கட்டுரை 11 - தலிபான்களும் ஆப்கானிஸ்தானும்

Updated: Jan 8


“தலிபான்களின் வாகனங்கள், 2021 ஆகஸ்ட் 16ஆம் தேதி திங்களன்று, காபூல் தெருக்களில் ரோந்து வந்தன. திடீரென நாடாளுமன்றத்திலும், அதிபர் மாளிகைக்குள்ளும் நுழைந்தனர். இப்படி திடுதிப்பென்று நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏதாவதொரு அமைதித் தீர்வு அல்லது அரசியல் ஒப்பந்தம் மூலமாகத்தான் நடக்கும் என்று நினைத்தேன். ” என்று ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் ஒரு சில பெண் உறுப்பினர்களில் ஒருவரான Farzana Kochai தெரிவித்தார்.

அப்படி என்ன தான் நடந்தது?

சோவியத் குடியரசு 1980களில் என்ன செய்தது? தலிபான்கள் எப்படி உருவானார்கள்? அமெரிக்கப் படை 2001இல் ஏன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தது? இருபது வருடப் போரில் என்ன நடந்தது? ஆப்கானிஸ்தான் அதிபர் ஓட்டமும் அமெரிக்கப் படை வெளியேற்றமும் ஏன் நடந்தது? ஆஸ்திரேலியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்குமான உறவு என்ன? ஈரான், சீனா மற்றும் ரஷ்யாவின் நிலைப்பாடு என்ன? தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு இப்பொழுது என்ன நடக்கிறது? என்னென்ன சவால்கள் முன் நிற்கின்றன? எல்லாவற்றையும் அலசுகிறது இக்கட்டுரை.


தலிபான்களும் ஆப்கானிஸ்தானும்

தலிபான் என்றால் ஆப்கானிஸ்தானின் இரண்டு அலுவல் மொழிகளில் ஒன்றான Pashtun மொழியில் ‘மாணவன்’ அல்லது ‘தேடுபவன்’ (Seeker) என்று பொருள். தலிபான்கள், 47% உள்ள Pashtun இனக் குழுவைச் சார்ந்தவர்கள்.

மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் மையமாக ஆப்கானிஸ்தான் இருக்கிறது. கிழக்கே பாகிஸ்தானும், மேற்கே ஈரானும், வடக்கே உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகளும், வட கிழக்கே சீனாவும் உள்ளன. எங்கு பார்த்தாலும் உயர்ந்த மலைகளும் காய்ந்த பாலைவனமும் இருக்கும் நாட்டில் நிலக்கரி, தங்கம் போன்ற உலோகங்களை வெட்டி எடுக்கும் கிட்டத்தட்ட 1400 சுரங்கங்கள் உள்ளன. அமைதியாகப் போய்க் கொண்டிருந்த ஆப்கானிஸ்தானியர்களின் வாழ்க்கையில் திடிரென ஓர் இடி விழுந்தது.

சோவியத் குடியரசின் படை உள்ளே புகுந்தது

சோவியத் குடியரசும் கொரில்லா படையும் - நடந்தது என்ன?

சோவியத் குடியரசு, 1979இல் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்ததன் காரணம் கம்யூனிஸ்ட் அரசை உருவாக்கத் தான். கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் நிலங்களைப் பிரித்து மக்களிடம் கொடுத்தனர். நவீன மயமாக்கலிலும் ஈடுபட்டனர். ஆனால் ஆப்கானியர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்ப்பு கிளம்பியது.

சோவியத் குடியரசின் படையினரோடு சண்டையிட்டு சுதந்திரம் பெற முஜகையிதீன் போராட்டக் குழு என்ற பெயரில் மக்கள் திரண்டார்கள். எதிரியின் எதிரி நண்பன் என்கிற அடிப்படையில், பனிப்போரில் எதிரியாக இருந்த அமெரிக்காவிற்கு கண் உறுத்தியது. அமெரிக்காவின் உளவுப்பிரிவான CIA, முஜகையிதீன் போராட்டக் குழுவுக்கு உதவத் துவங்கினர்.

தேவையான நிதியும், போர்த்தளவாடங்களும் வழங்கப்பட்டன. பாகிஸ்தான், சௌதி அரேபியா, சீனா, இங்கிலாந்து போன்று நாடுகளும் முஜகையிதீன் கொரில்லா படைக்கு ஆதரவுக் கொடுத்தார்கள். சோவியத் குடியரசிற்கும் முஜகையிதீன் போராட்டக் குழுவினருக்கும் இடையேயான சண்டை தீவிரமானது.


