top of page

கட்டுரை 3 - நாட்டில் மவுனமாய் பரவும் சுண்டெலி கொள்ளை நோய்: நகருக்கும் வருமா?

Updated: Jan 9, 2022

BY JOHN B. PARISUTHAM

Mice are in plague proportions across rural NSW. Source: AP Rick Rycroft

மவுஸ் பிளேக் என்கிற எலி கொள்ளை நோய் வரம்பை மீறி, இன்றைய தேதியில், ஆஸ்திரேலியாவை அதிரடியாக கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது.


Originally published by SBS Tamil


நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்கு பகுதியைச் சார்ந்த நார்மன் மொய்ரிஸ் என்ற விவசாயி கலங்கிப் போய் நின்றார்.

“அடுத்த வறட்சிக்காக ஸ்டோர் செய்து வைத்திருக்கிற வைக்கோலை இந்த பாழாய்ப்போன எலிகள் துவம்சம் பண்ணி விட்டன. இப்போதே தடுக்கவில்லையென்றால் குளிர் கால விதைப்பு வீணாகும். எலிகளைக் கொல்ல 500 கிலோ Mouseoff வாங்கி வைத்திருக்கிறேன். மழை பெய்தாலோ, அடர்பனி வந்தாலோ எல்லாம் போச்சு. 4000 டாலரும் காலி.” என்று மோரிஸ் அவர்கள் சொல்லி மூன்று மாத காலங்கள் ஓடி, இப்பொழுது அவர் சொல்லியது போலவே பேரிடி வந்து விழுந்திருக்கிறது.

நீங்கள் உங்கள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அந்த உணவை உங்கள் சாப்பாட்டு மேசைக்கு கொண்டு வரும் மொய்ரிஸ் போன்ற எண்ணற்ற ஆஸ்திரேலிய விவசாயிகள் இப்படி ஆழாத் துயரத்தில் இருக்கின்றனர்.


mice plague overwhelming residents in regional New South Wales

AAP/supplied


மவுஸ் பிளேக் என்கிற எலி கொள்ளை நோய் வரம்பை மீறி, இன்றைய தேதியில், ஆஸ்திரேலியாவை அதிரடியாக கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது. பத்து மாதங்களுக்கு முன்பு தொடங்கிய சுண்டெலி கொள்ளை நோய் (mouse plague) இப்பொழுது புதிய பயிர்களை துவம்சம் செய்து வருகிறது. விவசாய உபகரணங்களை அழிக்கிறது. இதனால் வறட்சியினால் மீண்டு வந்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய விவசாயம் மீளமுடியாத ஆபத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.


அத்தோடு நின்று விடவில்லை. கூட்டம் கூட்டமாக வரும் எலிகள் என்ன செய்கின்றன தெரியுமா? தங்கள் அறைகளில் படுத்திருக்கும் போது, மக்களை அவர்கள் படுக்கையிலேயே சென்று கடிக்கின்றன. சிலரை பயந்து அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடவிடுகின்றன.


சுண்டெலி கொள்ளை நோய் எப்படி வந்தது?

நாட்டில் 2017 லிருந்து 2019 வரை இருந்த வறட்சி இந்த எலிகளுக்கு வசதியாகப் போய்விட்டது. ‘அடிச்சிதுடா சான்ஸ்’ என்று அவைகள் தாறுமாறாக இனப்பெருக்கம் செய்யத்தொடங்கி, இப்பொழுது ஆஸ்திரேலியாவையே அல்லோலகல்லோலப்பட வைக்கின்றன.


மூன்று வருடங்களாக பல்கிப் பெருகி 2020 வசந்த காலத்தில், அறுவடை சமயத்தில் திடீரென தோன்றின. அந்த வருடம் அறுவடை அமோகமாக இருந்ததால், எலிப்படை தின்று தீர்க்க ஏராளமாய் தானியங்கள் இருந்தன. இயற்கையில் எலிகளை சூறையாடும் விலங்குகள், முந்தைய மூன்று வருட வறட்சியில் இறந்து போய், குறைந்த எண்ணிக்கையில் இருந்த மகிழ்ச்சியில், எலிகள் கொண்டாட்டத்தில் இன்னும் அதிகமாய் தங்களை பெருக்கிக்கொண்டன.


The Riverina wheat crop is just emerging.

