செருப்பு - சிறுகதை - உயிர்மெய்யார் - 08.11.2025
- உயிர்மெய்யார்

- Nov 8, 2025
- 5 min read

“எங்கப் போட்டீங்க மச்சான்?”
“அதோ!…அங்கப் போட்டேன்…மாப்ள”
“ரெண்டையும் ஒண்ணாவா?...”
“ஆமா!…ரெண்டையும் ஒண்ணாத்தான் போட்டன்….அப்படித்தான போடனும்?…”
“அய்யய்யே!…அப்படிப் போடக்கூடாது மச்சான்….”
“அப்பறம்?...”
“இங்க ஒன்னு போடனும்….அப்பறம் ரொம்ப தூரம் தள்ளி…அதோ... அங்க இன்னொன்ன போடனும்…”
“அப்படியா?...எதுக்கு மாப்ள?”
“அப்பத்தான் காணாப்போகாது…ஒத்தச் செருப்பை வச்சிகிட்டு திருடன் என்னா பண்ணுவான்…..” என்று சொல்லிவிட்டு ‘கப கப’ன்னு சிரித்தான் பரதன்.
பரதனின் மனைவி வேணி, “இப்படித்தான் அண்ணா!…இவங்கத் தொல்லைத் தாங்க முடியல..கல்யாண வீட்டுக்குப் போனா…ஒரு செருப்பை வாழை மரத்து ஓரம் கழட்டிப் போடுவாங்க. இன்னொன்ன பந்தி வாசல்ல கீத்துக்கடியில ஒளிச்சி வப்பாங்க…” என்று அலுத்துக்கொண்டாள்.
ஈஸ்வரனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“மாப்ள! எல்லாரும் ரெண்டு செருப்பையும் கழட்டி அதே எடத்துல தான போட்டுருக்காங்க…நீ மட்டும் ஒரு செருப்ப ஒரு எடத்துலயும் இன்னொரு செருப்ப இன்னொரு எடத்துலயும் போடச் சொல்ற…”
“முட்டாப் பசங்க மச்சான்…எல்லாரும் முட்டாப் பசங்க. ரெண்டு செருப்பையும் ஒரே எடத்துல போடலாமா?... பரதன் சொல்லச் சொல்ல, அங்கு வரிசையாக உட்கார்ந்திருந்தப் பிச்சைக்காரர்கள், அவர்கள் இருவரையும் ஒருமாதிரி பார்த்தார்கள்.
“இப்பயும் பாருங்க அண்ணா! அகழி ஓரம் ஒரு செருப்ப போட்டு வச்சிருக்காங்க…அப்பறம் ஒத்த செருப்ப மட்டும் கால்ல போட்டு இழுத்துகிட்டே வந்து….இதோ இந்த கேராளாந்தகன் வாசல்ல புல்லுக்குள்ள ஒளிச்சி வச்சிருக்காங்க….” என்று வேணி சொன்னாள்.
ஈஸ்வரனுக்கு அது புதுசாக இருந்தது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? இதைப் புத்திசாலித்தனம் என்று சொல்லலாமா? இந்த யோசனை ஏன் இதுவரை அவனுக்குத் தோன்றவில்லை என்று சற்றே வருத்தப்பட்டான்.
தஞ்சாவூரில் ராஜராஜ சோழன் கட்டிய பெருவுடையார் கோயிலில் சதய விழா. அந்த விழாவில் பல கலை, இலக்கிய, பக்தி நிகழ்ச்சிகள் நடக்கும். அதைக் கண்டு களிக்கத்தான் இவர்கள் வந்திருக்கிறார்கள்.
பரதனும் ஈஸ்வரனும் மாமன் மச்சான்கள். பரதனின் மனைவி வேணி ஓர் ஆசிரியை.
“கோயிலுக்குள்ளப் போறதுக்கு முன்னாடி, கொஞ்சம் இருங்க அண்ணா…வீட்டுலேர்ந்து நீருருண்டை (கொழுக்கட்டை) செஞ்சி எடுத்துட்டு வந்தேன். இந்த பிச்சைக்காரர்களுக்கு குடுத்துட்டு உள்ள போகலாம்…”
“ரொம்ப நல்லது தங்கச்சி…” என்று ஈஸ்வரன் சொல்ல, சிறு வாளியில் எடுத்து வந்த நீருருண்டையை ஒவ்வொன்றாக எடுத்து வரிசையாக உட்கார்ந்திருந்தவர்களுக்குக் கொடுத்தாள்.
