கண்ணாட்டி - ஷான் கருப்பசாமி

ஷான் கருப்பசாமியின் ‘கண்ணாட்டி’ சிறுகதைத் தொகுப்பு கையில் உள்ளது.
எடுத்த எடுப்பிலேயே ‘ஒரு படைப்பில், ஒரு வார்த்தையை வெட்டி எடுத்தால் கூட அந்த இடத்தில் இரத்தம் வரவேண்டும்’ என்று எமர்சன் கூறியிருப்பதை குறிப்பிட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது. உயிர்த்துடிப்புள்ள ஒரு படைப்பில் ஒரு வார்த்தையை எடுக்கும் போது அது ஊனமாகி விடுகிறது என்று ப்ரதிபா ஜெயச்சந்திரன் அதற்கு கூடுதல் பொருள் சேர்க்கிறார்.
ஒரு கதை எவ்வாறு உருவாகிறது? காட்டுப்பாதையில் நடக்கும் போது எல்லா மரமும், மலரும், புல்லும், பூவும் நம் நினைவில் நிற்பதில்லை. சுருக்கென்று குத்திய முள் நிச்சயமாக நினைவில் இருக்கும். அது போல ஒரு மனிதனோ, நிகழ்வோ, நம் நெஞ்சில் நிலைத்துவிடும். அதிலிருந்து கதை முளைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார் ஷான்.
என் பல கதைகள் இப்படித்தான் முளை விட்டது என்பது உண்மை.
தண்டும் வேரும்
ஒரு மரத்தின் மேல் பாகம் (நம் கண்ணால் பார்க்கக்கூடிய மண்ணிலிருந்து மேலே போகிற பாகம்), மண்ணின் பரப்பிலிருந்து மேலே மேலே போய், இடமும் வலமுமாக எல்லா பாகைகளிலும் கிளைகளாய் பரந்து விரிகிறது.
அந்த மரத்தின் கீழ் பாகம் (நம் கண்ணால் பார்க்கக்கூடிய மண்ணில் கீழே போகிற பாகம்) மண்ணின் பரப்பிலிருந்து கீழே கீழே போய், இடமும் வலமுமாக எல்லா பாகைகளிலும் வேர்களாய் பரந்து விரிகிறது.
நான் மண்ணிற்குள் போகிறேன் என்று தண்டோ, நான் வெளியில் செல்கிறேன் என்று வேரோ அடம் பிடிப்பதில்லை. அது அது தன் தன்மைக்கு ஏற்ப இயல்பாய் தன் தன் வழியில் பயணம் செய்கிறது.
மேலும் கீழும் போவதால் எதிரெதிர் திசையில் போவதால் இரண்டும் முரண்டுபட்டு நிற்பதில்லை. இது பகை முரண் அல்ல. நட்பு முரண். முரண்பாடுகளில் தான் வளர்ச்சி இருக்கிறது.
கணவன் ஒரு தன்மையிலும் மனைவி ஒரு இயல்பிலும் மாறுபட்டு இருப்பதால் ஒன்றாய் வாழமுடியாது என்று சொல்வதற்கில்லை. தண்டும் வேரும் போல தன் தன் தன்மையில் இயங்கினால் நலமே விளையும்.
தண்டு மரத்தை தாழ்வாகவோ, மேலாகவோ நோக்குவதோ, மரம் தண்டை தாழ்வாகவோ, மேலாகவோ நோக்குவதோ இல்லை. ஒன்றுக்கொன்று துணை நின்று ஒன்றையொன்று முழுமையாக்குகின்றன.
புனீத்தும் அழகியும் வேறு வேறு கைரேகைகளைக் கொண்டவர்களாக இருப்பதே வாழ்க்கையின் அழகு. பிரச்னைகளே குடும்பத்தை மேன்மையாக்குகிறது. இயந்திரத்தன்மை இளகி இயல்புத்தன்மை மேலோங்குகிறது என்பதை ‘மாமா’ கதையில் எடுத்துரைக்கிறார் ஷான்.
இன்னும் சில வருடங்கள் கழித்து எல்லாமே இயந்திர மயமாகும், அதில் காதலும் கல்யாணமும் எப்படி இருக்கும் என்கிற புள்ளியில் துவங்குகிறது, மேட்ச் மேக்கரின் (MAtch MAker-ன்) சுருக்கமான MAMA ‘மாமா’ கதை. பாண்டியன் ஒரு பெரும்புள்ளி. புனீத் அவரது பேரன். புனீத் தேர்ந்தெடுத்திருக்கும் மணப்பெண் பெயர் அழகி. இவர்களைச் சுற்றித் தான் கதை.
கதை நடக்கும் காலம் இயந்திரங்களின் காலம். மனிதர்கள் வாகனங்கள் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்ற காலம். தாத்தா பாண்டியன் அமர்ந்திருக்கும் சக்கர நாற்காலி, அவர் சொல்லும் திசைக்குத் தானாகவே செல்லும் காலம். புனீத் அணிந்திருக்கும் ஸ்மார்ட் ஆடை, அழகியின் சட்டைக்கு ஏற்று நிறம் மாறிக் கொள்ளும் காலம். மெய்நிகர் முப்பரிமாண உலகமயமான காலம். மூன்று நிமிடங்களில் ஒரு வீட்டையே கட்டி முடிக்கிற காலம். ரோபோட்கள் அன்னங்கள் போல நீந்தி, நதியின் நீரை சுத்தம் செய்யும் காலம். பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் திருமணங்களும், காதலித்து கல்யாணம் செய்யும் முறையும் வழக்கொழிந்து MAMA என்கிற மேட்ச் மேக்கரின் காலம். அல்காரிதம் தன்னைத்தானே செப்பனிட்டுக்கொள்ளும் காலம்.
சுத்தியல், மண்வெட்டி, கத்திரிக்கோல், அலக்கு போன்ற கருவிகளுக்கு மனித ஆற்றலை மட்டுமே பயன்படுத்தினால் போதுமானது. ஆனால், துணி துவைக்கும் இயந்திரம், கார், துளை போடும் இயந்திரம், கணிணி போன்ற இயந்திரங்களுக்கு மனித ஆற்றலோடு நீராவி, மின்சார, மின்னணு, சூரியஒளி போன்ற மற்ற ஆற்றல்களையும் பயன்படுத்த வேண்டும்.
இப்படி மனிதகுலம், மனித இன பரிணாம வளர்ச்சியில், இயற்கையை மட்டுமே நம்பி வாழும் விலங்கினங்களிலிருந்து வேறுபட்டு, இயற்கை விதிகளையும் வளங்களையும் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள, இப்பேர்பட்ட கருவிகளும் இயந்திரங்களும் பயன்படுகின்றன. மனிதன் ஒரு கருவியைச் செய்வதற்காக இன்னொரு கருவி செய்கிறான். அதுமட்டுமல்ல, தன் அறிவை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறான். அப்படி தலைமுறைகள் முந்தைய தலைமுறைகளிடமிருந்து கற்றுக் கற்று, MAMAவின் காலத்தில் எல்லாமே இயந்திரமயமாகியிருக்கிறது. திருமணத்திற்குத் துணைத் தேடுவதும் MAMA மூலமாகவே நடக்கிறது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன இயந்திரங்களின் அசுர வளர்ச்சி மனிதகுலத்தை எந்த நிலைக்கு இட்டுச் செல்லும்? உடல் உழைப்பு வேலையில் ஈடுபடுபவர்களும், அறிவுசார் தொழில்களில் ஈடுபடுபவர்களும் வேலை இழப்பர். அப்பொழுது வருமானம்? குடும்பத்தை எப்படி நடத்துவது? பெருந்தொழிற்நுட்ப நிறுவனங்களிடம் வளம் சேரும். பின்தங்கிய நாடுகள் மேலும் சீரழியும். போலி காணொளிகள், போலி தரவுகள் மூலம் சமூகக் கட்டமைப்புகளின் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை சிதையும். அரசியல் நிலைத்தன்மை கேள்விக்குறியாக்கப்படும். ஜனநாயகம் நிலை குலையும்.