ஐக்கிய நாடுகள் சபையில், சோவியத் குடியரசின் அப்போதைய ஆதரவு நாடுகளான கிழக்கு ஜெர்மனி, வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளைத் தவிர, மற்ற பெரும்பான்மையான நாடுகள் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்தன. 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளை அமெரிக்காவும், 1984 ஆம் ஆண்டு லோஸ் ஏன்ஜலஸ்ஸில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளை சோவியத் ஒன்றியமும் புறக்கணித்தன.


கிட்டத்தட்ட 9 வருடங்களாக சண்டை நீடித்தது. ஆப்கானிஸ்தான் மக்கள் 6 இலட்சத்திலிருந்து 20 இலட்சம் வரையில் கொல்லப்பட்டார்கள். அது கிட்டத்தட்ட 6 சதவீதத்திலிருந்து 12 சதவீத மக்கள் தொகையினர் ஆகும். சோவியத் படையிலும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இறக்க, போரின் செலவுத் தொகையும் அதிகமாகிப் போக, 1987 ஆம் ஆண்டின் நடுவில் சோவியத் அதிபர் Mikhail Gorbachev ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் வெளியேறும் என்று அறிவித்தார். சோவியத்தின் கடைசிப் படை 1988 மே மாதம் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது.

அடுத்த மூன்று வருடங்களுக்கு, சோவியத் அமைத்த அரசு, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தது. ஆனால் 1992 ஜனவரியில் சொந்த நாட்டிலேயே ஏற்பட்ட சோவியத் அரசின் சரிவிற்குப் பிறகு, அவர்களின் நிதி உதவியில்லாததால் ஆப்கானிஸ்தான் அரசும் சரிந்தது.

அதனைத் தொடர்ந்து எங்கும் குழப்பம் நிலவியது.

தலிபான்கள் அரசும் இஸ்லாமிய சட்டமும்

இந்த குழப்பத்தில், ஆப்கானிஸ்தானில் உள்ள வெவ்வேறு சமூக குடித்தலைவர்கள், 1992 வாக்கில் அதிகாரத்திற்காக தங்களுக்குள் சண்டை போட்டார்கள். இரண்டு வருடங்கள் கழித்து 1994இல், ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் உள்ள கந்தகார் பகுதியில், தலிபான்கள் என்கிற போராட்டக் குழு, எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.

அதில் பங்கேற்ற உறுப்பினர்கள், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தான் எல்லையோரங்களிலும் உள்ள பாரம்பரிய இஸ்லாமியப் பள்ளிகளில் பயின்றவர்கள். சிலர் முஜகையிதீன் போராட்டக் குழுவிலும் இருந்து போராடியவர்கள். தங்கள் நாடு எப்படி இருக்கவேண்டும் என்று அவர்களுக்கென்று ஒரு திட்டம் இருந்தது. ஆப்கானிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடு என்றும், அதை தலைநகர் காபூல் சென்று அறிவிக்கவேண்டும் என்றும் அவர்கள் காத்திருந்தனர்.


தலிபான்கள் காந்தகார் நகரத்திலிருந்து, ஒவ்வொரு நகரமாகக் கைப்பற்றி முன்னேறி வந்தனர். “மக்களே! கவலைப்படாதீர்கள். உங்கள் நகரங்களை பாதுகாப்பான நகரங்களாக மாற்றுவதே எங்கள் நோக்கம். ஊழலை ஒழிப்போம். சமூகத் தலைவர்கள் தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்த வேண்டும். இஸ்லாமிய முறைப்படி நல்லாட்சி கொடுப்போம்” என்று அறைகூவல் விடுத்த வண்ணம் முன்னேறி வந்தனர். மக்களின் ஆதரவு அவர்களுக்குப் படிப்படியாக உயர்ந்தது.


அவர்கள் 1996இல் காபூல் நகரைக் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் இனி ‘Islamic Emirate of Afghanistan’ என அழைக்கப்படும் என்றும், அது தாங்கள் புரிந்துக்கொண்ட அளவில், இஸ்லாமிய மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் உள்ள சட்டங்களுக்கு உட்பட்டு ஆட்சி புரியும் என்றும் அறிவித்தார்கள்.


