பிரியாணி - மலையாளச் சிறுகதைகள் - சந்தோஷ் ஏச்சிக்கானம் - தமிழில் டாக்டர் டி.எம்.ரகுராம்
- உயிர்மெய்யார்

- 6 days ago
- 27 min read

ஏச்சிக்கானத்தின் கதைகள் வாசகரை எக்கச்சக்கமாய் பாதிப்பு உண்டாக்குபவை. கருத்துத் தளத்திலும், கற்பனைத் தளத்திலும் வாசகரின் உள் சென்று குடையக்கூடியவை. கருத்துத் தளத்தில் பல கண்ணோட்டங்களில் அவரது சிறுகதைகளை நோக்கலாம். கற்பனைத் தளத்தில் உவமை, உருவகம், குறியீடு படிமம் என்று காட்சிப்படுத்திப் பார்க்கலாம்.
நிகழ்வுகளின் தொகுப்பில் முரண்களை ஏற்றி சொல்விளையாட்டு ஆடும் போது கதை முகிழ்கிறது. ஏச்சிக்கானம் பல்வேறு முரண்களை ‘பிரியாணி’ சிறுகதைத் தொகுப்பில் கோர்த்திருக்கிறார். அவற்றில் வர்க்க முரண்கள் (பொருளாதாரப் பின்னணி), சாதிய முரண்கள், பாலிய முரண்கள் (சமூகப் பின்னணி), மற்றும் உளவியல் முரண்கள் (தனிமனித பின்னணி) ஆகியவை முன்னணியில் வந்து நிற்கின்றன. இக்கட்டுரையில் அவ்வகை முரண்கள் முதலில் எடுத்துக் கூறப்படுகிறது.
மனித மனத்தை ஆட்டிப் படைக்கும் முரண்களைக் கருவாகக் கொண்டு, மனிதநேயமும், சமூக வாழ்வின் விமர்சனமும் கலந்த உள்ளடக்கங்களைக் கொண்ட இலக்கியப் படைப்புகளாக இவரது கதைகள் இருக்கின்றன. என்றாலும் அவர் கதைகளில் அவர் பயன்படுத்துகிற உவமைகளும் உருவகங்களும், கற்பனைக் காட்சி படிமங்களும் மிக அழகாக வாசகரைக் கவரும்.
அதனால், இக்கட்டுரையில், கதையைச் சுருக்கமாகச் சொல்லும் போதே, அதில் புரிந்துக் கொள்ளப்பட்ட உட்கருத்தைச் சிவப்பு நிறத்தில் சொல்லவும், ரசிக்கும்படியான உவமைகளையும் உருவகங்களையும், அழகான கற்பனைக் காட்சி அமைப்புகளையும் தடித்த எழுத்தில் குறிப்பிடவும் முயற்சிக்கப்பட்டிருக்கிறது.
அட்டைப்படத்திலேயே ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் ஏச்சிக்கானம். பாசுமதி அரிசிகளை பெரிது பெரிதாகப் போட்டு, இடையில் ஓர் அரிசி போலவே ஒரு சவம் இருப்பதில் காட்சிப்படிம ரசவாதம் துவங்குகிறது. மற்றவை எழுத்து வடிவத்தில் வாசகரை மூச்சு முட்டவைக்கிறார்.
வர்க்க முரண்கள் (பொருளாதார வேறுபாடு) அல்லது புலம் பெயர் தொழிலாளர்கள்
‘சுவாசம்’ கதையில் விகாஸ், மேற்கு வங்கத்தில் ஒரு பொதுஉடமைவாதியாக காண்பிக்கப்படுகிறார். விகாஸ்க்கு நுரையீரலில் சுவாசப் பிரச்னை. பல பத்தாண்டுகளாக யூனியன் செக்ரட்டரியாக அவரையேத் தேர்ந்தெடுக்கிறார்கள். உடலைப் பார்த்துக் கொள்ள ஒரு ஐந்து வருடம் ஓய்வெடுக்கச் சொல்கிறார் விகாஸின் மனைவி. பல யோசனைகளுக்குப் பிறகு அதற்கு ஒத்துக் கொண்டு மனைவியின் ஊருக்கு ரயில் ஏறுகிறார்.
ரயிலில் மேற்கு வங்கத்திலிருந்து கேரளாவிற்கு வேலை செய்யச் செல்லும் தொழிலாளிகளைப் பார்க்கிறார். அவர்களை மிரட்டிப் பணிய வைத்து அழைத்துச் செல்லும் மேனேஜராக கேரளத்தைச் சேர்ந்த காம்ரேட் ஒருவர் வருகிறார். விகாஸ்க்கும் அவரது மனைவிக்கும் ஒரு முரண். தொழிலாளிகளுக்கும், தொழிலாளிகளின் பெயரைச் சொல்லி யூனியன்/கட்சி நடத்தும் தோழர்களுக்கும் ஒரு முரண். ரயிலில் விகாஸ்க்கு தலையை கீழே வைத்துப் படுக்கமுடியாமல் மூச்சுப் பிரச்னை வருகிறது. தலையணையில் மூச்சுக்காற்றை ஊதக்கூட திராணி இல்லை. நந்திகிராமத்தில் குடும்பத்தை இழந்து, கேரளாவிற்குச் செல்லும் பூபன் என்கிற இளைஞன் தன் மூச்சுக்காற்றால் ஊதிக்கொடுத்த தலையணையில் படுத்து யோசிக்கிறான் விகாஸ்.
மனைவி சொல்லும் யதார்த்தத்தை நோக்கி பயணிப்பதா? தன்னைச் சுற்றி நடக்கிற கள யதார்த்தத்தை பார்த்து, தான் கொண்ட கொள்கையிலேயே பயணிப்பதா? இரண்டுக்கும் இடையில் போராடி, உடல்நிலையையும் பாராமல், தன் மனைவி கோரிக்கையையும் மறுத்து, தன் லட்சியப் பயணத்தை தொடர்கிறான் விகாஸ். நல்ல பொதுஉடமைவாதிக்கும், அந்தத் தொழிலாளர்களை வைத்து லாபம் பார்க்கும் பொதுஉடமைவாதிக்கும் உள்ள முரண் அழகுற வடிக்கப்படுகிறது. கூடவே ஒரு கேள்வியும் எழுகிறது. பொதுஉடமைக் கட்சிகள் இத்தனை இருந்தாலும், இத்தனை வருடமாக இருந்தாலும் என்ன சமூக மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்ற கேள்வியை இக் கதை எழுப்புகிறது.
‘பேபீஸ் பிரத்’ கதை நாயகன் கேரளாவிலிருந்து வளைகுடா நாட்டிற்கு வேலை செய்ய வந்தவன். துபாய் வரை கார் ஓட்டிச் செல்லவேண்டும் என்று ஆசை. முடியவில்லை. அங்கு பாரில் உள்ள பெண்களுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசை. ம்ஹூம்! இயலவில்லை. வறுமை! வெறும் குப்பூஸ் ரொட்டி சாப்பிடுகிறான். லேபராக சேர்ந்து சூப்பர்வைசராக ஆகி, ஒவ்வொரு சகோதரிக்கும் திருமணம் முடித்து, ஒண்டிக்கட்டையாகவே இருக்கிறான். சர்வதேச அளவில் புலம் பெயர்வதும், ஒருவன் உழைப்பை இன்னொருவன் சுரண்டும் வர்க்க பேதமும் அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
‘பிரியாணி’ யிலும் கோபால் யாதவ் பிரிக்கப்படாத பீஹாரிலிருந்து கேரளா வந்து வேலை செய்கிறான். அவன் ஊர் கூட புலம் பெயர்ந்து ஜார்க்கண்ட்க்கு சென்றது அவனுக்குத் தெரியவில்லை. ஒரு கம்பெனி, நிலக்கரிச் சுரங்கத்தில் நிலக்கரியை வெட்டி எடுத்தப் பிறகு, மீந்து போன இரண்டாம் தர நிலக்கரியை விட்டு விட்டு அடுத்த சுரங்கத்திற்குப் போய்விடும். அப்படி மீந்து போகும் நிலக்கரியைச் சைக்கிளில் வைத்து கட்டி, மேடுகளில் தட்டுத் தடுமாறி ஏறி, அதை விற்றுப் பிழைப்பு நடத்தும் கோபால் கூலி வேலைக்காக புலம் பெயர்ந்து கேரளா வந்திருக்கிறான்.
கூலி பேசும் போது மலையாளிக்கு அறுநூறு, தமிழனுக்கு ஐநூறு, வங்காளிக்கு முந்நூற்றைம்பது, பீஹாரிக்கு இருநூற்றைம்பது என பேரம் பேசுகிறார்கள். பீஹாரில் தன் மனைவி பாசுமதி அரிசி வாசனைப் பிடிக்கும் என்பதால், கைப்பிடி அரிசி வாங்கி கொடுப்பான். அதை அவள் வாயில் போட்டு மெல்லுவாள். தன் மகளுக்குக்கூட பாசுமதி என்று பெயர் வைப்பான். வேலைக்கு வந்த இடத்தில், கல்யாண விருந்து பாசுமதி அரிசியில் செய்த பிரியாணி.
குழிவெட்டி, விருந்தில் மீந்துபோன பிரியாணியைக் கொட்டி மூடத்தான் அவனைக் கூப்பிட்டிருக்கிறார்கள். அப்படிக் கொட்டி மூடும்போது, வறுமையால் இறந்து போன பாசுமதி என்கிற தன் மகளை நினைத்துக்கொள்வதாகக் கதை. வளமை ஒரு புறம். வறுமை மறு புறம். இந்த வர்க்க முரண் கதை வாசிப்பவர்களின் கண்களில் மட்டுமல்ல இதயத்திலும் ஈரம் கசிய வைக்கும்.
சாதிய/மத முரண்கள்
‘சமபந்தி’ கதையில் உணவுகளை வைத்து, நீதிமன்றக் களத்தில் ஒரு நிகழ்வை மையப்படுத்தி, சாதிய/மத முரண்களை தோலுரித்துக்காட்டியிருக்கிறார் ஏச்சிக்கானம்.
நடமாடும் ரெஸ்டாரெண்ட் போல பெரிய டிபன் கேரியர் அடுக்கில் அசைவு உணவு கொண்டுவருபவள் சிரியன் கேத்தலிக் சூசன் இம்மானுவல். கைக்குத்தல் அரிசியில் கோவைக்காய் பொரியலும் மிளகாய் வற்றலும் எடுத்து வருவபள் ரம்யா நாயர். புளிஸ்ஸேரி என்று அழைக்கப்படுகிற மாம்பழக் குழம்பைக்கொண்டு வருபவள் சங்கீதா நம்பூதிரி. நேந்திரப்பழ பாயாசம் கொண்டு வருவபர் சதீஷ் வர்மா. சேற்றுமீன் குழம்பு கொண்டு வருபவள் ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வரும் ருக்மணி.
ஒடுக்கும் சாதி கோபாலமேனன், ஒடுக்கப்பட்ட சாதி காப்புக்குட்டியின் தோப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததைத் தட்டிக்கேட்ட போது, காப்புக்குட்டி தாக்கப்படுகிறார். காப்புக்குட்டிக்காக களம் இறங்குகிறார் சங்கீதா. ஆனால் அதிகாரத்தில் இருப்பது ருக்மணி. அவளை வழிக்குக் கொண்டு வர, சிரியன் கேத்தலிக் சூசனும், ரம்யா நாயரும், சங்கீதா நம்பூதிரியும் சேர்ந்து, சதீஷ் வர்மாவைக் கைக்குள் போட்டு, ருக்மணியை ஒரு சம்பந்திக்கு வரவழைத்து ஏமாற்றி மனம் மாற்றுகிறார்கள். கோபாலமேனன் விடுவிக்கப்படுகிறான்.
நீதி, நியாயம் எப்படி சாதி முரண்களில் சிக்கித் தவிக்கிறது என்பதை அழகுற விளக்குகிறார் ஏச்சிக்கானம்.
பாலியல் முரண்கள் அல்லது ஆணாதிக்க/மேலாதிக்க மனோபாவம்
ஓர் உறவில் இருந்தாலும், ஒருவர் இன்னொருவரின் கருத்தைக் கேட்காமலேயே, தன்னிச்சையாக, எதேச்சதிகாரமாக முடிவு எடுப்பதும், அப்படி முடிவு எடுக்கும் அதிகாரத்தை கையில் வைத்திருப்பதும் மேலாதிக்க மனோபாவம். அப்படி முடிவு எடுக்கும் அதிகாரம், இயற்கையிலேயே ஆண்களுக்கு உள்ள குணம் என்று எண்ணுவதும், நம்புவதும் அதற்கேற்றாற்போல நடப்பதும் ஆணாதிக்க மனோபாவம். அந்த மேலாதிக்க, ஆணாதிக்க மனோபாவம், ஓர் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருக்கலாம். அல்லது ஒரு சமூகத்தில் பெரும்பான்மையோருக்கு இருக்கலாம்.
அப்படி ஓர் ஆணாதிக்க, மேலாதிக்க மனோபாவம் ஒருவரிடம் இருக்கும் போது, பெண்கள் சமைக்க, கூட்டிப் பெருக்க, துணி துவைக்க, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள என்று வீட்டு வேலைகள் செய்யவேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆண் செய்யும் வேலைக்கு தகுந்த கூலி கொடுக்கலாம். அதே வேலையை பெண் செய்தால் குறைந்த கூலியே பெறவேண்டும். ஆண்கள் பெண்களை விட உயர்ந்தவர்கள். பெண்கள் ஆண்களை விட தாழ்ந்தவர்கள். உயர் பதவிகளை ஆண்கள் வகிக்கலாம். பெண்களுக்கு சில உயர் பதவிகள் தரக்கூடாது. குடும்பம், சமூகம், பெண்கள் எல்லாம் ஆண்களின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். பெண் புத்தி பின் புத்தி என்று நினைப்பது. ஒரு குடும்பத்தின் வாரிசு ஆண்களே. பெண் அடுத்தக் குடும்பத்திற்குப் போய்விடுவதால் அவளுக்கு ஒரு குடும்பத்தில் மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
அரசியலில், கலையுலகில், பொது வாழ்வில் பெண்கள் வந்தால் அவர்கள் கெட்டுப் போய் விடுவார்கள். அல்லது கெட்டப் பெண்கள் தான் இந்தத் துறைகளில் வர முடியும் என்று நினைப்பார்கள். ஜான் பிள்ளை ஆணாலும் ஆண் பிள்ளை என்று ஆண்பிள்ளைகளை உயர்வாக நினைப்பது. பொம்பளை சிரிச்சா போச்சு, பொகையிலை விரிச்சா போச்சு என்று பெண்களை கேவலமாக நினைப்பது. கற்பு என்பது உடல் அளவில் காக்கப்படவேண்டியது என்றும் அதுவும் பெண்களின் உடலுக்கே உரித்தானது என்றும் எண்ணுவது.
இப்படி ஆணாதிக்க/மேலாதிக்கச் சிந்தனை ஆழமாக வேர்விட்டு சமூகத்தில் பரவியிருப்பதை எளிதாக உணரவும் காணவும் முடியும். இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள சில கதாபாத்திரங்களை இங்கு ஆய்ந்துப் பார்த்தால் எப்படி ஆண்கள் இந்த ஆணாதிக்கச் சிந்தனைக் கொண்டவர்களாக கட்டமைக்கப்படுகிறார்கள் என்பது புரியும்.
