top of page

பொய்யுரு - வில்லியம் ஃபரோஸ் - தமிழில் பா. வெங்கடேசன்


நவீன வாழ்க்கை முறையைக் கைவிட்டு, இயற்கையை மையப்படுத்திய வாழ்க்கை முறைக்கு திரும்புமா மனிதகுலம்? தன் பேராசைக் குணத்தைக் கைவிட்டு, இயற்கையின் மேலும், மனிதர்கள் மேலும் மேலாண்மை செலுத்தும் ஆதிக்கச் சக்திகள் மாறுமா? மதம், மொழி, கல்வி, மருந்து, பணம், போதை, காலம் போன்ற காரணிகளை மேலாண்மைக்குப் பயன்படுத்தி இயற்கை மற்றும் மனிதகுல பன்மயத்தைக் குலைக்கும் நிலை மாறுமா? போன்ற கேள்விகளை எழுப்புகிற நாவல் இது.

 

William S. Burroughs எழுதிய Ghost of a Chance புதினத்தை பா.வெங்கடேசன் ‘பொய்யுரு’ என்று மொழிபெயர்த்து எழுதியுள்ளார். நாவலைப் படித்து முடிக்கும் போது, பா. வெங்கடேசன் இந்த நாவலை மொழிபெயர்க்க கஷ்டப்பட்டிருக்கக் கூடுமோ என்று நினைக்கத் தோன்றும்.

 

பொய்யுரு நாவலைப் படித்து ருசித்தது, ஒரு கோப்பை தனி தென்னைமரக் கள்ளைக் குடித்தது போல இருந்தது. Ghost of a Chance என்றால் வெற்றி பெற துளிகூட வாய்ப்பில்லை என்று தான் பொருள். அந்த நாவலுக்கு பொய்யுரு என்று மொழிபெயர்ப்பாளர் பெயர் வைத்திருக்கிறார். பொய்யுரு என்றால் ஒன்று இருக்கிறது ஆனால் இல்லை என்ற பொருளில் எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நவீன வாழ்க்கையில் மனிதர்கள் ‘வாழ்வது’ போல் இருக்கிறது. ஆனால் உண்னையில் அது ஒரு பொய். பொய்யுரு!!! இந்த மனிதகுல அழிவை மீட்க Ghost of a Chance தான் இருக்கிறது. அதாவது மீட்க வழியே இல்லையோ என்று நாவலைப் படித்து முடிக்கும் போது தெரிகிறது.

 

இந்த நூலின் கருத்தும் வடிவமும் பேசப்படுவதற்கு முன், இதன் வாசிப்பு அனுபவத்தைக் கூற வேண்டும். மலையில் ஏறுவது கடினம். ஆனால் கல்லும், முள்ளும், மேடும், பள்ளமும், காடும், வெளியுமாக இருக்கிற செங்குத்தான மலையில், வெயிலிலும், மழையிலும் செருப்பில்லாமல் ஏறுவது எப்படி கடினமோ அப்படி கடினமாக இருந்தது நூலைப் படிக்கும் போது. மூலத்தின் சொல்லமைப்பும், சொற்றொடர் அமைப்பும், மொழிபெயர்ப்பும் எழுத்துக்களுக்கிடையே (சொற்களுக்கிடையே அல்லது சொற்றொடர்களுக்கிடையே அல்ல) எழுத்துக்களுக்கிடையே, அல்லது எழுத்துக்களுக்குள்ளே அழுத்திவைக்கப்பட்டிருக்கிற ‘உண்மை’ ஒரு பத்தியிலிருந்து இன்னொரு பத்திக்கு நகர கஷ்டப்படுத்தியது. இருந்தாலும் முயற்சி எடுக்கப்பட்டது.

 

கடற்கரையில் அமர்ந்திருந்தால் காற்று கிடைக்கும். சற்றே நடந்தால் கரை ஒதுங்கிய சிப்பிகள் கிடைக்கும். படகில் சென்று வலை விரித்தால் மீன்கள் கிடைக்கும். மூச்சைப் பிடித்து மூழ்கினால் முத்துக்கள் கிடைக்கும். இப்படித்தான் இந்த நாவலும். மேலெழுந்த வாரியாகப் படித்தால் மூச்சு முட்டும். மூச்சைப் பிடித்து மூழ்கினால் முத்துக்கள் கிடைக்கும்.  அதற்கு முயற்சி எடுக்கவேண்டும். அப்படி முயற்சி எடுக்கும் போது எப்படிப்பட்ட முத்துக்கள் கிடைக்கும் தெரியுமா? மனிதகுல இன்றைய நவீன வாழ்க்கையைப் பற்றிய முத்துக்கள்.

 

மனிதர்களின் நவீன வாழ்க்கை எப்படி இருக்கிறது? நம்மை எங்கே கொண்டு போய்க்கொண்டிருக்கிறது என்று பல்வேறு ஆழமான சிந்தனைத் துண்டுகளை இணைத்து நாவலாக வடிக்கப்பட்டிருக்கிறது. 5 திரள்நிலை உயிரழிவுகளை (Mass Extinction) இந்த பூமி சந்தித்திருக்கிறது என்றும் தற்போது மனிதகுலம் அழியும் ஆறாவது திரள்நிலை உயிரழிவு நடந்துக் கொண்டிருக்கிறது என்றும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அதற்கான காரணங்களையும், அதன் விளைவுகளையும் இந்நாவல் எடுத்துக் கூறுகிறது.

 

இந்த நூலின் வடிவம் ‘வெட்டி ஒட்டும் பாணி’ என்று கூறப்படுகிறது. அதாவது வாசகர் சொற்களையோ, வாக்கியங்களையோ அவரவர் விருப்பத்திற்கேற்ப மாற்றிப் போட்டு பொருள் கொள்ளக்கூடிய பாணி. பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்ள விரும்பும் வாசகர்களே, இந்த நாவல் கடலில் படகை துணிச்சலாக ஓட்டமுடியும்.

 

இந்த நூலின் மையக்கருத்து, சூழல் அழிப்புக் குறித்த எச்சரிக்கை. இதுவே சூழலியலாளர்களை இந்த நூலை நோக்கி ஈர்க்கும் மாயசக்தி. இந்தக் கதையை நகர்த்திக் கொண்டு செல்பவன் கேப்டன் ஜேம்ஸ் மிஷன் என்று சொல்லப்பட்டாலும், இயல்பில் நடத்திச் செல்வது யதார்த்த உண்மையின் கிளிகொள்ளச் செய்யும் பயங்கரமே.

