top of page

அயல் விவசாயி - ஈராக்கின் கிறிஸ்து - சிறுகதைத் தொகுப்பு - கதைச் சுருக்கமும் வாசிப்பு அனுபவமும்.

ree

 கதைச்சுருக்கம்

 

கதை இப்படித்தான் துவங்குகிறது. ஜூமைரா என்கிற கிராமம். இது ஐக்கிய அமீரகத்தில் இருக்கும் ஒரு கிராமம். மாரிஷின் குடிலுக்கு முன்பு மக்கள் கூட்டமாக நிற்கின்றனர்.

 

உம் அப்துல்லாவின் மகன் கேட்கிறான்: “மாரிஷ் என்பது யார் அம்மா?”

 

அந்த வீட்டிலிருந்து வெளியேறுகிற நாற்றத்தால் அவர்கள் மூக்குகளை மூடிக்கொள்கின்றனர். காவலருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஒருவர் சொல்ல…நாமே பார்த்துக் கொள்ளலாம் என்று இன்னொரு குரல் சொல்கிறது. மாரிஷ் தன் கழுதையை என்ன செய்தான் என்று தெரியவில்லையே என்று பேசிக்கொள்கிறார்கள்.

 

உம் அப்துல்லாவின் மகன் கேட்கிறான்: “மாரிஷ் என்பது யார் அம்மா?”

 

மூன்று ஆண்கள் இணைந்து கதவை உடைக்கிறார்கள். மாரிஷ் இறந்து கிடக்கிறான்.

 

உம் அப்துல்லாவின் மகன் கேட்கிறான்: “மாரிஷ் என்பது யார் அம்மா?”

 

அவர்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். இது இயற்கையான மரணமாகத் தெரியவில்லை. மாரிஷின் கழுத்தில் ஒரு காயமும், சுத்தி இருந்த கருத்த இரத்தமும், அருகே கிடந்த கதிர் அரிவாளும் அது ஒரு தற்கொலையோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று பேசிக் கொள்கிறார்கள்.

 

உம் அப்துல்லாவின் மகன் கேட்கிறான்: “மாரிஷ் என்பது யார் அம்மா?”

 

முன்கதை:

மாரிஷ் என்கிற விவசாயத் தொழிலாளி அல்-பதினா என்ற ஒமன் நாட்டில் இருக்கும் கிராமத்திலிருந்து, ஐக்கிய அமீரகத்திற்கு வந்திருக்கிறான். தனது சகோதரரோடும் தன் கழுதையோடும் பயணித்து இங்கே வந்திருக்கிறான். அவனைப் பற்றிய கதையாதலால், அவன் தான் அயல் நாட்டிலிருந்து ஐக்கிய அமீரகத்தில் வந்து வேலை செய்ய வந்த ‘அயல் விவசாயி’. அவர் சகோதரர் துபாயிலேயே சிறப்பான உணவு விற்பனையாளராக மாறிவிடுகிறார். ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் இறந்து போகிறார்.

 

சலீம் என்பவர் மாரிஷின் நண்பர். ’30 வருடங்கள் இங்கு வாழ்ந்து விட்டாய். மறுபடி, ஏன் ஒமனுக்கே திரும்பி போக வேண்டும் என்று நினைக்கிறாய்?’ என்று கேட்கிறார். ‘இங்கு யாரும் என்னைக் கண்டு கொள்வதில்லை. இதுக்கு மேல் எப்படி வாழ? வேலைக்குப் போக எனக்கு ஓர் அடையாளம் வேண்டும். குடியுரிமை அல்லது கடவுச்சீட்டு. எதுவும் இல்லை’ என்று மாரிஷ் விடையளிக்கிறார். சலீமிடம் தன் கழுதையை ஒப்படைத்து விட்டு, பேருந்து நிலையத்திற்குப் போகிறார். எல்லையில் அவனைத் தடுத்து விடுகிறார்கள்.

 

உம் அப்துல்லாவின் மகன் கேட்கிறான்: “மாரிஷ் என்பது யார் அம்மா?” என்கிற கேள்வியோடு கதை நிறைவுறுகிறது.

 

வாசிப்பு அனுபவம்

 

கதையின் பாணி மிகவும் நன்றாக இருந்தது. இன்றைய நாள் நடப்பதை வெவ்வெறு காட்சிகளாகக் காண்பித்து, அவைகளினூடே முன் கதையை சொல்லி வந்தது சிறப்பாக இருந்தது.

