top of page

கட்டுரை 2 - மெடிக்கேரில் வரும் மாற்றங்கள் உங்களை பாதிக்குமா?

Updated: Jan 9, 2022

By John Britto Parisutham

Source: AAP

(SBS Tamil Radio இணைய தளத்தில் வெளியிடப்பட்ட என் கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன். இன்னும் இது போன்ற சுவாரஸ்யமான கட்டுரைகளைப் படிக்க இங்கே (SBS Tamil Radio website link) சொடுக்கவும்.)


ஐய்யய்யோ!!!


மருத்துவ காப்பு தள்ளுபடி விவகாரத்தில் இப்படி ஓர் இடி நம் தலையில் இறங்கப்போகிறதா? என்னென்ன மாற்றங்கள் எப்பொழுதிலிருந்து நடைமுறைக்கு வருகிறது? அந்த மாற்றங்களால் ஆஸ்திரேலியர்களுக்கு வரப்போகும் பாதிப்புகள் என்னென்ன? இதில் கவைலக்குரிய விடயம் என்ன இருக்கிறது? இதெல்லாம் எப்படி நடந்தது? யார் யாரிடமிருந்து ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழும்பியிருக்கின்றன? என்று பல கேள்விகள் நமக்கு எழலாம்.

மொத்தம் 5700 மருத்துவ காப்பு தள்ளுபடிகளில் 900 க்கும் மேற்பட்டவைகளை திருத்தியோ, நீக்கியோ, புதிதாக சேர்த்தோ, புதிய மருத்துவ காப்பு தள்ளுபடி

அட்டவணையை ஃபெடரல் அரசு இப்பொழுது வெளியிட்டுள்ளது. அது வருகிற ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய மருத்துவக் கழகம் உட்பட பல மருத்துவர்களும் இதனால் பெரிய குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர்.


நம்மை பாதிக்கப் போகும் இந்த மாற்றங்கள், பாதிப்புகள், கவலைகள் பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்.


மெடிக்கேர் சில விபரங்களும் தற்போதைய மாற்றங்களும்

மெடிக்கேர் என அறியப்படும் மருத்துவ காப்பு 1984 முதல் தொடங்கப்பட்டது. மெடிக்கேர் தள்ளுபடி (Rebate) எப்படி வேலை செய்கிறது? இந்த கேள்விக்கு பதில் தெரிய நமக்கு இதன் பின்னணி பற்றி அறிவது அவசியம்.

Stock photo of a Medicare card, (AAP Image/Dave Hunt)

AAP


மருத்துவ நன்மை அட்டவணை கட்டணம் ( Medical Benefit Schedule fee) ஃபெடரல் அரசு நமது தனிப்பட்ட மருத்தவ செலவுக்கு கொடுக்கும் கட்டணம். இரண்டாவது, சில கட்டணம் மருத்துவ காப்பீட்டாளர்கள் கட்டுவது. மூன்றாவது நம் கையிலிருந்து நாம் செலவு செய்யும் தொகை.


மருத்துவ நன்மை அட்டவணை என்பது மருத்துவ தள்ளுபடிகள் மூலம் பெடரல் அரசு மானியம் வழங்கும் சுகாதார சேவைகளின் பட்டியல். அதனால் அந்த அட்டவணை மிக முக்கியமான ஒன்றாக ஆகிறது. அந்த அட்டவணையில் தான் இப்போது மாற்றங்கள் வரவுள்ளன.


இந்த நடப்பு நிதியாண்டின் துவக்கத்திலிருந்து அந்த அட்டவணையில் அவ்வப்போது சில மதிப்பாய்வுகள் நடந்திருந்தாலும், பல தசாப்தங்களாக நடைபெறாத மிகப்பெரிய மதிப்பாய்வு இப்பொழுது நடைபெற்று, புதிய நடைமுறை வருகிற ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


என்னென்ன மாதிரியான மாற்றங்கள் நடந்துள்ளன?

  • வரையறை மாற்றம்: பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் அறுவை சிகிச்சை மற்றும் இருதய சேவைகளில் புதிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும். உதாரணத்திற்கு திறந்த அறுவை சிகிச்சைகளுக்குப் பதில் ‘கீ ஹோல்’ எனப்படும் சாவி துவார அறுவை சிகிச்சைகளே பட்டியலில் இடம் பெறும்.

  • நடைமுறை நீக்கம்: சில நடைமுறைகள் நீக்கப்பட்டுள்ளன.

  • ஒருங்கிணைப்பு: சில நடைமுறைகளை ஒருங்கிணைத்து ஒரே எண்ணின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. உதாரணமாக தற்போது, சில அறுவை சிகிச்சை முறைகள் எலும்பு ஒட்டுதலுக்கான ஒன்று, மற்றும் எலும்பு இணைவு போன்ற உருப்படிகளை ஒரே எண்ணின் கீழ் ஒருங்கிணைக்கும்.

