கனவு நனவாகும் நேரம் - Big Banana - Coffs Harbour - NSW
- உயிர்மெய்யார்
- May 25
- 4 min read
Updated: Aug 2

SBS Radio Tamil - இல் இக்கதையைக் கேட்க கீழ்க்கண்ட நீல நில இணைப்பைச் சொடுக்கவும்.
நம்ம ஒவ்வொருத்தருக்குமே ஒரு கனவு இருக்கும். ஓர் ஆசை. இந்த இலட்சியத்தை அடைஞ்சிடம்னு ஒரு வெறி. இன்னக்கி நா ஒங்களுக்குச் சொல்லப் போற கதை ஜான் லாண்டி என்பவருடைய கதை. அவரு பல இன்னல்களுக்கிடையே அவருடைய கனவை, அவருடைய passion-ஐ எப்படி அடைஞ்சார் அப்படிங்றத தான் நான் சொல்லப்போறேன். எனக்கு ரொம்ப பிடிச்ச, என் மனசுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு கதை.
அமெரிக்காவிலிருந்து ஜான் லாண்டி கிளம்புகிறார்
ஜான் லாண்டியோட கதை 1964ல அமெரிக்காவிலேர்ந்து தொடங்குதுங்க. அமெரிக்காவுல அவர் பூச்சியில் விஞ்ஞானியா இருக்காரு. இங்க ஆஸ்திரேலியாவுக்கு ஓர் ஆராய்ச்சிக்காக வர்றாரு. அவர் மனைவியோட வர்றாரு. இங்க New South Wales-ல தான் வந்து எறங்குறாரு. அந்த ஆராய்ச்சியெல்லாம் முடிஞ்சோன்ன, ஒரு நாள் ஜான் லாண்டி என்ன பண்றாரு, அவர் மனைவிகிட்ட, “எம்மா! எனக்கு இந்த ஆஸ்திரேலியா ரொம்ப புடிச்சிருச்சி. நாம இங்கயே தங்கிடலாமா?”ன்னு கேக்குறாரு. அப்போ அவரோட மனைவி சொல்றாங்க, “நானும் ஒங்கள்ட்ட சொல்லலாம்னு நெனச்சிட்டு இருந்தேன். இந்த தண்ணி, இந்த காத்து, இந்த கடற்கரை, இந்த மக்கள்…எனக்கும் ஆஸ்திரேலியா ரொம்ப புடிச்சிடுச்சி” ன்னு சொல்றாங்க. அப்பறம் அவங்க என்ன பண்றாங்க…Coffs Harbour ங்ற எடத்துல ஒரு வாழைப்பழத் தோட்டத்த வாங்குறாங்க.
Coffs Harbour-ல் ஒரு வாழைப்பழத் தோட்டத்தை வாங்குகிறார்.
வாழைப்பழத் தோட்டத்தை வாங்கி, ஒரு வீடு கட்டுறாங்க. நிறைய வாழைப்பழம் அறுவடை ஆவுது. அப்ப என்ன முடிவு பண்றாங்கன்னா, ‘ஒரு வாழைப்பழக் கடை வைக்கலாம். நெறையப் பேரு வந்து வாங்குவாங்க’ ன்னு சொல்லிட்டு ஒரு வாழைப்பழக் கடை வக்கிறாங்க. என்ன எதிர்பாக்குறாங்க? அங்க சிட்னிக்கும் கோல்டு கோஸ்ட்க்கும் இடையே நிறைய காரு எல்லாம் போவுது இல்லையா! அங்க வந்து எறங்கி வாழைப்பழம் வாங்குவாங்க. நமக்கு லாபமா இருக்கும்’னு சொல்லி எதிர்பாக்குறாங்க. நிறைய வாழைப்பழம் அறுவடை ஆகுது. சிட்னிக்கும் கோல்டு கோஸ்ட்க்கும் இடையே நிறைய பயணிங்க போனாக் கூட எந்தக் காரும் நிக்கவே இல்ல.
அமெரிக்காவிற்குத் திரும்ப திட்டமா?
