வெயிலோடு போய்…(முதல் சிறுகதை வரிசை) - ச. தமிழ்ச்செல்வன் காலச்சுவடு - வாசிப்பு அனுபவம் உயிர்மெய்யார் மெல்பர்ன் 06.06.2026
- உயிர்மெய்யார்

- Jun 6
- 20 min read

முன்னோட்டம்
ச. தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்…’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பதினான்கு கதைகளில் பெரும்பாலானவை ஆழமான சோகத்தின் நிழலில் நின்று, துயரத்தின் அடித்தளத்தைத் தொட்டு நிற்கின்றன. அவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் விளிம்பு நிலையில் தள்ளப்பட்ட எளிய தொழிலாளர்களாகவும், சமூகத்தால் ஒடுக்கப்பட்ட பெண்களாகவும், வறுமையின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் ஏழைகளாகவும் வாழ்கின்றனர். அவர்களின் ஏக்கங்களையும், மெல்லிய கனவுகளையும் சிதைத்து, நிராசையின் இருண்ட படுகுழியில் தள்ளி, வேதனையின் சங்கிலியை இழுத்தபடியே மூச்சு மட்டும் விடச் செய்கிறது, அவர்களைச் சூழ்ந்திருக்கும் குடும்பம், சமூகம் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு.
குடும்பமோ, பணியிடமோ, சொந்த ஊரோ — எதுவுமே அவர்களுக்கு வாழ்வின் வளமைக்கோ, சிரிப்பின் ஒலிக்கோ, கும்மாளத்தின் மகிழ்ச்சிக்கோ இடமளிக்காத ‘அசோக வனச்’ சிறைகளாக மாறிப்போவதே இந்தத் தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் ஓர் அவலமயமான தொடர் இழையாகப் பின்னப்படுகிறது. வெயிலின் உக்கிரம் போலவே அவர்களின் வாழ்க்கை பிசுபிசுக்கிறது. எதார்த்தத்தின் கூர்மையான வலிகளும், எதிர்பாராத இழப்புகளும் நிறைந்த இந்தக் கதைகளைப் படித்து முடித்த பிறகு, “இதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும்?” என்ற மன உளைச்சலும், நீடித்த மெல்லிய வேதனையும் வாசகனின் மனதில் நெடுநேரம் தங்கிவிடுகின்றன.
இருக்கிற பல கதை வகைமைகளில், இவரது கதைகள் யதார்த்தக் கதை வகைமையாக பரிமளிக்கின்றன.
வாசகரின் வாசிப்பு அனுபவத்தை, அவர் எழுத்துகளில் இட முயற்சிப்பது, வாய் பேச இயலாதவர் தன் கனவை எடுத்துக் கூற முயல்வது போல் தான். இருந்தாலும் கட்டுரை என வரும்போது அதற்கென்று ஒரு கட்டமைப்புத் தேவை. இந்தக் கட்டுரை ஒவ்வொரு கதையாக எடுத்துக்கொண்டு, கதைச் சுருக்கதைச் சொல்லும் போதே, முக்கியமான கதைமாந்தரின் ஆசை, அது நிறைவேற்றப்படாமல் குறுக்கே இருக்கும் முட்டுக்கட்டை, அதனால் விளைகிற நிராசை, அதற்குப் பிறகான அவர்களின் விரக்தியான நிலைமை என்ற நான்கு நிலைகளில், வாசிப்பு அனுபவம் பின்னப்பட்டிருக்கிறது. அதனூடேயே வாசகனின் எண்ணத்தில் நிழலாடும் சொந்த வாழ்க்கை அனுபவங்களும், சமூக, பொருளாதார, அரசியல் நிலைமை பற்றிய சிந்தனைகளும், மெல்பர்ன் வாசக வட்ட நண்பர்களின் கருத்துக்களும் அங்காங்கே தூவப்பட்டிருக்கின்றன.
ஆசை - முட்டுக்கட்டை - நிராசை - விரக்தி
1. பாவனைகள்
ஆசை - குதூகூலத்துடன் வாழ
தெருவில் மிக்சர் வண்டி வருகிறது. இவனும் மற்ற சிறுவர்களும் ஓடிப்போய் அதனைத் தெருக்கோடியிலேயே வரவேற்று, மறு கோடிவரை சென்று வழியனுப்புவது வழக்கம். ஜிலேபி, லட்டு, அல்வா போன்ற பண்டங்கள், கண்ணாடிப் பெட்டிக்குள், ஒரு லைட்டைப் போட்டு, உள்ளே இருக்கின்றன. பிள்ளைகள் அதனை வேடிக்கைப் பார்க்கின்றனர். கண்ணாடிக்குள் இருக்கும் பண்டங்களை ஆசையோடு பார்க்கிறார்கள்.
(தஞ்சாவூரில் இருக்கும் போது, அறுபதுகளின் பின்னாட்களில், எங்கள் தெருவில் ரொட்டி மாமா ஒருவர் வருவார். சைக்கிளின் பின்பகுதியில் ஒரு பெட்டி இருக்கும். கதையில் சொன்ன மாதிரியே கண்ணாடி போட்டிருக்கும். அதனூடே போலி, ரஸ்க், பிஸ்கட், உப்பிய பன், பட்டர் தடவிய இனிப்பு பன் போன்ற பலவகையான வஸ்துக்கள் இருக்கும். ஒவ்வொரு நாளும் வருவார். நானும் என் அக்காவும் ஓடிச் சென்று காட்டாமணக்கு வேலி வழியே பார்ப்போம். எங்களைப் பார்த்ததும் சைக்கிள் மணி அடித்து, ‘ரொட்டி ரொட்டிய்ய்ய்ய்ய்…’ என்று இழுத்துச் சொல்வார். அவர் தெரு முனையைத் தாண்டுவது வரை தலையைத் திருப்பிப் பார்த்து விட்டு, வாயைத் துடைத்துக்கொண்டு - பாவனை தான் - வீட்டிற்குள் போவோம்.
ரொட்டிக்கார மாமா போலவே, தெருவில் அரிசி முறுக்கும், பொரி உருண்டையும் விற்றுக்கொண்டு ஒரு பாட்டியம்மா வருவார்கள். ஐஸ் விற்றுக்கொண்டு சில அண்ணன்கள் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வருவார்கள். வருடத்தில் ஓரிரு முறை அம்மா ஐஸ், அரிசி முறுக்கு, பொரி உருண்டை போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். வருடத்தில் ஓரிரு முறை தான்! ஸ்வீட் கடைகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். எட்டி நின்று பார்ப்பதோடு சரி. ஆஞாவும் அம்மாவும் சேர்ந்து, கிறிஸ்துமஸ்க்கு வடை, முறுக்கு, அதிரசம், கெட்டி உருண்டை, வெண்ணைய் புட்டு என்று வகைவகையாக செய்வார்கள். வடை கூட வருடத்திற்கு ஒரு முறை தான். அந்த வாரம் ‘தின்பண்டம் வாரம்’. அந்த தின்பண்ட வாரம், ஓரிரு வாரங்களுக்கும் நீடிக்கும். அதற்குப்பிறகு வெறும் ‘பாவனைகள்’ தான். ஆனால் மகிழ்ச்சியாய் ஓடியது குழுந்தைப்பருவம். அப்பொழுது தெரியாது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி.)
கதைக்கு வருவோம்! அவர்களது ஆசைக்கு எது முட்டுக்கட்டையாக இடையே விழுந்திருக்கிறது?
முட்டுக்கட்டை - பெற்றோர் ஏழைத் தொழிலாளிகளாக இருக்கிற
பசியோடு தீப்பெட்டி ஒட்டிக்கொண்டிருக்கும் ஒருவன். தீப்பெட்டி ஆபீசிலிருந்து ராக்கெட் ஒட்ட கட்டுகள் வாங்கி வரும் அம்மா. தெருவில் விளையாடிவிட்டு பசியோடு ஓடி வரும் தம்பி என தீப்பெட்டி ஆபீசுகள் மற்றும் வெடித் தொழிற்சாலைகள் நிறைந்த சிவகாசிப் பக்கம் இருக்கிற ஒரு கிராமத்தில் கதைத் துவங்குகிறது. டின்னில் இருந்த கொஞ்சம் அரிசியை அள்ளி தம்பியிடம் கொடுத்துவிட்டு அண்ணனும் ஒரு வாய் போட்டுக்கொள்கிறான்.
(பொரியரிசி சாப்பிட்டு இருக்கிறீர்களா? எங்கள் அம்மா, அரிசியை சன்னமாக வறுத்து அப்படியே சாப்பிடக் கொடுப்பார்கள். அந்தச் சுவை இன்னும் அப்படியே நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. பொரியரிசி களி, இன்னும் அதைவிட ருசியாக இருக்கும். எங்கள் தந்தையார், பொரியரிசியை அம்மியில் வைத்து அரைத்து அதில் நாட்டுச் சர்க்கரைச் சேர்த்து குழைத்துக் கொடுப்பார்கள். தேவாமிர்தம்!!! அது எப்படி முப்பது நாற்பது வருடங்களாக பொரியரிசியையே சாப்பிடவில்லை? நாளை செய்யவேண்டும்.)
அம்மா வந்து ராக்கெட்டு கட்டுகளைக் கொடுத்து விட்டு அடுப்பில் உலை வைக்கிறாள். அப்பா, மறுபடி இரவு வேலைக்குப் போகவேண்டும் என்று அவசரப்படுத்துகிறார். அவர் ஆயில் மில்லில் வேலை செய்கிறார். இவன் அங்கு சோறு கொண்டு போய் அப்பாவுக்கு கொடுத்துவிட்டு திரும்பும் போது கடலைப் புண்ணாக்கு அல்லது எள்ளுப் புண்ணாக்கை வாயில் குதப்பிக்கொண்டே வருவான். இந்த வறுமை நிலைதான் அவர்களது ஆசைக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. அந்த ஆசை எப்படி நிராசையாகிறது?
நிராசை - கைக்கெட்டாத லட்டு
ஒரு லட்டை எடுத்து வாயிக்குள் போட்டு தின்று, முழுங்குவது போல பாவனை செய்தான். அதைப் பார்த்த மற்றப் பிள்ளைகள் அவரவர்களுக்குப் பிரியமான பண்டத்தை எடுத்து வாயில் போட்டு தின்பது போல் பாவனை செய்து சிரித்தார்கள். ஒரு சிறுவன் எம்பிக் குதித்து லட்டைப் பிடிக்க, கண்ணாடியில் அடித்து சத்தம் கேட்க, வண்டிக்காரன் அதட்டினான். மற்றவர்கள் ஓடிவிட, இவனுடைய சின்னத்தம்பி மாட்டிக்கொண்டான். இப்படிப்பட்ட பல ஆசைகளில் பங்கம் ஏற்பட்டு, நிராசைகளோடு, ஏமாந்தவர்களாகவே வாழும் விரக்தி நிலை ஏற்படுகிறது.
விரக்தி - வாழ்வது போல வாழ்க்கை
அண்ணன் தம்பியை விடச்சொல்லி அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். அம்மா சமைத்துக்கொண்டிருக்கிறாள். சின்னவனுக்குப் பசிக்கிறது. அழுகிறான். அப்பாகிட்ட சொல்லி அல்வா வாங்கித் திம்போம் என்று சொல்லி அண்ணன் அவனைத் தேற்றுகிறான். இருந்தாலும் அழுகை நிற்கவில்லை. அப்பாவுக்கு சோறு கொண்டு போய், திரும்பி வரும்போது எள்ளுப்புண்ணாக்கு கொண்டு வருவதாக அண்ணன் சொன்னதும் அழுகை குறைவதாக கதை நிறைவுறுகிறது.
