பஞ்சவர்ணக்கிளி - சிறுகதை - உயிர்மெய்யார் - 04.11.2025
- உயிர்மெய்யார்

- 3 minutes ago
- 6 min read

சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.
இன்னும் ஓரிரு வருடங்களில் எழுபதைத் தொட இருக்கும் வயது. கைலியும் பனியனும் போட்டிருந்தார். நாலைந்து நாள் தாடி அவர் முகத்திற்கு கொஞ்சம் வசீகரத்தைத் தான் கூட்டியிருந்தது. மனைவி சந்திரா கொடுத்த காபியை உறிஞ்சியவாறே மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டுக்கு முன்பக்கம் இருந்த காலி இடத்தில் உட்கார்ந்திருந்ததால் காற்று நன்கு அடித்துக் கொண்டிருந்தது.
‘படார்…’
முன் கேட்டிலிருந்து தான் அந்த சத்தம் கேட்டது. எழுந்து வந்து பார்த்தார். ஒரு கருங்கல் விழுந்து சிறு காயம் ஏற்பட்டிருந்தது கேட்’டுக்கு. சுற்றி முற்றும் பார்த்தார். கையில் கவண் (கெல்டா பில்ட்) வைத்திருந்த ஒரு பையன் அடுத்த தெருவிற்கு ஓடினான். அவனைக் காட்டி ஏதோ திட்டிவிட்டு, மறுபடி வந்து சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தார்.
புதிதாகக் கட்டிய வீடு.
அவரது புது வீட்டைச் சுற்றி தென்னை, கொய்யா, வாழை என மரங்களை நட்டு வைத்திருந்தார். ஒரு மூலையில் வேப்ப மரம் ஒன்று இருந்தது. நகரத்திற்கு ஒதுக்குப்புறமாக கட்டப்பட்ட வீடு என்பதனால், சாலைக்கு எதிரே பல மரங்கள் காடு போல வளர்ந்திருந்தன.
வழக்கமாக காகம், குயில், குருவி, மைனா, தேன்சிட்டு போன்ற பறவைகள் வந்து உட்காரும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக பேசும். அவைகளுக்குள் பேசிக் கொள்ளும்.
அன்றைக்கு திடீர் என இரு பஞ்ச வர்ணக்கிளிகள் வேப்பமரத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். சிவப்பு உடலும், நீண்ட பச்சை வாலும், சிவப்பு அலகும், கருப்பும் இளஞ்சிவப்புமான கழுத்து வளையமும், வெள்ளை வால்முனையும் என பார்ப்பதற்கு விருந்தாக அமைந்தது. இரண்டும் ஒன்றின் மீது ஒன்று உரசி ஏதோ பேசிக்கொண்டன.
அவை இரண்டில் பெண் போல இருந்த பஞ்சவர்ணக்கிளியின் கண்ணைச் சுற்றி இருந்த மஞ்சள் வளையம் அவரை ஈர்த்தது. வீடு கட்டிக் கொண்டு வந்த இந்த மூன்று வருடங்களில் ஒரு பஞ்ச வர்ணக்கிளியைக் கூட அவர் அங்கு பார்த்ததேயில்லை.
தன் கையில் இருந்த மொபைலை கீழே வைத்து விட்டு இரண்டு பஞ்சவர்ணக்கிளிகளையும் பார்த்துக்கொண்டிருந்தார். அவையும் அவரையேப் பார்த்துக் கொண்டிருப்பதாக ஒரு பிரமை அவருக்கு.
“சல்….ல்….ல்”
அவரே எதிர்பார்க்காத பொழுது அந்தப் பெண் கிளி பறந்து வந்து, அவரது காலடியிலிருந்து ஓரிரு அடி தூரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைத் தொந்தரவு செய்யாமல் இருக்க, ஆடாமல் அசையாமல் இருந்தார். ஆண் கிளி மரத்திலேயே உட்கார்ந்திருந்தது.
பெண் கிளி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவரை நோக்கி வந்தது. அவருக்கு நெஞ்சு ‘பக், பக்’கென அடித்தது. இது கனவா நினைவா என்று ஒரு முறை தன்னையே கேட்டுக்கொண்டார். அது நடந்து வந்து அவரது காலடியில் நின்றது.
