top of page

பங்கு - கதை வாசிப்பு அனுபவம்

Updated: Aug 9

ree

எழுத்தாளர் பாவண்ணன் எழுதிய “நயனக்கொள்ளை” சிறுகதைத் தொகுப்பு

சந்தியா பதிப்பகம், சென்னை. (2023)

 

 

உவமானங்களும் உவமைகளும்

கதையமைப்பும் கருத்துகளும்

 

பங்கு

 

உயிர்மெய்யார்

07.08.2025

மெல்பர்ன்

 

முதலில் கதைச் சுருக்கம்.

பிறகு இக்கதையில், மெல்பர்ன் வாசகர் வட்டத்தில், நாங்கள் பார்த்த உவமானங்கள், உவமைகள், கதையமைப்பு உத்திகள் மற்றும் கருத்துகளைப் பகிர்கிறேன்.

 

கதைச் சுருக்கம்

 

ஒரு விடுதியறை. ரியல் எஸ்டேட் செய்யும் துரைசாமியின் அண்ணன் பையன் மணவாளன், பச்சையப்பனைப் பார்க்க அந்த விடுதிக்குப் போகிறான். வீராம்பட்டணத்துல ஒரு வீட்டுக்கு (செல்வகுமார்-தனலெட்சுமி வீட்டுக்கு) அழைத்துக் கொண்டுப் போக வந்திருக்கிறான். செல்வகுமாரின் இரக்க குணம் பற்றி மணவாளன் ரேவதிக்குச் சொல்கிறான்.

 

பச்சையப்பன் தன் மனைவி ரேவதியுடனும், அண்ணன் (சொக்கலிங்கம்) மற்றும் அண்ணியுடனும் (சந்தனக்கிளியுடனும்) கிளம்புகிறார். அவர்களின் அம்மா பேசியதிலிருந்து கீழ்க்கண்டது புரிகிறது. பச்சையப்பன் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோரின் தங்கை தனலெட்சுமி என்றும், அவர் வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டார் என்றும், அதனால் பகையாகி விட்டார் என்றும், இப்பொழுது ஞானப்பிரகாசத்தின் (அவர்களது தந்தையின்) வீடு விற்கவேண்டி அவரது கையெழுத்து தேவையென்பதால் அவரது வீட்டிற்கு போக வேண்டியச் சூழலாக இருக்கிறது என்றும் மணவாளனுக்குப் புரிந்தது.

 

கார் வீராம்பட்டணத்துக்குப் புறப்படுகிறது. வீட்டை விற்க வேண்டியதால் தங்கச்சி தனலெட்சுமியின் கையெழுத்து தேவையாக இருக்கிறது என்பதும், கையெழுத்து வாங்கலாம் ஆனால் பணத்தில் பங்கு கிடையாது என்பதும் அவர்களின் பேச்சிலிருந்து புரிகிறது.

 

வீராம்பட்டணம் வந்துவிடுகிறது. செல்வகுமார் வீடு. தனலெட்சுமி வீட்டில் இல்லை. இரண்டு சிறுவர்கள் கதவைத் திறக்கின்றனர். செல்வகுமார் எல்லோரையும் வரவேற்கிறார். மணவாளன் வந்த விசயத்தைச் சொல்ல, செல்வகுமார் ‘என்ன விஷயமா இருந்தாலும் எங்கிட்ட தாராளமா சொல்லலாம்’ என்கிறார். பச்சையப்பன் வீடு விற்பது பற்றியும் கையெழுத்தின் தேவையைப் பற்றியும் தயங்கித் தயங்கிச் சொல்ல, செல்வகுமார், ‘என்னக்கின்னு சொல்லுங்க, தனலெட்சுமி வந்து போடும்’ என்றதும் நால்வர் முகத்திலும் நிம்மதி. தனலெட்சுமியின் அப்பா இறந்ததற்கு தங்களுக்குச் சொல்லவில்லை என்கிற ஆதங்கத்தை செல்வகுமார் வெளிப்படுத்த பச்சையப்பன், ‘சாரி, பழச மனசுல வச்சிக்காதீங்க’ என்றார்.