 

முக்கிய கதை மாந்தனுக்கு மிஷன் என்று பெயர் வைத்ததற்கு ஒரு பொருள் இருக்கும் என்றே தோன்றுகிறது. “கிறிஸ்துவ மிஷனரிகள் ஆப்ரிக்க தேசத்திற்கு வந்த போது அவர்களிடம் பைபிள் இருந்தது. நிலம் எங்களுடையதாக இருந்தது. ‘எல்லோரும் மன்றாடுவோம்’ என்றார்கள் அவர்கள். நாங்கள் கண்களை மூடினோம். மறுபடி கண்களைத் திறந்த போது எங்களிடம் பைபிள் இருந்தது. நிலம் அவர்களுடையதாக இருந்தது” என்று Desmand Tutu கூறியதாக ஒரு குறிப்பு இருக்கிறது. நிலத்தை அபகரித்து, மரபு மொழியை அழித்து, வளங்களைக் கொள்ளையடித்து, ஊழலுக்கு வழி வகுத்து, இயற்கையைத் தூக்கி எறிந்த நவீன வாழ்க்கை முறையை காலனியவாதிகள் அறிமுகப்படுத்தினார்கள். ஆப்ரிக்கா மட்டுமல்ல. எங்கெல்லாம் காலனி அரசு சென்றதோ, அங்கெல்லாம் மிஷனரிகள் இதைத் தான் செய்தார்கள். அதற்குத் தானோ என்னவோ, ஒரு வேளை, வில்லியம் பரோஸ், தன் நாவலின் முதன்மை கதை மாந்தனுக்கு மிஷன் என்று பெயர் இட்டிருக்கிறார்.

 

இந்த நாவலில் நான்கு முக்கிய குழுக்கள் இருக்கின்றனர். ஒரு குழு, கேப்டன் மிஷன் போன்ற கடலோடிகள். இரண்டாவது குழு, கேப்டன் மிஷன் உருவாக்கியுள்ள கடற்கொள்ளையினரிடமிருந்து சுதந்திரமடைந்தவர்கள் உள்ள குடியிருப்பில் வசிப்பவர்கள். மூன்றாவது குழு, மடகாஸ்கரின் பூர்வீக மக்கள். நான்காவது குழு பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத் துருப்புகள் இணைந்த நிலவேட்டைக்காரர்கள்.

 

நில வேட்டைக்காரர்கள், மற்றவர்களை அடக்கி ஆள, மேலாண்மைக் கொள்ள, வெவ்வேறு யுக்திகளைக் கையாளுகின்றனர். முக்கியமாக அவர்களுக்கு எல்லா உயிரினங்களையும் மதிக்கும் பண்பு இல்லை. இயற்கையின் இயல்பான பன்மயத்தை அழிக்கின்றனர். மதம், காலம், மொழி, பணம், போதை ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். போதைக் கலாச்சாரத்தை புகுத்துகின்றனர். பூர்வக்குடிகளையும் அவர்கள் பண்பாட்டையும் சிதைக்கின்றனர்.

 

இப்படி இந்த நாவல், இயற்கை மீது மனிதர்களின் பேராசையை வெளிப்படுத்துகிறது. தங்களது பேராசையினால் இயற்கை வளத்தை சூறையாடவும், அதற்கு பெருங்கூட்டத்தை தன் வயப்படுத்தவும், அதனை மேலாண்மை செய்யவும் வேண்டியிருக்கிறது. அப்படி மேலாண்மை செய்வதற்கு ஒரு ‘விதி’யை உருவாக்கி, அதனை எல்லோரும் நம்பும்படி செய்ய வேண்டியிருக்கிறது. மதம் போன்ற நிறுவனங்களைக் கண்டுபிடித்து அந்த நிறுவனங்களை மற்றவர்கள் தொடர வழிவகை செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு காலம், மொழி, உணவு, மருந்து, நோய் எல்லாவற்றையும் ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்கிற ரீதியில் கட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது என்று நாவலைப் படித்த ஒரு வாசகர் குறிப்பிட்டது இங்கு முக்கியமாகப்படுகிறது.

 

நாவலில் தூக்கி வைக்கப்படுகிற முக்கிய கருத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

 

உயிரினங்கள்

பூர்வகுடி ஒருவன் குடியேறியான மிஷனிடம் லெமூர் விலங்கைப் பற்றிச் சொல்கிறான். அவை கன்றுக்குட்டி அளவில் இருக்கும் என்றும் மௌனம் குடியிருக்கும் இடத்தில் தான் இருக்கும் என்றும் சொல்கிறான். அப்படிப்பட்ட, ’ஆவியுரு’ என்கிற பொருள் கொண்ட ‘லெமூர்’ என்ற விலங்குகளைக் கொல்வதற்குத் தடை செய்யப்படுகிறது. அப்படிக் கொன்றால் சமூகத்திலிருந்து வெளியேற்றப்படுவர். மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என்று விதி உருவாக்கப்படுகிறது.

 

மிஷன் ஏற்பாடு செய்திருந்த குடியிருப்பு அழிக்கப்பட்ட நிலையில், கூம்பு முகம் கொண்ட ஒரு மிருகம் தன் பாதத்தை உயர்த்தி மிஷனின் முகத்தைத் தொடும். அந்த தொடுதல், நெடுங்காலத்திற்கு முந்தைய துரோகத்தின் ஞாபங்களைக் கிளறியதாம். என்ன துரோகம் அது? தன்னைப் போன்ற எத்தனை உயிரினங்கள் இப்பொழுது மனிதர்களால், மனிதர்களின் தற்போதைய நவீன வாழ்க்கையால் அழிக்கப்பட்டு வருகின்றன என்ற நினைவை அந்தத் தொடுதல் மிஷனுக்கு ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

 

