top of page

நயனக்கொள்ளை - பாவண்ணன்

ree

நயனக்கொள்ளை 


பாவண்ணன் ஒரு கில்லாடி.

 

அவரின் கதைகளை மரநிழலில் நின்று படித்தால் எட்டி குளம் தெரியும். அதே கதையைக் குளக்கரையில் நின்று படித்தால் குளத்தின் மேலோட்டத்தில் இருக்கும் அல்லிப்பூ தெரியும். சற்றே குளத்தில் இறங்கி, நீரில் மூழ்கிப் படித்தால் அல்லிப்பூவின் வேர் தெரியும். கொஞ்சம் நீரிலிருந்து மேலே பார்த்தால் நீல வானத்தில் மேகங்கள் நெளிவது தெரியும்.

 

அதாவது பாலிலிருந்து தயிர், தயிரிலிருந்து வெண்ணைய்யும் மோரும், வெண்ணையிலிருந்து நெய், நெய்யிலிருந்து வாசம் என கதை வாசிப்பு அனுபவம் இருக்கிறது. மேலோட்டமாகப் படித்தால் அது பால். ஆழ்ந்து போகும் போது அது நெய்யின் வாசனை.

 

அழகிய உவமானங்களை (metaphors), நெய்யின் வாசனையாக, கதைகளில் வீச விட்டிருக்கிறார் பாவண்ணன். உவமைகளை (similies) அல்லிப்பூவின் மென்மை போல உலவ விட்டிருக்கிறார். கதையமைப்பை திருவையாறு அசோகாவைப் போல கட்டமைத்திருக்கிறார் பாவண்ணன். கருத்துகளை தென்னங்கீற்றின் தென்றல் போல தெறிக்கவிடுகிறார் பாவண்ணன்.

 

உவமானங்கள்

 ஒரு வாசகர் அந்தக் கதையின் தொடக்கத்தில் உள்ள உவமானத்தை அழகுற எடுத்துச் சொன்னார்:

 அன்றைக்கு கிரிஜா லண்டனிலிருந்து வருகிற நாள். அவர்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு கோயிலுக்கு மகா செல்கிறான். அங்கு ஒரு காட்சியைப் பார்க்கிறான். கோபுரத்தில் இரண்டு புறாக்கள் ஒன்றையொன்று பார்த்தபடி சுற்றிச்சுற்றிப் பறப்பதும், விளையாடுவதுமாக இருக்கின்றன. ஒரு வட்டச்சுற்றின் முடிவில் ஒரு புறா (மகா என்கிற இளைஞன்) திரும்பி வந்து அமர்ந்து மற்றொரு புறாவை (கிரிஜாவை) எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அதுவோ (கிரிஜாவோ) கோபுரத்தின் ஏழடுக்குகளையும் தொட்டுவிட்டு (லண்டனுக்குப்) பறந்து மறைந்துவிடுகிறது.

 

வேறு சில நிகழ்வுகளும் உவமானங்கள் போலவே உள்ளன. மகாவின் அப்பா, ஜெகசிற்பியனின் ‘கிளிஞ்சல் கோபுரம்’ நூலை வாங்கித் தரச் சொல்லுவார். ஏனென்றால் அவருடைய முதல் மாத சம்பளத்தில் வாங்கிப் படித்த புத்தகம் அது. அதில் “அன்புள்ள அபிராமிக்கு” என்று எழுதி அவருடைய மனைவிக்குப் பரிசாகத் தருவார். அவருடைய மனைவி நூலைப் படித்து விட்டு “மிகவும் பிடிச்சிருக்கு” என்று சொல்வார். (இதுவரை மகாவுக்கும் கிரிஜாவுக்கும் இடையிலான அன்பை விவரிப்பது). ஆனா அந்த நூலை மகாவின் அம்மா பத்திரமா எடுத்து வைக்காம, “எங்கேயோ காணாம போயிடுச்சி…” என்று சொல்லிவிடுவார். (கிரிஜா ஆறு வருடங்கள் தொடர்பில்லாமல் காணாமல் போனது போல.)

 

இன்னொரு நிகழ்வைச் சொல்கிறேன். மகாவின் அப்பா, தொலைக்காட்சியில் நடிகர் சந்திரபாபுவின் ஆட்டத்தைப் பார்த்தவிட்டு, அவரது அலுவலகத்தில் ஒருவர் அதே போல வளைந்து நெளிந்து டான்ஸ் ஆடுவார், சேட்டை செய்வார், மேடையில் எல்லோரையும் தொடர்ந்து மகிழ்விப்பார், என்று பழைய நினைப்பைப் பகிர்வார். (இதுவரை மகாவுக்கும் கிரிஜாவுக்கும் இடையிலான அன்பை விவரிப்பது). ஆனா, இப்ப எங்க இருக்காரோ தெரியலை என வருத்தப்படுவார். (கிரிஜா ஆறு வருடங்கள் தொடர்பில்லாமல் காணாமல் போனது போல).

 

வேறொரு காட்சியை எடுத்துக்கொள்வோம். கிரிஜா வரப்போகிற நாளில், மகா தன் அலுவலகத்தில் அமர்ந்து கணிப்பொறியில் மின்மடல்களைப் பார்த்துக் கொண்டிருப்பான். அவனது வேலையே வாடிக்கையாளர்கள் அனுப்பும் நிரல்வரிசையை (Program sequence) திருத்தி அனுப்பவுதே. அன்றைக்கு ஒரு நிரல்வரிசை வந்திருக்கும். “அந்த நிரல்வரிசையை மேலோட்டமாகப் பார்த்த போது, அதைச் செப்பனிடுவது மிகமிக எளிது என்றே தோன்றியது. ஆனால் வேலையில் இறங்கிய பிறகு தான் அதன் ஆழம் புரிந்தது. பிழையின் தடத்தை அறிய முடியவில்லை. அதற்குத் தீர்வு காண்பது பெரிய சவாலாக இருக்கப் போகிறது” என்று அவனுக்குத் தோன்றுகிறது. மேலோட்டமாகப் படித்தால் அவன் வேலையை விவரிப்பது போலத் தெரியும். ஆனால் உண்மையில் கிரிஜாவுடனான அவன் உறவு அந்த நிரல்வரிசை மாதிரி. செப்பனிடுவது எளிது போலத் தோன்றினாலும், அதற்குத் தீர்வு காண்பது பெரிய சவாலாக இருக்கப் போகிறது என்று முன்கூட்டியே கோடிட்டுக்காட்டுகிறார் பாவண்ணன்.

 

எல்லா உவமானங்களையும் தூக்கி சாப்பிடும் உவமானம் மகாவின் அப்பா கதாபாத்திரம். அப்பா கதாபாத்திரமே ஓர் உவமானம் தான்.

 

உச்சக்கட்டக் காட்சியில் கிரிஜா ஒரு கை, ஒரு கால் இயக்கமின்றி வருவதற்கு முன்பே, மகாவின் அப்பாவை அப்படித்தான் காட்சிப்படுத்தியிருப்பார் பாவண்ணன். மகா தான், அப்பாவின் பின்னால் நின்று கொண்டு, தன் இரண்டு கைகளையும் வைத்து அப்பாவைத் தூக்கி கழிவறைக்குக் கொண்டு செல்வான். அவருக்கு உணவு எடுத்து வைத்து, மருந்து மாத்திரை எடுத்துக் கொடுத்து…இப்படி அவருடைய இயலாத நிலையை கண் முன்னே எடுத்து வைத்துக்கொண்டே வருவார் பாவண்ணன்.

 

ஓரிடத்தில் மகாவின் அப்பா திருவாசகம் படித்துக் கொண்டிருப்பார். “இயக்கம் இல்லாத வலது கை தொங்க, வரிகளின் கீழே இடது கைவிரல் மட்டும் நகர்ந்துக் கொண்டிருந்தது” என்று எழுதியிருப்பார். பின்பு கிரிஜா வந்ததும், “உடம்புல வலதுபக்கம் முழுக்க அடி. ஒரு கை, ஒரு கால், ஒரு கண் எல்லாம் போச்சி” என்பாள். இருவருக்கும் வலது பக்கமே இயக்கம் இல்லை என்பதை கவனியுங்கள்.  பின்பு கிரிஜா வந்து விட்ட போது கூட அவள் நடையை “அப்பாவின் நடை போல வளைந்து தயங்கி நடக்கும் நடை” என்று எழுதுவார்.

 

இப்படி உவமானங்களை கதை முழுக்க பாவண்ணன் பயன்படுத்தியிருக்கிறார்.

 

பாவண்ணன் கில்லாடி தானே!

அதைப் போலவை உவமைகளையும் சொல்லலாம்.

 

 உவமைகள்

 இன்னொரு வாசகர் தனக்குப் பிடித்தப் பகுதியாகக் கீழ்க்கண்டச் சொற்றொடரை (உவமைகளைக்) கோடிட்டுக் காட்டினார். அது மகா, கிரிஜாவின் கண்களைப் பார்த்து வியப்புறும் போது வருகின்ற சொற்றொடர்கள்.  “வளைந்த ஓடக்கரையின் மதிலென இமைகள்…ஈரம் மின்னும் கருவட்டம். நடுவில் பால்நிறத்தில் சுடர்விடும் ஓர் ஒளிப்புள்ளி. அடர்ந்த ஒரு குன்றின் மீது ஏற்றிவைக்கப்பட்ட தீபமென எரியும் புள்ளி”.

 

ஓடக்கரையின் மதிலென இமைகள்! எவ்வளவு அழகான கற்பனை. இதைப் போலவே இன்னும் சில உவமைகள்.

 

அவள் கண்களின் இமைகள் மூடித்திறக்கும் போது, அவனது மனம் “புயல்காற்றில் சுழலும் மரக்கிளையென சுழன்ற”தாம். அவள் கண்கள் “பெரிய குளங்களைப் போல”… “பெரிய கடல்…பெரிய பள்ளத்தாக்கு…பனிமூடிய பெரிய மலைக்குன்று” என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறது.

 

ஐந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கிற மின்மடலில், ‘உன்னுடன் பேச வேண்டும்’ என்ற ஒற்றைவரிக்குக் கீழே ஜா என்ற எழுத்து இருந்தது. அந்த ஜா, ஓர் இறகு போல, மகாவின் நெஞ்சில் அசைந்து அசைந்து இறங்கிக்கொண்டிருந்ததாம்.

 

மற்றொரு வாசகர் இதை சொல்லும் போது, “அட!” என்றிருந்தது. கிரிஜா லண்டனுக்குப் போகும் முன் ஒரு தடவை மகா அவளைச் சந்திந்த போது, அவளது கண்களைப் பற்றிப் பேச்சு வந்தது. மகா சொல்வான். “உனக்கு கிரிஜான்னு பேர் வச்சிருக்கக் கூடாது” என்று சொல்லிவிட்டு வேறு பல பெயர்களைச் சொல்வான். விசாலாட்சி, அம்புஜாட்சி, பங்கஜாட்சி, மீனாட்சி, காமாட்சி, இந்திராட்சி, நீலாயதாட்சி என்று பட்டியல் நீளும். அதை ஆழமாகப் பார்த்த அந்த வாசகர் சொன்னார் “இந்த பெயர் கொண்ட ஆட்சிகளின் கண்கள் அழகான விசாலமான, விரிந்த, மீன்போன்ற கண்கள்” என்றார்.

 

அட! ஆமாம்!!

 

அப்படி அழகாக, முன் பாதி கதையில் விவரிக்கப்பட்ட, கண்களில் ஒன்றின் பார்வையை, விபத்திற்குப் பிறகு இழந்த பிறகு, “….மற்றொரு கண் சிற்பத்தின் கண்ணைப் போல் அசைவின்றி காணப்பட்டது” என்று எழுதுகிறார். பாவண்ணன் கில்லாடி தானே!

 

உவமானங்களையும் உவமைகளையும் வைத்து விளையாடிய பாவண்ணன், கதையமைப்பிலும் சபாஷ் வாங்குகிறார்.

 

கதையமைப்பு

ஒரு கதையில் முன்அமைப்பு (Set up), முரண்பாடுகளின் வளர்ச்சி (Development), தீர்வு (Resolution) என்று மூன்று நிலை இருப்பது உங்களுக்குத் தெரியும். இந்தக் கதையில் பாவண்ணன் முன்அமைப்பில் தன் திறமையெல்லாம் காட்டியிருப்பார்.

 

முதல் காட்சியிலேயே, மகாவுடைய அப்பாவின் நண்பர், கிரிஜாவின் வருகையை அறிவிக்கும் போது, “குடும்பத்தோட தான வருது?” என்று மகாவின் அப்பா கேட்பார். “புருஷன் கொழந்தையோட தான் கண்டிப்பா வரும். அந்த ஊருலயே ஒரு பையன புடிச்சிப் போய் கல்யாணம் செஞ்சிக்கப் போறதா தகவல் வந்திச்சி” என்ற உரையாடல் வரும். அப்பொழுது வாசகர்களுக்கு ஒரு கேள்வி வரும். கிரிஜாவுக்கு திருமணம் அயிடுச்சா இல்லையா? என்று. பின்பு உச்சக்கட்டக் காட்சியில் (Climax-இல்), வரப்போகும் அதிர்ச்சிக்கு முன்அமைப்பில் (Set up-இல்) இப்படி தரவுகளையும், நிகழ்வுகளையும் தூவிக் கொண்டே போகவேண்டும்.

 

உச்சக்கட்டக் காட்சியில் கிரிஜாவின் முகத்தில் ஒரு கண் சிதைந்து, பார்வையற்றுப் போனதை வெளிப்படுத்தும் முன், அதற்கு வாசகர்களைத் தயார்படுத்துகிறார் பாவண்ணன்.

 

கிரிஜா அன்றைக்கு வரப்போகிறாள் என்று தெரிந்ததும், மகாவுக்கு கிரிஜாவைப் பற்றிய பல நினைவுகள் வந்தாலும், “அவள் ‘முகம்’ மேலெழுந்து வந்தது” என்று எழுதி வாசகர்களின் கவனத்தை அவள் முகத்திற்கு கொண்டு வருகிறார். 

 

ஒரு தடவை, கல்லூரியில் அவர்களுக்குள் ஓர் உரையாடல் நடக்கும். “உன் கண்ணு இப்ப மாறியிருக்குது. நேத்து பாத்த கண்ணு மாதிரி இல்ல” என்று மகா சொல்ல, “தெனம் மாத்தி வச்சிக்கிறதுக்கு கண்ணு என்ன ஸ்டிக்கர் பொட்டுன்னு நெனச்சிட்டியா?” என்று சொல்லி கிரிஜா சிரிக்க, அந்த சிரிப்பில் கண்களில் கண்ணீர்த்துளிகள் தேங்கி நிற்கும்.

 

முதலில் முகம். பிறகு கண்.

 

அவனது அலுவலகத்திற்குப் போகத் தயாராகும் போது, புகைப்படத்தில் காலம் சென்ற அவனது “அம்மாவின் கண்களைப் பார்த்தபடி திருநீற்றைத் தொட்டுப் பூசிக்கொண்டு” வெளியே வருவான்.

 

அன்றைக்கு, கோவிலில் ஒரு தூணோரத்தில் அமர்வான். அப்பொழுது முன்பு நடந்த காட்சி ஒன்று அவனுக்கு நினைவுக்கு வரும். முன்பு ஒரு நாள் கோவிலில் சைவத் திருமுறைகள் வகுப்பிற்குப் பிறகு, ‘நயனக்கொள்ளை’ என்றால் எல்லாவற்றையும் மொத்தமாக வாரி எடுத்துக் கொண்டு போவது என்ற விளக்கத்தைக் கேட்டுவிட்டு, மகாவும், கிரிஜாவும் பேசிக் கொள்வார்கள். “ கொள்ளையடிச்சிட்டு போகறதுக்கு கண்ணுல என்ன புதையலா இருக்குது?” என்று கிரிஜா கேள்விக் கேட்பாள். அப்பொழுது தான் மேற்சொன்ன கண் பற்றிய உவமைகள் எல்லாம் பேசப்படும்.

 

மகா மற்றும் கிரிஜாவிற்கிடையே காதல் இருந்ததா? என்பதற்கு, லண்டன் போகும் முன் கிரிஜா, மகாவிடம் சொல்லும் ஒரு சொற்றொடரில் தெரிந்துக் கொள்ளலாம். “ஒன்னுத்துக்கும் கவலப்படாதடா... ரெண்டே ரெண்டு வருஷம் பொறுத்துக்கோ.... திரும்பி வந்ததும் அப்பாவ நாம ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்கலாம், என்ன?” என்பாள்.

 

அவனுக்கு கடைசியாக மின்மடலில் வந்த ஒற்றைவரியைப் படிக்கும் போது, “அந்த வரி அவள் கண்களைப் போல் விரிந்திருந்தன. அப்புறம் அப்புறம் என்று என்னைச் சீண்டிய கண்கள்” என்று எழுதுவார் பாவண்ணன்.

 

இப்படித்தான், கிரிஜாவின் கண்களைப் பற்றி, பல இடங்களில் சொல்லிக் கொண்டே வந்து, உச்சக்கட்டக் காட்சியில் அவளது ஒரு கண் சிதைந்து, இயக்கமற்ற செயற்கைக் கண்ணாக இருக்கிறது என்று சொல்லும் போது, வாசகனின் இதயத்தில் ஈட்டியாக அது இறங்குகிறது. (கதை எழுத வேண்டும் என்று நினைப்போருக்கு இது ஒரு நல்ல டிப்ஸ்! (ஒரு வாசகர் கூட சொன்னார். “நான் கூட கதை எழுதிவிட முடியும் என்று நம்பிக்கையைக் கொடுக்கிறார் பாவண்ணன்” என்று).

 

பாவண்ணன் கில்லாடி தானே!

 

காட்சிகளின் கோர்வையில் உணர்வு மேலோங்க, சில கருத்துகளையும் திணித்து வைத்திருக்கிறார்.

 

கருத்து

 

உங்களுக்குத் தெரியும். ஒரு கதை, வாசகரின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப வேண்டும். அவர் மனதில் பல எண்ண அலைகளை உருவாக்க வேண்டும். அந்த உணர்வுகளும், எண்ணங்களும் சேர்ந்து வாசகரின் வாழ்க்கை அனுபவத்தை மேம்படுத்த வேண்டும். அப்படி இந்தக் கதையைப் படிக்கும் போது இரண்டு கருத்துகள் என் மனதில் பட்டன.

 

ஒன்று, நான் என் வாழ்க்கையை வாழ்கிறேன். என் குழந்தைப் பருவம் வேறு. என் சூழ்நிலை வேறு. நான் சந்தித்த மனிதர்கள் வேறு. வாழ்க்கையைப் பற்றிய என் கருத்துரு வேறு. என் உலகக் கண்ணோட்டம் வேறு. எனக்குக் கிடைக்கிற அனுபவங்கள் வேறு. என் குடும்பம் வேறு. என் கனவுகள் வேறு. என் நம்பிக்கைகள் வேறு. ஆனால், நான் சந்திக்கிற மனிதர்களின் சூழ்நிலையும், கண்ணோட்டமும், அனுபவங்களும், கனவுகளும் வேறு வேறு.

 

கிரிஜாவின் வாழ்க்கைச் சூழல் போல, ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும் மாறிக் கொண்டேயிருக்கிறது. ஒருவரை நான் சந்திக்கும் போது “பனிமலையின் நுனி போல” த்தான், அவரைப் பற்றி நான் தெரிந்துக் கொள்ள முடிகிறது. ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் அந்த பனிமலைநுனி மாறிக் கொண்டேயிருக்கிறது. கிரிஜாவிற்கு விபத்து நடந்து, தொடர்பு அற்றுப் போன பொழுது, மகா வருத்தப்படுகிறான்.