‘சாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்’ ரவிச்சந்திரன்
தான் ஓர் அறிவு ஜீவி என்று நம்புபவன் ரவிச்சந்திரன். டிவி பார்த்துக்கொண்டே இருக்கிறாயே, ஜன்னலைத்திறந்து உலகத்தைப் பார் என்று மனைவி அகிலாவைப் பார்த்துக் கோபப்படுபவன். மனைவியின் மெட்ரோபாலிட்டன் வாழ்க்கை தத்துவத்தோடு உடன்பாடு இல்லாதவன். ஆய்வுபூர்வமான கருத்தியலோடு சிந்திக்கத் தெரிந்த தனக்கும், உணர்வுகளும் யதார்த்தமும் நிறைந்த மனைவிக்கும் ஒத்துவராது என்று நினைப்பவன்.
உருவமற்று அருவமாக, கருத்தியலோடு சிந்திப்பது ஆண்களுக்கு இயற்கை என்றும் அது சுத்தமாக பெண்களுக்கு வராது என்றும் நினைப்பவன். கருத்தியலோடு சிந்திக்க முயற்சி செய் என்று தன் மனைவியைக் கேட்கிறான் ரவிச்சந்திரன். அதற்கு பதிலாக ஒனக்கு கார் ஓட்டத் தெரியுமா? ஃப்யூஸ் போன பல்பை மாட்டத் தெரியுமா என்று பிராக்டிக்கலாக கேட்கிறாள் அகிலா. அங்கே வருகிறது முரண். கார் சாவியை எடுத்துக் கொண்டு அகிலா வீட்டை விட்டு கிளம்பிவிடுகிறாள். விவாகரத்து நோட்டீஸ் வரை போகிறது சூழ்நிலை.
கார் ஓட்டக் கற்றுக்கொள்ளப் போகும் இடத்தில் சில கதாபாத்திரங்களைச் சந்தித்து உரையாடும் போது வாழ்க்கையைப் பற்றியும், அது வெவ்வேறு பரிமாணங்களோடு இருக்கிறது என்பது பற்றியும் புரிந்துக் கொள்கிறான் என்றும் மனைவி திரும்பி வந்துவிட்டாள் என்று கதை முடிந்தாலும், ஆணாதிக்கச் சிந்தனையும் அது குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களைப் பற்றியும் வெள்ளிடை மலை போல புலனாகிறது.
‘கிழி’ முகுந்தன்
பெண்களை வெறும் உடலாகப் பார்ப்பவன் முகுந்தன். குடும்பத்திற்கு வேலை செய்யும் இயந்திரமாகப் பார்ப்பவன். தன் பாலியல் இச்சைகளுக்குத் தீனி போடும் இரையாகப் பார்ப்பவன். தினமும் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ் பிடிக்கிறான். மனக்கசப்புடன் அலுவலகம் செல்கிறான். கட்டிய வீட்டிற்கு லோன் கட்டுகிறான். இரு பிள்ளைகளின் படிப்புக்குச் செலவு செய்கிறான். மனைவியின் கால்முட்டி வாயுத் தொல்லை நோய்க்கு மருந்துக்கான செலவு செய்கிறான்.
இதெல்லாம் அவனை மிகுந்த மனக்கவலைக்கு உட்படுத்துகிறது என்றும் அதனால் அவனுக்கு இருக்கிற ஒரே சந்தோஷம், இரவு உணவிற்குப் பின்பும், காலை டீக்குப் பின்பும், தன் மனைவியை இழுத்துப் போட்டு ‘கிழி, கிழி’ வென்று கிழிப்பது தான் என்று சிரித்துக்கொண்டே, சக பயணியிடம் சொல்கிறான். முகுந்தனுக்கு அவன் தான் உலகம். உலகத்தின் மையம். சுற்றி இருக்கும் எல்லாம் சுமை. பெண்கள் சுவைக்கப்படவே படைக்கப்பட்டவர்கள்.
‘ஒரு ரயில் பயணத்தில்’ இளைஞன்
அவளும் அவனும் இரயிலில் ஏறுகிறார்கள். கூட்டம் குறைவாயிருந்த பெட்டியில் ஏறி, ஒதுக்குப்புறமாய் ஓர் இடம் பிடித்து, அவளது கைப்பையை பெர்த்தின் மேலே வைத்துவிட்டு அவள் தோளில் தன் மூச்சு படுவது போல அவன் உட்கார்கிறான். வண்டி நகர்கிறது. அடுத்த ஸ்டேஷனில் நிற்கிறது. யாரும் வந்துவிடுவார்களோ என்று அவன் அச்சப்படுகிறான். அவர்களின் தனிமை கெட்டுவிடுமோ என்று அஞ்சுகிறான். ஏனென்றால் அவனது நோக்கமெல்லாம் எப்படியாவது அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிடவேண்டும் என்பது தான்.
கண் தெரியாத பிச்சைக்கார கிழவர், ஓடியாடி விளையாடும் சிறு பையன், அவன் அப்பா என்று சக பயணிகளையும், வெளியே ஊற்றும் மழையையும் கண்ணுறும் அவள் வாழ்க்கையை, மனிதர்களை, நேசத்தை, இயற்கையை நிதர்சன அன்பில் நோக்குகிறாள். ஆனால் அவனுக்கோ அவள் உடல் தான் வேண்டும். பெண் ஓர் உடல். சுகம் கொடுக்கும் சுவை.
இப்படி நூலாசிரியர் ஏச்சிக்கானம் ஆணாதிக்க மனோபாவம் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கி, அந்த மனோபாவத்தைக் கேள்வி கேட்க வைக்கிறார்.
ஆனால், ஏச்சிக்கானம் மீதும் ஒரு வழக்கு தொடுக்கலாம்.
‘பாக்கு பொறுக்குபவர்களி’ ல், வந்த விருந்தாளி எப்பொழுது போவார் என்று கேட்பதும், தங்கள் பாக்குத் தோட்டத்தில் அவர் உழைக்கும் போது மகிழ்வுறுவதும், அக்கம் பக்கத்தில் சொன்னதால் சந்துரு அண்ணனை திருடரோ என்று சந்தேகப்படுவதும், தன் தலையில் எப்பொழுதாவது கல்லைத் தூக்கிப் போட்டுவிடுவாரோ என்று அச்சமுறவதும், தங்கள் தோட்டத்தில் உழைத்து வருமானம் பார்க்கும் போது இன்புறுவதும், கடைசியாக ஒரு நாள் காணாமல் போனதும் ‘அப்பாடா!’ என்று நிம்மதி பெருமூச்சு விடுவதும் என்கிற சுயநல கதாபாத்திரத்திற்கு ஒரு குடும்பப் பெண், அல்லது மனைவிதான் சரியாக இருக்கும் என்று ஏச்சிக்கானம் நினைக்கிறாரோ?
‘பேபீஸ் ப்ரெத்’ ல் நியோ மாடர்ன் வாழ்க்கையைச் சொல்ல, வேணு தன் நீண்ட நாள் நண்பனான தீபன் வீட்டிற்குப் போகும் போது, அவனை உதாசீனப்படுத்தும் கதாபாத்திரமாக தீபனின் மனைவியை வடிக்கிறார். அதற்கு ஒரு பெண் கதாபாத்திரம் தேவையாக இருக்கிறதா?
‘சமபந்தி’யில் ஒடுக்கப்பட்ட பெண் வக்கீலை வசப்படுத்தி, ஏமாற்றி, மேல்சாதிக் காரனை வழக்கிலிருந்து விடுவித்து ஒடுக்கப்பட்ட ஒருவனுக்கு (காப்புக்குட்டிக்கு) நியாயம் கிடைக்கச் செய்யும் வக்கீல்களாக மற்ற மூன்று பெண் வக்கீல்களை (சிரியன் காத்தலிக் சூசன், ரம்யா நாயர், சங்கிதா நம்பூதிரிச்சி) படைத்திருக்கிறார். சமையல், உணவு என்பதனால் ஆண் வக்கீல்களை உருவாக்காமல், பெண் வக்கீல்களை உருவாக்கியிருக்கிறாரோ என்று அச்சப்படத் தோணுகிறது.
ஆனால் அவரே தான் ‘யரலவழள’ கதையில் பணத்திற்கு அடிமைப்படாமல், கஷ்டச் சூழலையும் பயன்படுத்தி, படித்து, தன் வாழ்க்கையில் முன்னேறிய ரம்லா கதாபாத்திரத்தையும், மனிதநேயத்தையும், இயற்கையையும் நேசிக்கும் ‘ஒரு ரயில் பயணத்தில்’ வரும் பெண்ணையும் படைத்திருக்கிறார்.
ஏச்சிக்கானம் என்ற கதாசிரியன் ஓர் ஆண் என்பதனால், இந்த மனோபாவம் உள்ளுக்குள்ளேயே ஊறியிருக்கிறதோ என்ற சந்தேகம் வராமல் இல்லை.
உளவியல் முரண்கள் அல்லது தனிமனித பார்வைகள்
‘கொமாலா’ வில் குண்டூர் விசுவன், நண்பர் வாங்கிய கடனுக்கு சாட்சிக் கையெழுத்து போடப்போய், அவன் கட்டாது தலைமறைவு ஆகிவிட்டதால், அவன் வீட்டை ஜப்தி செய்வோம் என்று வங்கி கூறிய நிலையில், சுதந்திரத் தினத்தன்று தற்கொலை செய்யப்போவதாக தன் வீட்டிற்கு முன்பு போர்டு ஒன்றை வைக்கிறான். அதுகுறித்து ஊடகத்தில் ஒரு விவாதம் நடக்கிறது.
விவாதத்தில் கூட்டுறவு வங்கிச் செயலாளர் வங்கிச் சட்டப் பிரகாரம் நடப்பதாகக் கூறுகிறார். பிரபல உளவியல் நிபுணர் வாழ்க்கையின் யதார்த்தம் மிரட்டும் என்றும், இவன் சாகாமல் இருக்கத்தான் இப்படிச் செய்கிறான் என்றும், சோஷியல் செட்டப்பின் வக்கிரத்தன்மையை இது காட்டுகிறது என்றும் பலவாறாக குழப்புகிறார்.
அகில இந்திய கிரைம் ரெக்கார்ட்ஸ் பீரோவின் அதிகாரி ஒருவர் தன் கருத்தைக்கூறுகிறார். கேரளத்தில் தற்கொலைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்றும் இன்னும் சில வருடங்களில் ஹூவான் ரூல்ஃபோவின் ‘பெட்ரோ பராமோ’ நாவலில் வரும் ‘கொமாலா’ போல் கேரளா ஆகிவிடும் என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார் அவர். இபிகோ 307 பிரிவின்படி தற்கொலை முயற்சியே குற்றம் என்றும் தற்கொலை செய்தாலும், செய்யாமல் விட்டாலும் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை இருக்கிறது என்று உயர்நீதி மன்ற வக்கீர் ஒருவர் கூறுகிறார்.
என் பிரச்னை எனக்கு மட்டும் தான். அவரவர் பிரச்னை அவரவர்களுக்கு. என் பிரச்னை குறித்து நான் என்ன நினைக்கிறேனோ அதைத்தான் மற்றவர்களும் நினைக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. ஊடகத்திற்கு ஊடகத்தின் பிரச்னை! ஊடகத்திற்கு அதன் வாடிக்கையாளர்களை அதிகரிக்கவேண்டும் அதன் மூலம் லாபம் ஈட்டவேண்டும் கூடவே அது நம்பும் பார்வையை வாடிக்கையாளர்களுக்குள் திணிக்கவேண்டும். விசுவன் வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையே போராடிக்கொண்டிருக்கிறான். விவாதத்தின் இடையே விளம்பரம் போட்டு, ஊடகம் விளையாடிக்கொண்டிருக்கிறது என்பது அழகாக விவிரிக்கப்படுகிறது.
‘சாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளி’ல் வாசிப்புப் பழக்கம் உள்ள ஒருவர், வாசிப்புப் பழக்கம் இல்லாத ஒருவரைத் தாழ்வாகப் பார்ப்பதாகக் கதை பின்னப்படும். வாசிப்பதனாலும், எழுதுவதனாலும் பணிவும் மரியாதையும் கூடவேண்டுமே தவிர, சுற்றி இருப்போரையும், இருப்பவற்றையும் சமமாகப் பாவித்து, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து வாழவேண்டுமே தவிர, மற்றவர்களை இழிவாகப் பார்க்கும் பார்வை வருகிறதென்றால் அது சரியான வாசிப்பா என்று கேள்வி எழுப்பலாம். எனென்றால் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ என்று தானே தமிழ் அறம் சொல்கிறது.
‘பேபீஸ் பிரத்’தில், நவீன வாழ்க்கை முறை, குடும்பங்களை எப்படி பிய்த்துப் போட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. பல வருடங்கள் கழித்து தன் பால்ய நண்பன் தீபனைப் பார்க்கப் போகும் வேணுவிற்கு கதவைத் திறந்து விட்டு, எந்த வித விருந்தோம்பல் உணர்வும் இல்லாமல், கடந்து போகிறாள் தீபனின் மனைவி. போன் பேசிக் கொண்டே வெளி வரும் தீபன், எந்தவித ஆச்சரிய/சந்தோஷ முகம் காட்டாமல், போனை நீடித்து பேசிவிட்டு பிறகு சாதாரணமாக பேசுகிறான். உணர்வுகளுக்கு இடமே இல்லை.
ஆறாவது படிக்கும் தீபனின் மகளை மடியில் அமரவைத்து, அவன் ஆசை ஆசையாக வாங்கி வந்த ஆடையை பரிசாகக் கொடுக்கலாம் என்றால், என்னைத் தொடாதீர்கள் என்று சொல்லி வெடுக்கென்று உள்ளே ஓடிவிடுகிறாள் தீபனின் மகள். சமூகம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது என்று வேணு திகைத்துப் போய் நிற்கிறான். நவீன வாழ்க்கை முறை, கணவன் மனைவி உறவையும், நண்பர்களுக்கிடையேயான நட்பையும், குழந்தைகளின் அப்பாவித்தன்மையையும், அனைவரது உளவியல் பாங்கையும் பறித்துச் சென்றுவிட்டதோ என்று ஐயத்தை இக்கதைக் கொடுக்கிறது.
*********
கதைச்சுருக்கங்கள் - படிப்பினையும் படிமங்களும்
கொமாலா - கதை ஒன்று
குண்டூர் என்ற ஊரைச் சேர்ந்த விசுவன் என்பவர் தன் நண்பரும், பள்ளித் தோழருமான, சுதாகரன் வாங்கிய கடனுக்காக, அந்நியனுக்கு உதவி செய்றது புண்ணியம்’னு நினைத்து, பிணையாள் சாட்சி கையெழுத்தைப் போடுகிறார். ஆனால் சுதாகரன் கடனைக் கட்டாமல் தலைமறைவாகி விடுகிறார். கடனைக் கட்ட வேண்டிய பொறுப்பு குண்டூர் விசவன் மேல் விழுகிறது. அவர் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துக் கட்டிய வீடு, ஜப்தி செய்யப்படப் போகும் நிலையில், அதன் தொல்லை தாங்க முடியாமல், வரப்போகும் சுதந்திரத் தினத்தன்று, தான் தன் குடும்ப சகிதமாக தற்கொலை செய்யப் போவதாக ஓர் அறிவிப்புப் பலகையை தன் வீட்டில் தொங்க விடுகிறார். அறிவித்தது போல, குண்டூர் விசுவன், தற்கொலை செய்து கொண்டாரா இல்லையா என்பதே கதை.
