top of page

கட்டுரை 13 - தலிபானுக்கு சவால் விடும் ISIS-K அமைப்பு: யார்? ஏன்?

Updated: Jan 9, 2022

காபூலின் ஹமீத் கர்ஸாய் அனைத்துலக விமானநிலையத்தின் அருகே பேரிடியுடன் கூடிய ஒலியில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததும், ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற விரும்பி, விமான நிலையத்தில் பலரும் குவிந்தனர். தலிபான்கள் 28 பேர், அமெரிக்கப்படையினர் 13 பேர் உட்பட 170 பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.


‘யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம். அது ஆபத்தான இடமாக மாறப்போகிறது. எப்பொழுது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடக்கலாம் என அஞ்சப்படுகிறது’ என்று ஆஸ்திரேலியா உட்பட, மேலை நாடுகள் பல, வியாழக்கிழமை அன்று தங்கள் நாட்டு குடிமக்களை எச்சரித்திருந்த நிலையில் அன்று இரவே, விமான நிலையத்தின் Abbey Gate அருகே அந்த கொடியத் தாக்குதல் நடந்தது. இரண்டுமே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் என அறியப்படுகிறது.


ISIS-K என்கிற குழுவினர் அந்த தாக்குதல்களுக்கு பொறுப்பு ஏற்பதாக அறிவித்தனர். பிரதமர் ஸ்காட் மோரிசன் அந்த தாக்குதல்களை ‘கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான’ தாக்குதல்கள் என்று கண்டனம் செய்தார்.

யார் அந்த ISIS-K ? எப்பொழுது துவங்கப்பட்டது? யார் துவக்கியது? யார் யார் உறுப்பினர்களாகச் சேர்ந்தார்கள்? எப்படி வளர்ந்தார்கள்? என்னென்ன தாக்குதல்களில் ஈடுபட்டார்கள்? இவர்களுக்கும் தலிபான்களுக்கும் என்ன வேறுபாடு? ஏன் பகை? இனி என்ன நடக்கும் என்று இந்த கட்டுரை அலசுகிறது.


யார் இந்த ISIS-K? அவர்கள் நோக்கம் தான் என்ன?

மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் செயல்படும் Islamic State of Iraq and Levant (ISIL) என்கிற அமைப்பின் துணை அமைப்பு தான் The Islamic State of Iraq and the Levant - Khorasan Province. சில ஊடகங்கள் இதனை ISK, ISISK, IS-KP அல்லது Daesh-Khorasan என்கிற பெயர்களில் அழைக்கின்றனர்.

கொரசன் என்பது தற்போதைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், தஜிக்கிஸ்தான் மற்றும் மத்திய ஆசியப்பகுதியை உள்ளடக்கிய பகுதிக்கான பண்டையப் பெயர். தற்போதைய அந்த நாடுகளை ஒருங்கிணைத்து கொரசன் மண்டலத்தை மறுபடி ஓர் இஸ்லாமிய நாடாக அறிவிப்பதே அவர்கள் நீண்ட கால நோக்கம். அதற்காகத் துவங்கப்பட்டதே இந்த அமைப்பு.


ISIS-K எப்பொழுது துவங்கப்பட்டது? அதன் தலைவர்கள் யார்?

ISIL, 2015 ஜனவரி மாதம் தங்கள் அமைப்பையும் அவர்கள் நோக்கத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள். Tehrik-i-Taliban Pakistan ஐச் சேர்ந்த Hafiz Saeed Khan ஐத் தலைவராகவும் Afghan Taliban ஐச் சேர்ந்த Abdul Rauf Aliza ஐ துணைத் தலைவராகவும் நியமித்தனர். ஆனால் அடுத்த மாதமே Aliza ம், அடுத்த வருடமே Khan ம் அமெரிக்கப்படையினரால் கொல்லப்பட, பிறகு வந்த நான்கு தலைவர்களுக்குப் பிறகு, தற்போது Shahab al-Muhajir 2020 ம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து தலைவராக இருக்கிறார். இவர்களின் தலைமையில் பல போராளிகள், அமைப்பில் சேர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.


