top of page

கங்கைக் கரைத் தோட்டம் - கதை வாசிப்பு அனுபவம்

ree

எழுத்தாளர் பாவண்ணன் எழுதிய “நயனக்கொள்ளை” சிறுகதைத் தொகுப்பு

சந்தியா பதிப்பகம், சென்னை. (2023)

 

உவமானங்களும் உவமைகளும்

கதையமைப்பும் கருத்துகளும்

 

கங்கைக்கரைத் தோட்டம்

 

உயிர்மெய்யார்

12.08.2025

மெல்பர்ன்

 

 

பச்சையம்மாவின் பிள்ளைகள் இருவர். பச்சையம்மா கீரைப் போட்டு, கட்டுக்கட்டாகக் கட்ட, பையன்கள் இருவரும் கிராமத்தில் பல வீடுகளுக்கும் சென்று விற்று வருவர். அங்கே தோட்டத்து வீடு என்றொரு வீடு இருக்கிறது. அதன் சொந்தக்காரர் பாண்டிச்சேரி போய்விட, அந்த வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அப்பொழுது தான் ஒரு குடும்பம் குடி வந்திருந்தது. அந்த வீட்டு அம்மா பச்சையம்மாவை கோயிலில் சந்தித்து கீரைக் கேட்டதால், இன்று கீரைகளை எடுத்துக் கொண்டு இருவரும் செல்ல, அங்கே ஒருவர் சிலருக்கு வீணைக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஒரு பெண் ‘கங்கைக்கரைத் தோட்டம்’ பாடலைப் பாடுகிறார். அதில் இவர்கள் இருவரும் கிறங்கிப் போகிறார்கள்.

 

கீரையைக் கொடுத்து காசு வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய போது, அந்தப் பாடல் இருவருக்குமே மனப்பாடம் ஆகிவிடுகிறது. எப்படியாவது ஒரு வீணை வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது எவ்வளவு விலை என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ‘ஆயிரம் ரூபா கூட இருக்கும்’ என்று பேசிக் கொள்கிறார்கள்.

 

ஒரு நாள் பரணியில் ஏறிய போது ஒரு மரக்கட்டையைப் பார்க்க, அதைக் கழுவி ஆணி அடித்து, கம்பிகளைக் கட்டி, புட்டுகூடையில் துணியை வைத்துக் கட்டி ஒரு வீணைபோல கொண்டு வந்துவிடுகிறார்கள். தம்பி அதன் முன்னே உட்கார்ந்து கங்கைக் கரைத் தோட்டம் பாட்டைப் பாடுகிறான். ஆணிகளை பிடுங்கியும் அடித்தும், மாற்றி மாற்றி செய்தும் வீணையிலிருந்து ‘நங்’ கென்ற மோசமான சத்தமே வந்துக் கொண்டிருந்தது. அம்மாவிடமும் தம்பி பாடிக் காண்பிக்கிறான். சரி போய் படிங்க என்று சொல்லி விரட்டி விடுகிறாள்.

 

இரவு. அம்மாவிடம், ‘வீணை வாங்கலமா அம்மா?’ எனக் கேட்க, அவள் மறுக்க, கேணி வெட்டி விட்டு அசதியாக வந்த அப்பாவிடம் கேட்கத் துணியாதவர்களாய் இருவரும் இருக்க, ‘வீட்டு நெலம தெரியாம ஒலராத…வீணை கீணை’ன்னு’ அப்பா சத்தம் போடும் போதுதான் தெரிந்தது அம்மா கேட்டிருக்கக் கூடுமென்று. சற்று நேரம் கழித்து எல்லோரும் அமைதியாக வீட்டிற்கு முன் நிலா வெளி்ச்சத்தில் உட்கார்ந்திருக்கும் போது, அப்பாவின் தங்கை (பையன்களுக்கு அத்தை) வீட்டிற்கு வருகிறார். அப்பா முனகிக் கொண்டே படலைத் திறந்துக் கொண்டு வெளியே போக, அத்தை சாப்பாடு கேட்டதால் அம்மா சாப்பாடு கொடுக்கிறார். சாப்பிட்டு விட்டு அத்தை போய்விடுகிறார்.

