The story of "the great ocean road", Victoria, Australia
- உயிர்மெய்யார்

- Jun 19
- 6 min read
Updated: Jun 20

இது நமது ஆஸ்திரேலியா - தொடர் 3
The Great Ocean Road, Victoria
SBS Radio Tamil -இல் இக்கதையைக் கேட்க......கீழ்க்கண்ட நீல நிற இணைப்பைச் சொடுக்கவும்.
உலகத்தில் ஒரு சாலை, ஒரு நாட்டின் முக்கிய சின்னமாக மாற முடியுமா? ஆம். முடியும் என்று நிரூபித்திருக்கிறது, விக்டோரிய மாநிலத்தின் Great Ocean Road. அந்த கிரேட் ஓஷன் ரோடு 243 கி.மீ நீளமுள்ளது. அதன் வரலாறு, எப்படி கட்டப்பட்டது, அங்கு சென்றால் என்னவெல்லாம் பார்க்கலாம் என்னவெல்லாம் செய்யலாம் என்று இக்கட்டுரை அலசுகிறது.
அதற்கு 1918 ஆம் ஆண்டிற்குப் போக வேண்டும். அவை முதல் உலகப் போரின் இறுதி நாட்கள். போருக்குச் சென்றிருந்த ஆஸ்திரேலிய இராணுவ வீரர்களில் சிலர் உயிர் நீத்து விட்டார்கள். அதே நேரம் சில இராணவ வீரர்கள், போர் முடிந்து ஆஸ்திரேலியாவிற்குத் திரும்பி வந்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள். இரத்தக் காவு வாங்கிய போர் முடிந்து குடும்பத்திற்கு திரும்பிய மகிழ்ச்சி ஒரு புறம். அதே நேரம் வேலையின்றி இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை ஒரு புறம். அப்பொழுது, இரண்டு இராணுவ வீரர்கள் சந்திக்கும் போது அவர்கள் இப்படி பேசிக் கொள்வார்கள். “போர் முடிஞ்சிருச்சி. திரும்பி நம்ம நாட்டுக்கு வந்தாச்சி. என்ன தான் செய்யப் போறோம்? ஒரே குழப்பமா இருக்கு”.
அப்பொழுது ஆஸ்திரேலிய நாட்டின் விக்டோரியா மாநிலத்தில், Country Roads Board என்ற போர்டு சாலைகளைத் திட்டமிடவும், வடிவமைக்கவும், உருவாக்கவும், நிர்வகிக்கவும் அமைக்கப்பட்டிருந்தது. அதன் தலைவராக, 1918 ஆம் ஆண்டில், William Calder என்பர் இருந்தார். அவர், இராணுவ வீரர்களின் கஷ்டத்தையும், சாலைகள் அமைக்க வேண்டிய தேவையையும் ஒரு சேர பார்த்தார். உடனே அவர் அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார். தன் மேலதிகாரிகளைப் பார்த்து அவர் சொன்னார்:
“விக்டோரியா மாநிலத்துல மேற்கு மாவட்டங்கள்ல இணைக்கற மாதிரி ஒரு நீண்ட கடற்கரைச் சாலை அமைக்கலாம். அங்கயும் இங்கயுமா இருக்கற கிராமங்களை இணைச்சா, விவசாயம் பெருகும். சுற்றுலா வளர்ச்சி ஆகும். போரிலிருந்து திரும்பி வந்த வீரர்களுக்கு ஒரு மறுவாழ்வு கிடைக்கும்.” ன்னு ஒரு கடிதம் எழுதறார். அதற்கு “யோசிக்கலாம்” என்ற பதிலே மேலதிகாரிகளிடமிருந்து வந்தது. வில்லியம் கால்டர் விடவில்லை. மேலும் “அப்படி நாடு திரும்பாமல், தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு ஒரு நினைவுச் சின்னமாக இருக்கும்” என்றும் வலியுறுத்தினார்.