 

மற்றவர்களைப் பற்றித் தெரியாமலேயே, அவர்களின் நிலை புரியாமலேயே நான் கோபப்படுகிறேன். வருத்தப்படுகிறேன். இதை மாற்றவேண்டும். மகிழ்ச்சியான உறவுகளுக்கு மிகமிகத் தேவை தகவல்தொடர்பு.

 

இரண்டாவது, அம்மா இறந்த பிறகு, இயலாத அப்பாவைப் பார்த்துக் கொள்ள வேண்டி, மகா லண்டனில் படிக்கவேண்டிய தன் உயர் படிப்பைத் தியாகம் செய்கிறான். அதுமட்டுமல்ல, கிரிஜாவுடனான காதலும் கேள்விக்குறியாகிறது. பெற்றோர்களின் நலனில் அக்கறைக் கொள்ளும் குழந்தை மகா! ஒரு வாசகர் “ஓரிண்டு தலைமுறைகளுக்கு முந்திய கதையைப் படிப்பது போல இருந்தது” என்று சொன்னார். அப்படியானால் மகா இந்தத் தலைமுறை குழந்தை இல்லையோ?

 

நிறைவாக, மெல்பர்ன் வாசகர் வட்டத்தில் இருந்த ஏறக்குறைய எல்லா வாசகர்களுமே ‘நயனக்கொள்ளை’ கதையை மெச்சினர். சிலர் அந்த நூலின் முகப்பு அட்டையைப் பாராட்டினர். அந்த ஓவியத்தில் உள்ள பெண்ணின் ஒரு கண் கேசத்தால் மூடியிருக்கும். விரிந்த இன்னொரு கண் உங்களை ஏதோ செய்யும்.

 

(நயனக்கொள்ளை என்ற சொல் திருவாசகத்தில் வருகின்ற சொல். நயனம் என்றால் கண்)

 

நயனக்கொள்ளை! ஏமாற்றவில்லை. அடுத்த கதை 'பங்கு'.

  

பங்கு

 

உவமானம்

அண்ணன்களும் அண்ணிகளும், வீட்டு சம்மதம் அற்று, வேறு சாதிப் பையனோடு திருமணம் செய்து கொண்டுப் போய்விட்ட தங்கச்சியின் கையெழுத்து வேண்டி, வேண்டா வெறுப்பாக அவள் வீட்டை நோக்கிக் காரில் போய்க்கொண்டிருப்பார்கள். அப்பொழுது சின்ன அண்ணனின் மனைவி, ரேவதி, “மாப்பிள்ளைய தானா தேடிகிட்டு வீட்டவிட்டு வீராப்பா போனவ பின்னால இப்ப நாம தேடிகிட்டு போவறம். கலிகாலம்டா சாமி” என தன் நெற்றியில் விரல்களால் அடித்துக் கொண்டே கசப்புடன் சொல்வாள். இது ஏதோ அவளிடம் பிச்சைக் கேட்டு போவது போல அவமானமாகப் படுகிறது ரேவதிக்கு. அப்பொழுது மணவாளன் முன் சீட்டிலிருந்து பின் சீட்டில் உட்கார்ந்திருக்கும் ரேவதியைப் பார்ப்பான். கண்ணாடிக்கு வெளியே ஒரு சிறுமி, இடுப்பில் ஒரு குழந்தையைத் தூக்கியவண்ணம், தன் வயிற்றைத் தட்டிக் காட்டி கை நீட்டியபடி நின்று கொண்டிருப்பதாக, போகிற போக்கில், பாவண்ணன் ஒரு காட்சியை பதிவு செய்வார்.

 

உவமை

 பழுத்து உதிர்ந்த வாதுமை இலையின் நிறத்திலிருந்த விடுதியறைக் கதவு என்று மிக அழகாக எழுதியிருக்கிறார் பாவண்ணன். இந்தக் கதையில் வேறு உவமைகள் கையாளப்படவில்லை. கதையமைப்பு உத்திகளைப் பார்ப்போம்.

 

கதையமைப்பு

ஒரு கதையில் முன்கதையை எப்படி அமைப்பது, கதை மாந்தர்களின் பண்புகளை எப்படி உருவாக்கி வெளிப்படுத்துவது, காட்சிகளை எப்படி அமைப்பது, சூழல்களை எப்படி விவரிப்பது, இவை எல்லாமே கதையின் மையக் கருத்தை ஒட்டி எப்படி எழுதுவது என்று பாவண்ணனிடம் கற்றுக் கொள்ளலாம். இந்தக் கதையிலிருந்து சில எடுத்துக்காட்டுகளை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

 

முதலில் முன்கதையை எப்படி வடிவமைக்கிறார் என்று பாருங்கள்.

 

முன்கதை அமைப்பு (Set up)

தனலட்சுமி தான் தங்கை. அவள் தான், தானாக முடிவெடுத்து வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டவள். மணவாளன் தனலட்சுமியின் அண்ணன்களையும், அண்ணிகளையும் அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்லவேண்டும். மணவாளன் அவர்களை விடுதியறையில் சந்தித்து, “செல்வகுமார் வீட்டிற்கு உங்களை அழைச்சிட்டுப் போகச் சொன்னார் ரியல் எஸ்டேட்காரர்” என்று சொல்வார். அதற்கு ஓர் அண்ணன், “செல்வகுமார்’ன்னா சொன்னாரு. தனலட்சுமி வீட்டுக்கு போகனும்னுல்ல சொல்லியிருந்தேன்” என்பார். அதாவது, தன் தங்கை தனலட்சுமி ‘ஓடிப்போய்’ திருமணம் செய்து கொண்டவரின் பெயர் கூட அண்ணன்களுக்குத் தெரியவில்லை என்ற அமைப்பு அதில் ஒளிந்திருக்கிறது.

 

தனலட்சுமியின் அம்மா, அண்ணன்மார் இருவரிடமும்,“போனமா வந்தமா’ன்னு இருக்கனும். அந்தக் கிரிச கெட்டவ வீட்டுல ஒரு வாய் தண்ணி கூட வாங்கிக் குடிக்கக் கூடாது” என்று சொல்லி அனுப்புவார். இது ஏனென்றால், உச்சக்கட்டக் காட்சிக்குப் பிறகு, பெரியண்ணன் சொக்கலிங்கம், மாப்பிள்ளை செல்வகுமார் போடும் டீயை வாங்கிக் குடித்து விட்டு வருவார். அதைப் போலவே கதைமாந்தர்களின் பண்புகளை, அவர்களின் உடல் மொழியாலும், வாய் மொழியாலும் உருவாக்குகிறார்.

 

கதைமாந்தர் பண்புருவாக்கம் (Characterisation)

தங்கையின் பெயர் தனலட்சுமி. தனலட்சுமியின் கணவர் பெயர் செல்வகுமார். கதை மாந்தர்களுக்குப் பெயர் வைப்பதில் பல சூட்சமங்கள் இருக்கின்றன. தனலட்சுமிக்கு எதற்கு அப்பா விட்டுச் சென்ற தனம்? அவளே தனலட்சுமி. தனலட்சுமியின் கணவருக்கு எதற்கு அப்பா விட்டுச் சென்ற செல்வம்? அவரே செல்வகுமார். கதையாசிரியர் எவ்வளவு நுணுக்கமாக பெயர் வைத்திருக்கிறார் பாருங்கள்.

 

செல்வகுமார் கதாபாத்திரம், எல்லோருக்கும் உதவி செய்கிற கதாபாத்திரம் என்று வடிவமைக்க, புயலில் அடிபட்ட மக்களுக்கு, “அங்கயும் இங்கயும் அலைஞ்சி மூட்டை மூட்டையா அரிசி தானமா..” கொடுத்தாரு என்றும், “வருஷா வருஷம் ரத்த தானம்” செய்வார் என்றும் முதலிலேயே சொல்லிவிடுவார். செல்வகுமாரைப் பற்றிய வாசகரின் கருத்து அப்படி கட்டப்படும். பிறகு அண்ணன்கள் இருவரும், “பூர்வீக வீட்டை விக்கப் போறோம். தனலட்சுமியோட கையெழுத்து வேணும்” என்றதுமே, “என்னைக்குன்னு சொல்லுங்க, தனலட்சுமி வந்து போடும். பங்கு கேட்டும் வராது” என்று உடனடியாக சொல்வார் செல்வகுமார். அவரது பெருந்தன்மை அப்பொழுது வெளிப்படும்.

 

ஓர் அண்ணனின் பெயர் பச்சையப்பன். பச்சையப்பனைத் தான் மணவாளன் விடுதியறையில் சந்திப்பான். பார்த்த மாத்திரத்திலேயே, “உள்ள வா” என்று ஒருமையில் அழைப்பார். மணவாளன் கொஞ்சம் அதிர்ந்து தான் போவான். இது எதைக் குறிக்கிறது? பச்சையப்பன் ஓர் அதிகாரம் செய்யும் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று முதல் காட்சியிலேயே வடிவமைக்கிறார் கதாசிரியர். அதைப் போலவே, ரேவதி கதாபாத்திரமும். பச்சையப்பனின் மனைவி. அவர் உட்கார்ந்திருக்கும் விதமே, “அறைக்கட்டிலில் சாய்ந்து காலை நீட்டிக்கொண்டு…” என்று துவங்கும். தனலட்சுமி வீட்டிற்குப் போய்விட்டு, “ஏசி இல்லயா இங்க?” என்று அலுத்துக்கொள்வார்.

 

இன்னொரு அண்ணனின் பெயர் சொக்கலிங்கம். அவர் ஹோட்டலிலிருந்து கிளம்பும்போது விறைப்பாகத்தான் கிளம்புவார். பிறகு தங்கச்சி வீட்டில் அவரது தன்மையான கணவனையும், பிள்ளைகளையும் பார்த்ததும் மென்மையாகி விடுவார். தனலட்சுமியின் கணவர் கேட்டுக்கொண்டதன் பேரில், அவர் தயாரித்த தேநீரை வாங்கிக் குடித்து விட்டு, பிள்ளைகளுக்குப் பணம் கொடுத்து விட்டு வருவார். இதற்குப் பெயர் தான் Chracter Arc என்பது. கதையின் தொடக்கத்தில் ஒரு கதாபாத்திரத்தின் புரிதல், நிலமை, உணர்வு ஒரு மாதிரி இருக்கும். அது மாறி, மாறி கடைசியில் வேறு ஒரு புரிதலுக்கும், நிலமைக்கும், உணர்வுக்கும் பயணம் செய்யும். கதையின் சாராம்சமே அது தான்.

 

காட்சி அமைப்புகளையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் கதாசிரியர்.

 

காட்சி அமைப்பு

பச்சையப்பன் (தனலட்சுமியின் சின்ன அண்ணன்), மணவாளனை, ‘அமேசான் டெலிவரிக்கு ஆட்கள் தேவைப்படும், வரியா?’ எனக் கேட்க, அவன் வீட்டில் கேட்டுச் சொல்கிறேன் என்பான். அதற்கு பச்சையப்பன் மனைவி ரேவதி, ‘ஒரு வேலைக்கு பதில் சொல்லவே, வீட்டுல கேட்டுச் சொல்றேன்’னு சொல்றது புள்ளையா?….இல்ல அப்பா, அம்மா, அண்ணனுங்க எல்லாம் கால் தூசிக்குச் சமம்’னு ஒதறிட்டு போன ஒங்க தங்கச்சி புள்ளையா?..’ என்ற பொருளில் கேட்பார். அப்படி எந்த ஒரு காட்சியும் கதைக்கு வெளியே போய்விடாமல், உச்சக்கட்டக் காட்சியை நோக்கி, வாசகரைத் தள்ளுவதற்காகவே பயன்படுத்தியிருப்பார்.

 

அதைப் போலவே சூழல் அமைப்பையும் விட்டு வைக்கவில்லை.

 

சூழல் அமைப்பு

தனலட்சுமி கல்யாணம் செய்துக் கொண்ட செல்வகுமார், சாதி அடுக்கில், கீழ்நிலையில் உள்ளதாகச் சொல்லப்படும் சாதியில் பிறந்தவர் என்பதைச் சுட்டிக் காட்ட, அவர்கள் குடியிருக்கும் சூழலை விவரிப்பார் பாவண்ணன். ஓர் அண்ணி சொல்வாள்: “எல்லா வீடும் பன்னிக்குடிசை மாதிரி சின்னச்சின்னதா இருக்குது” என்பார். கீழே விழுந்திருக்கும் சாணக்குவியலைப் பார்த்து முகம் சுளித்தபடி “அசிங்கம் அசிங்கம்” என்பார். காம்பவுண்டு சுவர், கேட் என்பதற்குப் பதில் வேலியில் படலைத் தள்ளிக் கொண்டு போவதாக எழுதுவார் பாவண்ணன்.

 

கருத்து

 

ஒரு வாசகர் சொன்னார்: “அண்ணன்மார்கள் அப்பா விட்டுச் சொன்ற சொத்தை, வீட்டை பங்கு போட நினைக்கிறார்கள். ஆனால் ‘ஓடிப்போய் வேறு சாதி கல்யாணம்’ செய்த தங்கையோ, அப்பாவின் ஞானப்பிரகாசம் என்ற பெயரை, பங்கு போட்டு ஞானசுந்தரம் என்றும் பிரகாஷ்ராஜ் என்றும் தன் இரு மகன்களுக்கும் பெயர் சூட்டியிருக்கிறார். அது மட்டுமல்ல, பெயர்கள் அப்படி இருந்தாலும், அவர்களை ‘அப்பா, அப்பா’ என்று தான் அழைக்கிறார்” என்று வியப்போடு பகிர்ந்தார். அப்படி அப்பாவின் பெயரை வைக்க இசைந்த தனலட்சுமியின் (அந்த தங்கையின்) கணவர் செல்வகுமாரையும் பாராட்டத்தான் வேண்டியிருக்கிறது.

 

கதையின் மையக் கருத்து என்ன? எது சொத்து? நிலமா? பொருளா? உறவா? உயிரா? நலமா? என்கிற கேள்வியை எழுப்புகிறது கதை. இந்தக் கேள்விக்கு எப்படி வேண்டுமென்றாலும் பதில் சொல்லலாம். எல்லாவற்றிக்குமே ஒரு தர்க்கம் இருக்கவே செய்யும். ஒரு வாசகர் சொன்னது போல முடிவை வாசகர்களிடமே விட்டு விடுகிறார்.

 

சாதி மாறி திருமணம். அதில் உள்ள கௌரவம். ஆண், பெண் என்று பால் பாராது தன் சாதி மேல் உள்ள பற்றும் வெறியும் ஒரு பக்கம் இருக்கிறது. அதே நேரம், தனலட்சுமியின் காதலும், பாசமும், செல்வகுமாரின் சேவை மனப்பான்மையும் பெருந்தன்மையும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. இந்த இருண்மையின் இயக்கத்தில் தான் சமூகம் இயங்குகிறது.

 

மற்றொரு வாசகர் சொன்னார்: “ நீயும் உன் தங்கையும் ஒரு வயித்துல பொறந்தவங்க. ஆனா கல்யாணம் கட்டிகிட்டு வர்றவங்க, வேற வீட்டுலேர்ந்து வர்றாங்க. அதனால உங்களுக்குள்ள கணக்கு வழக்க சரியா வச்சிக்க…” என்பார் என் அப்பா. உறவுகளில் ஒட்டும் வெட்டும் எப்படி இருக்கவேண்டும் என்பதை மிக அழகாக தெளிவு படுத்தியிருக்கிறார் அந்த வாசகரின் அப்பா.

 

பாவண்ணன், கருத்தைச் சொல்லாமல் சொல்லுவதில் கேடி தான். அடுத்த கதை 'புற்று'.

 

புற்று

 

உவமானங்கள்

 எடுத்தவுடன் கதை ஒரு கனவுடன் துவங்குகிறது. அஞ்சலையின் தாத்தா ஏரிக்குள்ள தூண்டில் போட்டு புடிச்சி குடுத்த மீன்களை ஒரு பானையில் தூக்கி வருகிறார் பார்வதி. அந்தப் பானை தான் அவள் குடும்பம்.  மீன்கள் தான் அவளது பிள்ளைகள். இரண்டு கோழிகள் முட்டி கீழே விழுகிறாள். பச்சையப்பனும் அண்ணியும் தான் இரண்டு கோழிகள். மீன்கள் கீழே விழுந்து பதறுகின்றன. அஞ்சலையின் கணவர் முத்துசாமி இறக்க, மகன் நேசமணி படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகிறான். குடும்ப உறுப்பினர்கள் மீன்கள் போல வாழ்க்கையில் பதறிப் போகிறார்கள். வாய்க்காலில் ‘பொழச்சிப் போ’ என மீன்களை எடுத்து விடுகிறாள். அப்துல் சாதிக் மூலம் தையல் ஆர்டர்கள் கிடைக்க, நேசமணி தம்பிகளின் படிப்புக்காகப் பணம் கொடுக்க, வாழ்க்கைச் சக்கரம் உருளத் தொடங்குகிறது. மீன்கள் வாய்க்காலில் விழுந்து உயிர் பிழைத்துக்கொள்வது போல.

 

முழுக் கதையையும் இந்த கனவில் சொல்லிவிடுகிறார் பாவண்ணன்.

 

புற்று என்று பெயர் வைத்திருப்பதே ஓர் உவமானம் தான். புற்று நோய், கொஞ்சம் கொஞ்சமாக பரவி, ஒரு கட்டத்தில் ஆளையே சாய்த்து விடும். அது போல அஞ்சலை வீட்டில், வறுமை முதலில் எட்டிப் பார்க்கும். கொஞ்சம் தண்ணி கெடைக்குமா என்று கேட்டு, திண்ணையில் உட்காரும். அசதியாக இருக்கிறது என்று ஹாலில் பாயைப் போட்டு படுக்கும். பிறகு, வறுமை, முற்றத்தில் உள்ள அடிபைப்பில் தண்ணியடித்து குளித்து முழுகி, அடுக்களையில் வயிறு முட்ட சாப்பிட்டு, ரேடியோவை அலற விட்டு, மோகினி ஆட்டம் ஆடும். கடைசியில் அடுப்பில் இருந்து கொள்ளிக்கட்டையை எடுத்து கூரையில் வைத்து விட்டு, தெருவழியே ஓடும். இது தான் அஞ்சலையின் வாழ்க்கையில் நடந்தது. அதனால் ‘புற்று’ என்று சரியாகத் தான் பெயர் வைத்திருக்கிறார் பாவண்ணன்.

 

உவமை

 அஞ்சலை மிஷினை நிறுத்திவிட்டு எழுந்து நின்று கைகால்களை உதறிக்கொண்டாள். “அவள் மடிமீது விழுந்திருந்த துணிப்பிசிறுகள் கோழியிறகுகள் மாதிரி சிதறி விழுந்தன” என்று எழுதுவார். வேறு உவமைகள் ஏதும் இக்கதையில் இருப்பதாக என் கண்ணில் படவில்லை.

 

கதையமைப்பு

 கதாபாத்திரங்களை உருவாக்குதல்

Character Arc என்கிற கதாபாத்திரத்தின் வளைவு அல்லது கதாபாத்திரத்தின் பயணம் ஒரு கதையில் மிக முக்கியம். ஒரு கதாபாத்திரம் எப்படி அறிமுகமாகி பிறகு கதையின் ஓட்டத்தில் சிறிது சிறிதாக மாறி வேறுவிதமாக நிற்கிறது என்பதை உற்று நோக்கவேண்டும். கதாசிரியர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஒரு ethical dilemma -வுக்குள் (அறநெறி குழப்பத்திற்குள்) தள்ளி விடுவார். அந்தக் கதாபாத்திரம் அறநெறி என்கிற உருண்டையில் ஏதாவதொரு புள்ளியில் நிற்கும். அல்லது ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு மாறும்.

 

நீங்கள் கதாசிரியராக வேண்டும் என்றால், இக்கலையை நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும். சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறேன்.