நீண்ட தாடியுடன் ஒரு பெரியவர், முக்காடு போட்டுக் கொண்டிருந்த நடுத்தர வயது அம்மா, இரண்டு குழந்தைகளுடன் ஒரு தாய், ஊன்றி நடக்கும் கட்டைகளுடன் மாற்றுத் திறனாளி கணவன் மனைவி இருவர் என வரிசையாக அமர்ந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நீருண்டைகளைக் கொடுத்தாள்.
அப்பொழுது மாற்றுத் திறனாளிப் பெண், “நீ நல்லா இருக்கனும் தாயி…” என்று ஆசீர்வதித்தாள். அந்தக் கணவனும் புன்முறுவல் பூத்து இருகைகளையும் கூப்பி நன்றியோடு தலையசைத்தான்.
எல்லாவற்றையும் கொடுத்து விட்டு வேணி, பரதனுடனும் ஈஸ்வரனுடனும் சேர்ந்துக் கொண்டாள்.
கோயில் வளாகம் முழுக்க வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில் மட்டுமல்ல, தஞ்சாவூர் நகரே அலங்கார விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்தது. கூட்டம் அலை மோதியது. வெளியூர் முகங்கள் பல தென்பட்டன. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மற்றும் வட மாநிலங்களிலிருந்தும் பக்தர்களும், சுற்றுலாவாசிகளும், கலா ரசிகர்களும் குழுமியிருந்தனர்.
கோயில் யானை வரவேற்றது. மூவரும் உள்ளே போய் புல்தரையில் அமர்ந்தனர்.
“நேற்று வந்தீங்களாண்ணா?” வேணி ஈஸ்வரனிடம் கேட்டாள்.
“இல்லம்மா…வரமுடியல…நீங்க?” ஈஸ்வரன் கொஞ்சம் வருத்தத்துடன் சொன்னான்.
“நாங்க ஒவ்வொரு வருஷமும் ரெண்டு நாளும் ஆஜராயிடுவோம்….” என்று பரதன் உற்சாகமாகச் சொன்னான்.
“நேத்து நீங்க பாத்துருக்கனுமிண்ணா…யானை மேல திருமுறை நூல்களை வச்சி ஊர்வலமா போனாங்க. நூறு நூத்திஐம்பது ஓதுவார்கள் திருமுறை ஓதிகிட்டே போனாங்க…நாலு ராஜவீதியிலயும் வீதியுலா…சூப்பரா இருந்திச்சிங்கண்ணா…மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம்’னு தூள் கெளப்பிட்டாங்க” என்று கண்களில் ஆர்வம் பொங்க வேணி சொன்னாள்.
“அப்படியா?....”
“அப்பறம் முக்கியஸ்தர்கள் எல்லாம் சேந்து அங்க வெளிய இராஜராஜ சோழன் சிலை இருக்குல்ல…அதுக்கு மாலைப் போட்டாங்க மச்சான்…” என்று பரதனும் தன் பங்குக்கு நேற்று நடந்ததைச் சொன்னான்.
“ பாக்க முடியாமப் போச்சே…” என்று ஈஸ்வரன் சொல்வதற்குள்,
“ அய்யய்யோ!..அத விட, சாமி அபிஷேகத்தைப் பாத்துருக்கனும்ணா…மஞ்சள், சந்தனம், பால், தயிர், எளநி..இப்படி முப்பது நாப்பது அயிட்டத்துல அபிஷேகம் நடந்துச்சி பாருங்க..அதைப் பாக்க ஆயிரம் கண்ணு வேணும்ணா…” என்றாள் வேணி.
“ ஓ!…”
“ஏந்திரிங்க…அதோ கோயிலுக்கு முன்னாடி பரதநாட்டியம் ஆரம்பிக்கப் போகுது. ஆயிரத்து சொச்சம் நடனக் கலைஞர்கள் ஆடப்போறாங்க…வாங்க…வாங்க…” என்று பரதன் சொல்ல மூவரும் எழுந்து சென்றுப் பார்த்தனர்.
வண்ண ஒளி விளக்கில், மயக்கும் இசை ஒலியில், கண்ணைப் பறிக்கும் சிறுமிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. பார்த்து மகிழ்ந்தனர்.
நடனம் நிறைவு பெற்றதும், கோயிலின் கிழக்குப் பகுதியில் பெரும் பந்தல் போட்டு மேடை இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.
“அண்ணா! நேத்து கருத்தரங்கம், கவியரங்கம் எல்லாம் நடந்துச்சி. இன்னக்கி, பாட்டுக் கச்சேரி, கிராமிய நடனம், பட்டிமன்றம் எல்லாம் இருக்குண்ணா…” என்று வேணி சொன்னாள்.