அப்பொழுது State War Council என்றொரு கவுன்சில் இருந்தது. அவர்கள் தான் இராணுவ வீரர்களின் வாழ்வாதாரத்தைப் பேண வேண்டியிருந்தது. சற்றே யோசித்தவர்கள், பிறகு William Calder ன் திட்டத்தை ஒத்துக் கொண்டார்கள். 1919 இல் Great Ocean Road கட்டுமானம் தொடங்கியது. 1919 இல் தொடங்கிய சாலைக் கட்டுமானம் 1932 வரை, கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு நீடித்தது.
3000-த்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் அதில் பங்கெடுத்தனர். Lorne என்ற இடத்தில் பணி துவங்கியது. மொதல்ல இந்த சாலைக்கு South Coast Road என்று தான் பெயர் வைத்தார்கள். இராணுவ வீரர்கள் நிலத்தைத் தோண்டத் துவங்கினர். அந்த இராணுவ வீரர்களுக்கு இன்றளவும் என்ன பெயர் தெரியுமா? ‘diggers’ என்று பெயர். சாலை அமைப்பதற்கு நிலத்தைத் தோண்டத் துவங்கிய இராணு வீரர்களை அப்பொழுது ‘diggers’ என்று அழைத்ததால், அந்தப் பெயரே நிலைத்து விட்டது. அவர்களின் பணி எளிதாக இல்லை. இன்றைக்கு இருப்பது போல மாடர்ன் டூல்ஸ் அப்போது இல்லை. கரடுமுரடான நிலப் பரப்பு. கணிக்கமுடியாத வானிலை. நிலச்சரிவு அச்சுறுத்தல். பல விபத்துகள் நடந்தன.
சாலை அமைக்கும் போது அவர்களுக்குள் கலந்துரையாடல் இப்படிக்கூட நடந்திருக்கும்.
“ அந்த ஷோவல் எடு. பிக் ஆக்ஸ் எடு. டைனமைட் எடு. தள்ளு வண்டியை எடு.”
“ஐயோ! நிலச்சரிவு…என்னோட வண்டி கல்லோடு கல்லா மாட்டிகிச்சி”
“ என்னாப்பா! இப்படி தொடர்ந்து ‘சோ’-ன்னு மழை பேஞ்சா எப்படி வேலைய தொடர்றது?”
“இது Erosion prone cliff - அது எப்பவேணா சரியும்…”
பல தடங்கல்கள்ல வேலை நிறுத்தப்பட்டது. ஆனால் William Calder விடவில்லை. இராணவ வீரர்களை உற்சாகப் படுத்தினார். வீரர்கள் உற்சாகமாக வேலையில் இறங்கினர். உற்சாகமான வீரர்களின் கலந்துரையாடல் இப்படியும் இருந்திருக்கும்.
“கரடு முரடா இருக்கு….எப்படி நம்ம அந்தப் பக்கம் போறது?” “கயிற தூக்கிப் போடு…நான் அதுல தொங்கி கிட்டே அந்தப் பக்கம் போறேன்”
“கடல்’ல எறங்கி தான் அங்க போகனும்”
“இந்தப் பக்கம் அடர்ந்த காடு இருக்கு…மொதல்ல அத சரி பண்ணனும்”.
மூன்று வருடங்கள் நிறைவானது. 1922ல (3 வருஷத்துல) லோர்ன் முதல் ஈஸ்டர்ன் வியு வரை வேலை முடிவுற்றது. வாகனங்கள் போக அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் நிதி பற்றாக்குறையால் பணித் தொடர கஷ்டமானது. இராணுவ வீரர்கள் பேசிக்கொள்கிறார்கள் “என்னாச்சி? பணி தொடருமா?” அப்போ William Calder சொன்னார்:
“கிரேட் ஓஷன் ரோடு ட்ரஸ்ட் என்று ஒரு ட்ரஸ்ட் உருவாக்கப்பட்டு இருக்கு. இது வரை முடிந்த சாலையில் ஓட்டுகிற வாகன ஓட்டியிடம், கட்டணம் வசூலிக்கப் போகிறார்கள். அதனால் சாலை வேலை தொடரும்” என்றார்.