 

உம் அப்துல்லாவின் மகன் கேட்கிறான்: “மாரிஷ் என்பது யார் அம்மா?” என்கிற கேள்வியை கதைத் துவக்கத்திலிருந்து முடிவு வரைக் கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஐக்கிய அமீரகத்தில் 30 வருடம் உழைத்தும், வாழ்ந்தும் அடையாளம் இல்லாமல், மறுபடி தன் சொந்த நாடான ஒமனுக்கேப் போக முடியாமல் தன்னையே சிதைத்துக் கொள்கிற மாரிஷ், அங்கு மட்டும் அல்ல, உலகம் முழுக்க இருக்கிறான். மாரிஷ் போன்றவர்கள், ஆயிரக்கணக்கில் குடியுரிமை இல்லாமல் இருக்கிறார்கள். கடவுச்சீட்டோ அல்லது வேறு எந்த அடையாளமோ இல்லாமல் இருக்கிறார்கள்.

 

மலேசியாவில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது ஒரு விடுமுறை சமயத்தில், மியான்மாரிலிருந்து வந்து படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர், வீட்டிற்குச் செல்லாமல், பல்கலைக்கழக விடுதியிலேயே இருந்தார். வீட்டிற்கு ஏன் போகவில்லை என்று கேட்டேன். அப்பொழுது தான் அவர் ரோஹிங்யா மக்களைப் பற்றிச் சொன்னார்.

 

“ரோஹிங்யா மக்கள் மியான்மரில் உள்ள சிறுபான்மை முஸ்லீம் மக்கள். மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் தான் பெரும்பாலும் வசிக்கிறார்கள். இவர்களுக்கு தேசிய அடையாளம் கிடையாது. பல வன்முறைகளை அவர்கள் எதிர் கொள்கிறார்கள். அரசால் குடியுரிமை மறுக்கப்பட்டு, அரசற்றவர்களாக (stateless) வாழ்கின்றனர். (1982-இன் மியான்மர் குடியுரிமைச் சட்டம் ரோஹிங்யாக்களை 135 அங்கீகரிக்கப்பட்ட இனங்களில் ஒரு பகுதியாகக் கருதவில்லை, இதனால் அவர்கள் அரசற்றவர்களாக ஆனார்கள்.) இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யாக்கள் மியான்மரை விட்டு வெளியேறி, பங்களாதேஷ் மற்றும் பிற நாடுகளில் ஆவணமற்ற அகதிகளாக வாழ்கின்றனர். (ஐ.நா. அறிக்கைகள், ரோஹிங்யாக்கள் மீதான வன்முறைகளை "இனப்படுகொலை நோக்கங்களுடன்" நடந்தவை என விவரிக்கின்றன.) எங்கள் குடும்பம் அதில் ஒன்று. ஆனால் இப்பொழுது அங்கு பிரச்னையாக இருக்கிறது. என் ஊருக்கு நான் போக முடியாது. எங்கள் ஊரில் உள்ளவர்களும் வெளியில் வர முடியாது.(மலேசியா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் ஆவணமற்ற அகதிகளாக வாழும் ரோஹிங்யாக்கள், அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு இல்லாமல் துன்பப்படுகின்றனர்)” என்றார்.

 

மாரிஷ் மியான்மரில் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

 

தாய்லாந்தில், பல இன சிறுபான்மையினர் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர்ந்தோர், குறிப்பாக ஆவணமற்ற பெற்றோரின் குழந்தைகள் மற்றும் அகதிகள், அரசற்றவர்களாக (stateless) உள்ளனர். இதனால், அவர்கள் அடிப்படை உரிமைகளான கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, மற்றும் சட்டப் பாதுகாப்பு போன்றவற்றைப் பெற முடியாமல் உள்ளனர்.

2024-இல், தாய்லாந்தில் சுமார் 5,00,000 அரசற்ற மக்கள் உள்ளனர், இதில் பெரும்பாலோர் மலைவாழ் இனங்கள் மற்றும் மியான்மரிலிருந்து வந்த அகதிகளாவர் என்று UN news கூறுகிறது. அதே வருடத்தில், 1,69,241 குழந்தைகள் அரசற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் பெரும்பாலும் இன சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்கள் என்றும் UNICEF கூறுகிறது. அகா, லாஹு, கரென், மற்றும் ஹ்மோங் போன்ற மலைவாழ் இனங்கள், வடக்கு மற்றும் மேற்கு தாய்லாந்தில் வாழ்கின்றனர். இவர்கள் பலர் பிறப்பு பதிவு இல்லாமல் அல்லது ஆவணமற்ற பெற்றோரின் குழந்தைகளாக இருப்பதால் அரசற்றவர்களாக உள்ளனர். இதனால், அவர்கள் பள்ளிகளில் உயர்கல்வி உதவித்தொகை பெற முடியாது மற்றும் வேலைவாய்ப்புகளில் பாகுபாடு எதிர்கொள்கின்றனர் என்று University of San Diego செய்திக் குறிப்பில் குறிப்பிடப்படுகிறது.