“ அது மட்டுமில்ல…ராஜராஜன் பேருல விருது குடுக்கறாங்க. பேச்சாளர்கள் பேசுவாங்க. இன்னக்கி ஒரு ஆதீனம் வர்றாரு…நல்லா பேசுவாரு.” என்று பரதன் சொன்னான்.
பந்தலில் இடம் தேடி மூவரும் உட்கார்ந்தார்கள்.
அப்பொழுது ஈஸ்வரன், “மாப்ள! உக்காந்துருங்க…நான் போயி கொறிக்க ஏதாவது வாங்கிட்டு வாரேன்…” என்று சொல்லி, தான் உட்கார்ந்திருந்த நாற்காலியில் சிறு பையை வைத்துவிட்டுப் போனான். முறுக்கு, அதிரசம், இனிப்பு சோமாசா என்று சில பட்சணங்களையும், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என்று சில அன்ன வகைகளையும் வாங்கிக்கொண்டு வந்தான்.
அப்பொழுது பரதன் சொன்ன ஆதீனம் பேசிக்கொண்டிருந்தார்.
தலையில் பெரிய கொண்டையுடனும், நெற்றியில் விபூதி பட்டையுடனும், கழுத்தில் ருத்ராட்ச மாலையுடனும், சற்றே தள்ளிய தொந்தியுடனும் காவி உடையில் காட்சியளித்த ஆதீனம் சுந்தரத் தமிழில் பேசிக் கொண்டிருந்தார்.
ஈஸ்வரன் வாங்கி வந்த பட்சணங்களைச் சாப்பிட்டுக் கொண்டே அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
“மாமன்னன் இராஜராஜனின் புகழ் தெற்காசிய நாடு முழுதும் பரவியிருந்த காலம் ஒன்று இருந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவன் கட்டிய கோயில் இதோ நம் முன்னே கம்பீரமாக எழுந்து நிற்கிறது. இந்த இடத்தில் இயற்கையாக இருக்கும் சுக்கான் பாறையை ஐந்து அடிக்குத் தொட்டி போல வெட்டியிருக்கிறார்கள். அந்த ஐந்து அடிக்கும் மணலை நிரப்பியிருக்கிறார்கள். அதன் மேல் தான் இந்த 126 அடி பிரம்மாண்டம் நிற்கிறது. எந்த பூகம்பம் வந்தாலும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசையுமே தவிர விழாது. அதனால் தான் தஞ்சாவுர் தலையாட்டி பொம்மையை உருவாக்கியிருக்கிறார்கள்.” என்று சொன்ன போது பரதன், “அப்பா! நம் முன்னோர்கள் இப்படியெல்லாம் செஞ்சிருக்கான்னு நெனக்கும் போது புல்லரிக்குது மச்சான்” என்றான்.
ஆதீனம் தொடர்ந்து பேசினார்.
“கட்டிடடக் கலை மட்டுமா? குடவோலை தேர்தல் மூலம் மக்களாட்சி முறையைக் கொண்டு வந்தான். கடல் கடந்து வணிகம் செய்தான். காடு மேடுகளை கழனியாக்கி விவசாயத்தைப் பெருக்கினான். நதி, ஆறு, ஏரி, கண்மாய், வாய்க்கால், குளம், ஊருணி என்று நீர் மேலாண்மை மேலோங்கியிருந்தது. கொடுங்கோல் ஆட்சி புரிபவர்களின் நாட்டை எதிர்த்துப் போராடி வெற்றிக் கண்டான். தமிழை வளர்த்தான். அவனிடமிருந்து கற்க வேண்டுமென்றால் ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம்…” என்று சொல்லி கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களைப் பார்த்து சற்றே ஒரு இடைவெளியை விட்டார்.
“இராஜராஜனிடமிருந்து அப்படி என்ன கற்றுக் கொள்ளலாம்” என்று தெரிந்துக் கொள்ள எல்லோரும் ஆர்வமாகக் காத்திருந்தார்கள்.
அப்பொழுது தான் ஒருவர் வந்து தண்ணீரோ, சோடாவோ கொடுத்தார். அதை எடுத்து ஒரு மிடறு குடித்தார் ஆதீனம்.
“அடப் போங்கயா…இராஜராஜனிடமிருந்து கத்துக்கறதுன்னா இதக் கத்துக்கலாமின்னு சொல்லிட்டு நிறுத்திட்டாரு. எல்லாரும் அது என்ன?’ன்னு யோசிச்சிகிட்டு காத்திருக்காங்க. இப்ப போயி சோடா குடுத்து சஸ்பென்சை அதிகப்படுத்துறீங்க…”என்று பரதன் அலுத்துக் கொண்டான்.