பணி தொடர்ந்தது. 1936 ஆம் ஆண்டு வரை கட்டணம் வசூலித்தார்கள். பிறகு இன்று வரை இலவசமாகத் திறந்து விடப்பட்டது. Torquay யிலிருந்து Allansford வரையிலான 243 கி.மீ நீளமுள்ள கிரேட் ஓஷன் ரோடு 1932ஆம் வருடம் நவம்பர் 26ம் தேதி திறக்கப்பட்டது. Victoria’s Lieutenant-Governor, Sir William Irvine, Lorne என்ற இடத்தில் நடந்த ஒரு விழாவில் அதைத் திறந்து வைத்தார். அப்பொழுது அவர் சொன்னார்:
“ஆஸ்திரேலியர்களின் பண்பாடான கடுமையான உழைப்புக்கு இது ஒரு சான்று. கலிபோர்னியாவின் பசிபிக் கோஸ்ட் ஹைவே மாதிரி, ஒரு நாள் இது உலக அளவிலான சுற்றுலாத் தளமாக ஆகும்”
அவர் சொன்னது உண்மைதான்.
நீங்கள் த கிரேட் ஓஷன் ரோடு போனால் என்னென்ன பார்க்கலாம்? என்னென்ன செய்யலாம்? என்று சில குறிப்புகள் கீழே இருக்கிறது.
துவக்க இடம் Torquay என்கிற இடம் தான். இது ஆஸ்திரேலியாவின் surfing capital. சர்ஃபிங் போட்டிகள் நடக்கும். அங்கு Bells Beach-ல சர்ஃபிங் பயிற்சி கொடுக்கிறார்கள். நீங்க சர்ஃபிங் கத்துக்கலாம். அங்கு உலகளாவிய சர்ஃபிங் போட்டிகள் நடக்கும். குடும்பமாக பீச்சில் ஒரு நடை போடலாம். நீச்சல் அடிக்கலாம். அங்கு தான் Australian National Surfing Museum இருக்கிறது.
அடுத்து நீங்கள் Anglesea Beach க்குப் போவீர்கள். அதில் Coogoorah Park மற்றும் Point Addis Marine National Park என்று இரண்டு முக்கிய பூங்காக்கள் உள்ளன. பல இன தாவரங்கள், விலங்கினங்கள், பூச்சிகளைப் பார்க்கலாம். நீங்கள் கால்ஃப் விளையாட்டு வீரராக இருந்தால்
Anglesea Golf Club இல் கால்ஃப் விளையாடலாம். கங்காருவைப் பார்ப்பதற்காகவே சில சுற்றுலாக்கள் இருக்கின்றன. அதில் கலந்துக் கொண்டு கங்காருக்களைப் பார்க்கலாம்.
தொடர்ந்து 1891 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு லைட் ஹவுஸ் பார்க்கலாம். அதைப் பற்றிய விளக்கங்களைச் சொல்வதற்கு guided tours இருக்கிறது. அதில் பங்கெடுக்கலாம். லைட் ஹவுஸில் ஏறி 360 பாகையில் (டிகிரியில்) சுற்றிப் பார்க்கலாம். காடும் கடலும் வானும் மலையும் ஒரு சேர இருக்கும் சூழலைப் பார்த்து இரசிக்கலாம். இந்த கிரேட் ஓஷன் ரோடு கட்டுமானத்தை நினைவு கூறும் வண்ணம், அதில் முதல் உலகப் போரில் ஈடுபட்டு இராணுவ வீரர்களை நினைவு கூறும் வண்ணம் ஒரு வளைவு கட்டப்பட்டிருக்கிறது. அந்த Great Ocean Road Memorial Arch ஐப் பார்க்கலாம்.