ISIS-K க்கு போராளிகள் எப்படி சேர்ந்தார்கள்?

ஆப்கானிஸ்தானில் கிராமங்களுக்குச் சென்று, தங்கள் நோக்கத்தை பிரச்சாரம் செய்தார்கள். அங்கிருந்து இளைஞர்களைத் திரட்டினார்கள். கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும், முக்கியமாக பல்கலைக்கழக மாணவர்களையும் குறிவைத்தார்கள். காபூல் பல்கலைக்கழக மாணவர்கள் இஸ்லாமிய சட்ட வகுப்பில், இந்த அமைப்புக்கு ஆதரவு கொடுப்பதாக உறுதி எடுத்த நிகழ்ச்சியும் நடந்தது.

அதுமட்டுமல்ல பாகிஸ்தானில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மதரஸாக்களிலும் கிட்டத்தட்ட 150 மசூதிகளிலும் இருந்து உறுப்பினர்களைப் பெற்று தங்கள் அமைப்புக்கு வலு சேர்த்த்தாக தகவல் இருக்கிறது. முக்கியமாக தலிபான்களிலிருந்து வெளியேறும் நபர்களை குறிவைத்திருக்கிறார்கள். தங்கள் தலைவரைப் பிடிக்காமல் போனவர்களோ அல்லது போர்க்களத்தில் வெற்றி பெறாமல் தோற்றுப்போனவர்களோ ISIS-K அமைப்பில் வந்து சேர்ந்தார்கள். இவர்களைக் கொண்டு தான் வரலாறு படைக்க முற்பட்டார்கள்.


ISIS-K வீழ்ச்சியும் எழுச்சியும் கொண்ட வரலாறு என்ன?

தலிபான்களின் தலைமையில் தான் ஆப்கானிஸ்தான் போர் நடக்கும் என்றும், தங்கள் அமைப்புக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து ஆட்களை எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தலிபான் தலைவர் Akhtar Mansour வலியுறுத்தி ISIS-K அமைப்பின் தலைமைக்கு கடிதம் எழுதினார். ஆனால் 2015ம் வருடம் ஜூன் மாதத்தில் நங்கர்கார் மாகாணத்தில் ISIS-K தலிபான்களை எதிர்த்து போராடி வெற்றியும் பெற்றது. அந்த மாகாணத்தை தங்கள் வசம் ஆக்கிக்கொண்டனர்.


இப்படித்தான் அவர்களது ஆப்கானிஸ்தானிய இருப்பு ஆரம்பமானது. தலிபான்களை விரட்டியவர்கள் அதனைத் தொடர்ந்து ஆப்கானியப்படைகளை எதிர்த்தனர். Helmand மற்றும் Farah பகுதிகளைப் பிடித்தனர். பெஸ்தோ மொழியிலும் தாரி மொழியிலும் வானொலி சேவையைத் துவங்கும் அளவுக்கு காலூன்றினர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆனால் சில காலத்திலேயே திருப்புமனை நடந்தது. 2016ல், ISIS-K அமைப்பை, ஒரு பக்கம் தலிபான்கள் தாக்க, இன்னொரு பக்கம் அமெரிக்க ஆதரவுடன் ஆப்கானியப் படை போரிட, நங்கர்கார் மாகாணத்தை கை நழுவ விட்டது. சில போராளிகள் அமைப்பை விட்டு தலிபான் அமைப்பில் கூட சேர்ந்துவிட்டனர். ISIS-K அமைப்பில் 2015ல் இருந்த போராளிகளின் எண்ணிக்கை 2,500 லிருந்து, 2017ல் வெறும் ஆயிரத்திற்கும் குறைவாக ஆகிவிட்டது. இருந்தாலும் அவர்கள் செயல்பாட்டின் வேகம் குறையவில்லை. காஷ்மீரிலிருந்து சிலர் ஆதரவுக்கரம் நீட்டினர். போராட்டம் தொடர்ந்தது. தாக்குதல்களை வேகப்படுத்தினார்கள்.


