கட்டுரை 19 - விக்டோரிய மாநில pandemic bill ஏன் எதிர்ப்பை சந்திக்கிறது?

Updated: Jan 9


கோவிட் தொற்று சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது. சமூக, கலாச்சார, பொருளாதார தளங்களில் பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் அரங்கிலும் அது அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட பேரிடர்கள் வந்தால் அரசு எப்படி அதனை எதிர் கொள்வது என்று விக்டோரிய அரசு ஒரு சட்ட முன்வடிவை உருவாக்கியிருக்கிறது. அந்த சட்ட முன்வடிவு இன்றைக்கு பேசு பொருளாக ஆகியிருக்கிறது. எதிர்ப்புகளையும் எதிர்கொள்கிறது.


விக்டோரிய மாநிலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சந்தித்த அனுபவங்களைக் கொண்டு இந்த சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறது அரசு. ஆனால் அதிகார குவிப்பை எதேச்சாதிகார அரசு செய்கிறது என்று இந்த சட்ட முன்வடிவை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். இந்த சட்ட முன்வடிவில் பல மாற்றங்கள் தேவை என்கின்றனர் சிலர்.


சட்ட முன்வடிவு என்ன சொல்கிறது?

கோவிட் தொற்றுநோய் வந்த பொழுது, ஏற்கனவே நடைமுறையில் இருந்த அவசரநிலை சட்டத்திற்கு உட்பட்டு, விக்டோரிய அரசு செயல்பட்டது. தொற்று நோயின் அபாய நிலைக்கிணங்க, ஒவ்வொரு நான்கு வாரங்களுக்கும் ஒருமுறை அதில் மாற்றங்களை செய்து வந்தது. அதன் அடிப்படையில்தான், ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்தது. முகக்கவசங்களை போடும் உத்தரவோ தடுப்பூசி போடும் உத்தரவோ, அவை எல்லாமே அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் போடப்பட்டது. அது போதுமானதாக இல்லையென்றும் காலத்திற்கேற்ற மாற்றம் வேண்டும் என்றும் இந்த புதிய சட்ட முன் வடிவை தாம் கொண்டுவந்திருப்பதாக விக்டோரிய மாநில அரசு கூறுகிறது.

புதிய சட்ட முன்வடிவில் உள்ளடக்கப்படிருக்கும் அம்சங்கள்:

• இதுவரை பேரிடர் கால அறிவிப்பை மாநிலத்தின் முதன்மை சுகாதார அதிகாரியே அறிவிப்பார். இனி அந்த அதிகாரம் மாநில Premierக்கு தரப்படும். • ஊரடங்கு உத்தரவை, மூன்று மாதங்கள் தொடங்கி, காலவரையற்ற அளவில் நீடிக்கலாம். • பொது ஆணைகளை வெளியிட சுகாதார அமைச்சருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. • சுகாதார அமைப்புகளிலிருந்தும், மனித உரிமைக் குழுக்களிலிருந்தும் மற்றும் சமூகக் குழுக்களிலிருந்தும் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு, தொற்றுநோய் மேலாண்மைக் குழு அமைக்கப்படும். • அரசின் ஆணைகளுக்கு கட்டுப்படாமல் மீறுகிற தனிநபர்களுக்கு 90,500 டாலர்களும், வணிக நிறுவனங்களுக்கு 452,500 டாலர்களும் அபராதம் விதிக்கப்படும்.

கொரோனா தொற்று வந்ததிலிருந்து, இரண்டு வருடங்களாக, அரசு எடுத்த நடவடிக்கைகளின் அனுபவத்திலிருந்து இந்த மாற்றங்களை சட்டமுன்வடிவில் கொண்டு வந்திருப்பதாக அரசு கூறுகிறது. வருங்காலங்களில் அரசு சிறப்பாக செயல்பட இது உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று விக்டோரிய சுகாதார அமைச்சர் Martin Foley கூறியுள்ளார்.

ஏன் எதிர்ப்பு?

புதிய சட்டம், ஜனநாயகத்தின் மேலான தாக்குதல் என்று எதிர்கட்சி கூறுகிறது. மாநில Premier-இன் கையில் அதிகார குவிப்பை இந்த சட்டம் கொடுக்கிறது என்றும், இது போல் இதுவரை நடந்தது இல்லை என்றும் இந்த சட்ட முன்வடிவு சட்டமாக நிறைவேற்றப்பட்டால் அது பெரும் ஆபத்தைக் கொடுக்கும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் Mathew Guy குறிப்பிட்டுள்ளார்.

தன்னிச்சையாக ஆணையிடும் அதிகாரம் அளவுக்கதிகமாக சுகாதார அமைச்சரிடம் வழங்கப்பட்டிருப்பதாகவும், ஊரடங்கு உத்தரவின் அதிகபட்ச காலம் வரையறுக்கப்படாமல் இருப்பது கவலையை அளிப்பதாகவும் விக்டோரிய மாநில வழக்ககறிஞர்களின் சங்கம் கருத்து வெளியிட்டுள்ளது.


சட்ட முன்வடிவில் திருத்தங்கள்

விக்டோரிய நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்படும் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதையடுத்து, இந்த சட்ட முன்வடிவில் பின்வரும் திருத்தங்களைக் கொண்டு வர அரசு ஒத்துக்கொண்டுள்ளது:

• பொது சுகாதார ஆணைகளை மீறுகிறவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதக் கட்டணம் குறைக்கப்படும். • தொற்றுநோய் ஒரு பேரிடராக மாறிவிட்டது என்கிற அறிவிப்பை வெளியிட ஓர் அழுத்தமான அடிப்படையை அரசு பின்பற்றும். • அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்படும். • போராட்டம் செய்யும் உரிமை வழங்கப்படும். • பதினான்கு நாட்களுக்குள் பொது சுகாதார ஆலோசனைகளை வெளியிடுவது என்பதை மாற்றி, தொற்று நோய் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் ஆலோசனைகளை வெளியிடப்படும்.