 

பொன்னையன் கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்வோம். துவக்கத்தில் தன் தங்கையின் மேல் பாசம் காட்டுவதாக வாசகருக்குத் தெரியும். அஞ்சலையின் கணவனது தையற் தொழில் நசிந்து வருவதால், அந்தத் தையற் கருவியை அவனே வாங்கிக்கொள்வான். சிறிது கூடுதற் பணம் கூட கொடுப்பான். அவனுக்குத் தெரிந்த அப்துல் சாதிக் என்பவரிடம் ஏற்றுமதி துணி தைக்க வாய்ப்பு வாங்கிக் கொடுப்பான். கணவனை பாண்டிச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, பொன்னையன் வாகனம் தான் பயன்படும். ‘ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இல்லைனா, கூட பொறந்து என்னம்மா புரோஜனம்?” என்று கூட ஒரு தடவை சொல்வான். கணவன் இறந்த பிறகு கூட காரியத்திற்கு பொன்னையன் தான் செலவு செய்வான். இதுவரை பொன்னையன் அஞ்சலையின் காப்பாளனாக வலம் வருகிறான்.

 

இந்த இடத்தில் ஒரு திருப்புமுனை நடக்கிறது. கணவன் இறந்து பிறகு, அஞ்சலையே தன் பெரிய மகன் நேசமணியை அழைத்துக் கொண்டு, அப்துல் சாதிக்கிடம் துணிகளை கொடுக்கச் செல்லும் போது, பொன்னையன் நேசமணியை தனக்கு ஒத்தைசையாக இருக்க அனுப்புமாறு கேட்பான். அதோடு, அதுவரை அஞ்சலைக்கு, இதுவரை செய்து வந்த பண உதவியைத் திருப்பித் தருமாறு (தன் மனைவி கேட்பதாகக்) கேட்பான். அஞ்சலை விழி பிதுங்கி நிற்கும் போது, “ஒன்ன யாரு பணத்த பொரட்ட சொன்னா, ஒனக்கும் எனக்குமா ஆளுக்கொரு துண்டு நெலம் எழுதி வச்சாரே அப்பா, அதை எம்பேர்ல பதிவு செய்ய ஒரு கையெழுத்து போட்டா போதும். ஒன் அண்ணியோட ஒரே புடுங்கலா இருக்கு’ என்பான் பொன்னையன். நிலப்பதிவு நடந்து விடும். வாசகர் கண்களில், காப்பாளனிலிருந்து சற்றே சின்ன வில்லனாக உரு மாறுவான்.

 

அடுத்து, சின்ன வில்லன் என்பதிலிருந்து வில்லன் என்கிற இடத்திற்கு மாறுகிறார் பொன்னையன். பள்ளிக்கு அனுப்பவேண்டிய நேரத்திலும் நேசமணியை அனுப்பவில்லை. அவனது எதிர்காலம் படிப்பிலிருந்து குழந்தைத் தொழிலுக்கு என்று மாறி விடுகிறது. கதையின் முடிவில், பொன்னையனைப் பார்ப்பதையும் பேசுவதையும் நிறுத்திக் கொள்கிறாள் அஞ்சலை. பார்த்தீர்களா? இது தான் கதாபாத்திரத்தின் வளைவு அல்லது பயணம் என்று பொருள்.

 

இன்னொரு எடுத்துக்காட்டும் சுவாரஸ்யமாக இருக்கும். கதாபாத்திரத்தின் பயணத்தை புரிந்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

 

அது அஞ்சலையின் மூத்த மகன் நேசமணியினுடையது. பச்சையப்பன் முதல் தடவை வீட்டிற்கு வந்த பொழுது நேசமணி நன்கு படிக்க வேண்டும் என்று சொல்ல, அவன் வகுப்பில் முதல் ரேங்க் என்று அஞ்சலை சொல்வாள். பிறகு அஞ்சலை மருத்துவமனையிலிருந்து திரும்பி வரும் பொழுது, பக்கத்து வீட்டு பார்வதி மூன்று பையன்களை வரிசையாக உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருப்பாள். ஆனால் நேசமணி மட்டும் உள்ளே படித்துக் கொண்டிருப்பான். இப்படி நேசமணியை நல்ல படிப்புக்காரனாக கட்டுவார் கதாசிரியர்.

 

அப்பொழுது வரும் அந்தத் திருப்புமுனை. பொன்னையன் அவனை ஒத்தாசைக்காக, விடுமுறை நாட்களில் அழைத்துப் போவான். அதுவே அஞ்சலைக்குப் பிடிக்காது. பிறகு அவன் பள்ளிக்குப் படிக்க அனுப்பப்படாமல், தொடர்ந்து தொழிலிலேயே ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுவான் பொன்னையான். கதையின் பின்பகுதியில் நேசமணி தன் தம்பிகள் நன்றாகப் படிக்கவேண்டும் என்று பணம் சேர்த்து வந்து அம்மாவிடம் கொடுப்பான். எதும் பேசமாட்டான். கொடுத்து விட்டு தொழில் செய்யப் போய்விடுவான். இப்படி முதல் ரேங்க் வாங்கி நன்கு படிக்கும் படிப்பாளி கதாபாத்திரத்திலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து குழந்தைத் தொழிலாளி ஆகி, தன் தம்பிகள் நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக, முழுநேர வேலை செய்யும் ‘அப்பா’ வாக அந்தக் கதாபாத்திரம் மாறிவிடும்.

 

கருத்து

 இன்னொருவர் வீட்டில் சில காலம் வாழ்ந்து பார்த்திருக்கிறீர்களா? எனக்குத் தெரிந்த ஓர் உறவுக்காரப் பையனைப் படிக்க வைக்கிறேன் பேர்வழி என்று ஒருவர் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். (ஏனென்றால், அவர் அந்தப் பையன் வீட்டில் இருந்துதான் படித்தார். அதன் நன்றிக்கடனாக, அந்த வீட்டுப் பிள்ளைகளில் ஒருவரை தான் செலவு செய்து படிக்க வைக்கிறேன் என்று அழைத்துச் சென்றார்). அந்தப் பையனுக்கு தட்டில் சோறு போட்டு, கதவைத் தாண்டி வைப்பாள் அவரது மனைவி. போட்டுக்க வருடத்திற்கு ஒரு முறை துணி வாங்கிக் கொடுப்பார். அதனால் பழைய கால்சட்டையில் பொத்தான் போடாமல், இரண்டு முனைகளையும் இழுத்து முடிச்சி போட்டுக்கொண்டுதான் பள்ளிக்கூடத்திற்கு அவன் போவான். காய்ச்சல் வந்தால், தானாக போர்வையை போர்த்திக் கொண்டு, சுவர் ஓரம் ஒண்டிப்படுத்துக்கொள்வான். வயிறு வலி என்றாலும் அவர்களது வீட்டில் அவன் அதை சொல்லமாட்டான். இது நிஜத்தில் நடந்தது. இதைப் போலத்தான் நேசமணி, அவனது மாமா வீட்டில் கஷ்டப்பட்டிருப்பான் போல. கூடுதலாக தொழில் வேறு. அதனால் அவன் வீட்டிற்கு வந்த போது, அம்மா கேட்கும் கேள்விகளுக்கு மௌனமே பதிலாக இருக்கும். வீடு என்றால், அவர்வர் வீடு தான் வீடு!

 

‘பங்கு’ என்ற கதையிலும், இந்த ‘புற்று’ என்ற கதையிலும் பெண் கதாபாத்திரங்களே குடும்பச் சொத்தை இழக்கிறார்கள். இரண்டு கதையிலும் பெண் கதாபாத்திரங்கள் அவர்களுக்கு எதிராகச் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆண்கள் அந்தப் பெண்களைப் பயன்படுத்தி அபகரித்துக் கொள்கிறார்கள். பெண் கதாபாத்திரங்களாவது ‘நேர்மையாக’ வில்லன் கதாபாத்திரங்களைச் செய்கிறார்கள். ஆனால் ஆண்கள் ‘கோழைகளாக’ இருந்து கொண்டு, ஏமாற்றி, பெண்களைக் காரணம் காட்டி, தாங்கள் தப்பித்துக் கொண்டு, அதே வேலையைச் செய்கிறார்கள். பங்கு கதையி்ல் தனலெட்சுமியின் அம்மா, அண்ணிகள். அண்ணன்கள் அமைதியாக இருந்து காரியத்தைச் சாதிக்கிறார்கள். புற்று கதையில் பச்சையப்பன், அண்ணியின் பெயரைச் சொல்லிக் காரியத்தைச் சாதிக்கிறான். இப்பொழுதெல்லாம் இது போன்று நடக்காது என்றே நினைக்கிறேன். தனலட்சுமி போல (பங்கு கதையில்) வேறு சாதி திருமணம் செய்தாலும் சரி, அஞ்சலை போல (புற்று கதையில்) வறுமையில் வாடினாலும் சரி, தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

 

பொருளாதார நோக்கில், இந்தக் கதையை அணுகிப் பார்க்கலாம். நாங்கள் பள்ளிக்குப் போகும் சின்னப் பையன்களாக இருந்த சமயத்தில், ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும், திருவிழா சமயத்தில், அப்பா எனக்கும் என் தம்பிகளுக்கும் கால்சட்டை, சட்டை வாங்க துணி எடுத்து, தையற்காரரிடம் கொடுத்து தைக்க வைப்பார். வருடத்திற்கு ஒரு கால்சட்டை, ஒரு சட்டை. அப்பொழுது துணிகளாக வாங்கி, நம் அளவுக்கு தைத்துக் கொள்ளவேண்டும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமும், இயந்திர மயமும், தாராளமயமும், உலகமயமாக்கலும் இந்த உலகத்தை தொண்ணூறுகளில் விழுங்கிய போது தையற்காரர்கள் மறைந்து போனார்கள். ரெடிமேட் ஆடைகள் குவியத்தொடங்கின. பெரிய முதலீடு போட முடிந்தவர்கள் மட்டுமே அந்த வெள்ளத்தில் நீந்தி கரையேற முடிந்தது. தனியாக தையற்கடை வைத்து முதலாளியாக இருந்தவர்கள், ஆயிரத்தில் ஒருவராக, பெரிய ஹாலில் உட்கார்ந்து தொழிலாளியாக ஆனார்கள். இதையும் நாசுக்காக பாவண்ணன் வெளிப்படுத்தியிருப்பார்

 

ஆமாம்! வார்த்தைகள் வழியே இதயத்தைத் தொட்டு, மூளையை அதிர வைக்கும் வித்தைத் தெரிந்தவர் பாவண்ணன். அடுத்த கதை 'வள்ளல்'.

  

வள்ளல்

 

உவமானங்கள்

 ஆயாவிடம் தோசை வாங்கித் தின்று விட்டு கிளம்பிக் கொண்டிருந்த ஒரு பெண்மணி, பன்னீர், தங்கமணி, ரங்கசாமி மூவரையும் பார்த்து, “எந்த தெரு பசங்கடா நீங்க?” என்று கேட்கிறாள். ரங்கசாமி, “ம்….மோட்டுத்தெரு” என்கிறான். அந்தப் பெண்மணி போகும் வரைக் காத்திருந்து விட்டு, “எதுக்குடா பொய் சொன்ன?” என்று தங்கமணி கேட்கிறான். ரங்கசாமி பதில் சொல்லாமல் முறைத்து மட்டும் பார்க்கிறான். ரங்கசாமி பொய் சொல்கிறான் என்றால் அவர்கள் மேட்டுத் தெருவிலிருந்து வரவில்லை என்று பொருள். பையன்கள் எந்த சமூகத்திலிருந்து வருகிறார்கள் என்பதை எவ்வளவு நாசுக்காக கதாசிரியர் சொல்கிறார் பாருங்கள். தமிழ்ச் சூழலில், கிராமங்களில், ஊர் என்றும் சேரி என்றும் பிரிவுகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். புயல், மழை, வெள்ளம் என்று எது வந்தாலும் பாதிப்பு வராத அளவுக்கு மேட்டுத் தெருவில் வசதியான சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அதற்குத் தான் ஊர் என்று பெயர். உடனே பாதிப்பு வரக்கூடிய அளவுக்கு பள்ளத்தில் இருப்பவர்கள் ஏழைகள். உழைக்கும் மக்கள். அந்தப் பகுதிக்கு சேரி என்று பெயர். “எந்த தெரு?” என்று கேட்பது, எந்தத் தெருவிலிருந்து வருகிறீர்கள் என்று தெரிந்துக் கொள்வதற்கு அல்ல. நீங்கள் எந்த சாதி? என்று தெரிந்துக் கொள்ளத்தான். அதனால் தான் ரங்கசாமிக்கு கோபம் வருகிறது. அதனால் தான் வேண்டும் என்றே ‘மேட்டுத்தெரு’ என்று பதிலளிக்கிறான். இது கதையில் உவமானம் என்று சொல்வதற்கில்லை என்றாலும், வாழ்வில், யதார்த்தத்தில் ஒன்றைக் கேட்பதற்குப் பதிலாக இன்னொன்றைக் கேட்பது என்னும் வடிவில் வருவதால் இதை ஒரு உவமானமாகக் கருதலாம்.

 

இன்னொரு உவமானம் நிறம் பற்றியது. தங்கமணிக்கு ஒரு காலண்டர் கிடைக்கும். அதில் எம்ஜிஆரின் ஒளிப்படம் இருக்கும். “செக்கச் செவேலென்ற தாமரை இதழ் போன்ற முகம்.” அதை தினமும் பார்த்து வியப்புறுவான். காலண்டரிலும், மனத்திலும் இருந்த எம்ஜிஆரை, ஒரு படப்பிடிப்புக்காக போய்க்கொண்டிருக்கும் போது, நேரடியாகப் பார்க்க நேர்ந்த பொழுது, அதே “செக்கச் செவேலென்ற” முகத்தைப் பார்த்து அசந்து நிற்கிறான் தங்கமணி. இங்கு தான் ஒரு ட்விஸ்ட் வருகிறது. எம்ஜிஆர் தங்கமணிக்கு கொடுப்பது அதே செக்கச் செவேலென இருந்த ஆப்பிள்கள். சிவப்பு நிறத்தில் நமக்குத் தான் எவ்வளவு ஈர்ப்பு!

 

உவமைகள்

 எம்ஜிஆரின் முகம், “செக்கச் செவேலென்ற தாமரை இதழ் போன்ற முகம்” என்று இரண்டு இடங்களில் குறிப்பிடுவார். இது தவிர வேறு உவமைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

 

கதையமைப்பு

 Character Arc என்கிற கதாபாத்திரத்தின் வளைவு அல்லது பயணம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கதையின் முன் பகுதியில் ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய எண்ணத்தை வாசகர்களுக்கு கதாசிரியர் ஏற்படுத்துவார். ஆனால் போகப் போக, அந்தக் கதாபாத்திரம் வேறு விதமாக வெளிப்பட்டு, கதையின் கடைசியில் முற்றிலும் மாறுபட்டு நிற்கும். அதன் அகத்திலும் புறத்திலும். அப்படி ஒரு கதாபாத்திரம் பன்னீரின் கதாபாத்திரம்.

 

பன்னீர் தங்கமணியையும், மற்றவர்களையும் கேலி பேசி, கிண்டல் செய்யும் கதாபாத்திரமாக அறிமுகமாவான். ‘அட போடா! குள்ள வாண்டு’ என்று கூட தங்கமணியை சீண்டுவான். மீனாட்சி ஆயாவிடம் கூட குதர்க்கமாகப் பேசுவான். நடிகர் பாலையாவை, ஆயா பார்த்திருக்க வாய்ப்பில்லை, சும்மா பொய் சொல்கிறாள் என்கிற பாணியில், ‘சும்மா கத உடாத ஆயா’ என்று ஏளனம் செய்வான். அதுவரை பன்னீர் எரிச்சல் கொடுக்கும் கதாபாத்திரமாக இருப்பான்.

 

தங்கமணி ஓட்டி வந்த மாடுகள் பள்ளம் பக்கம் போகிறது என்றதும் பன்னீரும் சேர்ந்துக் கொண்டு ஓடிப் போய் தடுத்து, சமவெளிக்குக் கொண்டு வருவான். ‘எம்ஜிஆரைப் பார்த்தால் என்ன கேட்பீர்கள்’ என்று மீனாட்சி ஆயா கேட்டதும், மற்றவர்கள் ஏதேதோ சொல்ல, பன்னீர், “எங்க அம்மா ஆஸ்பத்திரி செலவுக்கு ஐநூறு ரூபா கேப்பன். அவர் குடுக்கறத எங்க அம்மாட்ட குடுப்பன். எந்த செலவு முக்கியம்னு அதுக்குத் தெரியும்” என்பான். வாசகனுக்கு பன்னீர் மேல் ஒரு அனுதாபமும் நல்லெண்ணமும் வரத்தொடங்கும்.

 

கருத்து

 குழந்தைகளின் குணம்

ஒரு வாசகர் சொன்னார்: “குழந்தைகள் கள்ளங்கபடமற்றவர்கள். அவர்களுக்குள் சண்டை வந்தாலும் மறுகணம் சமாதானமாகிவிடுகிறார்கள். பன்னீருக்கும் தங்கமணிக்கும் இடையே ஒருவருக்கொருவர் ஏளனமாகப் பேசி சண்டைப் போட்டுக் கொண்டாலும், அடுத்த கணம் நட்பாகப் பேசிக் கொள்கிறார்கள்.” என்றார். ஆமாம்! அந்த குணம் ஏன் நாட்டுத் தலைவர்களுக்கு இல்லை?

 

எளிய மக்களின் பண்பு

இன்னொரு வாசகர் சொன்னார்: “மீனாட்சி ஆயா அரிசி உருண்டைகள் விற்றுக் கொண்டிருக்கிறார். ஓர் அரிசி உருண்டை ஐந்து பைசா. ரங்கசாமியிடம் பத்து பைசா இருக்கிறது. ஆனால் மூன்று பேர் இருக்கிறார்கள். ஆயாவிடம் மூன்று அரிசி உருண்டைகள் கேட்கிறான். இன்னும் ஒரு அஞ்சு பைசா? என மீனாட்சி ஆயா கேட்க, நாளைக்கு தருவதாகச் சொல்கிறான். மூன்று அரிசி உருண்டைகளை ஆயா கொடுக்கிறார். இப்படிப்பட்ட நம்பிக்கை இப்பொழுது இருக்கிறதா?” என்று வினவினார். அதானே! தூரத்தில் இருந்தாலும், சிறிய கடைகளில் கடன் சொல்லலாம். உங்கள் வீட்டு பக்கத்திலேயே இருந்தாலும், பெரிய மால்களில் கடன் சொல்லி ஒரு பொருளை வாங்க முடியுமா? பொருளாதாரமும் பண்பாடும் எப்படி இணைந்தே பயணிக்கிறது.

 

பிழைப்பா? முதலீடா?

மீனாட்சி ஆயா, சில வருடங்களுக்கு முன்பு, அதே லெவல் கிராஸிங் பக்கம் நின்று கொண்டிருந்த போது, நடிகர் பாலையா அங்கு வந்ததையும், அவர் ஆயாவுக்கு நூறு ரூபா கொடுத்ததையும் நினைவு கூர்கிறார். அந்த நூறு ரூபாயில் தான், தன் வீட்டின் கூரையை மாத்தினதாகவும் சொல்கிறார். அப்பொழுது ரங்கசாமி, “தப்பு பண்ணியே ஆயா! அந்த நூறு ரூபாயில ஒரு மாடு வாங்கியிருந்தா இப்போ மாடு கன்னுகுட்டி, மாடு கன்னுகுட்டின்னு பெருத்துகிட்டே போயிருக்கும்.” என்று சொல்லிவிட்டு, “நாங்களும் இப்போ ரெட்டியார், படையாட்சி மாடுகளோடு ஓன் மாட்டையும் ஒட்டிகிட்டு இருப்போம்” என்று சொல்கிறான்.