இயற்கையாகவே ஆண்டுக்கு (365 நாட்களுக்கு) ஒன்றிலிருந்து ஐந்து உயிரினங்கள் மட்டுமே அழியும் என்பது அறிவியல் தரவு. அதற்கு தகவமைப்புக் காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் தொழிற்புரட்சி, மின் புரட்சி, கணிணி புரட்சி மற்றும் செயற்கை நுண்ணறிவுப் புரட்சியில் புரளும் இன்றைய நவீன மனிதனின் கட்டுக்கடங்காத பேராசையால், தற்போது, எத்தனை உயிரினங்கள் அழிகின்றன தெரியுமா? ஒரு நாளைக்கு 150 உயிரினங்கள் வரை அழிகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஐநா சபையின் சுற்றுச்சூழல் ஆய்வின் படி ஆண்டுக்கு ஒரு இலட்சம் உயிரினங்கள் அழிகின்றன. இதில் ஒரு கூத்து என்னவென்றால், இந்த கணக்கெல்லாம் ஆவணப்படுத்தப்பட்ட உயிரினங்களிலிருந்தே சொல்லப்படுகின்றன. உலகத்தில் உள்ள பல பூச்சிகளும் நுண்ணுயிரிகளும் இன்னும் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதே உண்மை. இதற்குக் காரணங்களாக காடுகள் அழிப்பு, நகரமயமாக்கம், நவீன விவசாயம், அதிக வேட்டையாடுதல், அதீத மீன்பிடி, காலநிலை மாற்றம், மாசு என்று சொல்லப்படுகிறது. இப்படியே போனால் தேனீக்கள் குறைந்து, உணவு உற்பத்தி பாழாகும். புதிய நோய்கள் உருவாகும். பொருளாதார இழப்பு வரும். இதைத்தான் ஆறாவது திரள்பேரழிவு (6th Mass Extinction) என்கிறார்கள். இவ்வுலகில் மனிதகுலம் இருந்ததற்கான சுவடு இல்லாமல் போகும்.

 

அந்து கூம்பு முகம் கொண்ட மிருகம் மிஷனின் கன்னத்தை வருடியபோது, உயிரினங்களுக்கு மனிதன் செய்த துரோகங்களை ஞாபகப்படுத்தியிருக்கிறது. அதனால் அவன் தாரையாக கண்ணீர் விடுகிறான். குடியிருப்பிற்குத் திரும்புகிற மிஷன், தன் சகாவான மார்ட்டின், தான் வைத்திருந்த மாங்காயை திருடியது என்று சொல்லி ஒரு லெமூரை கொன்று அதன் மேல் நின்று கொண்டிருப்பான். அந்தக் காட்சியைப் பார்த்து, மார்ட்டீனை குடியிருப்பை விட்டே போகவேண்டும் என்று உத்தரவிட்டு, அந்த லெமூரை நல்லடக்கம் செய்ய எடுத்து மூடி வைப்பான் மிஷன்.

 

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ ‘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க’ ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ போன்ற தமிழர் அறக்கோட்பாடுகள் மனதில் வந்து போகின்றன. கேப்டன் மிஷன் லெமூர்களின் மீது கொண்டிருக்கும் அக்கறையை ‘தேவையில்லாத அக்கறை’ என்றும் அது மிகப்பெரிய ஆபத்து என்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள் கவலைப்படுகிறார்கள். லெமூரைக் கொன்ற மார்ட்டீன் மீது மிஷன் ஒரு கண் வைத்திருக்கிறான்.

 

மடகாஸ்கரில் உள்ள நிறம் மாறும் பல்லியைப் பார்க்கிறான் மிஷன். ஒரு பழமையான கல் அமைப்பை தன் வசிப்பிடமாக மாற்றிக்கொண்டான். மரமொன்றின் வேர்களால் சூழப்பட்ட வசிப்பிடம். விசேஷமான ஒரு லெமூருக்கு ‘ஆவியுரு’ என்று பெயிரிட்டிருந்தான். ஆவியுருடன் கூடவே உறங்கினான். அப்படி பாசமாயிருந்த லெமூர்களை வந்தேறிகளான காலனிவாதிகள் அழித்தொழிக்கிறார்கள். “காட்டுப்புறாக்கள் துப்பாக்கிச் சூட்டின் தோட்டாப் பொழிவினால் மடிந்து, தங்கப்பற்கள் பொருத்திய பருத்த அரசியல்வாதிகளின் உணவுத் தட்டுகளில் கொழுத்து விழுகின்றன” என்று வருத்தப்படுகிறார் வில்லியம் ஃபரோஸ்.

 

“கவனிப்பவன் கவனிக்கப்படுவதைக் கவனி” என்று முதல் பாகத்தை நிறைவு செய்கிறார். மனிதர்களை மையப்படுத்திய சூழலிய கண்ணோட்டம் (anthropo-centric perspective) மிகத் தவறானது. கவனிப்பவனான மனிதன் மற்ற உயிரினங்களால் கவனிக்கப்படுகிறான். அதைக் கவனிக்க தவறவிட்டால் கவனிப்பவனான மனிதன் அழியும் நாள் வெகுதூரமில்லை என்ற அச்சுறுத்தலோடு நிறைவு செய்கிறார். மனிதர்கள் உணவுக்காக மட்டுமல்ல, அழிக்கும் சந்தோஷத்திற்காகவும் உயிரனங்களை அழிப்பதாக வில்லியம் ஃபரோஸ் குற்றம் சாட்டுகிறார்.

 

போதை/சாராயம்

அபினி, கஞ்சா, யாகே, இன்ட்றி போன்ற மிக வேகமாக வேலை செய்யும் போதைப்பொருட்களை உபயோகப்படுத்துபவனாக மிஷன் இருக்கிறான். கேள்விகள் கேட்பதிலும், வெவ்வேறு பதில்கள் சித்திர எழுத்துக்களாய் மனத்தில் எழுவதிலும் இன்புற்றிருக்க அவை பயன்படுகின்றன. காலமற்று சுதந்திரமாக இருக்க அது அவனுக்கு உதவுகிறது. இன்ட்றி போதையை எடுத்துக் கொள்ளும் போது, கனவில் தோன்றும் கொரில்லாவையும், வினோதமான பன்றியையும், மென்மையான மான் லெமூரையும் நினைவு கூர்கிறான். அப்படியே ஆவியுரு என்கிற அவனது பிடித்தமான லெமூரைக் கட்டிப் பிடித்து தூங்கிப் போகிறான்.  அப்பொழுது ‘இரவின் கடற்பஞ்சுக்குள் வெளிச்சம் வற்றியடங்கியதாக’ அழகான உவமை கூறுகிறார் வில்லியம் ஃபரோஸ்.

 

போதை கலாச்சாரமும், போதைக்கெதிரான குரலும் கூட ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டவை என்று குறிப்பிடுகிறார் வில்லியம் ஃபரோஸ். “அதிக மக்கட்தொகைப் பெருக்கம், மூலாதாரங்களின் அழிப்பு, காடழிப்பு, பெரும் பரவலாக மாசுபடும் நீர், நிலம், ஆகாயம் ஆகிய பிரச்னைகளிலிருந்து அவர்களுடைய குற்றச்சாட்டுகளைத் திசை திருப்புவதற்காக இவர்கள் போதை மருந்துகளுக்கு எதிரான போரைத் துவக்கினார்கள்” என்று குறிப்பிடுகிறார். அதிகாரத்தில் இருப்போர், தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க போதைக் கலாச்சாரத்தையும், போதைக் கலாச்சாரத்திற்கெதிரான குரலையும் கூடப் பயன்படுத்துகின்றனர் என்பது எவ்வளவு அபத்தம்.

