top of page
Writer's pictureJohn B. Parisutham

கட்டுரை 20 - மரணத்திற்குப்பின் ஒருவரின் சொத்துக்கு வரி விதிக்கப்படுமா?

Updated: Jan 9, 2022


ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரது ஓய்வூதிய சேமிப்பின் மீது வெவ்வேறு விதமாக வரி விதிக்கப்படலாம். அதை ‘மரணத்திற்குப் பின்பான வரி’ என அழைக்கலாம். அப்படிப்பட்ட வரி யாருக்கு விதிக்கப்படும்? எவ்வளவு விதிக்கப்படும்? என்னென்ன விகிதத்தில் வரி விதிக்கப்படும்? தனிநபர் குடும்பங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இவ்வரிவிதிப்பு நியாயம் தானா? தனிநபர் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு என்ன மாதிரியான பின்னடைவு இருக்கின்றன? என்ற பல கேள்விகள் நமக்கு பிறக்கலாம். இதற்கான பதிலைப் பார்ப்போம்.


‘மரணத்திற்குப் பின்பான வரி’ என்றால் என்ன?

மரணத்திற்குப் பின்பான வரி என்பது ஒருவரின் ஓய்வூதிய சேமிப்பின் மீது விதிக்கப்படும் வரி. உங்களுக்குத் திருமணம் ஆகவில்லையா? அல்லது திருமணம் ஆகி குழந்தைகள் இல்லையா? அல்லது உங்களது மரணத்திற்குப் பிறகு, உங்களைச் சார்ந்தவர்கள் யாரும் இல்லையா? அதாவது ‘தனிமரமாக’ வாழ்ந்து மறைகிறீர்களா? அப்படியானால், உங்களின் ஓய்வூதிய சேமிப்பின் மீது இந்த ‘மரணத்திற்குப் பின்பான வரி’ விதிக்கப்படுகிறது.


ஒருவர் ஓய்வூதிய சேமிப்பை மீதி வைத்து விட்டு, அவர் மரணிக்கும் போது, அதைச் சொந்தம் கொண்டாட அவரின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யாரும் இல்லையென்றால், இறந்துபோன நபர் தனது பணத்தைப் பெறுவதற்குப் பரிந்துரைத்துள்ள பயனாளியிடம் ஒப்படைப்பதற்கு முன்பு இந்த வரி விதிக்கப்படும். மாறாக இறந்தவரின் குடும்பத்தில் வாரிசுகள் இருந்தால் இந்த வரி விதிக்கப்படுவதில்லை.


இது நியாயமா? என்கிற கேள்வி எழாமல் இல்லை. அதற்கு முன் என்ன நடக்கிறது என்று தெரிந்துக்கொள்வோம்.



எவ்வளவு தான் வரி விதிக்கப்படுகிறது?

வாழ்நாள் முழுவதும் பல ஆயிரக்கணக்கான டாலர்களைச் சேமித்து வைத்து, ஒருவர் காலமாகிவிட்டால், அவர் பரிந்துரைக்கும் பயனாளியிடம் ஒப்படைப்பதற்கு முன்பு 32% வரை வரி விதிக்கப்படும்.


இப்படிப்பட்ட வரியை தவிர்ப்பதற்காக, பலரும் என்ன செய்கிறார்கள் தெரியுமா? பணியிலிருந்து ஓய்வு பெறும் போதே, ஓய்வூதிய சேமிப்பையும் திரும்ப பெற்றுக்கொள்கிறார்கள். அப்படி ஓய்வூதிய சேமிப்பை திரும்ப பெற முடியாத சூழலில் இருப்பவர்கள் என்ன செய்ய முடியும்? இப்படி 32% சேமிப்பை வரியாக இழக்க வேண்டியது தானா?


அதிகமான ஆஸ்திரேலியர்கள் திருமணம் செய்யாமல் தனியாக வாழ்வதும், குழந்தை பெறாமல் வாழ்வதும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இந்த ‘மரணத்திற்குப் பின்பான வரி’ இவர்களையே அதிகமாக பாதிக்கிறது.


இப்படிப்பட்ட மரணத்திற்குப் பின்பான வரியிலும் பல தரப்பட்ட விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது.

என்னென்ன மாற்றங்கள் வரி விகிதத்தில் உள்ளன?

ஒருவர் தான் பரிந்துரைக்கும் நபருக்கு தனது ஓய்வூதிய சேமிப்பை மாற்றும் முன், வெவ்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு, வரி விதிக்கும் விகிதாசாரம் மாறுபடுகிறது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

  1. ஒருவர் யாரையுமே பரிந்துரைக்காமல் மரணித்துவிட்டால், ஓய்வூதிய சேமிப்பு அறங்காவலர், பொருத்தமான சட்டங்களுக்கு உட்பட்டு வரி விதிக்கும் விகிதாசாரத்தை தீர்மானிப்பார்.

