top of page

கட்டுரை 10 - முகக் கவசமும் பூமிக் கவசமும்

Updated: Jan 9, 2022


நீங்கள் Disposable Mask எனப்படும் ஒருதடவை உபயோகித்து விட்டு தூக்கிப் போடும் முகக்கவசங்களை என்ன செய்கிறீர்கள்? வேறு என்ன செய்வது? தூக்கித்தான் போட வேண்டும். அப்படி, உலகில் உள்ள எல்லா மனிதர்களும் தூக்கிப்போடுகிறார்கள்.


ஒவ்வொரு நிமிடத்திற்கும் 30 இலட்சம் disposable masksஐ மக்கள் தூக்கிப்போடுகிறார்கள். அப்படியானால் ஒரு நாளைக்கு? 432 கோடி முகக்கவசங்கள் தூக்கிப் போடப்படுகின்றன. உலகளவில், ஒரு மாதத்திற்கு 1,290 கோடி முகக்கவசங்கள் land fill செய்வதற்காக நிலத்தில் அமுக்கி வைக்கப்படுகிறது என்று டென்மார்க்கில் உள்ள University of Southern Denmark செய்த ஆய்வில் தெரிவிப்பதாக Laura Mayers, ABC News க்கு எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

முகக்கவசம் என்றால் என்ன?

ஒருவருடைய மூச்சுக்காற்று மற்றவரின் மூக்கில் நுழையாமல் பாதுகாக்கும் கவசம் தான் முகக்கவசம். இப்பொழுதெல்லாம் பலருடைய முகத்தை முழுசாகப் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டன. முடக்க நிலை, முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பு ஊசி என்பன எல்லோரும் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளாகி விட்டன.


சிறந்த எதிர்காலத்திற்காகவும், ஆராக்கியமான நல்வாழ்விற்காகவும் இவை கட்டாயம் என்பது எல்லோர் மனதிலும் இடம் பெற்று விட்டது. இந்தக் காலகட்டத்தில், தேவையற்ற திடக்கழிவுகளுக்கு எதிரான சூழலியலாளர்கள் சில எச்சரிக்கை விடுக்கின்றனர்.

எச்சரிக்கை

இப்படியே போனால் நமது சுற்றுச்சூழல் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருக்காது. நீலம் மற்றும் வெள்ளை நிற முகக்கவசத்துக்கு மாற்றாக, நீடித்த நிலைத்த மாற்று (Sustainable alternatives) முகக்கவசங்களை உடனே பயன்படுத்துங்கள் என பொது மக்களிடம், இரு கைகளைக் கூப்பி மன்றாடுகிறார்கள்.


“இந்த முகக்கவசங்களை நாம் நடைபாதைகளிலே, சாலைகளிலோ தூக்கிப் போடும் போது, அவை நீர் நிலைகளில் போய் விழ வாய்ப்பாகிவிடுகிறது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடந்த ‘ஆஸ்திரேலியாவை சுத்தம் செய்வோம்’ நாளில் இது போன்ற முகக்கவசங்களை வண்டி வண்டியாக அள்ளினோம்” என்கிறார் ‘ஆஸ்திரேலியாவை சுத்தம் செய்வோம்’ நிறுவனத்தின் தலைவர் Pip Kiernan அவர்கள்.

மேலும் அவர் கூறுகையில் “அவை பலவிதமான நெகிழிகளால் (பிளாஸ்டிக்குகளால்) செய்யப்பட்டன. ஆகவே Polupropylene, polyethylene மற்றும் vinyl போன்ற, மனிதர்களின் நலத்திற்கு ஆகாத உட்கூறுகளைக் கொண்டுள்ளன. இவை நமது சுற்றுச் சூழலில் போடப்பட்டால் அவை மக்குவதற்கு 450 ஆண்டுகள் எடுக்கும். மிருகங்கள் மற்றும் பறவைகள் வெகுவாகப் பாதிக்கப்படும். ஆகவே இந்த பிளாஸ்டிக் முகக்கவசங்களை கீழே போடக் கூடாது” என்றார்.

அதைப் போலவே, குயின்ஸ்லாந்தில் உள்ள Healthy Land and Water நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் Rachel Nasplezes தன் கவலையைப் பகிர்ந்து கொள்கிறார்.


நீர் நிலைகளைச் சுத்தப்படுத்தும் எங்கள் குழுவினர், தொடர்ந்து பிளாஸ்டிக் முகக்கவசங்களை பல இடங்களில் காணுகின்றனர். மற்ற குப்பைகளாக இருந்தாலும் சிலர் தூக்கி, குப்பைத்தொட்டியில் போடுவர். ஆனால் கிருமித் தொற்றுக்குப் பயந்து இதை யாரும் தொடுவதில்லை. இதுவும் இந்த பிளாஸ்டிக் முகக்கவசங்கள் நமது நீர் நிலைகளை அசுத்தம் செய்யும் அபாயத்தில் போய் விடுகிறது. அதோடு அவை காற்றில் மிக எளிதாகப் பறந்து போய்விடக்கூடிய நிலையிலும் இருக்கின்றன.