தொலைக்காட்சியில் இது குறித்த விவாத மன்றம் நடப்பதாகக் கதைத் துவங்குகிறது. ஊடகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இரண்டாம் பக்கத்திலேயே நக்கல் நையாண்டியோடு குறிப்பிடுகிறார். தலை போகிற விவாதம் நடக்கையில், ஒரு மனிதனின் வாழ்வா சாவா என்கிற போராட்டத்தைப் பற்றி அலசும் இடைவேளையில் வணிக விளம்பரங்கள் வருகின்றன. ஊடகத்திற்கு உங்கள் பிரச்னைப் பற்றிக் கவலை இல்லை. அதற்கு அதன் ஓட்டமே மையம்.
வங்கி அதிகாரி அவர் தரப்பு நியாயத்தைச் சொல்கிறார். மனநல மருத்துவர் அதன் காரணங்களை அலசுகிறார். அடுத்த இடைவேளையில் அன்றைய முக்கியச் செய்திகளாக விளையாட்டு செய்தி, கோவில் குறித்த ஒரு செய்தி, சட்டசபையில் வரி மசோதா பற்றி ஒரு செய்தி, அணுசக்தி உடன்பாடு பற்றி ஒரு செய்தி என திரையில் வருகிறது. ஆம்! உங்கள் பிரச்னை உங்களுக்குத்தான் பிரச்னை. ஊடகத்தின் பிரச்னை ஊடகத்திற்கு.
ஹூவான் ரூல்ஃபோவின் ‘பெட்ரோ பராமோ’ என்ற மெக்சிகன் நாவலில் ‘கொமாலா’ என்ற நகரம் வருகிறது. அந்த நகரத்தில் எல்லோரும் இறந்து போனவர்களாக சித்திரிக்கப்பட்டிருக்கும். அது ஒரு இறந்தவர்களின் ஆன்மாக்கள் இருக்கிற நகரம். அது போல கிரைம் ரேட் அதிகரித்து வரும் கேரளம் கொமாலா போல ஆகிவிடும் என்று ஒரு கிரைம் ரெக்கார்ட் மூத்த அதிகாரி தன் கருத்தை விவாத மன்றத்தில் பதிவிடுகிறார்.
தற்கொலை செய்யவில்லையென்றால், தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கும், தற்கொலைக்கு தன் குடும்பத்தைத் தூண்டியதற்கும், சட்டம் இவரைத்தண்டிக்கும் என்று ஒரு வழக்கறிஞர் விவாத மன்றத்தில் பயமுறுத்துகிறார்.
விசுவன் பேச முனையும் போது, விவாத நேரம் முடியப் போகிறது என்றும் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றும் பணிக்கப்படுகிறார். விவாதத்தின் முடிவில் விசுவனின் தற்கொலை குறித்து வாக்கெடுப்பு நடத்துகிறார்கள். ஆனால் யாரும் அதில் அக்கறை காட்டவில்லை. வரப்போகும் புயல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த நாள் விவாத மன்றம் வேறு ஒரு தலைப்பை வைத்துத் துவங்குகிறது.
உங்கள் பிரச்னை உங்களுக்கு! ஊடகத்தின் பிரச்னை ஊடகத்திற்கு! அவரவர் பிரச்னை அவர்களுக்கு!
ஹூவான் ரூல்ஃபோவின் ‘பெட்ரோ பராமோ’ என்ற மெக்சிகன் நாவலை நூலகத்துக்குச் சென்று வாங்கி வருகிறான் விசுவன். வீட்டிற்கு வந்து ‘கொமாலா’ கதையைப் படிக்கிறான். தற்கொலை செய்வதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், மனைவியிடம் ‘சாவதற்குள் வந்துவிடுவேன்’ என்று சொல்லிவிட்டு, சுதாகரனைத் தேடி வெளியே போகிறான். ஐந்தாவது நாள். ஒரு தள்ளுவண்டிக் கடையில் கருப்புக்காபியை வாங்கி, உறிஞ்சப் போகும் போது, பைக்கில் வந்த ஓர் இளைஞன் லாரியில் அடிபட்டு, உயரே தூக்கி எறியப்பட்டு, கீழே விழுகிறான். யாரும் ஓடிப் போய் உதவி செய்யவில்லை. தான் பார்த்துக் கொண்டிருப்பது மரணத்தைக் குறித்த ஒரு குறும்படமா என்று விசுவன் யோசிக்கிறான். தான் இருப்பது உண்மையிலேயே கொமாலா தானோ என்கிற சந்தேகம் வருகிறது.
அப்பொழுது அவன் யோசிக்கிறான். ‘மரணத்தின் புழு அவர்களின் உள்ளே இருந்த இலைகள் முழுவதையும் சாப்பிட்டு முடித்துவிட்டதோ? அவர்கள் ஒவ்வொருவரும் புழுக்களின் ஒவ்வொரு மரமோ?’ என்று யோசிக்கிறான். மரத்தின் இலைகள் உயிர். மரணம் என்கிற புழு உயிருள்ள இலைகளை அரித்துவிடுகிறது. விசுவனின் மனப் போராட்டத்தை உரித்துக்காட்டி விடுகிறது இந்த உவமானம்.
இளைஞனின் இரத்தம் வழிந்து விசுவனின் காலைத் தொட, ஓடிச்சென்று, அவனது உடலை இழுத்து வெளியே போட்டு, வாகனங்களை நிறுத்தச் சொல்லி கூச்சலிடுகிறான். வேறு யாரும் வரவில்லை. தள்ளுவண்டிக்காரன் கூட ‘இது சகஜம். ஒரு ஜீப் அனுப்புகிறேன்’ என்று சொல்லிவிட்டு நகர்கிறான். ஜீப் டிரைவர் இளைஞனின் தலையைத் தொடக்கூட மறுக்கிறான். இது உண்மையிலேயே கொமாலா’ தானோ என்று விசுவன் நினைக்கிறான்.
ஜீப்பில் இளைஞனது உடலை ஏற்றிக்கொண்டு கிளம்பும் போது ஒருவர் ஜீப்பில் வந்து ஏறிக்கொள்வார். மனித நேயம் வறண்டுவிடவில்லை என்று நினைக்கும்போதே, சற்று தூரத்தில் அவர் இறங்கவேண்டிய இடம் வந்ததும் இறங்கிக்கொள்வார். மனிதநேயமும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. சூழ்நிலையை அவர் பயன்படுத்திக்கொண்டார் என்று தெரியும் போது, ஒருவரைப் பற்றி/ஒன்றைப் பற்றிய நம் எண்ணம் எப்படி சடாரென நிலை குலைந்து போகிறது என்பதைச் சொல்ல ஓர் உவமையைப் பயன்படுத்துவார் கதாசிரியர்.
மனம் ஒரு கள்ளம் கபடமற்ற கல் சிற்பி என்றும் அது ஒரு நபரைப் பற்றி ஒரு கற்களால் ஆன கற்பனையைக் கட்டமைக்கிறது என்றும், அதன் அழகை ரசிக்கும் முன்பே, உறுதியற்ற ஒரு கற்குவியலாய் அது நொறுங்கிவிடுகிறது என்றும் எழுதுகிறார்.
இதைப் படிக்கும் போதே, செய்திகளில் அடிபடும் பெரிய போர்களான ரஷ்ய-உக்ரைன் போருக்கும், அமெரிக்க, இஸ்ரேல்-ஈரான் போருக்கும், மற்ற சில சிறிய போர்களுக்கும் நம் சிந்தனைச் சென்று, திரும்ப இன்றைய காலை உணவிற்கு இட்லியா, தோசையா அல்லது உப்புமாவா என்று திட்டமிடும் நம் எண்ணத்திற்கு திரும்பும் நம் மனநிலையை கேள்வி கேட்க வைக்கிறது. நாம் யதார்த்தத்தில் ஒரு கொமாலாவில் தான் வாழ்கிறோமோ? அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தன்நோய் போல் போற்றாக் கடை என்பது நினைவுக்கு வருகிறதா?
இறக்கப்போகும் இளைஞனுக்குத் தண்ணீர் தேவை எனத் தெரிந்துக் கொண்டு, ஜீப்பிலிருந்து இறங்கி தண்ணீரைப் பிடித்து வந்து, இரண்டு துளிகள் கொடுத்ததும் அவன் கண்களை மூடிவிடுவான். தன் கடனை அடைத்துவிட்டதாக நினைத்து தற்கொலை அறிவிப்புப் பலகையை நீக்க முடிவு செய்வான். கதை இங்கு முடிவடைகிறது.
ஒருவர் மற்றவர்களுக்கு கடன்பட்டவர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு. நண்பர்களுக்கு. சமூகத்திற்கு. உலகில் உள்ள மற்ற உயிரினங்களுக்கு. அந்தக் கடனைத் தீர்ப்பதே வாழ்க்கை. மரணத்தில் பொருள் இல்லை. வாழ்வதிலேயே பொருள் இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லி கதை முடிகிறது.
********
UVWXYZ (யரலவழள) - கதை இரண்டு
ரம்லாவின் கணவன் வேணு. வேணுவை வேண்டுமென்றே லாரியால் மோதி அவனது வீட்டார் சாகடித்திருப்பார்கள். வேணுவின் இறப்பிற்குப் பிறகு ரம்லாவின் பழைய விளையாட்டுத் தோழன் ரம்லாவையும் அவள் குழந்தைகளையும் சந்திக்க வருவதில் கதைத் துவங்குகிறது. அவன் தான் கதையைச் சொல்கிறான்.
அவன் நான்கு வயதாக இருக்கும் போது, அடிக்கடிக் காய்ச்சல் வருகிறது. காய்ச்சல் ஒரு பூனையைப்போலத் தான். பூனை ஓர் இடத்தில் படுத்திருந்து, அது எழுந்துச் சென்று விட்டாலும், அதன் வாடை படுத்திருந்த இடத்திலேயே தங்கிவிடுவது போல அவனைப் பாடாய் படுத்துகிறது. மழைத்துளியின் பாரம் தாங்காத கீரைச்செடியைப் போல சாய்ந்து விழுகிறான்.
அவன் பிடரியில் நாலு ஜெம்ஸ் மிட்டாய்களைப் போல சிறு கட்டிகள் வந்தன. (அவன் வீட்டில் வேலை செய்த உம்முவின் மகள் தான் ரம்லா.) காய்ச்சலுக்கு ஊசி போட மருத்துவமனைக்குச் செல்கிறான். கிருமி நாசினிக் கரைசலில் மூழ்கிக் கடந்த சிரிஞ்ச், ஒரு தாக்குதலுக்கு தயாரான பாணியில் நிசப்தமாய் படுத்திருந்தது. நர்ஸம்மா பெரிய ஊசியை அதன் முனையில் பொருத்தியதுடன், மயங்கிக்கிடந்த அதன் கடுமை, போலீஸ்காரன் தன் அதிகாரத் தொப்பியை தலையில் பொருத்தியது போல, விழித்துக்கொண்டது.
டாக்டரிடம் கட்டிகளைக் காட்டிய போது, அவை குழந்தை TB என்று கண்டுபிடித்தார். அதற்கு ஊசி போட்டு, கோலிக்குண்டு அளவிலான மாத்திரையும் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும். கால்நடைப்பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு, எஜமான் வந்து அழைத்துப் போகாமல், அங்கேயே துவண்டு விழுந்து சாக இருக்கிற பசுமாடு ஒன்றின் கண்ணிலிருந்து தாடை வரை கண்ணீர் வழிந்து கருப்புக் கோடுடன் இருப்பது போல, அவன், தொண்ணூறு நாட்கள் தினமும் ஊசி போட்டுப் போட்டு, சத்தமின்றி அழுகிறான்.
பள்ளிக்குச் செல்லும் போது, மதிய உணவிற்குப் பிறகு மாத்திரை சாப்பிட வேண்டுமே! மறக்காமல் மாத்திரையை எடுத்துக் கொடுக்க, வேலைக்காரம்மா உம்முவின் மகள் ரம்லாவை பள்ளியில் சேர்த்தார்கள். அவளது வேலை மதிய நேரத்தில் மாத்திரையைக் கொடுக்க வேண்டும். மூன்று ஆண்டுகளில் அவனது கட்டிகள் காய்ந்து விழுந்தன.
அந்த விளையாட்டுத் தோழன் தான், இப்பொழுது ரம்லாவைச் சந்திக்க வந்திருக்கிறான். கத்தையாகப் பணத்தைக் கொடுத்து, வச்சிக்க என்கிறான். ரம்லா அதை வாங்க மறுத்துவிட்டு சொல்கிறாள். ‘என் வீட்டுக்காரர் இல்லன்னாலும் வாழ்க்கைய நடத்த உன் சிறுவயதில் வந்த வியாதியே எனக்குத் தந்திருக்கு’ என்று சொல்லி, அவனது பிடரியில் கையை வைத்து, ய, ர, ல, வ, ழ, ள என்று சொல்கிறாள். அவள் இப்பொழுது அங்கன்வாடி ஆசிரியை என்று கதை முடிகிறது.
பணத்தை விட, கல்வி எவ்வளவு முக்கியம்!
********
பேபீஸ் ப்ரெத் - - கதை மூன்று
கதை குவைத்தின் வீதிகளில் துவங்குகிறது. அவனது நண்பனான தீபனுக்குப் போன் செய்கிறான்.
இடையில், அவனது சொந்த ஊரான இந்தியாவில் உள்ள குளங்கரை பற்றி அவனுக்கு ஞாபகம் வருகிறது. அவன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது, குஞ்சாலி என்ற மாலுமி ஒருவன் அவன் ஊரில் இருந்தான். அவன், ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக்கொண்டு அவள் மேல் எல்லாப் பாய்ச்சல்களையும் கட்டிப்போட தயார் இல்லாமல், ஊரிலுள்ள எல்லா குழந்தைகளிலும் தன் சாயல் தான் இருக்கிறது என்று சொல்லித் திரிபவன்.
குஞ்சாலி, தினமும் ஊரில் உள்ள பெண்களின் உடம்பிலுள்ள நதிகளையும் மலைகளையும், மிகச் சிறிய அடையாளங்களையும் கதைகளாக வர்ணிப்பான். அவர்களின் உடல்களைப் பொய்யான மர்மப் போர்வையிலிருந்து வெளியே எடுத்து, வெளிச்சத்தில் ஒரு வரைபடம் போலப் பரப்பி வைப்பான். எல்லோரும் சுற்றி அமர்ந்து கேட்பார்கள். இவன் மத்தியில் ஒரு கரியடுப்பைப் போல எரிந்தான். அந்தக் கதைகளிலிருந்து வெப்பம் இவர்கள் எலும்புகளிலும் ஏறியது.
