யாரது?
- உயிர்மெய்யார்

- Nov 10, 2025
- 4 min read

உயிர்மெய்யார்
10.11.2025
மூச்சிறைக்க ஓடிவந்தான் ஏழெட்டு வயதுள்ள சிறுவன்.
தெருவில், ஆண் நாய்கள் சில ஒரு பெண் நாயைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தன. ஓர் ஆட்டோவில் சிவப்புக் கொடியைக் கட்டிக் கொண்டு சிலர் கோஷம் போட்டபடிச் சென்று கொண்டிருந்தனர். வானில் பறவைகள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன.
கிட்டிப்புல் விளையாடிக்கொண்டிருந்த பையன்களிடம், “டேய்! பொணம்டா…பொணம்…இருபது கண்ணு பாலத்துல தேங்கி நிக்குது ஒரு பொணம்!” என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்கு ஓடினான் அச்சிறுவன். விளையாடுவதை அப்படியே நிறுத்திவிட்டு புதுஆத்தை நோக்கி ஓடினார்கள் சிறுவர்கள்.
அங்கு ஏற்கனவே கூட்டம் கூடியிருந்தது. இளைஞர்களும், பெண்களும், ஆண்களும் என, ஒதுங்கியிருந்த பிணத்தைக் காட்டி ஏதேதோ பேசிக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்.
“ஆம்பளையா? பொம்பளையா?”
“மொகம் குப்பற மெதக்குது. முதுகு மட்டும் தான் கொஞ்சம் தெரியுது…துணி ஏதும் இருந்தா கண்டுபிடிச்சுடலாம்…”
“ஏய்! ஆம்பளைதான்டா…பொம்பளையா இருந்தா முடி நீளமா இருந்திருக்குமே!”
“வயசு என்னா இருக்கும்?”
“அம்பது, அம்பத்தஞ்சு இருக்கும்…”
சிவப்பு விளக்கு எரிய ‘சொய்ங்’ ‘சொய்ங்’ என்று கூச்சலிட்டுக் கொண்டு ஒரு போலீஸ் ஜீப் வந்தது. திடு திடுவென நாலைந்து போலீஸ்காரர்கள் இறங்கினார்கள். இன்னொரு வேனில் நகராட்சி ஊழியர்கள் நாலைந்து பேர் வந்து அவசரம் அவசரமாக இறங்கினார்கள்.
பிணத்தை அள்ளி வேனில் போட்டார்கள். கூட்டத்தைப் பிளந்துக் கொண்டு திரும்பினார்கள்.
“அடியே! பாத்தியா....ஆம்பளை தாண்டி…”
“அது என்னடி பொணத்து கையில ஒரு குச்சி?”
“ஆத்துல மெதந்து வரும்போது குச்சி கையில மாட்டியிருக்குமோ?...”
“பாரு...அந்தக்குச்சியில ஒரு துணி கிழிஞ்சி தொங்குது... பாத்தியா?…”
“குப்பைத் துணி குச்சியில மாட்டிருக்கும்டி…ஒடம்புலேர்ந்து ரத்தம் கசிஞ்சி துணி செவப்பா இருக்கு…ஆனா…ஒடம்புல ஒட்டுத் துணி இல்ல…”
“எப்படி ஒடம்பு ஊதிப் போய் கெடக்குப் பாத்தியா?...”
“ஆமா...யாரா இருக்கும்?”
“யாருடி கண்டா?...போய் வேலைய பாரு...”
மூன்று நாளைக்கு முன் நடந்த மூன்று நிகழ்வுகள் என்னென்னவென்று தெரிந்தால் யாருடைய பிணம் என்று யாருக்கும் தெரிந்துவிடும்.
**********
நிகழ்வு ஒன்று.
தஞ்சாவூர் அருளானந்த நகரிலேயே பெரிய வீடு அது தான். அவருக்குப் பல வியாபாரம் உண்டு. ஊட்டியில் தேயிலை எஸ்டேட் இருக்கிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் பல காண்ட்ராக்ட்கள் உண்டு. சென்னையிலும் பெங்களூரிலும் செவன் ஸ்டார் ஹோட்டல்கள் இரண்டு உண்டு. திருநெல்வேலி அருகே, கல்லூரி ஒன்றைக் கூட போன வருடம் தான் வாங்கியிருந்தார். தென்னந்தோப்பு, வயல் வரப்பு என நிறைய திருவாரூர் பக்கம் இருக்கிறது. அரசியல் தொடர்புகள் நிறைய உண்டு. அவரது மனைவியின் பெயர் செங்கமலம்.
