ஸ்டெல்லாவும் பரந்தாமனும்
- உயிர்மெய்யார்

- 1 day ago
- 6 min read

உயிர்மெய்யார்
13.07.2026
மெல்பர்ன்
இன்றைக்குச் சிறப்பான நாள்.
*****
மல்கிரேவிலிருந்து டேண்டினாங் பெவிலியன் போகவேண்டும். அங்கு தான், ஒரு ரெஸ்ட்டாரண்டில் பரந்தாமனுக்கும் ஸ்டெல்லாவுக்கும் இன்றைக்குத் திருமணம் நடக்க இருக்கிறது. மேரேஜ் செலபரன்ட் சரியாக பதினோரு மணிக்கெல்லாம் அங்கு வந்து விடுவதாகச் சொல்லியிருக்கிறார். பரந்தாமன், ஸ்டெல்லா, மேரேஜ் செலபரன்ட், நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து ஏழு பேர் கூடி நடத்தும் திருமணம்.
பிரின்சஸ் ஹைவே வழியே போய்டலாம் ஸ்டெல்லா.
நோ. நோ. எம் ஒன் எடுத்துப் போவலாம்.
*****
மெல்பரன் குளிருக்கு, காருக்குள் சூடு இதமாக இருந்தது. எம் ஒன் பெருவழிச் சாலையில் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பரந்தாமன் காரை ஒட்டிக்கொண்டிருந்தான். லேசாகத் தூறியது. பூர்வீகக் குடியைச் சேர்ந்த ஒரு பையன், காரின் மங்கலான கண்ணாடியில் விண்ட்ஷீல்ட் வைப்பருக்குப் பதில் தன் முகத்தால் திரும்பத் திரும்ப துடைத்தான். பரந்தாமனுக்குப் பாவமாக இருந்தது. தெரிகிறது. அதனால் தான் வேண்டாம், சொந்த ஊருக்கேப் போய்விடலாம் என்று நினைக்கிறேன்.
ஷாப்பிங் சென்டர் செக்யூரிட்டி கார்ட், மற்றவர்களை விட்டுவிடுகிறார். இவனது கருப்புப் பையைச் சோதிக்கிறார். நான் திருடனா? யார் திருடன்? நானா? நீங்களா? எங்களிடமிருந்த நிலத்தைக் களவாண்டது யார்? அக்நாலஜ்மெண்ட் ஆஃப் கன்ரி!!! எங்கள் மலைகள் கைகொட்டிச் சிரிக்கின்றன. இப்பொழுது காரின் பொன்னெட்டில் ஒரு பாம்பு வளைந்து நெளிந்து படம் எடுத்து, பரந்தாமனையேப் பார்த்துக்கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ கொத்திக் கிழித்திருக்கிறார்கள். கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்களில் இரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. அந்தப் பையன் அழுதான்.
என்னை நோக்கி வீசப்படுகிற அசிங்கமான வார்த்தைகள் என் கனவிலும் வந்து என்னை மூச்சு முட்ட வைக்கிறது. நீ படித்து என்ன கிழிக்கப் போகிறாய்? என, பள்ளியில் படிக்கும் அவனுடைய அக்காவை கேலி செய்ததில், அவள் முகம் கிழிந்து, சதை தொங்கி, ரத்தம் ஒழுக வீட்டிற்கு வருகிறாள். எட்டப் போய் உட்கார்! காத்திரு, என உடல் நலம் குன்றி மருந்தகத்திற்கு வந்த அவனது வயது முதிர்ந்த தாய் நாற்காலியிலேயே உயிரை விடுகிறாள். அந்தப் பையனைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் இன்னும் சிலரை இழுத்து வந்தார்கள். இவர்களைக் கொண்டு சிறைகளை நிரப்புங்கள். ஆட்கள் கிடைக்கவில்லையா? அவர்களின் குடியிருப்புகளைச் சீண்டுங்கள் என ஓர் வெள்ளை அதிகாரி கத்தி கூச்சலிட்டான். அந்த கூச்சலில் பரந்தாமன் திடுக்கிட்டு உயிர்த்தான்.
சொந்த நாட்டிற்கே போய்விடலாமா? குழம்பிப் போனான்.