துணி முகக் கவசம்

கொரோனா தொற்று நோய் தொடங்கிய காலத்திலிருந்து Personal Protective Equipment என்று சொல்லப்படுகிற PPE, கையுறைகள், சானிட்டைஸர் குப்பிகள் என மருத்துவத்துறையில் உள்ளவர்களுக்கும் சரி, பொது மக்களுக்கும் பயன்பட்டுத்தான் வந்திருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், கொரோனா தொற்றின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு நாளும் 16 இலட்சம் டன் நெகிழிக் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன என நெகிழித் திடக்கழிவுகள் பற்றிய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.


“உங்களிடம் தூக்கியெறியக்கூடிய வடிப்பான் (disposable filters) உள்ள துணியாலான முகக்கவசம் இருந்தால், அதைப் பயன்படுத்துங்கள். மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால், கொரோனா அதிகம் பரவுகிற அபாயம் இருக்கின்ற இடங்களில், N95 முகக்கவசங்களைப் பயன்படுத்தலாம்.” என Limestone Coast Local Health Network-ன் Medical Services Executive Director, Elaine Pretorius கூறினார்.

குப்பைத்தொட்டி

“மக்கள் முகக்கவசங்களை அணிகிறது குறித்து மகிழ்ச்சி தான். அதற்காக அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். ஆனால் முகக்கவசங்களை, பொறுப்பற்ற தன்மையில் ஆங்காங்கே தூக்கி எறிவதையும் பார்க்கிறோம். அவைகளை அதற்கேற்ற குப்பைத்தொட்டிகளில் போடவேண்டும்.” என்று குயின்ஸ்லாந்து சுகாதார அமைச்சர் Yvette D’Ath ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.


முகக்கவசங்களைக் குப்பைத்தொட்டிகளில் போடுவதற்கு முன்பு, அவைகளின் கயிறுகளை வெட்டிவிட்டு போட்டால், அதனால் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.

மாற்று யோசனை

RMIT பல்கலைக்கழகம் ஒரு நல்ல யோசனையுடன் வந்திருக்கிறது.

“உபயோகப்படுத்திய பிளாஸ்டிக் முகக்கவசங்களை சிறு சிறு துண்டுகளாக்கி, சாலைகள் செய்வதற்குப் பயன்படுத்தலாம். சாலைகளையும், நடைபாதைகளையும் போடும் போது, துண்டுகளாக்கிய பிளாஸ்டிக் முகக்கவசங்களைப் போட்டால் அவைகளின் ஸ்திரத்தன்மையும், நெகிழ்வுத்தன்மையும் கூடும் என்று எங்கள் ஆய்வில் கண்டுபிடித்தோம். ஒரு கிலோ மீட்டர் சாலை போட 30 லட்சம் முகக்கவசங்களைப் பயன்படுத்தலாம்.” என RMIT பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரும் பொறியாளருமான Mohammad Saberian கூறினார்.


இன்னும் இதன் தொழிற்நுட்பம் உருவாக்கப்படவேண்டி இருந்தாலும், முதற்கட்ட ஆய்வு வெற்றிகரமாகவே இருந்திருக்கிறது.

எந்த முகக்கவசம் சிறந்தது?

ஒரு தடவை மட்டும் பயன்படுத்தும் மருத்துவர்களின் முகக்கவசமே சிறந்தது என்று குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. ஆனால், “ ஒன்றுமில்லாததற்கு ஏதாவது ஒரு முகக்கவசம் நல்லது தான். தொற்றைக் குறைப்பதற்கு எந்த முகக்கவசமும் பயன்படும். P2 அல்லது N95 மருத்துவ வளாகங்களில் பயன்படுத்த ஏதுவானவை. கோவிட் நோயாளிகளில் அருகில் நீங்கள் இருக்க வேண்டி இருந்தால், அவைகளைப் பயன்படுத்துவதுதான் நல்லது.

ஆனால், பொதுவான சமூகத்தில் அவைகளைத் தான் அணியவேண்டும் என்பதல்ல. கிடைக்கும் ஏதாவது ஒன்றை அணிவது நல்லது. ஒன்றுமே அணியாமல் இருப்பதற்கு, ஏதாவது ஒன்றை அணிந்திருப்பது நல்லது தானே! அதற்காக ஒரு தடவை அணிந்த நீலம் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட அறுவை சிகிச்சைக்கான முகக்கவசத்தை மறுதடவை அணியக்கூடாது.” எனத் தொற்று நோய் நிபுணர் Dr. Paul Griffin கூறுகிறார்.


“முகக்கவசம் மட்டுமல்ல, அதோடு இணைந்து கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளி, கோவிட் பரிசோதனை என்று செய்வது சாலச் சிறந்தது.” என அவர் மேலும் கூறினார்.