தீபன் இவனது நண்பன். தீபனும் இவனும், ஒரு நாள் மாலையில், குளத்தங்கரையில் திருட்டுத்தனமாக சிகரெட் குடிக்கும் போது, குளத்தில் குளித்து விட்டு குஞ்சாலி கரைக்கு ஏறி வரும் போது, இடுப்பில் கட்டியிருந்தத் துண்டு அவிழ்ந்து விழ, அவன் நிர்வாணத்தைப் பார்த்துவிட்டு, அவன் ஒரு சேதமான கப்பல் என்று தெரிந்து ஊருக்குள் செய்தியைப் பரப்புகிறார்கள். ஊர் முழுவதும் அவன் ஒரு கையாலாகாதவன் என்று தெரிந்ததும் அவன் தூக்கிலிட்டுக் கொண்டு இறந்து போகிறான்.
பதின்மூன்று வருடங்களாக தொடர்பு கொள்ளாத தீபனுக்குத் தான் இப்பொழுது போன் செய்கிறான். போன் பேசியதில், தீபன் களிமண் வீடு கட்டும் ஆர்க்கிடெக்ட். அவன் மனைவி ஒரு காலேஜ் ஆசிரியை. ஆறாவது படிக்கும் ஒரு மகள் என்று தெரிந்தது. இவன் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு சகோதரியாக கல்யாணம் செய்து வைத்து, தன் கனவுகளைத் துறந்து, கல்யாணம் செய்யாமல் இருக்கிறான்.
இப்பொழுது இந்தியாவில் உள்ள ஊருக்குத் திரும்பிச் செல்கிறான். தீபனைப் பார்க்கப் போகவேண்டும். அவன் மகளுக்கு என்ன பரிசு வாங்கலாம்? ஓர் ஆடை வாங்க கடைக்குப் போகிறான். விற்பனைப் பெண் ஓர் ஊதா நிற ஃப்ராக்கையெடுத்து அதில் வரையப்பட்டிருந்த வெள்ளைப் பூக்களில் தன் விரலை ஓடவிட்டு, இது தான் குழந்தையின் சுவாசம், பேபீஸ் ப்ரெத் பூக்கள் என்கிறாள்.
அந்தப் பூக்களின் இதழ்களில் காற்று வருடும் போது தாய்ப்பாலின் நறுமணம் பரவும் என்கிறாள். அந்த உடையை கையில் வாங்கி, அதை தீபனின் சின்னக்குழந்தையாக நினைத்து, பால்மணம் கொண்ட அவளின் ஈரமான கன்னத்தில் முகத்தைக் கொண்டு முத்தமிட்டானாம். அதாவது அந்த உடையை முகர்ந்து பார்த்ததன் உருவகம். அந்த ஆடையை வாங்கிக்கொண்டு விமானம் ஏறுகிறான்.
நேராக தீபன் வீட்டிற்குச் செல்கிறான். கதவைத் தட்ட ஒரு பெண் வந்து திறக்கிறாள். என் பெயர் வேணு. தீபன் இருக்கிறாரா எனக்கேட்டு முடிப்பதற்குள் அவள் கதவை உரக்கச் சாத்திவிட்டுச் செல்கிறாள். தீபன் யாருடனோ போனில் பேசிக்கொண்டே வருகிறான். அவன் ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொள்வான் என்ற எதிர்பார்ப்பு வீணாகி, அவன் உணர்ச்சியேதும் இல்லாமல் டீ வேண்டுமா என்று கேட்டு டீயைக் கொடுத்து விட்டு அடுத்த போன் அழைப்புக்குப் போகிறான்.
எதிர்பார்த்தபடி, பதின்மூன்று வருடங்கள் கழித்து சந்தித்தும், உணர்ச்சிவசம் மேலிட அவன் நண்பன் தீபன் வரவேற்காமல், டீயைக் கொடுத்துவிட்டு, யாருடனோ போன் பேசிக்கொண்டிருக்கும் போது வேணுவின் மனநிலை எப்படி இருந்தது? ஒரு மணல் கிராமத்தில் தாகத்துடன் நிற்கிறான். நட்பின் ஈரத்தை கவர்ந்து செல்லும் பயங்கரமான மணற்காற்று சிறகு விரித்து வருகிறது.
மகள் எங்கே என்று கேட்கவும், வெளியே கார் ஒன்று வந்து நின்று அதிலிருந்து தீபனின் மகள் வந்து இறங்கவும் சரியாக இருக்கிறது. தன் பால்ய நண்பன் என்று இவனை அறிமுகப்படுத்த, அவள் கையை நீட்டி ஹலோ என்கிறாள். இவன் தீபனின் மகள் கையைப் பிடித்து தன் மடியில் அமர வைத்து, ஒரு தந்தையைப் போல, வாரியெடுத்து, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்கிறான். அவன் பிடியிலிருந்து அவள் சட்டென்று விடுவித்துக் கொண்டு, அவனைக் கடுமையாக பார்த்துவிட்டு வீட்டுக்குள் சென்று விடுகிறாள்.
இரண்டு வயசு குழந்தையைக் கூட சும்மா விடாத நாடு இது. பாலைவனத்துல கிடந்த உனக்கு இதெல்லாம் புரியாது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவளுக்குத் தெரியும் என்று தீபன் சொல்ல, தீபனின் மகளது உடம்பைப் பற்றி உணரத் தொடங்கிய அவன், திடீரென குஞ்சாலியின் நினைவுக்கு வர, ஊரே கையாலாகதவன் எனத் தன்னை நோக்கி கைக்காட்டுவதாக உணர்கிறான்.
தீபனின் வீட்டை விட்டு வெளியேறி, அவனது மகளுக்காக வாங்கி வந்த பேபீஸ் ப்ரெத் ஆடையைத் தூக்கிப் போடும் போது ஓர் உவமானத்தை உபயோகிக்கிறார் ஆசிரியர். குவைத்தில் அதை வாங்கும் போது, அந்த ஆடையில் தாய்ப்பாலின் மணமிருந்தது. இப்பொழுது அது சவப்பெட்டியின் மேல் வைத்திருந்து வாடிப்போன பூங்கொத்து போல் இருக்கிறது. அவளுக்காக ஆசையாக வாங்கி வந்த பேபிஸ் ப்ரெத் ஆடையைத் தூக்கி எறிவதோடு கதை நிறைவுறுகிறது.
ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்காக, மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக, தன் சுகத்தையும் பாராமல் பணி செய்வோருக்கு கையாலாகாதவன் என்கிற பட்டம் பொருத்தமாகுமா?
********
பிரியாணி
பொய்னாச்சி என்ற ஊர்.
ஹாஜியாரின் பேரன் ரிஸ்வானின் திருமணம் பெங்களூரில் நடந்து முடிந்து விட்டது. ஆனால் பொய்னாச்சி ஊர் மக்களுக்கு பிரியாணி விருந்து வைக்க வேண்டும் என்று ஹாஜியாரின் மகளும், ரிஸ்வானின் அன்னையுமாகிய ருக்கியா விரும்பினார். நாலாயிரம் பேருக்கும் மேல் சாப்பிட இருக்கும் அந்த விருந்துக்கு எல்லா வேலைகளும் ஜரூராக நடந்துக் கொண்டிருந்தன. பஞ்சாபிலிருந்து ஒரு லோடு பாசுமதி அரிசி இறக்கி, அதில் பிரியாணி செய்ய ஹைதராபாத்திலிருந்தும் அபுதாபியிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தார்கள். அசைனர் பாய் தான் முன்னின்று இயங்கிக்கொண்டிருந்தார்.
பீஹாரிலிருந்து ஏழு வருடத்திற்கு முன்பு கேரளாவிற்கு வந்து, வெவ்வேறு வேலைகளைச் செய்துக்கொண்டிருக்கும் கோபால் யாதவ் பஸ்ஸில் வந்து ராமச்சந்திரன் கடையில் இறங்குவதில் கதைத் தொடங்குகிறது. அதற்கு முன் ராமச்சந்திரனுக்கு, அசைனர் பாய் போன் போட்டு ஒரு வேலையாள் கேட்டுக்கொண்டதன் பேரில், கோபாலை ராமச்சந்திரன் அசைனர் பாயுடன் ஹாஜியாரின் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். காரில் போகும் போது கோபாலின் கதை விரிகிறது.
கோபால், பீஹாரில் உள்ள லால்மாத்தியா என்ற ஓர் ஊரில், நிலக்கரி சுரங்கத்தில் மீதமிருக்கும் இரண்டாந்தர நிலக்கரியை எடுத்து விற்கும் ஒருவனாக இருந்திருக்கிறார். அப்படி எடுத்து விற்க வரும் பெண்களில் ஒருவரான மாதங்கியைத் தான் திருமணம் செய்துகொண்டார். வறுமையின் கொடுமை. பசியால் துடித்து, மண்ணை வாரித் தின்று தூங்கும் மகளுக்காக, நூற்றிஐம்பது ரூபாய் கிடைத்தாலும், போலீஸ், இத்யாதி போக மீதி பத்து ரூபாயோடு வீடு திரும்பும் ஒருவனாக இருந்திருக்கிறார்.
கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, ஹாஜியார் வீடு வந்துவிடுகிறது. சுற்றி பாசுமதி அரிசியின் வாசனை தூக்கியது. மாதங்கி இந்த பாசுமதி அரிசியை ஒரு கடையில் காண்பித்திருக்கிறாள். நம்மைப் போன்றவர்கள் இந்த அரிசியை வாங்கமுடியாது என அவள் கூற, ஒரு ஐம்பது கிராம் அரிசி வாங்கி கோபால் கொடுக்க, மாதங்கி வீடு வரும் வரை வாயில் போட்டு மென்று கொண்டேயிருந்தது ஞாபகம் வருகிறது.
ஹாஜியாரின் மூன்றாவது மனைவியின் மகன் ஒருவன் கோபாலை ஓர் இடத்தில் குழி தோண்டச் சொல்கிறான். ஓராள் உயரம் கொண்ட ஒரு குழியை வெட்ட ஆரம்பிக்கிறான். ஒருவன் அவனிடம் பீஹாரில் எந்த ஊர் என்று கேட்கிறான். லால்மாத்தியா என்றதும், அது இப்பொழுது பீஹாரில் இல்லை. ஜார்க்கண்ட்டுக்குப் போய்விட்டது என்று கூறுகிறான்.
கோபால் பதினைந்து வருடத்திற்கு முன் பீஹாரிலிருந்து கிளம்பும் போது, லால்மாத்தியா என்ற அவனது ஊர் பீஹாரில் தான் இருந்தது. குழியை வெட்டிக் கொண்டிருக்கும் போது, உரையாடலில் அவன் ஊர் ஜார்க்கண்ட்டுக்குப் போய்விட்டது என்று தெரிந்ததும், விசனப்படுகிறான். தன்னைப் போலவே அவன் ஊரும் பீஹாரை விட்டுப் போய்விட்டது என்று வேதனைப்படுகிறான்.
மண்வெட்டியில் வந்த மண்ணாங்கட்டியில் பீஹார் உள்ளதாக நினைக்கிறான். அந்த மண்ணாங்கட்டியை மண்வெட்டியில் பிடியால் ஒங்கி அடிக்கிறான். மண்ணாங்கட்டி இரண்டாக பிளந்து போகிறது. ஒன்று பீஹார் மற்றொன்று ஜார்கண்ட் என்று நினைத்துக் கொள்கிறான்.
விருந்து முடிந்துவிடுகிறது. மூன்று பேர் ஒரு பச்சை பீப்பாயைத் தூக்கிக்கொண்டு வந்து குழிக்குள் கொட்டுகின்றனர். எலும்புத்துண்டுகளடங்கிய எச்சில் பிரியாணி. பாசுமதி பிரியாணி. குழி நிரம்பியதும், மண்ணை வாரிப் போட்டு குழியை மூடச் சொல்கிறார்கள். தயக்கத்துடன் மூடுகிறான்.
முடிவு தான் அட்டகாசம். கோபாலிடம் குழியை வெட்டச் சொல்லி பிறகு மூடச் சொன்னவன் கேட்டான்.
‘உனக்கு எத்தனை பிள்ளைங்க…’
‘ஒரு பொண்ணு’
‘பேரு’
‘பாசுமதி’
‘என்ன பண்றா?’
‘செத்துட்டா’
‘எப்படி’
‘பசியால’
ஒரு பக்கம் வறுமை! மறு பக்கம் செழுமை!!
முரணே கதையை உருவாக்குகிறது.
******
சாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
ரவிச்சந்திரன், தன் மனைவி அகிலாவுக்கு விவாகரத்துக்கான நோட்டீஸ் கொடுத்து விட்டு விடுமுறையில் இருக்கிறான். ஏன் விவாகரத்து நோட்டீஸ்? ரவிச்சந்திரன் மெய்யியல் (தத்துவ) விரிவுரையாளர். எழுத்து, வாசிப்பு, சமூகம், அர்ப்பணிப்பு என்று கிடப்பவன். ரவிச்சந்திரடன் கனவு ஜீவி. அகிலா ஒரு யதார்த்தவாதி.
மனைவி இல்லாததால் கஞ்சி சமைத்துச் சாப்பிடலாம் என்று அடுக்களைக்குப் போகிறான் ரவிச்சந்திரன். பாத்திரங்கள் எல்லாம் கழுவப்பட்டு வெள்ளைவேளேரென தனிமைப்பட்ட நிலையில் உதடுகளைக் குவித்து, தலை குனிந்து பேசாமல் இருக்கின்றன. பிரஷர் குக்கரின் மூடியைத் திறக்க முடியாத போது பாத்திரங்களின் அபார எதிர்ப்பு சக்தியைப் புரிந்துக் கொள்கிறான்.
அவன் தொட்ட பாத்திரங்களெல்லாம் ஒன்றையொன்று கட்டிப் பிடித்துக் கொண்டு அவன் கஞ்சி சமைக்கும் முயற்சியை முறியடிக்கின்றன. அவை ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு, அவனுக்கு எதிராக ஒரு கும்பல் சக்தியாக மாறின. எல்லா பாத்திரங்களும் சேர்ந்து அவனை ஆத்திரத்துடன் திட்டி, போய் அவன் மனைவியை அழைத்து வரச் சொல்கின்றன. இந்தக் கதை முழுக்க பாத்திரங்கள் தர்க்கம் செய்கின்றன.
