top of page

ஜமீலா - குறுநாவல் - சிங்கிஸ் டோர்குலோவிச் ஐத்மாத்தவ் - வாசிப்பு அனுபவம் - உயிர்மெய்யார் - 19.01.2026


முதலில் ஜமீலா குறுநாவல், அதன் ஆசிரியர் சிங்கிஸ் டோர்குலோவிச் ஐத்மாத்தவ் அவர்களைப் பற்றிய குறிப்பையும் கொடுத்து விட்டு, வாசிப்பு அனுபவத்தை இரு பகுதியாக கொடுக்கிறேன்.

 

முதல் பகுதி கருத்தியல். இரண்டாம் பகுதி அழகியல்.

 

சில குறிப்புகள்

 

ஜமீலா - குறுநாவல்

இந்த குறுநாவல் 1958 ஆம் வருடம் வெளிவந்தது. சையத் ஓர் இளம் ஓவியன். அவன் வரைந்த ஓர் ஓவியத்திலிருந்து துவங்கி, அவன் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. இரண்டாம் உலகப் போர் நடந்துக் கொண்டிருக்கும் பின்னணியில், கிர்கிஸ்தான் மலைப் பிரதேசங்களில் கிராமத்து மக்கள் கூட்டுப்பண்ணை வாழ்க்கை முறைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் காட்சிகள் நகர்கின்றன.

 

கூட்டுப்பண்ணையில் விளையும் தானியத்தை அறுவடை செய்து, குதிரை வண்டிகளில் எடுத்துச் சென்று ரயில் நிலையங்களில் ராணுவத்திற்குக் கொடுக்கும் பணியே அதிகம் பேசப்படுகிறது. அப்பணியில் ஈடுபட்டிருக்கும் போது, போருக்குச் சென்றிருக்கும் சிப்பாய் கணவனிடமிருந்து பிரிந்திருக்கிறப் பெண் ஜமீலா, ஊனமுற்ற முன்னாள் சிப்பாயான தானியாருடன் காதலில் விழுந்து, கிராமத்தை விட்டுப் போகிறாள் என்பதே கதை.

 

சிங்கிஸ் டோர்குலோவிச் ஐத்மாத்தவ் (Chinghiz Torekulovich Aitmatov )

சிங்கிஸ் டோர்குகோவிச் ஜத்மாத்தவ் தான் இந்த குறுநாவலின் ஆசிரியர். இவர் 1928இல் கிர்கிஸ்தானில் பிறந்தவர். கிர்கிஸிலும் ரஷ்ய மொழியிலும் பல நூல்கள் எழுதியவர். ரஷ்ய பேரரசின் ஒரு மூலையில் இருந்த கிர்கிஸ்தான், Union of Soviet Socialist Republics (USSR) இன் ஒரு பகுதியாக மாறிக் கொண்டிருந்த காலத்தில் பிறந்து வளர்ந்தவர். பல வேலைகள் செய்து, கால்நடை வளர்ப்பு குறித்து படித்து, பிறகு இலக்கியமும் படித்தவர். 1959 இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, அதிபர் மிக்கேல் கோர்பசேவின் கொள்கைகளை ஆதரித்தவர். பின் USSR உடைந்து பல நாடுகளாக சிதறிய போது, 2008 இல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஜெர்மனியில் ஒரு மருந்தகத்தில் இறந்து போனார்.

 

வாசிப்பு அனுபவம் - கருத்தியல்


ஜமீலா, சையத், தானியார் போன்ற கதாபாத்திரங்கள் வெவ்வேறு குறியீடுகளின் வெளிப்பாடுகள். எப்படி என்று பார்ப்போம்.