(உழைக்கும் வர்க்கம் உழைத்துக் கொண்டேயிருக்கிறது. ஆபத்தான வேலைகளிலும் ஈடுபடுகிறது. ஆனால் அவர்களுக்கு நல்ல, சுகமான, பாதுகாப்பான வாழ்க்கை என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. எண்ணையையெல்லாம் எடுத்து விட்டு மீதி இருக்கும் சக்கையான புண்ணாக்கு மட்டுமே, அதுவும் தெரியாமல் எடுத்துக் கொடுப்பதால் கிடைக்கிறது. பசியும் வறுமையும் தொடர்ந்துக் கொண்டேயிருக்கிறது. பாவனையில் தான் அல்வாவையும், லட்டையும் சாப்பிட முடிகிறது. உண்மையில் அல்ல. ஏழைகள், உழைப்பாளிகள், இருக்கிறார்களே தவிர வாழ்வதில்லை.
வாழ்க்கை என்பது நிஜமானதா, அல்லது வாழ்வதாக நாம் நடித்துக்கொள்ளும் ஒரு பெரிய நாடகமா கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்கிறேன் எனும் புன்னகைக்குள் மறைந்திருக்கும் பாவனை. மனைவியோடு நிறைவான வாழ்க்கை என்று தன்னைத் தானே தேற்றிக்கொள்ளும் மாயை. பெற்றோர்கள் சரியாக வளர்க்கிறார்கள் எனும் ஆறுதல். குழந்தைகள் நல்ல வழியில் செல்கின்றன என்று கண்களை மூடிக்கொள்ளும் மெல்லிய பொய். அலுவலகத்தில் மேலாளர்கள் எனக்கு முழு சுதந்திரம் தருகிறார்கள் எனும் இனிய மாயத் திரை. கல்வி நிலையங்கள் உயர்ந்து நிற்கின்றன என்ற பெருமிதப் பாவனை. அரசு நல்லாட்சி செய்கிறது, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் எனும் பொதுநலப் புனைவு. எல்லாம் பாவனைகளா? இப்படியே, ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு உறவிலும், ஒவ்வொரு பொறுப்பிலும், நாம் அனைவரும் பாவனைகளின் மெல்லிய வலையில் சிக்கி, வாழ்க்கை என்ற பெயரில் ஒரு பெரும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோமோ?)
********
2. அசோகவனங்கள்
ஆசை - தங்கராசைத் தீண்டித் தனித்திருக்க
கட்டையிலிருந்து தீக்குச்சிகளை உருவி தீப்பெட்டியில் போடுகிற வேலை மாரியம்மாவுக்கு. மனசுக்குள் சினிமாக் கணக்கா ஏதாச்சும் ஓடிக்கிட்டே இருக்கும். தங்கராசு என்கிற கதாபாத்திரத்தின் நினைப்பிலேயே, தெருவில் விளையாடுவதிலிருந்து, கல்யாணம் செய்து குடித்தனம் செய்வது வரை, பல நினைவுகள் சினிமா போல ஓடும். தங்கராசுவை திருமணம் செய்து குடித்தனம் செய்யவேண்டும் என்பது மாரியம்மாவுக்கு ஆசை. ஆனால் அவள் ஆசைக்கு முட்டுக்கட்டை போடுவது எது?
முட்டுக்கட்டை - குடும்ப வறுமையும் கம்பெனி கொடுமையும்
தீப்பெட்டியில் தீக்குச்சிகளைப் போடுவதில், கவனம் கொஞ்சம் பிசக, கணக்கப்பிள்ளை திட்டுகிறான். மாரியம்மாவுக்கு அழுகை வந்துவிடும் போல இருக்கிறது. கோமதி மாரியம்மாவுக்கு வக்காலத்து வாங்குகிறாள். ‘ஏய் மாரியம்மா’ன்னு பொண்டாட்டிய கூப்பிடறமாதிரி கூப்டுறான்’ என்று கோமதி கோவப்பட, மாரியம்மா எழுந்து போய் மறைவாக அழுதுவிட்டு வருகிறாள்.
(சிவகாசியில் ‘அசேஃபா ப்ளான்’ என்கிற சர்வோதயப் பள்ளிகளுக்கு ஆலோசகராக இருந்த நேரம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம். கீழத்திருத்தங்கலில் சர்வோதயா அலுவலகம். அப்பொழுது நாங்கள் குடியிருந்த வீடுகளில் அருகே இருந்தவர்கள், தீப்பெட்டி கம்பெனிகளுக்குப் போவார்கள். கம்பெனியிலிருந்து பொருட்களை எடுத்து வந்து வீட்டிலும் செய்வார்கள். அதிகாலை நேரம் சிறு சிறு வண்டிகளில் சிறுவர்களும், இளையோரும் அடைத்துவைக்கப்பட்டு கம்பெனிகளுக்குச் செல்வதைப் பார்க்கும் போது கண்களில் நீர் வரும். சொல்லி வைத்தாற் போல எல்லா கம்பெனிகளின் சுவர்களும் உயரம் உயரமாய் வானத்தைத் தொடும். வெடி சுற்றும் கம்பெனிகளில் வேலை செய்யும் சிறார்கள் உடல் முழுக்க மினு மினு’வென்று, வெடி மருந்தோடு கம்பெனியின் கேட்டை விட்டு வெளி வருவதைப் பார்த்திருக்கிறேன். அப்படி பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு, சர்வோதயா அமைப்பு, மாலை நேர வகுப்புகளை நடத்தின. கிட்டத்தட்ட நூறு பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுப்பதே என் வேலை. அப்படி மூலை முடுக்கெல்லாம் சென்றதில், சிறார் உழைப்பு பற்றியும், இளையோரின் கனவு திருடப்படுவதையும் கண்ணாறப் பார்த்திருக்கிறேன்.)
நிராசை - புஸ்வானம் ஆன தங்கராசு கனவு
அன்றைய வேலை முடிந்ததும், களைப்பில், வீட்டுக்குத் திரும்புகிறார்கள். உடல் வலி தாங்கமுடியவில்லை. தங்கராசு நினப்பு வர சுகமாக இருக்கிறது. திடீரென கணக்கப்பிள்ளை அதிகாரத்தொனியில் கூப்பிடுவது போல இருக்கிறது. தங்கராசு மறைந்து போகிறான். கூடாத இடத்தில் சிறைப்பட்டு விட்டது போல மனசு துடிக்கிறது என்று கதை நிறைவுறுகிறது. அவள் வாழ்க்கை எப்படி ஓடிக்கொண்டிருக்கிறது?
விரக்தி - உழைப்பும் அவமானமும்
மாரியம்மாவை அழைத்துக் கொண்டு கோமதி தீப்பெட்டிக் கம்பெனிக்குப் போவதில் கதைத் தொடங்குகிறது. மாரியம்மா, அவசரம் அவசரமாக எழுந்து, வாசலில் சாணி தெளித்து கூட்டிவிட்டு, அடுப்புக் குப்பையை எறிந்துவிட்டு அதிலும் சாணியால் மெழுகிவிட்டு, பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு, சாம்பலால் பல் துலக்கிவிட்டு, சோப்பு போட்டு முகம் கழுவி, பொட்டு வைத்து, விபூதி பூசிக்கொண்டு, கம்பஞ்சோறை சாப்பிட்டுவிட்டு, நீச்சத்தண்ணியும் பருக்கையுமாக தூக்குவாளியில் எடுத்துக்கொண்டு கிளம்பி ஓடுகிறாள். கதைத் தொடங்கும் போதும் சரி, கதை முடிந்த பிறகும் சரி, அவளுடைய அன்றாட வாழ்க்கை இப்படித்தான் தொடங்கி, கனவுகளில் மிதந்து, அது கலைக்கப்பட்டு, அழுது, உடல் மற்றும் மன வலியோடு வீட்டில் அவதிப்படுவது வரை தொடர்கிறது.
அன்றாடம் வேலை செய்யும் பெண்களின் வாழ்க்கை எப்படி துயரம் மிகுந்ததாக இருக்கிறது. சரியாக தூங்க முடியவில்லை. வீட்டு வேலைகளைச் செய்தாகவேண்டும். தான் விரும்புகிற ஓர் ஆளோடு வாழ முடியவில்லை. யாரோ ஒருவன் தன் இலாபத்திற்காக, அவனது அடிமையைப் போல வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் கூட வேலை செய்யும் ஆண்களின் காமப் பார்வையில் நொந்து போக வேண்டியிருக்கிறது. மனஉளைச்சலில் தூங்கியும் தூங்காமலுமாக, உடல் வலியோடு மன வலியையும் சேர்ந்து தாங்கிக்கொண்டு ஓடவேண்டியிருக்கிறது.
பிடிக்காத இடத்தில், பிடிக்காத முகங்களோடு, பிடிக்காத பணியில், பிடிக்காத பொழுதுகளில், பிடிக்காத நிகழ்வுகளின் நடுவே வாழ்வதே பலருக்கும் வாழ்க்கையின் இயல்பான நிலையாகிவிட்டது. அசோக வனத்தில் சீதை இராமனின் நினைவில் தன் துயரைத் தேற்றிக்கொண்டிருந்ததைப் போல, எண்ணற்ற உள்ளங்கள் கனவுகளின் மெல்லிய வலையில் சிக்கி, நனவில் வாழாமல் கனவிலேயே வாழ்ந்து முடித்துக் கொள்கின்றன. அதனால்தான், தனிமனித வழிபாட்டை ஊக்குவிக்கும் ஒளிரும் திரைப்படங்கள் அவர்களின் நிராசையைத் தீனி போட்டு ஊட்டி, அதைப் பெருக்கி, இன்னும் ஆழமான இருளுக்குள் தள்ளுகின்றனவோ?
*********
3. வெயிலோடு போய்…
ஆசை - தங்கராசு மகிழ்ச்சியாக இருக்க
தங்கராசுவுக்கும் மாரியம்மாளுக்கும் தான் திருமணம் என்று சின்னப் பிள்ளையிலிருந்தே சொல்லி வளர்த்தார்கள். தங்கராசுவோடு கனவிலேயே குடும்பம் நடத்துவாள் மாரியம்மாள். தங்கராசு மச்சான் நன்றாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவாள்.
முட்டுக்கட்டை - காதலுக்கு வறுமை
ஆனால் நிலமை மாறிவிட்டது. நகை நட்டுக்கு ஆசைப்பட்டு தங்கராசுவின் அப்பாவும் அம்மாவும் (மாரியம்மாளின் மாமாவும் அத்தையும்) அந்நியத்தில் தங்கராசுவுக்கு பெண் பார்த்துவிட்டார்கள். அதிலிருந்து மாரியம்மாளின் அண்ணனுக்கு அவர்கள் மேல் கோபம். கலியாணத்துக்கு யாரும் போகக்கூடாது என்று அண்ணன் சொல்லிவிட்டான். ஆனால் மாரியம்மாள் நாண்டுகிட்டுச் செத்துருவேன் என்று சொன்னதால் அண்ணன் மட்டும் போய் வந்தான்.
நிராசை - தனக்கும் கிட்டவில்லை. கிட்டியதிலும் மகிழ்ச்சி இல்லை
போய் வந்த கையோடு, அப்பா வழியில் ஒரு வரன் பார்த்து மாரியம்மாளுக்கு கல்யாணம் செய்து வைத்தான். மாரியம்மாளின் நாலு பவுன் நகையை விற்று அவளது கணவனுக்கு ஒரு கடையையும் வைத்துக் கொடுத்தான். மாரியம்மாளின் புருஷனுக்கு இவள் இப்படி அடிக்கடி அம்மா ஊருக்குப் போறது பிடிக்கவேயில்லை. அதுவும் கடையிலிருந்து பருப்பு வெல்லம் என்று பொருட்களையும் எடுத்துப் போய் விடுகிறாள். மாரியம்மாளின் அப்பா தஞ்சாவூருக்குப் பஞ்சம் பிழைக்கப் போய் இறந்துவிட்டதால் இவள் படிக்க முடியவில்லை. அல்லது தங்கராசு போல அவளும் படித்திருப்பாள். தங்கராசுவின் அப்பா மாற்றலாகி புதுக்கோட்டை போகும் போது, (இவள் நான்காம் வகுப்பு படிக்கும் போது), அவளும் கூட வருவதாகச் சொல்லி தெருவில் அரண்டு புரண்டாள்.
