top of page

மகாலட்சுமி ராகவனின் 'கொற்றவை' நாவல் படித்துவிட்டு எழுதியது



பேரா. ஜான் பிரிட்டோ பரிசுத்தம்

ஆஸ்திரேலியா

04.07.2022


அன்பு மகள் மகாலஷ்மி ராகவன்!

உன் அப்பா ஜான் பிரிட்டோ பரிசுத்தம் எழுதுகிறேன்.

உன் அழகிய ‘கொற்றவை’ நாவலை படித்து முடித்து இம்மடலை எழுதுகிறேன்.


ஏ! அப்பா… நீ ஒரு தேர்ந்த நாவலாசிரியராக இருப்பதை ஒவ்வொரு பக்கத்திலும் உணர்ந்தேன்.


மிகவும் குறிப்பாக, கடைசி பக்கம்.


பல வருடங்களாக தன் மகனை இழந்து, மகளாக கூட பார்த்துவிட முடியாதா என ஏங்கிப் போய் இருந்த ‘போதும் பொண்ணை’ (அவள் தாயை) ஒரு கையிலும்,


கடிதம் எழுதி எழுதி தன் அன்பை தெரிவித்தும், பாராமுகமாக இருந்து, பஞ்சம்மா முத்தையாவின் மேல் வைத்திருந்த அன்பை புரிந்ததும் மனம் மாறி, அழைப்பிதழ் அனுப்பியதால் வந்த காதலன் செழியனை மறு கையிலும்…..

நிறைவாக இருந்தது… நீ ஒரு தேர்ந்த நாவலாசிரியராக உயரத்தில் போய் உட்கார்ந்து விட்டாய்.


இரு. இன்னும் சொல்கிறேன்.


நாவலை நான் படித்து முடித்தும், உன் கதாபாத்திரங்கள் எல்லோரும், என்னைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர். நான் சாப்பிடும் போது, அருகிலேயே அமர்ந்து விடுகின்றனர். மகிழுந்தில் பயணம் செய்யும் போது, ஆளுக்கொரு பக்கம் தொத்திக்கொண்டு அவர்களும் வருகின்றனர். கடைக்குப் போய் காய்கறி வாங்கும் போது, அவர்களே விலையைக் குறைக்கச் சொல்லி பேரம் பேசுகின்றனர்.


அன்றைக்கு திடீரென மழை வந்து விட்டது. ஆதிரை தான் குடை பிடித்து வந்தாள். எங்கள் பண்ணை வீட்டில் ஆடு குட்டி போட்டது. அதை வைராக்கிய மேரி எடுத்து கழுவி சுத்தம் செய்தாள். மீன் பிடிக்க குளத்திற்குப் போனால், தூண்டிலில் மண்புழுவை எடுத்து வைத்து கயலும், கோதையும் தயாராக நிற்கிறார்கள். மாங்காய் பறிக்க அலக்கு எடுத்துக்கொண்டு, மாமரத்தடி போனேன். கண்மணியும், மலரும், மங்கையும் கிளையில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். மின்னாராவும் சுந்தரியும் சொல்லவே வேண்டாம். தினமும் சாணி தெளித்து அழகு அழகு கோலம் போடுவதே அவர்கள் தான். சைக்கிளில் போஸ்ட்மேன் வந்தார். பின்னாடி செழியன் உட்கார்ந்திருந்தார். எங்கள் வீட்டை ஒட்டி ஒரு வாய்க்கால் ஓடுகிறது. தென்னை மரத்திலிருந்து தேங்காய் முற்றி அதில் ‘தொப்’பென விழுந்தது. முத்தையா மாமா இறங்கி, இடுப்பு வரை நனைந்து, தேங்கையை எடுத்து வந்து திண்ணையில் வைக்கிறார்.