 

செல்வகுமார் ‘ஒரு டீ சாப்பிடலாமே’ எனச் சொல், வேண்டாம் என்று சொல்லிவிட்டு எல்லோரும் எழுந்தார்கள், சொக்கலிங்கம் தவிர. ‘போடுங்க, நான் குடிக்கிறேன்’ என அவர் சொல்ல செல்வகுமார் டீ எடுக்கப் போய்விட்டார். சொக்கலிங்கம் பிள்ளைகளை விசாரிக்கிறார். ஒருவன் பெயர் ஞானசுந்தரம் என்றும் இன்னொருவன் பெயர் பிரகாஷ்ராஜ் என்றும் சொல்கிறார்கள். ஞானபிரகாசத்தின் பெயரை பிரித்து இரண்டு பிள்ளைகளுக்கும் வைத்திருப்பதாகவும், தனலெட்சுமி அவர்களைப் பெயர் சொல்லி அழைக்காமல் ‘அப்பா, அப்பா’ என்று தான் அழைப்பார் என்றும் செல்வகுமார் சொல்கிறார். சொக்கலிங்கம் டீ குடித்து விட்டு பிள்ளைகளுக்கு இரண்டு இரண்டாயிரம் ரூபாயைக் கொடுக்க, அவர்கள் மறுக்க, மேசை மீது வைத்துவிட்டு வெளியே வருகிறார்.

 

ஏற்கனவே மற்றவர்கள் காரில் அமர்ந்து இருக்கின்றனர். பிள்ளைகளுக்கு சொக்கலிங்கமும் மணவாளனும் கையசைக்கின்றனர். ‘ஒரு வாய் தண்ணி கூட குடிக்கக் கூடாதுன்னு ஒங்க அம்மா சொன்னாங்க, ஒரு வேளை டீ குடிக்கலைன்னா உயிரா போயிடும்’னு சந்தனக்கிளிச் சொல்ல, ‘டிரைவர், மொதல்ல ஏசிய போடுப்பா’ என்றார் ரேவதி எனக் கதை நிறைவுறுகிறது.

 

இப்பொழுது கதை வாசிப்பு அனுபவத்திற்குச் செல்வோம். முதலில் ஓர் உவமானம்.

 

 

உவமானம்

அண்ணன்களும் அண்ணிகளும், வீட்டு சம்மதம் அற்று, வேறு சாதிப் பையனோடு திருமணம் செய்து கொண்டுப் போய்விட்ட தங்கச்சியின் கையெழுத்து வேண்டி, வேண்டா வெறுப்பாக அவள் வீட்டை நோக்கிக் காரில் போய்க்கொண்டிருப்பார்கள். அப்பொழுது சின்ன அண்ணனின் மனைவி, ரேவதி, “மாப்பிள்ளைய தானா தேடிகிட்டு வீட்டவிட்டு வீராப்பா போனவ பின்னால இப்ப நாம தேடிகிட்டு போவறம். கலிகாலம்டா சாமி” என தன் நெற்றியில் விரல்களால் அடித்துக் கொண்டே கசப்புடன் சொல்வாள். இது ஏதோ அவளிடம் பிச்சைக் கேட்டு போவது போல அவமானமாகப் படுகிறது ரேவதிக்கு. அப்பொழுது மணவாளன் முன் சீட்டிலிருந்து பின் சீட்டில் உட்கார்ந்திருக்கும் ரேவதியைப் பார்ப்பான். கண்ணாடிக்கு வெளியே ஒரு சிறுமி, இடுப்பில் ஒரு குழந்தையைத் தூக்கியவண்ணம், தன் வயிற்றைத் தட்டிக் காட்டி கை நீட்டியபடி நின்று கொண்டிருப்பதாக, போகிற போக்கில், பாவண்ணன் ஒரு காட்சியை பதிவு செய்வார்.

 

 

உவமை

பழுத்து உதிர்ந்த வாதுமை இலையின் நிறத்திலிருந்த விடுதியறைக் கதவு என்று மிக அழகாக எழுதியிருக்கிறார் பாவண்ணன். இந்தக் கதையில் வேறு உவமைகள் கையாளப்படவில்லை. கதையமைப்பு உத்திகளைப் பார்ப்போம்.

