மூன்று பெண்கள் - கதைச் சுருக்கம் - வாசிப்பு அனுபவம்
- உயிர்மெய்யார்
- 23 hours ago
- 6 min read

மூன்று பெண்கள் - கதைச் சுருக்கம்
அவனுக்குக் குழந்தைப் பிறக்கிறது. மருத்துவச்சி பிள்ளைப் பிறந்த சேதியைச் சொல்லிவிட்டு போகிறாள். அவன் பார்க்கத் துடிக்கிறான். ஆனால் அவனது மனைவியின் அருகே இரண்டு பெண்கள் உட்கார்ந்து மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் மனைவியோடு சேர்ந்து மூன்று பெண்களின் கதை தான் இது.
மார்த்தா (பேத்தி)
‘என் கறுப்பு நிறத்தை மற்றப் பிள்ளைகள் கேலி செய்வார்கள்’ ‘கூலி என்று கூப்பிடுவார்கள்’ என்று கவலைப்படுகிறாள் மார்த்தா. அவளது தலைமுடி வித்தியாசமாக சுருள் முடியாக இருக்கும். பேன்கள் நிறைய இருக்கும். ஒரு நாள் அவளது நண்பி ‘உன் அம்மா உன் நிஜமான அம்மா இல்ல…’ என்று சொல்வாள். பாட்டியிடம் கேட்க அவள் அமைதியாக இருப்பாள். உண்மையான உறவுகளிடம் அனுப்பிவிடுவார்களோ என்று மார்த்தா பயப்படுகிறாள்.
மெடம்லா (தாய்)
மார்த்தாவின் தாய். தாய் என இதுவரை நம்பப்பட்டவள். அவளுக்குச் சுகாதார அலுவலகத்தில் பணி. பணி முடிந்ததும் வீட்டிற்கு வருகிறாள். பாட்டியும் மார்த்தாவும் அமைதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறாள். அவள் கதை இது தான். மெடம்லாவுக்கு ஒருவனோடு (இம்சுடெம்ஜன்) காதல். திருமணம் நிச்சயிக்கப்படுவதற்கு முன் காதலனின் தந்தை ‘இந்தக் கல்யாணம் நடக்காது’ என்று நிறுத்திவிடுகிறார். ஏமாந்து போன மெடம்லா தன் பிரசவ கேஸ்களைப் பார்க்கும் பணியில் ஆழ்ந்துப் போகிறாள். அப்பொழுது தான் மார்த்தாவின் தாய், மார்த்தாவை பிரசவித்து விட்டு, வலிப்பு வந்து, இறந்து போகிறாள்.
மார்த்தாவின் அம்மா, தேயிலைத் தோட்ட வேலை செய்யும் மரபினர். ஆப்பிரிக்க இனத்து முகம். சுருள் முடி. மார்த்தாவின் தாய் மரணத்திற்கு தானும் ஒரு காரணம் என்று மெடம்லா நினைக்கிறாள். மார்த்தா ஓர் அனாதை விடுதியில் வளர்கிறாள். அவளைப் பார்க்காமல் மெடம்லாவால் இருக்க முடியவில்லை. வேறு யாரும் மார்த்தாவைத் தத்து எடுக்கும் முன் மெடம்லாவே மார்த்தாவைத் தத்து எடுத்துக் கொள்கிறாள். தத்து எடுத்தால் வேலைப் போய்விடும் என்று தெரிந்தும் தத்து எடுக்கிறாள். அவளது பெற்றோர் வீட்டில் வளர்கிறாள் மார்த்தா. லிபோக்டுலா மெடம்லாவின் தாய், முதலில் மார்த்தாவின் புறத்தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியுற்றாலும், மார்த்தாவின் புன்னகையைப் பார்த்து நன்கு பழகிவிடுகிறார்கள். ஆனால் இன்று பாட்டியும் (லிபோக்டுலாவும்) மார்த்தாவும் ஒருவர் முகம் ஒருவர் பார்க்காமல் உட்கார்ந்திருக்கிறார்கள்.
