ஓர் எளியக் கேள்வி - கதைச் சுருக்கமும் - வாசிப்பு அனுபவும்
- உயிர்மெய்யார்

- May 17
- 3 min read
Updated: Jun 13

ஓர் எளியக் கேள்வி - கதைச் சுருக்கம்
இம்டோங்க்லா ஒரு கெட்ட கனவைக் காண்கிறாள். தன் கணவனை வீட்டிலேயே இருக்கச் சொல்கிறாள். அவளுடைய அப்பா ஒரு காவ்புரா (தலையாரி). அவள் கணவனும் ஒரு காவ்புரா. அவளுக்கு நான்கு குழந்தைகள். அந்தக் கிராமத்தில் தீவிரவாத சக்திகள், தங்கள் இயக்கத்தில் சேர இளைஞர்கள் கேட்பார்கள். அரசாங்கம், புரட்சிக்காரர்களின் நடவடிக்கைகளைப் பற்றித் துப்புக் கேட்பார்கள். இந்திய இராணுவம் அவர்களின் தேவைகளைக் கேட்பார்கள்.
ஒரு நாள். தீவிரவாதிகள் அந்தக் கிராமத்திற்கு வந்து அரிசி உட்பட மற்றப் பொருட்களை சேகரித்துக்கொண்டிருந்தார்கள். இம்டோங்க்லாவின் பக்கத்து வீட்டுக்காரன் குறைந்த அரிசி கொடுத்ததால் அவனைத் திட்டிக்கொண்டிருந்தார்கள். உடனே, இம்டோங்க்லா ‘உன்னிடம் கடன் வாங்கிய அரிசியைப் பெற்றுக் கொள்’ என்று சமயோசிதமாகச் சொல்லி கொஞ்சம் அரிசியைக் கொடுக்கிறாள். அப்படிப்பட்ட குணம் உடையவள் அவள்.
ஒரு வருடம் இரட்டை வரிக் கேட்டார்கள். இம்டோங்க்லா தீவிரவாதி தலைவர்களிடம் போய் பேசச் சொன்னாள். பட்டாளத்துக்காரங்க அவளது கணவனை, அவன் தலைமறைவுக்காரர்களுக்கு உதவி செய்ததற்காக பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். குளிருக்கு சால்வையை எடுத்துக் கொண்டு அவள் இராணுவ முகாமுக்குச் சென்றாள். அவள் கணவனுக்குச் சால்வையை கொடுத்து விட்டு, அவன் முன் குதிக்கிறாள். இராணுவத் தலைவன் முன், அவளது மேலாடையைக் கழற்றி, அவளைச் சிறுமைப் படுத்துவது போல் முயன்றாள். புகையிலையை நிரப்பி புகை விட்டாள். இராணுவத் தலைவனின் தீப்பெட்டியை எடுத்துக் கொண்டே, ‘எங்க கிட்டே இருந்து உங்களுக்கு என்ன தான் வேணும்?’ என்று கேட்டாள். கேட்டுவிட்டு கணவனோடு வீட்டிற்குத் திரும்பினாள்.
இராணுவத் தலைவன் புகைப்பிடிக்க விரும்புகிறான். தீப்பெட்டியைத் தேடுகிறான். அது அங்கு இல்லை என்று கதை முடிகிறது.