மாரியம்மாள், பொங்கலுக்காக, அவளது அம்மா வீட்டிற்கு வருவதில் கதைத் தொடங்குகிறது. மாரியம்மாளின் கணவர், மளிகைக்கடை வியாபாரம் நிமித்தமாக மாலை தான் வருவார். ஆனால் மாரியம்மாளின் மச்சான் (மாமா மகன்) தங்கராசு டவுனிலிருந்து வந்திருப்பதைக் கேள்விப்பட்டு, வெயில் என்றும் பாராமல் மாரியம்மாள் ஓடி வந்திருக்கிறாள்.
அன்று மாலையே தங்கராசு வீட்டிற்கு மாரியம்மாள் செல்கிறாள். தங்கராசுவின் தாய் பொன்னாத்தா வரவேற்கிறாள். தங்கராசுவின் மனைவி ஜானு லட்சணமாக இருக்கிறாள். ஜானுவோடு வாஞ்சையோடு பேசினாள். சற்று நெருக்கம் ஆனதும், “அக்கா! மாசமா இருக்கீகளா?” என்று கேட்டாள். “ஆமா! அது ஒன்னுக்குத்தான் கேடு” என்று அவள் பட்டென்று சொல்லிவிடுகிறாள். திடுக்கிட்ட மாரியம்மாள், ஒரு பாத்திரத்தைக் கழுவுவது போல, கொல்லைப்புறம் போய் அழுகிறாள். அப்பொழுது தங்கராசு வீட்டிற்குள் நுழைந்து, மாரியம்மாள் போய்விட்டாளா எனக் கேட்டு, காப்பி குடிச்சியா ஜானு என்று பிரியமாகக் கேட்கிறான். ஆனால் ஜானு அவனை மதிக்காமல் பேசுகிறாள். வீட்டு பின்புறமாகவே கிளம்பி தன் வீட்டுக்கு வந்து படுத்துக் கொள்கிறாள்.
விரக்தி - அழுகையும் ஆற்றாமையும்
அதைத் தொடர்ந்து, தங்கராசின் பாவமான முகம் நினைப்பில் வந்துக்கொண்டேயிருக்கிறது. ஜானுவுக்கு கொறைச்சலா நகை நட்டு போட்டதால தங்கராசின் அம்மா கொடுமைப்படுத்துறாளாம் என்று சீனியம்மா சொன்னதும், ஜானு வெறுப்பாகப் பேசினதும் இம்சைப்படுத்தியது.
எல்லோரும் கோயில் வாசலில் பொங்கல் வைக்கப் போனார்கள். இவள் மட்டும் படுத்திருந்தாள். ராத்திரி அவள் கணவன் வந்து சேர்ந்தான். கடை வியாபாரம் நன்றாக நடந்ததாகச் சொல்கிறான். அவன் உற்சாகமாகச் சொல்ல இவள் ஊமையைப் போல் இருக்க, அவள் தலையைப் பிடித்து உலுக்கினான். அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். அவன் தேற்றிக்கொண்டிருந்தான் என்று கதை முடிகிறது. ‘வெயிலோடு போய்’ கதையை ‘பூ’ என்ற பெயரில் ஒரு தமிழ் சினிமாவாக, இயக்குநர் சசி 2008 ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார் என்பது கூடுதல் தகவல்.
மாரியம்மாள் அழுவது மச்சானுக்காகவா? ஜானுவுக்காகவா? அல்லது தனக்காகவா? ஜானுவின் மாமியார் கொடுமை செய்கிறாள் என்று கேள்விப்பட்டு ஜானுவுக்காக அழுகிறாளா? அவளுக்குப் பிள்ளை பிறக்காததால் அழுகிறாளா? அல்லது பிள்ளை கொடுக்க முடியாத மச்சானுக்காக அழுகிறாளா? தனக்கு மச்சான் கிடைக்கவில்லை என்று அழுகிறாளா? என்ற கேள்வியை ஒரு வாசகர் கேட்டபோது சிந்திக்க வேண்டிய கேள்வியாகவே இருந்தது.
******
4. மீடியம்
ஆசை - மாடர்ன் ஜட்டி வாங்கிப் போட்டுக்கொள்ள
அலுவலகத்திலிருந்து எல்லோரும் குற்றாலம் டூர் போகிறார்கள். எல்லோரும் குளிக்க ஆயத்தமாகும் போது, இவரைத் தவிர மற்றவர்கள் ஜட்டி போட்டிருக்கிறார்கள். இவர் மட்டும் கால்சட்டை போன்ற அண்டர்வேர் போட்டிருக்கிறார். எல்லோரும் அவரைப் பார்த்துச் சிரிக்க, ஒரு ஜட்டி வாங்கிவிடுவது என்று முடிவெடுக்கிறார்.
முட்டுக்கட்டை - கடன், வட்டி, போதாச் சம்பளம், சேமிப்பின்மை, வறுமை
கையில் வைத்திருக்கிற காசைக் கொண்டு குற்றாலத்திலேயே ஜட்டி ஒன்றை வாங்கிவிடுகிறார்.
அதையை திருப்பித் திருப்பி போடுவதால் ஒரு வித துர்நாற்றம் வீச, அலுவலகத்தில் யாராவது பேசிச் சிரித்தால் கூட, தன் மேல் வீசும் நாற்றத்தைப் பற்றித் தான் பேசிச் சிரிக்கிறார்களோ என்று நினைப்பார். அலுவலகத்தில் ப்யூனிடம் ஏற்கனவே கடன் வாங்கியிருப்பதால், டைப்பிஸ்ட் வசம் கடன் கேட்டு ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டு, ஏற்கனவே கையில் உள்ள இரண்டு ரூபாயோடு கடைக்குச் செல்கிறார்.
நிராசை - ஐட்டி கர்சிப்பாகி
ஆகக் குறைந்த ஜட்டியின் விலை எட்டு ரூபாயாக இருப்பதால், ஒரு கர்சிப்பை மட்டும் வாங்கிக்கொண்டு திரும்புவதாகக் கதை நிறைவுறுகிறது.
விரக்தி - பழைய துர்நாற்றம்
பழைய மரபுகளிலிருந்து புதிய வாழ்க்கை முறைகளுக்கு மாற, வறுமையில் வாடுபவர்களால் முடிவதில்லை. மேலும் மேலும் ஒரங்கட்டப்பட்டு, அவர்கள் வாழ்க்கை துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது. அதை மாற்ற நினைத்தாலும் முடிவதில்லை. கோவணத்திலிருந்து நெடிய கால்சட்டைக்கும், கால்சட்டையிலிருந்து ஜட்டிக்கும் மாறிப்போன பயனீட்டாளர் பண்பாடு ஏழைகளின் இருப்பை சுருக்குகிறது. சிறுகடைகளிலிருந்து சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும், மார்க்கெட்டுகளிலுருந்து பெருவணிக மால்களுக்கும் மாறிப் போன சந்தை ஏழைகளின் கழுத்தை இறுக்குகிறது.
*******
5. கருப்பசாமியின் அய்யா
ஆசை - வித்தியாசமாக இருக்க
இசக்கிமுத்து பலசாலி. எந்த ஊர் எளவட்டக் கல்லாக இருந்தாலும் அனாயசமாக தூக்கி விடுவான். கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்வான். நாலு பேரைப் போல நாமும் இருக்கக்கூடாது என்று நினைப்பான். எதையுமே வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்று ஆசைப்படுபவன். ஒரே இடத்தில் புலங்குவதை விட, பல இடங்களுக்குச் சுற்றுவதில் நிறைய கற்றல் மட்டும் அல்ல, மகிழ்ச்சியும் இருக்கிறது என்று விரும்புவன். ஊரை விட்டு பொழைக்கப் போன ஊர்களில் (மதுரை, திண்டுக்கல், சேலம், கரூர்) ஓட்டல்களில் மாவரைத்து, தண்ணீர் சுமந்து, மூட்டை சுமந்து உழைத்தான். மஞ்சக்காமாலையும் டைபாயிட் காய்ச்சலும் வந்து அனாதையாய் கஷ்டப்பட்டுத்தான் ஏழு வருடம் கழித்து இப்பொழுது ஊர் திரும்பியிருக்கிறான்.
கூலிங்கிளாஸ், பவுடர் எல்லாம் வாங்கி வந்ததில் இசக்கிமுத்துவின் மகன் கருப்பசாமிக்கு ஏகச் சந்தோஷம். கருப்பசாமியின் அம்மா காளியம்மாளுக்கும் ரிப்பன், வாசனைத்தைலம் எல்லாம் வாங்கி வந்தார். இருவருமே அய்யாவிடம் சிரித்து பேசுகிறார்கள். மூன்றாவது நாள் எவ்வளவு பணம் சேமித்து கொண்டு வந்தீர்கள் என்று காளியம்மாள் கேட்க, கருப்பசாமியின் அய்யா முப்பத்தேழு ரூபா பதினைஞ்சு பைசாவைக் கொடுக்கிறார். காளியம்மாள் கோபப்பட்டு அன்றிலிருந்து அய்யாவைத் திட்டுகிறாள். இசக்கி முத்து, கருப்பசாமிக்கு ஹீரோ. காளியம்மாளுக்கு ஜீரோ.
முட்டுக்கட்டை - வழக்கமான எதிர்பார்ப்பு
ஒரு நாள் காளியம்மாள் இட்லிகடை வைக்கலாமா என்று இசக்கிமுத்துவிடம் கேட்க, அவனும் ஒத்துக் கொள்கிறான். இட்லியில் துவங்கியது வடை, பலகாரங்கள் என்று நீண்டது. இசக்கி, வீட்டில் தின்பண்டங்களைச் செய்யவும், வீட்டு வியாபாரத்தைப் பார்த்துக் கொள்ளவும் இருக்க, காளியம்மாள் ஊர் ஊராகச் சென்று விற்று வந்தாள். இசக்கிமுத்து ஓரிடத்தில் கட்டிப்போடப்படுகிறான். வழக்கமான அன்றாட வேலைகளை மட்டும் செய்யப் பணிக்கப்படுகிறான்.
நிராசை - வித்தியாசமா? வழமையான மரபா?
இருந்தாலும், வழக்கமாக வட்டமாக சுடவேண்டிய வடையை, இசக்கிமுத்து, வித்தியாசமாக சதுரமாக, செவ்வகமாக, ஏரோப்ளேன் போல எல்லாம் செய்வான். காளியம்மாளுக்கு வெட்கமாக இருக்கும். திட்டுவாள். சரி சரி என்று மரபிற்குத் திரும்பி விடுவான். காப்பி ஆத்துவதை வித்தியாசமாகச் செய்வான். பிள்ளைகள் திரண்டு வந்து அந்த அதிசயத்தைப் பார்ப்பார்கள். காளியம்மாள் அதற்கும் திட்டுவாள். சரி சரி என்று மரபிற்குத் திரும்பி விடுவான். காசில்லாமல் வருபவர்களுக்கு இட்லியையும் வடையையும் தூக்கிக் கொடுத்து விடுவான். காளியம்மாள் திட்டுவாள். சரி சரி என்று மரபிற்குத் திரும்பி விடுவான்.
விரக்தி - கட்டுப்பாட்டிற்குள்
நாலு பேரைப் போல தன் புருஷனும் சம்பாத்தியம் பண்ணுகிறான் என்று காளியம்மாள் ஆசுவாசப்பட்டுக்கொண்டாள். இருந்தாலும் ஒரு வடையைத் தூக்கி கருப்பசாமியிடம் போட்டு பந்து விளையாடுவதைப் போல சின்ன சின்ன விஷயங்களில் திருத்தவே முடியவில்லை என்று கதை நிறைவுறுகிறது.