இயந்திரங்களே சிந்திக்கும். படைக்கும். மனிதர்களின் சிந்திக்கும் திறனும், படைக்கும் திறனும் ஓரங்கட்டப்படும். அதனால் மனித உறவுகள் குளறுபடிக்குள்ளாகும். மனிதர்களின் தனியுரிமையும் அந்தரங்கமும் அச்சத்திற்குள்ளாகும். அவை இல்லாமல் போகும். இராணுவ அமைப்புகளில் நுண்ணறிவு ஆயுதங்களின் பங்கு மேலோங்குவதால், உலக நாடுகளிடையே ஆயுதப் போட்டி உருவாகி, அச்சத்திலேயே வாழும் நிலை உருவாகும். வங்கிகள் முழு இயந்திரமயமாகி விடும் போது, ஒரு சைபர் தாக்குதல் ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்தை சீர்குலைக்கப் போதுமானதாக இருக்கும். இயந்திரங்கள் சிந்தித்து முடிவெடுக்கும் பட்சத்தில் மனிதகுலத்திற்கு ஆபத்து வராது என்று எப்படி சொல்ல முடியும்?
அப்படிப்பட்ட காலத்தை ஷான் கற்பனை செய்து பார்க்கிறார்.
புனீத், தான் திருமணம் செய்துகொள்ள, தனக்குத் துணை கேட்க, MAMA அவனது குண நலன்களை பரிசீலித்து, அவனுக்கு ஏற்ற துணைகளைக் காட்டுகிறது. இருவர் இயல்பும் ஒட்டிப் போகிறதா என்று பார்த்துப் பார்த்துப் பரிசீலித்துக் காட்டுகிறது. ஆனால் எந்த பெண்ணையும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அப்படி பரிசீலிக்க ஒரு பெண் உருவம் வந்து பேசுகிறது. அந்தப் பெண்ணை அவனுக்கு ஏனோ பிடிக்கிறது. அவள் பெயர் தான் ‘அழகி’.
அழகியும் புனித்தும் சந்திப்பதில் தான் கதைத் துவங்குகிறது.
அழகி’யின் ‘தன் விபரங்களை’த் தேடிப் பார்க்கிறான். அவளுக்குப் பூனை பிடிக்கிறது. இவன் நாய் பிரியன். இப்படி எல்லாமே எதிரெதிர். ஆனால் அவளை என்னவோ அவனுக்குப் பிடித்திருந்தது. அவளுக்கும் என்னவோ அவனைப் பிடித்திருந்தது. ஆனால் MAMA எச்சரித்துக் கொண்டேயிருந்தது. உணர்ச்சிகளால் முடிவு செய்யாதே! தரவுகளும் கணக்குகளும் முக்கியம் என்று எடுத்துச் சொல்லிக்கொண்டேயிருந்தது.
சந்திப்பின் போது, ‘கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என்று அழகி கேட்க, புனீத் முடிவு செய்ய டைம் கேட்டான். அழகி சென்று விடுகிறாள்.
புனீத் தன் தாத்தாவைச் சந்திக்கிறான். அவன் தாத்தாவும் பாட்டியும், சாதிப் பொருத்தமில்லையென்றாலும், காதலித்து கல்யாணம் செய்தவர்கள். ஆனால் மாமா ஒருவர் ஜாதகம் பார்த்து ஓகே சொன்னா ஒத்துக்குவேன் என்று பாட்டியின் அப்பா சொல்லிவிட்டாராம். ஜாதகத்தைப் பார்த்து விட்டு பத்துக்கு ரெண்டு கூட பொருத்தம் இல்லையின்னு சொல்லிட்டாராம். ஆனா பாட்டி, அன்னைக்கே பொட்டியோட கிளம்பி வந்துட்டாளாம். ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டார்களாம். பல பிரச்னைகள் இருந்தாலும், நாங்க தோத்துபோயிடுவோம்னு எதிர்பார்த்திருந்தவங்க முன்னிலையில வாழ்ந்து காட்டனும்னு வைராக்கியமா இருந்தாங்களாம்.
கருவிகள் பற்றிக் கூறும் போது ‘அப்பாவின் குரல்’ என்ற கதையில் ஒன்றை போகிற போக்கில் ஒன்றை ஷான் சொல்லியிருப்பார். சடகோபன் (அப்பா) ஒரு மருத்துவமனையில் இருப்பார். அவர் வாயிலிருந்து இரண்டு குழாய்கள் வெளியே வந்து கொண்டிருக்கும். ஒரு கருவி சீரான இடைவெளியில் சத்தமிடும். ‘இப்பொழுதெல்லாம் கருவிகள் மூலம் தான் நாம் உயிரோடிருப்பதை உலகுக்கு உணர்த்த முடிகிறது’ என்று எழுதியிருப்பார்.
உறவும் உயிரும்
எங்கள் வீட்டருகே ஒரு பனைமரம் இருந்தது. பனை இலைகள் சரசரக்கும். பன நொங்கு காய்க்கும். சில கீழே பழுத்து விழும். பல நாட்களாகப் பார்த்திருக்கிறேன். அந்தப் பனைமரம் தனிமையில் சோகமாக இருப்பதாகவே எனக்குப் படும்.
ஒரு நாள் எழுந்துப் பார்த்தேன். அதில் தூக்கணாங்குருவி ஒன்று கூடு கட்டத்துவங்கியிருந்தது. ஆர்வத்துடன் பார்த்தேன். கூடு கட்டி ஒரு தூக்கணாங்குருவி குடும்பம் அதில் வாழத் தொடங்கியது.
குருவி பனை மட்டையில் போய் உட்காரும். பிறகு வெளியில் எங்கேயோ போய்விட்டு கூட்டிற்கு வரும். குஞ்சுகளுக்கு உணவளிக்கும். உணவளித்து முடித்த பிறகு, பனைமட்டை சற்றே அசைந்துக் கொடுக்கும். கூடு ஊஞ்சல் போல் ஆடுவதில் குஞ்சுகள் சற்றே கண்ணயரும்.
குருவி கூச்சலிடும். பனைமட்டை சரசரக்கும். கதிரவன் மறையும் வரை இரண்டும் பேசிக்கொண்டேயிருக்கும்.
தனிமை அழுகு தான். இனிமை தான். ஆனால் உயிர்களின் வாழ்க்கை உறவுகளில் இருக்கிறது. உரையாடலில் இருக்கிறது. ஒன்றுக்கொன்றான உரசலில், உயிர்ப்பில் வாழ்க்கை உறைந்திருக்கிறது என்பதை ராதிகா என்ற பள்ளித் தலைமையாசிரியையும், வெளிநாட்டில் வாழும் இரண்டு பிள்ளைகளால் தனித்து விடப்பட்ட மூதாட்டியையும் வைத்து ஷான் ‘கண்ணாட்டி’யைத் தீட்டியிருக்கிறார்.
