூழலால் சுய இன்பம்.
சித்திரங்கள் கதையில், ஏற்கனவே திருமணமான திவ்யாவுக்கு, கூட வேலை செய்யும் ரியாஸூடன் உறவு. கணவனுக்கு ரகசிய உறவு இருப்பதாக மகனிடம் பொய் சொல்லி, தந்திரமாகத் தந்தையிடமிருந்து பிரித்து வைக்கிறாள்.
காஃபி ஷாப் கதையில், தோழிகள் இளங்கவியை பப்புக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடுகிறார்கள். இலக்கியக் கூட்டங்களில் அறநெறிகள் அற்று நடக்கும் இயல்பு.
கற்படிகள் கதையில், கல்யாண வயதில் இருக்கும் பிள்ளைகளைக் கொண்ட ராமமூர்த்தி, வாழ்வில் புழுங்கிப் போய், தன் இளைய வயதில், பத்தாயத்தில் சாய்த்து வைத்து முத்தம் கொடுத்த, இன்றைக்கு வேறு ஒருவரின் மனைவியாக இருக்கும் வசந்தாவைப் பார்க்க வருகிறார்.
லட்டு கதையில், கணவன் மனைவியிடையேயான புரிதலின்மையில் மரித்த மகனின் துக்கத்தை துடைக்க இன்னொருவனோடு உறவு.
படுகைக் கதையில், போலீஸ் குற்றவாளியெனத் தேடும் ஒருவனுக்குத் துணையாக வந்து சப்-இன்ஸ்பெக்டரையே கொல்லும் பெண்.
பிரார்த்தனை கதையில், சமூக, பொருளாதார, அரசியல், மத, உளவியல் சுமைகளை ஏந்தும் பெண்கள் என பல்வேறு விதமான பிரச்னைகளை ஆசிரியர் எடுத்தாளுகிறார்.
எழுத்தாளர் பக்க நியாயத்தை கீழ்க்கண்ட பேட்டியில் தான் பார்த்தேன்.
*******
2019 ஆம் ஆண்டு, கனலி கலை இலக்கியச் சூழலியல் என்ற இணையதளத்திற்காக, ஜி. கார்ல் மார்க்ஸ் அவர்களை க. விக்னேஸ்வரன் ஒரு பேட்டி எடுத்தார். அதைப் படித்த பிறகு மறுபடியும் எல்லாக் கதைகளையும் மறுவாசிப்பு செய்துவிட்டு, வேறுமாதிரி என் வாசக அனுபவத்தை எழுதவேண்டும் என்ற நினைப்பு வந்தது. அதில் விக்னேஸ்வரன் ஒரு கேள்வி கேட்கிறார்.
‘வார்த்தைகள் மீது படரும் பனி’ மற்றும் ‘டிராகன் டாட்டூ’ இந்த இரண்டு கதைகளும் காமத்தையும், உடலையும் தாண்டி ஒரு வாழ்க்கையை பேசுகிறது. அடிப்படையில் இந்த நவீன வாழ்வில் காமம் மிகப்பெரிய பிரச்சனையாக தான் இருக்கிறது ஆனால் தொடர்ந்து அதை மட்டும் சிறுகதைகளின் மையமாக சில சமயம் பேசிக் கொண்டிருக்கிறோமா? என்று தோன்றுகிறது. ஒரு விமர்சனத்துக்கு மட்டும் இதை கேட்கிறேன்? இது தான் கேள்வி.
அதற்கு ஜி. கார்ல் மார்க்ஸ் அவரது கருத்தைச் சொல்கிறார்: நான் அப்படி நினைக்கவில்லை. நம் சூழலில் காமம் அது பேசப்பட்டிருக்கவேண்டிய அளவுக்கு பேசப்படவில்லை என்றே நினைக்கிறேன். மேலும் காமம் என்பது பொதுவான சொல்லாக இருப்பதால், ஒவ்வொருவரும் அவரவர்களுக்குப் பிடித்த விதத்தில் பொருள்கொண்டுவிடுகிறார்கள்.