 

ஜமீலா - விடுதலையின் குறியீடு

ஆணாதிக்கச் சூழல் பரவியிருந்த நேரத்தில், ஏற்கனவே திருமணம் செய்திருந்த ஜமீலா, தான் அன்பு செய்த ஒருவனோடு வெளியேறி சுதந்திரக் காற்றை சுவாசித்ததன் பின்னணி, தன் குடும்ப, சமூகச் சூழலிலில் கட்டுப்பட்டு நகரமுடியாதவனாக ஆனால் ஓவியனாக ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த சையத்தை, ஓவியனாக ஆக்க உதவியதை, கதை கோடிட்டுக்காட்டுகிறது.

 

ஆனால், இது மேலோட்டமான பார்வை. சற்றே ஆழ ஆலோசித்தோமானால், ஜமீலா கதாபாத்திரம் ஒரு குறியீடு. விடுதலை உணர்வின் குறியீடு. நூலாசிரியரின் தாய்நாடான கிர்கிஸ்தானின் விடுதலைக்கான குறியீடு.

 

கிர்கிஸ்தான், ரஷ்யப் பேரரசின் ஒரு மூலையில் இருந்த மலைப் பிரதேசம். அதில் வாழ்ந்த கிர்கிஸ் மக்கள் தனிப் பண்பாடு உடையவர்கள். ஆனால் ரஷ்யப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள். ஜமீலா ஒரு பெரும் குடும்பத்தில் மருமகளாக இருப்பது போல. அவன் கணவன் (எப்பொழுதாவது ஒரு முறை எழுதும்) கடிதத்தில் பெரும்பங்கு, தன் குடும்பத்தினரையும், உறவினர்களையும், ஊராரையும் பற்றி விசாரித்து விட்டு, கடைசியில் ஒரு வரி ஜமீலாவை கடமைக்கு கேட்டு வைப்பது போல, கிர்கிஸ் மக்கள் ரஷ்யப் பேரரசின் வெகுஜனப் பார்வையில் ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தார்கள்.

 

பிறகு ரஷ்யப் புரட்சி எழுந்து, சோசலிஸ்ட் சோவியத் உருவானபோதும், அதன் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அப்படிப்பட்ட கட்டுப்பாட்டிலிருந்து (கூட்டுப்பண்ணை, ராணுவத்திற்கு உணவு அளிப்பது போன்ற பணிகளிலிருந்து) விடுபட்டு, சுயநிர்ணய உரிமையுடன், தான் விரும்பும் சுயாட்சியைப் பெற வேண்டும் என்று நூலாசிரியர் விரும்புகிறார்.

 

அதன் வெளிப்பாடே ஜமீலா (ஏற்கனவே சோவியத் யூனியனுக்காகப் போராடும் இராணுவ வீரனுக்கு மனைவியாக இருந்தாலும்) தான் விரும்பும் காதலனுடன் (தாய்நாட்டிற்காக உணர்வு பூர்வமாகப் பாடும் தானியாருடன்) புரட்சிகரமாக ஊரைவிட்டே வெளியேறுகிறாள். ஜமீலாவைப் போலவே கிர்கிஸ்தானும் சோவியத் யூனியனிலிருந்து வெளியேறி புதுக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்கிற ஆவல் தூண்டிவிடப்படுகிறது.

 

பின்னாளில் நூலாசிரியர் ரஷ்ய அதிபர் மிக்கைல் கோர்பசேவுடன் இணைந்து செயலாற்றினார். கோர்பசேவின் Perestroika - ‘Restructuring’ மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சோவியத் அரசியல் அமைப்பு ஜனநாயக முறைப்படுத்த முனையப்பட்டது. அப்பொழுது (1991 ஆம் ஆண்டு) சோவியத் சோசலிஸ்ட் 15 தனித்தனி நாடுகளாக பிரிந்தது. அப்படிப் பிரிந்த போது கிர்கிஸ்தானும் தனி நாடாகப் பிரிந்தது ஜமீலாவைப் போலவே.

 

(பின் குறிப்பு: 2009 ஆம் ஆண்டில், கிர்கிஸ்தான் நாட்டில் ஜமீலாவின் உருவம் பொறித்த ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது.)