டிவி பார்த்துக்கொண்டே இருக்கிறாயே, ஜன்னலைத்திறந்து உலகத்தைப் பார் என்று கோபப்படுகிறான். அகிலாவின் மெட்ரோபாலிட்டன் வாழ்க்கை தத்துவத்தோடு அவனுக்கு உடன்பாடில்லை. கருத்தியலோடு சிந்திக்க முயற்சி செய் என்கிறான் ரவிச்சந்திரன். கார் ஓட்டத் தெரியுமா? ஃப்யூஸ் போன பல்பை மாட்டத் தெரியுமா என்று பிராக்டகலாக கேட்கிறாள் அகிலா. அங்கே வந்தது முரண். கார் சாவியை எடுத்துக் கொண்டு அகிலா கிளம்பிவிட்டாள். விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
உனக்குக் கார் ஓட்டத் தெரியுமா? என்று வாஷிங் மிஷினும் கேட்கிறது. அதை அடிக்கக் கையை ஓங்குகிறான் ரவிச்சந்திரன். அவ கார் ஓட்டுறா. நல்லா சமைக்கறா. நீ படிக்கற. எழுதற. ஒவ்வொருத்தருக்கும் திறமையும் குறைகளும் உண்டு மிஸ்டர் என்கிறது. பாத்திரங்கள் அவனை கேள்வி கேட்டதால் அவன் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள மதர் டிரைவிங் ஸ்கூல் என்ற ஓரிடத்திற்குப் போகிறான். ராமகிருஷ்ணன் அதன் ஓனர்.
ராமகிருஷ்ணன் ரவிச்சந்திரனை ஏற்கனவே பார்த்திருக்கிறான். அவன் சொல்கிறான். கார் ஒட்டுவது ஒரு ஸ்கில். அது பேதைகளுக்கும் அறிவுஜீவிகளுக்கும் கஷ்டம் என்கிறான். முன்பணம் கொடுத்தாகிவிட்டது.
அடுத்த நாள். கார் ஓட்டும் பயிற்சி துவங்கியது. வண்டி இருக்குதே அது அப்படி இப்படி போயிடும். நாம தான் ஜாக்கிரதையா இருக்கனும் என்று ராமகிருஷ்ணன் கூறுகிறான். கார் ஒட்ட ரவிச்சந்திரன் டிரைவர் சீட்டில் அமர்ந்த போது தான் ஒன்று புரிந்தது. ஒரு பயணியின் உலகத்தை விட ஒரு காரோட்டியின் உலகம் வித்தியாசமானது என்று அப்பொழுதுதான் ரவிச்சந்திரனுக்குப் புரிந்தது. (இங்கு மனைவியின் உலகம் - கணவனின் உலகம்; அப்பாவின் உலகம் - மகளின் உலகம்; மகனின் உலகம் - அம்மாவின் உலகம்; காதலியின் உலகம் - காதலனின் உலகம் என்று போட்டுக்கொள்ளலாம்.) தொலைக்காட்சியில் பார்க்கின்ற எழுத்தாளர்கள் போன்ற அறிவுஜீவிகள், எட்டியிலிருந்து பார்ப்பதற்கு நன்றாகத் தெரியலாம். ஆனால் கிட்டச் சென்றுப் பார்த்தால் வாழ்க்கையைப் பற்றி அதிகமாகத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்று ராமகிருஷ்ணன் சொல்வான். அதற்குப்பிறகு ரவிச்சந்திரன் ஒரு முடிவுக்கு வருகிறான். என்ன முடிவு அது? அறிவுஜீவிகள் நத்தைகளைப் போல. சுகத்தையும் புகழையும் விரும்பி கூட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவ்வப்போது அந்த கூட்டுக்குள் இருந்து கொம்பை நீட்டுகிறார்கள் என்ற முடிவு.
முதல் நாள் வண்டி ஓட்டிய திமிறில் ரவிச்சந்திரன் படுக்கையில் படுத்திருக்க, சமையலறையிலிருந்து ஒரு பாத்திரம் ‘இப்பத்தான ஆரம்பிச்சிருக்க… ஓவர் ஸ்மார்ட் ஆகாதீங்க’ என்று எச்சரிக்கிறது.
அடுத்த நாள். இங்கிலீஷ் டீச்சர் லதா அவர்களோடு பயிற்சியில் சேர்ந்துக் கொள்கிறார். பல தவறுகளைச் செய்து வண்டியை ஓட்டும் லதா டீச்சருக்கு பொறுமையுடன் சொல்லிக்கொடுக்கிறான் ராமகிருஷ்ணன். பயிற்சி முடிந்ததும், லதா தங்களது திருமண வாழ்க்கையின் இருபத்தைந்தாவது ஆண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்றும் அதற்கான ஒரு போட்டோவைக் கொடுத்து பத்திரிக்கையில் போடவேண்டும் என்றும் ராமகிருஷ்ணனைக் கேட்டுக்கொள்கிறாள். ரவிச்சந்திரனுக்கு அது பிடிக்கவில்லை.
ராமகிருஷ்ணன் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறான். பிறகு அறிவுஜீவிகளுக்கு வாழ்க்கையைப் பற்றி அதிகம் தெரியாது என்கிறான். ரவிச்சந்திரன் அதைப் பற்றி யோசிக்கிறான். ராமகிருஷ்ணன் கார் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கவேண்டும் என்று கூறுகிறான். திடீரென ஒரு கார் மோதவந்த நிலையில், நிலைகுலைந்து ரவிச்சந்திரன் ஒரு மரத்தில் இடித்துவிட, அதை மெக்கானிக்கிடம் கொடுத்து விட்டு இருவரும் மது அருந்த உட்கார்கிறார்கள்.
அப்பொழுது ராமகிருஷ்ணன் சொல்கிறான். ஒவ்வொருத்தருக்கும் அவுங்க அவுங்க ரோடு அளந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில மட்டுமே ஓட்டினால் பத்தாதா? எனக் கேட்கிறான். அதைச் செய்யவேண்டும், இதைச் செய்யவேண்டும் என்று பறக்கக் கூடாது. ஒருவரால் என்ன முடிகிறதோ அதை ஒழுங்காகச் செய்து கொண்டு போனால் போதும் என்கிற புரிதல் வருகிறது.
நாற்பத்தைந்து வயதிற்குப் பிறகு தாம்பத்யத்தை விட புரிதலே தேவை என்றும், தினமும் உழைத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியதும் தூங்கிப் போய்விடுவதாகவும், விழித்துப் பார்க்கும் போது மனைவி பாயின் ஒரு மூலையில் படுத்துக் கொண்டிருப்பதாகவும், அவளையேப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லுகிற இடத்தில் ஓர் உவமை சொல்லப்படுகிறது. அசையாமல் தனிமையில் துலங்கும் ஓர் ஏரியை, யாருமில்லாத ஓர் இடத்தில் ஒருவன் வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பது போல அவன் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தானாம்.
சில நாட்களுக்குப் பிறகு, ரவிச்சந்திரனின் லைசென்ஸ் வருகிறது. அதை ராமகிருஷ்ணனின் வீட்டிற்கு வந்து வாங்கிப் போகிறாள் ரவிச்சந்திரனின் மனைவி என்று கதை முடிகிறது. ஆம்! ரவிச்சந்திரன் மனம் மாறி, தன் மனைவியை அழைத்துக்கொண்டிருக்கிறான் என்று வாசகன் முடிவு செய்து கொள்கிறான்.
********
ஒரு புகார் எழுத்தாளனின் மன உளைச்சல்கள்
கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பன் ராஜீவ், பல ஆண்டுகளுக்குப் பிறகு தொலைபேசியில் பேசி, ஓரிடத்தில் சந்திக்கக்கேட்டு, இவன் அங்கு போய் நிற்கிறான். பைக்கில் வந்தான் ராஜீவ். கைகுலுக்கலுக்காக இவன் கை நீட்டுகிறான். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் ராஜீவு ஓர் உணர்வில்லாமல் கை கொடுக்கிறான். அது ரொம்ப நாளாக ஐஸ்பெட்டியில் பத்திரப்படுத்திய கரம் ஒன்றை வெளியே எடுத்து தருவது போல் இருந்ததாம்!
அவனைப் பின்னே உட்கார வைத்துக் கொண்டு விரைவாகப் போகிறான். மெதுவாகப் போ என்று சொன்ன பிறகும் கேட்காமல் ராஜீவ் முனையைக் கூராக்கிய பென்சிலால் எழுதுவது போல் வண்டியை ஓட்டினானாம்! இடையில் ஏடிஎம் கவுண்டர் அருகே நிறுத்தி கொஞ்சம் பணம் எடுத்துக்கொள்கிறான். ஒரு பிரிபேய்டு சிம்கார்டு வாங்கிக் கொண்டான். போஸ்ட்பேய்டு வாங்கினால் அதிகமாக பேசச் சொல்லும் என்றும் அது நஷ்டம் என்றும் கூறினான்.
ஒரு ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்து இன்டர்நெட் கஃபேக்குள் செல்கிறார்கள். அவன் ஒரு பெண்ணோடு சாட் செய்கிறான். இவன் சும்மா உட்கார்ந்திருக்கிறான். பிறகு சாப்பிடலாமா என்று கேட்டு பர்கர் வாங்கிச் சாப்பிடுகிறான். தன் விசிட்டிங் கார்டை ராஜீவ் இவனிடம் கொடுக்கிறான். திரும்ப சந்தித்த இடத்திற்கே திரும்பும் வழியில், ஒரு சினிமா தியேட்டரிலிருந்து நிறைய ஆட்கள் வர, ராஜீவ் சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு ஒரு பெட்டிக்கடைப் பக்கம் போகிறான்.
மேற்சொன்னதையெல்லாம் போலீஸிடம் தெரிவித்து விட்டு, அதற்குப் பிறகு அவன் வரவேயில்லை என இவன் நிலமையை விளக்குகிறான். போலீஸ் அவனையே புகாரை எழுதச் சொல்கிறார். அவன் எழுதிக் கொடுக்கிறான். புகாரை சுவாரஸ்யமாக எழுதுவதாக போலீஸ் சொல்கிறார். கைபேசி எண் எடுக்கப்படவில்லை என்றும் வீட்டு எண்ணில் ஒரு பெண்மணி பேசினார் என்றும் இரண்டு வாரமாக தன் பிள்ளை ராஜீவைக் காணவில்லை என்றும் ஏதாவது இவனுக்குத் தெரியுமா என்றும் அவர்கள் கேட்டதாக எழுதுகிறான். ராஜீவைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று புகாரை முடிக்கிறான்.
போலீஸ் புகாரை வாங்கி கோப்புக்குள் வைத்துக்கொள்கிறார். காணாமல் போனவர்களைப் பற்றிய புகார்களை போலீஸ் ஸ்டேஷனில் ஓர் அறைக்குள் வைத்திருக்கிறார்கள். பழமையான காகிதங்களைக் கெட்டியான உறைகளுக்குள் அடக்கம் செய்யப்பட்டது போல வைத்திருக்கிறார்கள். அவைகளைத் தட்டி எடுக்கும் போது பூச்சிகள் பறக்கின்றன.அதில் எழுத்துக்கள் இருந்த இடத்தில் வெறும் அடையாளங்கள் தான் இருக்கின்றன. இருந்த எழுத்துக்கள் எல்லாம் பூச்சிகளாக மாறி பறந்தன.
பல வருடங்களாக புகார்களை வாங்கி கோப்புக்குள் வைத்து அறையில் பூட்டும் போலீஸ், ‘ஒவ்வொரு மனிதனும் ஒரு புகார் தான்’ என்று சொல்லி படுக்கப்போய்விட்டார். இவன் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்ததும் கைபேசி அழைக்கிறது.
‘நான் தான் ராஜீவ் பேசறேன். ஒங்களோட கல்லூரியில படிச்சேன்’ என்று சொல்வதில் கதை நிறைவடைகிறது.
எழுத்துக்கள் எல்லாம் பூச்சிகளாக மாறி பறந்தனவோ என்றும் கதாசிரியர் எழுதுகிறார்.
*********
கிழி
அவனுக்கு அரசாங்க வேலையில் சேர அழைப்பு வருகிறது. இவனோ ஒரு கொலைகாரன். கொலை செய்து விட்டு இந்த அரசாங்க வேலையில் சேரலாமா என்று குழப்பத்தில் இருக்கிறான் இவன். முகுந்தனைத் தான் இவன் கொலை செய்திருந்தான். பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. சரி! கொலை செய்த தருணத்திற்குப் போவோம் என்றுதான் கதைத் துவங்குகிறது.
அவன் ஓர் எழுத்தாளன். ஓர் இலக்கியக் கூடுகையில், பெண்களை வெறும் உடம்பாகப் பார்க்கக்கூடாது என்கிறப் பொருளில் ஒரு கவிதையை வாசித்து விட்டு, அப்படிப் பார்க்கின்ற யாரைப்பார்த்தாலும் தீர்த்துக் கட்டும் மனநிலையில், ரயில் ஏறிய போது தான், ரயிலில் முகுந்தனை இவன் சந்திக்கிறான். சமூகத்தின் மேல் உள்ள கோபத்தால் டிக்கெட் எடுக்காமல் ஏறிய இவன், மதுவையும் குடித்துக் கொள்கிறான். ரயிலின் கழிவறைச் சுவரில் கிறுக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்கச் சிந்தனையில் வெளியான படங்களின் மீது குத்துவிடுகிறான். ரயில் ஒரு ஸ்டேஷனில் நிற்கிறது.
அங்கு தான் முகுந்தன் ஏறுகிறான். வழக்கமாக ரயிலில் செல்லும் பயணி. அவன் செய்தித்தாளைப் படிக்கிறான். லாட்டரிசீட்டு எண் இருக்கிறதா என்று பார்க்கிறான். தற்செயலாக முகந்தனின் கால் இவன் காலில் பட்டதும் சாரி சார் என்கிறான். இவன் கதவருகே காற்று வாங்கிக்கொண்டிருக்கும் போது, முகுந்தன் கழிவறைக்குச் சென்று திரும்பி, இவனிடம் நேரம் கேட்டுவிட்டு, ஒரு சிகரெட் வாங்கி பற்றவைத்துக் கொள்கிறான்.
தன் வாழ்க்கையைப் பற்றி கூறுகிறான். வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ் பிடித்து, அலுவலகம் செல்லும் கசப்பையும், மனைவி வீட்டிலிருந்து கிடைத்த சிறு நிலத்தில் வீடு கட்டியதையும், இரு பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதையும், மனைவியின் கால்முட்டி வாயுத் தொல்லையையும் சொல்லி முடித்தான். சம்பளத்தில் பாதி லோன் என்று போய்விடுகிறது என்றும் ஏதோ வாழ்க்கை ஓடுகிறது என்றும் சொன்னான். பழக்கமில்லாத இவனிடத்தில் முகுந்தன் தன் சோகங்களைக் கொட்டினான்.
முகுந்தன் தன் உள்ளத் துயரங்களைப் பட்டியலிட்டுவிட்டு, சிகரெட்டை ஊதும் போது வெளி வருகின்ற புகை, நெஞ்சில் உள்ள துயரங்களின் மீது சிகரெட்டைத் தூக்கியெறிந்து அது பற்றி எரிவதால் வருகின்ற புகையோ? நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவதும், தூங்குவதும், கவலைகளும், இளமையின் ஏக்கங்களும் சேர்ந்து முகுந்தனின் வயிற்றில் குடல்புண்ணாக அசையாமல் கிடக்கிறதாக இவன் கற்பனை செய்து கொள்கிறான்.
இருந்தாலும் இவன் ஏன் முகுந்தனைக் கொன்றான்?
முகுந்தனின் வாயிலிருந்து வந்த அந்த ஒற்றைச் சொல்தான் அதற்குக் காரணம்.