செங்கமலம் வீட்டில் கூட்டிப் பெருக்கி வேலை செய்யும் பெண்ணின் பெயர் லோகி. (லோகாம்பாளின் சுருக்கப் பெயராக இருக்குமோ? என்னமோ தெரியவில்லை. லோகி என்று தான் அழைக்கிறார்கள்.)
“கருவாட்டுக் கொழம்பு வைக்கச் சொல்லி நேத்துச் சொன்னீங்கம்மா… ஐயா வந்துட்டாங்களா? ஐயாவுக்குப் பிடிக்கற மாதிரி, கருவாட்ட முன்னாடியே வறுத்து, கொழம்புல போட்டு ருசியா கருவாட்டு கொழம்பு வைக்கவா?....”
“……………”
“என்னம்மா…நா கேட்டுட்டே இருக்கறேன்…ஒன்னும் சொல்லாம செவுத்தையேப் பாத்துட்டு இருக்கீங்க…”
“ம்!…” என்று மூச்சை இழுத்துவிட்டபடி செங்கமலம் லோகியைப் பார்த்தாள். செங்கமலத்தின் மார்பு மேல் சென்று கீழ் இறங்கியது.
“…என்னம்மா? ஏதும் பிரச்னையா?” என்று லோகி கேட்டாள்.
“நான் சின்ன வீடா…அவ சின்ன வீடா’ன்னு தெரியல லோகி…” என்று திடீரென்று குமுறி வெடித்தாள் செங்கமலம்.
லோகிக்குத் தூக்கி வாரிப் போட்டது.
ஜாடிக்கு ஏத்த மூடி மாதிரி கிளப் மீட்டிங்குக்கெல்லாம் கிளம்பிப் போவாங்களே….இவங்களுக்கு இப்படிப் பட்ட பிரச்னையா? அவசரப்பட்டு, திடுதிப்பென்று ஏதும் சொல்லிவிடக்கூடாது என்று பக்குவமாக மௌனமாக இருந்தாள் லோகி. இரண்டடி அருகே மட்டும் நகர்ந்து நின்று அமைதியாக இருந்தாள்.
செங்கமலமே பேசட்டும் என்று காத்திருந்தாள் லோகி.
“யாரோ செல்லதொரையாம்….அவன் தான் எல்லாம் ஏற்பாடு செய்றானாம்…கட்சியில ஏதோ பதவியில இருக்கானாம்…அந்த செல்லதொரை நம்ம தொரைக்கு அப்பப்ப பொண்ணுங்கள ஏற்பாடு செய்வானாம். ஆனா கும்பகோணத்துல அவன் ஏற்பாடு செஞ்ச ஒரு சக்காளத்திய மட்டும் ஒங்க ஐயா ஸ்டெப்னியா வச்சிருக்காராம்……”
“……………”
“என்னா லோகி! இப்ப பேசு…ஐயா ஐயா’ங்றியே…பேரு தான் பூபதி சர்மா. பெத்த பேரு. அவர் சேதியே கருவாடா நாறுது…அவருக்கு கருவாட்டுக் கொழம்பு வேற நீ வக்கப்போறியா?…”என்று பக்கத்தில் இருந்த டிஷ்சு பேப்பரில் மூக்கைச் சிந்தித் துடைத்தாள்.
“இந்த ஆம்பளங்களே அப்படித்தாமா….எவனையும் நம்பக்கூடாது. என் புருஷன் ஊருக்கே அடியாளுன்னு சுத்திட்டு இருக்கான். வெளிநாட்டுலேர்ந்து வெள்ளையா ஒரு ஆளு வந்தான்ம்மா…கழுத! என்னமோ ரெண்டும் பேசிகிச்சிங்க…ஒரு பாக்கெட்ட கையில குடுத்தான்…அன்னயிலேர்ந்து ஆள புடிக்கமுடியல…என்ன போட்டு அடி அடி’ன்னு அடிக்கிறாம்மா…”
“…’ஆம்பளன்னா அப்படி இப்படி இருப்பாங்க’ன்னு சொல்றதெல்லாம் அந்தக் காலம் லோகி!…வரட்டும் இன்னக்கி ராத்திரி…வச்சிக்கிறேன்…” என்று செங்கமலம் சொல்லிய போது கண்ணில் ஏதோ உறுதி தெரிந்தது. பூச்சி மருந்து பாட்டிலை முந்தானையில் மறைத்துக் கொண்டாள்.
********
நிகழ்வு இரண்டு.