 

பணம்

ஒரு கட்டத்தில் கேப்டன் மிஷன் இறந்து போகிறார். அதிகார வர்க்கம், தற்போது இருக்கும் தாள் பணத்தை, கழிப்பறைத் தாளாய்ப் பயன்படுத்துவதற்குக் கூடத் தகுதியுடையதாக இல்லாமல் ஆக்கும் என்கிற போது, மிஷனின் ஆவி, “புதிய உயிரியல் செயலியை முயலப் போகிறீர்கள், ஹே?” என்று கேட்டுச் சிரித்ததாம். அதிகாரம் செல்வம் இல்லாமல் இயங்க முடியாது என்பதை எவ்வளவு நாசுக்காகச் சொல்லப்படுகிறது!

 

பூர்வக்குடிகளும் வந்தேறிகளும்

காலங்காலமாக பூர்வக்குடிகள் வாழும் இடத்திற்கு வந்தேறிகளான காலனியவாதிகள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கென குடியிருப்பை உருவாக்கியிருக்கிறார்கள். மார்ட்டின் போன்றவர்கள் மிஷனோடு அந்தக் குடியிருப்பில் இருக்கிறார்கள். மார்ட்டின் லெமூரைச் சுட்டுக்கொன்றதைக் கண்டித்த மிஷன், தாவரங்கள், மிருகங்கள், பறவைகள், பூச்சியனங்கள் என்ற சுற்றுச்சூழலுடன் இணைந்து வாழும் வாழ்க்கையை உண்மையாக்கிக்காட்டுவதாக முயற்சி செய்கிறான். நாவலில் வரும் நிகழ்வுகள் ஆப்பிரிக்காவை ஒட்டியிருக்கும் மடகாஸ்கரில் நிகழ்வதாகத்தான் வருகின்றன. மடகாஸ்கரில், பூர்வக்குடிகளையும், சுற்றுச்சூழலையும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையையும், வந்தேறிகள் எப்படி அழித்தொழித்தார்கள் என்பதற்கு சாட்சியாகவே இந்த நாவல் வலம் வருகிறது. ஆப்பிரிக்காவில் ஹெரேரோ மற்றும் நாமா இனப்படுகொலை இப்படித்தான் நடந்தேறியது. கோஷியன் மக்கள் அழித்தொழிக்கப்பட்டனர்.

 

ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல. ஆஸ்திரேலியாவில் என்ன நடந்தது? அறுபதாயிரம் ஆண்டுகளாக அங்கு பூர்வீக மக்கள் வாழ்ந்து வந்தனர். முன் காலனியத்தில் கிட்டத்தட்ட பதினைந்திலிருந்து முப்பது இலட்சம் வரையிலான பூர்வீக மக்கள் வாழ்ந்து வந்தனர். காலனியத்தின் பின், நூற்றியைம்பது ஆண்டுகளில் பூர்வீகக்குடிகளின் மக்கட்தொகை எண்பதிலிருந்து தொண்ணூறு சதம் குறைக்கப்பட்டு தற்போது பத்து சதவீதம் பேரே இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. சின்னம்மை, தட்டம்மை, இன்ஃபுளூயன்ஸா என்ற பெருங்காய்ச்சல், காசநோய் போன்ற ஐரோப்பிய நோய்கள் பெரும் அழிவை உண்டாக்கியிருக்கின்றன. காலனிய அரசின் ஆதரவுடன், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் வேட்டை உரிமைகள் காரணமாக Australian Frontier சண்டைகள் மூலம் பூர்வீக மக்கள் அழித்தொழிக்கப்பட்டிருக்கின்றனர். உணவு, நீர், பண்பாட்டு ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில், கிட்டத்தட்ட 1970 வரை பூர்வீகக் குழந்தைகள் அவர்களது குடும்பங்களிலிருந்து கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு வெள்ளையர் குடும்பங்களுக்கு mission-க்கு அனுப்பப்பட்டனர். இது ஒரு கலாச்சார இனப்படுகொலை எனக் கருதப்படுகிறது. சாராயம் அறிமுகப்படுத்தப்பட்டது. கற்பழிப்புகள் நடந்தன. உணவுப்பற்றாக்குறை நிகழ்ந்தது. நிலம் பிடுங்கப்பட்டது. வாழ்க்கை முறை மாற்றப்பட்டது. ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்பட்டது.

 

அமெரிக்காவில் என்ன நடந்தது? அங்கு, செவ்விந்தியர்கள் என அழைக்கப்பட்ட பூர்வீகக்குடிமக்களையும், இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த அவர்கள் பண்பாட்டையும், இப்படித்தான் வந்தேறிகள் அழித்தனர். கனடாவில் இன்யூட், மெடிஸ் என்றழைக்கப்படுகிற உள்நாட்டு மக்களை இப்படித்தான் அழித்தனர். நியூசிலாந்து நாட்டில் மயோரி என்றைழைக்கப்படுகிற பூர்வீகக்குடிகளை இப்படித்தான் அழித்தனர். பிரிட்டிஷ், பிரெஞ்சு, டச்சு காலனியாதிக்கத்தார் ஆசியாவில், இந்தியாவில் பஞ்சங்களை உருவாக்கினர். மடகாஸ்கரில் மிஷனின் அனுபவத்தை வைத்து உலகில் நடந்த, நடக்கும் அட்டூழியங்களை தோலுரித்துக் காட்டுகிறார் வில்லியம் ஃபரோஸ்.

 

எண், காலம், கடவுள்

நாவலின் ஓரிடத்தில், இருட்டுவதற்கு முன் தன் குடியிருப்பிற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தை மிஷன் உணர்வான். மனிதனுக்கு உரிய நேரத்தில் செய்வதற்கு ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருந்துக்கொண்டேயிருக்கிறது என்று வில்லியம் ஃபரோஸ் ஆதங்கப்படுகிறார். கூடவே மற்ற உயிரினங்களுக்கு காலம் என்கிற ஒன்று இருக்கவில்லை என்று அங்கலாய்க்கிறார். தன் வசதிக்காக உருவாக்கிக்கொண்ட நேரம், காலம், நாட்காட்டி என்கிற சிறையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறான் மனிதன் என்று வேதனைப்படுகிறார்.