“பொறுமையா இரு…சொல்வாரு…” என்று வேணி ஆசுவாசப் படுத்தினாள்.
“மாப்ள..நீங்க மட்டும் ஒரு செருப்ப ஒரு எடத்துலயும், இன்னொரு செருப்ப இன்னொரு எடத்துலயும் இடைவெளி விட்டு வக்கிறீங்கள்ல…அது மாதி இது ஒரு கேப்’ன்னு நெனச்சிக்குங்க..” என கிண்டலாக ஈஸ்வரன் சொல்ல மூவரும் சிரித்தார்கள்.
ஆதீனம் தொடர்ந்தார்.
“கொடுப்பது தான் வாழ்க்கை. எல்லோருக்கும் சமமாக கொடுப்பது தான் வாழ்க்கை. இதைத் தான் அருள் மொழி வர்மன் என்கிற இராஜராஜன் செய்திருக்கிறான். என்ன சான்று? இதோ தட்சிண மேரு என்று அவனால் அழைக்கப்பட்ட இந்தப் பெருவுடையார் கோயில் இருக்கிற வளாகம் முழுக்க இருக்கிற ஆயிரத்து பதினொன்று கல்வெட்டுகள் தான் சான்றுகள்.
இந்த சிவன் கோயிலைக் கட்ட உதவிய அனைவருக்கும் தன் பட்டமான ‘இராஜராஜன்’ என்கிற பட்டத்தைக் கொடுத்து அழுகு பார்த்தான். அதை அவர்கள் பெயருடன் இணைத்து கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறான். அப்படி அறுநூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. பூசாரிகள், விளக்கேற்றுபவர்கள், துவைப்பவர்கள், தையல்காரர்கள், நகைக்கலைஞர்கள், குயவர்கள், தச்சர்கள், குடைப்பிடிப்பவர்கள், நடன குருக்கள், தேவதாசிகள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள், கணக்காளர்கள் எனப் பட்டியல் நீளுகிறது. சமூக அந்தஸ்தைப் பார்க்கவில்லை. தாராளமாகக் கொடுத்தான். எல்லோருக்கும் கொடுத்தான்.
உங்களிடம் இருப்பதை மற்றவர்களுக்குக் கொடுத்துப் பாருங்கள். வாழ்க்கை அழகாக இருக்கும். இயற்கை அதைத் தான் செய்கிறது. அதனால் தான் இயற்கை அழகாக இருக்கிறது. இயற்கை இருக்கும் வரை இராஜராஜனின் கொடைத் தன்மையும் புகழும் இருக்கும்” என்று அவர் உரையை நிறைவு செய்த போது அரங்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினர்.
“அண்ணா! பாப்பாவ அம்மா வீட்டுல விட்டுட்டு வந்தோம். நாங்க சீக்கிரம் கெளம்பனும். நீங்க இருந்து பாத்துட்டு வர்றீங்களா?” என வேணி கூறிக்கொண்டு எழுந்தாள்.
“அப்படியா?..நான் கூட நாளைக்கு வெளியூர் போவனும். நானும் கெளம்புறேன். வாங்க போவலாம்....”என்று ஈஸ்வரனும் எழுந்தான்்.
“இருடி…கோலாட்டம் பாத்துட்டு போவலாம்..” என பரதன் வேணியைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தான்.
“பாருங்கண்ணா!…இப்படித்தான் பொறுப்பே கெடையாது. செருப்பு மேல இருக்கற கவலை சொந்த மக மேல இருக்கா பாத்தீங்களா?” என வேணி கோபமாகச் சொன்னாள்.
கணவன் மனைவிக்கிடையே கருத்துச் சொல்ல ஈஸ்வரன் முன்வரவில்லை. எப்படியோ வேணி பரதனைச் சமாதானப்படுத்தி பந்தலுக்கு வெளியே அழைத்து வந்துவிட்டாள்.
கூட்ட நெரிசல். இலவசமாகக் கொடுக்கும் பிரசாதம் வாங்க பெரிய வரிசை நின்று கொண்டிருந்தது. சில இளைஞர்கள் சுவரோரம் உட்கார்ந்து மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தனர். முண்டியடித்து மூவரும் கோயிலுக்கு வெளியே வந்து விட்டனர்.