மொபைலில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்த ஸ்டெல்லா தனக்குள்ளேயே சிரித்தாள். ஆரவாரமாக, உலகக் கால்பந்து போட்டி நடந்துக் கொண்டிருக்கிறது. பச்சை மற்றும் மஞ்சள் வண்ணத்தில் கால்பந்து ஓரிடத்தில் நிற்க, அதைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான கைதட்டிகள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். அதோ! நம்மாளு வெளையாடுறான். ஒங்க சொந்த நாட்டுல ஒரு குழுவாவது இருக்கா? இங்க திறமைக்குத் தான் மதிப்பு. இப்படிப்பட்ட ஒரு நாட்டுல வாழறதே ஒரு பெருமை. பெருமை ஸ்டெல்லாவின் கண்கள் வழியே வழிந்து உடம்பெல்லாம் ஊறியது.
எத்தனை வகையான மக்கள்! எத்தனை வகையான உணவுகள்! எத்தனை வகையான திருவிழாக்கள்!! அன்சாக் தினத் துப்பாக்கிகள் அவள் காதுகளில் தொங்கட்டானாய் தொங்கியது. ஆங்கிலப் புத்தாண்டு இரவின் பட்டாசுகள் அவள் கண்களில் தோரணமாய் மின்னியது. ஆக்ரமிப்புத் தின குரல்கள் நசுங்கி, நாட்டுக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியின் ஆரவாரம் அவள் காது மடல்களை வருடியது. சாண்டா கிளாஸ் கிறிஸ்துமஸ் கேக்கை அவள் வாயில் ஊட்டி விட்டார். பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்திலேயே குறைந்த விலையில் பொருட்களை வாங்கி காரின் டிக்கியில் போட்டுக்கொண்டாள்.
ஈஸ்டர் சாக்லெட் முட்டைகள் உடைந்து, கிறிஸ்து உயிர்த்தெழுந்து, அவளுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். நய்டாக் தின பூர்வீக இசையும், புகையும் அவளை மயக்கி வேறு ஒரு உலகத்திற்கு இழுத்துச் சென்றது. பூர்வீக மற்றும் டோர்ஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் யாபுன் திருவிழாவின் தாளத்திற்கேற்ற இசை அவள் விரல்களை தொடையில் தாளம் போட வைத்தது. வடக்குப் பிரதேச கார்மா திருவிழாவின் பண்பாட்டு மரபறிவு பேச்சுகளின் சொற்கள் அவள் முடிகளில் கோர்த்துக்கொண்டன. தீபாவளி புத்தாடையின் வாசம் மூக்கைத் துளைத்தது. ஈத் அல்-பித்ர் துவா இனிமையாக ஒலித்தது.
மார்டி கிராஸ் எல்ஜிபிடிக்யூ கொண்டாட்டத்தின் ஏழு நிறங்கள் கண் முன் ஊஞ்சலாடியது. சீன, கிரேக்க, இத்தாலிய, துருக்கிய திருவிழாக்கள் எல்லாம் வரிசை கட்டி எங்கள் புகழையும் எடுத்துச் சொல்லுங்கள் என்று மன்றாடி நின்றது. இந்த நாடு ஒரு சொர்க்கம். இங்கே திருமணம் செய்து, வீடு வாங்கி, செட்டில் ஆகப் போகிறோம். இப்படிப்பட்ட வாழ்க்கை அமைய நாம் கொடுத்துவைத்திருக்க வேண்டும். சீனப்புத்தாண்டின் டிராகன் லாந்தர் வெளிச்சம் காரின் குறுக்கே போன போது தான் விழித்தாள்.
நல்லவேளை! சொந்த நாட்டை விட்டு இந்த நாட்டில் வாழ்வது என்று முடிவு செய்தது எவ்வளவு ஸ்மார்ட்டான முடிவு!
இன்னும் எவ்வளவு நேரத்துல மேரேஜ் நடக்கற ரெஸ்ட்டரண்ட்டுக்கு போவோம்?
ம்ம்ம்ம்… முப்பத்திரெண்டு நிமிஷம் காமிக்குது.