SBS Tys Occhiuzzi


அளவுக்கதிகமான அறுவடை மட்டுமல்ல, பருவ காலமும் எலிப்படையின் இனப்பெருக்கத்திற்கு சாதகமாக அமைந்துவிட்டது. Regional நியூ சவுத் வேல்ஸில் கோடைகாலம் லேசான ஈரப்பதத்துடன் இருந்தது. அதனால் கோடை காலத்திலும் அதனைத் தொடர்ந்து இலையுதிர் காலத்திலும் (Autumn) ஒன்று நூறாகி, நூறு ஆயிரமாகி, பார்க்கும் இடமெல்லாம் எலி மயமாய் ஆகிவிட்டது. வின்டரில் குளிரிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தங்கள் வளைகளில் தஞ்சம் புகுந்து, உண்டு உண்டு கொழுத்து பெருகத் தொடங்கின. விவசாயிகளோ அசுரத்தனமான எலிப்படையை அழிக்கப் போராடி தோற்றுப் போகின்றனர்.


எலிகளின் ராஜ்யம்

எலிகளின் ராஜ்யம் எங்கெல்லாம் பரவியிருக்கிறது தெரியுமா? இந்த வில்லன் எலிப்படை, தெற்கு குயின்ஸ்லாந்திலிருந்து, நியூ சவுத் வேல்ஸ் முழுக்க பரவி, வடக்கு விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா வரை தன் அரசாட்சியை நிறுவியிருக்கிறது. பல மில்லியன் கணக்கில் விரவியிருக்கும் இந்த எலிகள், விடுவிடுவென இனப்பெருக்கம் செய்வதாலும், மறைந்து வாழ்வதில் எக்ஸ்பர்ட்டாக இருப்பதாலும், உண்மையில் அவைகளின் இன்றைய கணக்கை கணிக்க இயலவில்லை என்கிறார்கள்.


எலி சிக்கல் முதலில் எங்கு தொடங்கியது?

மேற்கு NSW ல் உள்ள Dubbo, Coonamble, Warren, Nyngan, Narrabri உள்ளிட்ட தானியம் அதிகம் கிடைக்கும் இடங்களில் தான் முதன்முதலில் தொடங்கியது. பிறகு தெற்கு குயின்ஸ்லாந்தில் பரவி அங்கு மையம் கொண்டது. அதைத் தொடர்ந்து தெற்கு NSWஐ தொட்டு தொடர்ந்தது.


நிபுணர்களுக்கே புரியா வண்ணம், வறட்டு கோடைப்பகுதிகளான அடிலெய்ட் சமவெளி, Yark பெனின்சுலா, Eure பெனின்சுலா என்று ரவுண்டு கட்டி அடித்தது. அப்படியே யூ டர்ன் அடித்து வடக்கு விக்டோரியா சென்று, தெற்கு ஆஸ்திரேலியாவைக் கைப்பற்றியுள்ளது.

எலிகள் என்ன சேதங்களை உருவாக்கின?


2017 லிருந்து இருந்த வறட்சியை முறியடிக்கும் வண்ணம், பெரும் கொடையாக இயற்கை அள்ளிக்கொடுத்த 2020 அறுவடையை பெரும்பாலான விவசாயிகள் இழந்து பரிதாபமாய் நிற்கின்றனர். விவசாயிகளின் பயிர் மற்றும் தீவனங்களுக்கு சேதம் உண்டாக்கிய விதத்தில் ஆயிரக்கணக்கான டாலர்களை தின்று தீர்த்துவிட்டிருக்கிறது.


Eric Fishpool lifts a tarpaulin covering stored grain as mice scurry around on his farm near Tottenham, Australia, Wednesday, May 19

AP


விவசாயிகளிடமிருந்து உற்பத்திப் பொருட்கள் வராததால் regional பகுதியில் வாழும் குடும்பங்கள், வர்த்தகங்கள் குறிப்பாக உணவகங்கள், மளிகைக்கடைகள், உணவுப் பொருட்கள் தொடர்பான வணிக நிறுவனங்கள் எல்லாம் செய்வதறியாது தவித்து நிற்கின்றன.


தானியங்களை பேயாய் விழுங்குவது மட்டுமல்ல, கார்களையும் இயந்திரங்களையும் கடித்து பாழாக்குகின்றன. மனிதர்களை கடித்து மருந்தகங்களுக்கு ஓட வைக்கின்றன. Tottenham, Walgett and Gulargambone பகுதிகளில் வந்த நோயாளிகள் எலிக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக NSW Health உறுதி செய்தது.


“மக்கள் உடல் வலி என வருகிறார்கள். கண்கள் சிவப்பாவது எலிக்கடிக்கு ஒரு அடையாளம்.” என Public Health Director Pricilla Stanley கூறுகிறார்.


சரி. இவைகளை கொன்று போடலாம் என்றால், எலிப் பொறியாக வைக்கும் விஷத்தின் விலை கண்டமேனிக்கு போய்விட்டது. தேவை அதிகரித்து விட்டதல்லவா! அதனால் எலியைக் கொல்லுவதும் காஸ்ட்லி சமாச்சாரமாகி விட்டது.


