top of page

மொபைல் பேசியதால் சிறுவன் உயிரிழப்பு! தண்டனை போதுமானதல்ல என்கிறது குடும்பம்



கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒரு குடும்பத்தை ஆத்திரப்படுத்தியிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்து சம்பவம் என்ன? நீதிபதி அளித்த தீர்ப்பில், வாகனத்தில் செல்லும் போது செய்யப்படும் அலைபேசி பயன்பாடு குறித்த நீதிபதியின் குறிப்புகள் என்னென்ன?  மற்றும் தீர்ப்பைக் கேட்ட பிறகு Bryson Dimovski யின் குடும்பத்தினர் ஏன் ஆத்திரப்படுகின்றனர் என்று இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.

 

2023 ஜூலை மாதம், Newcastle அருகே உள்ள Warners Bayயில் 14 வயது சிறுவன் Bryson Dimovski தனது இ-ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்படி அவர் சென்று கொண்டிருந்த போது ஒரு வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்தார். மோதிய வாகனத்தின் ஓட்டுநர் தனது போனில் கவனம் செலுத்திய நிலையில், உதவிக்கு நிற்காமல் தப்பிச் சென்று விட்டார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2026 ஏப்ரல் 7 அன்று, Newcastle மாவட்ட நீதிமன்றத்தில் அந்த ஓட்டுனருக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு Bryson Dimovski குடும்பத்தினரை மிகுந்த கோபத்திற்குள்ளாக்கியுள்ளது. அவர்கள் இதை மிகவும் லேசான தண்டனை என்று கூறுகின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

 

Bryson Dimovski வெறும் 14 வயது சிறுவன் — அவனுக்கு முன்னால் முழு வாழ்க்கையும் இருந்தது. 2023 ஜூலை 28 அன்று மாலை, அவன் Warners Bayயில்,  சாலையில் இ-ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் வந்த யுட் (ute) வாகனத்தை ஓட்டியவர் 21 வயது Jaycob Gemza. நீதிமன்ற ஆதாரங்களின்படி, விபத்துக்கு முன்பு Jaycob Gemza தனது போனில் படித்துக்கொண்டும் டைப் செய்துகொண்டும் இருந்தார் என்பது புலனாகிறது. அவரது வாகனம் சுமார் ஒரு மீட்டர் தூரம் மூடுபனி லேனுக்குள் (fog lane) நுழைந்து Bryson Dimovski மோதியது.

 

மோதல் மிகக் கொடுமையானதாக இருந்தது. Bryson Dimovski வாகனத்தின் பானட்டுக்கு மேல் வீசப்பட்டு, விண்ட்ஷீல்டை மோதிய பின் ஒரு இடுக்கில் (embankment) தூக்கி எறியப்பட்டான். அவன் உயிர் பிழைக்கவில்லை.

 

Jaycob Gemza சம்பவ இடத்தில் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே நின்றார். அவர் இறங்கி நடந்து சுற்றிப் பார்த்தார். ஆனால் டிரிபிள் ஜீரோ (000)க்கு அழைக்கவில்லை. பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். தான் வாகனம் ஓட்டிய போது, ஆல்கஹால் வரம்பை மீறியிருக்கலாம் என அவர் நினைத்தார் எனவும், அதனால் தனது சேதமடைந்த யுட்டை ஒரு பின்சாலையில் மறைத்துவிட்டு, தனது தோழியை அழைத்து லிஃப்ட் கேட்டார் என்றும் நீதிமன்றம் பிறகு அறிந்தது. சமூக ஊடகத்தில் ஒரு காணாமல் போன சிறுவன் பற்றிய பதிவைப் பார்த்த பிறகுதான் அவர் பல மணி நேரங்களுக்குப் பிறகு போலீசாரைத் தொடர்பு கொண்டார்.

 

Jaycob Gemza இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். முதலாவதாக, ஆபத்தாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியது. இரண்டாவதாக, மோதலுக்குப் பிறகு உதவி செய்ய நிற்காமல் ஓடிப்போனது.

 

ஏப்ரல் 7, 2026 அன்று, Newcastle மாவட்ட நீதிபதி Paul Marr தீர்ப்பளித்தார். அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் அதில் மூன்று ஆண்டு மற்றும் மூன்று மாதங்கள் பரோல் இல்லாத காலம் எனவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஏற்கனவே அடைக்கப்பட்ட காலத்தைக் கணக்கில் கொண்டால் Jaycob Gemza 2029 பிப்ரவரியில் பரோலுக்கு தகுதியானவராக இருப்பார்.