அந்த பூர்வீகக் குடிப் பையன் இப்பொழது கார் ஸ்டீயரிங்கில் வந்து உட்கார்ந்துக் கொண்டான். பரந்தாமா! இது ஒரு ரேஸிஸ்ட் கன்ட்ரி! வெள்ளை, மஞ்சள், பழுப்பு, கருப்பு என காத்திருக்கும் போது, வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் கருப்பு முதலில் வெளியே தள்ளப்படுகிறது. நீ கவனித்ததில்லையா? தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்து பார். திறந்த மனதோடு பார். எங்கள் குடியிருப்புகளின் கிரைம்களை அதிகப்படுத்திக் காண்பிக்கிறார்களா இல்லையா?
எங்கள் தன்மானத்தையும் பெருமையையும் சீரழிக்கும் செயல் தானே அது! காலனிகாலத்தைப் பற்றி உன்னிடம் சொன்னால் தலைசுற்றி விழுந்துவிடுவாய். அப்பொழுது நூறு பேர் இருந்த எங்கள் மக்களில் இப்பொழுது பத்து பேர் தான் மிஞ்சி இருக்கிறோம். எங்கள் பிள்ளைகளை எங்களிடமிருந்து பிய்த்து எடுத்து அவர்கள் மூளைகளில் வெள்ளை இரத்தம் ஏற்றவில்லையா? எத்தனைப் பேர் கொள்ளை நோய்களால் மாண்டு போனோம்! எல்லோருடைய ஆவியும் இங்கே தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. எங்களில் யாரிடம் வேண்டுமென்றாலும் கேள். ஆஸ்திரேலியா ஒரு ரேஸிஸ்ட் கன்ட்ரியா? என்று கேள். முக்கால்வாசி பேரின் தலைகள் வானத்திற்கும் நிலத்திற்குமாகத் தான் ஆடும்.
அதனால் தான், இந்த திருமணம் வேண்டாம். சொந்த நாட்டிற்கே போய்விடலாம் ஸ்டெல்லா! ம்ஹூம்!! அவள் கேட்கவில்லை. இதோ! இன்னும் ஒரு மணி நேரத்தில் திருமணம். பிறகு குடியுரிமைப் பெற முயற்சி. வேண்டாமே! சொந்த நாட்டு குடியுரிமையே போதுமே.
கார்கள் விர் விர்ரென்று விரைந்துப் போய்கொண்டிருந்தன. இப்படியே ஹைவேயிலேயே காரை நிறத்திவிட்டு ஓடிப் போய்விடலாமா? ஆவி பின்னே இழுக்கிறது. உடல் முன்னால் போய்க்கொண்டிருக்கிறது.
ஸ்டெல்லா கண்கள் மூடி கனவில் மிதந்தாள். புலம்பெயர்ந்த கவிதா ஸ்டெல்லாவின் தோளில் சொரிந்தாள். தனக்கு கிடைத்த தரமான வேலைக்கான அனுமதிக் கடிதத்தைக் காட்டினாள். அட! சம்பளம் இத்தனை டாலர்களா? இது போல வேறு எங்கு கிடைக்கும்? கவிதாவின் மகிழ்ச்சி ஸ்டெல்லாவின் கண்களையும் பற்றிக் கொண்டது. இங்கேயே பிறந்து இங்கேயே வளரும் கவிதாவின் பிள்ளைகள், ஆண்ட்டி! நாங்க படிக்க, எங்கள் கனவுகளை அடைய, இதவிட சிறப்பான நாடு வேற எங்க இருக்கு ஆண்ட்டி…என்று லேப்டாப்பிலிருந்து தலையை சற்றே உயர்த்தி சொல்லிவிட்டு மறுபடியும் அதில் மூழ்கினார்கள்.
கவிதா தொடர்ந்தாள். இதுகளுக்கு நல்ல எதிர்காலம் இங்கே தான் இருக்கிறது. ஊர்ல மட்டும் இருந்திருந்தா கெட்டுப் போயிருப்பாங்க. இங்க பல தரப்பட்ட இன மக்களோடு பழகுறாங்க! நெறைய கத்துக்கறாங்க. எத்தனை புலம்பெயர் மக்கள் அமைச்சர்களா நீதிபதிகளா, வணிகத் தலைவர்களா, ஆசிரியர்களா வலம் வர்றாங்க தெரியுமா?. வாய்ப்புகள் நிறைந்த நாடுன்னா அது இது தான்! இனவாதத்திற்கெதிரான சட்டங்கள் நமக்குப் பாதுகாப்பா இருக்கு.