******
6. பொன்ராசின் காதல்
ஆசை - காதலியை கல்யாணம் செய்துகொள்ள
பொன்ராஜ்க்கு சந்திரா மீது காதல். சுப்பிரமணியின் மகள் (மாமாவின் மகள்) தான் சந்திரா. சுப்பிரமணி, சந்திராவோடு டவனுக்குக் குடிபோகிறார். பொன்ராஜின் அம்மா பொன்ராஜைப் பற்றி நல்லவிதமாக சுப்பிரமணியிடம் சொல்லி வருகிறாள். (இது ஒன்று தான் அவனுக்கு அவள் நல்லது செய்தது). சுப்பிரமணி மாமாவும் சந்திராவும் தன் அந்தஸ்து பற்றி உயர்வாக நினைப்பதாக இவன் நினைத்துக்கொள்வான். அவர்களை நேரடியாக ஒரு தடவை சந்தித்து விடலாம் என்று நினைத்து, அடம் பிடித்து, அம்மாவின் காதில் இருந்த பாம்படத்தை வாங்கிக்கொண்டான். ஒரு கோல்டு கவரிங் செயின் போட்ட கடிகாரமும், கனமாக ஒரு மோதிரமும் வாங்கிக்கொண்டான். பேண்ட் ஷர்ட்டோடு ஸ்டெப் கட்டிங் செய்து கொண்டு பழமெல்லாம் வாங்கிக்கொண்டு டவுனுக்கு கிளம்பிவிட்டான்.
முட்டுக்கட்டை - அம்மாவின் பிடியும் குடும்ப அந்தஸ்தும்
கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கலாம். பொன்ராஜின் அம்மா அவனைச் சுதந்திரமாக விடாமல் தன் பிடியிலேயே வைத்திருக்கிறாள். அவன் கல்லூரியில் பி.ஏ. படிக்க விரும்ப அவள் மறுத்து, சுப்பிரமணியை அவனது மாமா மூலமாக ஐ.டி.ஐ. யில் சேர்க்கிறாள். படிப்பு முடிந்ததும் தொழில் செய்ய வயக்காட்டை விற்கச் சொன்னால் அம்மா மறுத்துவிடுகிறாள். காதில் உள்ள பாம்படத்தைக் கழட்டச் சொன்னால் முடியாது என்று சொல்லி விடுகிறாள். ஆனால் அந்த பாம்படத்தைத் தான் இன்று வம்படியாக வாங்கிக் கொண்டு சந்திராவைப் பார்க்கப் போயிருக்கிறான்.
நிராசை - சந்திராவிற்கு இன்ஜினியர் கணவர்
சுப்பிரமணி மாமாவையும் அத்தையையும் பார்த்து தன் அந்தஸ்து பற்றி கொஞ்சம் அதிகமாகவே அளந்துவிட்டு ஊருக்குத் திரும்பினான். பாம்படத்தை விற்றது குறித்து, டவுனிலிருந்து திரும்பியதும் அம்மாவுக்கும் மகனுக்கும் சண்டை. வேலையில் நாட்டம் ஓடவில்லை. சந்திராவின் நினைப்பாகவே இருந்தது. ஊரில் இருந்த போது மெலிந்த உருவத்தில் பாவாடை தாவணியில் இருந்தாள். டவனில் பார்த்த போது, பூரித்த உடம்பில் சேலையில் மின்னினாள். தானும் உடம்பைத் தேற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது, ஒரு நாள், திடீரென சந்திராவின் திருமணப்பத்திரிக்கை வருகிறது. மாப்பிள்ளை ஒரு இன்ஞினியர். காய்ச்சல் வந்து படுத்துவிட்டான்.
விரக்தி - கஞ்சாவும் போட்டி வாழ்வும்
சோறு தண்ணி கூட இறங்காமல் சோகத்தில் இருந்த பொன்ராஜைத் தேற்றிய பால்ய சினேகிதன் வேல்ச்சாமியோடு கஞ்சா அடிக்க ஆரம்பித்தான். ராமசாமி மாமா அவனைத் தேற்றி தினசரி வேலைக்குப் பழக்கப்படுத்தினார். சந்திரா மாசமாயிருக்கிறதை நினைத்து மறுபடியும் குடித்தான். இந்தச் சாக்கில் ராமசாமி மாமாவின் மகள் செண்பகவல்லிக்கும் இவனுக்கும் திருமணம் நடக்கிறது. ராமசாமி அவனுக்கு இதுவரை செய்து வந்த உதவிக்கெல்லாம் செண்பகவல்லி தான் காரணம் என்று தெரிந்ததும் அவள் மீது பிரியம் வந்தது. கருத்துப்போய் மெலிந்த திரேகத்துடன் இவனுடைய பிடிக்குள் முற்றிலும் அடங்குகிறவளாக இருந்ததாலும் பிரியம் வந்ததாம். சந்திராவின் கணவர் இன்ஜினியரை விட அதிகம் சம்பாரிக்கவேண்டும் என்ற ஆவலில் நிறைய சம்பாரிக்கத் துவங்கினான் என்று கதை நிறைவுறுகிறது.
அவனது காதலுக்கு (ஆசைக்கு), அந்தஸ்து முட்டுக்கட்டையாக, காதல் நிராசையாகி கஞ்சா அடிக்கும் (விரக்தி) நிலைக்குச் சென்றாலும், ஒருவித ஈகோவால் காதலியின் உயர்வான அந்தஸ்துள்ள கணவரை (இன்ஜினியரை) விட அதிகமாக சம்பாரித்துக் காட்டவேண்டும் என்ற உந்துதலால் வாழ்க்கை போகிறது என்பது விசித்திரம் தான்.
******
7. வார்த்தை
ஆசை - உல்லாசப் பயணம் போக
ஆறாம் வகுப்பு படிக்கும் சோலையப்பன் இரண்டு நாள் உல்லாசப் பயணம் போக கிளம்புவதில் கதைத் துவங்குகிறது. மாமாவிடம் ஒரு பிளாஸ்டிக் பை வாங்கிக்கொள்கிறான். கால்சட்டை சட்டைகளை மடித்து டிரங்க் பெட்டிக்கு அடியில் வைத்து விடுகிறான். (மடிப்பு விழுவதற்கு). தைல பாட்டிலில் தேங்காய் எண்ணை எடுத்துக் கொண்டான். ஆறு பொட்டணம் கட்டுச் சோறு கட்டியாகிவிட்டது. அவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் முருகேசன் அண்ணனிடம் கூலிங் கிளாஸ் கேட்டிருக்கிறான். கன்னியாகுமரியில் வேறு என்னவெல்லாம் பார்க்கலாம் என்று பலரையும் கேட்டுக்கொண்டிருக்கிறான். இதுவரையில் அவன் கடல் பார்த்தது இல்லை.
முட்டுக்கட்டை - குடும்ப வறுமையும் முதலாளியின் கஞ்சமும்
உல்லாசப் பயணத்திற்கு பத்து ரூபாய் கொடுத்து விட்டான். இன்னும் முப்பது ரூபாய் கொடுக்க வேண்டும். உல்லாசப் பயணம் போகிறதுக்கும் முதல் நாள் மாலை, பள்ளியிலிருந்து வீட்டிற்கு ஓடி வருகிறான். வீடு பூட்டியிருக்கிறது. சோலையப்பன் ஆத்தா, செல்லாயா நாயக்கரின் தோட்டத்தில் வேலை செய்வதாக முத்துப்பாட்டி சொன்னதைக் கேட்டு அங்கு ஓடினான். அழுதுகொண்டே மீதி பணம் கொடுக்க வேண்டியதைப் பற்றிக் கேட்க, முதலாளி நாயக்கரிடமிருந்து வாங்கி வருவதாகச் சொல்லி அய்யா சென்றிருப்பதாகச் சொல்கிறாள்.
நிராசை - பிரட்ட முடியாத பணமும் போக முடியாத பயணமும்
அவன் அனத்தம் தாங்க முடியாமல், சீக்கிரம் தன் பங்கு வேலையை முடித்து விட்டு, நாயக்கர் வீட்டிற்கு அவனை அழைத்துச் செல்கிறாள் ஆத்தா. நெல் அரைக்க அய்யாவை டவுனுக்கு அனுப்பியிருப்பதாக நாயக்கரம்மா சொல்கிறாள். வீட்டிற்குச் சென்று பலரிடமும் கேட்க, முப்பது ரூபாயை பிரட்ட முடியவில்லை.
விரக்தி - அம்மாவின் தேற்றுலும் அப்பாவின் ஆற்றாமையும்
சோலையப்பன் வீட்டில் உட்கார்ந்து அழுது தீர்த்தான். மற்றப் பையன்கள், ‘டேய் சோலை வல்லியாடா?’ என்று கேட்டுக் கொண்டே உல்லாசப் பயணம் போக பள்ளிக்குப் போவதைப் பார்த்து உடைந்து அழுதான். ஆத்தாளும் அழுது கொண்டே அவனைத் தேற்ற, அவன் அழுது ஓய்ந்து தூங்கிப் போனான். மொதலாளி அவனிடம் பத்து ரூபாயை மட்டும் கொடுத்தார். இதை வைத்துக் கொண்டு சோலையப்பனின் முகத்தை எப்படிப் பார்ப்பது என்று மடத்திலேயே படுத்துக் கொண்டார் அவர் என்று கதை நிறைவுறுகிறது.
மெல்பர்ன் வாசகர் வட்டத்தில் ஒரு வாசகரின் பார்வை ஆச்சரியப்படவைத்தது. சோலையின் ஆசை நிராசையானது. அந்த ஆசையை நிறைவேற்ற முடியாத அவன் அப்பாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று அந்த வாசகர் கேட்டார். அப்பொழுது தான் என் குழந்தைப் பருவ நினைவுகள் சிலவற்றை மறுபடி அசைப்போட்டுப் பார்த்தேன்.
தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பிள்ளைகள் நாங்கள் பட்டாசி லிஸ்ட் போடுவோம். லட்சுமி வெடி, யானை வெடி, பாம்பு வெடி, சரவெடி, சீனி வெடி, புஸ்வாணம், துப்பாக்கி, பொட்டு வெடி, சங்கு சக்கரம், கம்பி மத்தாப்பு என்று லிஸ்ட் பெரிசாகிக்கொண்டே போகும். இரண்டு வாரங்களுக்கு முன்பே வெவ்வேறு வெடி வகைகள் வரிசை கட்டிக்கொண்டு கனவில் வந்து போகும். ஒரு வாரத்திற்கு முன்பே வெடி சத்தம் காதில் கேட்கும். இரண்டு நாளைக்கு முன்பு ஆஞா பட்டாசு வாங்க அழைத்துப் போவார்கள். கடையில் கூட்டம் அள்ளும். தஞ்சாவூரில், இரயில்வே ஸ்டேஷன் அருகே, அரசு சார்பில் ஒரு பட்டாசுக் கடை வைத்திருப்பார்கள். அங்கேயே அரசு பணியாளர்கள் கோ-ஆப்டெக்ஸ் துணிமணிகளை வாங்கலாம். அந்த வெடி வேண்டும், இந்த வெடி வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டோம். கையில் காசு இருக்கிறதற்கேற்ப ஆஞா பட்டாசு வாங்குவார்கள். சாக்கு மூட்டை கனவு, சிறு மஞ்சள் பையோடு நின்று போகும்.