 

 

கதையமைப்பு

ஒரு கதையில் முன்கதையை எப்படி அமைப்பது, கதை மாந்தர்களின் பண்புகளை எப்படி உருவாக்கி வெளிப்படுத்துவது, காட்சிகளை எப்படி அமைப்பது, சூழல்களை எப்படி விவரிப்பது, இவை எல்லாமே கதையின் மையக் கருத்தை ஒட்டி எப்படி எழுதுவது என்று பாவண்ணனிடம் கற்றுக் கொள்ளலாம். இந்தக் கதையிலிருந்து சில எடுத்துக்காட்டுகளை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

 

முதலில் முன்கதையை எப்படி வடிவமைக்கிறார் என்று பாருங்கள்.

 

முன்கதை அமைப்பு (Set up)

தனலட்சுமி தான் தங்கை. அவள் தான், தானாக முடிவெடுத்து வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டவள். மணவாளன் தனலட்சுமியின் அண்ணன்களையும், அண்ணிகளையும் அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்லவேண்டும். மணவாளன் அவர்களை விடுதியறையில் சந்தித்து, “செல்வகுமார் வீட்டிற்கு உங்களை அழைச்சிட்டுப் போகச் சொன்னார் ரியல் எஸ்டேட்காரர்” என்று சொல்வார். அதற்கு ஓர் அண்ணன், “செல்வகுமார்’ன்னா சொன்னாரு. தனலட்சுமி வீட்டுக்கு போகனும்னுல்ல சொல்லியிருந்தேன்” என்பார். அதாவது, தன் தங்கை தனலட்சுமி ‘ஓடிப்போய்’ திருமணம் செய்து கொண்டவரின் பெயர் கூட அண்ணன்களுக்குத் தெரியவில்லை என்ற அமைப்பு அதில் ஒளிந்திருக்கிறது.

 

தனலட்சுமியின் அம்மா, அண்ணன்மார் இருவரிடமும்,“போனமா வந்தமா’ன்னு இருக்கனும். அந்தக் கிரிச கெட்டவ வீட்டுல ஒரு வாய் தண்ணி கூட வாங்கிக் குடிக்கக் கூடாது” என்று சொல்லி அனுப்புவார். இது ஏனென்றால், உச்சக்கட்டக் காட்சிக்குப் பிறகு, பெரியண்ணன் சொக்கலிங்கம், மாப்பிள்ளை செல்வகுமார் போடும் டீயை வாங்கிக் குடித்து விட்டு வருவார்.

 

அதைப் போலவே கதைமாந்தர்களின் பண்புகளை, அவர்களின் உடல் மொழியாலும், வாய் மொழியாலும் உருவாக்குகிறார்.

 

கதைமாந்தர் பண்புருவாக்கம் (Characterisation)

தங்கையின் பெயர் தனலட்சுமி. தனலட்சுமியின் கணவர் பெயர் செல்வகுமார். கதை மாந்தர்களுக்குப் பெயர் வைப்பதில் பல சூட்சமங்கள் இருக்கின்றன. தனலட்சுமிக்கு எதற்கு அப்பா விட்டுச் சென்ற தனம்? அவளே தனலட்சுமி. தனலட்சுமியின் கணவருக்கு எதற்கு அப்பா விட்டுச் சென்ற செல்வம்? அவரே செல்வகுமார். கதையாசிரியர் எவ்வளவு நுணுக்கமாக பெயர் வைத்திருக்கிறார் பாருங்கள்.