எத்தனை விதமான வீசாக்கள் இருக்கு! எங்க அக்கா பையனுக்கு பெர்மணன்ட் ரெசிடென்ட் விசா ஈசியா கெடைச்சிச்சி. எங்க குடும்பத்துல எல்லாரும் குடியுரிமை வாங்கிட்டோம். எல்லாரும் மாதிரியும் தேர்தல்ல வாக்களிக்கிறோம்ல. அந்த நாட்டுல, போன தேர்தல்ல, எங்க மாமா ஓட்டுப் போட போனாரு. அவர் ஓட்டை வேற யோரோ போட்டுட்டாங்களாம். எல்லாம் களவாணிப் பசங்க. கவிதா சத்தம் போட்டு சிரித்தாள். அவள் சிரிப்பா? அல்லது அது மொபைலின் அழைப்பா?
மொபைல் தான் அழைத்தது. உச்ச மகிழ்ச்சியில் இருந்த ஸ்டெல்லா மொபைலைத் தட்டிப் பேசினாள்.
வந்துட்டிங்களா? ஸ்டெல்லா’ங்ற பேர்ல புக் ஆகியிருக்கு. ட்வென்டி மினிட்ஸ். வி வில் பீ தேர்! பரந்த்!...ஹௌ எக்சைட்டட் யூ ஆர்?
பரந்த் என்ற பரந்தாமன், கண்களைத் திறந்து தான் காரை ஓட்டிக்கொண்டிருந்தான். ஆனால் நினைவுகளில் கண்களை மூடி கனவில் இருந்தான். ஊரில் வாய்க்கால் வழிப் பறந்த வெண் கொக்குகள் ஏமாற்றமாய் இவனைப் பார்த்து ஏங்குகின்றன. இங்கிருக்கிற பறவைகளோடு ஒட்டவேமுடியவில்லை. வேப்பமர நிழலில் கொட்டிக்கிடக்கும் வெள்ளை நிறப் பூக்கள் கண்ணீர் வடிக்கின்றன. வா!
இங்கு யூகலிப்டஸ் மரம் தலையைத் திருப்பிக் கொள்கிறது. கொத்து கொத்தாய் தொங்கும் முருங்கைக்காய்கள் வந்துவிடு வந்துவிடு என்று காற்றில் ஆடி ஆடி அழைக்கின்றன. இங்கிருக்கிற பளபளப்பான காய்களில் ஒப்ப மனம் இடம் கொடுக்கவில்லை. வீட்டிற்கு முன்னே அமர்ந்து நிலவொளியில் உணவு அருந்தும் வெள்ளந்தி மக்கள், கையில் சோற்றை வாயிக்கருகே வைத்துக் கொண்டு எப்பொழுது வருகிறாய் என்று கேட்கிறார்கள். வேலைக்குச் சென்று, பணம் சம்பாரித்து, மூன்றாவது விடு வாங்க அலையும் மக்கள் பக்கத்திலேயே இருந்தாலும் ஆயிரம் மைல் தள்ளி உட்கார்ந்திருக்கிறார்கள்.
கிரிக்கெட்டில் யாருக்கு கை தட்டுவது? ஆஸ்திரேலிய கடற்கரை எங்களுடையது என்ற உணர்வு மேலிட, சிட்னி குரோனுல்லா கடற்கரையில் வெள்ளை இளைஞர்கள், வெள்ளை நிறமற்றவர்களோடு மோதிய கலவரத்தில் எரிந்த வாகனங்களின் கரும்புகை வாசனை திடீரென காருக்குள் அடித்தது.
ஸ்டெல்லா! முடியல.
இந்த மதக்காரன் அந்த மதக்காரனை எதிர்த்துச் சுடுகிறான். ஒரே தேசம் ஒரே இனம் என்கிற கூக்குரல் காற்றில் விஷமாய் கலந்துவிட்டிருக்கிறது. வேண்டாம்! பிரேக்கை அமுக்கு. ஆக்சிலேட்டரிலிருந்து காலை எடு. ம்ஹூம்! முடியவில்லை. கார் நூறு, நூற்றி ஒன்று, நூற்றி இரண்டு என்று தான் காட்டிக்கொண்டிருக்கிறது.