ராதிகா ஒரு பள்ளித் தலைமையாசிரியை. அன்வர் அவரது மகிழுந்து ஓட்டுனர். எப்பொழுதும் ஒரு கிராமம் வழியாகத்தான் அவரது பள்ளிக்குச் செல்லவேண்டும். ஒரு நாள் அறுபது எழுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், அவரது மகிழுந்தின் குறுக்கே வந்துவிடுவதில் கதைத் துவங்குகிறது. பக்கத்தில் ஒரு டீக்கடை இருக்கிறது. அந்த டீக்கடைக்காரரின் பெயர் ஆறுமுகம். மூதாட்டி தன் கண்ணாடி ஒடஞ்சு போனதால தெரியாம விழுந்துட்டதாகக் கூறுகிறார். அந்த மூதாட்டியின் தங்கச்சி பையன் தங்கராசனிடம் கண்ணாடியைக் கொடுத்து பழுது பார்த்துக்கொள்வேன் என்று சொன்னதையும் மீறி, அந்த உடைந்தக் கண்ணாடியை ராதிகா வாங்கி, அன்வரிடம் கொடுத்து பழுது பார்த்து மூதாட்டியிடம் கொடுக்கச் சொல்வதில் கதை நகர்கிறது.
ஒரு மஞ்சள் பையை டீக்கடையில் மாட்டி இருந்தால், பாட்டி டீக்கடையில் ராதிகாவுக்காக காத்திருக்கிறாள் என்று பொருள். மஞ்சள் பை மாட்டியில்லாவிட்டால் பாட்டி அன்று டீக்கடைக்கு வரவில்லை என்று ராதிகா தெரிந்துக் கொண்டு, டீக்கடையில் நிற்காமல் பள்ளிக்குச் சென்று விடுவார். இப்படி ஓர் அமைப்பை அவர்களுக்குள் உருவாக்கிக் கொண்டிருந்தது மிக அழகாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது கதையில்.
அடுத்த அடுத்த நாட்களில் மூதாட்டிக்கு நிலபுலன்கள் இருப்பதையும், அவரது இரு மகன்கள் அமெரிக்காவில் இருப்பதையும், மூதாட்டியின் கணவர் விபத்தொன்றில் இறந்ததையும் ராதிகா தெரிந்துக் கொள்கிறார். மூதாட்டி ராதிகாவை தன்னோட ‘கண்ணாட்டி’ என்று பாசத்தோடு அழைப்பதில் கதையின் தலைப்பு பொருளாகிறது. ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் ராதிகா நின்று மூதாட்டியுடன் பேசுவார்.
அதற்காகவே அந்த மூதாட்டி, வீட்டிலிருந்து ஆறுமுகத்தின் டீக்கடைக்கு வந்து காத்திருப்பார். ராதிகா மூதாட்டிக்காக கூடுதலாக ஒரு டிபன் பாக்ஸில் சோறு கொண்டுவருவதும், மூதாட்டி ராதிகாவுக்காக தோட்டத்தில் விளைந்த மஞ்சளை எடுத்து வருவதும் என அவர்களின் நட்பு வளர்கிறது.
ஒரு நாள் கருவாடு குழம்பு வைத்து எடுத்து வந்திருந்தார். கருவாடு குழம்பு தன் கணவருக்கு மிகவும் பிடிக்கும் என்றும், விபத்து நடந்து அவர் இறந்த நாளன்று கூட கருவாடு குழம்பு தான் என்றும், அதற்குப் பிறகு கருவாடு குழம்பை வைக்கவேயில்லை என்றும், ராதிகாவுக்காக அன்றைக்குக் கொண்டு வந்ததாகவும் மூதாட்டி சொல்ல, அவரது கண்களில் நீர் வழிந்தது.
இரண்டு வாரமாக வேறு வேலை நிமித்தம், ராதிகா பாட்டியைப் பார்க்க முடியவில்லை. இரண்டு வாரத்திற்குப் பிறகு கேட்டதற்கு, பாட்டிக்கும் உடல் நலம் சரியில்லை என்று ஆறுமுகம் டீக்கடைக்காரர் சொன்னார். அடுத்த நாள் பாட்டி பார்க்கும் போது தனக்கு கருவாடு கொழம்பு செய்து எடுத்து வர ராதிகாவை அன்போடு கேட்கிறார்.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் ராதிகா தேர்வு மற்றும் பல வேலைகளில் ஈடுபட்டதால் பாட்டி பற்றிய நினைப்பு வரவில்லை. ஒரு நாள் ராதிகாவின் செல்பேசி சிணுங்கியது. மூதாட்டி மருத்துவமனையில் இருப்பதாகவும், ‘கண்ணாட்டி, கண்ணாட்டி’ என்று கூறுவதாகவும் மறுபக்கத்திலிருந்து சேதி வந்தது. அதுவரை ஆடாமல் அசையாமல் இருந்த பாட்டி, ராதிகா சென்று, பாட்டியின் தலையை தன் மடியில் வைத்து, அழைத்ததும் பாட்டி கண் விழித்தார். குணமாகி சீக்கிரம் வாங்க, கருவாட்டு குழம்பு வச்சித் தாரேன் என்று சொல்ல, பாட்டி தலையசைத்து ஆமோதித்தார். பிறகு மெதுவாக பாட்டியின் கண்கள் மூடி உயிர் பிரிந்தது. பாட்டியின் படுக்கையருகே இருந்த கண்ணாடியை எடுத்துக்கொண்டு ராதிகா வீட்டிற்கு வந்தார்.
இரண்டு வாரங்கள் கழித்து, பாட்டியின் பெரிய மகன் வெளிநாட்டிலிருந்து வந்து ஒரு பட்டுப்புடவையையும் சிறிய நகைப்பெட்டியையும் நன்றிக்கடனாக ராதிகாவுக்கு கொடுக்க, ராதிகா அமைதியாக மறுத்துவிடுகிறார். பாட்டியை தங்களோடு வந்துவிட கோரியபோதும் வர மறுத்துவிட்டார்கள் என்று மகன் கூற, பரவாயில்ல அதனால் தானோ என்னவோ, எனக்கு அவர்களின் மொத்த அன்பும் கிடைத்தது என்று ராதிகா பெருமூச்சு விடுகிறார். பாடம் செய்யப்பட்ட பாட்டியின் கண்ணாடி அலமாரியில் இருப்பதை சொல்வதோடு கதை நிறைவுறுகிறது.
தந்தையும் தனயனும்
எங்கள் தொழுவத்தில் கட்டியிருந்த பசு அம்மா..ஆ.ஆ.ஆ….. என்று கத்தியது. அதன் ஒலி தோட்டம் முழுவதும் உள்ள மரங்களில் பட்டுத் தெறித்தது. பசுவின் குரலில் அப்படிப்பட்ட தெய்வீக இனிமை. தோட்டத்தில் இருந்த சேவலும், கோழியும், ஆடும், அணிலும், குருவியும், குட்டியும் பசுவின் ‘அம்மா…ஆ…ஆ…ஆ’வுக்காக ஏங்கி நிற்கும்.
அப்படிப்பட்ட பசுவின் குரல் சுத்துப்பட்ட பதினெட்டு பட்டிகளிலும் இல்லை. பசுவின் கன்று அம்மாவின் இனிய குரலைக் கேட்டு அதுவும் தன் பங்குக்குக் கத்தியது. ஆனால் தாய்ப்பசுவின் இனிமை கன்றின் கதறலில் இல்லை.
தன்னைப் போல் கத்தவேண்டும் என்று பசு நினைத்தது. ஆனால் என் குரல் என் சுதந்திரம் என்று கன்று நினைத்தது.
உலக இயல்பு வாழ்க்கை, தெய்வீக இசைக்கு இடையூறா என்ற கேள்வியோடும், பயிற்சியும் முயற்சியும் விரும்பும் விளைவு தரும் என்ற செய்தியோடும், ஒவ்வொரு தனி நபரும் தனித்தன்மை பெற்றோரே என்ற தரவோடும், சடகோபன், வேணு, அருணிமா, சொக்கன், டாக்டர் என்ற வெவ்வேறு விரல்களை வைத்து ‘அப்பாவின் குரலி’ல் வேணுகான கச்சேரி நடத்தியிருக்கிறார் ஷான் கருப்பசாமி.