 

சையத் - நூலாசிரியரின் குறியீடு

சையத் கதாபாத்திரம் நூலாசிரியரின் குறியீடு. சையத் தான் கதையைச் சொல்கிறான். அவன் சிறுவனாக இருந்து இளைஞனாக பரிணமித்த வரை கதை நீள்கிறது. கூட்டுப்பண்ணை கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்தாலும் சுதந்திரமான ஓவியனாக ஆக வேண்டும் என்கிற ஆவல் மனதிற்குள் இருக்கிறது. அது போல நூலாசிரியரும் சோவியத் ரஷ்யாவில் பிறந்து, வளர்ந்து, அதன் கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்தாலும், தன் தாய்நாடான கிர்கிஸ்தான் தனிநாடாக வேண்டும் என்ற ஆவல் மனதிற்குள் இருக்கிறது. சையத் கடைசியில் ஓவியனாக ஆனது போலவே நூலாசிரியரும் கிர்கிஸ்தான் தனி நாடாக ஆவதில் தன் பங்கை அளித்து அங்கே மறைகிறார்.

 

சையத்துக்கும் (நூலாசிரியருக்கும்) ஜமீலா (சுயாட்சி/விடுதலை) மேல் ஒரு காதல் இருப்பதை அழகாகச் சுட்டிக் காட்டுவார். சில இளைஞர்கள் ஜமீலாவை கிண்டல் செய்யும் போது, சையத் அவர்களை அதட்டி, திட்டி அடக்க முயற்சிப்பான். தூரத்து உறவினன் ஓஸ்மோன், ஜமீலாவுடன் சரசம் செய்ய முயலும் போது, அவள் வெகுண்டெழுகிறாள். ‘அந்த அற்பன் சச்சரவுக்குக்கூட தகுதியில்லாதவன்’ என்று ஒதுக்கிவிடுகிறாள். சையத்துக்கு கோபம் முட்டிக் கொண்டு வருகிறது.

 

தானியார் - கிர்கிஸ்தானின் குறியீடு

தானியார் போரில் ஈடுபட்டு, ஊனமுற்ற மனிதனாக, அதிகம் பேசாதவனாக, ஒதுக்கப்பட்ட ஒரு உழைப்பாளியாக சித்தரிக்கப்படுவது போல, கிர்கிஸ்தானும் ஒரு போராட்ட இனமும் அதற்கான குணமும் இருந்தும், தன் குரலை உயர்த்த முடியாத நாடாக, ஊனமுற்று சித்தரிக்கப்படுகிறது. ஆனால் தானியார் திறமை மிக்கவன். தானாகவே பாடல் உருவாக்கி, சுதந்திரமாக பாடுவான். கிர்கிஸ் மக்கள் அப்படிப்பட்ட படைப்பாளிகள். இசையிலும் கலையிலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்குபவர்கள்.

 

ஒரு முறை, விளையாட்டாக சையதும், ஜமீலாவும் மற்றவர்களும், அதிக எடையுள்ள மூட்டையை தூக்கி விட்ட போதும், தயங்காமல் போராடி, தனியாளாக தூக்கிச் சென்று ஏற்றிவிடுவான். அத்தகைய துணிவும், சிரமத்தை தாங்கக்கூடிய மனப்பக்குவமும் கொண்ட கிர்கிஸ் மக்கள் உள்ள நாடு கிர்கிஸ்தான். ஜமீலா (விடுதலையுணர்வு) கை கோர்த்ததும் தானியார் (கிர்கிஸ்தான்) தயக்கமே இல்லாமல் கட்டுப்பாடுகளை மீறி புதிய வாழ்க்கையை நோக்கி பயணப்படுகிறான்.

 

கிர்கிஸ் பண்பாடு

இரண்டு மகன்களோடு விதவையாகிப் போன தம்பி மனைவியை, தன் இனத்துக்கு வெளியே கொடுக்கும் வழக்கம் இல்லாததால், அவரது அண்ணனே மணந்துக் கொள்ளும் வழக்கம் கிர்கிஸ் இனத்தவருக்கு இருந்திருக்கிறது நாவல் வழித் தெரிகிறது.