அங்கிருந்து அடுத்து லோர்ன் என்கிற இடம் தான். அங்க எர்ஸ்கின் அருவி (Erskine Falls) இருக்கு. அது ஒரு முப்பது மீட்டர் உயரமுள்ள அழகான அருவி. அதை இரசித்து விட்டு குயிடோஸ் கலைக்கூடம் (Qdos Arts Gallery) போகலாம். க்யூடஸ் ஆர்ட்ஸ் கேலரியில், ஒவ்வொரு ஆண்டும் பல கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இவை வெவ்வேறு கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்துகின்றன. பல திறமையான கலைஞர்களின் கலைத்திறனும் நுட்பமும் வெளிவரும் வகையில், அவர்களின் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் பிற கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த கலைக்கூடம் இயற்கைச் சூழலுக்கு மத்தியில் அமைந்துள்ளது. அப்படி இயற்கைச் சூழலில் அமைந்ததாலேயே அது ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. அங்கு நடைபெறும் கண்காட்சிகளை இலவசமாகவே நீங்கள் பார்வையிடலாம்.
அடுத்து கிரேட் ஓட்வே தேசிய பூங்கா (Great Otway National Park). ஓட்வே மலைத்தொடரில் அமைந்துள்ள அழகான பூங்கா. இதனுடைய பரப்பளவு 103,185 ஹெக்டேர். உயரமான மரங்களைக் கொண்ட காடுகள், அருவிகள், கடற்கரைகள், பாறை திட்டுகள், புதர்கள், நீரோடைகள் என பல அம்சங்களைக் கொண்டது. குறிப்பாக காளான்கள் மற்றும் பறவைகள் இங்கு அதிகம் காணப்படும். குழந்தைகள் மகிழ்ச்சியுறுவார்கள். நீங்கள் நடந்து போகலாம். அல்லது ஒரு சைக்கிளில் பயணம் செய்யலாம். ஒரு முகாம் அமைத்து மகிழலாம். அதை ஒட்டியே கேப் ஓட்வே கலங்கரை விளக்கு ( Cape Otway Light station) இருக்கிறது. அது 1848 இல் கட்டப்பட்டது. இப்பகுதியில் நிறைய கப்பல் விபத்துகள் நடந்திருப்பதால், இதை “கப்பல் விபத்து கடற்கரை’ என்று அழைத்தாலும், இதை “நம்பிக்கையின் கலங்கரைவிளக்கம்” என்று அழைப்பார்கள். ஒரு சுவாரஸ்யமான செய்தி. இதில் உள்ள விளக்கு திமிங்கல எண்ணெயைப் பயன்படுத்தி எரியூட்டப்பட்டது.
அதையெல்லாம் பார்த்து விட்டு வந்தால் நீங்கள் அப்போல்லோ வளைகுடாவில் உள்ள அப்பல்லோ கடற்கரைக்கு வருவீர்கள். இங்கே நீச்சல், டைவிங், சர்ஃபிங் போன்ற நீர் விளையாட்டுக்களை விளையாடலாம். கடற்கரையில் நடக்கலாம், குதிரை சவாரி செய்யலாம். பல்வேறு உணவு வகைகளை உண்ணலாம்.