எப்பொழுதும் எதையாவது பேசிக்கொண்டேயிருக்கும் சடகோபன் (அப்பா) மருத்துவமனையில் அசையாமல் படுத்திருக்கிறார். ‘கொஞ்சம் தொணதொணக்காமல் இரேன்’ என்று மனதில் சொல்லிக்கொள்ளும் வேணு கோபால் (மகன்) இப்பொழுது அப்பா வாய் திறந்து எதையாவது பேசிவிட மாட்டாரா என்று காத்திருக்கிறான். ஏழு அல்லது எட்டு வருடங்களில் அவன் திருமணத்தின் போது மட்டும் வேண்டா வெறுப்பாக வந்து நின்று விட்டுப் போனவர். மகன் அப்பாவைப் பார்த்து வருடங்கள் ஆச்சு. (சமஸ்கிருதத்தில் வேணு என்றால் புல்லாங்குழல். வேணுகோபால் என்றால் புல்லாங்குழல் ஏந்திய கிருஷ்ணன் என்று பொருள். ஏற்ற பெயரை தன் மகனுக்கு வைத்திருக்கிறார் சடகோபன்)
அப்பா சடகோபன் புல்லாங்குழல் வித்வான். புல்லாங்குழல் வடிவமைப்புக்கு ஏற்ப தனது விரல்களை சர்ஜரி செய்து கொள்ளும் அளவுக்கு இசைப் பித்து. மகன் விஷ்ணு அவருக்கு சிஷ்யனாக இருந்தான். புல்லாங்குழலைத் தவமாக கற்றுக் கொண்டிருந்த போது, வங்கி வேலை வந்தது. அப்பாவின் கோபத்துக்கு உள்ளாகியும், இரண்டு குதிரைகளிலிலும் பயணத்தைத் தொடர்ந்தான் வேணு. பதவி உயர்வு பெற்று மும்பைக்குப் போனதில் சடகோபனுக்கு வருத்தம்.
அருணிமா என்ற அவன் காதலிக்கும் பெண்ணுக்காகத்தான் வேணு மும்பைக்குப் போவதாக சடகோபன் நினைத்தார். ஆனால் அருணிமா, உன் இசைக்கும், அப்பாவுக்கும் இடையில் நான் இருக்க விரும்பவில்லை என்று ஏற்கனவே மும்பை போய்விட்டாள். அவள் போய்விட்டபிறகு வேணுவால் புல்லாங்குழலை சரியாக வாசிக்க முடியவில்லை. அதுவும் சடகோபனைப் போல வாசிக்க வேண்டும் என்றால்? முடியவில்லை. வேணு மும்பை போய்விட்டான். பிறகு தான் அருணிமாவோடு கல்யாணம். அருணிமா தான் சடகோபனைச் சந்தித்து திருமணத்திற்கு வரவைத்தாள்.
மூங்கில்கள் நிறைந்த மந்தைவெளி வீடு. மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு வந்தான். புல்லாங்குழல்களைப் பத்திரப்படுத்த பூசப்படும் புங்கை எண்ணையின் வாசனை வீடு பூரா இருந்தது. அப்பாவின் புல்லாங்குழலை எடுத்து வாசிக்கத் துவங்குகிறான். அப்பா மாதிரி வரனும்னு அப்பா எதிர்பார்த்தார். ஆனால் அவர் இசை அவர் இசை தான். இவன் இசை இவன் இசை தான்.
அப்பா மருத்துவமனைக்குப் போய் இரண்டு மாதங்கள் ஓடிவிடுகின்றன. அவன் ஒவ்வொரு நாளும் புல்லாங்குழலை வாசிக்கிறான். ஒரு நாள் அவனுக்கு அப்பாவின் இசை வருகிறது. அன்றைக்கு அப்பாவின் உயிர் பிரிகிறது என்று கதை நிறைவு பெறுகிறது.
வலியவரும் எளியவரும்
எங்கள் பண்ணையின் அருகே உள்ள கோரையாற்றில் தண்ணீர் வந்தது. அது வாய்க்கால் வழி வந்து எம் தோட்டத்தில் இருக்கிற சிறு குளத்தில் நிரம்பியது. தண்ணீரோடு சிறு சிறு மீன்களும் குளத்தில் வந்தேறியது.
வாழைத் தண்டுகளை சிறிது சிறிதாக வெட்டி குளத்தில் போட்டோம். ஒரு வாழைத்தண்டைச் சுற்றி கிராம்பு சைஸில் ஒரு மீன் கூட்டம் மொய்த்தது. அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது, பூவன் பழ சைஸில் இருந்த உளுவை மீன் ஒன்று எங்கிருந்தோ ஓடி வந்து அந்த மீன் கூட்டத்தில் சிலவற்றை வாயில் போட்டது.
ஐயோ! என என் கண்கள் விரியும் முன்பே, முழ நீள கெண்டை மீன் ஒன்று சேற்றிலிருந்து வெளி வந்து, ‘களுக்’ என்ற ஒலியுடன் அந்த உளுவையை விழுங்கியது. அட! என்று என்னையறியாமலேயே என் வாயிலிருந்து வார்த்தை வந்து விழுந்தது.
குளத்திலிருந்து திரும்பினேன். அப்பொழுது நீண்ட கழுத்து உடைய ஒரு நாரை பறந்து வந்து அந்த கெண்டை மீனைத் தூக்கிப் போய்க்கொண்டிருந்தது.
வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றும், தன்னைவிட ஆற்றல் குறைந்தவர்களை மேலாதிக்கம் செய்வது உயிர்களின் இயல்பு என்றும், தன்னைவிட இயலாதவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க எப்பொழுதும் முயற்சி நடந்துக் கொண்டிருக்கிறது என்றும் குமுதா, முத்து, ராசு, மீசை, குமுதாவின் பெற்றோர், தட்டான், பாம்பு எல்லாவற்றையும் அழைத்து ‘ஒரு பாம்பும் சில தட்டான்களும்’ என்ற கதையை மீட்டியிருக்கிறார் ஷான் கருப்பசாமி.
குமுதாவுக்கு மூன்று வருடங்களாய் மாப்பிள்ளைத் தேடுகிறார்கள். பன்னிரண்டாவது படித்து விட்டு வீட்டில் நூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறாள். முத்து ஏழாவது படிக்கிறான். குமுதாவின் தோஸ்து. அவளைப் பார்க்காமல் எந்த நாளும் நிறைவு பெறாது.
குமுதாவின் தோட்டத்தில் தட்டானைப் பிடிக்கப் போகும் போது, அங்கு இருந்த பாம்பைப் பார்த்துவிட்டு, பாம்பை அடிக்க குமுதா அக்காவைக் கூப்பிடுகிறான். ஏன் தட்டானைப் பிடிக்கிற? பாம்பைப் பிடிக்க வேண்டியது தானே? எனக் கேட்கிறாள். தட்டானைப் பிடிக்காதே. பாம்பை அடிக்காதே என்று இரண்டு உயிரினம் மீதும் கரிசனம் காட்டுகிறாள் குமுதா.
நம்மை விட ஆற்றல் குறைந்தவர்களையே, நம் சூழலில் இயலாதவர்களையே பிடித்துக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயல்வது மனித இயல்பு என்பதை அந்த வசனத்தில் கோடிட்டுக் காட்டுகிறார் ஷான் கருப்பசாமி.