 

சையத்தின் தாய் குறித்த வர்ணனை நெஞ்சை நெகிழவைக்கிறது. இளம் வயதிலேயே பெரும் குடும்பத்திற்குள் மருமகளாக வந்தவள், இரு குடும்பங்களை நிர்வகிக்கிறாள். கால்நடைகளை மேய்க்கிறாள். அடுப்பெரிக்க சுள்ளிகளைச் சேகரிக்கிறாள். மகன்களைப் போருக்கு அனுப்பிய சோகம் மனதை அரித்தாலும் வெளிக்காட்டாமல் குடும்பத்தைக் கட்டிக் காக்கிறாள். எல்லா இனத்திலும் தாய் என்பவள் மற்றவர்களுக்காக தியாகம் செய்யும் கதாபாத்திரமாகவே திகழ்வது தெரிகிறது.

 

தன் தந்தையாரும் தாயாரும், ஜமீலாவிடம் (தன் மருமகளிடம்) வழக்கமாக மாமியாரும் மாமனாரும் கண்டிப்பாக இருப்பது போல் இருப்பதில்லை என்று சையத் ஓரிடத்தில் சொல்கிறான். எல்லா பண்பாட்டிலும் இப்படித்தான் நடக்கிறதா? மாமியார்-மருமகள் உறவு ஏன் அப்படி பெரும்பாலும் கசக்கிறது? அதன் பின் இருக்கும் உளவியல் தான் என்ன?

 

மாமியார் தனது மகனின் வாழ்க்கையில் தனது செல்வாக்கை இழக்கும் அச்சம் கொண்டிருக்கலாம். மகன் திருமணத்திற்குப் பிறகு மருமகளுடன் நெருக்கமாக இருப்பது, மாமியாருக்கு தனது இடத்தை இழக்கும் உணர்வை ஏற்படுத்தும். இது பொறாமை அல்லது அச்சத்தால் தூண்டப்படுகிறது. உதாரணமாக, மாமியார் அறிவுரை கொடுப்பது அல்லது தலையிடுவது, மருமகளுக்கு கட்டுப்பாட்டு முயற்சியாகத் தோன்றும். மாமியார் பாரம்பரிய மதிப்புகளை (எ.கா., வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு) விரும்பலாம், ஆனால் மருமகள் நவீன கருத்துகளை (பாலின சமத்துவம், அறிவியல் அணுகுமுறை) பின்பற்றலாம். இந்த வேறுபாடுகள் சிறிய விஷயங்களில் சச்சரவுகளை ஏற்படுத்தும். பலரும் மாமியார்-மருமகள் உறவு சச்சரவு நிறைந்ததாக இருக்கும் என்று முன்கூட்டியே வேறு நினைத்துக்கொள்கின்றனர். இது சுயநிறைவேற்றும் தீர்க்கதரிசனமாக (self-fulfilling prophecy) மாறி, சிறிய பிரச்சினைகளைப் பெரிதாக்கும். இது ஒரு செயற்கையான உறவு. இருவரும் தேர்ந்தெடுத்து உருவாக்கியது அல்ல. தாய்-மகள் உறவில் இருக்கும் நிபந்தனையற்ற அன்பு இங்கு இயற்கையாக இல்லை. இதனால், சிறிய அவமரியாதை அல்லது விமர்சனம் கூட பெரிய மோதலாக மாறும்.

 

கிர்கிஸ் மனம்

மனம் பற்றிய நூலாசிரியரின் சிந்தனை ஆழமாக சிந்திக்கவேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஜமீலா ஓரிடத்தில் சையத்திடம் கூறுவாள்: “ஒருவரது உள்ளத்தில் உள்ளதை ஓஸ்மோன் போன்றவர்கள் எப்படி அறிய முடியும்? யாருக்குமே அது தெரியாதே. உலகம் பூராவிலும் இதை அறியக் கூடியவனே கிடையாது போலும்.”