ஓர் எளியக் கேள்வி - வாசிப்பு அனுபவம்
இலங்கையச் சேர்ந்த ஒரு வாசகர் இந்த நிகழ்வை மன வலியுடன் பகிர்ந்தார். அவர்கள் கிராமத்தில் ஒரு குடும்பம் இருந்தது. அவர்கள் வீட்டின் முன் ஒரு தென்னை மரம் இருந்தது. அந்தக்குடும்பத்தின் தலைவி அந்தத் தென்னை மரத்தை நன்றாகப் பராமரித்து வந்தாள். அதுவும் நன்றாக காய்த்தது. சில சமயம் இராணுவ வீரர்கள் அவ்வழியே போகும் போது, தாகத்திற்காக இளநீர் கேட்பார்கள். அந்தப் பெண்மணி ஓர் ஆளை அழைத்து இளநீரைப் பறித்துக் கொடுப்பாள். இரண்டு மூன்று தடவைகள் இப்படி நடந்தது. போராட்டக்காரர்கள் ஒரு தடவை இதைப் பார்த்துவிட்டார்கள். அந்த அம்மாவை அழைத்துக் கண்டித்தார்கள். சரி இனி இது போல் நடக்காது என்று உறுதியளித்தார். அடுத்த வாரம் இரண்டு போராட்டக்காரர்கள் ஏதோ ஒரு வேலையாக அந்தக் கிராமத்தில் வந்து தங்கினர். இராணுவ வீரர்கள் எதேச்சையாக அந்த கிராமம் வழி போகும்போது அந்தப் பெண்மணி வீட்டிற்கு வந்தனர். இளநீர் கிடைக்குமா? என்று கேட்டனர். அவளுக்கு தர்ம சங்கடம். இல்லை என்று சொல்ல முடியவில்லை. இனி இதுபோல் நடக்காது என்று உறுதியளித்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. தவித்தாள். இராணுவ வீரர்களுக்குச் சந்தேகம் வந்தது. இளநீரைப் பறித்து கொடுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டாள். இராணுவ வீரர்கள் இளநீர் குடிப்பதைப் போராட்ட வீரர்கள் நேரடியாகப் பார்த்தனர். அடுத்த வாரம் அந்தப் பெண்மணி சுடப்பட்டு தென்னை மரத்தடியில் கிடந்தாள் என்று வாசகர் சொன்ன போது வாசகர் வட்ட நண்பர்கள் எல்லோரும் ஒரு வித மனவலியை அனுபவித்தது அந்த கனத்த மௌனத்தில் சப்தமாகக் கேட்டது எனக்கு.
எந்த நிலத்திலும், எந்தக் காலத்திலும் சாமான்ய மக்களே பாதிக்கப்படுகின்றனர்.
இன்னொரு வாசகர் கூறினார்: எந்த போராட்டக் குழுவும் தனியே வளர்ந்து விட முடியாது. மக்களின் ஆதரவு இல்லையென்றால் அவர்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். ஆம்! அது எவ்வளவு உண்மை! சாமான்ய மக்கள் சாதாரண மக்கள் அல்லர். பல்துறை அறிவும், திண்ணிய துணிவும் கொண்டவர்கள்.
இந்தக் கதையில் கதை நாயகியின் பெயர் இம்டோங்க்லா. தலைமறைவு சக்திகள் கிராம மக்களிடம் அரிசி மற்றும் மற்றப் பொருட்களை வாங்கும் போது ஒருவரால் தர இயலவில்லை. அவனைச் சித்ரவதைக்கு உட்படுத்த ஆயத்தமாகும் போது, இம்டோங்க்லா சமயோசிதமாக யோசித்து, கடனாக வாங்கிய அரிசியை திருப்பிக்கொடுப்பது போல் நடிக்கிறாள். என்னே அவளது சமயோசித புத்தி!
அது மட்டுமல்ல. அவளது துணிவு மெச்சத்தகுந்தது. தீவிரவாதிகளுக்கு துப்பு கொடுக்கிறான் என்று சந்தேகப்பட்டு இம்டோங்க்லாவின் கணவனை இராணுவம் தூக்கிப் போய் விடுகிறது. அடித்துச் சித்திரவதைச் செய்கிறார்கள். கிழக்கிந்திய பிரதேசத்தில் இப்படி ஒரு பழக்கம் இருக்கிறதாம். ஒரு பெண், ஒரு ஆணின் முன், தன் மேலாடையைக் கழற்றி பகடி செய்தால், அது அந்த ஆணின் ஆண்மையை கேலி செய்வதாகப் பொருளாம். இம்டோங்க்லா இராணுவத் தலைவனிடம், தன் கணவனை விடுவிக்கச் சொல்கிறாள். முடியாது என்று கேப்டன் சொல்கிறான். துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, ‘கேப்டன் அவளை நெருங்கியதும், அவள் எழுந்து நின்று தன் மேலாடையை அகற்றப் போவது போல் பாவனை செய்தாள். ஒரு மனிதனின் ஆண்மையற்ற செயலைச் சுட்டிக்காட்டும் வகையில், அவனை இழிவுபடுத்தும் குறியீடாக நாகன் இனப் பெண்கள் கையாளும் மிக அவமானகரமான சிறுமைப்படுத்துதல் அது என்பது அவனுக்குத் தெரியும்.’ என்று கதாசிரியர் எழுதுகிறார். இம்டோங்க்லா காரி துப்புகிறாள்.
இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே நிர்வாணமாக கொடுமைப்படுத்தப்பட்ட மணிப்பூர் மகள் தான் நினைவுக்கு வருகிறாள். மேலாடை கழற்றப் போவது போல் பாவனை செய்வதே ஒரு மனிதனின் ஆண்மையற்ற செயலை சிறுமைப்படுத்துவது, அவமானப்படுத்துவது என்றால், முழுவதும் கழற்றப்பட்ட அவல நிலையில் இருந்த பெண்ணின் நிலை, அதற்குக் காரணமான அத்தனைப் பேரையும் சிறுமைப்படுத்தவில்லையா? அவள் கூனிக்குறுகி, கூசிப்போன நிலையில் நடக்க வைத்த அத்தனைப் பேருக்கும் அவமானமாக இல்லையா? இம்டோங்க்லா அந்தக் கேப்டனை நோக்கி மட்டுமல்ல, என்னையும் நோக்கித் தான் காரித் துப்புகிறாள்.
ஒரு வாசகர் சொன்னார்: ச. பாலமுருகன் எழுதிய ‘சோளகர் தொட்டி’ நாவலை ஞாபகப்படுத்தியது இது. வீரப்பன் தேடுதல் வேட்டையில் நடந்த பல அதிகார வன்முறைகளுக்குச் சாட்சியாக சோளகர் தொட்டி இருந்தது என்றதும் இன்னொரு வாசகர் ஓடி வந்து மறுத்தார். வீரப்பன் கதையையும் விடுதலைக்காகப் போராடும் குழுக்களையும் நேர்கோட்டில் வைக்காதீர்கள் என்று சினந்தார்.
மக்களைச் சுற்றி பலரும் இருக்கிறார்கள். தீவிரவாதிகள் அல்லது தேசியவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் போராட்டக் காரர்கள் ஒரு புறம். இராணு வீரர்கள் மறு புறம். அரசாங்க அதிகாரிகள் இன்னொரு புறம். இம்டோங்க்லா கேட்டாள்: “டேய்! எங்ககிட்டே இருந்து உங்களுக்கு என்ன தாண்(டா) வேணும்?” மக்களுக்கு விடுதலைத் தரப்போகிறோம் என்று தான் போராட்டக் காரர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர். மக்களைக் காப்பாற்றப் போகிறோம் என்று தான் இராணுவ வீரர்கள் முகாமிடுகின்றனர். மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கப் போகிறோம் என்று தான் அரசாங்கமும் அதிகாரிகளும் பதவியில் இருக்கின்றனர். ஆனால் இம்டோங்க்லா போன்றவர்கள் இவர்களுக்கிடையே ஆலையில் இட்ட கரும்பாக படாத பாடு படுகின்றனர்.
கேப்டனின் சொத்தான ஒரு தீப்பெட்டியை அவள் எடுத்து வந்து விடுகிறாள். சிகரெட்டுக்கு தீ வைக்க முடியாமல் அவன் கோபத்தின் உச்சத்திற்குப் போகிறான்.
“எதிர்ப்பு என்று வந்து விட்டால் எப்படியெல்லாமோ காண்பிப்போம்” என்கிறாளா, சரியான நேரத்தில் சமயோசிதமாக அரிசியைக் கொடுத்து, அண்டை வீட்டுக்காரனைக் காப்பாற்றிய, மேலாடையைக் கழற்றப் போவது போல் பாவனைக் காண்பித்து அவன் சொரணையை பகடி செய்த, இம்டோங்க்லா?
அந்த இளநீர் கொடுத்தப் பெண் தான், மறுவாழ்வு பெற்று, இம்டோங்க்லாவாக வந்திருப்பாளோ?
என் தலைக்கு மேல் சரக்கொன்றை
(ஆசிரியர் - டெம்சுலா ஆவ்; தமிழில் - எம்.ஏ. சுசீலா; முதல் பதிப்பு - 2009; தமிழில் முதல் பதிப்பு - 2022; நற்றிணைப் பதிப்பகம்)
உயிர்மெய்யார்
17.05.2025, மெல்பர்ன்
**************



Comments