 

ரங்கசாமி சொல்கிற சேமிப்பு, முதலீடு, செலவு பொருளாதாரம் உற்று நோக்க வேண்டிய பொருளாதாரம். வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்பட்ட ஆயா, அந்த நூறு ரூபாயில் தன் வீட்டு கூரையை மாற்றியிருக்கிறார். சேமிக்கவோ, மூலதனம் போட்டு மாடு வாங்கவோ அவருக்கு யோசனை இல்லை. ஏழைகள் ஏழைகளாக இருப்பது இப்படி யோசிக்காமல் போனதால் தான் என்கிற மாயையை இது உருவாக்காதா? அல்லது, வாயிக்கும் வயித்துக்கும் போராடிக்கொண்டிருக்கும் ஏழைகள் எப்படி அடுத்தக் கட்டத்திற்கு நகர முடியும், என்று வாசகர்களை யோசிக்க வைக்கிறாரா? இப்பொழுது மாடுகள் நிறைய வைத்திருக்கும் சமூகங்களுக்கு எப்படி சொத்து வந்தது? நீங்களாக இருந்தால் அந்த நூறு ரூபாயில் என்ன செய்திருப்பீர்கள்?

 

யார் வள்ளல்?

நடிகர் பாலையாவும், எம்ஜிஆரும் தான் வள்ளல்களா? கதாசிரியர் வேறு மாதிரி நினைக்கிறார். வள்ளல் கதையின் எளிய கதாபாத்திரங்களின் வள்ளல் தனத்தை தனக்கேயுரிய ‘இயல்பு’ பாணியில் வரைகிறார்.

 

முதலில் மீனாட்சி ஆயா, திடீர் என்று, ஒவ்வொரு பையனுக்கும் ஓர் அரிசி உருண்டையைக் கொடுக்கிறாள். ஏற்கனவே ஐந்து பைசா கடன் என்று அவர்கள் நினைவு படுத்தியும், இதை நான் உங்களுக்கு இலவசமாகத்தான் கொடுக்கிறேன் என்கிறாள் வள்ளல் மீனாட்சி ஆயா.

 

அடுத்து தங்கமணி. ஆயாவோடு பேசிக் கொண்டிருக்கும் போதே, அவன் ஓட்டி வந்த சினை மாடு தவிப்பதைப் பார்த்து விட்டு, அதனருகே ஓடிச் சென்று, வாயில் உள்ள நுரையைத் தள்ளி விட்டு, புங்க மரத்தின் நிழலுக்கு ஓட்டிச் சென்று, பானையில் நீர் கொடுத்து ஆசுவாசப்படுத்துவான். அப்போதைக்கு அந்த மாட்டிற்கும் பிறக்கப் போகிற கன்றுக்கும் தங்கமணி தான் வள்ளல்.

 

தங்கமணிக்கு எம்ஜிஆர் சில ஆப்பிள்களை எடுத்துக் கொடுக்கிறார். இவன் வேண்டாம் என்று பின் வாங்குகிறான். அவர் ‘நல்லா படிக்கனும்’ னு சொல்லி அவன் கையில் திணிக்கிறார். அதை அவன் எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்கிறான்.ஒன்று ரங்கசாமிக்கு. ஒன்று அரிசி உருண்டைகளை இலவசமாக அள்ளிக் கொடுத்த ஆயாவுக்கு. இன்னொன்று பன்னீருக்கு. மற்றொன்று சுகமில்லாத பன்னீரின் அம்மாவுக்கு. மற்றொன்று சினை மாட்டிற்கு. மனிதநேயமும் உயிர்மநேயமும் கலந்ததுதான் எளிய மக்களின் வாழ்க்கை என்று பாவண்ணன் சொல்லாமல் சொல்கிறார். அடுத்த கதை 'வெள்ளைக்காரன்'.

 

வெள்ளைக்காரன்

 

உவமானங்கள்

 எடுத்த எடுப்பில் ஒரு பலூன் உவமானம். தொடர்வண்டியில் அவன் பயணம் செய்து வருகிறான். ஜபல்பூர் நிறுத்தம். இறங்கிவிடலாமா என்று யோசிக்கிறான். அப்பொழுது ஒரு பலூன் சிறுமியின் கையிலிருந்து நழுவி பறந்து செல்கிறது. அதைப் பார்க்கிறான். ஒருவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு பலூனைக் கைப்பற்றி விட ரயில்வே ஸ்டேஷனின் எல்லை வரை ஓடுகிறார். அதையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் பலூன் மறைந்து விட, அதைத் தேடிப் போனவர் ஏமாற்றத்தோடு திரும்புகிறார். அது அப்படியே அவனது வாழ்க்கையின் பிரதிபலிப்பு. அவனது வாழ்க்கையின் வசந்தம் தான் அந்த பலூன்.

 

இவன் பெயர் வெள்ளைக்காரன். கடலூர், பாண்டிச்சேரியை பிரஞ்சுக்காரர்கள் காலனியாக வைத்திருந்த காலம். அப்பொழுது வெள்ளைக்காரனின் தாய் ஒரு துரைமார் வீட்டில் வேலை செய்து வருகிறார். அப்பொழுது இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைக்கிறது. துரைமார்கள் அவரவர் நாடுகளுக்குக் கிளம்பி போகிறார்கள். வெள்ளைக்காரனின் தாய் வேலை செய்த துரையும் கிளம்பி விட்டார். சிறு பிள்ளையை (வெள்ளைக்காரனைக்) கையில் பிடித்துக் கொண்டு துரையின் பங்களாவை விட்டு வெளியேறி நடுரோட்டில் நிற்கும் போது, தெருவில் ஒருவன் ‘காவேரி இதுவரைக்கும் பங்களாவுல ஓடிச்சி, இனி சாக்கடையில ஓடப் போகுது’ என்று சொல்லிக்கொண்டே போவதாக பாவண்ணன் எழுதுவார். அவர்களின்  சூழலைப் பிரதிபலிக்க ஓர் உவமானம்.

 

பிறகு அவனும் அவன் அம்மாவும் அம்சவல்லி அம்மாவின் பண்ணையில் வேலைக்குச் செல்வார்கள். அம்சவல்லியின் மகன் சின்னக்கவுண்டர் சிங்காரத் தோப்பில் உள்ள தாசி வீட்டிற்குச் செல்வார். பிறகு அம்சவல்லி அம்மா திட்டித் திட்டி போகாமல் பண்ணை வேலைகளைப் பார்ப்பார். போவதை நிறுத்தி விடுவார். பிறகு ஆசை வந்து மறுபடி போவார். இதைச் சொல்லிவிட்டு அதன் தொடர்ச்சியாக ஒரு காட்சியை விவரிப்பார். அவன் ஜபல்பூரில் சாப்பிடும் போது தான் மேற்சொன்னதெல்லாம் ஞாபகம் வரும். சாப்பிட்டு விட்டு ஒரு சிக்னலில் நிற்பான். அங்கே பச்சை விளக்கு எரியும் போது எல்லா வாகனங்களும் போகும். சிவப்பு விளக்கு எரியும் போது, எல்லா வாகனங்களும் நிற்கும். பிறகு பச்சை விளக்கு எரியும் போது எல்லா வாகனங்களும் கிளம்பும். இது எதற்கு உவமானம் என்று நினைக்கிறீர்கள்? பச்சை விளக்கு தாசி வீட்டிற்குப் போவது. திட்டு விழுந்துதும் சிவப்பு விளக்கு. பிறகு பச்சை விளக்கு விழுந்ததும் மறுபடி தாசி வீடு. அருமையான உவமானம்!

 

முதலில் துரைமார் வீட்டில் வேலை. வாழ்க்கை இனிமையாய்ப் போனது. துரைமார்கள் கிளம்பியதும், இவர்களுக்கும் வேலையும், இருக்க இடமும் இல்லாது, நடுத்தெருவிற்கு வந்தார்கள். வாழ்க்கைத் துயரமானது. ஆனால் அம்சவல்லி வீட்டில் இவனுடைய அம்மா மாடு கன்றுகளைப் பார்த்துக் கொள்ளும் வேலை கிடைத்தது. வாழ்க்கையில் வசந்தம் மீண்டது. ஆனால் சிறிது காலத்தில் அவனுடைய அம்மா பாம்பு கடித்து இறந்து போகிறார். இவன் தனி ஆளாய் நின்றான். வாழ்க்கை கசந்தது. இந்த வாழ்க்கை வட்டத்தை ஓர் உவமானத்தோடு சொல்கிறார். “மிதிபட்டு வாடி விழுந்த செடி தற்செயலாக கிடைத்த ஈரத்தை உறிஞ்சி உயிர்பெற்று நிமிர்ந்து தளிர்விடும் தருணத்தில் மறுபடியும் மிதிபட்டு விழுவது போல்…”என எழுதுகிறார். எப்படி உவமானம்?

 

பண்ணையில் பருத்தி விளைந்திருந்தது. பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பஞ்சு மண்டிக்கு, இவனும் சின்னக்கவுண்டரும் செல்கிறார்கள். பஞ்சு மூட்டைகளைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுக்க தாமதம் ஆனதால் சின்னக்கவுண்டருக்கு சிங்காரத்தோப்புக்கு போகவேண்டும் என்ற ஆசை துளிர் விட்டது. “நீ பணத்தை வாங்கி வை. நான் அதுக்குள்ள ஓர் எட்டு போயிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு போனவர், என்ன ஆனதோ தெரியவில்லை. திரும்ப வரவேயில்லை. இவன் பணத்தைப் பெற்றுக்கொண்டு, திரும்ப பண்ணைக்குப் போகப் பயந்து, ரயில் ஏறி ஜபல்பூர் வந்துவிடுகிறான். பல வருடங்கள் கழித்து, அவன் தத்து எடுத்த பையன் மூலமாக பேரப்பிள்ளைகள் வந்த பிறகு, ஒரு நாள், கோயிலுக்குப் போகிற வழியில் ஒரு வயதான தாடிக்காரர் பருத்தியால் செய்த பஞ்சில் திரியைச் செய்து சாமிக்கு கொடுப்பதைப் பார்க்கிறான். அவர் ஏன் அப்படி செய்கிறார் என்று கேட்டதற்கு, “பொருள் சம்பாரிக்கிறமோ இல்லையோ, புண்ணியம் சம்பாரிக்க வேணாமா?” என்று பதில் வரும். அதிலிருந்து இவனும் பஞ்சில் திரி செய்து கோவிலுக்குக் கொடுப்பான். கதையின் இறுதியில் அவன் இறந்தவிட்டபிறகு, அவன் கையில் ஒரு பஞ்சுத் திரி இருக்கும். பஞ்சை விற்றப் பணத்தோடு, ரயில் ஏறி வந்த குற்றஉணர்வு, பஞ்சித் திரி செய்து புண்ணியம் செய்வதில் முடிவடைவதாக எழுதியிருப்பது சிறப்பிலும் சிறப்பு.

 

உவமைகள்

 ஒரு சிறுமியின் கையிலிருந்து நழுவிய பலூன் எல்லோருடைய தலைக்கும் மேலும் ஒரு பறவையைப் போல உயர்ந்தும் தாழ்ந்தும் பறந்து செல்லும் காட்சி. பச்சை நிறத்தில் ஒரு பூசணிக்காய் அளவுக்கு ஊதியிருந்தது அந்தப் பலூன் என்ற பலூன் உவமை அருமை. பலூன் உயர்ந்தும் தாழ்ந்தும் பறந்ததாம். அருமையான கற்பனை.

 

அம்சவல்லியின் முகத்தை வர்ணிக்கிறார் பாவண்ணன். ஏற்றிவைத்த விளக்கு போல சுடர்விடுகிறதாம் அவர் முகம். அபயக்கரம் காட்டி கருணை பொழியும் பார்வையுடன் நிற்கும் அம்மன் சிலை போன்ற தோற்றமாம். அவருடைய பாசக் குரலை உதறித் தள்ளிவிட்டு வந்துவிட்ட துயரம் அவனுக்கு கடலலையைப் போல் நெஞ்சில் புரண்டதாம். இந்த உவமையில், துயரம் திரும்பத் திரும்ப வந்து மோதிக்கொண்டேயிருப்பதை அழகாகச் சொல்லியிருப்பார் பாவண்ணன்.

 

அம்சவல்லியின் மகன் சின்னக்கவுண்டருக்கு சிங்காரத் தோப்புப் போக ஆசை. அங்கே தான் தாசி வீடு இருக்கிறது. அவரை காரில் அழைத்துக் கொண்டு போவதாக வேலையாட்களைத் திட்டித் தீர்க்கிறார் அம்சவல்லி அம்மா. அது தெரிந்து சின்னக்கவுண்டர் இவனைத் திட்டுகிறார். “வாழ்க்கைய ஆனந்தமா வாழனும். அதுக்கு பெண்களோட சவகாசம் வேணும். இனி பெரியம்மா சொல்றாங்க, சின்னம்மா சொல்றாங்கன்னு என் கிட்ட சொல்லாத..” என்று திட்டுவார். அந்த திட்டுகள் இவன் நெஞ்சை மாடு முட்டியது போல முட்டித் துளைத்துக் கிழித்துவிட்டன என்று பாவண்ணன் எழுதுகிறார்.

 

அப்படி இருந்தும் அம்சவல்லி அம்மா திட்டி திட்டி சில காலம் சிங்காரத் தோப்பிற்குப் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார் சின்னக் கவுண்டர். ஆனால் திடீரென ஒரு நாள் சிங்காரத் தோப்பிற்குப் போகலாம் வா என இவனை வண்டி ஓட்டச் சொல்லி விட்டு கிளம்பிவிட்டார். அப்பொழுது ஓர் உவமை. “அங்க பாரு…..கல்யாண முருங்கை மரங்களை வெட்டி, தூண் போல நிக்குது. ஆனா அதுல கூட சின்ன சின்ன துளிர்கள் துளிர்த்துட்டு வருது…அது போலத் தான் என் ஆசையும்…” என்று சி்ன்னக் கவுண்டர் சொல்கிறார். எல்லாக்கிளையும் வெட்டி விட்ட மரத்தில் துளிர் போன்ற ஆசை என்று உவமை.

 

சிங்காரத்தோப்பிற்குச் சென்ற சின்னக்கவுண்டர் ஏதோ காரணத்தால் திரும்ப வரவில்லை. இவன் பருத்தி விற்றப் பணத்தை கையில் வாங்கிக்கொண்டு நிற்கிறான். சின்னக்கவுண்டருக்காகக் காத்திருக்கிறான். அப்பொழுது அந்தி முடிந்து இரவு வரத் துவங்கிவிட்டது. அப்பொழுது ஒரு குழந்தை தவழ்ந்து வருவது போல நிலா மெல்ல மெல்ல ஊர்ந்து உச்சிக்கு வந்த சேர்ந்ததாம். சின்னக்கவுண்டர் வரவேயில்லை. சின்னக்கவுண்டர் இல்லாமல் பண்ணைக்குத் திரும்ப முடியாது என்று தெரியும். அப்பொழுது பக்கத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்கிறான். அந்த ரயில்வே ஸ்டேஷன், பால் போல் வெளிச்சத்தைப் பொழியும் விளக்குக் கம்பங்களுக்குக் கீழே ஒரு தீவு போலக் காணப்பட்டதாம். உவமைக்கு மேல் உவமைகள்.

 

கடைசியில் அவன், வயதாகி இறந்து போன போது, அவன் எடுத்து வளர்த்த அமர் என்ற பையன், காலையில் காபி எடுத்துக் கொண்டு அறைக்குள் போகிறான். அவன் அசையாமல் இருக்கிறான். அமர் அவனைத் தொட்டதும், “அவனுடைய உயிர் பிரிந்த உடல், ஒரு பஞ்சு மூட்டை போல சரிந்தது” என்று உச்சக்கட்ட உவமையோடு கதையை முடிக்கிறார்.

 

கதையமைப்பு உத்திகள்

 இன்றைக்கு நடப்பதைச் சொல்லிக்கொண்டே வருகிறார். சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் போது, முன்னால் நடந்த நிகழ்வைச் சொல்லுவார். பிறகு சாப்பிட்டு விட்டு நடந்துக் கொண்டே இருப்பான். அதை விவரித்துக் கொண்டே வருவார். திடீரென நிறுத்தி முன்னால் நடந்த இன்னொரு நிகழ்வைச் சொல்லுவார். இப்படி நிகழ்காலத்திற்கும், இறந்த காலத்திற்கும் முன் பின் சென்று கதையை நகர்த்தும் பாணி மிகச் சிறப்பு.

 

கருத்துகள்

 ஒரு வாசகர் சொன்னார்: “ஒருவருடைய வாழ்க்கைப் பயணம் நமக்குத் தெரியாது. சற்றே அருகே சென்று, நேரம் செலவழித்து, தெரிந்துக் கொண்டால் தான் உண்டு. அவர்கள் வாழ்வில் எதிர் கொண்ட சவால்கள், பெற்ற அனுபவங்கள், கற்ற அறிவு, சந்தித்த மனிதர்கள், பட்ட அவமானங்கள், கொண்ட குற்ற உணர்வுகள் எல்லாம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆகவே, சக மனிதர்களை, நாம் சந்திக்கும் மனிதர்களை மதிப்பும் மரியாதையோடும் நடத்துவதே நல்லது”. எவ்வளவு சரி!


அடுத்த கதை 'கங்கைக்கரைத் தோட்டம்'.

  

கங்கைக்கரைத் தோட்டம்

 

இந்தக் கதை வாசிப்பு அனுபவக் கட்டுரையில், உவமானங்களையும், உவமைகளையும், கதையமைப்பையும், கருத்தையும் ஒரு சேர சொல்லலாம் என்று முனைகிறேன்.

 

ஒரு கதையில் சூழல் விவரிப்பு என்பது மிக மிக முக்கியம். வாசகர்களை, கதை மாந்தர்கள் உலவும் நிலத்திற்கும் பொழுதுக்கும் வாசகர்களை உலவ வைக்க வேண்டும். எந்த நாட்டில், எந்த ஊரில், எந்த இடத்தில் காட்சி நடக்கிறது. அது கோயிலா, குளக்கரையா, வீட்டிலா, வெறிச்சோடி இருக்கும் ரோட்டிலா, காட்டிலா, கடற்கரையிலா, பேருந்திலா, விமானத்திலா….விவரிப்பின் மூலம் வாசகன் அந்த இடத்திற்கேச் சென்று விட வேண்டும். காட்சி நடப்பது கோடையிலா, குளிர் காலத்திலா, மழையிலா, வெயிலிலா, பனியிலா, வெறுமையிலா….விவரிப்பின் மூலம் வாசகன் அதை உணர வேண்டும். காலையா, மாலையா, நடு நிசியா, நடுப்பகலா…விவரிப்பின் மூலம் வாசகன் அதை அறிய வேண்டும். வாசகன் தான் இருக்கும் நிலத்தையும் பொழுதையும் மறந்து, கதையின் காட்சிகளுக்குள் பயணிக்க அந்த விவரிப்புகள் தான் உதவும். அந்தக் காட்சிப் பரப்பில் தான் கதை மாந்தரின் விவரிப்பு. பிறகு தான் கதை மாந்தர் பேசும் பேச்சுகள். முதலில் பாத்திரம். பிறகு அதில் பால். அப்புறம் தான் பாலைச் சுடவைக்க வேண்டும். அது மெதுவாக சூடேறி, கொதித்து அடங்கும். அது தான் ஒரு கதை. பாத்திரத்தில் தான் பாத்திரங்கள்!