 

ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை வாய்ந்த மனம் இருக்கிறது. சிந்தனைகளும் உணர்வுகளும் அவரவர் மூளையில் நிகழ்கின்றன. ஒருவர் தன் மனதில் உள்ள நூறு சதவிகித சிந்தனைகளை வெளியில் சொல்வதுமில்லை. அது வெளியே தெரிய மொழி, சைகை, எழுத்து போன்ற ஊடகங்கள் தேவைப்படுகின்றன. அவைகளாலும் முழுமையாக வெளிப்படுத்த முடியாது.

 

அப்படி வெளிப்படும் அவர்களின் வார்த்தைகள், முகபாவனை, உடல்மொழி, சூழல் ஆகியவற்றைப் பார்த்து அவர்கள் மனதில் இப்படி எண்ணுகிறார்களோ என்று மற்றவர்கள் யூகிக்கிலாம். அது ஒரு ஊகம் மட்டுமே. வெறும் கணிப்பு மட்டுமே. அந்த ஊகத்தில்/கணிப்பில் நமது சொந்த எண்ணங்கள், அனுபவங்கள் மற்றும் சார்புகளை கலந்து விடும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. இப்படி தங்கள் சொந்த மனநிலையிலிருந்தே மற்றவர்களைப் புரிந்துக் கொள்ள முயலும் நிலை ஆழமான தவறான புரிதலுக்கு வழிவகுக்க இயலும்.

 

வாசிப்பு அனுபவம் - அழகியல்

 

Flash Back Technique

சையத் என்கிற ஓவியன் (இளைஞன்) வரைந்த ஓவியத்தோடு கதைத் துவங்கிறது. அந்த ஓவியத்தில் ஓடும் மேகங்களும், கருத்த மலைகளும், மண்டிய புதர்களும் இருக்க வண்டித் தடத்தில் இரண்டு பேரின் கால்தடங்கள் பெரிதாக துவங்கி, மங்கலாகி, அத்வானத்தில் மறைய இருக்கும் இருவர் தெரிகிற ஓவியம் அது. அதை எப்படி அவன் வரைந்தான்? அந்த இருவர் யார்? எங்கே, ஏன் அவர்கள் போகிறார்கள் என்பதை வரும் பக்கங்கள் கதையாக, காட்சிகளாக விரிகின்றன. (முன் நிகழ்வு ஞாபக யுக்தியாக - Flash Back Technique - ஆக) கதைப் போகிறது.

 

உவமை

ஒரோஸ்மாத் என்பவன் வேலைக் குழுத் தலைவன். சையத்தின் தாய், தனது உடல் உபாதையை ஒரோஸ்மத்’திடம் கூறும் போது, ‘ஒட்டுக் கம்பளம் தயாரித்தவள் போல என் முதுகு அப்படி வலிக்கிறது’ என்கிறாள். அந்தக் காட்சியை கற்பனை செய்துப் பார்க்கும் போது, அவ்வலியை வாசகனால் உணர முடிகிறது.

 

ஒரோஸ்மாத், சையத்தின் தாயிடம் ஜமீலாவையும் வேலைக்கு அனுப்ப அழைக்கிறான். அவள் அனுப்ப மறுக்கிறாள். வேலை செய்ய முடிகிற இளைஞர்கள் எல்லோரும் இராணுவத்திற்குச் சென்றுவிட்டார்கள். ஊரே காலியாக இருக்கிறது என்பதை, ‘கைவிடப்பட்ட முகாம்களைப் போல காலியாக நமது வீடுகள் மாறிவிட்டன’ என்று சையத்தின் தாய் கூறுகிறாள். வெறிச்சோடிக் கிடக்கும் காட்சியை அந்த உவமை வாசகனின் கண் முன்னே நிறுத்துகிறது.