  2. ஒன்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளை ஒருவர் பரிந்துரைத்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நபர் அவரின் குழந்தைகளோ, குடும்பத்தைச் சார்ந்தவர்களோ அல்லாமல் வேறு நபர்கள் என வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு முழுத் தொகையையும் வழங்க வேண்டும். அப்படி வழங்கும் போது, அந்த முழுத்தொகைக்கான கட்டணம் வரியாக விதிக்கப்படலாம்.

  3. வரிவிதிப்புக்கு உட்படாத தொகை, வரிவிதிப்புக்கு உட்பட்டதொகை, என்ற இரு கூறுகளின் படி வரி மாறுபடலாம். உதாரணமாக, ஓய்வூதிய சேமிப்பை திரும்ப பெறும் போது, வரிவிதிப்புக்கு உட்பட்ட தொகை இருந்தால் அது 15% வரி மற்றும் மெடிக்கேர் கட்டணம் சேர்த்து 17% வரியாக வசூலிக்கப்படும். வரிவிதிப்புக்கு உட்படாத தொகை இருந்தால் அது 30% வரி மற்றும் மெடிக்கேர் கட்டணம் சேர்த்து 32% வரியாக வசூலிக்கப்படும். அவரின் வரிவிதிக்கு உட்பட்ட தொகையை, வரிவிதிப்புக்கு உட்படாத தொகையாக மாற்ற முடியுமா என்ற ஆலோசனையை பெறலாம்.(கூடுதல் விபரங்களுக்கு உங்கள் சூப்பர் ஃபண்டை தொடர்பு கொண்டு என்னவிதமான வரி விகிதம் ஒருவருக்கு பொருந்தும் என்று கேட்டுக்கொள்ளலாம். அல்லது ஆஸ்திரேலிய வரி அலுவலத்தின் - Australian Taxation Office ATO - இணையதளத்திலும் தகவல்களைத் தெரிந்துக்கொள்ளலாம்.)

  4. ஓய்வூதிய சேமிப்பைத் திரும்ப பெற்று, அப்பொழுது பொருத்தமான வரியைச் செலுத்தியபிறகு, மறுபங்களிப்பு முறைப்படி, திரும்ப அந்தத் தொகையை சேமிப்பாக செலுத்தலாம். அப்படி செலுத்தப்படும் எல்லா தொகையும் அல்லது பெரும்பாலான தொகை, வரி விதிப்புக்கு உட்படாத தொகையாக எடுத்துக்கொள்ளப்படும். (இது எல்லோருக்கும் பயனளிக்கும் முறை என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் 60 வயதிற்கும் மேற்பட்டவராக இருந்து, வரிவிலக்கு சாத்தியம் இருந்தால் மட்டுமே இது பயனளிக்கும்.)

குழந்தை பெறாமல் வாழும் குடும்பங்கள் அதிகரிக்கும் பின்னணியில் இப்படிப்பட்ட வரிவிதிப்பு நியாயமா?

திருமணம் ஆகாமல், அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளாமல் பணி செய்து ஓய்வு பெறும் நபர்கள் அதிகரித்து வருகிறார்கள். தனிநபர் குடும்பங்கள் என்கிற பெயரில் இவர்கள் இயங்குகிறார்கள். ஆஸ்திரேலிய புள்ளிவிவரங்களை சேகரிக்கும் ABS-யின் தரவுகள் நான்கில் ஒரு குடும்பம் இப்படி தனிநபர் குடும்பமாக இருக்கிறது என்று கூறுகிறது. இந்த எண்ணிக்கை போகப்போக அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்றே அதன் போக்கில் தெரிகிறது. ABS ன் கணக்குப்படி, 2016 ஆம் ஆண்டில் இருபது லட்சம் தனிநபர் குடும்பங்கள் இருந்தன. அது 2041 ஆம் ஆண்டில் முப்பது லட்சத்திலிருந்து முப்பத்தைந்து லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


ABS ன் தரவுகளின் படி 2020 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா முழுக்க வெறும் 78,989 திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 30.6 சதவீதம் குறைவு. இதற்கு கோவிட் பெருந்தொற்றும் ஒரு காரணியாக இருந்திருக்கலாம். 1961 ஆம் ஆண்டிற்குப் பிறகு, 2020 ஆம் ஆண்டில்தான் ஆகக் குறைந்த திருமணப் பதிவுகள் நடந்திருக்கின்றன என்று ABSயின் health and vital statistics பிரிவின் இயக்குனர் James Eynstone-Hinkins கூறியுள்ளார்.