அவரைப் பொறுத்த வரையில் பூமி சுற்றாமல் நின்று கொண்டிருந்தது.
இவ்வளவு அருகில் பஞ்ச வர்ணக்கிளியை அவர் பார்த்தே இல்லை. அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மூச்சைக் கூட மெதுவாக இழுத்து விட்டார்.
‘சடக்’ கென பறந்து வந்து அந்த பெண் பஞ்சவர்ணக்கிளி அவர் கையில் இறங்கியது.
அவருக்கு உடலெல்லாம் புளகாங்கிதம்!!! மயிர் கூச்செறிந்து….ஒரு வித பரவச நிலைக்குப் போய் விட்டார். பஞ்ச வர்ணக்கிளி இவ்வளவு அழகா? பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறதே!…சிவப்பும், பச்சையும், கருப்பும், வெள்ளையும், மஞ்சளும் என இத்தனை நிறங்களா?
இது வரை அவர் எந்தப் பறவையையும் தொட்டதில்லை. ஒரு கையால் அதனை தடவிக் கொடுக்கலாமா? என்று யோசித்தார். அப்படிச் செய்தால் பறந்து போய்விடுமோ? கை மரத்துப் போனாலும் அப்படியே ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டியது தான்…இன்னும் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கட்டும் என்று ஒரு நினைப்பு…இல்லையில்லை. மிக மிக மெதுவாக கையை எடுத்து தடவிக் கொடுத்துப் பார்க்கலாம் என்று இன்னொரு நினைப்பு.
அந்தப் பெண் பஞ்சவர்ணக்கிளி தலையை மட்டும் இங்கும் அங்கும் அசைக்கிறதே தவிர, பறக்கும் எண்ணம் அதற்கு இல்லை என்பது போல் இருந்தது. அதனால் இன்னொரு கையை மெதுவாக எடுத்து அதன் உடலைத் தடவிக் கொடுத்தார்.
அந்த ஸ்பரிசம் அதற்குப் பிடித்திருக்க வேண்டும். அமைதியாக இருந்தது. இப்பொழுது என்று பால்காரனோ, வீட்டுக்கு வேலை செய்ய வரும் வேலைக்கார அம்மாவோ வந்து கெடுத்து விடக்கூடாது என்று அவரது உள்மனம் வேண்டிக் கொண்டிருந்தது. காலை உணவு தயாரித்துக் கொண்டிருக்கும் மனைவி கூட ‘என்னங்க…’என்று சொல்லிக்கொண்டு வீட்டின் முன்புறம் வந்துவிடக்கூடாது என்று நினைத்தார். அல்லது யாராவது மொபைலில் போன் செய்துவிடக்கூடாது என்றும் வேண்டிக் கொண்டார்.
இரண்டு மூன்று நிமிடங்கள் இப்படியே போயிருக்கும். ஒரு கையில் உட்கார்ந்திருந்தது. இன்னொரு கை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது. மஞ்சள் வட்டத்தின் உள்ளே இருந்த கண்களை உற்றுப் பார்த்தார். அதுவும் அவரது கண்களைப் பார்த்தது.
அவரது இதயம் கசிந்து உருகியது. கண்களிலிருந்து கண்ணீர் திரண்டு, உருண்டு காட்சியை மறைக்கும் போது…’சட…சட…’வென இறக்கையை அடித்துக் கொண்டு ஆண் கிளியோடு சேர்ந்து கிழக்கே பறந்து சென்று மறைந்தது.
பஞ்சவர்ணக்கிளி பறந்து போய்விட்டாலும் அது உட்கார்ந்திருந்த கையை அவர் அசைக்கவேயில்லை. அதன் கால்கள், அவரது உள்ளங்கையில் உண்டுபண்ணியிருந்த சிறிய பள்ளத்தைப் பார்த்தவண்ணம் இருந்தார். அதுவும் சிறிது சிறிதாக மறைந்து போனது.
