top of page

பிக் மெரினோ – கௌல்பர்ன் -ஆஸ்திரேலியா

Updated: 15 hours ago


 

 பிக் மெரினோ – கௌல்பர்ன், NSW-யில் உள்ள மிகப்பெரிய செம்மறி ஆட்டின் சிலை. ஆஸ்திரேலியாவின் கம்பளி தொழிலை கொண்டாடும் சின்னம்

 

இன்று நாம் ஹ்யூம் ஹைவேயில் ஓர் இடத்தில் நிற்கிறோம். சிட்னியிலிருந்து கான்பெரா அல்லது மெல்போர்ன் செல்லும் வழியில், ஒரு மூன்று மாடி உயரமுள்ள செம்மறி ஆடு உங்களை உற்றுப் பார்க்கிறது. அது தான் பிக் மெரினோ. உள்ளூர் மக்கள் 1985 ஆம் ஆண்டு முதல் அதனை ராம்போ என்று அன்போடு அழைக்கின்றனர்.

 

ஆடு கொழுக்கக் கொழுக்க வளர்ப்பவனுக்கு சந்தோஷம் என்பார்கள். அது போல மிகக் கொழுத்த ஆடு செம்மறி ஆடு இது. அதன் உயரம் 15.2 மீட்டர். நீளம் 18 மீட்டர். எடை 97 டன். அது கான்கிரீட் மற்றும் எஃகு கொண்டு உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட சிலை. ஆஸ்திரேலியாவின் பிரபல “பிக் திங்ஸ்” வரிசையில் ஒன்று.

 

ஆனால் இது வெறும் செல்ஃபி இடம் மட்டுமல்ல. “உலகின் சிறந்த கம்பளி தலைநகரம்” என்ற கௌல்பர்ன் நகரத்தின் பெருமையையும், ஆஸ்திரேலியாவை உருவாக்கிய கம்பளித் தொழிலையும் கொண்டாடும் சின்னம்.  கௌல்பர்னில் உள்ள பிக் மெரினோவின் வரலாறு, அதன் சுவாரஸ்யமான உண்மைகள், சுற்றுலா இடங்கள் இந்த 2026 ஆம் ஆண்டில் இதன் முக்கியத்துவம் எல்லாவற்றையும் இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

 

ஒரு பெரிய கனவின் தொடக்கம் (1985)

ஹங்கேரிய நாட்டிலிருந்து, 1980களின் நடுப்பகுதியில், அட்டிலா மற்றும் லூயிஸ் மோகானி என்ற இரு சகோதரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்தார்கள். அவர்கள் தனியாக வரவில்லை. ஒரு அற்புதமான ஐடியாவோடு வந்தார்கள். NSW வந்தடைந்ததும், பல இடங்களில் சர்வீஸ் ஸ்டேஷன்களை நடத்தினார்கள். சாலையில் செல்லும் பயணிகளைத் தங்கள் சர்வீஸ் ஸ்டேஷன்களை நோக்கி ஈர்க்க வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும். பாடுற மாட்டைப்பாடிக் கறக்கனும் என்பார்கள். அப்படி யோசித்ததன் விளைவு, கௌல்பர்னில் இந்த மிகப்பெரிய செம்மறி ஆடு! 

 

இந்த மிகப்பெரிய செம்மறி ஆடு ஆறு மாதங்களில் கட்டப்பட்டது. எஃகு ஃபிரேம், வயர் மெஷ், கான்கிரீட் போன்றவைகளைக் கொண்டு அது கட்டப்பட்டது.  உள்ளூர் புல்லமல்லிட்டா பண்ணையில் இருந்த உண்மையான சூப்பர் ராம் மாடலை வைத்து உருவாக்கப்பட்டது.

 

அந்த மிகப்பெரிய செம்மறி ஆட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம்? என்று யோசித்தார்கள். அதற்கென்று ஒரு போட்டியை அறிவித்தார்கள். அந்தப் பெயர் போட்டியில் 8 வயது சிறுவன் நாதன் ஹோவ் கலந்துக் கொண்டான். Rambo என்கிற சினிமாவால் மிகவும் ஈர்க்கப்பட் சிறுவன் நாதன் ஹோவ், அந்த செம்மறி ஆட்டிற்கு ராம்போ என்று வைக்கலாம் என்று சொன்னான். அந்தப் பெயரையே அந்த செம்மறி ஆட்டிற்கு வைத்துவிட்டார்கள்.