வாங்கப்பட முடியாத பட்டாசுகள் எங்களைப் பார்த்து ஏங்கியவாறே கடை ரேக்குகளில் இருக்கும். வாங்கப்பட்ட பட்டாசுகள் குதூகூலமாக எங்களோடு வரும். எங்கள் கனவு லிஸ்டிலிருந்து கரைந்து கரைந்து கொஞ்சமாகிப் போன பட்டாசுகள் ஒவ்வொன்றையும், தீபாவளியன்று கவனமாக வெடிப்போம். ஒளிரும் பட்டாசுகளை இரவு மங்கிய நேரத்தில் வெடித்து மகிழ்வோம். துப்பாக்கியும் பொட்டு வெடியும் தான் ரொம்ப ஃபேமஸ். எல்லாவற்றையும் அன்றைக்கே வெடித்து விடமாட்டோம். சில நாட்களுக்குப் பிறகு வரப்போகிற கல்லறைத் திருநாளுக்கு கொஞ்சமும், பிறகு கார்த்திகைக்கு கொஞ்சமும், கிறிஸ்துமஸ்க்கு கொஞ்சமும் என பிரித்து வைத்துவிடுவோம். தீபாவளியன்று, இரண்டு மூன்று பேர் சேர்ந்துக் கொண்டு பக்கத்து தெருக்களுக்குப் போவோம். மற்றவர்கள் வெடித்த இடங்களில், சுக்கு நூறாக பிய்ந்து நாலா பக்கமும் சிதறிக்கிடக்கிற பேப்பர்களின் மத்தியில், சரியாக வெடிக்காத வெடித்துண்டுகளைத் தேடி எடுப்போம். அதில் மீதி இருக்கிற வெடி மருந்துகளையெல்லாம் ஓர் இடத்தில் சேகரிப்போம். வீட்டிற்கு பத்திரமாக எடுத்து வந்து, ஒரு பேப்பரில் போட்டு எரிப்போம். அது புஸ்’ஸென்று பொங்கி விழும் எங்கள் கனவுகளைப் போல. அப்பொழுது எங்கள் அப்பாவின் மனம் எப்படி இருந்திருக்கும்?
1980களில் இருந்த சிவகாசி வெடிகளில், உலகமயமாக்கம் புகுந்து சீனா, சிவகாசியையும், திருப்பூரையும் கபளீகரம் செய்தது உற்று நோக்கக்கூடியது.
******
8. பிரக்ஞை
ஆசை - சுயமுடிவெடுக்க
சர்க்கார் வேலை செய்யும் இடத்தில் சுதந்திரமாக இருக்க அவனுக்கு ஆசை. சுதந்திரமாக முடிவெடுக்க ஆசை.
முட்டுக்கட்டை - மேலாதிக்க கட்டமைப்பு
ஆபீஸ் ஹெட்கிளார்க் உடன் தகராறு பண்ணிய நாளிலிருந்து, ஆபீஸைப் பற்றி நினைத்து விட்டால், படிக்க முடியாது. வேறு வேலை எதுவும் ஓடாது அவனுக்கு. அந்த ஹெட்கிளார்க் யாரையும் மதிப்பதில்லை. ஒரு நாள் அந்த ஹெட்கிளார்க் அவசரமாக ஒரு ஸ்டேட்மெண்டை அனுப்பச் சொல்ல, அதிக வேலை நிமித்தமாக, இவன் முடியாது என மறுக்க அன்றைக்கு வந்தது வினை.
நிராசை - லீவு சேங்ஷன் ஆகாத
அன்றைக்கு ஆபீஸ்க்கு போய்விட்டு, அரை நாள் லீவு போட்டுவிட்டு, பணம் விஷயமாக திருநெல்வேலி சென்று மாமாவைப் பார்த்துவிட்டு ராமலிங்கத்தையும் பார்த்துவிடுவது என்று திட்டமிட்டான். ஆபீஸூக்குள் நுழையும் போதே ஹெட்கிளார்க்குக்கு குட்மார்னிங் வைக்கவில்லை. லீவ் அப்ளிகேஷனை எழுதிக் கொடுத்தான். ஆனால் லீவு சேங்ஷன் ஆகவில்லை.
விரக்தி - இரும்புச்சங்கிலி விலங்கான பணி
ஹெட்கிளார்க், லீவு அப்ளிகேஷனை, சூப்பிரண்ட் அறைக்கு அனுப்பிவிட்டார். இவன் சூப்பிரண்ட் அறைக்குள் பவ்யமாக நுழைந்து லீவு பற்றிக் கேட்க, கையில் சவுக்குடன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து அடிக்க வரும் பிரபுவாக சூப்பிரண்ட் நடந்துக் கொள்ள, கைகட்டி வாய் பொத்திய ஓர் அடிமையாக இவன் உணர, லீவு கொடுத்தாலும், கட்டி வைத்து சவுக்கால் செமையடி வாங்கிய உணர்வில் வெளி வருகிறான். சர்க்கார் வேலை கால்களில் கட்டப்பட்ட இரும்புச்சங்கிலி விலங்காக இழுபடுகிற ஓசையாக கதை நிறைவுறுகிறது.
*****
9. வேறு ஊர்
ஆசை - அஞ்சோ பத்தோ சேர்த்து பெற
மகனிடம் அதைக் கேட்டுவிடலாம் என்று நினைக்கிறார். ஆனால் கேட்கவில்லை. கஷ்டப்பட்டு மகன், நூறு ரூபாய் கொடுக்கும் போது, பலகாரம் வாங்கித் திங்க துண்டா அஞ்சோ பத்தோ குடுப்பா என்று கேட்க நினைத்ததைக் கேட்கவில்லை. வயதான காலத்தில், ராமுக்கிழவருக்கு, தான் விரும்பிய வாழ்க்கை வாழ (விரும்பிய பலகாரம் வாங்கித் திங்க) ஆசை. ஆனால் ராமுக்கிழவரின் மகன் சந்திரன் என்ன செய்தான்?
முட்டுக்கட்டை - அதீத உழைப்பு
ராமுக்கிழவனையும், சுப்பிக் கிழவியையும், இருக்கிற பட்டிக்காட்டை விட்டு, தன்னோடு ஊருக்கு வரச்சொல்லி அவர்களின் மகன் சந்திரன் சொல்கிறான். ஆனால், மருமகளுக்கும், அவனது பிள்ளைகளுக்கும் தொந்தரவு வேண்டாம் என்று அவன் தந்தை ராமுக்கிழவர் மறுத்தார். இங்க கையகல இடம் இருக்கா என்ற சந்திரனின் கேள்விக்கு ராமுக் கிழவர் வாயடைத்துப் போகிறார்.
அப்பொழுது, மகனிடம் அதைக் கேட்டுவிடலாம் என்று நினைக்கிறார். ஆனால் கேட்கவில்லை.
ராமுக் கிழவருக்கு தன் பால்ய நினைவுகள் வருகிறது. ஆத்தாளுக்குத் தெரியாமல் பருத்தியை களவாண்டு கடையில் விற்று, வாங்கித் தின்று, தெருவில் புரண்டு, கண்மாயில் குளித்து, ஆத்தாளிடம் அடிவாங்கி என்ற அந்தக் காலம் நினைவுக்கு வருகிறது. தெற்கே சொந்த ஊரிலிருந்து இந்த ஊருக்கு வந்த கதையை அப்பா சொல்லித் தான் ராமுவுக்குத் தெரியும். ஆத்தாளும் ஐயாவும் இறந்து போகிறார்கள். அப்பொழுதிலிருந்து உழைப்பு தான். ஆனால் போனவருஷம் படுக்கையில் விழுந்தான். மாசா மாசம் மகன் வந்து கொடுக்கிற நூறு ரூபாயில் தான் ஜீவனம் கழிகிறது.
மகனிடம் அதைக் கேட்டுவிடலாம் என்று நினைக்கிறார். ஆனால் கேட்கவில்லை.
முன்பெல்லாம் சந்திரன் வந்தால் பலகாரங்கள் வாங்கி வருவான். இப்பொழுது இல்லை. சுப்பா நாயக்கர் மகன் டவுனில் படித்து, வடக்கே வியாபாரம் செய்து, ஊரில் காடு கரை வாங்கியது போல தன் மகனும் செய்வான் என்கிற நம்பிக்கையில் மூக்குத்தி கம்மலை வித்தது தான் மிச்சம் சுப்பிக் கிழவிக்கு. பின்பு அவனுக்கு திருமணம் ஆகி பிள்ளை குட்டிகளோடு இருக்கும் போது, அவர்களுக்குக் கொடுத்து வந்த பணம் போதாததால் வாய்விட்டு கேட்டும் விட்டாள் கிழவி. ஆனால் அவன் கஷ்டத்தை எடுத்துச்சொல்ல கிழவி அழுது விட்டாள். ராமுக்கிழவனும் சுப்பிக் கிழவியும் அவன் டவுனில் கஷ்டப்படுவதை நினைத்து மனம் உடைந்து போனார்கள்.
நிராசை - தின்பண்டம் வாங்க துண்டாக காசும் இல்லை. பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் நிம்மதியாக இருக்க முடியாமல், மகனின் நிர்பந்தத்தால் அவன் குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருக்க வேண்டிய நிலை.
மறுபடியும் சந்திரன் தன்னோடு வருகிறார்களா இல்லையா என்று கேட்க, இருவரும் இனிமேல் கொண்டு எதுக்குய்யா என்று இழுக்கிறார்கள். அப்பொழுது சந்திரன் உடைத்துப் பேசினான். அவன் மனைவி வீட்டு வேலைகளையும் பார்த்துக்கொண்டு, இராத்திரி பகல்னு தீப்பெட்டி ஒட்டி அவள் சம்பாரிக்கிறாள் என்றும், இவன் வாங்குகிற சம்பளமும் சேர்த்து, பிள்ளைகளுக்குப் படிப்புச் செலவு, துணிமணி, வைத்தியச் செலவு என்று போத வில்லையென்றும் சொன்னான். இவர்கள் வந்தால் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு ஒத்தாசையாக இருக்கும் என்றும் தவிர இங்கு காடு கரை எதுவும் இல்லையென்றும் சொன்னான்.
விரக்தி - சாதனை எதும் செய்யமுடியாமல் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை
காட்டை வித்து பணத்தைக் கொடுக்க வக்கில்லாமல் போய்விட்டோமே என்று கிழவனின் மனம் பாரமானது. மூட்டையைக் கட்டிக்கொண்டு மகனுடன் கிளம்பியபோது, அவனது அப்பாவின் ஞாபகம் வந்தது. தெற்கே எங்கேயோ இருந்து பஞ்சம் பிழைக்க இங்கு வந்தார் அவர். இங்கு ஒன்றும் சாதிக்காமல் மகனோடு இப்பொழுது வேறு ஊருக்குப் போக வேண்டியிருக்கிற நிலையை நினைத்து கண்கள் கலங்கியது. இருந்த ஊரைப் பார்க்க நடையை நிறுத்த, எட்டிப் போடுங்க நடையை என்றான் சந்திரன் என்று கதை நிறைவுறுகிறது.
******
10. அப்பாவின் பிள்ளைகள்
ஆசை - அப்பாவைப் போலன்றி வாழவும், அழகிய பெண்களின் முகம் பார்க்கவும்
அம்மா எதைச் செய்தாலும் அதில் ஓர் அழகு இருக்கும். அப்பாவிடம் அதை எதிர்பார்க்க முடியாது. அவர் பேச்சு கரடுமுரடானதாக இருக்கும். அவர், இவனை, உடனே போய் அன்னரத்னா மேட்ச் ஃபேக்டரியில் வேலைக்குச் சேரச் சொல்கிறார். இவன் கல்லூரிக்குப் போகும் போது, கையில் தூக்கு வாளிகளுடனும் முகத்தில் சிரிப்புடனும் தீப்பெட்டிக் கம்பெனிகளுக்குப் போகிற சில அழகான முகங்கள், கண்ணெதிரே வந்ததால், அந்த வேலைக்குப் போவதற்கு ஒத்துக் கொள்கிறான். அப்பாவைப் போல அழகியலற்று இருக்கக்கூடாது என்று மகனுக்கு ஆசை.