  • சேர்க்கை: சில புதிய நடைமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

  • கட்டண மாற்றம்: பல மருத்துவ முறைகளின் கட்டணத்தில் மாற்றங்கள் இருக்கலாம்.

என்னென்ன பாதிப்புகள்? ஏன் சில கவலைகள்?

  • கூடுதல் கட்டணம்

சில மருத்துவ நடைமுறைகளுக்கு கட்டணம் அதிகரிக்கலாம். மக்கள் தங்கள் மருத்துவரையும் மருத்துவ நிதி ஆணையத்தையும் தொடர்பு கொண்டு கட்டணம் எவ்வளவு என்பதை சரிபார்த்துக் கொள்ள ஆஸ்திரேலிய தனியார் மருத்துவ காப்பின் தலைமை நிர்வாகி ரேச்சல் டேவிட் அறிவுறுத்துகிறார். பெரும்பாலானவை மோசமாக இருக்காது அதாவது செலவீனத்தை அதிகரிக்காது; ஆனால் “சில நடைமுறைகளுக்கு மானியம் குறையலாம்” என்கிறார் அவர்.


எத்தனை பேர் கூடுதலாக அவர்கள் கையிலிருந்து செலவுகளைச் செலுத்துவார்கள் என இன்னும் தெளிவாகவில்லை. பல தனியார் கிளினிக்குகள் இந்த மாற்றங்கள் மூலம் நோயாளிகளிடமிருந்து எப்படி கட்டணம் வசூலிப்பார்கள் என்பது உறுதியாகவில்லை. ஆரம்ப அறிகுறிகள் சில நோயாளிகளுக்கு தங்கள் கையிலிருந்து 10,000 டாலருக்கும் அதிகமாக செலவாகும் என்று சில மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

  • நடைமுறைக் குழப்பம்

இந்த செயல்முறை அவசரகதியில் அறிமுகப்படுத்தப்படுவதாக ஆஸ்திரேலிய நுகர்வோர் மன்றத்தின் தலைமை நிர்வாகி லியான் வெல்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். அடுத்த மாதம் அறுவை சிகிச்சைக்கு முன்பதிவு செய்த நோயாளிகளுக்கு இந்த மாற்றம் பெரும் குழப்பம் விளைவிக்கும் என்று அவர் கூறுகிறார்.

  • கால அவகாசம்

இந்த மாதிரியான அடிப்படை மாற்றங்களை செயல்படுத்த ஏறக்குறைய ஆறு மாத கால அவகாசமாவது தேவை என ஆஸ்திரேலிய மருத்துவக் கழகம் கூறியுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களில் செயல்படுத்த நினைப்பது நல்லதல்ல என அக்கழகம் கருதுகிறது.

A Medicare and Centrelink office sign at Bondi Junction in Sydney, Australia.

Getty Images AsiaPac


ஏன் இந்த மாற்றங்கள்? எப்படி நிகழ்ந்தது?

30 ஆண்டுகளில் மருத்துவத்தைப் பற்றிய முழுமையான மதிப்பீட்டின் ஒரு பகுதியாக தள்ளுபடியை மதிப்பிடுவதற்கான ஒரு பணிக்குழுவை ஃபெடரல் அரசு முன்பு நிறுவியது. அக்குழு 2015 மற்றும் 2020 க்கு இடையில் 5,700 க்கும் மேற்பட்ட மருத்துவ தள்ளுபடி பொருட்களை மதிப்பாய்வு செய்தது. மருத்துவ நிபுணர்கள், நோயாளிகள் மற்றும் பரந்துபட்ட சமூகத்தினரை கலந்தாலோசித்தது.


அதன்பின்னர் 1,400 க்கும் மேற்பட்ட பரிந்துரைகளைக் கொண்ட 60 க்கும் மேற்பட்ட விரிவான மருத்துவ அறிக்கைகளை அந்த குழு வழங்கியது. பணிக்குழு அதன் முழுமையான அறிக்கையை கடந்த டிசம்பர் மாதம் அளித்தது.


நியாயமான மாற்றமே! கால அவகாசம் போதாது!

புதிய அட்டவணையில் “ முன்மொழியப்பட்ட உள்ளடக்கம் நியாயமானதாகவே நான் கருதுகிறேன். இது மெடிகேர் மீதான அடிப்படை தாக்குதல் அல்ல.” என்று கிராட்டன் இன்ஸ்டிடியூட்டின் சுகாதாரத் திட்டத்தின் இயக்குனர் டாக்டர் ஸ்டீபன் டக்கெட் கூறுகிறார்.


ஆனால் பேராசிரியர் ஆனந்த் தேவா இதில் உள்ள குறையைச் சுட்டிக் காண்பிக்கிறார்.