 

செல்வகுமார் கதாபாத்திரம், எல்லோருக்கும் உதவி செய்கிற கதாபாத்திரம் என்று வடிவமைக்க, புயலில் அடிபட்ட மக்களுக்கு, “அங்கயும் இங்கயும் அலைஞ்சி மூட்டை மூட்டையா அரிசி தானமா..” கொடுத்தாரு என்றும், “வருஷா வருஷம் ரத்த தானம்” செய்வார் என்றும் முதலிலேயே சொல்லிவிடுவார். செல்வகுமாரைப் பற்றிய வாசகரின் கருத்து அப்படி கட்டப்படும். பிறகு அண்ணன்கள் இருவரும், “பூர்வீக வீட்டை விக்கப் போறோம். தனலட்சுமியோட கையெழுத்து வேணும்” என்றதுமே, “என்னைக்குன்னு சொல்லுங்க, தனலட்சுமி வந்து போடும். பங்கு கேட்டும் வராது” என்று உடனடியாக சொல்வார் செல்வகுமார். அவரது பெருந்தன்மை அப்பொழுது வெளிப்படும்.

 

ஓர் அண்ணனின் பெயர் பச்சையப்பன். பச்சையப்பனைத் தான் மணவாளன் விடுதியறையில் சந்திப்பான். பார்த்த மாத்திரத்திலேயே, “உள்ள வா” என்று ஒருமையில் அழைப்பார். மணவாளன் கொஞ்சம் அதிர்ந்து தான் போவான். இது எதைக் குறிக்கிறது? பச்சையப்பன் ஓர் அதிகாரம் செய்யும் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று முதல் காட்சியிலேயே வடிவமைக்கிறார் கதாசிரியர்.

 

அதைப் போலவே, ரேவதி கதாபாத்திரமும். பச்சையப்பனின் மனைவி. அவர் உட்கார்ந்திருக்கும் விதமே, “அறைக்கட்டிலில் சாய்ந்து காலை நீட்டிக்கொண்டு…” என்று துவங்கும். தனலட்சுமி வீட்டிற்குப் போய்விட்டு, “ஏசி இல்லயா இங்க?” என்று அலுத்துக்கொள்வார்.

 

இன்னொரு அண்ணனின் பெயர் சொக்கலிங்கம். அவர் ஹோட்டலிலிருந்து கிளம்பும்போது விறைப்பாகத்தான் கிளம்புவார். பிறகு தங்கச்சி வீட்டில் அவரது தன்மையான கணவனையும், பிள்ளைகளையும் பார்த்ததும் மென்மையாகி விடுவார். தனலட்சுமியின் கணவர் கேட்டுக்கொண்டதன் பேரில், அவர் தயாரித்த தேநீரை வாங்கிக் குடித்து விட்டு, பிள்ளைகளுக்குப் பணம் கொடுத்து விட்டு வருவார். இதற்குப் பெயர் தான் Chracter Arc என்பது. கதையின் தொடக்கத்தில் ஒரு கதாபாத்திரத்தின் புரிதல், நிலமை, உணர்வு ஒரு மாதிரி இருக்கும். அது மாறி, மாறி கடைசியில் வேறு ஒரு புரிதலுக்கும், நிலமைக்கும், உணர்வுக்கும் பயணம் செய்யும். கதையின் சாராம்சமே அது தான்.

 

காட்சி அமைப்புகளையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் கதாசிரியர்.

 

காட்சி அமைப்பு

பச்சையப்பன் (தனலட்சுமியின் சின்ன அண்ணன்), மணவாளனை, ‘அமேசான் டெலிவரிக்கு ஆட்கள் தேவைப்படும், வரியா?’ எனக் கேட்க, அவன் வீட்டில் கேட்டுச் சொல்கிறேன் என்பான். அதற்கு பச்சையப்பன் மனைவி ரேவதி, ‘ஒரு வேலைக்கு பதில் சொல்லவே, வீட்டுல கேட்டுச் சொல்றேன்’னு சொல்றது புள்ளையா?….இல்ல அப்பா, அம்மா, அண்ணனுங்க எல்லாம் கால் தூசிக்குச் சமம்’னு ஒதறிட்டு போன ஒங்க தங்கச்சி புள்ளையா?..’ என்ற பொருளில் கேட்பார். அப்படி எந்த ஒரு காட்சியும் கதைக்கு வெளியே போய்விடாமல், உச்சக்கட்டக் காட்சியை நோக்கி, வாசகரைத் தள்ளுவதற்காகவே பயன்படுத்தியிருப்பார்.