 

அப்படிச் சூழல் விவரணையை அழகாகவும் தெளிவாகவும் செய்யத் தெரிந்த கதை ஓவியன் பாவண்ணன். கீழ்க்கண்ட விவரணையைப் பாருங்கள். அம்மா கொடுத்த கீரைக்கட்டுகளை எடுத்துக் கொண்டு இவனும் தம்பியும் அந்த தோட்டத்து வீட்டிற்குச் செல்கிறார்கள். “உயரமான மதில்களும் வீட்டுக்கு முன் பக்கத்தில் பெரிய தோட்டமும் இருந்த வீடு…வாசலில் இருக்கும் பெரிய இரும்புக் கேட்டைத் திறந்தால், வீடே கண்ணுக்குத் தெரியாது. ரொம்பவும் பின்னால் ஏதோ காட்டுக்குள் இருப்பது போலத் தெரியும். தோட்டத்தைக் கடந்து, துளசி மாடத்தைக் கடந்து….வீட்டை நெருங்கும் போது..” பார்த்தீர்களா? நீங்களே கேட்டைத் திறந்து, தோட்டத்தைக் கடந்து, துளசி மாடத்தைக் கடந்து, எட்டி இருக்கும் வீட்டிற்கு வந்துவிட்டீர்கள் பார்த்தீர்களா? சரி. அங்கு என்ன நடக்கிறது?

 

ஒரு பெரியவர் முன் அமர்ந்து ஆறு அக்காக்கள் வீணை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். (ஒரு வாசகர் சொன்னார்: “ஆறு இளம்பெண்கள் வீணை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதலாம். ஆனால், கீரைக் கட்டை எடுத்துச் செல்லும் பையன்கள் வழியாக கதைச் சொல்லப்படுகிறது. அவர்களின் பார்வையில் அவர்கள் அக்காக்கள் தான். அதையே கதாசிரியர் நிலைப்படுத்தியிருக்கிறார்”.)

 

இந்த இடத்தில் ஓர் உவமை! அந்த பெரியவர் வாசித்துக் காட்டிய வீணை “இசையின் இனிமை மயிலிறகால் வருடிக் கொடுப்பது போல்” இருந்ததாம். வருடிப் பார்த்திருக்கிறீர்களா? அதன் மென்மையை கண்ணை மூடி பருகியிருக்கிறீர்களா? மிகப் பொருத்தமான உவமை. “ஓர் அருவிக்கு அருகில் போய் நின்றது போல்” இருந்ததாம். அருவியின் அருகில் போய் நின்றால் என்ன ஆகும்? உலகத்தில் இருக்கும் மற்ற ஒலிகளெல்லாம் அருகிப்போய்விடும். ஒரு தியான நிலைக்கு உங்களைத் தள்ளி விடும். இன்னொரு அழகான உவமை.

 

அந்த அக்காக்கள் வீணை வாசிக்கிறார்கள். அப்பொழுது அவர்களின் விரல்கள், “வீணை நரம்புகளில் சிட்டுக்குருவிகள் தத்தித்தத்திச் செல்வது போல்” இங்கும் அங்கும் போய் வந்தனவாம். அந்தப் பெரியவர் ‘நிதி சால சுகமோ’ என்று இழுத்துப் பாடுகிறார். பாடி ஓய்ந்ததும், அருகில் இருந்த தம்ளரை எடுத்து, “உதடு படாமல்” தூக்கி ஒன்றிரண்டு மிடறுகள் குடிக்கிறார்.

 

இப்பொழுது கவனியுங்கள். துளசி மாடம், வீணை, ‘நிதி சால சுகமோ’ பாடல், உதடு படாமல் தூக்கிக் குடித்தல் என்று அந்த வீட்டையும், வீட்டில் உள்ளவர்களையும் எந்தச் சமூகத்தில் உள்ளவர்கள் என்று வாசகர்களே கட்டமைத்துக்கொள்ளச் செய்கிறார் கதாசிரியர். அப்பொழுது ஒரு பெண்ணைப் (அக்காவைப்) பாடச் சொல்கிறார். அவள் ‘கங்கைக் கரைத் தோட்டம்’ என்று மெல்லிய குரலில் பாட, “அவர் குரலும் இசையும் தோளோடு தோள் ஒட்டி நடப்பது போல்” இருந்தததாம். தோளோடு தோள் ஒட்டி…உவமைகளாக வந்து விழுந்துக் கொண்டேயிருக்கிறது.

 

அந்த இசையில் சிறுவர்கள் இருவரும் மூழ்கிப் போனார்கள். அதை எப்படி விவரிக்கலாம்? பாவண்ணன் இப்படி உவமைகளால் விவரிக்கிறார்; “சீராக தரைத் தொடும் மழைத் தாரைகளென இசையும் பாடலும் பொழிந்தன. நிறைந்து வழிந்தோடும் நீரில் மிதந்து சுழன்றபடி செல்லும் சிறு இலைகளென எங்கள் மனங்கள் மிதந்து சென்றன. கைவீசி தாவி நீந்துவது போல் அலைந்தன. வட்டமிட்டுச் சுருண்ட சுழல்களால் எடுத்துச் செல்லப்பட்டு ஆழத்தை நோக்கி இறங்கின.” இசையும் பாடலும் சீராக தரைத் தொடும் மழைத் தாரைகளாம். அவர்கள் இருவரும் வழிந்தோடும் நீரில் சுழன்றபடி செல்லும் சிறு இலைகளாம். அந்த வெள்ளத்தில் கைவீசி தாவி நீந்துவது அவர்கள் மனங்களாம். அவை சுழலும் சுழலில் ஆழத்தில் இறங்கியதாம்… கதை மாந்தர்களின் அனுபவத்தை, கதாசிரியர் அனுபவித்து, வாசகரிடம் இறக்கிவிடும் வித்தை இது.

 

கதை அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறது. அந்தச் சிறுவர்களுக்கு ஒரு வீணை வாங்கிவிட வேண்டும் என்கிற ஆசை முளைக்கிறது. காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லை. ஒரு நாள் பரணியில் கிடந்த ஒரு மட்டப் பலகையை எடுத்து ஆணிகள் அடித்து கம்பிகளைக் கட்டி, புட்டுக்கூடையில் துணியைக்கட்டி, வீணை போன்ற ஒன்றைச் செய்கிறார்கள். கம்பியை மீட்ட, “தலையில் கொட்டியது போல் ‘நங்’ கென்று ஒரு சத்தம்” வந்ததாம்.

 

அந்தப் பக்கம் வந்த அம்மா அதைக் கவனிக்கிறார். ஒழுங்கா போய் படிங்க என்கிறார். “கங்கைக்கரைத் தோட்டம்” பாடலைத் தம்பி பாடிக் காண்பிக்கிறான். வீணை வாங்கித் தா என்கிறார்கள். அதெல்லாம் நம்மால முடியாது என்கிறாள். அப்பா வருகிறார். அவரிடமும் கேட்கிறார்கள். அவர் “செருப்பு பிஞ்சி போய்டும்” என்கிறார். அதே இரவு. நிலா வெளிச்சத்தில் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு குள்ளக்கத்திரிக்காய் குட்டிக்கரணம் போட்டக் கதையைக் கேட்டுச் சிரிக்கிறார்கள். அப்பொழுது சிறுவர்களின் அத்தை வருகிறாள். “சோழிய உருட்டி விட்ட மாதிரி” உங்க சிரிப்பு கோவில் வரைக்கும் கேக்குது என்ற உவமையோடு, படலைத் திறந்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறாள்.

 

அத்தையின் கதை இது தான். அவளுக்கு கல்யாணம் நடந்தது. கணவன் குடிகாரன். சாலை விபத்தில் இறந்து போகிறான். பாரதக் கூத்து நடத்த வந்தவரோடு பழக்கம் ஏற்பட்டு அவரோடயே சென்றுவிட்டாள். அதுவும் நிலைக்கவில்லை. மூத்தாள் விரட்டி விட, ஊருக்குத் திரும்பி வந்து கூலி வேலை செஞ்சி ஏதோ பிழைப்பை ஓட்டுகிறாள்.

 

எல்லா அம்மாக்களுமே, பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றவே இருக்கிறார்கள் போலும். வெளி விஷேசத்துக்குப் போயிருந்த சிறுவர்களின் அம்மா, பத்து ரூபாய் கொடுத்து, ஒரு விளையாட்டு சாமானை வாங்கி வருகிறார். அது யாழ் போன்று நெகிழியில் செய்த விளையாட்டு சாமான். சிறுவர்கள் ஏமாந்தாலும் அதில் ஒலி எழுப்பி விளையாடுவது அவர்கள் வழக்கமாகி விட்டது.

 

மறுபடி ஒரு நாள். அத்தை வருகிறார். அவருக்குப் பசி. “ஒரு வீடு நெருப்பு புடிச்சி எரியிற மாதிரி கொடல் எரியுது…” என்று கேட்க, கிழங்கு வாங்கிக்கொடுக்கிறார்கள். பேச்சு அவர்கள் வைத்திருக்கும் இசை விளையாட்டு சாமான் பற்றி மாறியது. தம்பி ‘கங்கைக் கரைத் தோட்டம்’ பாட்டைப் பாட, அத்தை பிசிறில்லாத தாளத்தோடு அந்த யாழில் அந்த இசைக்கோவையை மீட்டினார். இவர்கள், ‘ஒனக்கு எப்படி தெரியும்?’ என்று கேட்க, ‘அந்தக் கூத்தாடி கம்னாட்டியோட சுத்துனதுக்கு, இது தாண்டா மிச்சம்’ என்று சொல்லிவிட்டு எழுந்துச் செல்கிறாள்.

 

கலையும், இசையும், மொழியும், இலக்கியமும் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கும் எவருக்கும் வரும். இவர்கள் தான் இதற்குப் பெயர் போனவர்கள். அவர்கள் தான் அதற்கு லாயக்கு. என்றெல்லாம் கிடையாது. வாய்ப்பு தான் முக்கியம். பயணிக்கும் போது அனுபவம் பெருகும். தோட்டத்து வீட்டிலேயே இருக்கும் அக்காக்களுக்கு மாத்திரம் அல்ல, பாசத்திற்காக பயணிக்கும் அத்தைகளுக்கும் அது வரும்.

 

பாவண்ணன்! இந்தக் கதையின் பொடியில் மிகுந்திருக்கிறது நெடி! அடுத்தக் கதை 'கலைமாமணி'.

 

கலைமாமணி

கதைத் துவக்கத்தில் தமுக்கு வாசிக்கிறார்கள். வாசகர் வட்டத்தில் ஒருவர் கேட்டார்: “தமுக்கு என்பது முரசு போல இருக்குமே, அதனுடைய குட்டி வடிவம் தானே?” என்று கேட்டார். அவர் கேட்டது சரி தான். தமிழிசைக் கருவிகளில் தோல் கருவிகள், நரம்புக் கருவிகள், காற்றிசைக் கருவிகள், கஞ்சக் கருவிகள் மற பிற கருவிகள் இருக்கின்றன. வாசகர்களின் வசதிக்காக சில எடுத்துக்காட்டுகளை இங்கு கொடுக்க விரும்புகிறேன். பறை, கஞ்சிரா, பம்பை, பேரிகை, முரசு, பஞ்சறை மேளம், மண்மேளம், மத்தளம், மிருதங்கம், தவில், உறுமி, ஆகுளி, கொடுகொட்டி போன்றவை தோற்கருவிகள். வீணை, யாழ், தம்புரா, கோட்டு வாத்தியம், கின்னாரம் போன்றவை நரம்புக் கருவிகள். கொம்பு, தாரை, நாதசுவரம், புல்லாங்குழல், சங்கு, மகுடி, முகவீணை, எக்காளம், கொக்கரை, மோர்சிங் போன்றவை காற்றிசைக் கருவிகள். தாளம், சேகண்டி போன்றவை கஞ்சக் கருவிகள். கொன்னைக்கோல், கடம் போன்றவை இன்ன பிறக் கருவிகளில் சேரும்.

 

போன வாரம் மெல்பர்னில் சங்கத்தமிழ் கலையகத்தார் பயிற்சி எடுக்கும் இடத்திற்குச் சென்றிருந்தேன். மெல்பர்ன் வாசக வட்ட நண்பர்கள் சேசுராஜ், மெல்வின் ஆகியோரிடம் நான் விரும்பிக் கேட்டுக் கொண்டதன் பேரில், என்னை வரச்சொல்லியிருந்தார்கள். பெண்களும், ஆண்களும், இளைஞர்களும், சிறுமிகளுமாக கூடியிருந்தார்கள். வட்டமாக நின்றார்கள். நான் ஓர் ஓரமாக உட்கார்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லோருடைய கையிலும் ஒரு பறை இருந்தது. ஒரு பெண்ணின் கையில் பெரிய முரசு இருந்தது. இன்னொருவர் சிறிய தமுக்கு ஒன்றை வைத்திருந்தார். ஒருவர் ஒரு தாளத்தை வாய்ப்பாடாகச் சொல்ல, அனைவரும் அடித்தனர். நான் கண்களை மூடிக் கொண்டேன். அவர்களின் பறையிலிருந்து இசையொலி, சாரலாகத் துவங்கி, தூறலாக மாறி, சோ’வனெ பெய்து, இடி மின்னல் தோன்றி, அடைமழை அடிக்க, திரும்ப மழையின் வேகம் குறைந்து, தூறலுக்கும் சாரலுக்கும் வந்து நின்றது. என் கண்களைத் திறந்த போது என் உடை நனைந்திருந்தது. இசை மழையில்.

 

நண்பர் சேசுராஜ் என்னைத் தனியாக அழைத்துச் சென்று, “முதல் நிலையில் முதல் அடி இது தான். எங்கே உங்கள் தொடையில் தட்டுங்கள்” என்று சொல்லி “த-குகுகு த-குகுகு த-குகுகு தத…” என்று தன் தொடையைத் தட்டி என் பறைக் கற்றல் அனுபவத்தைத் தொடங்கி வைத்தார். “அட! பறையில் இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கா?” என்று வியந்துக் கேட்டேன். என்னைப் பயிற்சி செய்யச் சொல்லிவிட்டு குழுவோடு பறையடிக்கச் சென்றார்.

 

அப்போழுது நண்பர் மெல்வின் வந்தார். தன்னிடம் இருந்த இரண்டு பறைகளில் ஒன்றை என்னிடம் கொடுத்து, “வாங்க…தொடையில் தட்டுவதை பறையில் அடியுங்கள்” என்று சொல்லி “ த த த-குகுகு” என்று முதல் நிலையில் உள்ள அடுத்த அடிகளைச் சொல்லிக் கொடுத்தார். அதைப் பயின்றுக் கொண்டேயிருக்கும் போது, இருவரும் “வாங்க…ஜோதியில கலந்துக்குங்க…” என்று சொன்னபோது நானும் அங்கிருந்த பதினைந்து பேரோடு இணைந்துக் கொண்டேன். அவர்கள் மலையுச்சியில் இருந்து பறையடித்தார்கள். நான் மலையடிவாரத்தில் இருந்து பறையடிக்கத் துவங்கினேன்.

 

சங்கத்தமிழ் கலையத்தார் அனைவரிடமும் என்னை அறிமுகப்படுத்தினார்கள். பிறகு தான், மேலே சொன்ன பல தமிழிசைக் கருவிகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்றும், ஏழெட்டு வருடங்களாக மெல்பர்னில் தமிழிசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்றும் தெரிய வந்தது. “இந்த பறைய எடுத்துட்டுப் போங்க. வீட்டுல அடிச்சிப் பாருங்க” என்று சொல்லி அனுப்பிவைத்தார்கள்.

 

கதையில் தமுக்கு என்ற ஒரு சொல், என்னை இவ்வளவு எழுத வைத்துவிட்டது.

 

கதைக்கு வருவோம். ராமலிங்க ஐயா கூத்துக் கலைஞர். இந்தப் பையன்களின் அப்பா அவரின் ரசிகர். அப்பாவின் பெயர் பலராமன். ராமலிங்க ஐயாவிற்கு எப்படியாவது கலைமாமணிப் பட்டம் வாங்கித் தரவேண்டும் என்று பலராமன் மெனக்கெடுகிறார். இந்தக் கூத்துக் கலைஞர் ஏன் இங்கு வந்து பிறந்தார்? வேறு எங்காவது பிறந்திருந்தால் இந்நேரம் அவரைத் தூக்கிக் கொண்டாடுவார்கள் என்று நினைக்கிற பலராமன் ஓர் உவமையை உபயோகிக்கிறார். “கண்ணை மூடிகினு கடவள் தூவுன வெத மாதிரி இந்த ஊர்ல வந்து பொறந்துட்டாரு…” என்கிறார்.

 

பலராமன் ராமலிங்கம் ஐயாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிப் பத்திரிக்கையில் வந்ததும், பலராமன் வீட்டிற்கே வந்த ராமலிங்கம், “என் வீட்டுலயே எனக்கு மரியாதை இல்ல… என்னையும் சரி, என் கலையையும் சரியா புரிஞ்சிக்கமாட்டேங்குறாங்க…” என்று சொல்வார். “அது சரிதான்! கூட இருப்பவர்களுக்கு நம் அருமை பெருமை தெரியாது. நம் தவறுகள் தான் தெரியும். ஊர்ல நமக்கு பெத்த பேரு! ஆனா வீட்டுல நம்ம பூஜ்யம்..” என்றார். யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

 

பத்திரிக்கையில் செய்தி போட்ட பிறகு, ராமலிங்கம் ஐயாவைப் பற்றி, கோப்பு ஒன்றைத் தயாரித்துக்கொண்டு அரசியல்வாதியைப் பார்த்து முறையிடுகிறார் பலராமன். அவர் மிகவும் நம்பிக்கையாக இருக்கிறார். ஆனால் பலராமனின் மனைவி, ஓர் உவமானத்தைச் சொல்லி, ரொம்பவும் எதிர்பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கையிடுகிறார். அது என்ன உவமானம் தெரியுமா? “கோழி முட்டைங்கள அவையத்துக்கு வைக்கிறமாதிரிதான் இந்த விருதுக்கு ஆள எடுக்கிற விவகாரம். ஒன்னு ரெண்டுதான் குஞ்சு பொரிக்கும். மத்ததுலாம் கூழைமுட்டைதான்” என்பார்.

 

முதலில் பத்திரிக்கை. பிறகு அரசியல்வாதி. அடுத்து ஒரு குறும்படம் தயாரித்து அதிகாரிகளிடம் கொடுத்தல். பிறகு ராமலிங்கம் ஐயாவைப் பற்றிய நூலொன்று தயாரித்தல் என பலராமன் பல வருடங்களாக வெவ்வேறு முயற்சிகள் எடுக்கிறார். பனிரெண்டு நாட்களுக்கு கூத்து நடத்த ஒத்துக்கொண்டு கூத்தைத் துவங்கிய ஒரு நாளில் அவருக்கு கலைமாமணி விருது தருவதாக செய்தி வருகிறது. ஆனால் அன்றைய நாளில் போய் விருதை வாங்க அவர் போக மறுக்கிறார். காரணம், கொடுத்த வாக்கு தான் தனக்கு முக்கியம் என்கிறார்.

 

எங்கள் தந்தை கூறுவார், “தம்பி! வாய்க்குள் போவதிலும், வாயிலிருந்து வெளி வருவதிலும் கவனமாக இரு” என்று சொல்வார். “நீ மகிழ்ச்சியாக, வெற்றிகரமாக வாழ வேண்டுமென்றால் இரண்டு இரண்டு விதிகள் தான். ஒன்று கொடுத்த வாக்கை நிறைவேற்று. இரண்டாவது வாக்கு கொடுக்காதே” என்பார்.

ஒரு வாசகர் சொன்னார்: "ஒரு கலையில் எவ்வளவு அர்ப்பணிப்போடு இருக்கிறார் பாருங்கள். விருதுகள் போன்ற மேல் பூச்சுகள் தேவையில்லை. கலை மீது ஆர்வமும், தன் தொழில் மீது அர்ப்பணிப்பும் மட்டுமே போதும்."

 

இன்னொரு வாசகர் சொன்னார்:"பலராமனைப் பாருங்கள். தன்னலமில்லாமல் இருக்கும் பண்பு. இன்னொருவருக்காக, இன்னொருவருக்குப் பெயர் வரவேண்டும் என்பதற்காக, இன்னொருவருக்கு விருதும் பாராட்டும் கிடைக்கவேண்டும் என்பதற்காக, மனம் தளராமல் போராடுகிறார் பாருங்கள்."