 

தாத்தா காலத்திலேயே, அத்தைக்குத் திருமணம், மாமா குடிகாரர். ஒரு சாலை விபத்தில் இறந்து போகிறார். ஊருக்கு பாரதக் கூத்து நடத்த வந்தவரோடு பழகி, அவரோடயே அத்தை கிளம்பி போய்விடுகிறாள். அதுவும் நிலைக்கவில்லை. ஊருக்குத் திரும்ப வந்த அத்தைக்கு கோவிலருகே ஒரு குடிசைக் கட்டி குடி வைத்தார் அப்பா.

 

வேறு ஊருக்குப் போயிருந்த அம்மா, பத்து ரூபாய்க்கு ஒரு விளையாட்டு சாமான் வாங்கி வருகிறார். யாழ் போன்ற அந்தக் கருவியை மீட்டினாலும் சத்தம் வந்தது. அப்பா அதைப் பார்த்தும் கோபப்பட்டார். விளையாடப் போவதையெல்லாம் நிறுத்திவிட்டு அந்தக் கருவியை மீட்டுவதிலேயே காலம் கழிக்கிறார்கள். வீணை மீட்டச் சொல்லிக்கொடுக்கும் தாத்தாவிடமே, கீரைக்கு காசு கொடுக்காமல் அதற்குப் பதிலாக வீணை மீட்டக் கற்றுக்கொடுக்கச் சொல்லலாமா? என்று கூட தம்பி ஒரு முறைக் கேட்டான்.

 

ஒரு நாள் அத்தை வீட்டிற்கு வந்தாள். அம்மா ஒரு துக்கத்திற்காக ஊருக்குப் போயிருந்தாள். பசி எனக் கேட்ட அத்தைக்கு கொடுக்க ஒன்றும் இல்லையாதலால், கிழங்கு வாங்க தம்பி ஓடிவிட்டான். அத்தை அந்தக் கருவியைப் பார்த்து, ‘ என்ன இது?’ என்று கேட்டாள். பெரியவன் எல்லாக் கதையையும் சொன்னான். அதற்குள் தம்பி கிழங்கு வாங்கி வர எல்லோரும் சாப்பிடுகிறார்கள். தம்பி பாட, அத்தை அந்தக் கருவியை அழகாக மீட்ட, இவர்கள், ‘ஒனக்கு எப்படி தெரியும்?’ என்று கேட்க, ‘அந்தக் கூத்தாடி கம்னாட்டியோட சுத்துனதுக்கு, இது தாண்டா மிச்சம்’ என்று சொல்லிவிட்டு படலைத் திறந்து சென்றாள் என்று கதை நிறைவுறுகிறது.

*********

 

இந்தக் கதை வாசிப்பு அனுபவக் கட்டுரையில், உவமானங்களையும், உவமைகளையும், கதையமைப்பையும், கருத்தையும் ஒரு சேர சொல்லலாம் என்று முனைகிறேன்.

 