ராசு மாமா குமுதாவுக்கு புத்தகங்களைக் கொடுப்பதற்காக சைக்கிளில் வருவார். குமுதாவிடம் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு ராசு மாமா பேசிக்கொண்டிருக்கும் ‘சைக்கிள் கேப்’பில் முத்து அந்த சைக்கிளை எடுத்து ஓட்டுவான்.
தோட்டங்காடு இல்லாத ராசு மாமா, தோட்டங்காடு உள்ள மாப்பிள்ளையைத் தேடும் குமுதாவின் வீட்டிற்கு பெண் கேட்டு எப்படி போகமுடியும்? அடுத்த நாள் குமுதாவைப் பெண் பார்க்க வருவதால் குமுதா ராசு மாமா மீது கோபப்படுகிறாள்.
அடுத்த நாள். பெண் பார்க்க மாப்பிள்ளை ஒருவர் மீசையோடு வந்திருக்கிறார். படிப்பு இல்லையென்றாலும் பெரிய பண்ணையாம். முத்துவும் குமுதா வீட்டில் ஆஜர். முத்துவுக்கு அந்த மீசையைப் பிடிக்கவில்லை. குமுதா அக்காவைப் பார்க்க ரூமுக்குள் போனால், குமுதாவின் அம்மா அறையை மூடிக்கொண்டாள். குமுதாவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. கல்யாணம் செய்ய குமுதா ஒப்புக்கொள்கிறாள். முத்துவுக்கு, ராசு மாமாவை நினைத்து அழுகையாக வந்தது. தன் வீட்டிற்கு ஓடிவிடுகிறான்.
கல்யாண நாள் வந்தது. ராசு மாமா வேலைகளை இழுத்துப் போட்டு செய்துக்கொண்டிருந்தார். கல்யாணம் முடிந்து குமுதா மாப்பிள்ளையோடு காரில் ஏறிப் போனாள். முத்து ராசு மாமாவிடம் போய் உட்கார்ந்துக் கொண்டான்.
தலை தீபாவளி வந்தது. குமுதாவும் மீசையும் வந்திருந்தார்கள். முத்து போயிருந்தான். இரு சக்கர வாகனம் வாங்கித் தராத கரைச்சலில், சாராய வாடையுடன் மீசை குமுதா வீட்டிலிருந்து கோபமாக வெளியேறினார். தங்க வளையல்கள் பிளாஸ்டிக் வளையல்களாகிப் போன குமுதாவோ தீபாவளிக்குச் செய்த முறுக்கு ஒன்றை எடுத்துத் தின்றாள்.
ராசு மாமாவிடம் காசு வாங்கி ஒரு புல்லட்டை வாங்கினார் குமுதா அப்பா. கூடை நிறைய சிரிப்போடு வந்த மீசை குமுதாவை அந்த புல்லட்டில் அழைத்துச் சென்றார். ஒரு வாரமாக சோகமாக இருந்த குமுதாவின் அப்பாவும் அம்மாவும் அன்றைக்குத் தான் சிரித்தார்கள். ஒருவரின் கவலை இன்னொருவருக்கு மகிழ்ச்சியா?
இரண்டு மாதங்கள் கழித்து குமுதா கிணற்றில் பிணமாகக் கிடக்கிறாள். ராசு மாமா தான் மூச்சிரைக்க ஓடிவந்து அதை அறிவிக்கிறான். குமுதாவைத் தூக்கி வந்தார்கள். முத்துவால் நம்பமுடியவில்லை. ஒரு தட்டான் பூச்சியை அந்த பாம்பே கொலை செய்துவிட்டதா? சிறைக்குச் சென்ற மீசை ஜாமீனில் வெளி வருகிறான். குமுதாவின் அறையில் போய் அடிக்கடிப் படிக்கிறான் முத்து. குமுதாவின் பெற்றோர்களுக்கு மளிகை சாமான்கள் வாங்கிக் கொடுப்பது போன்ற ஒத்தாசை செய்கிறான் ராசு மாமா என கதை நிறைவுறுகிறது.
வழக்க மனப்படிமங்கள்
கிழிஞ்ச கால்சட்டையும் அழுக்கு பனியனும் போட்டுக்கொண்டு, பராக்குப் பார்த்துக்கொண்டு, நாற்பது வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் சாலையில் போய்க்கொண்டிருந்தார். தனக்குள்ளேயே ஏதோ முனகிக் கொண்டே அங்கும் இங்கும் சற்று நின்று, இலக்கின்றி நடந்துக் கொண்டிருந்தார். சற்றே கிறுக்கோ என எண்ணினேன்.
ஒட்டிய வயிறும் ஒரு முழத் துண்டும் கட்டிக் கொண்டு, வளைந்த அலக்கை வலக்கையில் வைத்துக்கொண்டு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பெரியவரிடம் அந்த ‘கிறுக்கு நபர்’ ஏதோ சொன்னார். அவரும் தலையாட்டினார். பிறகு நான் போய் அந்தப் பெரியவரிடம் அவர் யார் என்ன சொன்னார் என்று கேட்டேன்.
அவர் தான் எங்க பஞ்சாயத்து தலைவர். வயல் வேலையை முடித்து விட்டு, கோயிலுக்குச் செல்கிறார். வரப்போகிற கோயில் குடமுழுக்கு பற்றியும், அதன் வரவு செலவு குறித்தும் என்னிடம் கூறினார். இன்னும் அரை மணி நேரத்தில் நடக்கப்போகிற திட்டக் கூட்டத்திற்கு வந்துவிடுவாறு அழைப்பு விடுத்தார் என்று கூறினார்.
என் இடக்கையை எடுத்து என் தலையில் நாலு கொட்டு கொட்டிக்கொண்டேன். அழுக்கு பனியனும் தனக்குள்ளே முனகலும் செய்தவர் ஒரு கிறுக்காகத்தான் இருக்க முடியும் என்று நான் முன்முடிவு எடுத்தது கிறுக்குத்தனம் இல்லையென்றால் வேறு என்ன?
ஆராய்ச்சி ஏதுமின்றி, ஒரு பொதுவான முடிவுக்கு முன்னரே வருவது என்பதை ‘வழக்க மனப்படிமம்’
(Stereotyping) என்று சொல்லலாம். இந்த பாலினத்தவர் இப்படித் தான் பேசுவர். இந்த சாதியினர் இப்படித்தான் நடந்துக் கொள்வர். இந்த தொழில் செய்வோரா…அவர்கள் இந்த குணத்தவர்! ஐயோ. இந்த ஊர்க்காரர்களா, இந்த பகுதியினரா, இந்த நாட்டினரா அவர்கள் பண்பாடு இப்படித்தான் என ஒரு வார்க்கப்பட்ட கருத்தை ஆய்வின்றி வகைப்படுத்திக் கொள்வதே வழக்க மனப்படிமம் எனலாம். ஆண்கள் அழக்கூடாது என்பது ஒரு வழக்க மனப்படிமம். வீட்டு வேலைக்குப் பெண்களும் வெளி வேலைக்கு ஆண்களும் என்பதும் ஒரு வழக்க மனப்படிமம். இளைஞர்களுக்கு பொறுப்பு இருக்காது என்பதும், கண்ணாடி அணிந்து புகைப்பிடிப்பவர்கள் அறிவாளிகள் என்பதும், கிராமத்தில் உள்ளோர் வெள்ளந்திகள் என்பதும் வழக்க மனப்படிமம் தான். போலீஸ் என்றால் லஞ்சம் வாங்குபவர்களாகத் தான் இருக்கமுடியும் என்கிற வழக்க மனப்படிமத்தை, விமல், சுந்தர், அன்பரசி, இன்பா, முருகானந்தம், காத்தமுத்து என்ற கதாபாத்திரங்களைக் கொண்டு ‘லஞ்சம்’ என்ற கதையில் அடித்து நொறுக்குகிறார் ஷான் கருப்பசாமி.