அதன் பிரகாரம், ‘யாரும் சினிமா பார்க்கக்கூடாது, இசை கேட்கக் கூடாது, பெண்கள் கல்வி கற்க பள்ளிகளுக்குப் போகக்கூடாது, மருத்துவர்கள் தவிர மற்றப் பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது. பெண்கள் முழு உடலையும் மறைக்கும் ஆடையைத் தான் அணிய வேண்டும். ஆண்களின் துணையின்றி பெண்கள் பயணிக்கக் கூடாது. ஆண்கள் ஒருவிதமான தாடியை வளர்க்கவேண்டும். ’ போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்தார்கள்.


மீறியவர்களுக்கு கசையடி கொடுப்பது, கை கால்களை வெட்டுவது, பொதுவில் மரண தண்டனை விதிப்பது என வழக்கப்படுத்தினார்கள். இஸ்லாமிய நம்பிக்கையைத் தவிர, மற்ற நம்பிக்கைகளுக்கு இடம் இல்லை என்பதைக் காண்பிக்க, உலகமே வியந்து பார்த்த பாமியன் புத்த சிலையைத் தகர்த்தெறிந்தனர்.


ஆப்கானிஸ்தான் அரசை தலிபான்கள் நிறுவினாலும், முஜகையிதீன் தளபதிகளில் சிலர், வட ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டியிருந்தனர். இந்த நிலையில் சௌதி அரேபியாவில் பிறந்து, முஜகையிதீன் போராளியாக இருந்த, ஒசாமா பின் லாடன், அல்-காய்தா என்ற அமைப்பை உருவாக்கினார்.

இரட்டைக் கோபுரமும் ஒசாமா பின்லாடனும்

அச்சமயத்தில் தான், 2001 செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில், உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டது. அமெரிக்க இராணுவத் தளத்தின் மையமான பென்டகனும் தாக்கப்பட்டது. ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அல்-காய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடனை, அந்த இடிப்புக்குக் காரணம் காட்டி, அமெரிக்கா அவரைத் தேடியது. தலிபான்களின் உதவியுடன் ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லாடன் ஒளிந்திருப்பதாக, அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் குற்றம் சாட்டினார். ஒசாமா பின்லாடன் தான் இடிப்புக்குக் காரணம் என்பதற்கு என்ன அத்தாட்சி எனத் தலிபான்கள் பதிலுக்குக் கேட்டார்கள். அவரை அமெரிக்கா வசம் ஒப்படைக்க தலிபான்கள் மறுத்தார்கள்.

அமெரிக்காவிற்கு கோபம் வந்தது.

அமெரிக்கப் படையின் ஆக்கிரமிப்பும் இடைக்கால அரசும்

செப்டம்பர் 11ஆம் தேதி இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டது. செப்டம்பர் 18ஆம் தேதியே அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் தன் படையை இறக்கியது. “இரட்டைக் கோபுர இடிப்புக்கு தலிபான்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதற்கு ஒரு விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். ” என அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அறைகூவல் விடுத்தார்.

அதன்படி, ஒரு சில மாதங்களில், அதிகாரத்தில் இருந்த தலிபான்களை அமெரிக்கா விரட்டியடித்து விட்டு, இடைக்கால அரசை நிறுவியது. மூன்று வருடத்தில், ஆப்கானிஸ்தான், தனக்கென ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. Hamid Karzai, 2004லிலும், 2009லிலும் ஆப்கானிஸ்தானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 மற்றும் 2019ல் Ashraf Ghani அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


ஆப்கானிஸ்தானில் அமைதியும் நிலைத்தன்மையும் உருவாக, அந்த அரசுகளுக்கு உதவிட NATO நாடுகள் முன்னெடுத்த ஐக்கிய நாடுகளின் சபையின் International Security Assitance Force (ISAF) உதவியது. ஆஸ்திரேலியாவும் தன் பங்குக்கு படைவீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது.


இருபது வருட சண்டையும் தலிபான்களின் முன்னேற்றமும்

தலிபான்கள் பாகிஸ்தான் போன்ற பக்கத்து நாடுகளுக்கு ஓடிப் போயினர். ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை அமைக்க அமெரிக்கா உதவிய போதும், அல்-காய்தாவை தவிடு பொடியாக்க, தலிபான்களுக்கும் நிதி உதவியளித்தது அமெரிக்கா.