கண்களை மூடி, பஞ்சவர்ணக்கிளி, கையில் உட்கார்ந்திருந்த காட்சியை மனத்திரையில் கொண்டு வந்தார். அந்தக் காட்சி அவரது மனத்தில் ஆழமாக பதிந்து விட்டிருந்தது. அதன் இறகுகள் ஏற்படுத்திய மெல்லிய உணர்வை அவர் பல ஆண்டுகளாக உணர்ந்ததில்லை. அந்த உணர்வை மனதிற்குள் அசை போட்டார்.
“சார்…….”
எங்கேயோ, யாரோ யாரையோ கூப்பிடுவது போல் அசமந்தமாக காதில் விழுந்தது.
“சார்….சார்…..”
அவர் வீட்டு கேட்டருகில் தான் அந்த சத்தம் என்று உணர்ந்ததும், கண்களைத் திறந்துப் பார்த்தார்.
“கேஸ் சிலிண்டர்…..”
இது தேவையா? இப்படியா காலையிலேயே வந்து நம்மைத் தொந்தரவு செய்வது? அவருக்கு கோபம் வந்துவிட்டது. அவருக்கு கோபம் வந்தால் சுற்றி இருக்கும் நபர்களைத் திட்டித் தீர்த்து விடுவார். அல்லது பொருட்களை எடுத்து வீசி விடுவார். சில நேரம் அடித்துக் கூட விடுவார். ஆனால் கேஸ்காரனை வேண்டாம் என்று விரட்டவா முடியும்?
“சந்தி…..சந்தி…சந்திரா….” என வீட்டைப் பார்த்து கூப்பிட்டார்.
“தோ!…வந்துட்டேன்…” எனச் சொல்லி அரக்கப் பரக்க சந்திரா ஓடிவந்தார். சந்திராவுக்கு அவரைப் பார்த்தாலே பயம்.
சந்திரா வீட்டின் முன்புறம் வந்ததும், நிலைமையைப் புரிந்துக் கொண்டு, “பின்னாடி கேட் வழியா வாப்பா…” என்று கேஸ்காரப் பையனைக் கூப்பிட்டுவிட்டு, அவர் உள்ளே போனார்.
இவர் பஞ்சவர்ணக்கிளி மயக்கத்தில் உட்கார்ந்திருந்தார்.
*******
அவருக்கும் சந்திராவுக்கும் திருமணம் ஆகி ஒரு மாதம் தான் இருக்கும். சந்திராவின் அத்தை மகனுக்குத் திருமணம். அதற்கு இருவரும் செல்வதாக இருந்தது. ரிக்ஷா பிடித்து பஸ் ஸ்டாண்டு சென்று, பஸ் பிடித்தால் இரண்டு மணி நேரப் பயணம்.
நாளைக்குத் திருமணம். முதல் நாளே போவதாக உத்தேசம். காலை உணவு முடித்து கிளம்பினால் மதிய உணவிற்கு அங்கே போய்விடலாம். பொங்கல் சாப்பிட்டு விட்டு சந்திரா குளித்து கிளித்து கிளம்பிவிட்டாள்.
“என்னங்க…நீங்க குளிக்கலையா? அரை மணி நேரத்துக்கு முன்னாடியே, சுடுதண்ணியைக் கொண்டு வந்து பாத்ரூம்ல வச்சேனே….” சந்திரா கொஞ்சம் பதறியே கேட்டாள்.
“சரி வச்ச…ஆனா துண்டை யாரு எடுத்துக் குடுக்கறது?” திண்ணையில் பேப்பர் படித்துக் கொண்டே அவர் கேட்டார்.
“துண்டு அதோ ஒங்க பக்கத்துலயே இருக்குங்க….” என்று சந்திரா காட்டினாள்.
“இருக்கு…துண்டு இருக்கு. இதோ இங்கத் தான் இருக்கு….ஆனா, நீ எடுத்து குடுக்கலியே…எப்படி குளிக்கறது?” என்று அலட்சியமாகக் கேட்டார் அவர்.
“ஏங்க! சுடுதண்ணிய வச்சிட்டு…’குளிங்க…நான் அந்த பாத்ரூம்ல குளிக்கிறேன்’னு சொல்லிட்டுத்தானப் போனன்…பக்கத்துலயே இருக்கற துண்டை எடுத்துட்டுப் போயி குளிக்க வேண்டியதுதான?…” என்று பொறுமையாகத் தான் கேட்டாள் சந்திரா.