முட்டுக்கட்டை - பணியிட சவால்கள்
முதலாளி, படிப்பு, டைப்ரைட்டிங் திறன் எல்லாம் கேட்டுவிட்டு, முருகேசனை (கணக்கப்பிள்ளையை) அழைத்து அவனோடு இவனை அனுப்பி வைத்தார். முருகேசனின் மேசை முழுக்க கணக்கு நோட்டுகள். சுவருக்குப் பின்னால் ஹாலில் வேலை செய்யும் பெண்களின் பேச்சுக் குரல்கள். முருகேசன் முதலாளியின் வீட்டிற்கு ஓர் அவசர வேலையாய் போய்விட்டதால், ஒரு கடிதத்தை டைப் செய்ய, முதலாளி இவனிடம் கொடுக்கிறார். நிதானமாக அதை முடித்து அவரிடம் கொடுத்து அவர் புன்னகைத்ததும் தான் இவனுக்கு மூச்சு வந்தது.
ஒரு பெரியவர் முருகேசனைத் தேடிக்கொண்டு வந்தார். வேலை செய்யும் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளக்கணக்கை செய்யச் சொன்னார். கொஞ்சம் நாகரீகமான பெயருக்கு அழகான எடுப்பான முகத்தையும் சுப்பம்மாள் மாதிரி பெயர்களுக்கு சுமாரான முகத்தையுமாக மனதில் கற்பனை பண்ணிக்கொள்கிறான். இன்னும் முருகேசன் வராததால், வங்கிக்குச் சென்று செக்கை கேஷ் பண்ணிக்கொண்டு வரச்சொன்னார் முதலாளி. சைக்கிளை எடுத்துக் கொண்டு போகச் சொன்னார். பணம் வாங்கிக்கொண்டு திரும்பினான். அதற்குள் திரும்பி வந்து விட்ட முருகேசனிடம் பணத்தைக் கொடுத்தான்.
இன்னும் கொஞ்சம் கணக்கு வேலையைக் கொடுக்க முற்படும்போது, அவன் வயிற்றில் நெருப்பாய் பசி இருப்பதைப் புரிந்துக்கொண்டு சாப்பிடச் சொன்னார் முருகேசன். சாப்பிட்டு வந்து கூலி கணக்கை கூட்டும் போது, இடையிடையில் சுவருக்குப் பின்னால் முகங்களைத் தேடும் அவன் மனசு. அப்பொழுது முதலாளி அவனை ஹெட்போஸ்ட் ஆபீஸூக்குச் சென்று சில கடிதங்களைப் போடச் சொன்னார். போய் திரும்பியதோடு அன்றைய வேலை முடிந்தது என்ற நினைத்தான். ஆனால் முருகேசன் சம்பளம் போட்டுவிடுவோம் வா என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு போனார்.
நிராசை - வழிகிற முகமும், வறண்ட மனமும்
பெண்கள் பக்கத்தில் வந்து நின்று சம்பளம் வாங்கினார்கள். ஆவலுடன் ஒவ்வொரு முகத்தையும் பார்த்தான். மலர்ச்சியில்லாத எண்ணெய் வழிகிற வறண்ட முகங்கள். மூக்கிலடிக்கும் குப்பென்ற நெடி. இவன் மனதின் சித்திரங்கள் அழிந்து வழிந்தன. உடம்பெல்லாம் அசதி.
விரக்தி - அப்பாவைப் போல் கத்தி
இவனை இருக்கச் சொல்லிவிட்டு வெளியே சென்ற முருகேசன் வெகு நேரமாகியும் திரும்பி வராததால், முதலாளி போகச் சொல்ல, இரவில் வீடு திரும்புகிறான். வீட்டில் அம்மா படுத்துவிட்டாள். ஓரிரு முறை கதவைத் தட்டினான். ‘கதவைத் திறந்து தொலை’ என்று கத்தினான். அட! அப்பா மாதிரி கத்துகிறோமே என்று அவனது உடம்பு அதிர்ந்ததாக கதை நிறைவுறுகிறது.
******
11. சுப்புத்தாய்
ஆசை - பாலியல் சிண்டலற்ற பாதுகாப்பான வாழ்க்கை வாழ
தீப்பெட்டி ஆபீஸூக்கு வண்டி ஓட்டுகிறவன் ரத்தினம். தன் ஆத்தாளுக்குச் சுகமில்லையாதலால் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக அந்த வண்டியில் கூட்டிட்டுப்போக, சுப்புத்தாய் ரத்தினத்தை வேண்டுகிறாள். முதலில் முடியாது என்று சொல்லி, பிறகு கூட வந்தவர்கள் கேட்டுக்கொண்டதால் ரத்தினம் ஒத்துக்கொண்டான்.
சுப்புத்தாய், தன் ஆத்தாளுடனும், தம்பி பயலுடனும், ரத்தினம் ஓட்டும் தீப்பெட்டி ஆபீஸ் வண்டியில் ஏறுவதில் கதைத் தொடங்குகிறது. பெரியாஸ்பத்திரி திறக்கும் வரைக்கும், ஆத்தாளையும் தம்பிப் பயலையும், மருந்து அரைக்கிற அறைக்கு அருகே உட்கார வைத்தாள். அங்கு தான் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என எண்ணினாள். எல்லாரையும் வைது கொண்டேயிருக்கும் கணக்கன், நல்ல வேளையாக ஆத்தாளை வைய வில்லை. சுப்புத்தாய் தீப்பெட்டி ஒட்ட போய்விட்டாள்.
முட்டுக்கட்டை -கொடுமைச் சக்கரத்தில் சிக்கிக்கொண்டவர்கள்
கணக்கனிடம் ஐந்து ரூபாய் அட்வான்ஸ் கேட்டதற்கு, முதலாளியிடம் கேட்டுத் தான் தர முடியும் என்று சொல்லிவிட்டான். அதில் தான் ஆத்தாளுக்கு குளுக்கோஸ் வாங்கித் தர எண்ணியிருந்தாள் சுப்புத்தாய். தம்பிப்பயலுக்கு ஆத்தா பால் கொடுத்தால் அவனுக்கும் காய்ச்சல் வந்து விடும் என்பதால், கேப்பை மாவைத் தான் கரைச்சுக் கொடுத்தார்கள். ஆனால் அவன் பசியில் அழுததைக் கேட்டு வந்த பார்த்த பொழுது, ஆத்தா அவனுக்கு பாலைக் கொடுத்துக்கொண்டிருந்தாள். தம்பிப் பயலுக்கும் காய்ச்சல் வந்துவிடுமே என்று சுப்புத்தாயிக்கு அழுகை வந்தது.
நிராசை - கணக்கனின் சீண்டலுக்கு பலி
திடீரென்று ஆத்தா யாரோடு சண்டை போடுவது மாதிரி சத்தம் கேட்டதும், தீப்பெட்டி ஒட்டுவதை நிறுத்துவிட்டு ஓடிச் சென்று பார்த்தாள். மத்த சில பிள்ளைகளும் ஓடிப் போய் பார்த்தார்கள். மானங்கெட்ட பயலே என்று ஆத்தா கணக்கனை வைது கொண்டிருந்தாள். கணக்கனோ எதுவுமே செய்யாதவன் மாதிரி அங்கே உட்காரக் கூடாது என்று விரட்டினான். அப்பொழுது முதலாளி ஸ்கூட்டரில் வந்து விட்டார்.
விரக்தி - பாதுகாப்பு பற்றி அவர்களுக்கு கவலையில்லை
பாப்பாக்கா முதலாளியிடம் முறையிட, கணக்கனைப் பார்த்து, போய் வேலையைப் பாருப்பா என்று சொல்லிவிட்டு, சுப்புத்தாயைக் கூப்பிட்டு ஐந்து ரூபாயைக் கொடுத்து போம்மா என்று அனுப்பிவிட்டார். பெரியாஸ்பத்திரிக்குச் சென்று விட்டார்கள். ஆத்தா ஐயாவை நினைத்து அழுதாள். சுப்புத்தாயும் அழுது கொண்டே ஆத்தாவை தேற்றினாள் என்று கதை நிறைவுறுகிறது.
பாலியல் சீண்டல்கள். அதைக் கண்டு கொள்ளாத முதலாளிகள்.
*****
12. குரல்கள்
ஆசை - பாதுகாப்போடு வாழ
தொழிலாளர்கள் பணியிட பாதுகாப்போடு வாழ விரும்புகிறார்கள். அதுமட்டுமல்ல, நேர்மையோடும் வாழ விரும்புகிறார்கள். தவறு நடந்துவிட்டால் கூட அதை மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும் என்ற அறத்தோடு வாழ ஆசைப்படுகிறார்கள்.
முட்டுக்கட்டை - சுரண்டும் முதலாளிகள், அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள்
பயர் ஆபீஸ் என்று சொல்லப்படுகிற வெடிகள் செய்யும் தொழிற்சாலையில் விபத்து நடக்கிறது. அதில் பலர் இறந்து போகிறார்கள். ஆனால் அந்த இறப்புச் செய்தியை மூடி மறைக்க முதலாளிகளும் அரசியல்வாதிகளும் கிராமத்திற்கு வந்து, குடும்பங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். ஊருக்கு சில கட்டுமானங்களைச் செய்து தருவதாக வாக்களிக்கிறார்கள். விபத்தில் இறந்தது மூன்று பேர் தான். நைட் வேலைக்குப் போன மற்ற மூன்று பையன்களும் இதோ தப்பித்து வந்திருக்கிறார்கள் என்று சொல்லச் சொல்லுகிறார்கள்.
நிராசை - அறியாமையும் அபாயநிலையும்
ஒளிப்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னதும் எல்லாப் பிள்ளைகளும் முண்டியடித்து நிற்க முயற்சிப்பதில் கதைத் துவங்குகிறது. ஆனால் காளியப்பன், ரங்கசாமி, மாரி ஆகிய மூன்று பேரை மட்டும் எடுத்தால் போதும் என்று ஒளிப்படம் எடுக்க வந்தவர் சொல்லிவிட, மற்ற பிள்ளைகள் ஏமாந்து போனார்கள். அவர்களையும் சட்டையில்லாமல் தான் படம் எடுக்க வேண்டும் என்றார். மாரிக்கு அது ஏன் என்று புரியவில்லை. மூன்று பேரையும் சட்டையில்லாமல் போட்டோ எடுத்துவிட்டு, ஒப்புக்கு எல்லோரோடும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு இன்னொரு ஆளுடன் கிளம்பினார். அவர்கள் கிளம்பும் போது மாடத்தி தான் பணம் ஏதும் தரலையா என்று கேட்டாள். அவர்கள் ஒரு கும்பிடு போட்டுவிட்டு பைக்கில் போய்விட்டார்கள். மாடத்தி அப்படிக் கேட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. சில நாட்களாகவே காரிலும் பைக்கிலும் சிலர் வந்து ஊரில் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தது அந்த எதிர்பார்ப்புக்குக் காரணம்.
விரக்தி - அவலம் நிறைந்த வாழ்க்கை
கடந்த பத்து நாட்களாகவே சிலர் வருவதும், இந்தப் பிள்ளைகளிடம் சில கேள்விகள் கேட்பதும், படம் எடுத்துப் போவதுமாக இருப்பது மாரிக்கு சற்றே பயத்தைக் கொடுத்தது. அவர்கள் பத்திரிக்கையாளர்கள் என்பது பெரியவர்கள் தங்களுக்குள் பேசுவதில் புரிகிறது. மாரிக்கு மட்டும் கனவில் அந்த அவலக்குரல்கள் கேட்பதாக கதை நிறைவுறுகிறது.