 

கலைமாமணி!

உன் வழி தனி!


அடுத்தக்கதை 'சிவப்புக்கல் மோதிரம்'.

 

சிவப்புக்கல் மோதிரம்

 

எடுத்த எடுப்பிலேயே ஓர் உவமானம். தமிழ் வீட்டின் முன்னே ஒரு மகிழ மரம். பழைய பூக்கள் மேல் புதிய பூக்கள் விழுந்து கிடக்கின்றன. ‘இன்றைக்கு என்ன பூ மழையா?” என்ற கேட்டுக் கொண்டு கதிர் உள்ளே நுழைகிறார். கலைச்செல்வி என்ற பழைய பூவின் மீது, இன்று புதிய பூ போட வேண்டிய நாள் இது. கலைச்செல்வி இறந்துப் போய்விட்ட செய்தியைத் தமிழுக்குச் சொல்ல வேண்டும். எப்படி சொல்வது என்று கதிர் தவிப்பான். “காலையில வில்லிநூரு ஆத்தங்கரை வரைக்கும் வாக்கிங் போனேன்…” என்று சொல்லி நிறுத்தும் போது, அந்த மகிழ மரத்திலிருந்து ஒரு பூ, உச்சிக் காம்பிலிருந்து பிரிந்து, காற்றில் மெதுவாக அசைந்து அசைந்து இறங்கி தரையில் உதிரும். அட! என்ன வர்ணனை!! என்ன உவமானம்!!!

 

கலைச்செல்வி வீட்டிற்குப் போக, இருவரும் கிளம்பி வெளியே வருகிறார்கள். அங்கே சாலையின் திருப்பத்தில் ஒரு ஜேசிபி இயந்திரம் நிற்கும். சாக்கடைக்குள் இருக்கும் கசடுகளை அள்ளி வெளியே போடும். ஒரு வாசகர், “இது தமிழின் மனத்தில் இருக்கிற பழைய நினைவுகளை கிளறி விடுவதற்கான உவமானமோ?” என்று கேட்டார். அந்தச் சாக்கடைக் கசடுகளில் சில மோதிரங்கள் கிடைக்கும். அதை அப்பகுதி சிறுவர்கள். “டேய்!…மோதிரம்டா..” என்று கத்திக்கொண்டே எடுத்துப் போவார்கள். அடுத்து கலைச்செல்விக்கும் தமிழுக்கும் நிச்சயமான போது போட்டுக்கொண்ட சிவப்புக்கல் மோதிரம் பற்றி கூறுவதற்கு முன்னோடியாக, போகிற போக்கில் ஒரு காட்சியை விவரிப்பார் பாவண்ணன்.

 

இருவரும் ஒரு பாலத்தில் ஏறி இறங்குவார்கள். அங்கு ஒரு மாரியம்மன் கோவில் இருக்கும். எப்பொழுதும் சாமி கும்பிட அந்தக் கோயிலுக்குப் போகும் தமிழ் அன்றைக்கு அந்த மாரியம்மன் கோவில் பக்கம் தன் பார்வையை திருப்பாமல் போவான். ஏன்? அதற்குப் பழையக் கதைக்குப் போக வேண்டும். அவர்களின் நிச்சயத்திற்குப் பிறகு, அவர்கள் தந்தையர் சார்ந்திருந்த கட்சி இரண்டாகப் போனதால், அவர்களின் திருமணமும் நின்று போய்விடுகிறது. அதனால் அது சம்பந்தமான எல்லாப் பொருட்களையும் இரண்டு குடும்பங்களும் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். அதில் ஒன்று அந்த நிச்சயதார்த்த மோதிரம். அதை தமிழின் அம்மா, அந்த மாரியம்மன் கோவில் உண்டியலில் போட்டுவிடுவார். அதனால் தான் அந்த கோயில் பக்கம் பார்க்காமல் பயணிப்பான் தமிழ்.

 

ஓரிடத்தில் நிறுத்தி ரோஜாப்பூ மாலை ஒன்றை வாங்கிக்கொள்வார்கள். தொடர்ந்து பயணிக்கும் போது, முன் கதையைச் சொல்வார் பாவண்ணன். தமிழின் நண்பன் கதிரை, கலைச்செல்வி, அதற்குப் பிறகு மூன்று முறை, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்திப்பார். முதல் தடவையே கேட்பார்: “அப்பா அம்மா சொன்னா அப்படியே விட்டுட்டு போயிடறதா? நமக்கெல்லாம் மனசுன்னு ஒன்னு இருக்குதா இல்லையா? பெரிசுகள விடு. நீ என்ன சொல்றன்னு என்னுட்டல்ல கேட்டிருக்கனும். கேட்டிருந்தா அந்த நிமிஷமே வீட்டை விட்டு வரத் தயாரா இருந்தேன்” என்று கேட்பார். தொடர்ந்து, “அவர் கையில கொஞ்ச நாள் இருந்த மோதிரம்-ங்றதுக்காகத்தான் இன்னமும் நான் அத போட்டுருக்கேன். இதனால வீட்டுல எவ்வளவு பிரச்னை…” என்று சொல்வாள்.

 

தமிழிடம் ஒரு கேள்வி. “ஏன் தமிழ்? ஏன் கலைச்செல்வியை ஒரு தடவைக் கூடப் போய் இப்படிக் கேட்கவில்லை?”

 

அதே நேரம் கதிரிடமும் ஒரு கேள்வி. “ ஏன் கதிர்? மூன்று முறை நீங்கள் கலைச்செல்வியைப் பார்த்தும், அப்படி அவள் சொன்னாள் என்று உங்கள் நண்பருக்கு, அதான் தமிழுக்கு, ஏன் நீங்கள் சொல்லவேயில்லை?”

 

கலைச்செல்வியிடமும் ஒரு கேள்வி. “தமிழ் தான் கேட்கவில்லை. சரி! ஆனால், நீங்கள் ஏன் அவரைச் சந்தித்து பேசவில்லை?”

கணியன் பூங்குன்றனாருக்கு ஒரு கேள்வி. “தீதும் நன்றும் பிறர் தர வாரா…என்று எழுதினீர்களே. தமிழ் வாழ்க்கையும், கலைச்செல்வி வாழ்க்கையும் இப்படி ஆனதற்கு அவர்கள் மட்டுமா பொறுப்பு? ஏதோ இரண்டு அரசியல் கட்சிகள் உடைந்ததற்கு, இவர்கள் என்ன செய்வார்கள்?”

 

இருவரும் கலைச்செல்வி வீடு இருக்கும் வீதிக்கு வந்துவிட்டார்கள். ஆனால், கடைசியில் மாலையைப் போடத் திராணியில்லாமல் திரும்பி வந்துவிடுகிறான் தமிழ். கலைச்செல்விக்கு அந்த மாலையும் கிடைக்க வில்லை. இந்த மாலையும் கிடைக்கவில்லை.

 

என்ன தமிழ்? இப்படிச் செய்து விட்டீர்கள்?

 

சிவப்புக்கல் மோதிரம்

வருகிறது ஆத்திரம்.


அடுத்தக் கதை 'குழந்தை'.

 

குழந்தை

 

பாவண்ணன், எளிய காட்சிகளில் உவமானங்களைப் பின்னும் வித்தைத் தெரிந்தவர். ஒரு குழந்தை கோவிலில் அநாதையாகக் கிடக்கிறது. அதைத் தயாளனும் மற்ற போலீஸ்காரர்களும் இணைந்து, காப்பாற்றி, ஓர் இல்லத்தில் ஒப்படைக்கிறார்கள். அந்தக் குழந்தைக்கு நிச்சயம் ஒரு தாய் இருந்திருக்க வேண்டும். ஒன்று அந்த தாயிடமிருந்து திருடி யாராவது இங்கு வந்து போட்டிருக்க வேண்டும். அப்படியென்றால் அந்தத் தாயும் இந்தக் குழந்தையைத் தேடிக்கொண்டு இருக்க வேண்டும். இல்லையென்றால், அந்தத் தாயே இந்தக் குழந்தையை கோவிலில் வந்து போட்டிருக்க வேண்டும். குழந்தை இங்கே. தாய் எங்கே? என்று தயாளன் தேடிக் கொண்டிருக்கும் போது, சில பெண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். “ஓம் புருஷன் பசுமாடு தான் (தாய்) வாங்கிட்டு வந்தானா? கன்னுகுட்டி (குழந்தை) வாங்கிட்டு வரலயா?” “இல்ல… நம்ம வீட்டுக்கு வந்து பொறக்குற கன்னுகுட்டி தான் ராசின்னு வெறும் மாடு மட்டும் தான் வாங்கிட்டு வந்தார்” என்று உரையாடல் நீள்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், கதையின் கடைசியில், அந்த சிறு வயது தாயை, இரண்டாம் திருமணம் செய்ய வைக்க அவளது அண்ணன் முயற்சிக்கிறார். ஆனால் குழந்தை இல்லாமல் வந்தால் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னதால், அவளை பம்பாய்க்காரன் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்து அனுப்பி விடுகிறார். அதாவது அந்தக் கன்னுகுட்டி வேண்டாமாம். ராசியில்லையாம். அவன் வீட்டிற்குச் சென்று, அவனுக்குப் பிறக்கும் கன்னுகுட்டி (குழந்தை) தான் வேணுமாம். அதை முதற் காட்சியிலேயே உவமானமாகச் சொல்லியிருப்பார்.

 

கதையில் மனிதநேயத்தின் உணர்வை மெல்லியதாக எடுத்துச் சொல்லியிருப்பார். அந்தப் பெண்களில் ஒருத்தி, “என்னுட்ட குடுங்க சார். என் பசங்க நாலு பேரோட அஞ்சாவதா இதையும் வளர்த்துட்டுப் போறேன்” என்பாள். அதை விட தயாளன் (பெயருக்கேற்றார் போல்), தயாள குணத்தோடு எப்படியாவது தாய் எங்கிருக்கிறாள் என்று பார்த்து குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என்று அலைந்துக் கொண்டேயிருப்பார். தன்னலமற்ற மனிதநேயத்திற்கு சரியான எடுத்துக்காட்டு அந்தக் கதாபாத்திரம்.

 

சமூகவலைத்தள தொழிற்நுட்பத்தின் வழி, ஒரு தொடர்பு கிடைத்து, மாட்டு புரோக்கரை (அந்தத் தாயின் அண்ணன்) அணுகிவிடுவார். சமீபத்திய தொழிற்நுட்பத்தின் பயன்பாட்டை சற்றேத் தொட்டுச் செல்வார்.

 

கடைசியில் ஓர் உவமானத்தோடு நிறைவு செய்வார். குழந்தையின் அம்மாவின் அண்ணன் மாட்டு புரோக்கரைப் பார்க்கப்போகும் போது, பூவரசு மரத்தடியில் ஒரு கன்றுகுட்டி கட்டப்பட்டிருந்தது என்று எழுதுவார். என்ன வேணும், “பசுவா? காளையா? கன்னுக்குட்டியா?” என்று கேட்பார். அதாவது அப்பனா, அம்மாவா, குழந்தையா? என்று கேட்பது போல இருக்கும்.

 

ஓர் உவமை மட்டும் மனதிலிருந்து விலகவே மறுக்கிறது. அந்தக் குழந்தையின் “விரல்கள் குண்டுமல்லி அரும்புகளைப் போல இருந்தன” என்பது நெஞ்சை என்னவோ செய்துக்கொண்டேயிருக்கிறது.

 

குழந்தை! - பஞ்சு

மெத்தை!!

 

********************************************************************************************

 

நயனக்கொள்ளை

கதைச் சுருக்கங்கள்

 

நயனக்கொள்ளை

 

பக்கவாதத்தால் படுத்திருக்கிறார் அப்பா. 658 பாட்டு உள்ள திருவாசகத்தை இரண்டு மூன்று முறைப் படித்துவிட்டு இன்றும் திரும்ப அதையேப் படித்துக் கொண்டிருக்கிறார். அப்பாவோடு முன்பு நடைப்பயிற்சிக்குப் போகும் அருணாச்சலம் மாமா, இப்பொழுதெல்லாம் நடந்துவிட்டு அப்பாவைப் பார்க்க வருவார். இவன் கொடுக்கும் தேநீரை அருந்திக் கொண்டே, அரசியல், சினிமா, இன்னும் மற்ற விஷயங்கள் என்று பேச்சு நீளும். ஒரு நாள் லண்டன்லேருந்து கிரிஜா வருவதாக அருணாச்சலம் மாமா கூறுகிறார். இவனுக்கு மனதுக்குள் ஏதோ செய்கிறது என்று கதை புதுச்சேரியில் தொடங்குகிறது.

 

கிரிஜா வருகிற நாளன்று அருணாச்சலம் மாமா வீட்டிற்கு வருகிறார். திருவாசகத்தில் உள்ள ஒரு பாட்டிற்குப் பொருள் கேட்கிறார். அதில் நயனக்கொள்ளை என்றச் சொல் வருகிறது. திருட்டு என்றால் பகுதியாக எடுப்பது என்றும் கொள்ளை என்றால் எல்லாவற்றையும் வாரி சுருட்டிக் கொள்வது என்றும் அப்பா பொருள் கொடுக்கிறார். இவன் வீட்டில் வெள்ளையம்மா என்கிற சமையல்கார அம்மா இருக்கிறார்.

 

கிரிஜாவின் நினைப்பில் இவன் இருக்கிறான். பள்ளி, கல்லூரி, இசை கற்றுக் கொள்ளும் இடம் என்று கிரிஜா அவன் போகிற இடத்திற்கெல்லாம் வருகிறாள். ‘நான் உன் கூடவே இருக்கனும்னு நெனச்சேன்’ என்று சொல்கிறாள். குளித்துவிட்டு வெள்ளையம்மா செய்த உப்புமாவை அப்போவோடு சாப்பிடுகிறான். பிறகு ஆன்லைன் வழி சேவை செய்யும் தன் கடைக்குச் செல்கிறான். சங்கரன் கடையில் உதவியாக இருக்கிறான். கடைக்குச் சென்று கணிணியைத் திறந்தால் கிரிஜாவிடமிருந்து ‘உன்னிடம் பேசவேண்டும்’ என்ற ஒற்றைவரியில் ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது.

 

எழுந்து சங்கரனிடம் சொல்லிவிட்டு அருகில் இருக்கிற வேதபுரிஸ்வரர் கோயிலுக்குச் செல்கிறான். கிரிஜாவுடன் நின்றிருந்த, உட்கார்ந்திருந்த, பேசிக்கொண்டிருந்த இடத்திலெல்லாம் நின்று, உட்கார்ந்து, தனக்குள் பேசிக்கொண்டே இருக்கிறான். கிரிஜாவின் விரிந்த கண் வழி இதயத்திற்குச் சென்று, மனதிற்குள் நுழைந்து, ஆசைகளைப் பற்றி…என்று பேசியிருந்த அனுபவத்தில் திளைத்திருக்கிறான். இருவரும் மேல் படிப்பிற்கு லண்டன் கேம்பிரிட்ஜ் செல்லவேண்டும் என்று பேசி வைத்திருந்தார்கள். ஆனால் அப்பாவின் திடீர் உடல் நலக் குறைவினால் அவனால் போகமுடியாமல் போகிறது. கிரிஜா மட்டும் லண்டன் புறப்பட்டுவிட்டாள்.

 

பதினொன்னரை மணிக்கு கடையிலிருந்து வீட்டிற்குச் சென்று அப்பாவிற்கு பணிவிடைகள் செய்கிறான். அம்மாவுக்குப் பிடித்த ஜெகசிற்பியனின் நாவல் ஒன்றைப் பற்றி அப்பா சொல்கிறார். கடைக்குப் போய்விட்டு மறுபடி ஒரு மணிக்கு வீட்டிற்கு வருகிறான். யூடீயூபில் கேட்டுக்கொண்டிருந்த சந்திரபாபு போன்று தன் அலுவலகத்தில் இருந்து ஒரு நபரைப் பற்றி அப்பா சொல்கிறார். இருவரும் சாப்பிடுகிறார்கள். வடிவேலு நகைச்சுவையைக் கேட்டுக்கொண்டே! அப்பொழுது வாசலில் கார் நிற்கும் சத்தம். திறந்தால் கிரிஜா!!

 

அதே விழிகள். அதே முகம். அதே புன்னகை. ‘என்ன அப்படியே உட்கார்ந்திருக்கே! இறங்கி வா’. ‘ம்ஹூம்! என்னை இறக்கி விடு’. அவள் கையைப் பற்றுகிறான். அந்த ஆதாரத்தோடு தன் இரண்டு கால்களையும் கீழே இறக்கி, பின் தானாக வீட்டிற்குள் நடந்தாள். அப்பாவிடம் பேசிக்கொண்டே, முகக் கண்ணாடியைக் கழட்டும் போது தான் இருவரும் கவனித்தார்கள். ஒரு கண்ணில் மட்டுமே பார்வை இருந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த கார் விபத்தில் ஒரு கை, கால், கண் எல்லாம் போன கதையை விவரித்தாள். ஒரு வகுப்புத் தோழன் தான் செயற்கை கை, கால், கண் எல்லாம் பொருத்தியதாகச் சொன்னாள்.

 

இவன் அவள் கையைப் பற்றிக் கொள்கிறான். கிரிஜா மேசை மீதிருந்த திருவாசக நூலைப் பார்த்துவிட்டு, ‘நம்ம மணிவாசகர் ஐயா நடத்திய திருவகவல் பகுதி அப்பப்ப ஞாபகத்துல வரும். ஏதோ கொள்ளைன்னு ஒரு பாட்டுல ஒரு வார்த்தை வருமே….’ எனக் கேட்க, அப்பா ‘ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்து..’ என்று பாட, கிரிஜாவின் பார்வை இவன் மீது விழுந்து நிலைத்தது என்று கதை நிறைவுற்றது.

 

********

 

பங்கு

 

ஒரு விடுதியறை. ரியல் எஸ்டேட் செய்யும் துரைசாமியின் அண்ணன் பையன் மணவாளன், பச்சையப்பனைப் பார்க்க அந்த விடுதிக்குப் போகிறான். வீராம்பட்டணத்துல ஒரு வீட்டுக்கு (செல்வகுமார்-தனலெட்சுமி வீட்டுக்கு) அழைத்துக் கொண்டுப் போக வந்திருக்கிறான். செல்வகுமாரின் இரக்க குணம் பற்றி மணவாளன் ரேவதிக்குச் சொல்கிறான்.

 

பச்சையப்பன் தன் மனைவி ரேவதியுடனும், அண்ணன் (சொக்கலிங்கம்) மற்றும் அண்ணியுடனும் (சந்தனக்கிளியுடனும்) கிளம்புகிறார். அவர்களின் அம்மா பேசியதிலிருந்து கீழ்க்கண்டது புரிகிறது. பச்சையப்பன் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோரின் தங்கை தனலெட்சுமி என்றும், அவர் வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டார் என்றும், அதனால் பகையாகி விட்டார் என்றும், இப்பொழுது ஞானப்பிரகாசத்தின் (அவர்களது தந்தையின்) வீடு விற்கவேண்டி அவரது கையெழுத்து தேவையென்பதால் அவரது வீட்டிற்கு போக வேண்டியச் சூழலாக இருக்கிறது என்றும் மணவாளனுக்குப் புரிந்தது.

 

கார் வீராம்பட்டணத்துக்குப் புறப்படுகிறது. வீட்டை விற்க வேண்டியதால் தங்கச்சி தனலெட்சுமியின் கையெழுத்து தேவையாக இருக்கிறது என்பதும், கையெழுத்து வாங்கலாம் ஆனால் பணத்தில் பங்கு கிடையாது என்பதும் அவர்களின் பேச்சிலிருந்து புரிகிறது.