ISIS-K ஆப்கானிஸ்தானில் என்ன என்ன தாக்குதல்களைச் செய்தார்கள்?

ஜலலாபாத்தில் இருந்த Save the Children என்கிற அரசு சாரா அமைப்பின் அலுவலகத்தை 2018 ஜனவரியில், தாக்கியதில் 6 பேர் இறந்தனர். மேலும் 27 பேர் காயமுற்றனர். காபூலில், ஷியா பிரிவினர் குடும்பத்தில் நடந்த திருமணத்தில், 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி, தற்கொலை குண்டுதாரியைக் கொண்டு, 92 பேரைச் சாகடித்தனர். ஏறக்குறைய 140 பேர் காயமுற்றனர்.


அதற்கு அடுத்த வருடம், 2020 மே மாதம் 12ம் தேதி, காபூலில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் ஒரு மகப்பேறு ஆஸ்பத்திரியில் தாய்மார்கள், பேறுகாலத்தில் இருந்த பெண்கள், தாதியர்கள் மற்றும் பிறந்த குழந்தைகள் உட்பட்ட 16 பேரைச் சுட்டுக்கொன்றனர். அதனைத் தொடர்ந்து, Kuz Kunar பகுதியில் ஒரு சாவு வீட்டைத் தாக்கினர். அதில் 56 பேர் இறந்தனர். ஏறக்குறைய 148 பேர் காயமுற்றனர்.


பிறகு, 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி ஒரு பள்ளி வளாகத்தில் தற்கொலை வெடிகுண்டு மூலம் 30 மாணவர்களை கொன்றனர்.


அதே வருடம் நவம்பர் 2ம் தேதி காபூல் பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் 32 பேர் கொலையுண்டனர். ஏறக்குறைய 50 பேர் காயமுற்றனர். இந்த வருடம், 2021 மார்ச் மாதத்தில் மூன்று பெண் ஊடகவியலாளர்களை சுட்டுத்தள்ளினர். மே 8ம் தேதி மேற்கு காபூலில் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் டஸ்தே பார்ச்சி பகுதியில் உள்ள சையத் அல் சுகுகடா பள்ளியை கார் வெடிகுண்டு மூலம் தகர்த்தனர். கிட்டத்தட்ட 90 பேர் இறக்க 240 பேர் காயமுற்றனர். இதில் கொடுமை என்னவென்றால், இதில் பெரும்பான்மையானோர் 11லிருந்து 15 வயது மாணவிகள்.


தொடர்ந்து மே 15ம் தேதி மசூதியில் ஈது பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்களை தாக்கியதில் 12 பேர் இறக்க 15 பேர் காயமுற்றனர். இதன் தொடர்ச்சியாகத்தான் ஆகஸ்ட் 26ம் தேதி காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படையினர் தாக்கியதில் 28 தலிபான்கள், 13 அமெரிக்கப்படையினர் உட்பட 170 பேர் இறந்தனர்.


இப்படி தொடர்ந்து அமெரிக்கப் படையினரையும், ஆப்கானிஸ்தான் படையினைரையும், தலிபான்களையும் விரட்ட, பல தாக்குதல்களை நடத்துகிற ISIS-K அமைப்புக்கும், ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ISIS, மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கும் என்னதான் வேறுபாடு?

ISIS-K எவ்வாறு ISIS அமைப்பிலிருந்தும் தலிபான்களிடமிருந்தும் வேறுபடுகிறது?

ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து செயல்பட்டு வரும் Islamic State of Iraq and Syria (ISIS) அமைப்பின் துணை அமைப்புதான் இந்த ISIS-K.

முஸ்லீம் மதத்திற்குள்ளேயே இருக்கும் ஷியா பிரிவினரையும், ஷரியா சட்டத்திற்கெதிராக இருக்கும் முஸ்லீம் பெண்களையும் குறிவைத்து ISIS-K தாக்குவதாகச் சொல்லப்படுகிறது. தலிபான்கள் சொல்லும் ஷரியா சட்ட நடவடிக்கை மிகவும் தாராளமயமாக்கப்பட்டதாக இருக்கிறது என்றும் அதில் இன்னும் கடுமை சேர்க்கவேண்டும் என்றும் ISIS-K இயக்கத்தினர் கூறுகின்றனர்.