பணக்கார வீட்டில், தெருவின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை பத்தாயிரம் வாலா வெடியை வைத்து வெடிப்பதை வேடிக்கைப் பார்த்திருக்கிறோம். ஒரு காலக்கட்டத்தில், ‘வித்தியாசமான தீபாவளி’ என்று தஞ்சாவூர் மாவட்டத்தில், செங்கிப்பட்டியிலும் பூதலூரிலும் விழிப்புணர்வு கூட்டங்கள் போடப்பட்டது. குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றிய உரையாற்றி, வெடிகளைப் போட்டு சமாதி உருவாக்கி, அதற்கு மாலையிட்டு, இனி வெடியில்லா தீபாவளியைக் கொண்டாட குடும்பங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.
*******
13. 26 ஆம் பக்கத்து மடிப்பு
ஆசை - இன்னொருவரைப் போல இருக்க
ராஜாமணி, கிருஷ்ணமூர்த்தியைப் போல ஒரு சமூகப் போராளியாக இருக்க விரும்புகிறான்.
முட்டுக்கட்டை - கூட இருப்பவர்கள்
ராஜாமணி ரிட்டையர் ஆகிவிட்டார். அவர் பரணிலிருந்து ஒரு ட்ரெங்குப் பெட்டியை இறக்கும் போது மனைவி பார்வதி சும்மா இருக்கமாட்டீங்களா என்று சொல்லிக்கொண்டே அதட்டுவதில் கதைத் தொடங்குகிறது. ராஜாமணியின் உயிர் நண்பன் கிருஷ்ணமூர்த்தி. அவன் தான் இப்பொழுது கடிதம் எழுதியிருக்கிறான். ரிட்டையர் ஆகிவிட்டதால் உறைந்து விடாமல், மனைவியோடு இங்கு வந்து போ என்று எழுதியிருக்கிறான். ராஜாமணி ஒரு சமூகப் போராளி. அவனை அடிக்கடி போலீஸ் தேடும்.
கிருஷ்ணமூர்த்தி உரிமையோடு ராஜாமணியின் வீட்டுக்கு வந்து அவனை வெளியே அழைத்துப் போவது பார்வதிக்குப் பிடிக்காது. மூஞ்சில் அடித்தது போல் அவள் பேசிவிடுவாள். நோட்டுகள் புத்தகங்கள் டைரிகள் பழைய கடிதங்களென அவன் வைத்திருந்தவை பழுப்பேறி உதிர்ந்தன. சிலவற்றை கறையான் அரித்திருந்தது. இப்படி விட்டுவிட்டாளே என்று பார்வதி மேல் அவனுக்கு கோபம் வந்தது. ஒரு தடவை எல்லாவற்றையும் பழைய பேப்பருக்கு கடையில் போட இருந்தாள். இவனுக்கு ஆத்திரம் பொங்கியது. அவள் தான் இப்பொழுது எல்லாவற்றையும் அடைத்து ஒரு ட்ரங்க் பெட்டிக்குள் போட்டிருந்தாள்.
கிருஷ்ணமூர்த்தி ஜெயிலுக்குப் போய் வந்து அங்கு சில தோழர்களைச் சந்தித்ததாகச் சொன்னான். அன்றைக்குத் தான் ராஜாமணியின் பெற்றோர் அவனோடு சகவாசம் வைத்துக்கொள்ளாதே என்று சொன்னார்கள்.
நிராசை - படிக்க முடியாமல் நூல் பக்கம் மடித்து வைக்கப்படுகிறது
டிரங்க் பெட்டியைத் திறந்தான். பழைய நினைவுகள் வந்தன. அவன் நாட்குறிப்பில் பல விஷயங்களை எழுதியிருந்தான். ஆபீஸ் வருடாந்திர இன்ஸ்பெக்ஷன் பற்றி, மகள் கண்ணம்மா பெரிய மனுஷியாகிவிட்டதைப் பற்றி, மூன்றாவது பையன் பிறந்துவிட்டது பற்றி என்று பலவாறு எழுதியிருந்ததைப் படித்தான். பிறகு தான் எழுதிய கவிதைகளைப் படித்தான். வெள்ளைக்காரர்களை எதிர்த்து பம்பாய் துறைமுகத்தில் நடந்த புரட்சி பற்றிச் சொல்லி கிருஷ்ணமூர்த்தியும் ராஜாமணியும் பேசி சிரித்தது நினைவுக்கு வந்தது. ட்ரங்க் பெட்டியில் கடைசியில் கிருஷ்ணமூர்த்தியின் கவிதை நூல் ஒன்று இருந்தது. அதில் இருபத்தாறாம் பக்கத்தில் ஒரு மடிப்பு இருந்தது. அதைப் படித்துக்கொண்டிருந்த போது தான் பாரதி பெரிய திண்ணையிலிருந்து கீழே விழுந்தான். அதற்குப் பிறகு குடும்பச் சுமையால் படிக்கவேயில்லை.
விரக்தி - மடிப்பை நிமிர்த்தினாலும்
இப்பவும் அந்த இருபத்தாறாம் பக்கத்து மடிப்பை எடுத்து விட்டு படிக்கப் போகும் போது பார்வதி சாப்பிட அழைக்கிறாள். சீக்கிரம் சீக்கிரமாக சாப்பிட்டு விட்டு, அந்த மடிப்பை நிமிர்த்தி விட்டு படிக்குத் துவங்குவதில் கதை நிறைவுறுகிறது.
தன் வாழ்நாளிலேயே புரட்சியைக் காண சிலர் ஆசைப்படுகிறார்கள். கடல் அலைகள் தொடர்ந்து தீண்டும் பாறாங்கல், காலம் எடுத்தாலும் கரைந்து போகும். அப்படி கரைந்து போதல் ஓர் அலையால் மட்டும் நடப்பதில்லை. ஒவ்வொரு அலையாலும் நடக்கிறது. தான் செய்ய வேண்டிய வேலையை ஒவ்வொரு அலையும் செய்தால், நடக்க வேண்டியது தானாக நடக்கும்.
**********
இறுதியாக..
ஜென்ஷி GenZ பிள்ளைகள் இந்த யதார்த்தக் கதைகளை எப்படி புரிந்துக் கொள்வார்கள்? எப்படி ரிலேட் செய்வார்கள் என்ற கலந்துரையாடல் செய்யப்பட்டது. வாசகன் முயற்சி செய்யவேண்டும் என்று ஒரு சாராரும், ரிலேட் செய்வது கஷ்டம் என்ற மறு சாராரும் கலந்துரையாடியது சிறப்பு. ஒரு களத்தில் ஒரு காலக்கட்டத்தில் நடக்கிற நிகழ்வுகளின் தொகுப்பாக வரும் கதைகளோடு எளிதாகவும் சிறப்பாகவும் ரிலேட் செய்து கொள்ள முடியும் என்றும் மாறாக வேறு களத்தில் வேறு காலக்கட்டத்தில் நடக்கிற நிகழ்வுகளின் தொகுப்பாக வரும் கதைகளோடு ரிலேட் செய்ய முடியாது என்கிற கருத்துரு வட்டத்தில் காணப்பட்டது. அதற்கு மாறாக எந்தவித களத்தோடும், எந்த காலத்திலும் நடக்கிற நிகழ்வுகளோடு எந்த வாசகனும் (ஜென்ஷி வாசகர்கள் உட்பட) ரிலேட் செய்யமுடியும். அதற்கு வாசகர் பக்கத்திலிருந்து முயற்சி தேவை என்ற கருத்துருவும் காணப்பட்டது.
வேறு ஒரு களத்தில், ஏதோ ஒரு காலத்தில் நடந்த நிகழ்வை, மற்றொமொரு களத்தில், வேறொரு காலத்தில், கம்பர் கம்பராமாயணமாக படைக்கிறார். இருந்தாலும் வாசகர்கள் அதோடு எளிதாக உறவு கொள்ளமுடிகிறதே. அது ஏன்? ஏனென்றால், உலகளாவிய விழுமியங்கள் ஒன்றானவை. அன்பு, வஞ்சகம், நட்பு, இரக்கம், பொறாமை என்று உலகளாவிய மனித மன இயல்புகளும், மனித பண்பாடுகளும் வெளிப்படும் போது, அந்தப் படைப்போடு வாசகன் ஒன்றிப் போக முடிகிறது.
தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் சொல்கிற முதற்பொருள் (நிலமும், பொழுதும்), கருப்பொருள் (தெய்வம், மக்கள், உணவு, விலங்குகள், தாவரங்கள், பறவைகள், தொழில், இசை போன்றவை), உரிப்பொருள் (திணையொழுக்கம், உணர்வு) ஆகிய மூன்றும் கொண்டது தான் கதை. முதற்பொருள் மாறினாலும், கருப்பொருள் மாறினாலும், உரிப்பொருள் மனித அனுபவத்தில் பொதுவாகவே இருக்கின்றன.
பெயரில் என்ன இருக்கிறது? என்ற சொற்றொடர் கேள்விப்பட்டிருக்கிறோம்.
“பெயரில் என்ன இருக்கிறது? நாம் ரோஜா என்று அழைக்கும் மலரை
வேறு எந்தப் பெயரால் அழைத்தாலும் அதன் மணம் இனிப்பாகவே இருக்கும்.” - (ரோமியோ ஜூலியட் - ஷேக்ஷ்பியர்)
ஜூலியட் இங்கு கூறுவது என்னவென்றால், ஒரு மனிதனின் உண்மையான இயல்பும் ஆன்மாவும் அவனது பெயரையும் குடும்ப அடையாளத்தையும் விட மிக முக்கியமானவை என்பதாகும். அவள் ரோமியோவை உண்மையாகக் காதலிக்கிறாள். ஆனால் பிரச்சினை என்னவென்றால், ரோமியோ எதிரி குடும்பத்தைச் சேர்ந்த மாண்டக்யூ குடும்பத்தைச் சேர்ந்தவன். அவளோ கேபுலட் குடும்பத்தைச் சேர்ந்தவள். பெயர் வெறும் ஒரு அடையாளச் சீட்டு மட்டுமே என்று அவள் வாதிடுகிறாள்.
இந்த வரிகள் சமூகப் பிளவுகளையும், குடும்பப் பெருமையையும், சாதி அடையாளத்தையும், வர்க்க உணர்வையும், பெயர்களுக்கும் பட்டங்களுக்கும் சமூகம் கொடுக்கும் அதீத முக்கியத்துவத்தையும் கேள்வி கேட்கின்றன. மனித மதிப்பு வெளிப்புற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை இந்த வரிகள் வலியுறுத்துகின்றன. ஒன்றின் சாராம்சமே அதன் பெயரையும் தலைப்பையும் விட முக்கியம் என்ற உன்னதக் கருத்தை முன்வைக்கின்றன.
ஆனால், பெயர்கள் அடையாளத்தை மட்டும் சுமந்து செல்லவில்லை. அவை நினைவுகளையும், வரலாற்றையும், உணர்ச்சிகளையும், கலாச்சாரத்தையும், சாதியையும், மதத்தையும், தேசியத்தையும், மொழியையும், சில சமயங்களில் அதிகாரத்தையும் சுமந்து செல்கின்றன. நிஜ வாழ்க்கையில் பெயர்கள் சிறிய சமூகப் பாஸ்போர்ட்டுகளைப் போலச் செயல்படுகின்றன. ஒரு பெயர் கதவுகளைத் திறக்கச் செய்யும். ஒரு பெயர் கதவுகளை மூடச் செய்யும். ஒரு பெயர் உறவை உருவாக்கும். ஒரு பெயர் பாசத்தை முறிக்கும். முன்னெடுப்பையும் ஏற்படுத்தும். அதே நேரத்தில் பாரபட்சத்தையும் வெறுப்பையும் விதைக்கவும் செய்யும்.
பெயர்கள் நம் சமூகத்தில் — எந்தச் சமூகத்திலும் — இன்னும் அதிகமாகவே முக்கியத்துவம் பெறுகின்றன.