சட்ட முன்வடிவில் கொண்டுவரப்படும் திருத்தங்களுக்கு வரவேற்பும் எதிர்ப்பும்

சட்ட முன்வடிவில் அரசு கொண்டு வந்த இந்த மாற்றங்களைச் சிலர் ஆதரித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, Animal Justice கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Andy Meddick வரவேற்றுள்ளார். வெளிப்படையான மற்றும் பொறுப்பான தொற்றுநோய் மேலாண்மை வடிவமைப்பை இந்த மாற்றங்கள் உறுதி செய்கிறது என அவர் கருத்து தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் சட்ட மையத்தின் இயக்குநர் Daniel Webb இந்த திருத்தங்களை ஆதரித்துள்ளார். மாற்றப்பட்டுள்ள சட்ட முன்வடிவு, பாதுகாப்பான சிறந்த முடிவுகளை அரசாங்கம் எடுக்கவும், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கவும் உதவும் என்று அவர் கூறியுள்ளார்.


சுயமாக மேற்பார்வையிடும் அமைப்பு பற்றிய விளக்கம் இந்த சட்ட முன்வடிவில் தெளிவாக இல்லையென்றும், சுகாதார அமைச்சரே முடிவுகளை எடுக்கும் பட்சத்தில், மாநில முதன்மை சுகாதார அதிகாரிக்கு போதுமான அதிகாரம் இருக்காது என்றும், தொற்றுநோய் குறித்த முடிவுகளை மேற்பார்வையிட நீதித்துறை சார்ந்த ஒரு அமைப்பு இருக்கவேண்டும் என்றும் Victoria’s Ombudsman Deborah Glass கூறியுள்ளார். ஒரு தனிநபரிடம் அதிகாரம் குவிந்திருப்பதாக கவலைப்படுவோருக்கு நீதித்துறை சார்ந்த ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படுவது ஆறுதலைக் கொடுக்கும் என்றும் அவர் வாதிடுகிறார்.

சில திருத்தங்களைச் செய்ய அரசு ஒத்துக்கொண்டுள்ளது. ஆனால் முக்கியமான அம்சங்கள் அப்படியே உள்ளன என்றும், அவைகளில் திருத்தம் தேவை என்றும் விக்டோரிய மாநில வழக்ககறிஞர்களின் சங்க Roisin Annesley கூறினார். சுகாதார அமைச்சர் பிறப்பிக்கும் உத்தரவுகளின் மீது நாடாளுமன்றத்திற்கு எவ்வித கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது மிகப்பெரிய குறை என அவர் கூறுகிறார்.


Business community எனப்படும் வர்த்தக அமைப்புகளும் இந்த சட்ட முன்வடிவிற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அதிகாரம் பரவலாக்கப்படாமல், ஒரு சிலரிடம் குவிக்கப்படுகிறது ஆபத்தானது என்கிற பார்வையை ஆஸ்திரேலிய தொழில் குழுமத்தின் Tim Piper-உம் வெளிப்படுத்தியுள்ளார்.


வலுக்கும் எதிர்ப்பு

இந்த சட்ட முன்வடிவுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி விக்டோரிய மாநில Premier க்கு எதிராக கோஷங்களை முன்வைத்தார்கள். வன்முறை படங்களை ஏந்தி அதிபருக்கு மரண அச்சுறுத்தலை விடுத்துள்ளனர். கட்டாய தடுப்பூசிக்கு எதிரானவர்கள் இந்த சட்ட முன்வடிவு எதிர்ப்பு கொள்கையை கையிலெடுத்துள்ளனர். இந்த நிலையில், விக்டோரிய நாடாளுமன்ற கடைசிக் கூட்டத் தொடர் நவம்பர் மாதம் 30ம் தேதி தொடங்கி டிசம்பர் 2ம் தேதி முடிவடைகிறது.


நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் லேபர் கட்சி அரசு இந்த சட்டத்தை எளிதாக நிறைவேற்றக்கூடும். ஆனால் மேலவையில் உள்ள மொத்தமுள்ள 40 உறுப்பினர்களில், 18 உறுப்பினர்கள் ஆளும் கட்சியான லேபர் கட்சியை சார்ந்தவர்கள். Greens கட்சி, Reason கட்சி மற்றும் Animal Justice கட்சிக்கு தலா ஒரு உறுப்பினர் உள்ளனர். எனவே இந்த கட்சிகளுடன் இணைந்து இந்த சட்ட முன்வடிவை சட்டமாக்க லேபர் அரசுக்கு பெரும்பான்மை 21 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துவிடும். எனவே இந்த சட்ட முன்வடிவு சட்டமாக்கப்படலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல் என்னவெனில், ஆளும் லேபர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட Adem Somyurek சட்ட முன்வடிவை எதிர்த்து வக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

விக்டோரிய மாநில அரசிடம் பேரிடர் தொடர்பான அதிகாரம் டிசம்பர் 16 வரையே உள்ளது. எனவே இந்த காலக்கெடு முடிவதற்குள் புதிய சட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்ற நெருக்கடியில் ஆளும் லேபர் கட்சி உள்ளது.


*****

25 views0 comments