அப்போ ரெண்டு பேரும் உக்காந்து யோசிக்கிறாங்க. “அடடா! நாம தப்பு பண்ணிட்டமோ? அமெரிக்காவுக்கே திரும்பிடலாமோ? எந்த காரும் நிக்க மாட்டேங்குதே!” அப்படீன்னு அவுங்க சோகமா ஒக்காந்து பேசிட்டு இருக்கும்போது….ஜான் லாண்டியோட மனைவி சொல்றாங்க, “ஜான்! ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா? நாம ஹவாயில….ஒரு விடுமுறைக்கு போயிருந்த போது….பெரிய அன்னாசிப் பழ சிலை இருந்தது பாத்தீங்களா?....பெருசா இருந்திச்சி. எல்லாருமா அங்க நின்னு போட்டோ எடுத்தாங்க. நாம கூட போட்டோ எடுத்துகிட்டோம். அதுமாறி, நாம ஏன் ஒரு பெரிய வாழைப்பழத்தை இங்க….பெருசா கட்டக்கூடாது?” அப்படின்னோன்ன…ஜான் லாண்டி, “ஆமா…அது நல்ல ஐடியாவா இருக்கே” ன்னு சொல்லிட்டு ஒரு சில நண்பர்கள்ட்ட கேக்குறாங்க. சில நண்பர்கள், “என்னய்யா இது பைத்தியக்காரத்தனமா இருக்கு”ன்னு சொன்னாக்கூட சில பேரு வந்து, “ ரொம்ப நல்லா இருக்கு. இது வந்து வெறும் செலையா இருக்கக்கூடாது. ஒரு பெரிய வாழைப்பழம் பண்ணி அதுக்குள்ள நாம நடந்து போகனும்” ன்னு சொல்றாங்க. ஒரு நண்பர் சொன்னாரு, “ ஏன்யா வாழைப்பழத்த நம்ம வயித்துக்குள்ள போடலாம். வாழப்பழ வயித்துக்குள்ள நம்ம போகலாமா?” ன்னு சிரிச்சிகிட்டே சொன்னாரு. “சரி! இத ஒரு இன்ஜினியர்ட்ட கேக்கலாம்”ன்னு சொல்லிட்டு உள்ளூர்ல ஆலன் சாப்மேன்’ன்னு ஒரு இன்ஜினியர்ட்ட கேக்குறாங்க. “….ஒரு பெரிய வாழைப்பழம் கட்டனும். ஆனா அது உள்ள மக்கள் நடந்து போவனும்” னு சொன்னதும் ஆலன் சாப்மென் என்ன பண்றாரு.
வாழைப்பழத்தை கிறிஸ்துமஸ்க்குள் கட்ட முடியுமா?
ஆலன் ஹார்வி-ங்ற ஒரு பில்டர்ட்ட போயி கன்சல்ட் பண்ண பிறகு, 13 மீட்டர் நீளமும் 5 மீட்டர் உயரமும் கொண்ட வாழைப்பழத்தை கட்ட ஆரம்பிக்கிறாங்க. 1964ல செப்டம்பர் மாசம் கட்ட ஆரம்பிக்கிறாங்க. ஜான் லாண்டி சொல்றாரு, “நாம டிசம்பர் கிறிஸ்துமஸிக்கு கட்டிடத்தை திறக்கனும். சீக்கிரம் கட்டுங்க. வேகமா வேலைய முடிங்க” ன்னு சொல்றாரு. அது போலவே 1964 டிசம்பர் 22ம் தேதி பெரிய அந்த வாழைப்பழத்தை தெறந்து வக்கிறாங்க. இப்போ கார்ல போறவங்க எல்லாரும், “நிறுத்துங்க! நிறுத்துங்க!! அதோ பாருங்க….பெரிய வாழைப்பழம்….Big Banana….அங்க போயி நின்னு ஒரு புகைப்படம் எடுத்துக்குவோம்….”ன்னு சொல்லிட்டு புகைப்படம் எடுக்குறாங்க. பக்கத்துல வாழைப்பழக் கடையில வாழைப்பழம் வாங்குறாங்க. எல்லாருமா நின்னு குடும்பம் குடும்பமா வாழைப்பழம் வாங்குறாங்க. ஜான் லாண்டியும் அவரோட மனைவியும் அதைப் பாத்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருந்தாங்க.