“துண்டு எங்க இருந்தா ஒனக்கென்ன? நீ தான் எடுத்துக்குடுக்கனும். ஏன் நீ எடுத்து குடுக்க மாட்டியா?...ஒனக்கு அவ்வளவு திமிரா!…” கோபமாக முறைத்துக் கொண்டே கேட்டார் அவர்.
சந்திரா கொஞ்சம் நிலை குலைந்துப் போய்விட்டார். சற்றே சமாளித்துக் கொண்டு, “மன்னிச்சிக்குங்க…தெரியாம பண்ணிட்டேன்…இனி அப்படி நடக்காது….சுடுதண்ணிய மறுபடி சுட வைக்கவா?”
“அப்பறம்?…பச்சத் தண்ணியில குளிக்கச் சொல்றியா…?” என்று கேவலம் தொனிக்கக் கேட்டார்.
மணி பத்தாகிவிட்டது. இனி அவர் குளித்து, கிளம்பி வந்தால் ஊருக்குள் போகும் இரண்டாவது பஸ்ஸைப் பிடிக்க முடியாது. கடைசி பஸ்ஸையாவது பிடித்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, தண்ணியை சுட வைத்து மறுபடி பாத்ரூமில் வைத்தாள் சந்திரா.
“ஏங்க!…குளிங்க” என்று சொல்லி துண்டையும் சோப்பையும் எடுத்துக் கொடுத்தாள்.
“இரு…நீ சொன்னா…ஒடனே குளிச்சிடனுமா?…சவரம் பண்ணிட்டுத் தான் குளிக்கனும்…” என்று சொல்லிவிட்டு பேப்பரின் கடைசிப் பக்கத்தை மேய்ந்தார்.
அய்யய்யோ! மறுபடி சூடு ஆறிடுச்சுன்னா என்னா பண்றது? என்று சந்திரா பதட்டமானாள்.
அப்பொழுது பார்த்து பக்கத்து வீட்டிலிருந்து ஒருவர் வந்து முனிசிபாலிட்டியிலிருந்து வந்து தெரு குப்பையை எடுக்காதது பற்றியும், நாடு எப்படி குட்டிச்சுவராகி வருகிறது என்பது பற்றியும், வெளி நாடுகளில் எப்படி ரோட்டில் சாப்பாடு போட்டு சாப்பிடலாம் என்பது பற்றியும் இன்ன பிறவும் பேசிக் கொண்டிருந்தார்.
“என் பொண்டாட்டி உறவுக்காரப் பையனுக்கு கல்யாணம். ரெண்டு பேரும் போறோம். ரெண்டு நாளைக்கு முன்னாடியே வரச் சொன்னாங்க. ஆனா முந்தின நாளு தான் போறோம். இப்பவே லேட்டு தான். இனி சவரம் பண்ணிட்டு குளிச்சிட்டு கெளம்புறதுக்கு நாழி ஆயிடும். தெரு குப்பையைப் பத்தி அப்பறம் பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு மனுஷன் வரவேண்டியது தானே!
ஆனா இவரும் சேர்ந்துகிட்டு ‘அரசியல் ஒரு சாக்கடைங்க. எல்லாம் லஞ்சம் ஊழல் மயம்ங்க….இந்த நாட்டை திருத்தவே முடியாதுங்க’ன்னு பேசிக்கிட்டு இருக்காரு…என்று நினைக்கும் போதே நெஞ்சு பொருமியது சந்திராவுக்கு.
மணி பதினொன்னரைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது.
மூன்றாவது தடவையாக தண்ணியை சுட வைத்தாள். நீண்ட நேரமாக கையில் வைத்திருந்த துண்டையும் சோப்பையும் கொடுத்து, குளிக்க வைத்து, கிளம்பி வெளி வரும் போது, மணி ஒன்றாகி விட்டது.
“இனி போனா…ஊருக்குள்ள போற கடைசி பஸ்ஸை புடிக்கமுடியாது…” என்று பயந்துக் கொண்டே சொன்னாள் சந்திரா. குரலில் நடுக்கம் தெரிந்தது.