லிபோக்டுலா (பாட்டி)
மார்த்தாவின் பாட்டி. மெடம்லாவின் தாய். மெரன்சஷி (கிராம சபை உறுப்பினர்) லிபோக்டுலாவை பலவந்தப்படுத்தி உடலுறவு கொள்கிறார். அந்த உறவில் பிறந்தவள் தான் மெடம்லா. மெரன்சஷியின் மகன் இம்சுடெம்ஜன். லிபோக்டுலாவின் (தத்து) மகள் மெடம்லா வெளியூரில் நர்ஸூக்காகப் படிக்கும் போது இம்சுடென்ஜனுடன் காதல் வயப்படுகிறாள். ஆனால், லிபோக்டுலாவும் இம்சுடெம்ஜனும் அக்கா தங்கை என அவளுக்குத் தெரியாது. தன் காதலை மெடம்லா அவள் அம்மாவுக்கு (லிபோக்டுலாவுக்கு) தெரிவித்ததும், அவள் அந்தத் திருமணத்தை நிறுத்த முயல்கிறாள். மெரன்சஷியிடம் (தன்னை பலவந்தப்படுத்தி ஒரு மகளை - மெடம்லாவைக்கொடுத்தவரிடம்) சென்று ஒரு கடிதம் எழுதச் சொல்கிறார். அவர் அந்தத் திருமணம் வேண்டாம் என்று கடிதம் எழுதுவதால், மெடம்லாவின் கல்யாணம் நின்று விடுகிறது.
இன்று
மார்த்தா (பேத்தி) ஒரு பையனைக் காதலித்து கர்ப்பமாகிறாள். அவளுக்கு குழந்தைப் பிறந்திருக்கிறது. குழந்தையைச் சுற்றி அந்தப் பெண்கள் இருக்க, அவன் பிறந்த குழந்தையைப் பார்க்காமலேயே நழுவிச் செல்வதாகக் கதை முடிவடைகிறது.
மூன்று பெண்கள் - கதை வாசிப்பு அனுபவம்
காமம்
பொள்ளாச்சி வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வந்த காலையில் இதைப் பற்றி எழுதுவது ஒரு நகைமுரண் தான். காமம் என்கிற செறிவான தமிழ்ச் சொல் இன்றைக்கு கற்பழிக்கப்பட்டு வேறு ஓர் அர்த்தத்தில் பொது புத்தியில் புலங்குவது வருத்தத்துக்குரியதே! புலன்களால் தூண்டப்பட்டு, மனதளவில் அன்பில்லாமல் உடல்உறவு வைப்பதை காமம் என்று இன்றைக்குப் பொருள் கொள்ளப்படுகிறது. அப்படி இந்தக் கதையில் பாட்டியை (லிபோக்டுலாவை) ஓர் உள்ளூர் கவுன்சிலர் அவளது விருப்பமின்றி உடல்உறவு கொண்டு விடுவார். அதை இன்றைய பொருளில் ‘காம’த்தால் உந்தப்பட்டு அந்த ஆண் செயல்பட்டிருக்கிறார் என்று வைத்துக்கொண்டு, ‘காம’த்தைப் பற்றி கொஞ்சம் அலசுவோம்.
காமம் பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களில், தத்துவத்தில், மற்றும் மத நூல்களில் ஆழமான உணர்வுகளையும், மனித இயல்புகளையும் வெளிப்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காமம் என்ற சொல், பொருள், புகழ், அதிகாரம் போன்றவைகளைக் குறித்த தீவிர ஆசையை குறிக்கிறச் சொல்லாக கையாளப்பட்டிருக்கிறது. இதற்கும் பாலியல் ஆசைக்கும் தொடர்பு இருக்கவேண்டிய அவசியமில்லை. சங்க இலக்கியத்தில், காமம் முக்கியமாக காதல் உணர்வாகவும், ஆண்-பெண் இடையேயான ஈர்ப்பாகவும் சித்தரிக்கப்படுகிறது. அகநானூறு மற்றும் குறுந்தொகை போன்ற நூல்கள் காதலர்களின் உணர்ச்சிகளை இயற்கையுடன் இணைத்து விவரிக்கின்றன. அறம், பொருள், இன்பம் (காமம்) என்ற மூன்று வாழ்வியல் களங்கள் இலக்கியங்களில் சொல்லப்பட்டன. பிறகு சமயம் சார்ந்த பக்தி இலக்கியங்கள் வரும்போது வீடு (மோட்சம்) சேர்க்கப்பட்டது.