வீட்டு ஹாலில் உள்ள சிறிய நூலகத்தில் அம்மையப்பன் புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டிருக்கிறார். பிரியா பாபுவும், மஹாலஷ்மியும் தோட்டத்தில் இருக்கிற மல்லிகைப் பூவைப் பறித்து சிறு மாலையைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். தோட்டத்தின் பக்கத்தில் குறுங்காடு. அதிலிருந்து ஆண் மயில்களும் பெண் மயில்களும் தோட்டத்திற்கு வந்து நடை போடும். அதை மெர்சி தன் மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார். சாமுவேல், வாழைமரத்தின் அடியில் நின்று கொண்டு அதைப்பார்த்து ரசிக்கிறார். மொட்டைமாடியில் காற்று வாங்கிக்கொண்டே, மேற்கில் சரியும் சூரியனின் சிவப்பை பார்த்துக்கொண்டு எதையோ படித்துக்கொண்டிருக்கிறார் தமிழரசன். போதும் பொண்ணு, பிரண்டை இலையையும் துளசி இலையையும் பறித்து அம்மியில் வைத்து அறைத்துக்கொண்டிருக்கிறார். கொற்றவை மாத்திரம் என் தோளிலேயே!!!


சுற்றி அவர்கள் தான்!! இப்பொழுது எங்கள் வீடு நிறைந்து இருக்கிறது. பதினைந்து இருபது பேர் படுக்க ஏற்பாடு செய்து விட்டேன்.


நல்லது.

உன் நாவல் எழுதும் திறமையை மெச்சி சில…

உன்னை முழுவதுமாக புரிந்துக்கொள்ள கொற்றவை உதவினாள். உன் நகைச்சுவை உணர்வு, கவித்துவம், பாத்திரங்கள் படைக்கும் திறன், உவமைகளால் விவரிக்கும் தன்மை, நடப்பியல் வசனங்கள் உருவாக்கும் திறமை, சூழலை விரிக்கும் விதம், சொல்லவேண்டிய கருத்தை கதாபாத்திரங்கள் மூலம் சொல்லும் விதம், வெவ்வேறு இடத்து மொழி என கொற்றவை ஒரு முழு நீள நாவலாக மிளிர்கிறது.


உன் நகைச்சுவைகள்

  • எடுத்த எடுப்பிலேயே ‘ஓ! இப்படி ஆரம்பிக்கக் கூடாதோ?’ என வாசகர்களை வசியம் செய்துவிட்டாய். நான் வேற லெவல் என முதல் பக்கத்திலேயே நிருபித்து… தொடங்கியதும் ஆடிப் போய்விட்டேன்.

  • ‘வட போச்சே!’ என சொல்லி ஆதிரை வடையை கயலிடம் கொடுத்து செல்லும் போதும், ‘சேகர்ட்ட சொல்லி எனக்கொரு வடை ஜெராக்ஸ் போட்டு வைக்க சொல்லு’ என அம்மையப்பன் ஆதிரையிடம் சொல்லும் போது… அட! என சத்தமாகவேச் சொல்லிவிட்டேன்.

  • கொற்றவை வீட்டைப் பற்றி கோதையிடம் சொல்லும் போது, நக்கலாக ‘ம்! ரொம்ப பெருசு தான். முன்னாடி இருக்குற லாபியல பத்து ஆட்டோவே நிறுத்தலாம்னா பாத்துக்கோயேன்’ என்பது டாப்.

  • கயல் வரும் இடமெல்லாம், அவள் தின்பண்டத்தை ஒரு வழிப் பண்ணுவதைப் பற்றி சுவையாகச் சொல்கிறாய். ‘ஆத்தி! இவ எதுக்கு வந்தா? இவ வந்தாலே தின்பண்டத்தை எல்லா காலி பண்ணிருவாளே’ ‘ ஆமா! இங்க வச்சுருந்த ரவா லட்டு பாத்திரம் எங்கடி?’