அடுத்து, கேப் ஓட்வே (Cape Otway). இது கிரேட் ஓட்வே தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இங்கு ஆஸ்திரேலியாவின் பழமையான கலங்கரை விளக்கமான “பீகன் ஆஃப் ஹோப்” (Beacon of Hope) உள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறி கடலைப் பார்த்து ரசிக்கலாம். இது கிரேட் ஓட்வே தேசிய பூங்கா மற்றும் கிரேட் ஓஷன் சாலைக்கு அருகில் உள்ளது. இந்தக் கடற்கரைப் பகுதியில் பசுமையான மழைக்காடுகள் உண்டு. பழைய தந்தி நிலையம் ஒன்று உள்ளது. அதையும் 1942ல் கட்டப்பட்ட இரண்டாம் உலகப் போரின் பதுங்கு குழியையும் பார்க்கலாம். இது, அப்பொழுது விமானத் தாக்குதல்களுக்கானத் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டது. அங்கு ஒரு விளக்கக்காட்சி காண்பிக்கப்படுகிறது. அதை இலவசமாகப் பார்க்கலாம். சில பருவங்களில் திமிங்கலங்கள் தென்படும்.
தொடர்ந்து போர்ட் கேம்பெல் தேசியப் பூங்காவைப் பார்க்கலாம். இங்கு தான் அலைகளால் அழகாகச் செதுக்கப்பட்ட பாறை வடிவங்களைப் பார்க்கலாம். இவைத் தொடர்ந்த கடல் அரிப்பால் உருவாக்கப்பட்டவை. 45 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக நிற்கும் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் போன்ற இயற்கை அதிசயத்தை இங்கு பார்க்கலாம். இந்த பூங்காவில் லோச் ஆர்ட் ஜார்ஜ், லண்டன் பிரிட்ஜ் போன்ற இடங்களையும் பார்க்கலாம். இந்த பூங்காவில் ஹெலிகாப்டர் சுற்றுப்பயணங்கள் மூலம் இந்தக் காட்சிகளை மேலே இருந்து ரசிக்கவும் வாய்ப்புள்ளது. அங்கு கிப்ஸன் படிகள் என்ற பிரபலமான சுற்றுலாத் தலம் உண்டு. அதில் சுமார் 86 படிகள் உள்ளன. மேலிருந்து இந்தப் படிகளின் வழி நீங்கள் கடலுக்கு இறங்கிச் செல்லலாம். அங்கு இருக்கும் கடற்கரை மற்றும் சுண்ணாம்புக் குன்றுகளைப் பார்வையிடலாம். இது 12 அப்போஸ்தலர்கள் எனப்படும் பாறை அமைப்புகளுக்கு அருகில் இருப்பதால், அவைகளை கீழே இறங்கி அருகாமையில் பார்க்கலாம்.
அடுத்து பீட்டர்பரோ (Peterborough) என்கிற அழகிய நகரம் தான். இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம். இந்த பகுதியில் உள்ள பை ஆஃப் மார்டியர்ஸ் மற்றும் பை ஆஃப் ஜலண்ட்ஸ் கோஸ்டல் பார்க் ஆகியவை முக்கிய இடங்களாகும். இங்குள்ள ஸ்டீம்டவுன் ஹெரிடேஜ் ரயில் சென்டர் ஒரு வரலாற்று இடமாகும். இங்கு மசாக்கர் விரிகுடா (Massacre Bay) என்றொரு இடம் இருக்கிறது. ஐரோப்பிய மக்கள் முதலில் குடியேறிய போது கிர்ரே-வுராங் என்றா உள்ளூர் பூர்வீகக் குடிமக்கள் பலர் கொல்லப்பட்டதாக நம்பப்படும் ஒரு வரலாற்று நிகழ்விலிருந்து அந்தப் பெயரை இந்த இடம் பெற்றது.
தொடர்ந்து மற்றுமொரு சுற்றுலாத் தலமான, வாரனாம்பூல் நகரத்திற்கு வரலாம். இங்கேயும் நிறையக் கடற்கரைகளும் பூங்காக்களும், நடைபாதைகளும் உள்ளன. இங்கு ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பருக்குள் போனால், திமிங்கலங்களைப் பார்க்கும் வாய்ப்பு உண்டு. உலகின் இரண்டாவது பழமையான பைக் பந்தயமான மெல்பர்னிலிருந்து வாரனாம்பூல் வரையிலான பைக் பந்தயம் ஆண்டு தோறும் நடைபெறும்.