‘மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்’ (திருக்குறள் 1289) என்கிற குறள் நினைவு கூறத்துக்கது.
மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி (அகநானூறு, 28) என்கிறது அகநானூறு.
லிபோக்டுலாவிற்கும் உள்ளூர் கவுன்சிலருக்குமான (மெரென்சஷிக்குமான) அந்த உறவை பட்டும் படாமலும் கதாசிரியர் சொல்லிப் போகிறார். “வெகு நாட்களுக்கு முன் மெரென்சஷி என்னிடம் பலவந்தமாக உறவு கொண்டதை நான் உங்களிடம் சொல்லியிருந்தாலும், அந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்க்கும் போது என்னுள் சீற்றத்தைக் காட்டிலும் அதிகமாக எழுவது, நான் முதலில் எதிர்ப்புக் காட்டியதையும் மீறி அவனால் என்னோடு எப்படி உறவு கொள்ள முடிந்தது என்று அந்த அபத்தமான சக்தியைப் பற்றித்தான்” என்று லிபோக்டுலா சொல்கிறாள். அப்போது ஏன் விலகி ஓடவில்லை என்று அவள் பலமுறை அவளுக்குள் கேட்டுக்கொண்டிருக்கிறாள். இந்த இடத்தை மிகவும் நுட்பமாகவும் நுணுக்கமாகவும் அணுகவேண்டும். அவளின் வாழ்க்கை ஒரு dark secret என்று ஒரு வாசகர் சொன்னார்.
ஒரு வாசகர் சொன்னார்: அகலிகை கதைக் கேட்டிருக்கிறோம். அவள் மாதிரி லிபோக்டுலாவும் சிறிது நேர எதிர்ப்பிற்குப் பிறகு உடல்உறவிற்கு இசைந்து இடம் கொடுத்துவிட்டாளோ என்ற அச்சம் வருகிறது. முதலில் எதிர்ப்புக்காட்டி பிறகு ‘அபத்தமான சக்தி’ யால் அவளும் ஒத்துக்கொண்டு உடல் உறவில் ஈடுபட்டாளோ? என்று கேட்டார்.
அந்தக் கருத்தை வன்மையாகக் கண்டித்த குரல் இன்னொரு வாசகரிடமிருந்து வந்தது. அவர் சொன்னார்: இது போன்ற வன்புணர்வு நேரங்களில், பெண்களை நோக்கி கேள்வி கேட்பவர்கள் ஏன் ஆண்களை நோக்கி எந்தக் கேள்வியும் கேட்பதில்லை? உங்களுக்குத் தெரியுமா? ஒரு தடவை என் கழுத்தில் இருந்த செயினை ஒருவன் திடீரென பறித்துக் கொண்டு ஓடினான். நான் அப்படியே கல்லாக நின்று விட்டேன். அதிர்ச்சி! பறிக்கிற கையை நோக்கி ஒரு குத்து விடக்கூட என் கை எழவில்லை. அந்தக் கணம்! சிலையாய் நின்றேன். பாதிக்கப்படுவர்களை நோக்கியே ஏன் கேள்விக் கணைகள் வந்து விழுகின்றன. ஏன் அந்த victim blaming மனோபாவம்? அவள் விரும்பி இணங்கினாளா? அல்லது முடியும் மட்டும் எதிர்த்தாளா? பலமா எதிர்க்கலையோ? என்பதைப் பிறகு விவாதிப்போம். துணிந்து வன்புணர்வில் ஈடுபடும் அந்த ஈனனை நோக்கி (அந்தக் கவுன்சிலரை நோக்கி) இப்படி வலுவானக் கேள்விகள் ஏன் எழுப்பப்படவில்லை? ஆண்கள் என்றில்லை. பெண்களும் பெண்கள் மேலேயே பழியைப் போடுவது ஏன்?