முகுந்தனின் கஷ்டங்களையும் கவலைகளையும் கேட்டவுடன், அளவுகடந்த அனுதாபம் முகுந்தன் மேல் அவனுக்கு ஏற்பட்டது. முகுந்தன் தொடர்ந்தான். இந்தக் கஷ்டங்களையெல்லாம் மறக்க எனக்கு ஒரே வழிதான் தெரியும். மனைவி பரிமாறும் இரவு உணவை நான் சாப்பிடுவதற்குள், அவள் குளிப்பாள். நான் சாப்பிட்டுவிட்டு அவளை இழுத்துப் போட்டு ஒரு கிழி கிழிப்பேன். (மனைவி முட்டி வலியோடு இழுத்து இழுத்து நடப்பது இவனின் மனத்திரைக்குள் ஓடும்.) காலையில் நான்கு மணிக்கு கையில் டீயோட அவள் எழுப்ப வரும்போது மறுபடி ஒருதடவை. அதுதான் சுகம்.
கிழி என்ற வார்த்தை, முகுந்தனின் வாயிலிருந்து வந்ததும் நீள வாக்கில் வெட்டிக் கிழிக்கப்பட்ட உடலோடு ஒரு பெண் கூக்குரலிட்டு அழுவது இவனுக்குக் கேட்கிறது. (உருவகம்). இவனுக்கு இரத்தம் உறைந்து போகிறது. ரயில் சக்கரங்களில் மாட்டி அறுந்து போன வாயு வியாதி கொண்ட ஒரு கால் இவனது முகத்தில் வந்து விழுகிறது. (உருவகம்). இவன் முகுந்தனின் நெஞ்சில் உதைத்து ரயிலிலிருந்து தள்ளிவிடுகிறான். முகந்தனின் இரத்தம் கருங்கற்களில் பட்டு தெரிக்கிறது.
ஏன் முகுந்தனைக் கொன்றேன் என இவனுக்குப் புரியவில்லை. ஒருவேளை வாயுத் தொல்லையால் முட்டி வலியோடு இருந்த காலைப் பற்றி இவனுக்குள் இருந்த கவிஞன் கவலைப்பட்டதாலோ? என்று கதை முடிவடைகிறது.
வாயில்லாப் பூச்சிகளாக எத்தனைப் பெண்கள் இன்னும் இருக்கிறார்கள்!
ஆணாதிக்க மமதையோடு எத்தனை ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள்!!
*********
பாக்கு பொறுக்குவபர்கள்
இவன் ஷேவிங் செய்யத் தயாராகும் போது இவனைப் பார்க்க ஒருவர் வந்திருப்பதாக அவன் மனைவி கூற, துடைத்துவிட்டு வந்து வெளியே பார்த்தால் சந்துரு அண்ணன். இருபது வருடங்களுக்கு முன் காணாமல் போன சந்துரு அண்ணன். அவரது மூக்கு, கர்வமாக படம் எடுத்து கொத்தத் தயாராக இருக்கும் பாம்பு போல இருந்தது.
சந்துரு அண்ணன் எப்படிப்பட்டவர்? நீர்வாழ்ப் பூச்சிகள் தாறுமாறாக எதையாவது எழுதிக் கொண்டேயிருந்தும், எழுதியது எதுவும் புரியாமல் போய், வெறுமை சூழுந்து, ஒரு கட்டத்தில் கோடையில் வற்றிப் போகும் சிறிய குட்டையாக மாறிப்போவது போல் ஆகிப் போனவர் தான் சந்துரு அண்ணன். இருபது வருடங்களுக்கு முன், ஒட்டை கால்சட்டையோடு, சந்துரு என்ற வேலையாளின் கையைப் பிடித்து திரிந்தவன் தான் இவன். ஓடிப் போகும் போது வைத்திருந்த மஞ்சள் பை மட்டும் அவரோடு கூட வந்திருக்கிறது. சந்துருவின் கண்களுக்குள் காற்றில் பாக்கு மரங்கள் அசைந்துக்கொண்டிருந்தன.
நினைவுகள் பின்னோக்கி நகர்கின்றன.
இவனது வீட்டின் நெல் குத்தும் தனி அறையில் படுத்து உறங்குபவர் சந்துரு அண்ணன். களிமண் கோழிக்கூட்டில், சாக்குப் பையும், கோரைப்பாயும் விரித்து அதில் உறங்குவார். பொழுது விடிவதற்குள் இவன் தாத்தாவும், சந்துருவும், இவனும் பாக்குப் பொறுக்கப் போவார்கள். இவர்கள் பொறுக்கிப் போடுவதற்குள், தாத்தா கோரைப்புற்களுக்கிடையே இறங்கி, குளித்து கோவணத்தோடு வெளியேறும் போது, நேற்று இரவு நண்டுகளை உண்டு கொழுத்த கொக்கு ஒன்று அவரின் குறுக்கே பறந்து போவது, பள்ளியில் கரும்பலகையில் வெள்ளை சாக்பீஸால் வரைந்து வெண்கீற்று போல இருக்கிறது.
அந்த சந்துரு அண்ணனை வரவேற்று, சாப்பிட வைக்கிறான். இத்தனை நாளா எங்க போயிருந்தீங்க என்ற கேள்விக்கு ஒரு சிரிப்பு. உங்க குடும்பமெல்லாம் என்ற கேள்விக்கு ஒரு மௌனம். தான் சாப்பிட்ட தட்டை தானே கழுவி கவிழ்த்தப் பிறகு, திண்ணைக்குச் சென்று ஒரு பீடி குடிக்கிறார் சந்துரு அண்ணன். இவன் வீட்டிலும் ஒரு தோப்பு இருக்கிறது. இப்படி இந்த தோப்பு கவனிப்பாரற்றுக் கிடக்கிறதே என்று கவலை சந்துருவின் முகத்தில் தெரிகிறது.
தாத்தா இறந்து பிறகு இவனது அம்மாவுக்கு அந்த தோப்பு வருகிறது. அம்மா அக்காவோடு ஷார்ஜாவில் தங்கிவிட, சிறிய பதிப்பகம் வைத்திருக்கும் இவனுக்கு தோப்பைக் கவனிக்க நேரம் இல்லை. அவர் இன்றைக்குப் போய்விடுவாரா என்று மனைவி கேட்க தெரியாது என்று பதிலளித்த இவனை முறைத்துப் பார்த்துவிட்டு போய்விடுகிறார் மனைவி.
பீடியைக் குடித்து முடித்ததும், புதர்களை விலக்கிக் கொண்டு, தோப்புக்குள் நுழைந்து, கிணற்றடிக்குச் செல்கிறார் சந்துரு. கிணறு முழுக்க பாசி. எப்பொழுதாவது பாக்கு மட்டை கிணற்றில் விழுந்து பாசியை விலக்கும். பிறகு பாசி மூடிக்கொள்ளும். அத்தோடு பாக்குமரமும் கிணறும் நடத்தும் உரையாடல் முடியும்.
இவன் வேலையை முடித்து விட்டு மாலை வரும்போது, காலையில் மனைவியின் முகத்தில் இருந்த எரிச்சல் இல்லாமல் மகிழ்ச்சி தெரிந்தது. இவனை அழைத்துக்கொண்டு நெல் குத்தும் அறைக்குச் செல்கிறாள். அங்கே சந்துரு படுத்திருக்கிறார். மஞ்சள் பை சுவரில் மாட்டியிருக்கிறது. நாள் முழுக்கத் தோட்டத்தைச் சுத்தப்படுத்தியிருக்கிறார் சந்துரு.
ஒரு மாதம் ஓடிவிடுகிறது. தோட்டம் சுத்தமாக மாறிவிட்டது. பழைய மரங்கள் வெட்டப்பட்டு புதிய கன்றுகள் நடப்பட்டுவிட்டன. டீசல் மோட்டார் மீண்டும் வேலை செய்தது. கிணற்றில் தவளைகள் குதித்து விளையாடுகின்றன. ஏதாவது கூலி பேசிவிடலாம் என்று இவன் பேசிய போது, சந்துரு ஒன்றும் சொல்லாமல் தோட்டக்கருவிகளோடு வேலை செய்யக் கிளம்பிவிடுகிறார்.
ஒரு நாள் இரவு உணவின் போது, இந்த சந்துரு அண்ணன் எதையோ திருடிவிட்டதால் தான் தாத்தா இவரை விரட்டிவிட்டதாக அக்கம் பக்கத்தில் பேசுகிறார்களே அது உண்மையா? என்று இவன் மனைவி கேட்கிறாள். ரொம்ப நம்பிடாதீங்க. நீங்க இல்லாத போது என் தலையில கல்லை போட்டுட்டு இங்க உள்ளதையெல்லாம் எடுத்துட்டு போயிடப்போறாரு. கூலி வாங்காம வேலை செய்றதப் பாத்தா சந்தேகமா இருக்கு என்றாள் இவன் மனைவி.
அன்றிரவு இவனுக்குத் தூக்கம் வரவில்லை. பழைய நினைவில் மூழ்கிப்போகிறான். உள்ளூர் போலீஸ் ஒருவன், சந்துருவை துளி துணியில்லாமல், பாக்குமரக் குச்சியின் கொத்தால் அடித்துத் துவைக்கிறான். சந்துருவின் அழுகைக்குரல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. திருட்டுப்பயல் என்று தாத்தாவும் அம்மாவும் திட்டுகின்றனர். சந்துருவின் இடுப்பில் போலீஸ் ஓர் உதை விட ‘அம்மா…’ என சந்துரு கத்த இவன் கண்களை மூடிக்கொண்டான். அதற்குப் பிறகு இப்பொழுது தான் பார்க்கிறான்.
அப்படி இப்படி என்று ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. தன் தலையில் பலமான அடி எப்பொழுது விழுமோ என்று பயந்தபடியே இவன் மனைவியும் அந்த ஐந்து வருடங்களைக் கடந்து விட்டாள். சந்துருவின் கோரைப்பாய் கோழிக்கூட்டு மேலேயே இருந்தது.
புத்தக வியாபாரத்தில் இவனுக்கு நஷ்டம் வருகிறது. அதே நேரம் சந்துரு வைத்துக் காப்பாற்றிய பாக்கு மரங்களில் பாக்கு பழுக்கத் துவங்கிவிட்டன. கீழே விழுந்து கிடந்த பாக்கு ஒன்றை எடுத்துப் பார்த்த சந்துரு, முத்திடுச்சி, பாக்கை உறிக்க ஆள் ஏற்பாடு பண்ணுங்க என்றார்.
அடுத்த நாள் மனைவி சந்துரு அண்ணாவைக் காணுங்க என்று இவனை எழுப்பினாள். பாக்கு பறிக்க ஆட்கள் வந்தார்கள். பறித்த பாக்குகளைக் குவித்து வைத்தார்கள். அன்று இரவு, அப்படி சந்துரு அண்ணன் என்ன தான் திருடினார் என்று அவன் மனைவி கேட்டாள். ஒரு குலைப் பாக்கு என்றான்.
இன்று ஒரு தோப்பு முழுவதும் பாக்கு விளைந்து கிடக்கிறது!!
ஒரு குலைப்பாக்கு என்றாலும் திருட்டு திருட்டுதான். ஆனால் அதற்குப் பரிகாரமாக, பத்துவருடங்களுக்குப் பின்பு வந்து, கூலி வாங்காமல் தோப்பையே சரிசெய்து, இவன் குடும்பத்தை கடனிலிருந்து விடுவித்து சென்று விடுகிறார் சந்துரு. தவறு செய்தாலும் அதைச் சரி செய்துவிட முயற்சி செய்வதே மேல்.
*********
ஒரு ரயில் பயணத்தில்…
இரயிலடியில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து இரயிலுக்காகக் காத்திருக்கிறார்கள் அவனும் அவளும். அவன் சிகரெட் பற்ற வைத்து புகையை விட்டுக்கொண்டிருக்கிறான். உலகத்திலேயே மிக ஆழமான முத்தம் எது என அவன் கேட்கிறான். இரவு பெய்த மழைக்குப்பிறகு இலைகளின் மீது வெளிச்சம் வீழ்வதா என்று அவள் கேட்கிறாள். இல்லை சிகரெட்டும் புகையும் சேர்ந்து கொடுக்கும் முத்தம் தான் என்று அவன் கூறுகிறான். சிகரெட் மகுடி வாசிக்கப்படும் போது புகைப் பாம்பின் ஆழ்மன அமைதி சுற்றி வரிந்து மெதுவாக அவிழ்ந்து போகிறது.
இரயில் வருகிறது. கூட்டம் குறைவாயிருந்த பெட்டியில் ஏறி, ஒதுக்குப்புறமாய் ஓர் இடம் பிடித்து, அவளது கைப்பையை பெர்த்தின் மேலே வைத்துவிட்டு அவள் தோளில் தன் மூச்சு படுவது போல உட்கார்ந்தான். வண்டி சென்றது. அடுத்த ஸ்டேஷனில் நின்றது. யாரும் வந்துவிடுவார்களோ என்று அவன் அச்சப்பட்டான்.
நடைபாதையில் ஒரே ஒருவர் செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தார். வண்டி அசையத் துவங்கிய போது அவர் இரண்டு கைகளிலும் இரண்டு பெட்டிகளோடும், ஓர் உப்பிய பையோடும், ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு அந்தப் பெட்டியில் ஏறினார். அவரின் சாகசத்தைக் கண்டு பெட்டியில் இருந்த பயணிகள் சற்றே நடுங்கினர். லக்கேஜை அந்தப் பெண்ணின் பக்கத்தில் வைத்துவிட்டு, எதிரே அந்தப் பெரியவரும் சிறுவனும் அமர்ந்தனர். அவனுக்கு பெருத்த ஏமாற்றம்.
அப்பொழுது அவன் போன் ஒலித்து, அவளுக்கு முத்தமிட்டுவிட்டாயா என்ற குறுஞ்செய்தி வந்ததை அவள் பார்த்து, யாரது? என்னை முத்தமிடப்போகிறேன் என்று யாரிடம் சொன்னாய் என்று கேட்கிறாள். நண்பன் ஒருவனின் பெயரைச் சொல்லி ஆம் என்கிறான். அவள் முகம் கறுத்து திரும்பிக்கொள்ள, இவன் ஒரு பத்திரிக்கையைப் புரட்டினான்.
பெரியவரோடு வந்த அந்த கருப்பு நிறச் சிறுவன் துறுதுறு’வென இருந்தான். அந்தப் பெண்ணையும், இளைஞனையும் ஓரக்கண்ணால் பார்த்தான். பெரியவர் ஏதோ கால்குலேட்டரில் செய்து கொண்டிருந்தார். இளைஞன் கோவித்துக் கொண்டதை அறிந்த அவள் நமக்கு அந்தக் கருப்பனைப் போல ஓர் ஆண்பிள்ளை போதும், இல்லையா? என்று கேட்டும் அவன் கோபம் தணியவில்லை.
அதற்குள் அந்தச் சிறுவன் ஜன்னலைப் பிடித்து தலைகீழாகத் தொங்கி விளையாடிக்கொண்டிருந்தான். ஜாக்கிரதை என்று சொல்லிவிட்டு அந்தப் பெரியவர் கால்குலேட்டரில் மூழ்கியிருந்தார். அந்தப் பையன் இரயிலின் கதவு வரை செல்வதும், பெட்டியின் அடுத்த முடிவு வரை ஓடுவதும், மறுபடி வந்து பெர்த் மேல் ஏறி குதிப்பதுமாக இருந்தான்.