அமெரிக்காவுடன் தலிபான்கள் பேச்சு வார்த்தையா? இது என்ன அநியாயம் என ISIS-K கொந்தளித்தனர். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு துருப்புக்களை வாபஸ் பெற வழிவகுத்த தோஹா மற்றும் கத்தாரில் நடந்த அமெரிக்க – தலிபான் பேச்சுவார்த்தைகளை ISIS-K அமைப்பு விமர்சித்தது. இப்போது கூட, “ஆண்டாண்டு காலமாக அமெரிக்க ராணுவத்திற்கு அடிபணிந்து, வேலை செய்து வந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், உளவாளிகள் அனைவரையும் தலிபான்கள் வெளியேற்றுகிறார்கள்.” என காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்குப் பொறுப்பேற்று வெளியிட்ட அறிக்கையில் ISIS-K அமைப்பு குறிப்பிட்டுள்ளனர்.


விமானப்படைத் தாக்குதலும் அதற்குப் பிறகும்

“ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டோம் என்கிற உருவத்தைக் கொடுக்க தலிபான்கள் முயற்சி செய்வதில் ISIS-K அமைப்பு இடையூறு கொடுக்கிறது. போன மே மாதம் டஷ்டி-ஐ-பார்ச்சி பகுதியில் பெண்கள் பள்ளியில் சென்று தாக்குதல் தொடுத்தது போல, அவர்கள் தாக்குதல்கள் கொடுமையாக இருக்கின்றன. அவை மேலும் தொடரத்தான் வாயப்பிருக்கிறது” என ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் வில்லியம் மாலே கூறுகிறார்.


“ யார் இந்த தாக்குதலை நடத்தினீர்களோ, நீங்கள் நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். அல்லது அமெரிக்காவிற்கு தீங்கு விளைவிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் நீங்களும் கேட்டுக்கொள்ளுங்கள். நாங்கள் மன்னிக்கமாட்டோம். மறக்க மாட்டோம். உங்களை வேட்டையாடுவோம்.” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார். அதனைத் தொடர்ந்து, ISIS-K அமைப்பு வெடிமருந்துகளையும், தற்கொலை படையினரையும் கொண்டு சென்றுகொண்டிருப்பதாக நம்பப்பட்ட வாகனத்தின் மீது அமெரிக்கா டிரோன் தாக்குதலை நடத்தியது. அதில் குழந்தைகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டதாக உள்நாட்டு செய்தி ஒன்று அறிவிக்கிறது.


“ஓரிரு நாட்களில் காபூலிலிருந்து வெளியேறுவது முடிவடையலாம். ஆனால் இது ஒரு குழப்பத்தின் தொடக்கமே. இந்த வருட முடிவிற்குள் 5 லட்சம் ஆப்கானியர்கள் மற்ற நாடுகளுக்கு அகதிகளாக போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று UNHCR எனப்படும் United Nations High Commission for Refugees அமைப்பின் high commissioner Filippo Grandi கூறினார்.


வரும் நாட்களில் ISIS-K அமைப்புக்கும் தலிபானுக்குமிடையே தாக்குதல்கள் அதிகரித்தால் ஆப்கானிஸ்தானில் நிலைமை இன்னும் மோசமடையலாம்.


*****

Reference:

  1. https://www.abc.net.au/news/2021-08-27/islamic-state-isis-k-bombings-afghanistan-airport/100411756

  2. https://www.theguardian.com/world/live/2021/aug/30/afghanistan-live-news-kabul-taliban-latest-updates-airport-attack-islamic-state-isis-k-us-drone-strike-civilians-children-killed-deaths-reported?page=with:block-612c810b8f083bf4a0452157#liveblog-navigation

  3. https://en.wikipedia.org/wiki/Islamic_State_of_Iraq_and_the_Levant_%E2%80%93_Khorasan_Province

16 views0 comments

Comentários


bottom of page