  • கோதையிடம் முறையிடும் போது, கோதை, ‘அப்படிப்பட்ட இடத்துக்கு ஒரு பொண்ண அனுப்புவாங்களா? ஆமா! உங்க சாருக்கு நீ பொண்ணுனு தெரியுமா?’ - கிண்டல்

  • கோதை தன் இன்டெர்ன்ஷிப் சார் ‘உத்தமநாதன்’ என்றும் பேருக்கேத்த ஆள் என்றும் முதலில் சொல்லிவிட்டு, பிறகு அவரைத் திட்டும் போது ‘ பேரைப் பாரு… உத்தமநாதன்’ என சொல்வது அழகான அவலம்.

  • மகாலஷ்மியைச் சந்திக்கும் போது, ‘என்ன பாப்பா, அம்மா அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா?’ என விஜயா ஆண்ட்டி கேட்க, ‘நல்லா இருக்காங்க ஆண்ட்டி’ என பதிலளிக்க, ‘ நல்லாதான் இருப்பாங்க பாப்பா, நீ தான் இங்க வந்துட்டீயே’ என்று நக்கலடிக்க… அதில் உன் குறும்பு தெரிந்தது.


உன் உவமைகள்

  • ‘இன்டெர்ன்ஷிப்க்கு டி..இவங்களப் போய் பாக்கச் சொல்றாரு’ வடைக்கு நடுவில் வந்து விழுந்தது வார்த்தை. அசந்து போய்விட்டேன்.

  • முதன் முதலில் ஆதிரை கொற்றவையைப் பார்க்கும் போது, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியில், ஆதிரைக்கு ’மூளைக்குள் ஈ மொய்ப்பது போன்ற ஓர் உணர்வு’. இந்த உவமை ஓரிரு இடங்களில் (கண்மணியை கைலிக்காரன் அழைத்துப் போகும் போது) எதிர் மறையாக வந்து, ஓர் இடத்தில் (பிரியா பாபுவின் அறிவையும் அனுபவத்தையும் பார்க்கும் போது) அதையே நேர்மறையாக மாற்றியிருப்பது அருமை.

  • முதல் சந்திப்புகளில் கொற்றவையைப் பார்க்கும் போது, பிடிக்காமல் இருக்கும் நிலைமையை அழகான உவமையில் ஆதிரைச் சொல்கிறாள். ‘ நல்லா காரம் சாப்பிட்டு தண்ணி குடிக்கும் போது, அது சுடு தண்ணியா இருந்தா நாக்குக்கு அடியில் படும் போது சுர்ர்ர்ர்ருனு எறியும் பாரு… அப்படி இருக்கு.’

  • கொற்றவை, ஆரம்பக் கட்டத்தில், ஆதிரையோடு பழகும் போது, பட்டும் படாமலும் இருக்க, தன் ஆராய்ச்சியிலும், தேடலிலும் மும்மரமாக இருக்க, ஒன்றுமே புரியாமல் இருக்கும் ஆதிரையிடம் திருநங்கைகள் பற்றி ஆராய்ச்சி செய்யப் போகிறேன், ஏதாவது கேள்வி இருந்தால் கேளு என்றதும் ‘ஆதிரைக்கு முளை சூடேறி காது வழியாக புகை’ வருவதை அழகாக விவரிக்கிறாய்.

  • பஞ்சம்மா, தான் ஆணாக வெளியில் வளர்ந்த போதும், தன் பெண்மையை உள்ளுக்குள்ளே உணர்ந்து, இரண்டுக்கும் இடையில் வளர்ந்ததை ‘ நாளாக நாளாக நா ஏதோ ஒரு ஒடம்புக்குள்ள மாட்டிகிட்டதா தோணுச்சி..’ என்று படிக்கும் போது… அந்த போராட்டத்தை என் மனதில் இறக்கி விட்டாய்.

  • பஞ்சம்மா தன் மாமன் மவன் முத்தையாவைப் பற்றிச் சொல்ல நினைக்கும் போது, ‘பஞ்சம்மாவின் உதட்டிற்குள் ஒரு துளி தேன் பட்டதோ, இல்லை மனதுக்குள் மழை பெய்ததோ’ என்று சொல்லி உவமைப்படுத்துகிறாய்.