ஒரு கதையில் சூழல் விவரிப்பு என்பது மிக மிக முக்கியம். வாசகர்களை, கதை மாந்தர்கள் உலவும் நிலத்திற்கும் பொழுதுக்கும் வாசகர்களை உலவ வைக்க வேண்டும். எந்த நாட்டில், எந்த ஊரில், எந்த இடத்தில் காட்சி நடக்கிறது. அது கோயிலா, குளக்கரையா, வீட்டிலா, வெறிச்சோடி இருக்கும் ரோட்டிலா, காட்டிலா, கடற்கரையிலா, பேருந்திலா, விமானத்திலா….விவரிப்பின் மூலம் வாசகன் அந்த இடத்திற்கேச் சென்று விட வேண்டும். காட்சி நடப்பது கோடையிலா, குளிர் காலத்திலா, மழையிலா, வெயிலிலா, பனியிலா, வெறுமையிலா….விவரிப்பின் மூலம் வாசகன் அதை உணர வேண்டும். காலையா, மாலையா, நடு நிசியா, நடுப்பகலா…விவரிப்பின் மூலம் வாசகன் அதை அறிய வேண்டும். வாசகன் தான் இருக்கும் நிலத்தையும் பொழுதையும் மறந்து, கதையின் காட்சிகளுக்குள் பயணிக்க அந்த விவரிப்புகள் தான் உதவும். அந்தக் காட்சிப் பரப்பில் தான் கதை மாந்தரின் விவரிப்பு. பிறகு தான் கதை மாந்தர் பேசும் பேச்சுகள். முதலில் பாத்திரம். பிறகு அதில் பால். அப்புறம் தான் பாலைச் சுடவைக்க வேண்டும். அது மெதுவாக சூடேறி, கொதித்து அடங்கும். அது தான் ஒரு கதை. பாத்திரத்தில் தான் பாத்திரங்கள்!

 

அப்படிச் சூழல் விவரணையை அழகாகவும் தெளிவாகவும் செய்யத் தெரிந்த கதை ஓவியன் பாவண்ணன். கீழ்க்கண்ட விவரணையைப் பாருங்கள். அம்மா கொடுத்த கீரைக்கட்டுகளை எடுத்துக் கொண்டு இவனும் தம்பியும் அந்த தோட்டத்து வீட்டிற்குச் செல்கிறார்கள். “உயரமான மதில்களும் வீட்டுக்கு முன் பக்கத்தில் பெரிய தோட்டமும் இருந்த வீடு…வாசலில் இருக்கும் பெரிய இரும்புக் கேட்டைத் திறந்தால், வீடே கண்ணுக்குத் தெரியாது. ரொம்பவும் பின்னால் ஏதோ காட்டுக்குள் இருப்பது போலத் தெரியும். தோட்டத்தைக் கடந்து, துளசி மாடத்தைக் கடந்து….வீட்டை நெருங்கும் போது..” பார்த்தீர்களா? நீங்களே கேட்டைத் திறந்து, தோட்டத்தைக் கடந்து, துளசி மாடத்தைக் கடந்து, எட்டி இருக்கும் வீட்டிற்கு வந்துவிட்டீர்கள் பார்த்தீர்களா? சரி. அங்கு என்ன நடக்கிறது?

 

ஒரு பெரியவர் முன் அமர்ந்து ஆறு அக்காக்கள் வீணை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். (ஒரு வாசகர் சொன்னார்: “ஆறு இளம்பெண்கள் வீணை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதலாம். ஆனால், கீரைக் கட்டை எடுத்துச் செல்லும் பையன்கள் வழியாக கதைச் சொல்லப்படுகிறது. அவர்களின் பார்வையில் அவர்கள் அக்காக்கள் தான். அதையே கதாசிரியர் நிலைப்படுத்தியிருக்கிறார்”.)

 

இந்த இடத்தில் ஓர் உவமை! அந்த பெரியவர் வாசித்துக் காட்டிய வீணை “இசையின் இனிமை மயிலிறகால் வருடிக் கொடுப்பது போல்” இருந்ததாம். வருடிப் பார்த்திருக்கிறீர்களா? அதன் மென்மையை கண்ணை மூடி பருகியிருக்கிறீர்களா? மிகப் பொருத்தமான உவமை. “ஓர் அருவிக்கு அருகில் போய் நின்றது போல்” இருந்ததாம். அருவியின் அருகில் போய் நின்றால் என்ன ஆகும்? உலகத்தில் இருக்கும் மற்ற ஒலிகளெல்லாம் அருகிப்போய்விடும். ஒரு தியான நிலைக்கு உங்களைத் தள்ளி விடும். இன்னொரு அழகான உவமை.