 

லெமூர் குடிகள் மனிதயினத்தைவிடப் பழமையானவர்கள் என்றும் அவர்களுடைய காலம் பதினாறு கோடி வருடங்களுக்கு முன்னால் என்றும் குறிப்பிடப்படுகிறது. பிரபஞ்சம் தோன்றியது முதல், இன்று வரையிலான, 1380 கோடி ஆண்டுகளை ஒரு ஆண்டாக (365 நாட்களாக) சுருக்கினால் ஐனவரி மாதம் பெரு வெடிப்பு நடந்ததாகவும், பத்து மாதங்கள் கழித்து அக்டோபர் மாதத்தில் தான் சூரிய குடும்பம் உருவானதாகவும், டிசம்பர் மாதம் கடைசி நாளான 31 ஆம் தேதி இரவு 10:30 க்கு தான் மனிதன் தோன்றியதாகவும், 11:59:50 இல் தான் எழுத்து பூர்வமான சரித்திரம் தொடங்கியது என்றும் அமெரிக்க விஞ்ஞானி கார்ல் சேகன் (Carl Sagan) கூறுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

 

அப்படியானால் மனிதன் தொடங்கிய நாட்காட்டிக்கு முன்பு, காலமற்ற நேரத்தை எப்படி புரிந்துக் கொள்வது என்று மிஷன் கேள்வி கேட்கிறான். “காலம் ஒரு மனிதப் பெருந்துயரம். மனிதக் கண்டு பிடிப்பல்ல. சிறை. எனில் காலமற்ற பதினாறு கோடி வருடங்களின் பொருளென்ன? மேலும் சூறையாடப் பட்டுக் கொண்டிருக்கும் லெமூர்களுக்குக் காலம் என்பது என்னவாய் அர்த்தப் படுகிறது? மனிதன் காலத்தின் பிறந்தான். காலத்திலேயே வாழ்ந்து இறந்தும் போகிறான். எங்கே அவன் போனாலும் அங்கே தன்னுடன் காலத்தை எடுத்துச் செல்வதுடன் காலத்தைத் திணிக்கவும் செய்கிறான்.” என்று கால நேரத்தை பழிக்கிறார் வில்லியம் ஃபரோஸ்.

 

கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம்.

 

எண்களை எடுத்துக்கொள்ளலாம். கடைசி எண் என்று எதுவுமில்லை. தன் வசதிக்காக கணிதத்தில், கடைசி எண்ணை n என்று வைத்துக் கொள்கிறான் மனிதன். அப்படித்தான் காலம் என்று ஒன்று இல்லை. ஆனால் தன் வசதிக்காக சிறுபொழுது, பெரும் பொழுது என்று வைத்துக் கொள்கிறான். நாட்காட்டி மனிதகுல வசதிக்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் அதில் சிக்கித் தவிக்கிறான். பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றலைப் புரிந்துக் கொள்ள கடவுள் என்ற பாத்திரத்தை உருவாக்குகிறான். அறியாமையால், மனிதனின் வசதிக்காக கடைசி எண்ணைப் போல, இல்லாத காலத்தைப் போல, கடவுள் என்ற ஒரு பிம்பம் தேவைப்படுகிறதோ என்ற கேள்வி நியாயமாக வருகிறது.

 

மதம்

மடகாஸ்கரில், நிலவேட்டைக்காரர்கள் கொண்டு வந்த மதம் கிறிஸ்துவ மதம். அதே கிறிஸ்துவின் குருதியை நிலவேட்டைக்காரர்கள் மேல் வழியச் செய்யப் போவதாக மிஷன் சபதமெடுக்கிறான். கிறிஸ்துவை விமர்சனத்துக்குள்ளாக்குகிறார் வில்லியம் ஃபரோஸ். விவிலியத்தில், நோய்வாய்ப்பட்டவர்களை கிறிஸ்து குணப்படுத்துவார். நாவலில் ஒரு மனிதன் நோயுற்ற ஒரு குரங்கை கிறிஸ்துவிடம் கொண்டு வந்து குணப்படுத்தச் சொல்வான். கிறிஸ்துவோ விலங்குகளுக்கு ஆன்மா இல்லையென்றும் அதனால் அவைகளைக் குணப்படுத்த முடியாது என்றும் சொல்வார். ஆனால் அந்த மனிதன் சொல்வான்: “அவை கருணையும் அழகும் வெகுளித்தனமும் உடையவையாயிருக்கின்றன. நீர் சொஸ்தப்படுத்தும் மக்கள் விலங்குகளின்றி வேறென்ன?” என்று கேட்கிறான். மதங்கள், மனிதனை மையப்படுத்திய, நிறுவனங்களாக இருக்கின்றன. மனிதர்கள் முக்தி பெறுவதையே பேசுகின்றன. மற்ற உயிர்களை மதிப்பதில்லை என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. மதம் மனிதர்களை சுதந்திரமற்ற அடிமைகளை உருவாக்கவே கட்டமைக்கப்படுகிறது என்கிறார் வில்லியம் ஃபரோஸ்.

 

கிறிஸ்து பாலைவனத்தில் சாத்தானால் சோதனைச் செய்யப்பட்டதைக் குறிப்பிடுகிறார் வில்லியம் ஃபரோஸ். “கிறிஸ்து பாலைவனத்தில் சாத்தானின் ஆசை வார்த்தைகளுக்கு ஈடுகொடுக்கும் தன் நாற்பது நாள் புலனடக்கத்திற்குப் பிறகு திரும்பியிருக்கிறார்.”  நவீன வாழ்க்கை முறை புலன்களை என்ன செய்கிறது? மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்கள் எப்படி மரத்துப் போய் இருக்கிறது? எதையெதை இழந்திருக்கிறோம்?

 

மெய் - தொடுதல். மனிதர்களை, மிருகங்களை, பறவைகளை, தாவரங்களை, பொருட்களைத் தொடுகிறோமா? எதை அதிகமாகத் தொடுகிறோம்? ஒரு மனிதனுக்கும் மற்ற மனிதனுக்கும் இருக்கிற நெருக்கம் எப்படி இருக்கிறது?