கேராளந்தகன் வாயிலில் இருந்த செருப்பைப் போட்டுக்கொண்டு, ஒத்தக் கால் செருப்போடு காலை இழுத்து இழுத்து, பரதன் நடந்து வந்தான். இன்னொரு செருப்பு அகழி பள்ளத்தின் ஓரத்தில் போட்டிருந்தான். ஆனால் அந்த இடத்தில் அதைக் காணவில்லை. சுற்று முற்றும் பார்த்தான். ம்ஹூம்! காணவில்லை.
“இங்க தானடி போட்ருந்தேன்…காணோம்…” என்று பதறினான் பரதன்.
“பொறுமையா பாருங்க மாப்ள…” ஈஸ்வரன் பதட்டத்தைக் குறைத்தான்.
வேணியும் மொபைல் போனில் டார்ச் லைட் அடித்துத் தேடினாள்.
“காணோமே…இங்க தான் போட்டிருந்தீங்க…”
பத்து இருபது நிமிடம் பரபர’வென கழிந்தது. அகழி அருகில் போட்டிருந்த செருப்பைக் காணவில்லை. இனியும் தேடிப் பிரயோசனம் இல்லை என்ற நிலைக்கு வந்த போது, வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தார்கள். வேணியை பின்பக்கம் அமரவைத்து, இரு சக்கர வாகனத்தில், ஒற்றைச் செருப்புடன் பரதன் வீட்டிற்குக் கிளம்பினான்.
ஈஸ்வரன் ஓர் ஆட்டோ பிடித்து தன் வீட்டிற்குச் சென்றான்.
******
அடுத்த நாள் காலை.
பகலில் தேடலாம் என்று பரதன் பெரிய கோவிலுக்கு வந்த, அகழிப் பக்கம் போனான். அப்பொழுது ஒரு காலை நீட்டிக்கொண்டு அந்த மாற்றுத் திறனாளி தன் மனைவியிடன் உட்கார்ந்திருந்தார். அவர் காலில் அவன் செருப்பு இருந்தது.
செருப்பைப் பார்த்ததும் பரதனுக்கு மகிழ்ச்சி. அருகில் சென்றான். அவன் செருப்பு தான். அவருடைய காலுக்கு அது வெகு பொருத்தமாய் இருந்தது.
மாற்றுத்திறனாளியான இருவரும் பேசிக் கொண்டார்கள்.
“யாரோ செருப்பைக் கழட்டி போட்டுருக்காங்க ராஜா!…அதுல ஒத்த செருப்பு மாத்திரம் கூட்ட நெரிசல்ல பள்ளத்துல உளுந்துருக்கனும். அது தெரியாம பாவம் தேடிட்டு போயிருப்பாங்க..”
“ஆமா! அந்தச் சின்னப் பையன் குழியில எறங்கி எடுத்துக் குடுக்கலன்னா, எனக்கும் கெடைச்சிருக்காது மணி!…என் காலுக்கு செஞ்ச மாதிரியே இருக்கு…இல்ல?”
“ஆமா ராஜா! இப்பத்தான் ஓன் பேருக்கு ஏத்தமாதிரி ‘ராஜராஜன்’ மாதிரி மிடுக்கா இருக்க…செருப்ப கொடுத்த மகராசன் நல்லா இருக்கட்டும்…”
பரதனுக்கு ஆதீனம் சொன்னது காதில் ஒலித்தது. வீட்டுக்குத் திரும்பினான்.
*********



The narration gives a live experience of the sadhaya thiruvizha in Tanjore.It also gives us the greatest message that Giving is happiness ❤️.True happiness lies in Giving what we can to others.
Simple and touching story
வணக்கம் குரு தஞ்சாவூருக்கே வந்ததுபோன்ற உணர்வு.
நான்கூட எப்பொழுதும் செருப்பை ஒன்றாகப் போடமாட்டேன். நம் மக்கள் மீது அவ்வளவு நம்பிக்கை. ஒரு முறை பெங்களூருக்குச் சென்றபோது பக்கத்தில் இருந்தவர் (அவர் சன்னல் ஓரம், நான் பக்கத்தில்) இறங்கும்போது பக்குவமாக அவர் செருப்பை விட்டுவிட்டு என் செருப்பைப் போட்டுக்கொண்டு சென்றுவிட்டார். தவறுதலாகத்தான் போட்டுச் சென்றிருப்பார் என்று நம்புகிறேன்.
அதேபோல கோவில் திருமண மண்டபம், போன்ற இடங்களில் அவசரத்தில் தவறுதலாகப் போட்டுக் கொண்டு போய்விடக்கூடாது என்ற பயத்தில்தான் மாற்றிப் போடுவது. இராசராசனின் வரலாற்றுத் தகவலோடு இணைத்துள்ள விதம் சிறப்பு. வாழ்த்துகிறேன் குரு.😍