 

ஜமீலா ஒரு குதிரைப் பண்ணைக்காரனின் மகள். அவளது கணவன் ஸாதிக் கூட அவளுடன் குதிரைப் பந்தயத்தில் போட்டிப் போட்டு வெற்றிப் பெற முடியவில்லை. நியாயத்தை எதிர்த்துக் கேட்பாள். தன் மருமகளைப் பற்றி மற்றவர்கள் குறைக் கூறும் போது, சையத்தின் தாய், அவர்களுடைய பெண்கள் இனியவர்களைப் போல பாசாங்கு செய்கிறார்கள் என்றும், அவர்களுடைய இனியத்தன்மை, ‘அழுகிய முட்டை போல வெளியே பளபளப்பாகவும்’ உள்ளே அழுகலாகவும் இருப்பதாகச் சொல்வாள்.

 

ஓஸ்மோன் என்கிற தூரத்து உறவினன், இராணுவத்திற்குச் சென்று விட்ட கணவன் இல்லாது இருக்கும் ஜமீலாவை பாலியல் தொந்தரவு செய்த போது, அவனைத் திட்டி ஒதுக்கிவிட்டு, கோபத்தோடு மௌனமாக இருக்கும் போது, ‘மேகத்தைப் போல கருப்பாக இருந்தாள்’ என்று எழுதுகிறார்.

 

இயற்கையை வர்ணிக்கும் போது நூலாசிரியர் தன் கவித்துவத்தை வெளிப்படுத்துகிறார். ஒரு மாலை வேளையை விவிரிக்கும் போது, ‘வலுவிழந்த மாலைக்கதிவரன் கணகணக்கும் தந்தூர் வாய் போல கனன்றுக் கொண்டிருந்தது’ என்கிறார். சிவப்பும் ஆரஞ்சுமாக தகதகக்கும் அடுப்பின் வாய் மிகவும் பொருத்தமான உவமையாக வந்து விழுகிறது. ஓர் இரவில் ‘தாரகைகள் தேனீக் கூட்டங்கள் போல’ வானில் மொய்த்திருந்தனவாம். ஒரு சமயம் புயல் வருகிறது. கூடாரத்தை மூடியிருந்த துணி, ‘காயமடைந்த பறவை சிறகடிப்பது போல’ படபடத்ததாம். மழை கொட்டித் தீர்க்கிறது. அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு, ‘நெடுநாள் நோய்வாய்ப்பட்டவன் வெளியில் வந்து வெயிலில் திளைப்பவன் போல’ சையத் இன்பத்தில் திளைக்கிறானாம்.

 

சையத்தின் அண்ணன் ஸாதிக் (இராணுவ வீரன்) எழுதும் கடிதங்கள் எல்லாம் ஒரே மாதிரி, வெறும் சடங்குத்தனமாக இருப்பதை, ‘மந்தையில் செம்மறிக் குட்டிகள் போல’ ஒத்திருந்தன என்று அழகுற சொல்கிறார். அக்கடிதத்தை சையத்தின் தாய் எப்படி பயபக்தியுடன் கையில் வைத்திருப்பாள் என்பதை, ‘பறக்கத் தயாராகும் பறவையைப் பிடிப்பது போல’ பிடிப்பாள் என வர்ணிக்கிறார். அந்தக் கடிதங்கள் ஒரே மாதிரியான வார்த்தைகளைக் கொண்டிருந்தாலும், அந்தத் தாயின் பாசம் அவள் அந்தக் கடிதத்தை படுபத்திரமாக பிடிப்பதில் தெரிகிறது. அக்கடிதத்தை ஜமீலாவிடம் கொடுக்கிறார்கள். அவள் வாங்கிப் படிக்கிறாள். ஜமீலாவின் முகம் சிவப்பேறி, அனல் பறக்க அவள் கண்கள் கடிதத்தில் ஊர்கிறது. ஆனால் போகப் போகத் தளர்ந்து, கடைசி வரிகளைப் படிக்காமலேயே, ‘ஏதோ வாங்கிய கடனை திருப்பிக்கொடுப்பது போன்ற உணர்ச்சியற்ற அலட்சியப் பாவத்துடன்’ கொடுக்கிறாள் என விவரிக்கிறார். ஏனென்றால் ஸாதிக் தந்தையில் தொடங்கி, தாய், உறவினர்கள், ஊர்பெரியவர்கள் எல்லோரையும் நலம் விசாரித்து விட்டு, கடைசியில் அவசரத்தில் கிறுக்கியது போன்று தன் மனைவியையும் விசாரித்திருப்பான்.