 

அந்த அக்காக்கள் வீணை வாசிக்கிறார்கள். அப்பொழுது அவர்களின் விரல்கள், “வீணை நரம்புகளில் சிட்டுக்குருவிகள் தத்தித்தத்திச் செல்வது போல்” இங்கும் அங்கும் போய் வந்தனவாம். அந்தப் பெரியவர் ‘நிதி சால சுகமோ’ என்று இழுத்துப் பாடுகிறார். பாடி ஓய்ந்ததும், அருகில் இருந்த தம்ளரை எடுத்து, “உதடு படாமல்” தூக்கி ஒன்றிரண்டு மிடறுகள் குடிக்கிறார்.

 

இப்பொழுது கவனியுங்கள். துளசி மாடம், வீணை, ‘நிதி சால சுகமோ’ பாடல், உதடு படாமல் தூக்கிக் குடித்தல் என்று அந்த வீட்டையும், வீட்டில் உள்ளவர்களையும் எந்தச் சமூகத்தில் உள்ளவர்கள் என்று வாசகர்களே கட்டமைத்துக்கொள்ளச் செய்கிறார் கதாசிரியர். அப்பொழுது ஒரு பெண்ணைப் (அக்காவைப்) பாடச் சொல்கிறார். அவள் ‘கங்கைக் கரைத் தோட்டம்’ என்று மெல்லிய குரலில் பாட, “அவர் குரலும் இசையும் தோளோடு தோள் ஒட்டி நடப்பது போல்” இருந்தததாம். தோளோடு தோள் ஒட்டி…உவமைகளாக வந்து விழுந்துக் கொண்டேயிருக்கிறது.

 

அந்த இசையில் சிறுவர்கள் இருவரும் மூழ்கிப் போனார்கள். அதை எப்படி விவரிக்கலாம்? பாவண்ணன் இப்படி உவமைகளால் விவரிக்கிறார்; “சீராக தரைத் தொடும் மழைத் தாரைகளென இசையும் பாடலும் பொழிந்தன. நிறைந்து வழிந்தோடும் நீரில் மிதந்து சுழன்றபடி செல்லும் சிறு இலைகளென எங்கள் மனங்கள் மிதந்து சென்றன. கைவீசி தாவி நீந்துவது போல் அலைந்தன. வட்டமிட்டுச் சுருண்ட சுழல்களால் எடுத்துச் செல்லப்பட்டு ஆழத்தை நோக்கி இறங்கின.” இசையும் பாடலும் சீராக தரைத் தொடும் மழைத் தாரைகளாம். அவர்கள் இருவரும் வழிந்தோடும் நீரில் சுழன்றபடி செல்லும் சிறு இலைகளாம். அந்த வெள்ளத்தில் கைவீசி தாவி நீந்துவது அவர்கள் மனங்களாம். அவை சுழலும் சுழலில் ஆழத்தில் இறங்கியதாம்… கதை மாந்தர்களின் அனுபவத்தை, கதாசிரியர் அனுபவித்து, வாசகரிடம் இறக்கிவிடும் வித்தை இது.

 

கதை அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறது. அந்தச் சிறுவர்களுக்கு ஒரு வீணை வாங்கிவிட வேண்டும் என்கிற ஆசை முளைக்கிறது. காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லை. ஒரு நாள் பரணியில் கிடந்த ஒரு மட்டப் பலகையை எடுத்து ஆணிகள் அடித்து கம்பிகளைக் கட்டி, புட்டுக்கூடையில் துணியைக்கட்டி, வீணை போன்ற ஒன்றைச் செய்கிறார்கள். கம்பியை மீட்ட, “தலையில் கொட்டியது போல் ‘நங்’ கென்று ஒரு சத்தம்” வந்ததாம்.