ஆனா..இன்னும் ஏதோ தேவைப்படுது
மக்கள் வந்து நிறுத்துறாங்க. குடும்பம் குடும்பமா வாழைப்பழம் வாங்குறாங்க. அப்ப ஜான் லாண்டி கவனிக்கிறாரு. மக்கள் முகத்துல ஏதோ ஒரு ஏமாற்றம் இருக்கு. இன்னும் ஏதோ அவங்களுக்கு தேவைப்படுற மாதிரி இருக்கு. ஜான் லாண்டி என்ன பண்றாரு. அவரோட மனைவிகிட்டயும் நண்பர்கள்கிட்டயும், “இது பத்தாது. மக்களுடைய முகத்த பாக்குறேன். இன்னும் அவங்களுக்கு ஏதோ தேவைப்படுது. நாம இன்னும் ஏதாவது செய்யனும்”-னு சொன்னாரு.
இன்னொரு பார்ட்னர் வர்றாரு
John Enevoldson-ங்ற இன்னொருத்தர் பார்ட்டனரா சேர்றாரு. அவரு என்னா சொல்றாரு, “ஓகே! நாம வெறும் வாழைப்பழக் கடை வச்சா பத்தாது. ஒரு கார் பார்க் கட்டுவோம். நெறையப் பேர் வந்து நிக்கிற மாதிரி. அப்பறம் ஒரு cafe கட்டுவோம்” னு சொல்லி அதே மாதிரி கட்டுறாங்க. அதோட ஒரு Giant Slide கட்டுறாங்க. இப்பயும் நீங்க போனீங்கன்னா…83 மீட்டர் நீளமுள்ள ஸ்லைட்….ஒரு 6 lanes. குழந்தைங்க பெரியங்க எல்லாரும் அதுல ஏறி ஸ்லைட் பண்ணுனா ஒரு திரில்லிங்கா இருக்கும். சூப்பரா இருக்கும். அதை கட்டுறாங்க. அதுக்கப்பறம் ஒரு Water Park கட்டுறாங்க. 7 Water slides…..இந்த சம்மர்ல போயி ஒக்காந்து ஸ்லைட் பண்ணுனா…. அந்த தண்ணியோட பயணம் பண்றது அருமையா இருக்கும். Toboggan Ride ஒன்னு கட்டுறாங்க. 600 மீட்டர் லாங் ரைட்.
ஜான் லாண்டி ரிட்டையர்டு ஆகுறாரு
1968ல ஜான் லாண்டி ஒரு முடிவு எடுக்குறாரு. “போதும். நாம ரிட்டையர்டு ஆயிடுவோம்.”-ன்னு சொல்லிட்டு ஜான் லாண்டியும் அவரோட மனைவியும் ரிட்டையர்டு ஆகுறாங்க. அதைத் தொடர்ந்து John Enevoldson என்ன பண்றாரு….ஜான் லாண்டியோட கனவை நனவாக்குறதுக்கு இன்னும் சில அம்சங்களச் சேக்குறாரு.
மேலும் சில பொழது போக்கு அம்சங்கள்
ஒரு பெரிய Laser Tag கட்டுறாரு. இப்போ போனீங்கன்னா, பெரியவங்க, இளைஞர்கள், குழந்தைங்க எல்லாரும் லேசர் வச்சிட்டு விளையாடலாம். அதுக்கப்பறம் ஒரு Mini Golf கட்டுறாரு. 36 துளைகள் கொண்ட கால்ஃப் மைதானம். Ice-Skating Rink இருக்கு. ஐஸ் ஸ்கேட்டிங் பண்ணலாம். அப்பறம் 4D சினிமா தியேட்டர் கட்டுறாரு. அதுக்குப் பேரு World of Bananas. வெறும் பொழுது போக்கு பூங்காவா இல்லாம அது அறிவு பூர்வமான கற்றலுக்கான எடமா இருக்கனும்னு அவர் நெனச்சாரு. வாழைப்பழம் பற்றி வரலாறு, அதன் அறிவியல் எல்லாம் அந்த தியேட்டர்ல கத்துக்கலாம்.