ச. தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய்’ கதைமாந்தர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பெயர்களை கூர்ந்து நோக்கினால் மேற்சொன்ன உண்மைகள் புரியும். ஓர் எழுத்தாளன், தன் கதாமாந்தர்களுக்கு சமூக, கலாச்சார, பொருளாதார புரிதலுடன் பெயர் வைக்கவேண்டியிருக்கிறது என்பது புலனாகும். சிறு குறு தெய்வங்கள் நிறைந்த பகுதியிலிருந்து முகிழ்க்கும் அவரது கதாபாத்திரங்கள், தங்கள் ஏழ்மைக்கும், வளமைக்கும் ஏற்றவாறு பெயரிகளிடப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகும்.
1. பாவனைகள்: பெயர் இல்லை.
2. அசோகவனங்கள்: மாரியம்மாள், கோமதி, தங்கராசு, காளியப்பன்
3. வெயிலோடு போய்: மாரியம்மாள், சீனியம்மாள் (மாரியம்மாளின் நண்பி), தங்கராசு (மாரியம்மாளின் முறைப்பையன்), பொன்னாத்தா (தங்கராசுவின் அம்மா) கோமதி (தங்கராசுவின் தங்கை), பாட்டையா (தங்கராசுவுக்கு வேண்டியவர்), ஜானு (தங்கராசுவின் மனைவி)
4. மீடியம்: பெயர் இல்லை, ரெங்கசாமி (பியூன்), கிருஷ்ணன் (டைப்பிஸ்ட்)
5. கருப்பசாமியின் அய்யா: கருப்பசாமி, காளியம்மாள் (கருப்பசாமியின் தாய்), இசக்கிமுத்து (கருப்பசாமியின் அப்பா), நல்லமாப்பாட்டி, நம்மையா நாய்க்கர் (ஊரிலேயே ஆழமான தோட்டத்துக் கிணறு உள்ளவர்)
6. அந்நியம்: சாமிநாதன் (மிலிட்டரி ரிட்டர்ன்), ராசைய்யா, முத்துராசு (சாமிநாதனின் தம்பி) - இந்தக்கதைக்கு மட்டும் வாசிப்பு அனுபவம் எழுதப்படவில்லை.
7. பொன்ராசின் காதல்: பொன்ராசு, சந்திரா (பொன்ராசின் காதலி), சுப்பிரமணி (பொன்ராசின் மாமா), ராமசாமி (பொன்ராசின் முதலாளி), வேல்சாமி (பொன்ராசின் பால்ய சிநேகிதன்), செண்பகவல்லி (பொன்ராசின் முதலாளியான ராமசாமியின் மகள்; பொன்ராசின் மனைவி),
8. வார்த்தை: சோலையப்பன், மாரிச்சாமி (பள்ளி நண்பன்), முருகேசன் (காலேஜ் படித்துவிட்டு சும்மாயிருக்கிற அண்ணன்), குருநாதன் (இன்னொரு பள்ளி மாணவன்), செல்லையா நாயக்கர் (தோட்டம் வைத்திருப்பவர்), முத்துப்பாட்டி (தெருவில் இருப்பவர்).
9. பிரக்ஞை: கோபால்சாமி (ஆபீஸ் சீனியர்), ராமலிங்கம்,
10. வேறு ஊர்: சந்திரன், ராமுக் கிழவன், சுப்பிக்கிழவி, சீனி நாயக்கர் (கடைக்காரர்), சுப்பா நாயக்கர் (மகன் டவன்ல படிச்சிட்டு, வடக்கே போய் வியாபாரம் பண்ணி, காடு கரையின்னு வாங்கிப் போட்டான்.)
11. அப்பாவின் பிள்ளைகள்: முருகேசன் (தீப்பெட்டிக் கம்பெனி கணக்கப்பிள்ளை), வேலாயுதம் அண்ணாச்சி (இவன் தந்தை)
12. சுப்புத்தாய்: சுப்புத்தாய், ரத்தினம் (தீப்பெட்டி ஆபீஸ் வண்டி ஓட்டும் ஓட்டுநர்), பாப்பக்கா (கூட வேலை செய்யும் அக்கா)
13. குரல்கள்: காளியப்பன், ரங்கசாமி, மாரி, (மூன்று பேரும் சட்டையில்லாம போட்டோவுக்கு நிற்கப்பட்டவர்கள்) மாடத்தி (பணம் ஏதும் தரமாட்டாங்களா என்று கேட்டவள்), காளி, ரங்கன், மாரி (பணம் கொடுக்க காரில் வந்த ஆட்கள்)
14. 26ஆம் பக்கத்து மடிப்பு: ராஜாமணி (ரிட்டையர்டானவர்), பார்வதி (ராஜாமணியின் மனைவி), கிருஷ்ணமூர்த்தி (ராஜாமணியின் நண்பர்), பாரதி (ராஜாமணியின் மூன்றாவது மகன்), கண்ணம்மாள் (ராஜாமணியின் மூத்த மகள்)
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிவகாசியில் வசிக்கிறவர். முன்னாள் இராணுவ வீரர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தில் இயங்குபவர். இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர். வெறும் படைப்பாளி மட்டும் அல்ல. அவர் இயல்பிலேயே ஒரு போராளி. அவரது வெய்யிலோடு போய்’ சிறுகதைத் தொகுப்பில் வெயிலின் உக்கிரம் போல் கதாபாத்திரங்கள் கழல்கின்றன. வெயிலில் வெந்து தணிந்து உழல்கின்றன. அவர் கதைகளில் உலவும் ஏழைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பெண்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இருந்த ஆசைகளும், முட்டுக்கட்டைகளும், நிராசைகளும், விரக்தி நிலைகளும் கீழே சுருக்கமாக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆசை, முட்டுக்கட்டை, நிராசை, விரக்தி
1. ‘பாவனைகளி’ல் சிறுவர்களுக்கு அல்வா, ஜிலேபி போன்ற தின்பண்டங்கள் வாங்கி உண்ண ஆசை. ஆனால் வீட்டு வறுமை நிலைமை குறுக்கே நிற்கிறது. அவர்கள் ஆசை நிராசையாகிறது. வெறும் எள்ளுப்புண்ணாக்கு மட்டுமே கிடைக்கிறது. (ஏழை)
2. ’அசோகவனங்களி’ல் மாரியம்மாளுக்கு தங்கராசுவுடன் வாழ ஆசை. ஆனால் அவள் செய்யும் சிறை போன்ற வேலை குறுக்கே நிற்கிறது. அவள் ஆசை நிராசையாகிறது. அழுகையோடு அந்த நிர்பந்தத்திலேயே வாழவேண்டியிருக்கிறது. (பெண்/தொழிலாளர்)
3. ’வெயிலோடு போயி’ல் மாரியம்மாளுக்கு தங்கராசுவுடன் வாழ ஆசைப்படுகிறாள். தங்கம் குறுக்கே நிற்கிறது. அவள் ஆசை நிராசையாகிறது. வேறு ஒரு கணவனுடன் வாழ வேண்டியிருக்கிறது. (பெண்/ஏழை)
4. ’மீடியம்’ல் அவர் ஓர் உள்ளாடை வாங்க ஆசைப்படுகிறார். வறுமை குறுக்கே நிற்கிறது. அவர் ஆசை நிராசையாகிறது. ஒரு கைக்குட்டை வாங்கி திரும்புகிறார். (நடுத்தர வர்க்கத்தினர்)
5. ’கருப்பசாமியின் அய்யா’வில் கருப்பசாமி வழக்கமாக வாழாமல் வித்தியாசமாக வாழ ஆசைப்படுகிறான் (வடையை செவ்வகமாக சுடுவது, தூக்கிப்போட்டு விளையாடுவது). அவள் மனைவி குறுக்கே நிற்கிறாள். அவன் ஆசை நிராசையாகிறது. அடங்கிப் போகிறான்.
6. ‘பொன்ராசின் காதலி’ல் சந்திராவுடன் வாழ ஆசை. ஆனால் அந்தஸ்து குறுக்கே நிற்கிறது. அவன் ஆசை நிராசையாகிறது. செண்பகவல்லியுடன் வாழ்ந்தாலும், சந்திராவின் இன்ஜினியர் கணவரை மிஞ்சவே முயற்சிக்கிறான். (ஏழை)
7. ‘வார்த்தை’ யில் சோலையப்பனுக்கு உல்லாசப் பயணம் செல்ல ஆசை. ஆனால் வறுமை குறுக்கே நிற்கிறது. அவன் ஆசை நிராசையாகிறது. அழுது அழுது தூங்கிப் போகிறான். (ஏழை)
8. ‘பிரக்ஞை’ யில் அவனுக்கு சுதந்திரமாக வேலை செய்ய ஆசை. ஆனால் மேலாதிக்க ஆபீஸ் கட்டமைப்பு குறுக்கே நிற்கிறது. அவன் ஆசை நிராசையாகிறது. காலில் இரும்புச்சங்கிலியுடன் வாழும் உணர்வோடு வாழ்கிறான். (நடுத்தரவர்க்கம்/தொழிலாளி)
9. ‘வேறு ஊரி’ ல் ராமு கிழவனுக்கும் சுப்பிகிழவிக்கும் பஞ்சம் பிழைக்க வந்த ஊரிலேயே இருக்க ஆசை. ஆனால் அவர்கள் மகன் சந்திரன் தங்களோடு வந்து ஒத்தாசையாக இருக்க கூப்பிட, அவர்கள் ஆசை நிராசையாகிறது. கண்ணீர் மல்க, விருப்பமின்றி, வேறு ஊருக்கு கிளம்புகிறார்கள்.
10. ‘அப்பாவின் பிள்ளைகளி’ல் அப்பா போல அழகியலற்று இருக்கக்கூடாது என்பது பிள்ளையின் ஆசை. ஆனால் அவன் வேலை அவனை மாற்றி விடுகிறது. அவன் ஆசை நிராசையாகிறது. அழகிய பெண்களின் முகங்களைப் பார்க்க ஆசை. ஆனால் எண்ணெய் வழிந்த பெண் தொழிலாளிகளின் முகங்களையேப் பார்க்க முடிகிறது. அவன் ஆசை நிராசையாகிறது. அப்பாவின் முரட்டுத்தனம் அவனது குணத்தில் சேர்ந்து விடுகிறது.
11. ‘சுப்புத்தாயி’ல் ஆத்தா பாலியல் தொந்தரவுளின்றி வாழ விரும்புகிறாள். ஆனால் கணக்கன் போன்ற ஆட்கள் விடுவதாயில்லை. அவள் ஆசை நிராசையாகிறது. சீண்டல்களின் மத்தியில் வாழ வேண்டியிருக்கிற அவல நிலையில் வாழ்கிறாள்.
12. ‘குரல்களி’ல் தொழிலாளர்கள் நேர்மையோடு, பாதுகாப்பான வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள். ஆனால் முதலாளிகளும், அரசியல்வாதிகளும், பத்திரிக்கையாளர்களும் குறுக்கே நிற்கிறார்கள். அவர்கள் ஆசை நிராசையாகிறது. இலவசங்களைப் பெற்று, பொய் கூறி, மனக்குமுறலோடு வாழவேண்டிய நிர்பந்தத்தில் வாழ்கிறார்கள்.
13. ‘26ஆம் பக்கத்து மடிப்பி’ ல் ராஜாமணி, கிருஷ்ணமூர்த்தியைப் போல ஒரு சமூகப் போராளியாக இருக்க விரும்புகிறான். ஆனால் அவன் பெற்றோர், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் குறுக்கே நிற்கிறார்கள். ராஜாமணியின் ஆசை நிராசையாகிறது. ஒரு கவிதைத் தொகுப்பைக்கூட தொடர்ந்து படிக்கமுடியாமல் குடும்பத் தொந்தரவுகளிலில்(!) உழல வேண்டியிருக்கிறது.
********



Comments