வாசகர் வட்டம் கொஞ்சம் ஸ்தம்பித்துத்தான் போனது. அதானே! ஆணாதிக்க வேர்கள் எவ்வளவு ஆழமாய் இறங்கியிருக்கிறது! நமக்குள் திணிக்கப்பட்டிருக்கிற இப்படிப்பட்ட கருத்துருக்களை கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால் இந்திரனை விட்டுவிடுவோம். அகலிகையை கல்லாக்கி, இராமனின் பாதத்திற்காகக் காத்திருப்போம்.
(அதென்ன அகலிகைக் கதை? என்று கேட்பவர்களுக்கு, அதன் கதைச் சுருக்கம். கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தில் அகலிகை படலத்தில் 17 பாடல்களில் இக்கதை வருகிறது. அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலைக் கடைந்த போது காமதேனு என்ற பசு, ஐராவதம் என்ற வெள்ளை யானை, இன்னும் பல அபூர்வ சக்தி கொண்ட பொருட்கள் தோன்றியது போல அகலிகை என்ற அழகானப் பெண்ணும் கடலிலிருந்து தோன்றினாள். அவளை மணந்துக் கொள்ள இந்திரன் உட்பட எல்லோரும் விரும்பினார்கள். ஆனால் நாரதரின் செயலால் கௌதம முனிவர் அவளை மணந்துக் கொண்டார். காமத்தை அடக்கமுடியாமல், இந்திரன், ஒரு நாள் அதிகாலை இரண்டு மூன்று மணிக்கு கௌதம முனிவரின் குடிலுக்கு வெளியே நின்று கொண்டு சேவல் போல் கூவினார். முனிவரோ விடிந்துவிட்டது என்று நினைத்து, குடிலை விட்டு வெளியே வர, இந்திரன் கௌதம முனிவர் போல் மாறி அகலிகையை தொட்டார். அப்போதே தன் கணவர் இல்லையென்று தெரிந்து அதிர்ச்சியுற்றாள். வான்மீகி ராமாயணம் வந்திருப்பவன் இந்திரன் என்று தெரிந்தும் அவனுடன் கூடி மகிழ்ந்திருந்தாள் என்று குறிப்பிடுகிறது. கம்பரோ ‘நெஞ்சால் பிழை செய்தவள் அல்ல’ என்று கூறுகிறார். முழுதும் விடியாததைக் கண்ணுற்ற முனிவர் குடிலுக்குத் திரும்பி வர, இந்திரன் பூனை வடிவெடுத்து நழுவுகிறான். முனிவரும் பெண்ணையே கல்லாக்குகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ராமரின் பாதம் பட (வான்மீகி), ராமரின் கால் தூசி பட (கம்பர்) கல்லால் சபிக்கப்பட்டிருந்த அகலிகைப் பெண்ணாகிறாள். இது தான் கதை.)
இலக்கியப் பிரியர்களுக்கு இன்னும் சில தரவுகள். கிரேக்கத் தொன்மக் கதையில் Zeus என்னும் கடவுள் Amphitryon என்பவரின் மனைவி Alcmne ஐ நயவஞ்சகமாக அடைகிறான். எப்படி? இந்திரனின் அதே தந்திரம். அவளது கணவனைப் போல் வேடமிட்டு வந்து ஏமாற்றுகிறான். அவர்களுக்குப் பிறந்த குழந்தை தான் Heracles.
புராணத்தில் வரும் அகலிகைக் கதையைத் தழுவி புதுமைப்பித்தன் சாப விமோசனம் என்ற ஒரு சிறுகதை எழுதியுள்ளார். படித்துப் பாருங்கள். இராமனின் பாதம் பட்டு கல்லிலிருந்து பெண்ணாக சாப விமோசனம் பெற்ற அகலிகை, சீதையைச் சந்திக்கிறாள். அப்பொழுது சீதையுடன் உரையாடுகிறாள் அகலிகை. பதினான்கு வருடம் வனவாசமிருந்து திரும்பும்போது அயோத்தி மக்களுக்குத் தான் புனிதமானவள் என்று காண்பிக்க தன்னை இராமன் தீக்குளிக்கச் சொன்னதாகச் சீதைச் சொல்கிறாள். அகலிகை திடுக்கிடுகிறாள். வெகுண்டு எழுகிறாள். 'என்னை உயிர்ப்பித்த இராமனா இப்படிச்செய்தான்' என்று மனம் ஒடிந்து போகிறாள். அதனால் அகலிகை மீண்டும் கல்லாகிப்போனாள் என்று புதுமைப்பித்தன் கதையை முடிக்கிறார். இராமன் தீக்குளிக்கத் தேவை இல்லையோ?