  • கோயமுத்தூரில் தமிழரசன் வழக்கறிஞரைப் பார்த்துவிட்டு, மிகவும் களைப்பாக தங்குமிடத்திற்குத் திரும்பிய ஆதிரைக்கு, ‘கணமான தாகம் கொண்டவனுக்கு மண்பானை தண்ணீரைக் கண்டது போல்’ மகிழ்ச்சி என சொன்னதில் எனக்கு தாகம் தீர்ந்து இரண்டு நாட்கள் தண்ணீர் குடிக்கவில்லை.

  • சிங்காநல்லூரில் உள்ள அரவான் கோயிலின் அருகே அமர்ந்திருந்த பெரியவரை விவரிக்கும் போது ‘இதற்கு மேல் அழுக்குபடிய இடமில்லை எனும் சட்டை, வேஷ்டி, வரண்ட விவசாய நிலமாய்க் கண்கள், சட்டையின் கணத்தை மட்டுமே தாங்கும் அளவிற்கான தோள்கள்’ என வர்ணிக்கிறாய். அவரை வைத்தே அரவான் திருவிழாவைப் பற்றிச் சொல்ல வைக்கிறாய். பலே!

  • மின்னாராவைப் பார்த்துவிட்டு வைராக்கிய மேரியுடன் ஆட்டோவில் பயணித்த கொற்றவை, ஒரு இட்லிக்கடையில் நின்று, சாப்பிட உட்காருகின்றனர். சுடச்சுட இட்லியோடு ஒரு பெண் அவர்கள் மு வந்து நிற்கிறார். அப்பொழுது, ‘அவரே இட்லிப் பானையின் உள் இருந்து வேகவைத்தது போல் தான் இருந்தார்’ என எழுதுகிறாய். எப்படி வந்தது இப்படிப்பட்ட கற்பனைகள்?

  • பஞ்சம்மா, முத்தையா மாமாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டிருந்தார். கொற்றவை பார்க்கப் போகிறார். விரட்டி விரட்டி அடித்த முத்தையா மாமா, இப்பொழுது ஆதரவின்றி இருக்கும் போது, அரவணைத்து பார்த்துக்கொண்ட பஞ்சம்மா, அன்பு பற்றி சொல்லிய வார்த்தைகள் கொற்றவையின் மனதில் எப்படி தெரியுமா இறங்கின? ‘வார்த்தைகள் மெதுவாக… மெதுவாக…. தண்ணீரில் மெதுவாகப் போட்ட நாணயம் போல, அவள் மனதின் ஆழத்தில் இறங்கி, சட்டென்று நங்கூரமாய் ஒட்டி நின்றது’ என்று எழுதுகிறாய். அருமையான உவமை!


உன் திருப்புமுனைகள்

  • ஆதிரையின் பெற்றோர்கள், நூறு சவரனும் ஒரு காரும் கேட்கும் டாக்டர் மாப்பிள்ளையை கட்டிக்கச் சொல்லி, கிட்டத்தட்ட வற்புறுத்தும் போது, ‘அவங்க சொல்ற எல்லாத்தையும் நாம கொடுத்துறலாம். ஆனா தாலி மட்டும் நா தான் கட்டுவேன்’ எனச் சொல்லும் போது நெத்தியடி.

  • கண்மணியின் சாவு எதிர்பாராத ஒன்று. என்னை மிகவும் பாதித்த இறப்புகளில் ஒன்றாக அமைந்துவிட்டது. அவள் உடல் முழுதும் இறுக்கமாக ஒரு வெள்ளைத்துணியால் முடப்பட்டு, ஆஸ்பத்திரி ராஜாஜி மருத்துவமனை பிணவறையிலிருந்து கொண்டு வரப்பட்டபோது, ‘ வெள்ளை மேகத்தால் சூழப்பட்ட கருப்பு நிலவாய்ப் படுத்திருந்தாள்’ என எழுதுகிறாய். என்ன உவமை! என்ன திருப்புமுனை!! கண்கள் குளமாயின. ‘கடவுளிடம் இல்லாத கருப்பைய கடன்வாங்கி உன்ன சுமக்குறேன்’ என பாடல் வேறு. அசத்திவிட்டாய். என் சாவு வரை கண்மணியின் சாவு என்னோடு வரும்.