 

அந்தப் பக்கம் வந்த அம்மா அதைக் கவனிக்கிறார். ஒழுங்கா போய் படிங்க என்கிறார். “கங்கைக்கரைத் தோட்டம்” பாடலைத் தம்பி பாடிக் காண்பிக்கிறான். வீணை வாங்கித் தா என்கிறார்கள். அதெல்லாம் நம்மால முடியாது என்கிறாள். அப்பா வருகிறார். அவரிடமும் கேட்கிறார்கள். அவர் “செருப்பு பிஞ்சி போய்டும்” என்கிறார். அதே இரவு. நிலா வெளிச்சத்தில் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு குள்ளக்கத்திரிக்காய் குட்டிக்கரணம் போட்டக் கதையைக் கேட்டுச் சிரிக்கிறார்கள். அப்பொழுது சிறுவர்களின் அத்தை வருகிறாள். “சோழிய உருட்டி விட்ட மாதிரி” உங்க சிரிப்பு கோவில் வரைக்கும் கேக்குது என்ற உவமையோடு, படலைத் திறந்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறாள்.

 

அத்தையின் கதை இது தான். அவளுக்கு கல்யாணம் நடந்தது. கணவன் குடிகாரன். சாலை விபத்தில் இறந்து போகிறான். பாரதக் கூத்து நடத்த வந்தவரோடு பழக்கம் ஏற்பட்டு அவரோடயே சென்றுவிட்டாள். அதுவும் நிலைக்கவில்லை. மூத்தாள் விரட்டி விட, ஊருக்குத் திரும்பி வந்து கூலி வேலை செஞ்சி ஏதோ பிழைப்பை ஓட்டுகிறாள்.

 

எல்லா அம்மாக்களுமே, பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றவே இருக்கிறார்கள் போலும். வெளி விஷேசத்துக்குப் போயிருந்த சிறுவர்களின் அம்மா, பத்து ரூபாய் கொடுத்து, ஒரு விளையாட்டு சாமானை வாங்கி வருகிறார். அது யாழ் போன்று நெகிழியில் செய்த விளையாட்டு சாமான். சிறுவர்கள் ஏமாந்தாலும் அதில் ஒலி எழுப்பி விளையாடுவது அவர்கள் வழக்கமாகி விட்டது.

 

மறுபடி ஒரு நாள். அத்தை வருகிறார். அவருக்குப் பசி. “ஒரு வீடு நெருப்பு புடிச்சி எரியிற மாதிரி கொடல் எரியுது…” என்று கேட்க, கிழங்கு வாங்கிக்கொடுக்கிறார்கள். பேச்சு அவர்கள் வைத்திருக்கும் இசை விளையாட்டு சாமான் பற்றி மாறியது. தம்பி ‘கங்கைக் கரைத் தோட்டம்’ பாட்டைப் பாட, அத்தை பிசிறில்லாத தாளத்தோடு அந்த யாழில் அந்த இசைக்கோவையை மீட்டினார். இவர்கள், ‘ஒனக்கு எப்படி தெரியும்?’ என்று கேட்க, ‘அந்தக் கூத்தாடி கம்னாட்டியோட சுத்துனதுக்கு, இது தாண்டா மிச்சம்’ என்று சொல்லிவிட்டு எழுந்துச் செல்கிறாள்.

 

கலையும், இசையும், மொழியும், இலக்கியமும் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கும் எவருக்கும் வரும். இவர்கள் தான் இதற்குப் பெயர் போனவர்கள். அவர்கள் தான் அதற்கு லாயக்கு. என்றெல்லாம் கிடையாது. வாய்ப்பு தான் முக்கியம். பயணிக்கும் போது அனுபவம் பெருகும். தோட்டத்து வீட்டிலேயே இருக்கும் அக்காக்களுக்கு மாத்திரம் அல்ல, பாசத்திற்காக பயணிக்கும் அத்தைகளுக்கும் அது வரும்.

 

பாவண்ணன்! இந்தக் கதையின் பொடியில் மிகுந்திருக்கிறது நெடி!

 

*********

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page