சிறிது நேரத்தில் அந்தச் சிறுவனை அழைத்துக்கொண்டு ஒரு பயணி அவரிடம் வந்து, சிறுவன் கதவருகில் நின்று மழை நீரை வாயில் பிடிப்பதாகவும், மிகுந்த சேட்டை செய்தவதாகவும் கூறி விடுவார். அந்தப் பெரியவர் கண்டுகொள்ளமாட்டார்.
நம்ம பையனை கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடலாம் என்று அவள் சொல்ல, நீயும் உன் கிராமத்து பள்ளியும் என்று கூறி, மெதுவாக அவளது கை கோர்த்து, தன் உதடுகளை அவள் பக்கம் கொண்டு செல்ல, அவள் பெர்த்திலிருந்து தொங்கிக்கொண்டே அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனை நோக்கி கைகளை நீட்ட, இளைஞனுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வரும்.
பெரியர் சிறுவனை சாப்பிட அழைப்பார். இரண்டு பொட்டலங்களை அவிழ்த்ததும், அதில் இருந்து வந்த மணத்தால், எனக்கு வாயில் எச்சி ஊறுகிறது என அவள் சொல்ல, பேசாமல் இரு என்று அவன் கடிந்துக்கொள்வான். சிறுவன் அன்னப்பறவை வந்தால் தான் சாப்பிடுவேன் என்றதனால், பெரியவர் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்து, காவல்காரன் அவதாரம் எடுத்துக், கண்களை மூடிக்கொள்ள, அவர் கண்களைத் திறப்பதற்குள், சிறுவன் அன்னப்பறவையென அவைகளை அள்ளி வாயில் போட்டுக்கொள்வான்.
இந்த அன்னப்பறவை விளையாட்டிலேயே அவன் சாப்பாடு முழுவதையும் சாப்பிடுவதை அவள் பார்த்துக்கொண்டேயிருப்பாள். காவல்காரனை ஏமாற்றிய மகிழ்ச்சியில், அலகுகளை மரக் கொம்பில் உரசி, இறக்கைகளை படபடவென உதறி, மழைமேகங்களுக்கப்பால் பறந்து போனது அன்னப்பறவை.
அந்தப் பெரியர் இடத்தைச் சுத்தம் செய்தார். பிறகு ஒரு சிகரெட்டை இளைஞனிடம் நீட்டி வேணுமா என்று கேட்க, அவன் வேண்டாம் என்று மறுத்ததும், அவர் சிகரெட்டைப் பிடித்து, டேப்ரெக்கார்டரில் ஒரு பாட்டை மிகமிக மெதுவாகப் போட்டுக் கேட்டார். அவள் ஏதோ தனிமையில் இருப்பதாக உணர்வாள்.
அப்பொழுது ஒரு பார்வையில்லாத பிச்சைக்காரர் வந்து கையை நீட்ட, அவன் காசு கொடுக்க மறுக்க, அந்தப் பெரியவர் தேடி இருந்த இரண்டு ரூபாயை அந்தப் பிச்சைக்காரனிடம் கொடுத்தார். தெரிந்தோ தெரியாமலோ எதையும் யாரையும் இம்சைபடுத்தக்கூடாதென்ற மனநிலையில் அவர் இருந்தது அவர் நடவடிக்கையில் தெரிந்தது. சற்றே தூங்கிப் போனார். சிறுவன் எங்கோ விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்பொழுது அந்த இளைஞன் அந்தப் பெண்ணின் முகம் அருகே வர எத்தனிக்கும் போது, எங்கிருந்தோ வந்த சிறுவன் அவர்களிருவருக்கிடையே வந்து விழுந்தான். அப்பொழுது பெரியவர் எழுந்து, ஜன்னல் வழியே கைகளை நீட்டி மழையை ரசித்தார். இளைஞனுக்கு கோபம் வந்தது. எங்கேயோ சென்றுவிட்டு,
திடீரென ஓடிவந்து பெர்த்தில் ஏறி, அபாய சங்கிலியை இழுத்துவிட்டான் சிறுவன். பெரியவர் அதிர்ச்சியுற்றார். அவரது கையைப்பிடித்துக்கொண்டு சிறுவன் இரயிலிலிருந்து குதித்து தண்டவாளம் அருகே சென்றான். பலரும் அவ்வழியே சென்றார்கள். நீயும் போய் பாரேன் என்று அவள் சொல்ல, இந்த மழையிலா என்று அவன் மறுத்துவிடுவான்.
யாரும் இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி, நான் உனக்கு முத்தம் கொடுக்கப் போறேன் என்று சொல்லி வலுக்கட்டாயமாக அவன் நெருங்கினான். அவனைப் போர்த்தியிருந்த ஓடு களிமண் சிலையைப் போல உடைந்து, ஒரு கொடிய பசியுடன் விகாரமான மிருகம் வெளிவருவதை அவள் உணர்ந்துவிட்டாள். அவனை அவள் பலமாக தள்ளிவிடுவாள்.
பயணிகள் பெட்டிக்குத் திரும்பி வந்தார்கள். யாரும் தலையை வைத்துவிட்டார்களா? என்று கேட்டாள். இல்லையென்றும் சற்றுமுன் பிச்சை கேட்டு வந்த பார்வையில்லாத கிழவனின் தடி கீழே விழுந்து விட்டதாகவும் அதை எடுத்துக் கொடுக்க, அந்தச் சிறுவன் இரயிலை நிறுத்திவிட்டான் எனவும் அதனால் இரயில்வே அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாகவும் சொன்னார்கள்.
அவள் கைப்பையை எடுத்துக்கொண்டு, இரயிலை விட்டு மழையில் இறங்கினாள். பெரியவரும் சிறுவனும் வருத்தத்தோடு எதிரே வந்தார்கள் இரயில் கிளம்பியது. இளைஞன் என்னாச்சி உனக்கு என்று கேட்டு பின்தொடர, ‘என் குழந்தைக்கு ஒரு நல்ல தகப்பன் வேணும்’ என்று சொல்லி நடக்கிறாள். இரயிலும் இளைஞனும் அவளைக் கடந்து செல்கிறார்கள். மழை நின்றபின் இலைகளில் வெளிச்சம் பரவியது என கதை நிறைவுறுகிறது. இந்தக் கதையின் துவக்கத்தில் எது ஆழமான முத்தம் என்ற கேள்விக்கு இதைத்தான் பதிலாகச் சொல்லியிருப்பாள். கதையை எப்படி முடிக்கிறார் பாருங்கள்!
மனிதாபிமான எளியவர்களும் வக்கிரம் நிறைந்த மனிதர்களும் நிறைந்து உலகமாகவே இருக்கிறது இவ்வுலகம்!
*********
சுவாசம்
கோவித்துக்கொண்டு புவனேஷ்வரில் உள்ள அவர்கள் அம்மா வீட்டுக்குச் சென்ற தோழர் பிகாஷ்ராயின் மனைவி அருணா, அறுபது வயதான பிகாஷிடம், இதுதான் நான் உங்களிடம் வைக்கப்போகும் கடைசி கோரிக்கை எனச் சொல்லி மின்னஞ்சல் அனுப்புவதில் கதைத் தொடங்குகிறது. அந்த மின்னஞ்சலில் என்ன எழுதியிருந்தது?
எதிரிகள் யாருமே இல்லாமல், பிகாஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள ட்ரேட் யூனியன் செக்ரட்டரியாக பதின்மூன்று வருடம் இருப்பவன். வெறும் கூலி உயர்வு என்பதைவிட, சமூக மாற்றத்திற்காக தொழிலாளர்களை மாற்றியவன். தொழிற்சாலை வளாகத்திற்குள் வனத்தை உருவாக்கியவன். சாதி மதம் பாராது எல்லோரும் தன் வீட்டிற்கு வந்து சாப்பிட அனுமதிப்பவன்.
ஆனால் இப்பொழுது கோரிக்கை வைப்பது கம்யூனிஸ்ட் தோழரிடம் அல்ல மாறாக மிகத் தீவிரமாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட கணவனிடம் என்று சொல்லி அந்தக் கோரிக்கையை முன்வைக்கிறாள். ஒரு கட்சி உங்களை ருசித்துத் தின்றுத் தீர்க்கிறது. நடந்து போகையில் உங்கள் உடல் ஒரு புராதனமான நினைவு மண்டபத்தைப் போல நொறுங்கிவிழும் அதனால் அந்த செக்ரட்டரி பதவியை விட்டுவிட்டு உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதே அந்தக் கோரிக்கை.
சுருக்கமாக, இதுதான் அந்த மின்னஞ்சலில் இருந்தது.
இரண்டு ஆண்டுகளாக அருணா இதைச் சொல்லி வருகிறாள். ஆனால் நடக்கவில்லை. யூனியன் செக்ரட்டரியாக வர யாரும் முன்வரவில்லை. திரும்பத் திரும்ப பிகாஷையே அந்த நாற்காலியில் உட்கார வைக்கிறார்கள். சென்ற தடவை அந்தப்பதவியோடு வீட்டிற்குத் திரும்பிய நாளில், இரவு உணவு சமயத்தில் அருணா கோபப்பட்டு கேட்டாள். அருணாவின் முகம் எதிரில் உள்ள நாற்காலியிலிருந்து அவரை நோக்கி நேராக ஓர் அரிவாள் போல கடந்து வந்தது. கட்சிக்காக அறுபது வருஷம் கொடுத்திட்டீங்க. அஞ்சு வருஷம் எனக்காகக் கொடுங்க என்றும் அருணா கேட்டுப் பார்த்துவிட்டாள்.
மின்னஞ்சலைப் படித்துவிட்டு, தொழிற்சாலை வளாகத்தில் மரங்களைப் பார்த்தபடி நிற்கிறான். அருணா சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்று மனதிற்குப் படுகிறது. கட்சியின் கட்டமைப்பு முன்னே இருந்த மாதிரி இப்பொழுது இல்லை. பலதிசைகளிலிருந்து வந்த கசிவுகள் இந்த இயக்கத்தை எப்பொழுது வேண்டுமென்றாலும் நொறுங்கிவிடக்கூடிய அணைக்கட்டாக மாற்றிவிட்டிருந்தது.
தனக்குப் பதவி வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தாலும், கேட்கமாட்டேன் என்கிறார்கள். நீ இல்லையென்றால் இந்த இயக்கம் குட்டிச்சுவராகிவிடும் என்று சொல்கிறார்கள். சே குவாராவைப் பார். அவர் ஆஸ்துமாவோடு புரட்சிகர இயக்கத்தில் இல்லையா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இருந்தாலும் இந்த மின்னஞ்சலைப் படித்து விட்டு, இனி இந்த செக்ரட்டரி பதவியில் இருக்கப் போவதில்லை என்று முடிவெடித்துவிட்டார். ஆண்டு மாநாட்டில் செயல் பட்டியலை படிக்கும் போதே இன்ஹேலரை இரண்டு முறை பயன்படுத்திவிட்டார். தன் சொந்த நுரையீரலை தன் பையிலேயே போட்டு நடப்பவன் போல் இருந்தார் அவர். படித்து முடித்ததும் தன் ராஜினாமா விஷயத்தை அறிவித்து விட்டு புவனேஷ்வருக்குப் போக ரயில் ஏறிவிடுகிறார்.
வங்க தேசத்தின் தொலைதூர கிராமங்களிலிருந்து வரும் எளிய விவசாயிகள் நிறைய பேர் ரயிலில் இருந்தனர். கேரளாவிலுள்ள ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு அவர்களைக் கொண்டு செல்கிறார்கள் என்பது புரிந்தது. முப்பது வருஷம் தன் மாநிலத்தை கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டும் இந்த விவசாயிகளுக்கு இந்த நிலமையா என்று நினைக்கும் போது சாப்பிடக்கூட மனது வரவில்லை.
அந்த விவசாயிகள் இரு கால்களையும் மடக்கி குந்தியிருந்தார்கள். தங்கள் சொந்த ஊரின் நினைவுகள் அவர்களின் வெடித்த கால் நகங்களுக்கிடையில் சேறாக ஒட்டிக்கிடந்ததை அவர் கவனிக்கிறார். புவனேஷ்வரில் இறங்கும் போது தான் வந்து அழைத்துப் போவதாக அருணா போன் செய்தாள்.
அந்த நேரம் மலையாளி காண்ட்ராக்டர் ஒருவர் அலைபேசியில் சத்தமாக யாரையோ திட்டிக்கொண்டே வந்தார். எல்லா விவசாயிகளும் தங்கள் முதலாளியைக் கண்டதும் எழுந்து நின்றனர். ஆனால் அதை அவர் கண்டு கொள்ளவேயில்லை. அலைபேசியில் திட்டிக்கொண்டேயிருந்தார். விகாஸிடம் கைகுலுக்க கைநீட்டினார். அந்த நட்பைப் பாராட்ட விகாஸூக்குப் பிடிக்கவில்லை. அவனிடமிருந்து மது வாடை வேறு வீசியது.
கேரளா காட்ஸ் ஓன் கன்ட்ரி என்றும், மெத்தப் படித்தவர்கள் என்றும், அதிக சுத்தமானவர்கள் என்றும் பீற்றிக்கொண்டான். அழுக்காய் இருந்தத் தொழிலாளிகளை அலட்சியமாகப் பார்த்தான். விகாஸூன் பையில் இருந்த அரிவாள் சுத்தியல் படத்தைப் பார்த்துவிட்டு கம்யூனிஸ்டா என்று கேட்டான். தானும் கம்யூனிஸ்ட் தான் என்று சொல்லிவிட்டு தன் இடத்திற்குச் சென்று விட்டான்.
விகாஸூக்கு எதிர் பெட்டில் இருந்த ஒரு தொழிலாளி பையன் (அவன் பெயர் பூபன் என்று பின்னால் தெரிய வரும்) சாப்பிடாமல் வாட்டமாக இருப்பதைக் கவனித்த விகாஸ் சாப்பாடு வேண்டுமா என்று கேட்க அவன் மறுத்துவிடுகிறான். அவனோடு பேச்சுக் கொடுத்ததில் அவன் ஊர் நந்திகிராம் என்றும், அவன் குடும்பத்தில் இருந்தவர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள் என்றும், கூலி வேலைக்காக கேரளா செல்கிறான் என்றும் தெரிகிறது.
2007 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதியன்று, வங்காளத்தில் உள்ள நந்திகிராம் என்கிற மீன்பிடி கிராமத்தில் போலீஸ் போலீஸ்காரர்களை நோக்கிச் சுட்டதில், இரண்டு பெண்கள் உட்பட பதினான்கு பேர் கொலை செய்யப்பட்டனர். ஒரு இரசாயன தொழிற்சாலை அமைக்க இடதுசாரியினர் நிலத்தை அபகரிக்கின்றனர் என்கிற செய்திக்கு எதிராகத்தான் அந்த மக்கள் போராட்டம் நடத்தினர். பதினான்கு பேர் கொலைசெய்யப்பட்ட பிறகு போராட்டம் தீவிரமடைந்து ஏறக்குறைய ஒன்றரை வருடம் போராட்டம் நீடித்து இடதுசாரியினர் 2011 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகல அது காரணமாக அமைந்தது.