  • ஆதிரை கொற்றவையை மதிப்பளித்து பேசும் கட்டம் வரும்போது, கோதை உத்தமநாதனின் பித்தலாட்டங்களை பிட்டு வைக்கிறாள். நல்ல திருப்புமுனை. காட்சிகள் மாறி நகர்வது ஒரு நல்ல நாவலுக்கு அடிப்படை. அதை செய்திருக்கிறாய்.


உன் நடப்பியல் வசனங்கள்

  • ‘போய் பாக்கனும். இல்லாட்டி நம்மல பொங்கல் வச்சுரமாட்டாரு?’ என ஆதிரை கயலிடம் சொல்கிறாள்.

  • கொற்றவை குப்பைக்கூடையை நீட்ட, ‘ முதல் நாளே குப்ப கொட்டவா? வெளங்கிரும்’ என்று முனகுவது…

  • பஞ்சம்மாவை முதன்முதலில் பேட்டி காண, கொற்றவை ஆதிரையிடம் கேமிராவை ரெடி பண்ணச் சொல்லும் போது, ஆதிரையின் மைண்ட் வாய்ஸ் - ‘ இது வேறயா? இவக பெரிய பிபிஸி…அவுக பில்கேட்ஸ்…இன்டெர்வியு எடுத்தா அப்படியா அறிவு மொழியா பேசித் தள்ளிருவாக….நா… எங்க..எப்புடி இருக்க வேண்டியவ..’முனகல்!!


உன் கவித்துவம்

  • வழியெங்கும் சிரிப்பைத் தூவிக்கொண்டே சென்றார்கள். அட! அருமை.

  • அன்புச் செழியன் கடிதங்கள் எல்லாமே கவிதைகள் தான். அதை முதல் அத்தியாத்துலேயே அறிமுகம் செய்து ஒருவித சஸ்பென்ஸை உருவாக்கியது அற்புதம்.

  • பஞ்சம்மா தன் வாழ்க்கைய விவரிக்கும் போது, ‘ என்னை ராசா மாதிரி தான் வளத்தாக. ஆனா நா என்னமோ ராணியா தான் வளந்தேன்.’ அழகான விளக்கம்.

  • கண்மணி உடைந்து சொல்லும் போது, ‘வார்த்தையில அடிச்ச காயத்துக்கு எவனாவது வைத்தியம் பாக்குறானா சொல்லு.’ என்று சொல்லிவிட்டு ‘ சுட்ட தன்மானத்தின் சுவடை மீண்டும் கீறிக்கொண்டிருந்தாள்’ என முடிப்பது சோகத்தின் உச்சம்.


உன் சூழலை வர்ணிக்கும் அழகு

  • அரவான்குப்பத்தை விவரிக்கும் போது, ஐம்புலன்களுக்கும் வேலை வைக்கிறாய். காது (போகும் வழியில் ஒருத்தி இட்லி சுட்டுக் கொண்டிருந்தாள். (அந்த ஒலி) வாய் (சில ஆண்கள் அந்த இட்லிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்) கண்கள் (தனது குட்டிகளோடு குதூகலமாய் சேற்றில் ஊறிக் கொண்டிருந்தது ஒரு பன்றி) மூக்கு ( பல நாட்களாக சமைக்காத மீன் கவிச்சி நாற்றம்) தொடுதல் (கொற்றவை தார்ப்பாயை விலக்கிக் கொண்டு ஓர் ஓட்டு வீட்டினுள் சென்றாள்).