 

1985 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஃபெடரல் அமைச்சர் ஜான் பிரவுன் அதனைத் திறந்து வைத்தார். 1992 ஆம் ஆண்டில் ஹ்யூம் ஹைவே பைபாஸ் ஆனது. நகரத்தை தாண்டிச் சென்றது. சுற்றுலாப் பேருந்துகள் குறைந்தன. அட்டிலா மற்றும் லூயிஸ் மோகானி சகோதரர்கள் கவலையுற்றார்கள்.  ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையேக் கடிக்கிறார்களே என்று வருத்தப்பட்டார்கள்.

 

ஆனால் 2007 மே 26-ஆம் தேதி பெரிய திருப்பம் வந்தது! 97 டன் எடை கொண்ட ராம்போவை ஒரு பெரிய லோ-லோடர் லாரியில் ஏற்றி, 500–800 மீட்டர் தூரம் புதிய இடத்துக்கு, 1 சௌர்பி ஸ்ட்ரீட்க்கு நகர்த்தினார்கள். இப்போது ஹைவேக்கு அருகில், பெட்ரோல் ஸ்டேஷன், மெக்டொனால்ட்ஸ், பேக்கரி எல்லாம் இருக்கு. சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வர ஆரம்பித்தனர். 

 

இதில் சிறப்பு என்னவென்றால் – இந்த ராம்போ என்று அழைக்கப்படுகிற பிக் மெரினோ-வாகிய மிகப்பெரிய செம்மறி ஆட்டின் சிலைக்குள் நீங்கள் நடந்து போகலாம்!  அந்த சிலையின் கீழே

ஆஸ்திரேலியாவின் சிறந்த கம்பளி கடை ஒன்று இருக்கிறது. மெல்லிய மெரினோ டி-ஷர்ட்கள், மெரினோ ஸ்வெட்டர்கள், ஆட்டுத்தோல், யார்ன், லானோலின் கிரீம்கள் – எல்லாம் இங்கேயே தயாரானவை.  அவைகளை நீங்கள் விரும்பினால் வாங்கலாம்.

 

அந்த பிக் மெரினோ செம்மறி ஆட்டின் உள்ளே புகுந்து மேலே ஏறினால், ஆஸ்திரேலிய கம்பளி தொழிலின் 200 ஆண்டுகளின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறதைப் பார்க்கலாம். பழைய கம்பளி உற்பத்தி எந்திரங்கள், டைம்லைன் ஆகியவைகளைக் கண்டு களிக்கலாம்.

 

இதையெல்லாம் விட மிக மிக சுவாரஸ்யம் என்ன தெரியுமா?  ராம்போவின் கண்களில் இருந்து, கண்களின் வழியே நீங்கள் வெளியே பார்க்கலாம்! இரண்டு மீட்டர் இடைவெளி உள்ள கண்கள் வழியாக ஹைவேயும் கௌல்பர்ன் சமவெளியும் தெரியும். இரவில் மெரினோவின் கண்கள் ஒளிரும். மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

 

ஸ்பானிஷ் அரச கம்பளியிலிருந்து ஆஸ்திரேலிய பேரரசு வரை 

ஏன் ஓர் ஆட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம்? ஏனெனில் மெரினோ கம்பளி ஆஸ்திரேலியாவை உருவாக்கியது. 

 

1797-இல் 26 மெரினோ ஆடுகள் ஸ்பெயின் ராயல் ஃப்ளாக்ஸிலிருந்து (தென்னாப்பிரிக்கா வழியாக) வந்தன. கேப்டன் ஜான் மெக்கார்தர் மற்றும் மனைவி எலிசபெத் அதை பாரமட்டாவில் எலிசபெத் ஃபார்மில் பெரிய தொழிலாக மாற்றினர். 1807-இல் முதல் ஆஸ்திரேலிய கம்பளி இங்கிலாந்தில் விற்கப்பட்டது. அதற்கு பெரும் விலை கிடைத்தது. பெரும் வரவேற்பும் கிடைத்தது. 1800களின் இறுதியில் கம்பளி ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாக மாறியது. கௌல்பர்ன் பகுதி உலகப் புகழ் பெறத் துவங்கியது. 