ஒருவர் போனில் பதில் சொல்லிக்கொண்டிருக்க, இன்னொருவர் வாசலில் இருவரை விசாரித்துக் கொண்டிருக்க, ஒருவர் கணிணியில் ஏதோ டைப் பண்ணிக்கொண்டிருக்க, ஒருவர் சில ஃபைல்களை எடுத்துக் கொண்டு கோர்ட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருக்க…இப்படி தஞ்சாவூர் பூக்கடை ஆல் உமன் போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.
நாற்பது வயது மதிக்கத்தக்க ஸ்டெல்லா இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்கினாள். ஸ்டெல்லாவுக்கு போலீஸ் வேலை என்பது பள்ளிக்கால கனவு. மிகவும் பொறுப்பாக தன் காவல் பணியைச் செய்பவள். சீருடையைச் சரிசெய்துக் கொண்டே தன் இருப்பிடத்திற்குச் செல்ல இரண்டு படிகள் ஏறியதுதான் தாமதம், ஒரு பெண்ணை நெற்றியில் இரத்தம் கொட்டக் கொட்ட இருவர் தூக்கி வந்தார்கள்.
ஸ்டெல்லா திரும்பி, “என்னாச்சி..என்னாச்சி..” என்று பதறினாள்.
“புருஷன் போட்டு அடிச்சிப் புட்டான்ம்மா…”
“இந்தக் கை ஒடிஞ்சிப் போச்சின்னு அழுவுறா..”
ஸ்டெல்லாவுக்கு கோபம் கோபமாய் வந்தது. பொண்டாட்டி மேல கை வைக்கறதுக்கு இந்த ஆம்பிளைங்களுக்கு யார் உரிமை கொடுத்தது. மீசை மொளச்சா திமிரு வந்துடுமா? பூச்சி பொட்டுக்கெல்லாம் கூடத் தான் மீசை வளர்ந்துருக்கு. அவன்கள அடிச்சே கொல்லனும். என்றெல்லாம் நினைத்து அவளுக்கு நெஞ்சு கொதித்தது.
“ஆஸ்பத்திரியில காமிச்சீங்களா…?” என ஸ்டெல்லா கேட்டுக்கொண்டே, “அந்த பெஞ்சுல ஒக்கார வையுங்க…தம்பி போய் ஒரு டீ வாங்கிட்டு வந்து அந்த அம்மாவுக்கு குடு…” என்று சொல்லி காசு கொடுத்து அனுப்பினாள்.
“யாரும்மா ஓன் புருஷன்? என்ன பண்றான்? எங்க இருக்கான் இப்போ?....”
“அவன் ஒரு தறுதலம்மா…ஊர் அடியாள்னு சுத்திகிட்டு இருக்கான்மா…பெரியாஸ்பத்திரி இல்ல... நம்ம பெரியாஸ்பத்திரி...அந்தப் பக்கம் தான் அவனுக்கு தோஸ்தெல்லாம்…” என்று அடிபட்ட அம்மாவோட வந்த ஒரு பெண் சொன்னாள்.
“ஏன் ஒன்ன அடிச்சான்…?” ஸ்டெல்லா தன் நாற்காலியில் உட்கார்ந்து ஏதோ ரெஜிஸ்டரில் எழுதிக் கொண்டே கேட்டாள்.
அடிபட்டப் பெண்ணே பேசினாள்.
“அது என்னமோ தெரியல…வாய் கொளறிகிட்டே திண்ணையில சாஞ்சிகிட்டு யார்ட்டயோ போன்ல பேசிட்டு இருந்திச்சி…..தண்ணி கேட்டுச்சின்னு ஒரு டம்ளர்ல எடுத்துட்டுப் போய் கிட்ட நின்னுகிட்டு இருந்தேன்…புள்ள கூப்டான்னு சட்டுன்னு திரும்புனேன்…அப்ப அது மேல கொஞ்சம் தண்ணி தெளிச்சிடுச்சி…யார் மேல கோவமோ…என்ன இழுத்து செம சாத்து சாத்திடுச்சி….” என்றாள் அடிபட்டவள்.
ஸ்டெல்லாவின் கோபம் கண்ணில் ஏறிய சிவப்பு நிறத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“அவன் பேரு என்ன? சொல்லு...உள்ள வச்சி தட்டி..உயிரை எடுத்தாத் தான் ஆம்பளங்களுக்குப் புத்தி வரும்...”
“ சொக்கு’ன்னு கூப்புடவாங்க…முழுப்பேரு சொக்கலிங்கம்…” என்று கூட்டி வந்த இன்னொரு ஆள் சொன்னான்.
“ஓம் பேரு?”
“ லோகி…நாலு வூட்டுல பத்துப் பாத்திரம் தேய்க்கிறம்மா…” (அட! நம்ம செங்கமலம் அம்மாவின் வீட்டில் வேலை செய்யும் லோகி!)