இப்பொழுது கவிதா, ஸ்டெல்லாவின் மடியிலேயே உட்கார்ந்துக் கொண்டாள். கவிதாவின் வார்த்தைகள் மனசுக்கு லேசாய் இருந்ததால், மடியில் கனம் தெரியவில்லை. கவிதா பேசினாள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இனவெறி சம்பங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பொதுவாக இது பாதுகாப்பான நாடு. வளர்ச்சியை நோக்கிப் போகிற நாடு.
ஸ்டெல்லா தான் சொல்வதையெல்லாம் விரும்பிக் கேட்கிறாள் என்று தெரிந்ததும், ஸ்டெல்லாவின் காது வழி புகுந்து மூளையின் மையப் பகுதியில் போய் உட்கார்ந்துக் கொண்டாள். ஸ்டெடியாக இரு! நீ முடிவு செய்தது சரி தான். இங்கு தான் நல்ல மருத்துவம், நல்ல கல்வி, நல்ல வேலை வாய்ப்பு, நல்ல தொழில் வாய்ப்பு, இது போதாதா? அய்யோ! அங்க ஊழலையும் லஞ்சத்தையும் நெனச்சிப் பாத்தா, எப்பத்தான் அந்த நாடு உருப்படுமோ?
இங்க, மருந்துவச் சேவை மலிவா இருக்கு. மெடிக்கேர் ஒன்றே சாட்சி. அங்க அரசாங்க மருத்துவமனைக்குள்ள காலை வைக்க முடியாது. பிரைவேட் மருத்துவமனைக்குப் போனா வீட்டை வித்து தான் பீஸ் கட்டனும். இல்லே? அதுமட்டுமில்ல ஸ்டெல்லா… உலகத்துல எல்லா நாட்டுலேர்ந்தும் இங்க இருக்கற யுனிவர்சிட்டியில ஏன் படிக்க வர்றாங்க? உலகத் தரம் இருக்கறதால தான!!! அங்க லட்சத்தை விட்டெறிஞ்சா டாக்டர் பட்டமே வாங்கலாம். நாமெல்லாம் தப்பிப் பொழைச்சோம்.
சிம்பிளா எடுத்துக்குங்க! இப்ப நாம நடக்கறோம். நடக்கறதுக்கு, சைக்கிள் போறதுக்குன்னு தனி வழி நாடு பூரா போட்டிருக்கானே! அங்க தெருவுல வாக்கிங் போக முடியுமா? அந்த தூசியும், சத்தமும்! அடச்சே! மனசே விட்டுப் போகுது. எதிர்த்தாப்ல வர்றவங்க சிரிக்கிறாங்க. ரெண்டு வார்த்தை பேசறாங்க. அங்க எல்லாரும் உம்முனா மூஞ்சிங்க! இங்க கெடைக்கிற சுத்தமான காத்து அங்க கெடைக்குமா? பொல்யூசன், பொல்யூசன், பொல்யூசன். எங்க பாத்தாலும் பொல்யூசன். நான் இராத்திரி எட்டு மணிக்கு வேலைக்குப் போயிட்டு, என் ஷிஃப்ட் முடிஞ்சி அதிகாலை மூணு மணிக்கு வீட்டுக்கு வாரேன். ஒரு தொல்லையும் இல்ல. அதே அங்க முடியுமா? ராத்திரியில தனியா தெருவுல நடந்து பாரு, ரெண்டே நாள்ல சோலிய முடிச்சிடுவானுங்க.
பரந்தாமனின் மொபைல் சிணுங்கியது. கார் தொடு திரையில் ஒரு பட்டனைத் தொட அங்கிருந்து பேசுவது கேட்டது.
ஓஹோ! வந்துட்டாங்களா? இன்னும் அஞ்சு நிமிஷம் தான். செலபரன்டை எங்கேஜ் பண்ணிக்கொண்டிரு! பார்க்கிங் பண்ணிவிட்டு வந்துடறோம்.