அறுவை சிகிச்சைகளுக்கான கட்டணத்தைக் கண்டுபிடிக்க அதிக காலம் தேவை என்றும், ஜூலை 1க்குப் பிறகு நடக்கும் அறுவை சிகிச்சைகளுக்கான பில் தொகையை மருத்துவர்கள் ஏற்கனவே நோயாளிகளிடம் குறித்துக் கொடுத்திருக்கலாம் எனவும், இந்த மூன்று வாரங்களில் நோயாளிகளைத் தொடர்பு கொண்டு புதிய செலவை விவாதிக்க போதுமான கால அவகாசம் இல்லையென்றும் பேராசிரியர் தேவா கவலை தெரிவித்தார்.


ஆனால் அப்படி கவலையடைய தேவையில்லை என்று ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் சுகாதார அமைப்பு அறிவியல் இணை இயக்குநர் பேராசிரியர் ஸ்டீபன் ஜேன் கூறுகிறார். இந்த மதிப்பாய்வின் மூலம், இளைய வயதினருக்கு ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தும் பல திட்டங்கள் அறிமுகமாகின்றன என்கிறார் பேராசிரியர் ஜேன்.

elective surgery

AAP


ஆஸ்திரேலியா மருத்துவக் கழகம்(AMA) என்ன நினைக்கிறது?

புதிய அட்டவணைகளை மதிப்பிட்டு மாற்றவும், புதிய கட்டணங்களை நடைமுறைப்படுத்தவும் எங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் இப்போதுவரை கிடைக்கவில்லை என்று ஆஸ்திரேலிய மருத்துவக் கழகத் தலைவர் மருத்துவர் ஒமர் கோர்ஷித் கூறுகிறார்.


மேலும், கிட்டத்தட்ட 1,000 மாற்றங்களை மாற்றுவதற்கு பல மாதங்களுக்குப் பதிலாக ஒரு சில வாரங்களே கொடுப்பது சுகாதார அமைப்பையும் நோயாளிகளையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது என்றும் இது சுகாதார காப்பீட்டாளர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குறிப்பிடத்தக்க நிதி மற்றும் செயல்பாட்டு நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனவும், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள், மருத்துவ நடைமுறைகளுக்கு எவ்வளவு தொகை வாங்குவது அல்லது கட்டுவது என ஜூலை 1 ஆம் தேதி வந்தால் குழப்பமடைவார்கள் எனவும் டாக்டர் ஒமர் கோர்ஷித் கூறுகிறார்.


டாக்டர் ஒமர் கோர்ஷித் இன்னொன்றையும் சுட்டிக்காட்டுகிறார். 2018 ஆம் ஆண்டில் அட்டவணையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட போது மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியது என்றும் தனியார் சுகாதார காப்பீட்டாளர்கள் தங்கள் கால அட்டவணையை சரியான நேரத்தில் புதுப்பிக்கவில்லை என்றும் இதனால் முதுகெலும்பு அறுவை சிகிச்சைகள் தாமதமாகின என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கூடுதலாக எவ்வளவு கட்டணம் கட்டவேண்டும் என மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சரியான தகவலை சொல்லமுடியவில்லை என்றும் இரண்டு வருடங்கள் கழித்து அதே பிரச்னைகளை நாம் இன்று எதிர் கொள்கிறோம் என்றும் இம்முறை சிக்கல் பத்து மடங்கு அதிகமாகியுள்ளது எனவும் டாக்டர் கோர்ஷித் எச்சரிக்கிறார்.

AMA President Dr Omar Khorshid

AAP


மாற்றம் வருகிறது

மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்வார்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபே. ஆனால் அந்த மாற்றத்திற்கு தேவையான கால அவகாசம் கொடுக்கவில்லையென்றால் குழப்பம் மிஞ்சி, மாற்றத் திட்டமிட்டது வெற்றிகரமாக நடக்குமா? என்ற கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது.


உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைத்து விடயங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லையென்றால், மருத்துவ உலகம் உறைந்து போகாதா என்ற கேள்வி சிலருக்கு எழலாம். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பெடரல் அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் கிரெக் ஹன்ட் ஊடகங்களில் உரையாற்றவுள்ளார். அவரது உரையில் மேற்கண்ட கேள்விகளுக்கான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


*****


References:

1. Scott, Sophie et.al., (2021, June 7). Medicare rebate changes for surgeries kick in next month, but doctors say more time is needed. ABC news. https://www.abc.net.au/news/2021-06-07

2. Marsh, Stuart. (2021, June 7). Medicare Benefits Schedule explained: What changes are coming in on July 1. 9 News. https://www.9news.com.au/national

3. AAP. (2021, June 6). Medicare changes risk creating patient ‘chaos’, doctors claim. Health & Wellbeing. 7 news. https://7news.com.au/lifestyle/health-wellbeing

4. Medicare Benefits Schedule (MBS) Review. ( 2021, June 2). Initiatives and programs. https://www.health.gov.au/initiatives-and-programs/mbs-review

5. Gillespie, Eden. (2021, June 7). What does the medicare rebates shake-up mean for young australians?. The Feed. SBS News. https://www.sbs.com.au/news/the-feed

34 views0 comments

Comments


bottom of page