“மண்டு…மண்டு…இப்போ கெளம்பியும் வேஸ்ட்டா?…ஒரு முட்டாள கட்டிகிட்டு நா படுற வேதன…” என்று அவர் அலுத்துக் கொண்டார்.
அடுத்த நாள், அவர்கள் போன போது தாலி கட்டி முடித்து இரண்டாவது பந்தியும் முடிந்து போயிருந்தது. சந்திரா அழுது அழுது மூன்று நாட்களுக்கு கண்கள் வீங்கியிருந்தன.
**********
மேற்குறிப்பிட்ட நிகழ்வு கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்பு நடந்தது. ஆனால், இந்த நாற்பது வருடங்களுமே சந்திராவின் கண்கள் வீக்கம் குறைவதும், வீங்கிச் சிவப்பதுமாகவே இருந்தன.
பெண் பஞ்சவர்ணக்கிளி அவர் கையில் வந்தமர்ந்து ஒரு வாரம் இருக்கும்.
அன்றைக்கும் அவர் சந்திரா கொடுத்த காபியை உறிஞ்சிக் கொண்டே சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.
பக்கத்து வீட்டு ஆசாமி, வாக்கிங் முடித்து விட்டு, அவர் வீட்டுக்கு போவதற்கு முன்பு, சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் இவரைப் பார்த்து, “குட் மார்னிங் சார்….” என்று சொல்லிக்கொண்டே அவர் முன் வந்தார்.
“ஒங்களட்ட நாலு வார்த்த பேசினாக்கத்தான் எனக்கு புத்துணர்ச்சியா இருக்கு சார்” என்று சொல்லிக் கொண்டே அவர் முன் இருந்த ஒரு காலி நாற்காலியில் அமர்ந்தார்.
மனைவியைத் தவிர மற்றவர்களிடம் நன்றாகப் பேசுவார் அவர். புத்துணர்ச்சியா இருக்கும் என்று பக்கத்துவீட்டுக்காரர் சொன்னதில் புளகாங்கிதம் அடைந்து ஒரு புன்னகையை உதிர்த்து விட்டார்.
“…என்ன இருந்தாலும், நீங்க தன்முனைப்பு பயிற்சியாளர் ஆயிற்றே!…ஒங்க போட்டோ போட்டு ஒரு போஸ்டர் பார்த்தேன்…என்ன விவரம் சார்?” என்று வினவினார் பக்கத்து வீட்டுக்காரர்.
“ ஓ! அதுவா…லயன்ஸ் கிளப்புல குடும்ப சங்கம நிகழ்ச்சியாம்….நான் தான் கணவன் மனைவி உறவை எப்படி மேம்படுத்துவது என்று பேசுறேன்…”
“சூப்பர் சார்…நல்ல டாபிக் சார்… இன்னக்கி யாரு சார் குடும்பத்துல பேசிக்கிறாங்க? ஒரு காலத்துல டிவியில மூழ்கி இருந்தாங்க. இப்போ மொபைல்ல….”
“ஆனா…என்னுட்ட பத்து ஐடியாஸ் இருக்கு…கணவன் மனைவிக்குள்ள மகிழ்ச்சியான உறவு இருக்கனுமின்னா…அந்த பத்து ஐடியாஸ்ல நாலைஞ்ச பிராக்டிஸ் பண்ணாவே போதும்…”
“ஓ! யூ ஆர் கிரேட் சார்….எங்க எல்ஐசி முகவர்களுக்குப் பயிற்சி குடுக்க முடியுமா சார்?”
“குடுத்துட்டுத் தான இருக்கேன். விற்பனை முகவர்கள் வெற்றி பெற ஏழு சூத்திரங்கள்’னு கிளாஸ் எடுக்கறன். ஆசிரியர்கள், மாணவர்கள், காவல்துறையினர், இன்சூரன்ஸ் கம்பெனிகள், என்சிசி, என்எஸ்எஸ்…இப்படி எல்லாருக்கும் வகுப்பு எடுத்துட்டுத் தான இருக்கேன்…” அவரது பெருமை அவரது குரலில் வழிந்தது.