 

அதைப் போலவே சூழல் அமைப்பையும் விட்டு வைக்கவில்லை.

 

சூழல் அமைப்பு

தனலட்சுமி கல்யாணம் செய்துக் கொண்ட செல்வகுமார், சாதி அடுக்கில், கீழ்நிலையில் உள்ளதாகச் சொல்லப்படும் சாதியில் பிறந்தவர் என்பதைச் சுட்டிக் காட்ட, அவர்கள் குடியிருக்கும் சூழலை விவரிப்பார் பாவண்ணன். ஓர் அண்ணி சொல்வாள்: “எல்லா வீடும் பன்னிக்குடிசை மாதிரி சின்னச்சின்னதா இருக்குது” என்பார். கீழே விழுந்திருக்கும் சாணக்குவியலைப் பார்த்து முகம் சுளித்தபடி “அசிங்கம் அசிங்கம்” என்பார். காம்பவுண்டு சுவர், கேட் என்பதற்குப் பதில் வேலியில் படலைத் தள்ளிக் கொண்டு போவதாக எழுதுவார் பாவண்ணன்.

 

கருத்து

 

ஒரு வாசகர் சொன்னார்: “அண்ணன்மார்கள் அப்பா விட்டுச் சொன்ற சொத்தை, வீட்டை பங்கு போட நினைக்கிறார்கள். ஆனால் ‘ஓடிப்போய் வேறு சாதி கல்யாணம்’ செய்த தங்கையோ, அப்பாவின் ஞானப்பிரகாசம் என்ற பெயரை, பங்கு போட்டு ஞானசுந்தரம் என்றும் பிரகாஷ்ராஜ் என்றும் தன் இரு மகன்களுக்கும் பெயர் சூட்டியிருக்கிறார். அது மட்டுமல்ல, பெயர்கள் அப்படி இருந்தாலும், அவர்களை ‘அப்பா, அப்பா’ என்று தான் அழைக்கிறார்” என்று வியப்போடு பகிர்ந்தார். அப்படி அப்பாவின் பெயரை வைக்க இசைந்த தனலட்சுமியின் (அந்த தங்கையின்) கணவர் செல்வகுமாரையும் பாராட்டத்தான் வேண்டியிருக்கிறது.

 

கதையின் மையக் கருத்து என்ன? எது சொத்து? நிலமா? பொருளா? உறவா? உயிரா? நலமா? என்கிற கேள்வியை எழுப்புகிறது கதை. இந்தக் கேள்விக்கு எப்படி வேண்டுமென்றாலும் பதில் சொல்லலாம். எல்லாவற்றிக்குமே ஒரு தர்க்கம் இருக்கவே செய்யும். ஒரு வாசகர் சொன்னது போல முடிவை வாசகர்களிடமே விட்டு விடுகிறார்.

 

சாதி மாறி திருமணம். அதில் உள்ள கௌரவம். ஆண், பெண் என்று பால் பாராது தன் சாதி மேல் உள்ள பற்றும் வெறியும் ஒரு பக்கம் இருக்கிறது. அதே நேரம், தனலட்சுமியின் காதலும், பாசமும், செல்வகுமாரின் சேவை மனப்பான்மையும் பெருந்தன்மையும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. இந்த இருண்மையின் இயக்கத்தில் தான் சமூகம் இயங்குகிறது.

 

மற்றொரு வாசகர் சொன்னார்: “ நீயும் உன் தங்கையும் ஒரு வயித்துல பொறந்தவங்க. ஆனா கல்யாணம் கட்டிகிட்டு வர்றவங்க, வேற வீட்டுலேர்ந்து வர்றாங்க. அதனால உங்களுக்குள்ள கணக்கு வழக்க சரியா வச்சிக்க…” என்பார் என் அப்பா. உறவுகளில் ஒட்டும் வெட்டும் எப்படி இருக்கவேண்டும் என்பதை மிக அழகாக தெளிவு படுத்தியிருக்கிறார் அந்த வாசகரின் அப்பா.

 

பாவண்ணன், கருத்தைச் சொல்லாமல் சொல்லுவதில் கேடி தான்.

 

 

********

Comments


© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page