ஜான் எனிவால்ட்சனும் ஓய்வு
1988ல John Enevoldson ஓய்வு பெற நினைக்கிறாரு. அவரால சரியா நிர்வகிக்க முடியல. இதுவரைக்கும் மகிழ்ச்சிக் குடுத்துக் கொண்டிருக்கிற அந்த இடம் இப்போ சோகமயமான எடமா மாறிடுச்சி. யாரும் வாங்கறதுக்கு இல்ல. இந்த கடைகள் சரியா போகல. வர்ற பொது மக்களுக்கு சரியா மெயிண்டன் ஆகலேயேங்ற வருத்தம். அப்பத்தான் Bob Johnston வர்றாரு. அந்த எடத்தை வாங்குறாரு. ஜான் லாண்டியின் கனவை முழுசா நனவாக்கனும்னு அவரு இன்னும் சில அம்சங்கள அதுல சேக்குறாரு.
Bob Johnston கனவைத் தொடர்கிறார்
இப்போ நீங்க போயி பாத்தீங்கன்னா, Coffs Harbour-ல இருக்கற Big Banana-வுல Bumper Cars இருக்கு. ஒரு Plantation Tour இருக்கு. சினிமாவா மட்டும் பாக்காம, நேரடியா வாழைமரத்தைத் தொட்டு, ஐம்புலனும் வேலை செய்ய, வாழைப்பழத்தோட்டத்துக்குள்ளப் போயி ஒரு Guided tour. அதுக்கப்பறம் ஒரு Reptile World. முதலையெல்லாம் பாக்கலாம். சின்ன கஃபேயை Going Bananas Café - ன்னு ஒரு பெரிய கஃபேயா மாத்துறாரு. அதுல பனானா தீம்டு மெனு இருக்கும். Chocolate-dipped frozen bananas, banana smoothies, pancakes, and banana splits -னு அட்டகாசமா இருக்கும். பக்கத்திலேயே ஒரு Cheese-Making Workshop நடக்கும். அங்க சீஸ் எப்படி செய்றதுன்னு பாக்கலாம். நாமளும் கலந்துக்கலாம். Candy-Making Station இருக்கு. எப்படி மிட்டாய் செய்றாங்கன்னு கிட்டக்கப் போய் பாக்கலாம். ஒரு பெரிய Outdoor maze இருக்கு. உள்ள போயி, இப்படி திரும்புறதா, அப்படி திரும்புறதா-ன்னு நடந்து ஒரு திரில் அனுபவம் வேணுமின்னா அந்த Outdoor maze போகலாம். ஒரு adventure வேணுமின்னா அத தேர்ந்தெடுக்கலாம். அப்பறம் நாலு Escape Roomகள் இருக்கு. கடைசியா ஒரு Gift Shop இருக்குங்க. அதுல என்னா ஒரு சுவைன்னா…எல்லாமே வாழைப்பழ தீம் உள்ள பரிசுப் பொருட்கள் அங்க கெடைக்கும். Banana-shaped toys, keychains, T-shirts,….இன்னும் நெறய அது போன்ற பொருட்கள்.
ஆஸ்திரேலியாவின் ஒரு சின்னம்
2024ம் வருஷம் பிக் பனானா அவங்களோட அறுபதாவது ஆண்டு விழாவை மிகப் பிரம்மாண்டமா கொண்டாடுனாங்க. ஒவ்வொரு வருஷமும் கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் பேர் பிக் பனானாவுக்கு போறாங்க. ஆஸ்திரேலியாவுல Coffs Harbourல இருக்கற Big Banana, ஆஸ்திரேலியாவுடைய மிகப்பெரிய சின்னமா இருக்குங்க.
********
댓글