 

வீராம்பட்டணம் வந்துவிடுகிறது. செல்வகுமார் வீடு. தனலெட்சுமி வீட்டில் இல்லை. இரண்டு சிறுவர்கள் கதவைத் திறக்கின்றனர். செல்வகுமார் எல்லோரையும் வரவேற்கிறார். மணவாளன் வந்த விசயத்தைச் சொல்ல, செல்வகுமார் ‘என்ன விஷயமா இருந்தாலும் எங்கிட்ட தாராளமா சொல்லலாம்’ என்கிறார். பச்சையப்பன் வீடு விற்பது பற்றியும் கையெழுத்தின் தேவையைப் பற்றியும் தயங்கித் தயங்கிச் சொல்ல, செல்வகுமார், ‘என்னக்கின்னு சொல்லுங்க, தனலெட்சுமி வந்து போடும்’ என்றதும் நால்வர் முகத்திலும் நிம்மதி. தனலெட்சுமியின் அப்பா இறந்ததற்கு தங்களுக்குச் சொல்லவில்லை என்கிற ஆதங்கத்தை செல்வகுமார் வெளிப்படுத்த பச்சையப்பன், ‘சாரி, பழச மனசுல வச்சிக்காதீங்க’ என்றார்.

 

செல்வகுமார் ‘ஒரு டீ சாப்பிடலாமே’ எனச் சொல், வேண்டாம் என்று சொல்லிவிட்டு எல்லோரும் எழுந்தார்கள், சொக்கலிங்கம் தவிர. ‘போடுங்க, நான் குடிக்கிறேன்’ என அவர் சொல்ல செல்வகுமார் டீ எடுக்கப் போய்விட்டார். சொக்கலிங்கம் பிள்ளைகளை விசாரிக்கிறார். ஒருவன் பெயர் ஞானசுந்தரம் என்றும் இன்னொருவன் பெயர் பிரகாஷ்ராஜ் என்றும் சொல்கிறார்கள். ஞானபிரகாசத்தின் பெயரை பிரித்து இரண்டு பிள்ளைகளுக்கும் வைத்திருப்பதாகவும், தனலெட்சுமி அவர்களைப் பெயர் சொல்லி அழைக்காமல் ‘அப்பா, அப்பா’ என்று தான் அழைப்பார் என்றும் செல்வகுமார் சொல்கிறார். சொக்கலிங்கம் டீ குடித்து விட்டு பிள்ளைகளுக்கு இரண்டு இரண்டாயிரம் ரூபாயைக் கொடுக்க, அவர்கள் மறுக்க, மேசை மீது வைத்துவிட்டு வெளியே வருகிறார்.

 

ஏற்கனவே மற்றவர்கள் காரில் அமர்ந்து இருக்கின்றனர். பிள்ளைகளுக்கு சொக்கலிங்கமும் மணவாளனும் கையசைக்கின்றனர். ‘ஒரு வாய் தண்ணி கூட குடிக்கக் கூடாதுன்னு ஒங்க அம்மா சொன்னாங்க, ஒரு வேளை டீ குடிக்கலைன்னா உயிரா போயிடும்’னு சந்தனக்கிளிச் சொல்ல, ‘டிரைவர், மொதல்ல ஏசிய போடுப்பா’ என்றார் ரேவதி எனக் கதை நிறைவுறுகிறது.

 

*********

 

புற்று

 

தன் தாத்தா கொடுத்து, தூக்கி வந்த பானை உடைந்து, அதில் இருந்த மீன்களை எல்லாம் வாய்க்காலுக்குள் அள்ளிப் போட்ட கனவை, நான்கு பிள்ளைகளுக்கு அம்மாவான தையற்காரி அஞ்சலை பார்வதியிடம் சொன்னாள். கனவை நினைத்து பயப்படும் அஞ்சலைக்கு மன ஆறுதல் கொடுக்க பார்வதி, ‘வர்ற ஆடி மாசம் அம்மனுக்கு கூழ் ஊத்து அக்கா!’ என்று சொல்கிறாள்.

 

இறந்து போன அஞ்சலையின் கணவன் முத்துசாமி பற்றிய நினைவுகளில் அஞ்சலி மூழ்கிப் போகிறாள்.

 

இரண்டு தையற் கருவிகளை வைத்து தையற்கடை வைத்திருக்கிறான் முத்துசாமி. வாடிக்கையாளர்கள் குறைந்ததால், ஒரு தையற் கருவியை விற்க முடிவு செய்கிறான். கூட வேலை பார்த்தவனும் தனிக் கடை வைக்க ஆயத்தமாகிவிட்டான். அப்பொழுது அஞ்சலையின் அண்ணன் பொன்னையன் முத்துசாமியைப் பார்த்து, இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். அஞ்சலை வைத்து புளிக்கொழம்பு அவர்கள் அம்மா வைக்கும் கொழம்பு போலவே இருக்கிறது என்று பொன்னையன் பாராட்டுகிறான்.

 

ஒரு தையற் கருவியை, முத்துசாமி சொல்லும் விலையோடு கூட ஐந்நூறு ரூபா கொடுத்து வாங்கிக் கொள்வதாக பொன்னையன் சொல்கிறான். விழுப்புரத்துக்குப் போய், அப்துல் சாதிக் என்பவரிடம் ரெடிமெட் துணிகள் தைக்கும் வேலையைப் பெறுமாறும் பொன்னையன் சொல்கிறான். கிளம்ப தயாராகும் போது பள்ளியிலிருந்து நான்கு பிள்ளைகளும் வந்து விடுகிறார்கள். பொன்னையன் அவர்களை விசாரிக்கிறான்.

 

அடுத்த நான்கு நாட்களில், பொன்னையன் ஒரு தையற் கருவியை எடுத்துச் செல்ல, முத்துசாமி அந்தக் கடையைக் காலி செய்துவிட்டு, எல்லாப் பொருட்களையும் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து விடுகிறான். அப்துல் சாதிக் வழி நிரந்தர வருமானம் வர, அஞ்சலையும் துணி தைக்கக் கற்றுக் கொள்கிறாள்.

 

ஒரு நாள் முத்துசாமி வயிற்றுவலி எனப் படுத்தான். அஞ்சலையே அப்துல் சாதிக்குக்கு தைத்துக் கொடுத்தாள். அப்துல் சாதிக் விசாரித்த பொழுது, ‘அவருக்கு குடிக்கிற பழக்கம் இல்லன்னா, வேறு வியாதியா இருக்கும். எதுக்கும் பாண்டிச்சேரிப் போய் காட்டுங்க’ என்கிறார்.

 

எதேச்சையாக வந்த பொன்னையன் வேனில், முத்துசாமியை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி மருத்துவமனைக்குச் சென்றார்கள். பல சோதனைகளுக்குப் பிறகு வயிற்றில் புற்று இருப்பதாகச் சொன்னார்கள். முத்துசாமியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, எதிர் படுக்கை அம்மாவின் ஆதரவால், பிள்ளைகளைப் பார்க்க வீட்டிற்கு வந்தாள் அஞ்சலை. அதுவரை பக்கத்து வீட்டு பார்வதி பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

ஒரு வருஷம் ஓடி விட்டது. ஆஸ்பத்திரிக்கும் வீட்டிற்கும் அலைந்து அலைந்து அஞ்சலை உருக்குலைந்துப் போனாள். அதற்குள் பெரியபையன் நேசமணி தைக்கக் கற்றுக் கொண்டிருந்தான். கடைசியில் உயிரற்ற உடலாகத்தான் வந்து சேர்ந்தான் முத்துசாமி. பொன்னையன் தான் காரிய செலவு எல்லாம் செய்தான். காரியம் மடிந்து சில நாட்களில் அப்துல் சாதிக் கடைக்கு அஞ்சலையும் நேசமணியும் போனார்கள். துணி தைக்க துணிகளை வாங்கிக் கொண்டு போகும் போது, அண்ணன் பொன்னையனைப் பார்த்தார்கள்.

 

இனி நேசமணி அடுத்த வருடம் தான் பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டும் என்றும் அதனால் ஒத்தாசைக்காக அவனை அழைத்து வந்ததாகவும் சொல்கிறாள். நேசமணியை அவனுக்கு உதவியாக அனுப்புமாறு பொன்னையன் கேட்கிறான். கூடவே, அதுவரை அஞ்சலைக்குச் செய்து வந்த பணஉதவியை, திருப்பி பொன்னையனின் மனைவி கேட்பதாகவும் சொல்கிறான். அஞ்சலைக்கு நாக்கு உலர்ந்து விட்டது. ‘திடீர்னு கேட்டா பணத்த எப்படிண்ண பொரட்டமுடியும்?’ என்று கேட்க, ‘ஒன்ன யாரு பணத்த பொரட்ட சொன்னா, ஒனக்கும் எனக்குமா ஆளுக்கொரு துண்டு நெலம் எழுதி வச்சாரே அப்பா, அதை எம்பேர்ல பதிவு செய்ய ஒரு கையெழுத்து போட்டா போதும். ஒன் அண்ணியோட ஒரே புடுங்கலா இருக்கு’ என்றான் பொன்னையன்.

 

அடுத்த வாரம் நிலப் பதிவு முடிந்தது. நேசமணியையும் அழைத்துச் சென்று விட்டான். அடுத்த ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கும் சமயத்தில் நேசமணியை அனுப்பவில்லை. கடிதம் எழுதியும், போன் செய்தும் பொன்னையன் விடவில்லை. ஒரு தீபாவளிக்கு நேசமணி வந்த போது கறுத்து ஒல்லியாக இருந்தான். அஞ்சலை கேட்ட எந்தக் கேள்விக்கும் மழுப்பலாக பதில் கூறினான். தன் தம்பிகளை நன்றாகப் படிக்கவேண்டும் என அறிவுறுத்தினான். பிறகு பொங்கலுக்கும் வரவில்லை. அஞ்சலைக்கு பொன்னையனிடம் பேசப் பிடிக்கவில்லை.

 

பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வந்தாள். இன்று தான் அந்த பானை உடைந்து மீன்கள் வாய்க்காலில் விழுந்த கனவு வந்த நாள். சாப்பிடத் தட்டில் சோறு போட்டு, நாலு வாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வாசலில் நேசமணி! அவனுக்கும் ஒரு தட்டில் சோறு போட்டாள். சாப்பிட்டு விட்டு கட்டுப் பணத்தை எடுத்து அம்மா கையில் கொடுத்தான். ‘இது நானா சம்பாதிச்ச பணம். நேர்மையா உழைச்சி சம்பாதிச்ச பணம். தம்பிங்க மேல்படிப்புக்கு இத சேத்து வை’ என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

 

அஞ்சலையின் பார்வை அவள் கணவன் புகைப்படத்தில் பதிந்தது என்று கதை நிறைவுற்றது.

 

**********

 

வள்ளல்

 

பன்னீர், தங்கமணி இருவரும் மாமன் மச்சான்கள். இரயில் வரும் தண்டவாளம் அருகே நின்றுகொண்டு ஒருவரையொருவர் கேலி பேசிக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். பன்னீர் படிப்பை நிறுத்திவிட்டு மாடு மேய்க்கிற பையன். தங்கமணி, படித்துக் கொண்டு விடுமுறையில் மாடு மேய்க்கிறப் பையன். பன்னீர் எப்பொழுதும் தங்கமணியை மட்டம் தட்டியே பேசுவான். ரங்கசாமி இன்னொரு மாடு மேய்க்கிற பையன். ‘எம்ஜிஆரைப் பார்க்கலாம்’ என்று யாரோ சொன்னதில், ரயிலில் வருவார்கள் என தங்கமணி காத்திருக்க, ‘சினிமாக்காரங்க ஏமாத்துவாங்க’ என்று பன்னீர் சொல்ல வாக்குவாதம்.

 

மீனாட்சி ஆயா, வேலமரத்தடியில் பலகாரம் விற்கிறாள். தங்கமணி, பன்னீர் மற்றும் ரங்கசாமி மூவரும் ஆயாவிடம் அரிசி உருண்டை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். ‘அந்த காலத்துல பாலையாவை நா பாத்திருக்கேன்’ என்று ஆயா சொல்கிறாள். பன்னீர் அவளையும் கேலி செய்கிறான். தங்கமணிக்குக் கோபம் வருகிறது. பாலையா நடித்த பல சினிமாக்களின் பெயர்களையும், கதாபாத்திரங்களையும் வரிசையாக ஆயா எடுத்துச் சொல்ல பன்னீர் மன்னிப்புக் கேட்கிறான். ‘சரி! பாலையாவ எங்க பாத்த?’ என்ற கேள்விக்கு, ‘பாலையா அங்க ஒரு படம் எடுக்க வந்தப்ப, என்னிடம் பேசி குடுத்த நூறு ரூபாவுல தான் வீடு கூரைய மாத்துனேன்’ என்றாள் ஆயா.

 

அதுக்கு ரங்கசாமி, கூரை மாத்துனதுக்குப் பதிலா ஒரு கறவு மாடு வாங்கியிருந்தா இப்போ ஒரு மாட்டுப் பண்ணையே இருக்கும் என்றும், ரெட்டியாரு மாடு, படையாச்சி மாடுகளோட ஆயாவூட்டு மாட்டையும் மேய்ச்சியிருக்கலாம் என்று யோசனைச் சொன்னான். இடையிடேயை சிலர் ஆயாவிடம் வந்து தோசையும் பலகாரமும் வாங்கித் தின்கிறார்கள். மாடுகள் பள்ளத்தில் இறங்கப் போக, பன்னீர், தங்கமணி, ரங்கசாமி மூவரும் ஒடிப்போய் தடுத்து நிறுத்துகிறார்கள்.

 

‘எம்ஜிஆர் வந்தா என்னடா கேப்பீங்க’ என்ற ஆயா கேள்விக்கு ‘குடுக்கறத வாங்கிக்கனும்’ என்று ரங்கசாமியும் ‘அம்மா ஆஸ்பத்திரி செலவுக்கு ஐநூறு ரூபா’ என்று பன்னீரும் ‘படிக்க வைக்க கேப்பேன்’ என தங்கமணியும் சொல்ல ஆயா இலவசமாக அவர்களுக்கு அரிசி உருண்டைகளை எடுத்துக் கொடுக்கிறாள். எம்ஜிஆர் மிகப்பெரிய கொடை வள்ளல், வாரி வழங்குவார் என்று அவர்களுக்குத் தெரிந்த தரவுகளை எல்லாம் சொல்கிறார்கள். ‘எம்ஜிஆர் நூறு ரூபா கொடுத்தா என்ன செய்வீங்க?’ என்ற ஆயாவின் கேள்விக்கு, ‘பிரியாணி, சினிமா’ என ரங்கசாமியும் ‘அம்மாவிடம் குடுத்துவிடுவேன்’ என பன்னீரும், ‘பள்ளிகூடம் போக சொக்கா வாங்குவேன்’ என தங்கமணியும் சொன்னார்கள்.

 

பன்னீர் மறுபடி தங்கமணியிடம் வம்பிழுக்க, இருவருக்கும் சண்டை மூள, ரங்கசாமி விலக்கிவிடுகிறான். தங்கமணி மாடுகள் பக்கம் போய் ஒரு செனை மாட்டிற்கு தண்ணீர் கொடுத்துவிட்டு திரும்புகிறான். அப்பொழுது மூன்று கார்கள் கிராஸிங் பக்கம் வந்து நின்றன. அதில் ஒன்று எம்ஜிஆர் கார். அவனுக்கு எம்ஜிஆர் ஒரு பையில் சில ஆப்பிள்களை எடுத்துக் கொடுத்து, ‘நல்லா படிக்கனும்’ என்றதும் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க கிராஸிங் சங்கிலிகளை அவன் எடுத்து விட, கார்கள் பறந்தன.

 

‘எம்ஜியாரு போறாருடா டேய்….’ என தங்கமணி கூச்சல் எழுப்பிக்கொண்டே ஓடி வந்தான். முதலில் மற்றவர்கள் நம்பவில்லை. பிறகு தங்கமணி நடந்ததைச் சொன்னான். பையிலிருந்த ஒரு ஆப்பிளை ரங்கசாமிக்குக் கொடுத்தான். இன்னொன்றை ஆயாவுக்குக் கொடுத்தான். மூன்றாவதை, ‘பன்னீர், ஒங்க அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லையில்ல, அவுங்களுக்குக் குடு’ என்று கொடுத்தான். இன்னொன்று பாக்கி இருந்தது. ‘இத செனை மாட்டுக்குக்கு குடுக்கலாம்’ என்று சொல்லிக்கொண்டு தங்கமணி ஓட, பன்னீரும் ரங்கசாமியும் பின்னால் ஒடுகிறார்கள் என்று கதை நிறைவுறுகிறது.

 

*******

 

வெள்ளைக்காரன்

 

ரயிலில் போய்க்கொண்டிருக்கும் போது ஜபல்பூரில் அவன் இறங்கிக் கொள்கிறான். ஓர் ஆலமரம். ரிக் ஷாக்காரர்கள். இளநீர் விற்பவன். வாய்க்கால். இவைகளைத் தாண்டி ஒரு சாப்பிடும் இடத்தில் நுழைகிறான். ஓர் அம்மா சுடச்சுட சப்பாத்தியும் உருளைக்கிழங்கு கூட்டையும் வைக்க அவனுக்கு அம்சவல்லி அம்மா நினைவுக்கு வந்தார். அம்சவல்லி அம்மா அவனை திட்டுகிறதெல்லாம் நினைவுக்கு வந்தது. ஒரு ஏழெட்டு வயது சிறுவன் தெருவோரத்தில் பசியோடு நிற்க, அவனுக்கும் சப்பாத்தி வாங்கிக்கொடுக்கிறான்.

 

பழைய நினைவுகளில் மூழ்கிப்போகிறான். இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு காலனியாதிக்கத் துரைகள் அவர் அவர் நாடுகளுக்குப் போன பிறகு, அவர்களுக்கு வேலை செய்து வந்த வேலையாட்கள் எங்கே போவார்கள்? பல இடங்களில் சுற்றித் திரிந்துவிட்டு, ஒரு பண்ணைக்கு வந்த போது அம்மா மயங்கி விழுந்து விட்டாள். அம்சவல்லி அம்மாவும், பண்ணையார் பெரிய கவுண்டரும் வந்து தண்ணீர் தெளித்து, சோறு கொடுத்து, வேலையும் கொடுக்கிறார்கள்.

 

சின்ன கவுண்டருக்கு சிங்காரத்தோப்பில் ஒரு தாசி வீட்டிற்குப் போகும் பழக்கம் உண்டு. இவன் கொஞ்சம் பெரியவனானதும் வண்டி ஓட்டக்கற்றுக் கொண்டான். சின்னக்கவுண்டர் தாசி வீட்டிற்குப் போக இவனை வண்டி ஓட்டிப் போகச் சொல்லி கட்டாயப்படுத்தினார். இவனும் வேறு வழியின்றி வண்டி ஓட்டிப் போவான். அப்பொழுது தான் அம்சவல்லி அம்மா திட்டுவார். பண்ணையில் பருத்தி விளைய வைப்பார்கள். ஒருநாள் பருத்தியை விலைக்குப் போட வண்டியில் போனார்கள் இவனும் சின்னக் கவுண்டரும். பணம் வந்து சேர சற்று நேரம் ஆகும் என்பதால், சின்னக் கவுண்டர் பணத்தை வாங்கிக் கொண்டு அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, அதற்குள் தாசி வீட்டிற்குத் தானே வண்டியை எடுத்துக் கொண்டுப் போனார். வரவேயில்லை.

 

பருத்தி விற்ற காசை எடுத்துக் கொண்டு, சின்னக் கவுண்டர் இல்லாமல் பண்ணைக்குப் போக பயந்து, ரயில் ஏறியவன் தான் இப்பொழுது ஜபல்பூரில் இருக்கிறான்.