  • கோயமுத்தூரில் கொற்றவையும் ஆதிரையும், வழக்கறிஞரைப் பார்த்துவிட்டு திரும்பும் போது, ஆட்டோ ‘ஊரோரம் புளியமரம்….’என்ற பாட்டைத் தெருவில் சிதறிக்கொண்டே சிங்காநல்லூரை நோக்கிச் சென்றது என்று வர்ணிக்கிறாய். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த பாடல் திருநங்கைகள் பாடுவதாக திரைப்படத்தில் வருவதாக என் ஞாபகம்.


உன் இடத்தையும் நேரத்தையும் காட்சியையும் நிறுவும் பாணி

  • அரவான் குப்பத்து வீட்டை நிறுவும் போது ‘பத்துக்குப் பத்து அளவு உள்ள அறை’ என்றும், மூலையில் உலை கொதித்துக் கொண்டிருக்க, நீளமான கயிற்றில் சில சேலைகளும், ரவிக்கைகளும் அழுக்காய் தொங்கிக் கொண்டிருக்கின்றன எனவும் கண்முன்னே வீட்டை கொண்டு வருகிறாய். ஈக்களுக்கு என்ன வேலை தெரியுமா? அந்த துணிகளை பாதுகாப்பது போல் சுற்றி சுற்றி வருகின்றனவாம். சேவலில் அமர்ந்திருக்கும் விசித்திரமான அம்மன் படத்தில், காய்ந்து சருகாய் தொங்கிக்கொண்டிருந்தது பூ’ என வர்ணிக்கும் போது, சூழலின் அவலத்தை அழகாய் சுட்டுகிறாய்.

  • கைலிக்காரன் கூப்பிட, கண்மணி கிளம்பி போகும் காட்சியை ‘சொல்லாமல் சொல்லும்’ வித்தையில் சொல்கிறாய். இங்கு தான் கைதேர்ந்த எழுத்தாளர் என நிருபிக்கிறாய். ( சரியாகக் கட்டியிருந்த சேலையைக் கழட்டி தளர்வாகக் கட்டிக் கொண்டாள். - ஆரம்பமே அமர்க்களம் - ஏற்கனவே அழுதிருந்த கண்களில், அந்த கண்களின் ஈரம் காயும் முன்பு கண்மை பூசிக்கொண்டாள். அழுது கொண்டிருந்ததால் உதடுகள் துடித்த வண்ணம் இருந்தன. அதைச் சொல்லி, அவைகளுக்கு சிவப்பு சாயம் பூசிக் கொண்டாள். கட்டி இருந்த தலையும் அவிழ்த்துவிட்டாள். கைலிக்காரன் தன் பீடியை கீழே போட்டு நசுக்கிவிட்டு, நூறு ரூபாயை எடுத்துக் கொள்கிறான். இருவரும் பக்கத்தில் இருந்த குடிசைக்குள் நுழைந்தனர்)

  • கோயமுத்தூர் கோபாலபுரத்தில் உள்ள கோர்ட்டை வர்ணிக்கும் போதும் ஒரு யதார்த்தம். ‘படங்களில் பார்ப்பது போல் இல்லை. முற்றிலுமாக மாறுபட்டு இருந்தது’ என்று சொல்லிவிட்டு கைவிலங்கு போட்ட ஆளையும் போலீஸ்காரர்களையும் கடக்கும் போது ஆதிரையின் கால்கள் அனிச்சையாக வேகம் எடுப்பதை விவரிக்கும் போது அருமை. ‘அங்கிருக்கும் வழக்கறிஞர்களுக்கு ஜெராக்ஸ் இயந்திரத்தின் சத்தமே தேவகானம். ஆனந்தாஸ் செட்டிநாடு மெஸ்ஸின் உணவே நளபாகம்’ என வர்ணித்திருப்பது சிறப்பு.


எனக்குப் புது வார்த்தைகள்

  • பெரியவர்களை வணங்கும் போது ‘பாம்படுத்தி அம்மா’ என கொற்றவை வணங்குகிறாள்.