பயிர், தீவனம் காலி; கார், இயந்திரங்கள் அம்போ!; உணவுப் பற்றாக்குறை; வர்த்தகம் பாதிப்பு; படுக்கையறை வரை வந்து தொல்லை; கொல்லும் விஷம் கொடிய விலை. மனஅழுத்தம் வராமல் என்ன செய்யும்? தினசரி தூக்கம் இழந்து மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் நிலை.


சுண்டெலி கொள்ளை நோயை எப்படித்தான் முறியடிப்பது?

உணவு கிடைக்காமல் திண்டாடியோ அல்லது பெரு வியாதி வந்தோதான் இந்த பெரும் வில்லன் எலிப்படை அழியும். விஷம் வைத்து கொல்வதால் கொஞ்சம் கட்டுப்படுமே தவிர முற்றிலுமாக ஒழிந்துவிடாது.


இருந்தாலும் விவசாயிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரும் இந்த குளிர்காலத்தில் விஷத்தை தூண்டிலாக பயன்படுத்தி விழிப்புடன் இல்லாவிட்டால், வருகிற ஸ்பிரிங்கில் எலிகள் இனப்பெருக்கம் கூடி, நிலைமை இன்னும் மோசமாகும்.


The mouse population in some parts of regional NSW has exploded in recent months

AAP


சுண்டெலி கொள்ளை நோயை விவசாயிகள் எவ்வாறு தடுக்க முயற்சிக்கிறார்கள்?

துத்தநாக பாஸ்பைடு என்ற கெமிக்கலை கோதுமைகளில் கலந்து வைக்கின்றனர். விஷம் தடவப்பட்டது தெரியாத எலிகள் அதைத்தின்று இறக்கின்றன. ஒரு கோதுமை ஓர் எலியைக் கொன்றுவிடும். பல குடும்பங்கள் பக்கெட்டுகள் போன்ற பொருட்களைக் கொண்டு, கற்பனைத் திறனோடு, பல எலிப்பொறிகளை செய்து எலிகளைப் பிடிக்கின்றனர். ஓர் இரவில் ஓராயிரம் எலிகள் கூட மாட்டுகின்றன.


உயிருக்கு ஆபத்தான NAPALM

NAPALM என்பது Naphthenic acid மற்றும் Palmitic acid கலந்த எதையும் தீக்கிரையாக்குகிற பெட்ரோ கெமிக்கல் கலவை. மொத்தம் $50 மில்லியன் பாக்கேஜ் bromadiolone என்கிற விஷத்தை விவசாயப் பண்ணைகளில் பயன்படுத்தி எலிகளைக் கொல்ல, NSW அரசு அனுமதி கோரி, ஆஸ்திரேலிய பூச்சிக்கொல்லிகள் மற்றும் கால்நடை மருந்துகள் ஆணையத்திற்கு அவசரமாக விண்ணப்பித்துள்ளது. Bromadilone விஷத்தை “எலிகளுக்கு NAPALM” என்று NSW விவசாய அமைச்சர் Adam Marshall வர்ணித்துள்ளார்.


இந்த ரசாயனம் வீரியமிக்கதாக இருந்தாலும், மற்ற பூர்வீக விலங்குகளுக்கு அது ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் குறித்து கவலைப்படாமல் இருக்க முடியாது என சிலர் கூறுகிறார்கள். இப்படி அழிக்காவிட்டால், இந்த நாசகார எலிகள் நகரங்களுக்குள் வருமா என்ற கவலை பிறந்துள்ளது.


எலிகள் நகரங்களுக்கு நகருமா?

அப்படி நடக்க வாய்ப்பில்லை. எலிகள் பெரிய அளவில் புலம் பெயரும் விலங்குகள் அல்ல. தங்கள் வளையிலிருந்து சுமார் நூறு மீட்டர் சுற்றளவில் மட்டுமே தீனிக்காக நகரும். நாடு முழுவதும் விவசாயிகள், எலிகளை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகளை தேடிக்கொண்டு இருக்கின்றனர். மாநில அரசாங்கம் உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கூறிய NSW Farmers’ Association President James Jackson “ பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதியுதவியும் வேண்டும்” என வலியுறுத்தினார்.


எம்டன் எலிப்படை தோற்குமா? அல்லது மொய்ரிஸ் போன்ற விவசாயிகள் எலிகளை ஒழித்து வெற்றிபெறுவார்களா என பலரும் வியந்தவண்ணம் இருக்கிறார்கள்.


Ref:

1. Thackray, Lucy. (2021, June 11). Why is there a mouse plaque in Australia and can it be stopped? ABC rural. https://www.abc.net.au/news/rural/2021-06-11

2. Condon, Michael, et al., (2021, Mar 18). Mice biting hospital patients, ravaging farms as plague escalates across NSW. ABC rural. https://www.abc.net.au/news/2021-03-18


35 views0 comments
bottom of page