நிறைவாக ஆல்லன்ஸ்போர்ட் (Allansford) நகரம். இது வார்னம்பூலிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு சீஸ் வேர்ல்ட் மியூசியம் இருக்கிறது. சீஸ் மற்றும் அதன் வரலாறு பற்றித் தெரிந்துக் கொள்ளலாம். அழகிய ஹாப்கின்ஸ் ஆறு ஆல்லன்ஸ்போர்ட் நகரத்தின் வழியாகத்தான் செல்கிறது.
ஆக மொத்தம், கிரேட் ஓஷன் வாக் 100 கி.மீ தூர நடைப் பயணத்திற்கு வசதியாக இருக்கிறது. அல்லது மகிழுந்தில் பயணம் செய்யலாம். போகிற வழியில், பன்னிரண்டு அப்போஸ்தலர்களை நினைவூட்டும் கற்பாறைகளைக் காணலாம். ஓட்வேஸில் கோலாக்கள், ஆங்கிள்சியாவில் கங்காருக்கள் மற்றும் கடற்கரையில் திமிங்கலங்கள் அல்லது டால்பின்களைப் பார்க்காலம். பெல்ஸ் கடற்கரையில் சர்ஃபிங், அப்பல்லோ விரிகுடாவில் கயாக்கிங், அல்லது ஓட்வேஸில் மலையேற்றம் போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடலாம். உள்ளூர் சந்தைகளைப் பார்வையிடவும் (எ.கா., லோர்ன் சந்தை, பருவகாலம்), லோர்ன் கலை விழா போன்ற விழாக்களில் கலந்து கொள்ளவும் அல்லது வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள் மூலம் பூர்வீக வரலாற்றை ஆராயுவும் வழி வகுத்து ஒரு கலாச்சார அனுபவத்தைப் பெறலாம். பன்னிரண்டு அப்போஸ்தலர்கள், லோச் ஆர்ட் கோர்ஜ் மற்றும் டெடிஸ் மற்றும் மரைனர்ஸ் போன்ற இடங்களில் உள்ள இடங்களில் நின்று புகைப்படம் எடுக்கலாம் கிறிஸ் பீக்கன் பாயிண்ட் (அப்பல்லோ விரிகுடா) அல்லது தி போட்ஹவுஸ் (வார்னம்பூல்) போன்ற உணவகங்களில் புதிய கடல் உணவுகள், மீன் மற்றும் சிப்ஸ் அல்லது நல்ல உணவை அனுபவிக்கலாம்.
மறந்துவிடாதீர்கள். மெல்பர்னில் இருந்து 75 கி.மீ. ஒரு வழி பயணத்திற்கு 3–5 மணிநேரம் ஆகும். ஆனால் சுற்றுலா தலங்களை ஆராய 1–3 நாட்கள் பரிந்துரைக்கப்படுகிறது. காட்டுப்பூக்கள் மற்றும் லேசான வானிலைக்கு வசந்த காலம் (செப்டம்பர்–நவம்பர்) நல்லது. துடிப்பான வண்ணங்களுக்கு இலையுதிர் காலம் (மார்ச்–மே) சிறந்தது. திமிங்கலங்களைப் பார்ப்பதற்கு குளிர்காலம் (ஜூன்–ஆகஸ்ட்) சௌகரியம்.
நீங்கள் த கிரேட் ஓஷன் ரோடில் பயணிக்கும் போது முதல் உலகப் போரில் கலந்துக் கொண்டு உயிர் நீத்த வீரர்களின் மூச்சும், திரும்பி வந்து கடுமையான சூழலில் 13 வருடங்களாக உழைத்து கிரேட் ஓஷன் ரோடை உருவாக்கிய வீரர்களின் பேச்சும், உங்கள் காதுகளில் விழட்டும்.
********



Comments