விமல் ஒரு ஐடி தொழிற்நுட்ப வல்லுநன். சுந்தர் விமலின் மேனேஜர். விமல் வேலை பார்க்கும் கம்பெனியில் ஒரு பிரச்னை. அதைத் தீர்ப்பதற்காக அவன் உடனே லண்டன் கிளம்பவேண்டும் என சுந்தர் விமலிடம் சொல்கிறார். ஆனால் விமலின் கடவுச்சீட்டு காலாவதியாகிவிட்டதால் அதைப் புதுப்பிக்க வேண்டிய நிலையில் தான் போகமுடியாது என்று மறுக்கிறான். விமலின் மனைவி அன்பரசி, மகள் இன்பாவை வைத்துக் கொண்டு, வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருவது மிகவும் சவாலாக இருக்கிறது. இந்த நிலையில் லண்டனுக்கு அவன் போக முடியாது என்றும் மறுக்கிறான்.
காவல் நிலைய சரிபார்ப்புக்காக விமலின் புதிய கடவுச்சீட்டு காத்திருந்தது. காத்தமுத்து என்ற காவல்காரர் தான் அந்த சரிபார்ப்புப் பணியைச் செய்யவேண்டும். காத்தமுத்து அவர்களிடம் தொலைபேசியில் பேசிவிட்டு, தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு, அவரை காவல் நிலையத்தில் பார்க்க விமல் சென்றான். இணைய தொடர்பு சரியில்லாததால், தரவுகளை ஏற்ற முடியவில்லை என்றார். லஞ்சம் எதிர்பார்க்கிறாரோ? என நினைத்தான். அடுத்த நாள் வரச் சொல்கிறார்.
வீட்டில் அன்பரசி கோவித்துக்கொள்கிறாள். கம்பெனியில் மேனேஜர் கோவித்துக்கொள்கிறார். இன்னும் நான்கு நாட்களில் லண்டன் போக டிக்கெட் போட்டாகிவிட்டது. நண்பன் முருகானந்தம், ஒரு இருநூறு ரூபாயை தள்ளிவிட்டு கடவுச்சீட்டு வாங்கத் தெரியவில்லை எனச் சொல்கிறான். எல்லாம் சேர்ந்த கோபத்தில் காத்தமுத்துவிடம், காசு வேணுமின்னா கேட்க வேண்டியது தானே சார் என்று, தொலைபேசியில் காட்டமாகப் பேசிவிடுகிறான். காத்தமுத்து அவனை காவல் நிலையத்துக்கு வரச் சொல்கிறார்.
அவனை தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று தன் கதையைச் சொல்கிறார்.
ஒரு ஜவுளிக்கடை ஓனரை வெட்டிக் கொன்ற அடியாட்களைப் புடிச்சி கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றார் காத்தமுத்து. போகிற வழியில் எதிர் கோஷ்டி அந்த அடியாட்களை வெட்டியது. காத்தமுத்துவுக்கும் வெட்டு. பல நாட்கள் மருத்துவமனையில் இருக்கிறார். வேலையில் கவனம் இல்லையென்று தண்டனையாக கடவுச்சீட்டு சரிபார்த்தல் வேலையில் தள்ளப்பட்டிருக்கிறார்.
எல்லா வேலையிலும் மனஅழுத்தம் இருக்கு தம்பி என்று சொல்லி, சமோசா வாங்கிக்கொடுக்கிறார். அப்பொழுது அவன் கடவுச்சீட்டு அடுத்தநாள் வந்துவிடும் என்று மின்னஞ்சல் வருகிறது என்று கதை நிறைவுறுகிறது.
தன்மானமும் சுயமதிப்பும்
அவரை விதை நட்டு பந்தல் போட்டிருந்தோம். ஒரு வாரத்தில் அழகான முளை விட்டு அவரைக் கொடி வெளி வந்தது. கொடியின் முனை மெல்லிய சுருளாக, எதைப் பற்றலாம் என்று தவிக்கும். அப்படி பந்தலில் ஏற எத்தனிக்கும் இளம் கொடி முனை, பந்தலுக்கு ஏறத் தோதுவாக சில மூங்கில் முட்களை கொடியின் அருகில் குத்தி வைத்திருந்தோம். அவரைக் கொடிகள் அந்த மூங்கில் முட்களை கெட்டியாகப் பற்றிக் கொண்டு முகிழ்த்து, முன்னேறி, மேலே வந்தன.
மூன்று நான்கு வாரங்களில், பந்தலில் படர ஆரம்பிக்கும் போது, எட்டி விழ வேண்டிய காய்ந்த தென்னை மட்டை, ஆடிக் காற்றில் பறந்து வந்து பந்தலில் விழுந்து விட்டது. பச்சைப்பசலேன்ற இளம் கொடி துளிர்த்து வளரத் தேவையான சூரிய ஒளியை அது மறைத்தது. சுதந்திரமாக வளர இடம் கொடுக்காமல் அமுக்கியது.
ஆனால் அவரைக்கொடி மனம் தளரவில்லை. தென்னை கீற்றுகளின் இடைவெளியில் புகுந்து வளரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் தென்னை மட்டையை மறைத்து இலைகள் மிளிர்ந்தன. பூக்கள் பூக்கத் துவங்கின. ஆதிக்க அமுக்கலுக்கு அடிபணியாது, தன் வழியே தன்மானத்தோடு பயணிப்பதே இயற்கையில் உயிர்களின் இயல்பாய் இருக்கிறது.
கவரிமா என்ற விலங்கு தன் மயிர்த்திரளிலிருந்து மயிர் நீக்கப்பட்டால் உயிர் வாழ இயலாது என்பது போல, தனது மானத்துக்கு ஒரு கேடு உண்டானால், தன்மானம் உள்ளோர் தம்முடைய உயிரையும் விட தயங்கார் என்ற பொருளில் "மயிர்நீப்பின் வாழா கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்” என்கிறார் திருவள்ளுவர். தன்மானம் (Self-Respect) என்பது ஒருவர் தன் மீது வைத்திருக்கும் மதிப்பும், சுய கௌரவமும் ஆகும். பிறரின் பாராட்டுக்காகவோ அல்லது ஆதாயத்திற்காகவோ தன் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் வாழ்வதே தன்மானத்தின் சாரமாகும்.
தன்மானம் உள்ளவரிடம் இயல்பாகவே தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிறரைச் சார்ந்து வாழாமல் சுய சிந்தனையோடு வாழ வழிவகுக்கும். தன்மானத்தை விட்டுக்கொடுக்காத மனிதர்களைச் சமூகம் என்றும் உயரிய இடத்தில் வைத்து மதிக்கும். தற்காலிக லாபத்திற்காக யாரையும் அண்டிப் பிழைக்க வேண்டிய அவசியத்தைக் கட்டுப்படுத்தி, சுயசார்போடு வாழ வைக்கும். அப்படி, கைநிறையப் பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்காகக் குறுக்கு வழியிலோ அல்லது பிறரை ஏமாற்றியோ வாழாமல், அவரைக்கொடியின் இயல்போடு, நேர்மையான வழியில் உழைத்து வாழ நினைக்கும் அமிர்தம் ஆயாவைப் பற்றி, ‘அமிர்தம்’ கதையில், மோகன், ஜேம்ஸ், தேவி போன்றோரை வைத்து காவியம் தீட்டியுள்ளார் ஷான் கருப்பசாமி.