இந்த நிகழ்வை தரிசிக்கும் வண்ணம், பூபனை நந்திகிராம் கிராமத்திலிருந்து வருவதாகவும், தன் குடும்பத்தினர் அனைவரையும் இழந்ததாகவும் காட்சிப்படுத்துகிறார். அதுமட்டுமல்ல, வெளியிலிருந்து வந்த பனிக்காற்று, இரயில் ஷட்டர்களை வெடிக்குண்டுகள் போல் தாக்குவதாகவும், ரயில் தண்டவாளத்தில் ஒடும் சத்தம் ஆயுதம் ஏந்திய போலீஸீன் சீரணி போல கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்பொழுது விகாஸூக்கு மூச்சு வலிப்பு அதிகமாகிவிட்டது. அதைப்பார்த்த பூபன் கூட பயந்து போகிறான். காற்றடைக்கும் தலையணையை எடுத்து ஊத முயற்சிக்கிறான். முடியவில்லை. பூபன் அதை ஊதிக் கொடுக்கிறான்.
பூபனின் சுவாசம் நிறைந்த அந்தத் தலையணையை வாங்கும் போது அது வெறும் தலையணை இல்லையென்றும் தன்னை நம்பி ஒப்படைக்கும் கவலைகள் நிறைந்த ஒரு வாழ்க்கை தான் என்று உணர்ந்து போது, ஒரு கை நிறைய மணலை அள்ளி வாயில் போட்டது போல் விகாஸின் தொண்டை வறண்டு போகிறது.
விகாஸ் தூங்கிக்கொண்டிருக்கிற தொழிலாளிகளைப் பார்க்கிறான். இதுவரை பொத்திவைத்திருந்த கோபமும் வெறியும் சிலரின் கடைவாய்ப் பல்லில் கிடந்து புகையிலை போல நசுங்குவதைப் பார்க்கிறான்.
பூபன் தன் சுவாசத்தால் ஊதிக்கொடுத்த அந்த தலையணையில் தலைவைத்துப் படுக்க விகாஸ் முயற்சிக்கும் போது, உள்ளேயிருந்த சுவாசக்காற்று பதட்டத்துடன் சுற்றித்திரிந்து, பூதாகரமான புயல்காற்றாக உருமாறி ஒரு சமுத்திரத்தையே கலக்கும் வலிமையோடு வலம் வருவது தெரிகிறது. தலையும் காலும் இல்லாத உடலாக அந்த தலையணை அவனுக்குத் தெரிகிறது.
புவனேஷ்வரில் தனக்காக காத்திருக்கும் அருணைவை மறந்துவிட்டு அந்த தலையணையை வாரி எடுத்து தன் நெஞ்சோடு அணைத்து சசிபூஷணுக்கு போன் செய்து தான் செக்ரட்டரியாக தொடரப்போவதாக அறிவித்துவிடுவதாக கதை நிறைவுறுகிறது.
ஒரு போராளி எப்பொழுதும் ஒரு போராளியாகவே இருக்கிறான்.
சுவாசம் என்று இக்கதைக்கு பெயர் வைத்தது சிறப்பு. விகாஸ்க்கு நுரையீரலில் சுவாசப் பிரச்னை. அதே நேரம் தலையணையில் பூபன் ஊதிக்கொடுத்த சுவாசம், விகாஸை மனம் மாற வைக்கிறது. மனைவி சொல்லும் யதார்த்தத்தை நோக்கி பயணிப்பதா? தன்னைச் சுற்றி நடக்கிற யதார்த்தைப் பார்த்து, தான் கொண்ட கொள்கையிலேயே பயணிப்பதா? இரண்டுக்கும் இடையில் போராடி ஒரு பயணத்தை தேர்ந்தெடுக்கிறான் விகாஸ்.
இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, அருணா போன்ற பெண்கள் போராட்டத்திற்கு பயந்து, புரட்சிக்குப் பயந்து ஓடுபவர்கள் அல்லர். உடலையும் கவனித்துக்கொள்ளவேண்டும், தன் உயிரையும் மதிக்கவேண்டும் என்ற உயரிய உண்மையை உணர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். இல்லையா?
******
சமபந்தி
கோர்ட்டில் பணி புரியும் மூன்று பெண் வழக்கறிஞர்களை அறிமுகப்படுத்துவதில் கதைத் துவங்குகிறது.
ஒன்று சூசன் இம்மானுவல். நடமாடும் ரெஸ்டாரெண்ட் போல பெரிய டிபன் கேரியர் அடுக்கில் உணவு கொண்டுவருபவள். அடிக்கடி அசைவு உணவு அதில் இருக்கும்.
இரண்டாவது ரம்யா நாயர். கைக்குத்தல் அரிசியில் கோவைக்காய் பொரியலும் மிளகாய் வற்றலும் எடுத்து வருவபள்.
மூன்றாவது சங்கீதா நம்பூதிரி. புளிஸ்ஸேரி என்று அழைக்கப்படுகிற மாம்பழக் குழம்பைக்கொண்டு வருபவள்.
கதைத் தொடங்குகின்ற அன்று, சூசனின் பாட்டி வறுத்துத் தந்திருந்த போர்க் வறுவலை எடுத்து வந்திருந்தாள். அவள் டிபன் கேரியரைத் திறந்ததும், பின்கால்களை உதறி குதித்த பன்றிக்குட்டியை பிடித்து நிறுத்தி ரம்யா நாயர் ( கோழி ஆடு என அசைவு உணவு சாப்பிட்டாலும், மாட்டுக்கறி, பன்றிக்கறி போன்றவற்றை தொடாதவர்களென அறியப்பட்டவர்கள் நாயர்கள்) ஒரு துண்டை வாயில் போடுகிறார். சங்கீதா நம்பூதிரி (முழுக்க முழுக்க சைவ உணவை சாப்பிடுபவர்களென அறியப்பட்டவர்கள் நம்பூதிரிகள். இருந்தாலும் நம்பூதிரிகளுக்கிடையேயும் யோகக்ஷேமா என்று அழைக்கக்கூடிய புரட்சியாளர்களும் இருந்திருக்கிறார்கள்) போர்க்கை முடித்துவிடாதீர்கள் இதோ வந்துவிடுகிறேன் என்று கைபேசியில் செய்தி அனுப்புகிறார்.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேஸ் பற்றி சென்றது. நம்பூதிரிச்சி சங்கீதாவின் கட்சிக்காரர் கோபால மேனனுக்கு பத்து வருஷம் தண்டனை கிடைப்பது உறுதி. ஏனென்றால் ஜாதிப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதுக்கும் கொலை முயற்சிக்கும் சேர்த்துல்ல சார்ஜ் பண்ணியிருக்காங்க என்று சூசன் கூறுகிறாள்.
கோபால மேனனின் தோப்புக்கு அருகில் வசிக்கும் காப்பக்குட்டி தான் புகார் கொடுத்திருக்கிறான். காப்பக்குட்டி தூரிக்கூடை வைத்து மீன்பிடிப்பவன். புதுவீடு கட்ட பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை, மேனன் கொஞ்சம் சுற்றி அவர் தோப்பு வழியாகவே வரச் சொல்லியிருக்கலாம். ஆனால் காப்புக்குட்டியின் கொல்லை வழியாகத்தான் கொண்டு வருவேன் என்று அடம் பிடித்து கொண்டு வந்திருக்கிறான்.
தொல்லை தாங்க முடியாமல் ஒரு நாள் காப்புக்குட்டி லாரியை மறித்திருக்கிறான். ‘புலயன் மவனே! கொன்னுப்புடுவேன்’ என்று கோபத்தில் மேனன் கத்திக்கொண்டே, பக்கத்தில் இருந்த இரும்புத் தடியை எடுத்து காப்பக்குட்டி மண்டையில அடிச்சதாகத்தான் புகார் என சூசன் சொன்னாள்.
மேனன்களுக்கு அவ்வளவு துணிச்சல் இல்லையென்றும், தடுத்ததும் லாரியை வேறுபக்கம் ஓட்டிச் சென்றிருப்பார் என்றும் ரம்யா நாயர் சொல்ல, நாயரும் மேனனும் ஒரே வகை தானே நீ அப்படித்தான் சொல்லுவ என்று சூசன் சொன்னாள்.
கோர்ட் ஹியரிங்கில் போர்க் வாசனை நுழைந்து தொந்தரவு செய்ய, சங்கீதா நம்பூதிரி ஹியரிங் முடிந்த கையோடு சாப்பிட வந்துவிட்டாள். வடுமாங்காவையும் மோர்க்குழம்பையும் கொடுத்துவிட்டு போர்க்கை ருசித்தாள். சாட்சிகளை வசப்படுத்தவில்லையென்றால் நீ கேஸில் தோற்றுப் போவாய். கவனமாக இரு என்று சூசன் சங்கீதாவை எச்சரித்தாள்.
காப்பக்குட்டியின் தூரிக்கூடைக்குள், வரப்போகும் பேரிடரைப் பற்றி ஏதுமறியாமல் நடனமாடிக்கொண்டு வருகிற உயர்ரக மீனாக கோபால மேனனை கற்பனை செய்கிறாள் சங்கீதா. அந்த மீனை வழி திருப்பிவிட சட்டத்தின் எந்த மந்திரத்தை ஓதுவது என்று கலவரப்படுகிறாள் அவள்.
காசும் சாராயமும் கொடுத்து சாட்களை மேனன் வசப்படுத்த பார்த்தும் தோல்வியுற்றார் என்றும் சாட்சிக்கு வந்தவர்கள் எல்லாரும் மீன்பிடிப்போர் தான் என்றும் அதோடு புராசிக்யூட்டர் ருக்மணி காப்புக்குட்டிக்கு தூரத்து சொந்தம் என்றும் சங்கீதா சொன்னாள். ருக்மணி நம்ம மாதிரி மேல்சாதி காரங்க மேல் வெறுப்பு இருக்கறது மட்டுமில்ல, தலித்வாதம், பெண்ணியம் எல்லாம் வேற இருக்கு என்று சூசன் சொல்ல, மேல்சாதி என்பது நாயரும் நம்பூதிரியும் தான் ஒங்க மாதிரி சிரியன் கிறிஸ்தவங்க எப்ப மேல்சாதி ஆனாங்க என்று ரம்யா கேட்டாள். வரலாற்றில் அசல் நம்பூதிரி குலத்திலிருந்து மதம் மாறியவர்கள் தான் இப்ப இருக்கற சிரியன் கிறிஸ்தவர்கள் என்று சூசன் சொன்னாள்.
ருக்மணி நினைத்தால் தான் கேஸை நமக்கு சாதகமாக முடிக்கலாம் என்று பேச்சு வந்தது.
ஆனால் போன வருடம் இப்படி சாப்பிடும் போது நடந்து ஒரு நிகழ்வு அதற்குத் தடையாக இருக்குமோ என்று நினைக்கிறார்கள். குழம்பு வகைகளில் அதைத் தயாரித்தவர்களின் சாதியும் மதமும் கலந்துவிடுகிறது என்று சங்கீதா வாதிடுகிறாள். அதற்கு சில எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறாள். அந்த சர்ச்சையில் மேல் சாதியைச் சார்ந்த வக்கீல் சதீஷ் வர்மாவும் கலந்துக் கொள்கிறார். அவரும் குழம்பின் ருசியோடும் நிறத்தோடும், பாரம்பரியத்தின் தாக்கம் இருக்கிறது என்று அவரும் சங்கீதாவுக்கு ஆதரவாகப் பேசினார். அப்பொழுது, என்னதான் டாக்டரேட் வரைப் படித்தாலும் ருக்மணியின் பாத்திரத்திலிருந்து சேற்றுமீனின் அழுகிப்போன வாடை வரத்தான் செய்யும் என்று, ருக்மணி இல்லாத நேரத்தில், சங்கீதா சொல்லிவிட்டாள்.
அது நடந்த ஒரு வருஷத்தில் ருக்மணி, சதீஷை வளைத்துப் போட்டு திருமணம் செய்துகொண்டாள். சதீஷ் அந்த வாடை விஷயத்தை ருக்மணியிடம் சொல்ல, ருக்மணி அதற்குப் பிறகு சங்கீதா முகத்தை ஏறிட்டு பார்ப்பதில்லை. பல மாதங்களுக்குப் பிறகு, பழைய காலத்துல பெரியவங்க சொல்லி வச்சது சரிதான், தான் செய்தது தவறு என்று சதீஷ், சங்கீதாவிடம் புகார் செய்தார்.
சங்கீதா, சதீஷ் என்ற துருப்புச் சீட்டை இப்பொழுது பயன்படுத்த நினைக்கிறாள்.
சங்கீதாவை மாம்பழக் குழம்பும் வடுமாங்கா ஊறுகையையும், அடுத்த நாள் மதிய உணவிற்குக் கொண்டு வரச் சொல்கிறாள். சூசன் வாத்துக்கறி. ரம்யா மப்பாஸ். சதீஷிடம் ஒரு முன்னேற்பாடு செய்தாள்.
அடுத்த நாள். மதிய உணவு நேரம். பேசியபடி எல்லா உணவும் வந்துவிட்டன. கூடவே ருக்மணியையும் சதீஷ் சர்மாவையும் அழைத்திருந்தாள். சங்கீதா தன் மாம்பழக்குழம்பை ருக்மணியின் சாதத்தில் ஊற்றினாள். ருக்மணியோ சேற்றுமீன் ஒன்றை நம்பூதிரியம்மாவுக்குப் பரிமாறினாள். கைகளைக் குலுக்கிக்கொண்டார்கள்.
மேனனை நீதிமன்றம் தண்டனையின்றி விடுவித்தது எனக் கதை நிறைவுறுகிறது.
மனிதகுலம் சாதி, மதங்களால் எப்படி பிளவுபட்டுக் கிடக்கிறது. அதனால் அவர்கள் வாழ்வியல் எப்படி வேறுபட்டுக் கிடக்கிறது. என்ன இருந்தாலும் ஏமாற்றப்படுவதும் பாதிக்கப்படுவதும் சமூகத்தில் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டவர்களே!
*******
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி, மெல்பர்ன் வாசகர் வட்டக் கூட்டத்தில் சந்தோஷ் ஏச்சிக்கானம் எழுதி, டாக்டர் டி.எம்.ரகுராம் அழகுற மொழிபெயர்த்த ‘பிரியாணி’ சிறுகதைத் தொகுப்பு வாசிப்பு அனுபவத்தை, வாசகர் வட்ட நண்பர்கள் விவாதித்தப் பிறகு எழுதப்பட்ட கட்டுரை. அதனால் மேற்கண்ட கருத்துக்களில் பல வாசகர் வட்ட நண்பர்களின் கருத்துக்கள் எனக் கொள்க.
பிரியாணி - மலையாளச் சிறுகதைகள்
சந்தோஷ் ஏச்சிக்கானம்
தமிழில்: டாக்டர் டி. எம். ரகுராம்
எதிர் வெளியீடு - ஜூலை 2024
உயிர்மெய்யார்
27.04.2026
மெல்பர்ன்



Comments