இந்த ஆழ்மன ஆணாதிக்க கருத்துரு விஷயத்தில் மனிதர்களும் கடவுள்களும் ஒன்றாக இருக்கிறார்களோ? அதனால் தானோ என்னவோ, லிபோக்டுலா (பாட்டி)யை வன்புணர்வு செய்த உள்ளூர் கவுன்சிலர் மேல் கல்லெறியாமல், இவளும் விரும்பியே ஈடுபட்டிருப்பாளோ? என்ற விமர்சனம் வருகிறது. ஒரு வாசகர் சொன்னது போல பாட்டிகளின் அந்தக் காலங்கள் மாறி, மகள்கள் படிக்கச் செல்வதும், வேலைக்குப் போவதும், காதலிப்பதும் இந்தக் காலத்தில் இயல்பாகி விட்டது. காமம் பற்றிப் பார்த்தோம். இப்பொழுது காதல் பற்றியும் பார்த்துவிடுவோம்.
காதல்
கேள்வி கேட்க முடியாமல் பாதாளத்தில் இருந்த பாட்டிகள் காலம் போய், பள்ளத்திலிருந்து மேலே ஏறி தரையில் நடக்கிற மகள்கள் காலம் இது. அப்படித்தான் லிபோக்டுலாவின் (பாட்டியின்) மகள் மெடம்லா படிப்பாள். படிக்கப் போன இடத்தில் காதலிப்பாள். அது அவளது சுதந்திரம். கூண்டை விட்டு பறந்து தன் இணையை தேர்ந்தெடுத்த பறவை மெடம்லா. அவளது இணை இம்சுடெம்ஜன். இந்தப் பையன் வேறு யாருமல்ல. அந்தக் கவுன்சிலரின் சொந்தப் பையன். மெடம்லா’வும் அதே கவுன்சிலருக்குப் பிறந்த (லிபோக்டுலாவுக்கு) பொண்ணு. அப்படியென்றால் மெடம்லாவும் இம்சுடெம்ஜனும் அக்கா தம்பிகள். அது தெரியாமல் காதலிக்கிறார்கள். பாட்டியின் பரம இரகசியம் உடைந்து விடாமல் இருக்க, தனது பழையக்கதை தெரிந்துவிடாமல் இருக்க, அப்படி காதலர்கள் இருவரும் இணைந்துவிட்டால், அக்காவையும் தம்பியையும் திருமணம் செய்து வைத்ததை செரிக்க முடியாமல் காலம் பூரா தான் தவிக்க வேண்டியதை தவிர்க்க, காதலனின் அப்பாவிடம் ( அதான்! அந்த கவுன்சிலரிடம்) யாருக்கும் தெரியாமல் சென்று கல்யாணத்தை நிறுத்திவிடுகிறாள். ஒரு வாசகர் சொன்னது போல, இது மர்ம முடிச்சுகளும், திகைக்க வைக்கும் திருப்பங்களும் நிறைந்த அட்டகாசமான திரைக்கதை வடிவம் கொண்ட சிறுகதை. நீங்கள் படித்துப் பாருங்கள். நீங்களே உணர்வீர்கள்.
மெடம்லா காதலில் தோல்வியுறுகிறாள். வேறு திருமணமே வேண்டாம் என்று கடைசி வரை இருந்துவிடுகிறாள். மார்த்தாவைப் (பேத்தியைப்) பார்த்ததும், தன் வேலையையும் தியாகம் செய்து அவளை தத்து எடுக்கிறாள். மெடம்லாவின் வாழ்க்கை தியாகம் செய்வதிலேயே கழிகிறது. எனக்குத் தெரிந்து பலப் பெண்களின் வாழ்க்கை, பிறருக்காகத் தங்கள் சுகங்களைத் தியாகம் செய்யும் வாழ்க்கையாகவே இருக்கிறது. அந்தச் சிலுவையை அவர்கள் விரும்பி சுமப்பதாக பலர் எண்ணுவது தான் அபத்தம் என்று நினைக்கிறேன்.