மாரிஷ் தாய்லாந்தில் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

 

பாகிஸ்தானில், குறிப்பாக கராச்சியில், சுமார் 12 லட்சம் பாகிஸ்தானிய வங்காளியர் (பிஹாரிகள்) குடியுரிமையில்லாமல் அரசு அற்றவர்களாக வாழ்கின்றனர். இவர்கள் 1971-இல் வங்காளதேசப் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தவர்களின் வழித்தோன்றல்கள், ஆனால் இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் சுமார் 7,75,000 ஆவணமற்ற ஆப்கான் அகதிகள் வாழ்கின்றனர், இவர்கள் பல தசாப்தங்களாக மோதல்களைத் தவிர்க்க ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி வந்தவர்கள். இந்த அரசற்ற மக்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, மற்றும் சட்டப் பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகளை அணுக முடியாமல், பாகுபாடு மற்றும் சமூக விலக்கலை எதிர்கொள்கின்றனர் என்று UNCHR கூறுகிறது.

மாரிஷ் பாகிஸ்தானில் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

 

ஐரோப்பாவில், லாட்வியா மற்றும் எஸ்டோனியாவில், 1991-இல் சோவியத் யூனியன் சரிந்த பிறகு, பல இன ரஷ்யர்கள் அரசற்றவர்களாக (stateless) ஆனார்கள். இவர்கள் சோவியத் குடியுரிமையை இழந்து, புதிய சுதந்திர நாடுகளான லாட்வியா மற்றும் எஸ்டோனியாவில் குடியுரிமை பெற முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், இந்த நாடுகளின் குடியுரிமைச் சட்டங்கள், மொழி மற்றும் வரலாற்றுத் தேர்வுகள் மற்றும் குடியிருப்பு நிபந்தனைகள் ஆகியவை ஆகும். இதனால், இவர்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு மற்றும் வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளை இழந்துள்ளனர். லாட்வியாவில் 180,000-க்கும் மேற்பட்டவர்களும், எஸ்டோனியாவில் சுமார் 68,000 பேரும் அரசற்றவர்களாக உள்ளனர் என்று Statistics Norway கூறுகிறது.

 

மேலும் பங்களாதேஷில் கிட்டத்தட்ட பத்து இலட்சம் பேரும், சிரியாவில் ஒண்ணரை இலட்சம் பேரும், உகாண்டாவில் எழுபது ஆயிரம் பேரும், என பல நாடுகளில் உள்ள குடியுரிமையற்றவர்களின் எண்ணிக்கையை அது கொடுக்கிறது.

 

மாரிஷ் போன்றோர் இப்படி பல நாடுகளில் தவிப்பதைக் காணமுடிகிறது. அவர்களுக்கு ஒரு விடிவு காலம் வரவேண்டும்.

 

********

 

உசாத்துணை

1.   ‘Historic development’ in Thailand as it moves to end statelessness for nearly 500,000 people. (2024, Nov 1). UN News. Retrieved from https://news.un.org/en/story/2024/11/1156396.

2.   Breaking the silence on statelessness. (nd.) UNICEF, Thailand. Retrieved from https://www.unicef.org/thailand/endstatelessness.

3.   Joy K. Park, John E. Tanagho & Mary E. Gaudette, Global Crisis Writ Large: The Effects of Being Stateless in Thailand on Hill-Tribe Children. 10 San Diego Int'l L.J. 495 (2009). Available at: https://digital.sandiego.edu/ilj/vol10/iss2/8.

4.   Pakistan, Key statistics. The UN Refugee Agency. UNHCR. Retrieved. https://www.unhcr.org/where-we-work/countries/pakistan

5.   Brunborg, Helge. (2024 May 6). International statistics on statelessness. Statistics Norway. Retrieved. https://www.ssb.no/en/befolkning/innvandrere/artikler/international-statistics-on-statelessness

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page