 

Jaycob Gemza, தான் மோதிய நபர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று பார்க்கவில்லை. பார்க்காமலேயே சம்பவ இடத்தை விட்டுச் சென்று விட்டார். அவர் கைபேசியைப் பயன்படுத்தாமல், சரியாக சாலையை கவனித்து வாகனத்தை ஓட்டியிருந்தால் Bryson Dimovski செல்வதைப் பார்த்து வாகனத்தை சரியாக ஓட்டியிருக்க முடியும் என்று மிகுந்த அக்கறையுடன் நீதிபதி குறிப்பிட்டார். அதோடு நீதிபதி நிற்கவில்லை. தன் தீர்ப்பை வழங்கும் முன், நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் தங்கள் கைபேசிகளை, வெறும் சைலண்ட் மோடில் போடாமல், முழுமையாக அணைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

 

நாம் ஒவ்வொருவரும், சாலையில் செல்லும் மற்றவர்களுடைய பாதுகாப்பிற்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனை தனக்காகச் செய்யவேண்டாம் என்றும், Bryson Dimovski க்காக செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார். கைபேசிகள் ஒரு குழந்தையின் உயிரைவிட மதிப்புவாய்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதானே சொல்ல வேண்டியிருக்கும் என்றும் கூறினார். இந்தத் துயரம், வேதனை மற்றும் துக்கம் மற்றொரு நீதிமன்றத்தில் மீண்டும் நிகழக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

 

அதே நேரத்தில், நீதிமன்றத்திற்கு வெளியே, Bryson Dimovski குடும்பத்தினரும் நண்பர்களும் கூடியிருந்தனர். அவர்களின் மனவலி அவர்களின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. Bryson Dimovski - யின் தந்தை Andrew Dimovski பத்திரிக்கையாளர்களிடம் தன் அதிருப்தியை வெளியிட்டார்.

 

என் மகன் சிறு குழந்தை. அவனுக்கு முன்னால் நீண்ட வாழ்க்கை இருந்தது. ஆனால், அவன் சாலையோரத்தில் கேட்பாரற்று இறந்து போக விடப்பட்டுவிட்டான். அதற்கு நீதிமன்றம் வழங்கிய பதில் என்ன? மூன்று ஆண்டு மூன்று மாதங்கள். இது உங்கள் குடும்பத்துக்கு நடந்திருந்தால், இதை நீதி என்று சொல்வீர்களா? என்று அவர் நியாயத்தைக் கேட்டார்

 

ஆரம்பத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதற்காக Jaycob Gemza தண்டனைக் குறைக்கப்பட்டதை அவர் விமர்சித்தார். விபத்து இடத்தை விட்டுச் செல்வதற்கு ஒருபோதும் வெகுமதி கொடுக்கக்கூடாது என்று குறிப்பிட்ட Andrew Dimovski, New South Wales Attorney-General Michael Daly-யிடம் இது போன்ற சட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு கோரினார்.

 

அத்தோடு நிற்கவில்லை. ஓட்டுநர்களுக்கு Andrew Dimovski, ஒரு நேரடி செய்தியும் அளித்தார். வாகனத்தில் ஏறி உட்கார்ந்து விட்டீர்களா? தயவுசெய்து ஓட்டுதலில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அப்படி கவனம் செலுத்தவில்லையென்றால் அதனால் வரும் விளைவுகள் பேரழிவு தரக்கூடியவையாக இருக்கின்றன. உயிர்கள் அழிக்கப்படுகின்றன. உண்மையைச் சொல்லப்போனால், ஒரு தலைமுறையே அழிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

 

திரும்பிய பக்கமெல்லாம் கவனச்சிதறல் இருக்கின்ற இக்காலத்தில், இந்த வழக்கு, சாலைப் பாதுகாப்பு பற்றிய கடினமான கேள்விகளை எழுப்புகிறது. சாலைகளில் இ-ஸ்கூட்டர்கள் அதிகரித்து வருகின்றன. அனைவரது கையிலும் கைபேசி இருக்கின்றன. இப்படிப்பட்ட சம்பவம் நடக்கும் போது, நீதி அமைப்பு எல்லாவற்றையும் பரிசீலனை செய்து நடக்க வேண்டியிருக்கிறது. ஒரு நொடி கவனச்சிதறல் — ஒரு டெக்ஸ்ட் படிப்பது அல்லது பதிலளிப்பது — ஒரு உயிரை முடிவுக்குக் கொண்டு வரலாம். ஹிட் அண்ட் ரன் மற்றும் கவனச்சிதறல் ஓட்டுதல் குறித்து வலுவான சட்டங்கள் வேண்டும் என்ற கோரிக்கை கவனிக்கத்தக்கது.

 

*********

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page