முடக்க நிலை அல்லது லாக்டவுன்களுக்குப் பிறகு, திருமணப்பதிவுகள் அதிகமாகும் என்று எதிர்பார்த்தாலும் விவாகரத்து விகிதங்கள் அதிகரிக்கின்றன. மரபு சார்ந்த குடும்பத்தின் வரையறை எவ்வாறு மாறுகிறது என்பதை ஒரு அறிக்கை வெளிப்படுத்துகிறது. அதாவது, 2010-19 ஆண்டில் தனிநபர் குடும்பங்களின் எண்ணிக்கை 31% விரிவடைந்தது என்றும், அதில் கிட்டத்தட்ட பாதி அளவு, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இருந்தது என்றும் Euromonitor International என்கிற சந்தை ஆராய்ச்சி நிறுவனம் தன் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

தனிநபர் குடும்பங்கள் அதிகரிக்கும் என்ற வாதத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம், Future of Family - யின் அறிக்கையின் தகவல் தெரிவிக்கிறது. 2000 ஆம் ஆண்டிலிருந்து 2030 ஆண்டு வரை உள்ள இடைவெளியில் பின்வரும் மாற்றங்கள் நடந்துவருகின்றன:

  • ஒருவர் மட்டுமே வாழ்வதான தனிநபர் குடும்பங்கள் 128% அதிகரித்துள்ளன.

  • 2030 ஆம் ஆண்டிற்குள் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் தலைவராக இருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80 கோடியை எட்டும்.

  • விவாகரத்து செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை 78.5% அதிகரிக்கும்.

  • குழந்தைகளற்ற தனிநபர் குடும்பங்களின் எண்ணிக்கை, குழந்தைகளுடன் கூடிய தம்பதிகளின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகரிக்கும்.

  • கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும், குடும்பங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை குறையும்.

எனவே புதிய வகை குடும்பநிலைக்கேற்றவாறு நம் வரி முறை இருக்கிறதா? அதற்கேற்றவாறு மாற்ற முடியுமா? என்ற கேள்வி பிறக்கிறது. மட்டுமல்ல, குழந்தைகளோ, சார்ந்திருப்பவர்களோ அற்ற தனிநபர் குடும்பமொன்று குறைந்த பலனை பெறுகின்றதா?


ஆஸ்திரேலியாவின் வரி மற்றும் சேமிப்பு பரிமாற்றம் பல உறுப்பினர்களைக் கொண்ட பாரம்பரிய குடும்ப அமைப்பை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இப்பொழுது குழந்தைகளின்றி வாழும் தனிநபர் குடும்பங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவர்கள் பலன் பெறுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. இந்த சிக்கல் ஓய்வூதிய சேமிப்பில் மட்டும் அல்ல. குடும்ப வரிச்சலுகைகளும் அவர்களுக்கு கிட்டுவதில்லை; மற்ற பல சமூக நலன்களும் கிடைப்பதில்லை; மெடிகேர் லெவி கூட கூடுதலாக கட்டவேண்டியிருக்கிறது; தனிநபர் உடல்நலக்காப்பீடு, வாடகை போன்றவற்றிற்கு அதிகம் கட்டவேண்டியிருக்கிறது.


ஒரு குடும்பத்தில் பலர் இருக்கும் நிலையில், அந்த குடும்பம் வரியைக் குறைக்க வேறு சில வசதிகள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது குடும்ப அறக்கட்டளைகள். ஒருவர் குடும்ப அறக்கட்டளை வைத்திருந்தால் குடும்பத்தில் அதிக வருமானம் ஈட்டுபவரின் வருமானத்தை வைத்து வரி விதிக்கப்படாது. அதற்கு மாறாக, அறக்கட்டளையில் உள்ள சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருமானம், குறைந்த வரி விகிதத்துடன், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரித்து வழங்கப்படும். இதன் மூலம் குடும்பத்தில் அதிக வருமானம் உள்ளவர்கள் குறைந்த வரி செலுத்த முடியும்.

இது ஒரு நியாயமான நடவடிக்கை என்று பலர் வாதிடுகின்றனர், ஏனெனில் பலர் உள்ள குடும்பங்களில் கூடுதல் நிதி நிர்பந்தங்கள் உள்ளன. அந்த அழுத்தங்கள் தனிநபர் குடும்பத்தில் இருக்கும் ஒற்றையருக்கு இல்லை என்று வாதிடுகின்றனர். ஆனால் அதிகரித்து வரும் தனிநபர் குடும்பங்களின் ஒற்றையர்களுக்கு, வரி விகிதாச்சாரத்தில் இழப்பே அதிகம் என தகவல்கள் உறுதி செய்கின்றன.


என்ன செய்வது?

அரசின் கொள்கை முடிவாலும், மத்திய நிதிநிலை அறிவிப்பாலும், குழந்தை பெறாமல் வாழும் தனிநபர் குடும்பங்கள் தொடர்ச்சியாக பாதிப்பிற்கு உள்ளாகி வந்திருக்கின்றனர். ஆகவே, மேற்குறிப்பிட்ட ஆய்வுகளின் படி, தனிநபர் குடும்பங்களின் எண்ணிக்கை, மிகப்பெரிய வாக்குவங்கியாக மாறிவருகிறது என்பதை அரசும், அரசியல் கட்சிகளும் கவனிக்கத் தவறக்கூடாது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர். சமூக கட்டமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, ஓய்வூதிய சேமிப்பின் மீதான வரிகளும் மாறவேண்டாமா எனவும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.


*****


To read the original publication and more such stories, please visit: https://www.sbs.com.au/language/tamil/the-facts-about-an-inheritance-tax

33 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page