பக்கத்துவீட்டுக்காரரின் கண்கள் அகலாமாக விரிந்தபடியே அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது.
“ நாளை மறு நாள் கூட ஹைதராபாத் போறேன். நாலு நாள் பயிற்சி. என் கிளாஸ்’ன்னா எல்லாருக்குமே பிடிக்கும். யாரும் தூங்கி வழியமாட்டாங்க…”
அப்பொழுது அவருக்கு ஒரு போன் வந்தது. எடுத்துப் பேசினார். பேசப் பேச அவரது முகம் பிரகாசித்தது.
“எனக்கா?....எனக்கா?....சாதனையாளர் விருதா?...எந்த ரோட்டரி கிளப்?...ஆமா..ஆமா...பயோடேட்டா அனுப்பி விடுறேன்... ஹோம்கார்ட், ஃப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ், டிராஃபிக் வார்டன்ல இருக்கேன். அந்த போட்டோ எல்லாம் வச்சி அனுப்புறேன்...ம்...ம்...சரி!....ஆமா..ஆமா..ஜேசியில பல வருஷம்…நல்லது…”
போனை ஆஃப் பண்ணினார்.
“ஏதோ விருதுன்னு….” பக்கத்து வீட்டுக்காரர் இழுத்தார். அப்பொழுது சந்திரா போன்விட்டா போட்டு எடுத்து வந்து அவரிடம் கொடுத்தார்.
“சார் வந்து எவ்வளவு நேரமாவுது…இப்பத்தான் வந்து குடுக்கிறியா?…” என்று காட்டமாகக் கேட்டார்.
“பரவாயில்ல சார்…” என்று சொல்லிவிட்டு, அவர் போன்விட்டாவை வாங்கி, அதைக் குடித்து முடிக்கும் வரை ஏதேதோ பேசி விட்டுப் போனார்.
இவர் பேப்பர் முழுவதையும் முடித்து விட்டு எழுந்தார். அப்பொழுது எதேச்சையாக வேப்ப மரத்தைப் பார்த்தார். அந்த ஆண் பஞ்சவர்ணக்கிளி மட்டும் உட்கார்ந்திருந்தது.
“எங்கே உன் இணை?” என்று கேட்பது போல் கண்ணைச் சுருக்கி அதனையேப் பார்த்தார்.
அப்பொழுது கேட்டுக்கு வெளியே ஒரு பெண் குரல் கேட்டது.
“ கழிச்சல்ல போறவனே! கெல்ட்டா பில்ட்ட வச்சிட்டு சும்மா இருக்க முடியாதா? இப்ப...இந்தக் கிளிய வச்சி என்ன பண்ணப் போற...போய் நாய்ட்ட தூக்கிப் போடு...”
எழுந்தவர் ‘தொப்’ பென நாற்காலியில் விழுந்தார். மயக்கம் வருவது போல் இருந்தது. போன வாரம் தன் கையில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் பஞ்சவர்ணக்கிளிக்கு இந்த நிலையா? நெஞ்சு அடைத்தது. அதைத் தடவிக்கொடுத்தத் தருணம் மீண்டும் வந்து அவரைத் தாக்கியது. அந்த ஸ்பரிசம் கண்களில் நீரைக் கோர்த்தது. மெதுவாக வேப்பமரத்தைப் பார்த்தார். தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு அது சோகமாக உட்கார்ந்திருப்பது போல் அவருக்குப் பட்டது. உடம்பெல்லாம் வியர்த்தது. மூச்சுத் திணறியது. இமைகள் மூடிய போது கண்ணீர் வழிந்தது.
எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார் என்று தெரியவில்லை.
“சந்தி…சந்தி…சந்திரா…” என்று மெலிதாகக் கூப்பிட்டார். சந்திரா அரக்கப் பரக்க ஓடி வந்தார்.
“இப்படி பக்கத்துல உக்காரு…” என்றதும் சந்திரா அவரது நாற்காலியின் கீழே தரையில் உட்கார்ந்தார்.
அவளது தலையில் கையை வைத்து கோதியபடியே சொன்னார், “மன்னிச்சிக்கம்மா…”
*********



Comments