 

வாய் - சுவைத்தல். எதை உண்கிறோம்? பதப்படுத்தப்பட்ட, தொழிற்சாலைகளில் தயாரிக்கிற, செயற்கை உணவுகளை உண்கிறோம். கைபேசியில் யாரையாவது அழைத்தால், காசு கொடுத்தால், உணவு நம் கதைவைத் தட்டுகிறது. ருசிக்காக சாப்பிடுகிறோம். சொந்து அடுக்களைகள் மறக்கப்பட்டு, கடைகளில் உண்ணும் பழக்கும் அதிகமாகிவிட்டது. உணவு உருவாகும் உழவைத் தொழிலாக்கிவிட்டோம். இரசாயன உரங்களைக் கொண்டு செயற்கை உணவை தயாரிக்கப் பழகிவிட்டோம். “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்று திருமூலர் சொன்னதை மறந்துவிட்டோம். வாய் உணவு உண்ண மட்டுமல்ல. பேசவும் தான். மொழிக்கு என்ன மரியாதை கொடுக்கிறோம்? யாரிடம் என்ன பேசுகிறோம்? இனிய உளவாக இன்னாது கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்பதைப் புரிந்திருக்கிறோமா?

 

கண் - பார்த்தல் - திரைப் பார்வை எவ்வளவு நேரம்? ஓய்வு நேரம் எவ்வளவு? என்ன பார்க்கிறோம்?  எவ்வளவு நேரம் பார்க்கிறோம்? இயற்கையைப் பார்க்க நேரம் இருக்கிறதா? வாசிப்புக்கு எவ்வளவு நேரம்? எழுத நேரம் இருக்கிறதா?

 

மூக்கு - வாசனை, மூச்சு. மூச்சு விடுதலில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோம்?

 

செவி - பறவைகளின் ஒலி, யாருடைய பேச்சைக் கேட்கிறோம்? இசைக்கு இடம் உண்டா? மற்றவர்கள் சொல்வதை உன்னிப்பாகக் கவனிக்கிறோமா?

 

நவீன வாழ்க்கை முறை, மனிதகுலத்தை எப்படி நாசமாக்கி வைத்திருக்கிறது? ஐம்புலன்கள் மூலம் தான் தகவல்கள் உள்ளேச் சென்று மனதில் எண்ணங்களை உருவாக்குகிறது. அதுவே செயல்பாட்டுக்கு வழி வகுக்கிறது. ஐம்புலன்களின் வழி தவறான உட்புகுதல், மனித மனங்களை எப்படி மாற்றி வைக்கிறது. சாத்தானின் புலனடக்க சோதனையில் வெற்றி பெற்ற கிறிஸ்து கூட மற்ற உயிரினங்களுக்கு ஆன்மா இல்லாததால், அவைகளை குணப்படுத்த முடியாது என்று சொல்வதாக வில்லியம் ஃபரோஸ் குறிப்பிடுகிறார்.

 

கிறிஸ்துவின் மேல் மேலும் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார் வில்லியம் ஃபரோஸ். கிறிஸ்து, தரத்தின் மீதல்ல எண்ணிக்கையிலேயே கவனமாயிருந்தார் என்றும், அவரைத் தவிர வேறு யாரும் அற்புதங்களை நிகழ வைக்க முடியாது என்பதை நிருபித்து, அற்புதங்கள் நிகழ்த்தும் ஏகபோக அதிகாரத்தை நிறுவவே முனைந்தார் என்றும் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார். கிட்டத்தட்ட அநேக மதங்கள் இதையே முயற்சிக்கின்றன. அவர்களின் வேதமே உயர்ந்தது. அவர்களின் கடவுளே எல்லாம் வல்லவர். அவர்களின் முக்தி வழியே சிறந்த வழி என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருக்கின்றன. இது எல்லாமே அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள், தொடரும் பக்தர்களை, தொண்டர்களை மேலாண்மை செய்வதற்காகவே பயன்படுத்துவதாக புரிந்துக் கொள்ள முடிகிறது.

 

கிறிஸ்து-நோயை, ஒரு கொள்ளை நோய் என்று கூறும் வில்லியம் ஃபரோஸ், கிறிஸ்து, “ஒரு ஆற்றல் வாய்ந்த சின்னத்தின் வழியாக, ஆற்றலற்ற ஒரு பொய்யை ஒத்துக்கொள்வதற்கு லட்சோபலட்ச மனித உயிர்களைத் தூண்டுவத”ற்கு முற்படுகிறார் என்று குறிப்பிடுகிறார். மதங்களுக்கு சின்னங்களும், சடங்குகளும், கட்டிடங்களும், நம்பிக்கைகளும், அவைகளை எடுத்துக்கூறும் மதவாதிகளும் தேவைப்படுகிறார்கள். நம்புவோரை மேலாதிக்கம் செய்ய அவைகள் தேவைப்படுகின்றன.

 

பன்மயம்

நிலம் பிடிக்கும் காலனியவாதிகளிடமிருந்தும், கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்தும், பூர்வீகக் குடிகளிடமிருந்தும் தப்பித்து சுதந்திரமாக இருக்க நினைக்கும் சிலரை ஓரிடத்தில் தனியாக குடியிருப்பு ஒன்றில் வைத்து அவர்களுக்கென்று சில விதிகளை ஏற்படுத்தி அதற்கு வழிகாட்டும் தலைவனாக மிஷன் இருக்கிறான். ஆனால் சதிகாரர்களால் அந்தக் குடியிருப்பு சிதைக்கப்படுகிறது. அதை மிஷன் பார்க்கும் போது வில்லியம் ஃபரோஸ் மனமுருகி எழுதுவார்:

“வெடிமருந்துப் பிரயோகமொன்றினால் முகப்பு வளைவு சல்லியாகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. வெட்டுண்ட கைகளைப் போலக் கிழிந்த வேர்கள், உதிர்ந்துகொண்டேயிருக்கும் கல்லும் இடிமானமும், மிஷன் ஒரு மயங்கிய, நடுங்கிக்கொண்டிருக்கும் அழுகையொன்றைச் செவியுறுகிறான். அந்த ஆவியுரு ஒரு கனத்த கல்லின் கீழே சொருகிக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்தவனாக அவன் கல்லை அப்பால் புரட்டி இறந்துகொண்டிருக்கும் லெமூரைத் தன் கைகளில் வாரி எடுக்கிறான். லெமூர் ஒரு துயரார்ந்த, பலவீனமான அரற்றலுடன் முன்பாதமொன்றை உயர்த்தி அவன் முகத்தில் வைக்கிறது. பாதம் சரிகிறது. பதினாறு கோடி வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் ஒரு நல்வாய்ப்பு என்றென்றைக்குமாக தொலைந்துவிட்டிருக்கிறதென்பதை மிஷன் அறிகிறான்.”