 

வருடங்கள் பல உருண்டன. அவனோடு இருந்த சிறுவன் பெரியவனாகி, திருமணமாகி, பிள்ளைகள் பெற்றுவிட்டான். ஒரு நாள் இவன் கோயிலுக்குப் போற வழியில் ஒருவன் பஞ்சுத்திரிகளை சுருட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். எதற்காக இப்படி திரிக்கிறான் என்று கேட்க, ‘பொருள் சம்பாரிக்கிறமோ இல்லையோ, புண்ணியம் சம்பாரிக்கனும்ல’ என்று சொன்னார்கள்.

 

இவனும் பஞ்சுமூட்டை வாங்கி வந்து திரித்தான். உடலிலிருந்து உயிர் போன போது அவன் கையில் ஒரு திரி இருந்தது என்று கதை நிறைவாகிறது.

 

************

 

கங்கைக்கரைத் தோட்டம்

 

பச்சையம்மாவின் பிள்ளைகள் இருவர். பச்சையம்மா கீரைப் போட்டு, கட்டுக்கட்டாகக் கட்ட, பையன்கள் இருவரும் கிராமத்தில் பல வீடுகளுக்கும் சென்று விற்று வருவர். அங்கே தோட்டத்து வீடு என்றொரு வீடு இருக்கிறது. அதன் சொந்தக்காரர் பாண்டிச்சேரி போய்விட, அந்த வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அப்பொழுது தான் ஒரு குடும்பம் குடி வந்திருந்தது. அந்த வீட்டு அம்மா பச்சையம்மாவை கோயிலில் சந்தித்து கீரைக் கேட்டதால், இன்று கீரைகளை எடுத்துக் கொண்டு இருவரும் செல்ல, அங்கே ஒருவர் சிலருக்கு வீணைக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஒரு பெண் ‘கங்கைக்கரைத் தோட்டம்’ பாடலைப் பாடுகிறார். அதில் இவர்கள் இருவரும் கிறங்கிப் போகிறார்கள்.

 

கீரையைக் கொடுத்து காசு வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய போது, அந்தப் பாடல் இருவருக்குமே மனப்பாடம் ஆகிவிடுகிறது. எப்படியாவது ஒரு வீணை வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது எவ்வளவு விலை என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ‘ஆயிரம் ரூபா கூட இருக்கும்’ என்று பேசிக் கொள்கிறார்கள்.

 

ஒரு நாள் பரணியில் ஏறிய போது ஒரு மரக்கட்டையைப் பார்க்க, அதைக் கழுவி ஆணி அடித்து, கம்பிகளைக் கட்டி, புட்டுகூடையில் துணியை வைத்துக் கட்டி ஒரு வீணைபோல கொண்டு வந்துவிடுகிறார்கள். தம்பி அதன் முன்னே உட்கார்ந்து கங்கைக் கரைத் தோட்டம் பாட்டைப் பாடுகிறான். ஆணிகளை பிடுங்கியும் அடித்தும், மாற்றி மாற்றி செய்தும் வீணையிலிருந்து ‘நங்’ கென்ற மோசமான சத்தமே வந்துக் கொண்டிருந்தது. அம்மாவிடமும் தம்பி பாடிக் காண்பிக்கிறான். சரி போய் படிங்க என்று சொல்லி விரட்டி விடுகிறாள்.

 

இரவு. அம்மாவிடம், ‘வீணை வாங்கலமா அம்மா?’ எனக் கேட்க, அவள் மறுக்க, கேணி வெட்டி விட்டு அசதியாக வந்த அப்பாவிடம் கேட்கத் துணியாதவர்களாய் இருவரும் இருக்க, ‘வீட்டு நெலம தெரியாம ஒலராத…வீணை கீணை’ன்னு’ அப்பா சத்தம் போடும் போதுதான் தெரிந்தது அம்மா கேட்டிருக்கக் கூடுமென்று. சற்று நேரம் கழித்து எல்லோரும் அமைதியாக வீட்டிற்கு முன் நிலா வெளி்ச்சத்தில் உட்கார்ந்திருக்கும் போது, அப்பாவின் தங்கை (பையன்களுக்கு அத்தை) வீட்டிற்கு வருகிறார். அப்பா முனகிக் கொண்டே படலைத் திறந்துக் கொண்டு வெளியே போக, அத்தை சாப்பாடு கேட்டதால் அம்மா சாப்பாடு கொடுக்கிறார். சாப்பிட்டு விட்டு அத்தை போய்விடுகிறார்.

 

தாத்தா காலத்திலேயே, அத்தைக்குத் திருமணம், மாமா குடிகாரர். ஒரு சாலை விபத்தில் இறந்து போகிறார். ஊருக்கு பாரதக் கூத்து நடத்த வந்தவரோடு பழகி, அவரோடயே அத்தை கிளம்பி போய்விடுகிறாள். அதுவும் நிலைக்கவில்லை. ஊருக்குத் திரும்ப வந்த அத்தைக்கு கோவிலருகே ஒரு குடிசைக் கட்டி குடி வைத்தார் அப்பா.

 

வேறு ஊருக்குப் போயிருந்த அம்மா, பத்து ரூபாய்க்கு ஒரு விளையாட்டு சாமான் வாங்கி வருகிறார். யாழ் போன்ற அந்தக் கருவியை மீட்டினாலும் சத்தம் வந்தது. அப்பா அதைப் பார்த்தும் கோபப்பட்டார். விளையாடப் போவதையெல்லாம் நிறுத்திவிட்டு அந்தக் கருவியை மீட்டுவதிலேயே காலம் கழிக்கிறார்கள். வீணை மீட்டச் சொல்லிக்கொடுக்கும் தாத்தாவிடமே, கீரைக்கு காசு கொடுக்காமல் அதற்குப் பதிலாக வீணை மீட்டக் கற்றுக்கொடுக்கச் சொல்லலாமா? என்று கூட தம்பி ஒரு முறைக் கேட்டான்.

 

ஒரு நாள் அத்தை வீட்டிற்கு வந்தாள். அம்மா ஒரு துக்கத்திற்காக ஊருக்குப் போயிருந்தாள். பசி எனக் கேட்ட அத்தைக்கு கொடுக்க ஒன்றும் இல்லையாதலால், கிழங்கு வாங்க தம்பி ஓடிவிட்டான். அத்தை அந்தக் கருவியைப் பார்த்து, ‘ என்ன இது?’ என்று கேட்டாள். பெரியவன் எல்லாக் கதையையும் சொன்னான். அதற்குள் தம்பி கிழங்கு வாங்கி வர எல்லோரும் சாப்பிடுகிறார்கள். தம்பி பாட, அத்தை அந்தக் கருவியை அழகாக மீட்ட, இவர்கள், ‘ஒனக்கு எப்படி தெரியும்?’ என்று கேட்க, ‘அந்தக் கூத்தாடி கம்னாட்டியோட சுத்துனதுக்கு, இது தாண்டா மிச்சம்’ என்று சொல்லிவிட்டு படலைத் திறந்து சென்றாள் என்று கதை நிறைவுறுகிறது.

 

*********

 

கலைமாமணி

 

இவனும் தம்பியும் வாய்ப்பாடு படித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது தமுக்கு அடிக்கப்படுகிறது. ராமலிங்க ஐயாவோட அபிமன்யு வதம் கூத்து நடைபெறப் போவதாக அறிவிப்பு. இவனோட அப்பா ராமலிங்க ஐயாவோட பரம ரசிகர். ஐயாவைப் பற்றி அப்பா எழுதிய கட்டுரை பத்திரிக்கையில் வந்தது. அதற்காக ராமலிங்க ஐயா வீட்டுக்கே வந்து நன்றி சொன்னார்.

 

அரசாங்கத்திடமிருந்து பல கலைஞர்களுக்கு கலைமாமணி விருது கிடைக்கிறது என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், ராமலிங்க ஐயாவுக்கும் கலைமாமணி விருது கிடைத்தால் எப்படி இருக்கும் என்று அப்பா யோசிக்க ஆரம்பித்து விட்டார். அப்பாவின் மச்சான் (மாமா) ஒருவர் அரசியல்வாதி. அவரை எதேச்சையாக விழுப்புரம் தொடர்வண்டி நிலையத்தில் பார்த்த பொழுது கலைமாமணி விருது பற்றிக் கேட்க, அடுத்த வாரம் அவரை வந்து பார்க்கச் சொன்னார் மாமா.

 

அடுத்த வாரம். இரண்டு சக்கர வண்டியில் விழுப்புரத்துக்கு கிளம்பினார்கள். மாமா இவர்களை அழைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் வீட்டிற்குச் சென்றார். பெரிய வீடு. அப்பா செய்தியைச் சொல்லிவிட்டு கோப்பையும் கொடுத்தார். நிச்சயமாகச் செய்கிறேன் என்று சட்டமன்ற உறுப்பினர் வாக்கு கொடுத்தார். அப்பா மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அம்மா நம்பவில்லை.

 

பத்து நாட்கள் கழித்து, விருது பெற்றவர்களின் பெயர்களை அறிவித்த பொழுது ராமலிங்க ஐயாவின் பெயர் இல்லை. அப்பா அதிர்ந்து போய்விட்டார். அடுத்த வருடம் கோப்பை நாலைந்து பிரதிகள் எடுத்துக் கொண்டு அரசாங்க அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். அடுத்த வருடமும், அதற்கு அடுத்த வருடமும் கூட அவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. அப்பா கலங்கிப் போய் வீட்டில் முடங்கி விட்டார். ராமலிங்க ஐயாவே வந்து அரசாங்க விருதுகளை விட ரசிகர்களின் ஆதரவும் கைத்தட்டுமே பெரிது என்று சொல்லி விளக்க, மறுபடி அப்பா ஒரு காணொளி எடுக்கும் ஆளை அழைத்து வந்து ராமலிங்கம் ஐயாவின் நிகழ்ச்சிகளை காணொளி எடுத்தார்.

 

காணொளிகளை வெட்டி திருத்தி ஒரு குறும்படமாக எடுத்துக் கொண்டு, கோப்பையும் சேர்த்து நேரடியாக அதிகாரியிடம் கொடுத்தும் அந்த வருடத்திலும் அவர் பெயர் வரவில்லை. அப்பா மனம் தளராமல், ஐயாவைப் பற்றி எழுதிய கட்டுரையெல்லாம் திரட்டி ஒரு நூலாக அச்சடித்து வெளியிட்டார். அப்பொழுது ‘அபிமன்யு வதம்’ என்றால் என்ன என்று தம்பி கேட்க, ஒருவனை நிறையப் பேர் சுத்தி நின்னு அடிச்சிக் கொல்றது தான் வதம் என்பது. சக்கரவியூகத்துக்குள் போன அபிமன்யுவுக்கு அதிலிருந்து வெளிவரத் தெரியாமல் போனதால் எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகி இறந்து போகிறான் என்று அப்பா விளக்கினார்.

 

அவர்கள் ஊரில் அபிமன்யு வதம் கூத்து தொடங்கியது. அன்றைக்கு இரவு திரௌபதி சபதம். அடுத்த நாள் பத்திரிக்கையில் ராமலிங்கம் ஐயாவுக்கு கலைமாமணி விருது கிடைத்த செய்தி வந்திருந்தது. அதை எடுத்துக் கொண்டு அப்பாவும் பிள்ளைகளும் அவரிடம் சொல்ல ஓடினார்கள். உடனே சென்னை சென்று விருதைப் பெறவேண்டும் என்றும் இன்று இரவே சென்னைக்குப் போகவேண்டும் என்று அப்பா சொன்னார். ‘அது எப்படி முடியும் இரண்டு நாள் தான் கூத்து முடிஞ்சிருக்கு. இன்னும் பத்து நாள் கூத்து இருக்கே’ என்றார் ஐயா.

 

‘பத்து வருஷத்துக்கு முன்னாடி, மழை வேண்டி, பன்னென்டு நாள் கூத்துக்கு கை நீட்டி காசு வாங்கி, கூத்து முடிஞ்ச மறுநாள் மழை பேஞ்சுது. அன்னையிலேர்ந்து ஒவ்வொரு வருடமும் நான் தான் வரணும்னு சொன்னாங்க. நானும் வாக்கு குடுத்துட்டேன். இது வரைக்கும் மீறினதில்ல. பேரும் கெடக்கூடாது. தொழிலும் கெடக்கூடாது. அதுதான் பெரிய விரு. இந்த மெடலு, பட்டம் எல்லாம் எப்பவேணா வாங்கிக்கலாம். நீ வேணா என் சார்பா போய் வாங்கிக்கயேன்’ என்றார். அப்பா மறுத்துவிட்டு வீட்டிற்கு வந்தார் என்று கதை நிறைவுறுகிறது.

 

**********

சிவப்புக்கல் மோதிரம்

 

கதிர் தமிழ் வீட்டிற்குப் போகிறார். தமிழின் மனைவி கல்யாணி வரவேற்கிறார். செல்வமும் நிர்மலாவும் தமிழ்-கல்யாணி தம்பதியரின் பிள்ளைகள். தங்கள் பள்ளிப் பருவத்தில் தமிழுக்கு நிச்சயம் செய்த கலைச்செல்வி இறந்துவிட்டதாக ஒரு போஸ்டர் பார்த்ததாக கதிர் சொல்கிறார். தமிழ் இடிந்து போகிறார்.

 

பின் கதை. தமிழ் நன்கு பாடுவான். அதனால் ஒரு இசைக்குழுவை அமைத்து ஊர் ஊராக கச்சேரி செய்கிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகு, அதன் உறுப்பினர்கள் வேறு வேறு வேலைக் கிடைத்துப் போக, இசைக் குழு இல்லாமல் போகிறது.  தமிழின் அப்பாவும் கலைச்செல்வியின் அப்பாவும் ஒரே அரசியல் கட்சியில் இருக்கிறார்கள். தமிழுக்கும் கலைச்செல்விக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணத்தேதிக்குள் கட்சி இரண்டாக உடைந்து விடுகிறது. அதனால் கல்யாணம் நின்று போய் விடுகிறது. அதற்குப் பிறகு தமிழ் திருமணமே செய்யாமல் இருந்தான்.

 

ஒரு தடவை, கடற்கரையில், கதிரை கலைச்செல்வி சந்தித்து, பெரியவங்க கட்சி பார்க்கலாம், தமிழ் என்னுட்ட வந்து நீ தான் வேணும்னு சொல்லியிருந்தா நா வந்திருப்பேன். வாழ்ந்தா அவரோடதான் வாழனும்னு இருந்தேன், அவர் போட்ட மோதிரம்ங்றதுனால தான், நான் அத போட்டிருக்கேன் என்று சொல்லி அழுகிறாள். மறுபடி சில வருடங்களுக்குப் பிறகு, கதிர் தன் பிள்ளைப் படிக்கும் பள்ளிக்குச் சென்றிருந்த போது, கலைச்செல்வி தன் மகளுடன் வந்திருந்தாள். அப்பொழுதும் அந்த சிவப்புக்கல் மோதிரம் அவள் கையில் இருந்தது . கலைச்செல்வி தமிழைப் பற்றி விசாரித்தாள். தமிழுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று மட்டும் கதிர் சொன்னான். உங்க நண்பரை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்க என்று கரிசனையுடன் சொன்னாள். மறுபடி சில வருடங்களுக்குப் பிறகு அதே பள்ளியில் ஆண்டு விழாவில் இரண்டாவது மகளோடும், மற்றொரு தடவை லெவல் கிராஸிங்கிலும் பார்த்த பொழுது தமிழைப் பற்றிக் கேட்கவேயில்லை.

 

கலைச்செல்வியைக் கடற்கரையில் சந்தித்தையும், பள்ளிக்கூடத்தில் இரண்டு முறை சந்தித்ததையும், பிறகு லெவல்கிராஸிங்கில் சந்தித்தையும், கதிரி தமிழிடம் சொல்லவில்லை. தமிழின் அப்பா கதிரிடம் தன் சோகத்தைச் சொல்லி அழ, பிறகு தமிழுக்கு வேறு கல்யாணம். இரண்டு பிள்ளைகள்.

 

இன்று கலைச்செல்வியின் சாவுக்கு மாலையைக் கட்டிக் கொண்டு கதிரும் தமிழும் கிளம்புகிறார்கள். வழியில் சாக்கடையில் துருவி பலப் பொருட்களை எடுத்து வெளியே போடுகிறார்கள். அதில் ஒரு மோதிரம் இருக்கிறது. ஒரு கோயிலைக் கடந்து போகிறார்கள். அந்தக் கோயிலில் தான் தன் நிச்சயதார்த்தத்திற்கு போட்ட ஒரு சிவப்புக் கல் மோதிரத்தை உண்டியலில் போட்டிருந்தான் தமிழ். வழியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் இருந்த கலைச்செல்வியின் உருவத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான் தமிழ். சாவு மேளம் கேட்கிறது. அந்தத் தெரு முனையில் வந்ததும், ‘கதிர்! வேணாம் வா. திரும்பிவிடலாம்’ என்று சொல்லி கையிலிருந்த மாலையை எடுத்து போஸ்டர் முன் வைத்துவிட்டு திரும்புவதாக கதை நிறைவறுகிறது.

 

**********

 

குழந்தை


தயாளன் ஒரு் போலீஸ்காரர். ஒரு குழந்தையை யாரோ கோவிலுக்கருகே போட்டுவிட்டு போய்விடுகிறார்கள். கடைக்காரரிடம் தன் செல்பேசியில் உள்ள அந்தக் குழந்தையின் படத்தைக் காண்பித்துக் கேட்கிறார். தெரியாது என்கிறார். கம்பு புடைத்துக் கொண்டிருக்கும் பெண்களிடம் கேட்கிறார். தெரியாது என்கிறார்கள். தயாளன் மனைவி உங்களுக்கு ஏன் வேலையத்த வேலை என சலித்துக்கொள்கிறாள். குழந்தையின் கழுத்தில் இருந்த நகைக்காக, தாய் அசந்து போயிருந்த போது, இப்படி செய்துவிட்டார்களோ? விடுமுறை நாளிலும் தேடுகிறான்.

 

குறி சொல்லும் பொன்னம்மாவிடம் கேட்டால், ‘அவ எல்லைய தாண்டிப் போயிட்டா. முயற்சிய விட்டுடு” என்றார். குழந்தையை மகாலட்சுமி இல்லத்தில் ஒப்படைக்கப்போனதை நினைத்துக் கொள்கிறான்.

 

ஒரு வாரம் கழித்து, தயாளனோடு வேலை செய்யும் கந்தசாமி, அவரது மாப்பிள்ளை மூலமாக டிஜிட்டல் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் செய்தியைப் போட்டதில் ஒருவருக்கு அந்தக் குழந்தை பற்றித் தெரிய வந்தது. அவரைப் பார்க்கச் செல்கிறார்கள். அவர் சொன்னார். இந்தக் குழந்தையின் அம்மா தன் வீட்டில் வாடகைக்கு இருந்ததாகவும், அவர் வாடகையை கொடுக்கவில்லையென்றும் சொல்கிறார். அவரது கணவர் பிள்ளையைக் கொடுத்துவிட்டு வேறு ஒரு பெண்ணோடு போய்விட்டாராம். மாட்டுத்தரகர் ஒருத்தர் அந்த அம்மாவுக்குச் சொந்தம் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்க்கப் போகிறார். நல்லவன்னு நம்பி ஒருத்தனைக்கட்டிகிட்டு வந்தாள் என்றும், அவன் குழந்தையை விட்டுவிட்டு போய்விட்டான் என்றும், அதற்குப் பிறகு பம்பாயிலிருந்து ஒருத்தன், பிள்ளை இல்லாமல் வந்தால் கட்டிக்குவேன் என்று சொன்னதால், பிள்ளையை கோயிலிலில் விட்டுவிட்டு அவனோடு ரயில் ஏற்றி விட்டதாகவும் சொல்கிறார்.

 

தாயின் கதையைத் தெரிந்துக்கொண்டு, பிள்ளை எங்கிருக்கிறது என்று சொல்லாமல் திரும்பி வந்தார் தயாளன்.

 

***********

 

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page