“ம்!…சரசு ஜீப்’ப எடு…அந்த சொக்குவை தூக்கிட்டு வந்து நொக்குவோம்” என்று சொன்ன ஸ்டெல்லாவின் மொபைல் முனகியது.
"நீங்க நொக்குறீங்களோ இல்லையோ...நா வீட்டுக்குப் போயி ரசத்துல...."லோகி விதவிதமான கற்பனையில் மிதந்தாள்.
போனை எடுத்து காதில் வைத்த ஸ்டெல்லாவின் முகம் பல கோணலாய் மாறியது.
“ஸ்டெல்லா…”
“சொல்லுங்க!”
“எங்க இருக்க?...”
“இப்பத்தான் வீட்டுலேர்ந்து ஸ்டேஷனுக்கு வந்தேன். நீங்க தூங்கிட்டு இருந்தீங்க…இட்லியும் சட்னியும் எடுத்து மேசை மேல வச்சிருக்கேன்…”
“யாரும் ஆம்பள போலீஸ் பக்கத்துல இருக்காங்களா?...”
“இது ஆல் உமன் போலீஸ் ஸ்டேஷன்…”
“ஓன் அழகு புருஷன் செல்லதுரை…கட்சியின் நகர இணைச் செயலாளர்...வீட்டுல காத்து இருக்கேன்..இன்னும் அரை மணி நேரத்துல வீட்டுக்கு வர்ற…வரும் போது ‘அது’ ஒரு பாக்கெட் வாங்கிட்டு வா…எல்லாத்துலயும் கவனம் தேவையில்ல…”
போனை ஆஃப் செய்து விட்டு, “சரசு! நீ போய் சொக்க தூக்கிட்டு வா…நா வீட்டுக்குப் போயி…என் புருஷன.....”என்று சொல்லிக்கொண்டே ஆவேசமாக வண்டியை எடுத்தாள் ஸ்டெல்லா. இடுப்பில் துப்பாக்கி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள்.
*********
நிகழ்வு மூன்று
செல்லதுரை வீட்டில் காத்திருந்தான். அப்பொழுது அவன் போன் ரிங்கியது. கையில் இருந்த பவுடரை மூக்கால் உறிஞ்சி விட்டு, யார் அழைக்கிறார்கள் என்று பார்த்தான்.
'பூபதி சர்மா ஜொள்ளு பாஸ்' என்று பெயர் வந்தது.
“சொல்லுங்க பாஸ்! ஏதும் ஏற்பாடு பண்ணனுமா” என்றான்.
“யோவ்!…பெரிய பிரச்னையாயிடுச்சிய்யா…கேங்கா மாட்டப் போறோம்…”
“என்ன சொல்றீங்க பாஸ்…என்னாச்சி…” பதறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான் சோபாவில்.
“ஒடனே நீ தலைமறைவாயிடு…”
“சரி பாஸ்!”
“எவனோ திருச்சி ஏர்போர்ட்ல மாட்டிகிட்டானாம். அடி தாங்க முடியா எல்லாரையும் கோத்துவிட்டானாம்…”
“ஓகே பாஸ்…ஒடனே கெளம்புறன்” டூ வீலர் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானான் செல்லதுரை.
“இருய்யா…முக்கியமான சேதியக் கேளுய்யா…”
“ போதைப் பொருள் நடமாட்டத்தை எதிர்த்து எவனோ தோழர் மணிசங்கராம்…அவன் தலைமையில ஆர்ப்பாட்டமாம்…நாளைக்கு கேஸ் போடப் போறாங்களாம்…”
“ ஓ…”
“ஓன் ஆளு சொக்குவ கும்பகோணம் பங்களாவுக்கு அனுப்பு…விவரம் சொல்லுவா…காரியத்தைக் கச்சிதமா முடிக்கச் சொல்லு”
“சரி பாஸ்…” என்று சொல்லிவிட்டு கதவைத் திறக்கவும், ஸ்டெல்லா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
*******
யாரது?
ஆற்றிலிருந்து பிணத்தை எடுத்துக் கொண்டு போகும் போது பேசிக் கொள்ளும் இரண்டு பெண்களின் உரையாடலில் துப்பு இருக்கிறது.
(“அடச்சே!…இப்படி ஈஸியா கண்டுபிடிக்கற மாதிரியா கதை எழுதறது?” என்று கிட்டிப்புள் விளையாடுகிற சிறுவன் சத்தமாகக் கத்தினான்.)
********



Thirilling narration
துப்பறியும் பணியை வாசகரிடம் ஒப்படைத்த விதம் நன்று. விடை தான் தெரியல.