செலபரன்டிடமே சொல்லிவிடலாமே! கடைசி நேரத்தில் சொல்லலாமா? ஸ்டெல்லா எப்படி எடுத்துக் கொள்வாள்? அதோ ரெஸ்ட்டாரண்ட் வந்து விட்டது. கார், லெப்டில் திரும்பி, பார்க்கிங் லாட்டுக்குப் போனது. நண்பர்களில் ஒருத்தி கையை ஆட்டினாள். அவள் முகம் கொண்டாட்ட அறிகுறியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஸ்டெல்லாவும் அதே உற்சாகத்தோடு கையை ஆட்டினாள்.
போய்விடலாம். அது தான் சரி.
இருவரும் இறங்கினார்கள்.
ஸ்டெல்லாவின் முகம் பளிச்’சென்றிருந்தது. பரந்தாமன் முகம் வாடிப்போயிருந்தது.
விருந்து தயாராக இருந்தது. ஏழு பேர் உட்காரக்கூடிய மேசை அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஐரிஷ் முகம் கொண்ட பெண்மணி ஒருவர் மேரேஜ் செலபரண்ட்டாக வந்திருந்தார். ஸ்டெல்லாவும் பரந்தாமனும் அவரோடு கைகுலுக்கினார்கள். தாங்கள் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை நண்பர்கள் ஓரமாக வைத்திருந்தார்கள். ஒரு நண்பர், ஹாலின் ஓரமாக செய்யப்பட்ட சிறு அலங்காரத்தை கடைசி நேர சரிசெய்வதை பார்த்துக் கொண்டிருந்தார்.
ஸ்டெல்லா செலபரண்ட்டோடு எதையோ பேசிக்கொண்டிருக்க, பரந்தாமன் ஒரு நண்பனை அழைத்துக் கொண்டு, ரெஸ்ட்டராண்டின் முன்பகுதிக்கு வந்தான். ஸ்டெல்லா செலபரண்டை நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு அவளும் அருகே அமர்ந்தாள்.
திருமண நிகழ்வின் போக்கு எப்படி இருக்கும்?
பிரைட்குரூமும் வந்தால் இருவருக்கும் சேர்த்து சொல்லிவிடலாமே!
ஸ்டெல்லா பார்த்தாள். பரந்தாமன் கை கால்களை ஆட்டி ஏதோ மும்மரமாக பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. அவன் அருகில் கேட்டுக்கொண்டிருந்த நண்பனின் முகத்தில் சிறு கலவரம் பரவுவது இங்கிருந்தே தெரிந்தது. என்ன ஆச்சு? விருந்து ஏற்பாட்டில் ஏதும் பிரச்சனையா? சரி வரட்டும் என்று காத்திருந்தாள்.
அதற்குள் வெல்கம் டிரிங் வழங்கப்பட்டது. இன்னும் ஐந்து நிமிடங்களில் தொடங்கலாம்.
பரந்தாமனும், அந்த நண்பனும் மேசையருகே வந்தார்கள். நண்பனின் முகம் அக்குளிரிலும் வெளிறிப்போயிருந்தது.
திருமண நிகழ்வு எப்படி துவங்கும், யார் என்ன பேசுவார், யார் என்ன செய்யவேண்டும், எங்கு கையெழுத்துப் போடவேண்டும் என்றெல்லாம் செலபரண்ட் அமைதியாக எடுத்துச் சொன்னார். ஸ்டெல்லா பரந்தாமனின் முகத்தைப் பார்த்தாள். பரந்தாமனின் முகம் வெறிச்சோடிக் கிடந்தது.
******
இன்றோடு திருமணம் முடிந்து பனிரெண்டு வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. பரந்தாமன், மகனைப் பள்ளிக்கு விட்டுவிட்டு, கோல்ஸ் சென்று சாமான்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து வைத்துவிட்டு, வேலைக்குப் போனான். ஸ்டெல்லா ஏற்கனவே வேலைக்குப் போயிருந்தாள். மாலை திரும்பியதும் மூவரும் திருமண நாள் டின்னருக்குப் போவது என்று முடிவு செய்திருந்தார்கள்.
இன்றைக்குச் சிறப்பான நாள்.
******



Comments