 

இந்த பத்தி பல நினைவலைகளை படிக்கிற யாருக்கும் கொண்டு வரும்.

 

1950-60 களில், இந்தியாவில், தமிழ்நாட்டில், ஆற்றுப் பாசனம். வாய்க்கால் பாசனம். ஏற்றம் இறைப்பர். ஏற்றப் பாட்டு பாடுவர். ஆழமான கிணறுகளில் இருந்து நீரை இறைத்து கமலை முறையில் நீர் மேலாண்மை செய்வர். மாடுகளுக்கு ஆக்சிஜன் தரும் பூவரசு மரங்களை நடுவர். அப்பொழுது கமலைப் பாட்டு பாடுவர். கவணி போடுவர். மழைக்கு முன்பு ஈசல்கள் பறந்து வரும். தட்டான்கள் பறக்கும். எறும்புகள் தங்கள் முட்டைகளைச் சுமந்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரும். மயில்கள் ஆடும். வடகிழக்கில் இருட்டிக் கொண்டு வரும். மின்னல் மின்னும். இடி இடிக்கும். மழை பெய்யும். மழை முடிந்ததும் சிவப்பு நிறப் பட்டுப் பூச்சிகள் ஊறும். மண்புழுக்கள் நெளியும். தவளைகள் கத்தும்.

 

கிராமங்களில் ஏர்கலப்பைக் கொண்டு நிலத்தை உழுவர். உள்ளூர் மக்கள் விதை விதைப்பர். நாற்று நடுவர். களையெடுப்பர். தழை உரம், சாண உரம் இடுவர். தண்ணீர் பாய்ச்சுவர். அறுப்பர். களத்து மேட்டிலே இட்டு அடிப்பர். பிணைமாடுகளைச் சுற்றிவர வைத்து போரடிப்பர். நெல் தூற்றுவர். குதிரில் (மரத்தினால் செய்தால் பத்தாயம், மூங்கிலால் பின்னிய வல்லம், வைக்கோல் பிரியால் செய்த கோட்டை, மண்ணால் செய்த தொம்பை, பண்ணைகளில் சேமிக்க கொட்டாரம்) நெல்லை சேமிப்பர். பூச்சித் தாக்குதல் இல்லாத பகுதியிலிருந்து விதை நெல்லை சேமித்து வைத்தல். அரிசி வாங்காமல் தன்னிறைவாக உண்ணுதல்.

 

இப்பொழுது என்ன நடக்கிறது?

 

தமிழகத்தில் அறுபதுகளில் பசுமைப் புரட்சி நடந்தது. நீர்ப்பாசனத்திற்குப் பதிலாக ஆழ்துளைக் கிணறுகள் (போர்வெல்கள்) வந்தன. மின்நீரேற்றிகள் (பம்புசெட்டுகள்) வந்தன. நிலத்தடி நீரை உறிஞ்சின.

ஏர்கலப்பைக்குப் பதிலாக டிராக்டர்கள் வந்தன. மண் கெட்டுதட்டிப் போனது. தன்னிறைவான உள்ளூர் விதைக்குப் பதிலாக பன்னாட்டு விதைகள் வந்தன. அவை இரசாயன உரத்திற்கும், பூச்சிக்கொல்லி விஷத்திற்குமான தேவையை உருவாக்கின. அறுவடை செய்ய உள்ளூர் ஆட்கள் இருந்தனர். இப்பொழுது ராட்சஷ அறுவடை மிஷன்கள் வந்துவிட்டன.  வேறு மாநிலங்களிலிருந்து ஆட்கள் வந்து விவசாய வேலை செய்கின்றனர். தச்சர்கள் காணாமல் போய்விட்டார்கள். கொல்லர்கள் காணாமல் போய்விட்டார்கள். பாடல்கள் காணாமல் போய்விட்டன. அறுவடை செய்த நெல்லை அரசாங்கம் எடுத்துக்கொண்டு பணம் கொடுக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டு விவசாயிகள் கடையில் அரிசி வாங்கியோ, ரேஷன் கடையில் அரிசி பெற்றோ சமைக்கின்றனர். அரிசியில் சத்து போய்விட்டது. பருவம் தவறி மழை பெய்கிறது. மண்புழுவை, பட்டுப் பூச்சியை, ஈசலை, தவளையை, சிறு பறவைகளைக் காணோம். இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லி விஷங்களும் கொன்றுவிட்டன. பன்மயம் இழந்து பரிதவிக்கிறோம்.

 

விலங்கு மனிதனும் மொழியும்

“வேறு எது விலங்கு மனிதனைப் பிற விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது? அவனால் எழுத்தின் மூலமாயும் வாய்மொழி மரபின் மூலமாயும் தன் தொடர்பெல்லைக்கு அப்பாலிருக்கும் பிற மனிதயினங்களுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் தகவல்கள் கிடைக்கும்படியாகச் செய்யமுடியும்” என்று கூறும் வில்லியம் ஃபரோஸ் வார்த்தையற்ற உலகம் எப்படியிருக்கும்? என்றும் கேட்கிறார். மனிதன் தன் ஆன்மாவை நேரம், மொழி, கருவிகள், ஆயுதங்கள், ஆதிக்கத்திற்கு விற்றான் என்கிறார். அது மட்டுமல்ல, மொழியற்ற உயிரினங்கள் படையெடுத்து மொழியுள்ள உயிரனத்தை அழிக்கும் என்று அறைகூவல் இடுகிறார்.

 

மேலாண்மை

மனிதகுல வளர்ச்சியில் கட்டைவிரல் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. கட்டை விரலைக் கொண்டு தான் கருவிகளைச் செய்திருக்கிறார்கள். அக்கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆயுதங்களைச் செய்திருக்கிறார்கள். கற்பனைச் செய்து பாருங்கள். வில்லையும் அம்பையும் செய்து, அதனை ஒரு மானை நோக்கி நீட்டும் போது, மனிதருக்குள் ஒரு மேலாண்மை எண்ணம் வருகிறது. அதனை ‘பயங்கரமான அவல மகிழ்வெண்ணம்’ என்று வில்லியம் ஃபரோஸ் குறிப்பிடுகிறார். ‘கெட்ட எண்ணமும் ஆயுதம் தரித்தவனும் அருகருகே ஈர்க்கப்படுகிறார்கள்’ என்று கவலைப்படுகிறார். மற்ற உயிரனங்களையும், இயற்கை வளங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற பேராசை மனிதர்களின் கண்களை மூடிவிட்டது என்கிறார்.