 

இன்றும் ஆஸ்திரேலியா உலக மெரினோ கம்பளியில் பாதிக்கு மேல் உற்பத்தி செய்கிறது. மிக மெல்லிய நூல்கள், மனித முடியை விட மெல்லிய நூல்கள் கொண்ட  ஃபேஷன் முதல் ஸ்போர்ட்ஸ் உடைகள் வரை இங்கு தயாராகின்றன. 

 

2026-இல் ராம்போ ஏன் இன்னும் முக்கியம்?

ஃபாஸ்ட் ஃபேஷன் மற்றும் செயற்கை இழைகள் வளர்ந்து விட்ட இக்காலத்தில் மெரினோ கம்பளி மீண்டும் பெரிய வரவேற்பு பெறுகிறது. ஏனெனில் இது இயற்கையானது. சிதைவடையக்கூடியது, வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும். 85% ஆஸ்திரேலிய கம்பளியை சீனா வாங்குகிறது. மெரினோ கம்பளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால்  விவசாயிகள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். 

 

மெரினோ ஞாபகமாக, 2025-இல் ராயல் ஆஸ்திரேலியன் மிண்ட் நாணயமும், ஆஸ்திரேலியா போஸ்ட் ஸ்டாம்பும் வெளியிட்டன. ஆஸ்திரேலிய “பிக் திங்ஸ்” தொடரிலும், தேசியக் கருத்துக்கணிப்பிலும் மிகவும் விரும்பப்பட்ட, அதிகம் பார்க்கப்பட்ட சிலைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. மெரினோ, கிராமப்புற ஆஸ்திரேலியாவின் புத்திசாலி சின்னமாகப் பார்க்கப்படுகிறது. 

 

ஒரு நாள் பயணம் – சுற்றுலா டிப்ஸ் 

அடுத்து நீங்கள் ஹ்யூம் ஹைவேயில் செல்லும்போது ஒரு மணி நேரம் ஒதுக்குங்கள். “பெரிய ஆட்டை நீங்கள் உங்கள் கையால் பிடித்தது” போல ஒளிப்படம் எடுக்கலாம். கம்பளிப் பொருட்கள் வாங்கலாம். கம்பளி உற்பத்தி வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம். பிறகு கௌல்பர்ன் நகரத்தைப் போய் பார்க்கலாம். ராக்கி ஹில் வார்மெமோரியல் லுக்அவுட், பழமையான செயின்ட் சேவியர்ஸ் கதீட்ரல், ரயில் அருங்காட்சியகம் எனச் சுற்றிப் பார்க்க பல சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றன. அருகில், பெரிய பள்ளத்தாக்குகள், குகைகள், மரங்கள், பூக்கள் கொண்ட பங்கோனியா தேசிய பூங்காவில் உங்கள் நேரத்தைச் செலவிடலாம். குடும்பத்தோடு ரோட் டிரிப் செய்யவிரும்புபவர்களுக்கும், வரலாறு மேல் பிரியமுள்ள ரசிகர்களுக்கும் ஏற்ற இடம் இது. குடும்பத்துடன், ரோடு டிரிப் செய்யும் போது, வரலாறு ரசிகர்களுக்கு சரியான இடம்.  அடுத்து அந்த மெரினோவின் ஒளிரும் கண்களைப் பார்த்தால் நிறுத்துங்கள். ராம்போவுக்கு வணக்கம் சொல்லுங்கள்.  நம்மை உருவாக்கிய தொழிலை நினைவு கூருங்கள். 

 

ஆனை வால் பிடித்துக் கரை ஏறலாம். ஆட்டின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாமா? என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் ஆட்டின் வாலைப் பிடித்து கரை ஏறியவர்கள் ஹங்கேரிய நாட்டிலிருந்து, 1980களின் நடுப்பகுதியில், ஆஸ்திரேலியாவிற்குப் புலம் பெயர்ந்து வந்த அட்டிலா மற்றும் லூயிஸ் மோகானி என்ற இரு சகோதரர்கள்.

 

*******

 

 

 

 

 

 

 

 

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page