எழுபது வயது மதிக்கத்தக்க அமிர்தம் என்ற ஆயா, சென்னை அடையாற்றின் கரையை ஒட்டியிருந்த வள்ளுவர் குடியிருப்பில் இட்லி கடை நடத்தி வருகிறார். அமிர்தத்தின் வளர்ப்புப் பிள்ளை ஜேம்ஸ். அமிர்தமும் ஜேம்ஸ்ம் எங்கிருந்தோ வள்ளுவர் குடியிருப்பிற்கு வந்தவர்கள். ஜேம்ஸ்ன் பெற்றோர் ஒரு திருட்டு வழக்கில் சிறைச்சாலைக்குப் போக, அமிர்தம் ஜேம்ஸை எடுத்து தன் பேரன் போலவே வளர்த்து வருகிறார். பெரிய குடும்பத்துல பிறந்தவர் அமிர்தம்.
ஒரு நாள் ஆயாவுடைய இரண்டு மகன்கள் வந்து ‘நான் தான் ஆயாவை வச்சு சாப்பாடு போடுவேன்’னு ஆயாவோடு சண்டை போட, நீங்க என்னடா சாப்பாடு போடுறது, நான் ஊருக்கே போடுவேன்’ என்று சொல்லிவிட்டு, அந்த ஊரிலிருந்து, ஜேம்சையும் அழைத்துக் கொண்டு வள்ளுவர் குடியிருப்பிற்கு வந்து இட்லி கடைப் போட்டவர் தான். அந்தக் குடியிருப்பில் இருப்பவர்கள் இந்த இட்லிக்கடையில் தான் சாப்பிடுவார்கள். சிலர் இலவசமாகக் கூட சாப்பிடுவார்கள்.
வள்ளுவர் குடியிருப்பிலேயே பிறந்து வளர்ந்தவன் மோகன். அவன் ஜேம்ஸ்ன் நண்பன். மோகனும் ஜேம்ஸ்ம் நான்கு சக்கர வண்டிகளை வாங்க ஆயாதான் உதவினார்.
ஜேம்ஸ் தேவி என்னும் பெண்ணை காதலித்து வந்தான். ஆயாவின் டிரங்க் பெட்டியில் கைவைத்து, அவளை சினிமாவுக்கு அழைத்துச் செல்வது, அவளுக்கு தொடுதிரை கொண்ட அலைபேசி வாங்கிக் கொடுப்பது, என்று ஜேம்ஸ் செலவு செய்ய ஆரம்பித்திருந்தான். இது எதுவுமே ஆயாவுக்குத் தெரியாது.
அன்றைக்கு வரலாறு காணாத மழையும் வெள்ளமும் வந்தது. பல வீடுகளில் தண்ணீர் புக, ஆயா பகலும் இரவும் இட்லி சுட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஜேம்ஸ் தேவி காதில் போட்டுக்கொள்ள தோடு வாங்கிக்கொடுத்தான். எப்படி பணம் வந்தது என்று மோகன் கேட்க, ஆயாவின் இட்லி கடை பற்றி தேவி முகநூலில் போட, பலரும் தேவியின் கணக்கில் பணம் போடுகிறார்கள் என்றும் அதிலிருந்து வாங்கியது என்றும் ஜேம்ஸ் கூறினான். அவன் கையில் பணம் நிறைய புழங்கத் தொடங்கியது. வெள்ளத்தில் சீரழிந்த வீட்டை சரி செய்ய அமிர்தம் பணம் கேட்க, ஜேம்ஸ் இல்லை என்று பொய் சொல்கிறான். மோகனுக்கு கோபம் வருகிறது.
முகநூலில் பொய் சொல்லி தேவியும் ஜேம்ஸ்ம் நிதி திரட்டியதாக இருவர் வந்து அமிர்தம் ஆயாவிடம் பிரச்னை செய்தார்கள். உன் பணத்தை தூக்கியெறிகிறேன் என்று சொல்லி டிரங்க் பெட்டியைத் திறந்த ஆயாவுக்கு அதிர்ச்சி. அதில் பணம் ஏதும் இல்லை. ஜேம்ஸ் ஏமாத்தியது தெரிய, இட்லிப்பானையையும் தன்மானத்தையும் தூக்கிக்கொண்டு வேறு இடம் தேடி ஆயா போனதில் கதை நிறைவுறுகிறது.
காதலும் கல்யாணமும்
தனித்தனி தொங்கு நாற்காலியில் நானும் என் மனைவியும் உட்கார்ந்திருந்தோம். கதிரவன் கையசைத்துவிட்டு அப்பொழுதுதான் சென்றிருந்தான். வடகிழக்குத் திசையில் கருமேகங்கள் உருண்டு திரண்டன. கடமுட’வென உருட்டுச் சத்தம் வானில் கேட்டுக்கொண்டேயிருந்தது. பளிச்’சென மின்னல் வெட்டியது. தடால் என இடி இறங்கியது. வேலியில் இருந்த செம்பருத்தி பூச் செடிகள் நடனமாடத் தொடங்கின. தென்னைமரங்களில் ஒதுங்கிய மயில்கள் அகவலை நிறுத்தின.
அதுவரை பூப்போல வருடிக்கொண்டிருந்த தென்றல், சற்றே உப்பும் உரைப்புமாக மாறியது. கோழிகள் ஒதுக்குப்புறமாய் ஒதுங்கின. அதுவரை மர நிழலில் ஈரத்தில் படுத்திருந்த நாய் எழுந்து கூரைக்கடியில் ஒதுங்கியது. சடசட’வென ஆரம்பித்த மழை, தாழ்வார ஓட்டில் ததிங்கிணத்தோம் ஆட ஆரம்பித்தது. செம்மண்ணும் இல்லாத, மணல்சாரியும் இல்லாத ஒருவித களிமண் நிலத்தில் மழைத் தண்ணீர் பாய்ந்தோடியது. காற்றில் விழுந்திருந்த பலா மர இலைகள் சிறு சிறு பாய் மரக் கப்பல்கள் போல பயணித்தன.
விழுந்த வான் மழை ஓடி பக்கத்து வாய்க்காலில் சல சல’வென விழுந்தது. குறுவைப் பயிர் போட்டிருந்த வயலுக்கு வாய்க்கால் நீர் பாய்ந்தது.
மழை இயற்கை.
வாய்க்கால் செயற்கை.
காதல் இயற்கை.
கல்யாணம் செயற்கை.
காதல் இயல்பானது. காதல் இயற்கையானது. கல்யாணம் மனிதன் கண்டுபிடித்த செயற்கையான சமூக நிறுவனம். ஒரு சிட்டிகை இயற்கை உணர்வான காதலையும் ஒரு சிட்டிகை செயற்கை நிறுவனமான கல்யாணத்தையும் அழகு குண்டானில் ஒரு குலுக்கு குலுக்கி ‘விலகல்’ சமையல் செய்திருக்கிறார் ஷான் கருப்பசாமி.
பாண்டிச்சேரியில் நடக்கும் ஒரு திருமணத்திற்குச் செல்வதாக, சீக்கிரம் திருமணம் நடக்கப்போகும் ஆருத்ராவும் அவளது அலுவலக நண்பன் ராகுலும் ஆருத்ராவின் வீட்டிலிருந்து கிளம்புவதில் கதைத் தொடங்குகிறது. டேவிட்டும் ஜென்சியும் அவர்களோடு வருவதாக, ஆருத்ராவின் அம்மா ரேவதியிடம், சும்மா பொய் சொல்லியிருக்கிறார்கள். ராகுலை ரேவதிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
ராகுல் பணக்கார வீட்டுப் பையன். அவனுக்கு ஆருத்ரா மீது ஓர் ஈர்ப்பு இருந்தது. ஆருத்ராவுக்கும் அவன் மீது ஒரு நேசிப்பு இருந்தது. ஆனால் காதல் வேறு கல்யாணம் வேறு என்று நினைப்பவன் ராகுல். கல்யாணம் என்றால் பெண்ணோட வீட்டில் உள்ளவர்கள், சொந்தக்காரர்கள் எல்லோரையும் சந்தோஷமா வச்சிக்கனும். குழந்தை, வளர்ப்பு, படிப்பு, வேலை, கல்யாணம் என்று ஒரு கமிட்மெண்ட் வேணும்.