 

போர்

மறைந்த உயிரினங்களின் அருங்காட்சியகத்தை வர்ணிக்கிறார். அதனருகில் தான் மிஷனின் குடியிருப்பு இருக்கிறது. நிலவேட்டைக்குழு வந்திருக்கிறது என்ற பொய்ச்செய்தியை நம்பி மிஷன் புறப்பட்டபோது, நிலவேட்டைக்குழு அந்த அருங்காட்சியகத்தையும் அவன் குடியிருப்பையும் சின்னாபின்னமாக்கிவிடுகிறது. மிஷன் திரும்பி வருகிறான். அவன் பாசம் வைத்திருந்த ஆவியுரு என்கிற லெமூர் அவன் முகத்தில் தன் பாதத்தை வைத்து சரிகிறது. அந்த துயரத்தைத் தாங்கமாட்டாமல் மிஷன் அவர்கள் மீது கோபப்படுகிறான். பூமியில் நடக்கிற எல்லா போர்க்குழுக்கள் மீதும், அவர்கள் தளபதிகள் மீதும், அவர்களுடைய பணியாட்கள் மீதும், அவர்கள் சொல்வதை முட்டாள்தனமாக பின்பற்றும் அனைவர் மீதும் அவனுக்கு கோபம் கொப்பளிக்கிறது. உலகில் நடக்கும் எல்லா போர்களும், பிறர் வளங்களைச் சுரண்டுவதற்குத்தான் என்கிற புரிதல் வருகிறது.

 

தொற்று நோய்/மருத்துவம்

உயிர் பிறக்கிறபோதே, நோய்படுத்த ஏதோ ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது. நுண்கிருமிகளின் வேலை அது தான். நீங்களே நுண்கிருமியாய் இருந்தால் அதைத் தானே செய்வீர்கள் என்று வினவுகிறார் வில்லியம் ஃபர்வோஸ். சொறிப்புண், மலேரியா, எய்ட்ஸ், மேகநோய், ஆந்த்ராக்ஸ், அஃப்டோஸா, மாலிக்னன்ட் டிஸ்டெம்பர்ஸ் போன்ற போன்ற தொற்று நோய்கள் மனிதர்களை வாட்டுகின்றன என்கிறார். தனிமைப்படுத்தலையும், முகமூடிகளையும் நினைவுபடுத்துகிறார். ஆய்வுகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் பற்றிப் பேசுகிறார். விஞ்ஞானிகள், தொழிற்நுட்ப வல்லுநர்கள், கணிணி அமைப்பாளர்கள், கணிதவியலாளர்கள், கோட்பாட்டாளர்கள் எல்லாரும் சிந்தனைப் பிணியால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார். தொற்றுநோயை தன் மேலாண்மைக்கு பயன்படுத்துகிறதா ஆதிக்கசக்திகள் என்று கேள்வி எழுப்புகிறார் வில்லியம் ஃபரோஸ்.

கண்காணிப்பு

ஆதிக்கவர்க்கம் எல்லாவற்றையும், எல்லோரையும், எப்பொழுதும் கண்காணிக்கிறது என்கிறார் வில்லியம் ஃபரோஸ். “எல்லாயிடத்திலும் கண்கள். உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில், உங்கள் படுக்கையறையில், உங்கள் குளியலறையில்…மோப்பம் பிடிக்கும் ஆயிரக்கணக்கான சகோதரர்கள் உங்களை முகர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். செவியுற்றுக் கொண்டிருக்கிறார்கள். கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இருபத்து நான்கு மணி நேரமும்.” என்று எழுதுகிறார்.

 

நிறைவாக

இறுதியாக உலக மக்கள் தங்கள் ஆன்ம வடிவான மூலங்களுக்குத் திரும்புகிறார்கள். அதாவது இயற்கையை மையப்படுத்திய வாழ்க்கை முறைக்குத் திரும்புகிறார்கள். மரங்களின், இலைகளின், நீரோடைகளின், பாறைகளின், லெமூர்களின் தொடர்போடு வாழ கற்றுக்கொள்கிறார்கள். பித்துக்குளித் தொற்றுநோய், போர்கள் எல்லாம் கனவின் தடங்களைப் போல வெளிறிச் சிதைந்துவிடும் என்று நாவலை நிறைவு செய்கிறார்.

 

நவீன வாழ்க்கை முறையைக் கைவிட்டு, இயற்கையை மையப்படுத்திய வாழ்க்கை முறைக்கு திரும்புமா மனிதகுலம்? தன் பேராசைக் குணத்தைக் கைவிட்டு, இயற்கையின் மேலும், மனிதர்கள் மேலும் மேலாண்மை செலுத்தும் ஆதிக்கச் சக்திகள் மாறுமா? மதம், மொழி, கல்வி, மருந்து, பணம், போதை, காலம் போன்ற காரணிகளை மேலாண்மைக்குப் பயன்படுத்தி இயற்கை மற்றும் மனிதகுல பன்மயத்தைக் குலைக்கும் நிலை மாறுமா?

இந்தக் கேள்விகள் இன்றைக்கு, வேறு எப்போதும் விட, அதிக பொருத்தமாய் இருக்கின்றன.

 

சாத்துணைகள்

1. Press Release. (2019). Nature’s Dangerous Decline ‘Unprecedented’ Species Extinction Rates ‘Accelerating’. Nature Action. UNEP. Retrieved from https://www.unep.org/news-and-stories/press-release/natures-dangerous-decline-unprecedented-species-extinction-rates as on July 5, 2026

2. Lam, L. (2025). Inquiry finds British committed genocide on Indigenous Australians, BBC. Retrieved from https://www.bbc.com/news/articles/cn413zlld4mo as on July 6, 2026.

3. Rogers, C. (n.d). Impact of Colonisation on Indigenous Australians. evolve communities. Retrieved from https://www.evolves.com.au/impact-colonisation-indigenous-australians/ as on July 4, 2026

4. Blakemore, E. (2025). What is colonialism? How the exploitative practice shaped the world? History & Culture. National Geographic. Retrieved from https://www.nationalgeographic.com/culture/article/colonialism as on 04.07.2026

5. Gupta, H. (2026). Cosmic Calendar: History of the Universe in just 365 days. Universe. Science ABC. Retrieved from https://www.scienceabc.com/nature/universe/cosmic-calendar-universe-365-big-bang-compress-history as on 04.07.2026

 

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page