கணவன் மேல் காண்பிக்க வேண்டிய காதல் தன் மகள் மேல் காட்டுகிற பாசமாக மிளிர்கிறது. தான் தத்து எடுத்த தாய் என்று உண்மையை உடைத்து மகளிடம் சொன்னபோது, மகள் (மார்த்தா) கண்ணீரோடு அணைத்துக்கொள்கிறாள். அப்பொழுது அந்தப் பாசம், தாய்மையாக மாறியது. காதலின் மெல்லிய சிலிர்ப்பை தியாகத்திலும், பாசத்திலும், தத்துத் தாய்மையிலும் அவள் அனுபவிக்கத் துவங்குகிறாள்.
பாட்டியின் இருட்டான கதைக்குப் பிறகு மகளின் காதல் தியாகத்தில் முடிய பேத்தியின் (மார்த்தாவின்) காலம் இன்னும் கொஞ்சம் சுதந்திரம் பெற்ற காலமாக மாறியிருக்கிறது. எப்படி என்று பேச ஆரம்பித்தால் கற்பு பற்றிப் பேச வேண்டும்.
கற்பு
காமம் என்றச் சொல் எப்படி புரிதலில் திரிந்து போய் கிடக்கிறதோ, அப்படியே கற்பு என்ற சொல்லும் நிறம் மாறிக் கிடக்கிறது. அது என்னவோ உடல் சார்ந்த ஒன்றாகவே சமூகத்தில் பார்க்கப்படுகிறது. அதுவும் கற்பு என்பது பெண்களுக்கு உரிய கன்னித்தன்மை என்றும் அது அழிக்கப்படவோ, காக்கப்படவோ வேண்டியது என்றும் கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆண்கள் ‘அப்படி, இப்படி’ இருக்கலாம் என்றும் கற்பு என்பது ஆண்களுக்கு இல்லை என்றும் தான் பொதுவான புரிதலாக இருக்கிறது. கற்பு எனப்படுவது சொல்திறம்பாமை என்ற கருத்தும், இருபாலாருக்கும் பொதுவில் வைப்போம் என்ற குரலும் உங்களுக்குக் கேட்கிறதா?
இக்கதையில் திருமணத்திற்கு முன்பே மார்த்தா கர்ப்பமாகிப் பிள்ளைப் பெறுகிறாள். இது சரியா? கொஞ்சம் இருங்கள். குடும்பம் என்ற நிறுவனம் ஏற்படுவதற்கு முன்பு, இனக்குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்து திரிந்த போது, மார்த்தா அப்படிச் செய்திருந்தால் அது ஒரு கேள்வியாக உருவெடுத்திருக்குமா?
ஒரு வாசகர் சொன்னார்: எனக்கென்னவா இந்தக் கதாசிரியர் ‘டெம்சுலா ஆவ்’ ஒரு பெண்ணியவாதி என்று நினைக்கிறேன். அவர் படைத்திருக்கிற பெண் கதை மாந்தர்கள் எல்லோரும் இருக்கிற social norms-களை உடைக்கிறார்கள். பழையன கழிந்து புதியன புகுத்தல் - இயற்கை தானே! அது என்னவோ பெண்களுக்கு அது இயல்பாக வருகிறது என்று நான் நினைக்கிறேன்.
காமம், காதல், கற்பு, அன்பு, பந்தம்,பாசம், தாய்மை, தியாகம் என்று ஒரு காவியத்திற்குத் தேவையான அத்தனை பொருண்மைகளையும் சுமந்து நிற்கிறது ‘மூன்று பெண்கள்’ சிறுகதை.
என் தலைக்கு மேல் சரக்கொன்றை
(ஆசிரியர் - டெம்சுலா ஆவ்; தமிழில் - எம்.ஏ. சுசீலா; முதல் பதிப்பு - 2009;
தமிழில் முதல் பதிப்பு - 2022; நற்றிணைப் பதிப்பகம்)
உயிர்மெய்யார்
16.05.2025, மெல்பர்ன்
*****
Comments