அந்த தொந்தரவெல்லாம் இல்லாமல் வெறும் காதல், மகிழ்ச்சி, பரஸ்பர பரவசம் போதும் என்று நினைப்பவன் ராகுல். ஆருத்ரா அப்படி இல்லை என்று நினைப்பதால், பிடித்திருந்தாலும் தன் காதலைச் சொல்லாமல் இருந்தான். ஆருத்ராவுக்கு இளையராஜா உயிர். ராகுல் பாப், ராக் இனம். கல்யாணத்திற்கு இட்டுச் செல்லும் காதலுக்குத்தான் ஆருத்ரா தயாராக இருந்தாள்.
ஒரு நாள் அலுலகத்தில் வேலை செய்யும் முரளி, ஆருத்ராவிடம் தன் காதலைத் தயங்கித் தயங்கிச் சொன்னான். அவளைப் போலவே, திருமணம், குடும்பம், குழந்தை என்ற கனவில் இருந்தான் அவன். அதனால் ஆருத்ரா சரியென்று ஒப்புக்கொண்டாள். முரளி தன் பள்ளித் தோழன் என்றும், அவன் அவ்வளவு சரியில்லையென்றும் ராகுல் ஆரூத்ராவிடம் சொன்னான். அவள் கேட்கவில்லை. ஆருத்ராவின் சம்மதம் கிடைத்ததும் முரளியின் பழக்கவழக்கங்கள் மாறின.
அவன் ஐயங்கார். இவள் அய்யர்.
அய்யரில் பெண் எடுப்பதை அவமானமாக அவர்கள் குடும்பத்தில் நினைப்பார்கள் என்றும், லோ நெக் டிரஸ் போடக்கூடாது என்றும், கண்ணாடி வளையல் போடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை என்றும் பலவாறாக அவளை டார்ச்சர் செய்தான்.
அலுவலகத்தில் ராகுலும் ஆரூத்ராவும் ஒரு பிரசன்டேஷன் விஷயமாக பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட முரளி உடனே வருமாறு கூப்பிட, அவள் பேச்சை முடித்துக்கொண்டு தாமதாமாக வர, குலத்துக்கு ஒரு குணம் இருக்கும் என்று அம்மா சொன்னா நா தான் கேக்கல என்று கோவித்துக்கொள்கிறான்.
அடுத்த நாள் ஆருத்ரா முரளியோடு உறவை முறித்துக்கொண்டாள்.
ரேவதியின் தாத்தாவின் உடல்நிலை சரியில்லையென்று அவரைப் பார்க்க எல்லோரும் கிளம்பினார்கள். அந்த கிராமத்தில், கட்டிக்கொள்ளும் முறையில் இருந்த மாதவனை, சிறு வயதிலிருந்தே ஆருத்ராவுக்குத் தான் என்று பேசிக்கொண்டிருப்பார்கள். இந்தப் பயணத்தில் மாதவனைப் பார்த்துவிடலாம் என்று ஆருத்ரா நினைத்தாள். ஊருக்குப் போனக் கையோடு, மாதவனைப் பார்த்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்டாள். ராகுல், முரளி பற்றியெல்லாம் மாதவனிடம் சொன்னாள். அவன் கல்யாணம் பண்ண சம்மதித்து விடுகிறான்.
இந்தப் பின்புலத்தில் ராகுலும் ஆருத்ராவும் பாண்டிச்சேரிக்கு லாங் டிரைவ் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவளுக்குப் பிடித்த இளையராஜாவை இசைக்கவிட்டான். பாண்டிச்சேரியிலிருந்து சென்னை வந்ததும் இயல்பாக தன் இரண்டு கைகளையும் நீட்டி அணைக்க அழைத்தான். அவள் மறுத்துவிடுகிறாள்.
அவளுக்கு முரளியோடு திருமணம் நடந்தது. மயூரி என்ற பெண் குழந்தை பிறந்தாள். அவளை வளர்ப்பதற்காக சில வருடங்கள் விடுமுறை போட்டாள்.
திரும்ப அலுவலகம் வந்த போது எல்லாம் மாறிப் போயிருந்தது. காலில் பெரிய உலோகக்குண்டைக் கட்டிக் கொண்டு ரேஸில் ஓடுவது போல் இருந்தது. கல்யாணம் பண்ணாமல் இருந்திருந்தால் தன் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று அடிக்கடி நினைத்துப் பார்த்தாள். ராகுல் அடிக்கடி ஞாபகத்திற்கு வந்தான்.
திடீரென்று ஒரு நாள் ராகுலிடமிருந்து ஒரு போன் வந்தது. லண்டனில் இருக்கும் ராகுல் ஹைதராபாத் வந்து ஆருத்ராவுக்கு அழைத்திருந்தான். மாதவனிடம் சொல்லிவிட்டு ஆருத்ரா ராகுலைப் பார்க்க சைனீஸ் ஹோட்டலுக்குப் போனாள்.
இருவரும் பரஸ்பரம் பல விஷயங்களைப் பேசிக்கொண்டு விட்டு, கடைசியில் ராகுலின் திருமணம் பற்றிய பேச்சு வந்தது. அவனுக்குத் திருமணம் பிடிக்காது என்று ஆருத்ராவுக்குத் தெரியும். ஆனால் தனக்குத் திருமணம் நடந்துது என்றும் ப்யூலா என்ற மகள் இருக்கிறாள் என்றும் சொன்னான். ஆருத்ராவுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக இருந்தது.
டேவிட்டின் தங்கை ஜென்சி, திருமணமாகி மூன்று மாத கர்ப்பமாக இருக்கும் போது, ஜென்சியின் கணவன் மிகவும் தொந்தரவு செய்திருக்கிறான். டேவிட் வீட்டில் புல்லானாலும் புருஷன், கல்லானாலும் கணவன் என்று ஜென்சிக்கு கதவை அடைத்துவிட்டார்கள். அப்பொழுது ராகுலின் வீட்டில் அடைக்கலம் புகுந்திருக்கிறாள் ஜென்சி. பிறகு இருவருக்கும் பதிவுத் திருமணம் நடந்திருக்கிறது. ப்யூலா ஜென்சிக்குப் பிறந்த குழந்தை.
உணவு முடிந்ததும், ஆருத்ரா இரண்டு கைகளையும் நீட்டி அவனக் கட்டி ஆரத் தழுவி விட்டு, டாக்ஸி ஏறிப் போனாள். இருவரும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட, மாறித்தான் போயிருந்தார்கள் என்று கதை நிறைவுறுகிறது.
மொத்தத்தில், மனித உறவுகளின் வெவ்வேறு பக்கங்களை சுவைபட ஆராய ஷான் கருப்பசாமியின் கதாபாத்திரங்கள் எனக்கு உதவின.
********




அருமையான முன்னோட்டம் மதிப்புக் கூட்டும்
ஆழமான உயிரோட்டத்தை
எழுத்தில் காட்டி இருக்கிறார்
ஜான் பிரிட்டோ
மிக மிக அருமை