  • ‘ரீத்’ ஒரு பொட்டைக்கு நடக்குற தத்தெடுக்கும் முதல் சடங்கு.

  • திருநங்கைகள் ஒன்னு கூடும் போது அதுக்கு ‘ஜமாத்’ துன்னு பேரு.

  • சின்ன திருநங்கைகள ‘பிஞ்சு, பொட்ட’ னு சொல்வாங்க.

  • தலைவிக்கு ‘நாயக்’ குன்னு பேரு.

  • குரு தத்தெடுக்கும் போது தலையில் ‘சட்டாய்’ வச்சு நிக்க வைப்பாங்க.

  • ‘மும்மீட்டா’ ன்னா ஒரு பெரிய திருநங்கை, சின்னவங்களுக்கு இனிப்பு கொடுத்து இனிமேல் நீ என் பொண்ணுனு சொல்றது.

  • திருநங்கைகள் கைதட்டும் முறைக்கு ‘சாட்லா’ எனப் பெயர்.

  • ‘கடை கேட்டல்’ என்பது சாட்லா செய்துக் கொண்டே கடைகளுக்குச் சென்று காசு கேட்டல்.

  • ‘நிர்வாணா’ னா தாயம்மா மூலமாகவோ, டாக்டர்கிட்டயோ ஆப்பிரேஷன் பண்ணிக்கிறது.

  • ‘படே வேளி, சோட்டே வேளி’ என திருநங்கைகளின் சமூகம் இயங்குகிறது.

  • ‘அண்ணகர்’ என்ற வார்த்தை, விவிலியத்தில், திருநங்கையைக் குறிக்கும் சொல்.

  • குருபாய் பொண்ணுக்கு ‘பால் திருவிழா’


உன் கருத்துக்கள்

  • ஆராய்ச்சி பற்றிய உன் கருத்தை அம்மையப்பன் விளக்குகிறார். (நம்ம ஆராய்ச்சி பெருசா மக்களுக்குப் போய் சேராது தான். ஆனா கொஞ்சமாவது யாருக்காவது பயன்படலாம்ல?)

  • திருமணம் பற்றி சொல்லும் போது, ‘நாய எவ்வளவோ வெல கொடுத்து வாங்குனாலும், நாய்க்கு நாம தான் சங்கிலி போடனுமே தவிர, நாய் நமக்கு போடக்கூடாது’ என்று வரதட்சணை வாங்கும் மாப்பிள்ளைகளுக்கு தாலி கட்டும் உரிமை பற்றி ஒரு அசத்தல் பதில்.

  • தமிழரசன் வழக்கறிஞர் மூலமாக திருநங்கைகள் மற்றும் சட்ட நுணுக்கங்களை தெரிந்துக்கொண்டதும் சிறப்பு.

  • கண்மணிக்காக இஸ்லாத்திலிருந்து இமாம் வந்து சடங்குகள் செய்வதன் மூலம், அவைகளைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

  • பிரியா பாபு அம்மா மூலம் தமிழ் இலக்கியத்தில் திருநங்கைகள் பற்றித் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

  • மகாலஷ்மி மூலம் ஆங்கில இலக்கியத்தில் திருநங்கைகள் பற்றித் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

  • சாமுவேல் சுந்தர் பாஸ்டர் மூலம் விவிலியத்தில் திருநங்கைகள் பற்றித் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

  • மெர்சி ஏய்பில் மூலம் மாற்று பாலின உணர்வுள்ள குழந்தைகள் பற்றித் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

  • மனித நேயம் தான் ஒரே தீர்வு என தீர்வையும் முன்வைக்கிறாய்.

  • மலர், மங்கை மூலமாக ஆப்பரேஷன் பற்றி தெரிந்துக்கொள்ள முடிகிறது. பெண்ணின் பெருமை பற்றியும் கயலும் கோதையும் புரிந்துக் கொள்வதன் மூலம் வாசகர்களுக்கும் புரிய வைக்கிறாய்.