 

தானியார் ஓர் அநாதை. இராணுவத்தில் போரிட்டு கால் ஊனமுற்றவன். சையத்தின் ஊருக்குத் திரும்பி வந்து கூட்டுப் பண்ணை வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு தனியனாய் வாழ்ந்து வருகிறான். அவனது கஷ்டமான இளமைக்காலம், ‘அலைகடல் துரும்பாய்’ அவனை ஆட்டிவைத்துவிட்டதாம்.  தானியார் நெட்டை. ஊர் வேலைக் குழுத் தலைவன் ஒரோஸ்மாத் குட்டை. நெட்டையனான தானியாரின் அருகே, குட்டையனும் துள்ளுகிறவனுமாக ஊர்த்தலைவன் நடந்து போவது, ‘ஆற்றோரத்தில் அங்குமிங்கும் தத்தித் திரியும் உள்ளான் குருவியைப் போலக்’ காணப்படுவதாக சிறுவர்கள் சொல்லிச் சிரிக்கிறார்கள். போரைப்பற்றிய நினைவு தானியாரின் மனதில், ‘கட்டி தட்டிய குருதி போல’ உறைந்து கிடக்கிறதாம். ஒரு கட்டத்தி்ல் தானியார் பாடத் துவங்கிவிடுவான். அவன் பாடல் சையத்துக்கும் ஜமீலாவுக்கும் பிடித்துவிடும். காற்றில் விசிறியிறைத்த கோதுமை மணிகள் ‘பொன்மழை போலப்’ பொழிவதாகவும், அந்த சலசலப்பில் தானியாரின் பாடல் ஒலிப்பதாகவும் சையத் மொழிகிறான். ஒரு முறை தானியார் பாடிக்கொண்டிருக்கும் போது, ஜமீலா அவனது தோள் மேல் சாயும் போது, ‘சவுக்கின் வருடலை உணர்ந்த ஓட்டக் குதிரை நடையை மாற்றிக் கொள்வது போல’ அவள் சாய்வினால் ஏற்பட்ட வருடல் அவனது பாடலில் கணீர் ஏற்றியதாம்.

 

சையத் வைக்கோல் போரின் அருகே உறங்கிக்கொண்டிருக்கிறான். அருகே தானியார் உட்கார்ந்திருக்கிறான். ஜமீலா ஆற்றிலிருந்து அவர்களை நோக்கி வருகிறாள். அப்பொழுது சையத், ‘நனைந்த சிறகு தோளில் உராய்வது போல’ உணர்கிறான். நனைந்த உடையுடன் ஜமீலா தானியார் பக்கம் அமர்கிறாள். ஜமீலா தானியாருடன் ஊரைவிட்டு போய்விடுகிறாள். அப்பொழுது ‘புயலில் வேருடன் வீழ்ந்த மரம் நிமிராதது போல’ சையத்தின் அம்மாவின் நிலை மாறிவிடுகிறது.

 

கருத்துச் செறிவும், கவித்துவ அழகியலும் நிறைந்த ஒரு சிறந்த குறியீட்டு குறுநாவலைப் படித்த திருப்தி வருகிறது. ஜமீலா ஒரு விடுதலைக்கான காதல் காவியம்.

 

 

*********

 

நூலின் பெயர்: ஜமீலா

நூலாசிரியன் பெயர்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்

தமிழில்: பூ. சோமசுந்தரம்

திருந்திய வடிவம்: நா. முகமது செரீபு

பதிப்பு: நூல்வனம், சென்னை

வெளியீடு: டிசம்பர், 2023

 

 

 

 

 

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page