காமத்திற்கு எதிரான மனத்தடை நமக்கு இருக்கிறது. இது நமது மதங்களால், இதிகாசங்களால், கதைகளால் பராமரிக்கப்படுகிறது. அதனால் அதைப் புரிந்துகொள்வது மேலும் சிக்கலாகிவிடுகிறது. காமத்தை ஒரு முக்கிய வாழ்வியல் அலகாக நாம் அங்கீகரிக்கவில்லை என்றால் இங்கு நடக்கும் வன்முறை, சுரண்டல், ஊழல் எது குறித்தும் நாம் காத்திரமாக விவாதிக்க முடியாது.
வெறும் துய்ப்பை மட்டுமே மேலோட்டமாக முன்வைக்கும் பாலியல் எழுத்தை நிராகரிக்கிறேன் என்று புறப்பட்டுப் போய் நம் ஒழுக்கவாதிகள் பாலியல் உறுப்புகளைக் கொய்து கொண்டு வந்து பெட்டியில் போட்டு மூடுவதே நம் சூழலில் நடக்கிறது. நான் எனது எழுத்தில் கொண்டுவந்திருப்பதை விட அப்பட்டமான பாலியல் சமூகம் நம்முடையது.
நாகரிகம் என்ற பெயரில் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அதற்கு எதிராக சிந்திக்கவும் வாழவும் முன்வந்த சமூகமாக நாம் இருக்கிறோம். இந்த துயரத்தைப் பற்றி தொடர்ந்து பேசவேண்டிய அவசியம் இருக்கிறது. அது பாலியல் எழுத்து என்று வசைபாடப்பட்டாலும்.
என்று பதிலிறுக்கிறார். அவரது கருத்து உடன்படவேண்டிய கருத்தாகத் தான் நான் பார்க்கிறேன்.
இந்த சிறுகதைத் தொகுப்பையும் ஆசிரியர் ஜி. கார்ல் மார்க்ஸையும் சரியாகப் புரிந்துக்கொள்ள விக்னேஷ்வரனின் இன்னொரு கேள்வி பயன்படுகிறது.
கேள்வி இது தான்.
‘லட்டு’ சிறுகதை வந்தவுடன் வரவேற்பு மற்றும் விமர்சனங்களை ஒருங்கே பெற்றது. இப்படி சிறுகதைகள் வெளிவரும் போது வரும் விமர்சனங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அதற்கான ஜி. கார்ல் மார்க்ஸின் பதில்: சிறுகதைகள் மீதான உடனடி விமர்சனங்கள் மற்றும் விவாதங்களை நான் மிகவும் நேர்மறையாகத்தான் பார்க்கிறேன். லட்டு கதையில், பயன்படுத்தப்பட்ட யுக்திக்காகவே அது அதிகமும் விமர்சிக்கப்பட்டது. நான் வழக்கமாக எழுதும் தொனியில் இருந்து வேறுபட்டு எழுதியதால், நான் தொலைந்து விட்டதாக நினைத்து சிலர் பதறிவிட்டார்கள். அந்தக் கதைக்கு அடுத்து “சுமித்ரா” என்று ஒரு நயம் யதார்த்தவாதக் கதையை எழுதி பத்திரிகைக்கு அனுப்பியிருந்தேன். துரதிஷ்டவசமாக லட்டு கதைக்கு முன்பே அது பிரசுரம் ஆகிவிட்டது. லட்டுவில் கொஞ்சம் பாலியல் சித்தரிப்பு தூக்கலாக இருக்கிறது என்று வேறு ஆதங்கப்பட்டார்கள். எனக்கு அதுவே கம்மி என்றுதான் தோன்றியது.
அவருக்குக் கம்மி என்று தோன்றுகிறது. என்னக் கொ……
********
சான்று
1. விக்னேஸ்ரன். க. (2019). அரசியல் எப்போதும் வாழ்க்கைக்கு வெளியில் இருப்பதாகத் தோன்றவில்லை. கனலி கலை இலக்கியச் சூழலியல். இணையதளம். https://kanali.in/interview-with-g-karl-marx/



Comments