  • ‘திருநங்கைகள் பத்திதான் இந்தப் புத்தகம்னு நீங்க நெனைக்க வேண்டாம். இது வாசிக்குற உங்களப் பத்தியுத் தான்’ எனச் சொல்லும் போது சுரீர்னு இருந்தது.


உன் தத்துவங்கள்

  • நண்பர்கள் மட்டும் அல்ல, தோழிகளும் உற்றவர்களே.

  • மனதுக்குப் புரியாத விடயங்களை வார்த்தை விளக்கும். வார்த்தை தோற்றுப் போயின் காலமே புரியவைக்கும். (நீ என் மனதில் உயரஉயரப் போன இடம் இது.)

  • கண்மணியின் சாவு/கொலைக்குப் பிறகு ‘ஓர் ஆயுள் கொடுக்க வேண்டிய பாடத்தை ஒரே ஒரு மரணம் கொடுத்துவிடுகிறது’ என்று சர்வ சாதாரணமாக ஒரு வாழ்க்கைத் தத்துவத்தை உதிர்த்துப் போகிறாய்.

  • மெர்சி ஏய்பில் குழந்தைகளைப் பற்றியும் கல்வி பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘ இந்த உலகம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதாய் ஒரு பைத்தியக்காரப் பிம்பத்தில் அலைந்துக் கொண்டிருக்கிறது’ என்று உண்மையை உடைக்கிறாய்.

  • கொற்றவை சென்னைக்கு பயணம். ‘பயணம் மனிதனை முழுமையாக்குகிறது. புத்திப் புகட்டுகிறது. பாடம் கற்பிக்கின்றது. அவனை அவனுக்கே அறிமுகம் செய்கின்றது.’ என்று வாழ்க்கைப் பாடம் பகிர்கின்றாய். அதோடு நிற்கவில்லை. ‘பயணங்கள் இதயக் கூட்டில் தூசியாய் ஒட்டிக் கிடக்கும் சில நினைவுகளை தட்டிக் கிளரி விடுகிறது’ என்று உண்மை உரைக்கிறாய். இத்தனை வயதில் இவ்வளவு தத்துவங்களா?

  • வைராக்கியமேரி மூலம் இல்லாமல் இருப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை சொல்லிக் காண்பிக்கிறாய். ‘அங்கீகாரம் நீ இன்னா குடுக்கறது? நானே எனக்குக் குடுத்துக்குறேன். இல்லங்கறதுல சந்தோஷமா இருக்கேன்.’ என்கிறார்


நாவலாக முழுமை பெற

  • கொற்றவையின் கதைக்கு ஒரு முடிவு வைத்தது போல், ஆதிரை இன்னும் சில கதாபாத்திரங்களின் கதைகளுக்கு ஒரு முடிவு கொடுக்கலாம்.

மகாலஷ்மி!

மகளே!!

வாழ்த்துக்கள்.


சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம். எழுத எழுதத் தான் எழுத்து கை கூடும்.

முதல் நாவலில் நீ வெற்றிப் பெற்று விட்டாய்!


இன்னும் எழுத அப்பாவின் வாழ்த்துக்கள்.


கொற்றவையும், போதும் பொண்ணும், செழியனும், எங்கள் வீட்டில் கோழிக் கொழம்பு சாப்பிட்டுவிட்டு, வெற்றிலைப் பாக்கு போட்டுவிட்டு, பாயில் படுத்திருக்கின்றனர். ஆதிரையும் அவள் நண்பர்களும் பல்லாங்குழி ஆடிக்கொண்டிருக்கின்றனர். நான் போய் அவர்களுக்கு டீ போட வேண்டும்.


பிறகு சந்திப்போம். வரட்டுமா?



ஜான் பிரிட்டோ பரிசுத்தம்

ஆஸ்திரேலியா

04.07.2022


***********

29 views0 comments
bottom of page