அதற்காக ஸ்கார்ஃப், கைக்குட்டை அல்லது ஏதோ ஒரு துணி என்பது முகக்கவசத்துக்கு மாற்று அல்ல என்று குயின்ஸ்லாந்து மருத்துவத்துறை எச்சரிக்கிறது.

துணியாலான முகக்கவசத்தை எப்பொழுது துவைத்து பயன்படுத்தலாம்?

எவ்வளவு அடிக்கடி உங்கள் துணியாலான முகக்கவசத்தை துவைக்கிறீர்களோ அவ்வளவுக்கு நல்லது என Dr Griffin கூறுகிறார்.


“இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை நிச்சயம் துவைத்து விட வேண்டும். இல்லையென்றால் அதுவே பிரச்னைக்கு காரணமாக அமைய வாய்ப்பு கொடுத்துவிடக் கூடாது.” என மேலும் அவர் கூறினார்.

எத்தனை நாள் முகக்கவசம் அணிய வேண்டி வரும்?

“சில வாரங்களோ அல்லது சில மாதங்களோ அல்ல, சில வருடங்களுக்கு இப்படித்தான் இருக்கும். அதற்குப் பழகிக் கொள்ள வேண்டும். லோக்டவுன் இல்லையென்றாலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில் இருந்தால், முகக்கவசத்தை மாட்டிவிடுங்கள்” என Dr Griffin வலியுறுத்துகிறார்.

குழந்தைகளுக்கான முகக்கவசம் பற்றி World Health Organisation என்ன சொல்கிறது?

  • ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியக்கூடாது.

  • ஆறு முதல் 11 வயதுக்கட்பட்ட குழந்தைகளுக்கு, ஓர் ஆபத்து அடிப்படையிலான அணுமுறை பயன்படுத்த வேண்டும். கோவிட் தொற்று பரவும் அபாயத்தின் வீரியம், பொருத்தமான முகமூடியை அணிவதற்கான குழந்தையின் திறன், வயது வந்த பெரியவர்களின் மேற்பார்வை, உள்ளூர் சமூக மற்றும் பண்பாட்டுச் சூழல், வயது முதிர்ந்தோர் உள்ள வீட்டுச் சூழல் ஆகியவைகளின் அடிப்படையில் முகமூடி அணிவதை அணுகவேண்டும்.

  • பெரியவர்களுக்கான முகக்கவசப் பயன்பாட்டுக் கொள்கைகளையே, பனிரெண்டு வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு பயன்படுத்த வேண்டும்.

  • நோயெதிர்ப்பு குறைபாடுள்ள குழந்தைகள், மற்ற புற்றுநோய் போன்ற நோயுள்ள குழந்தைகள், குறை வளர்ச்சியுள்ள குழந்தைகள் போன்றோருக்கு சிறப்பு பரிசீலனைகள் தேவை.

என்று World Health Organisation குறிப்பிடுகிறது.

நீங்கள் என்ன செய்யவேண்டும்?

வடிகட்டிகள் இல்லாத மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களைப் பயன்படுத்துங்கள். அவைகளை washing machine கொண்டு தவறாமல் துவைக்க வேண்டும்.

  • நீங்கள் அணிந்திருக்கும் முகக்கவசத்தை விட இன்னொரு முகக்கவசத்தையும் கையோடு எடுத்துச் செல்லுங்கள். ஒன்றில் ஏதாவது பிரச்னையென்றால் இன்னொன்று பயன்படும்.

  • நீங்கள் உபயோகித்த ‘தூக்கியெறிய வேண்டிய முகக்கவசத்தை’ மறக்காமல் ஒரு பையில் போட்டு வீட்டிற்கு எடுத்து வாருங்கள். உடனே, மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டியில் போட்டுவிடுங்கள். அதற்கு வாய்ப்பில்லையென்றால், பொதுவில் உள்ள குப்பைத்தொட்டியில் போடுங்கள்.

  • மறுசுழற்சி குப்பைத்தொட்டியில் முகக்கவசங்களைப் போட வேண்டாம். அவைகள் மறுசுழற்சி கருவிகளில் சிக்கிக்கொள்ளலாம். கழிவுத் தொழிலாளர்களுக்கு உயிர் அபாயத்தைக்கூட கொண்டு வரலாம்.

  • இறுதியாக, வழிப்பாதையில் தூக்கி எறியாதீர்கள். அவைகள் நீர்நிலைகளில் கலந்து, உங்களுக்கே எமனாகத் திரும்பலாம்.


*****

References:

  1. Seselja, Edwina & Mackintosh, Lachlan. (2021 Aug 14). Queenslanders urged to dispose of masks properly as the mandated PPE clogs waterways. ABS Radio Brisbane. Retrieved fromhttps://www.abc.net.au/news/2021-08-14/queenslanders-urged-to-dispose-of-masks-properly-/100375668 as on 14.08.2021

  2. Mayers, Laura. (2021 Aug 9). Disposable face masks prompt anti-waste campaingers to call for sustainable alternatives. ABC South East SA. Retrieved from https://amp.abc.net.au/article/100361114 as on 10.08.2021

  3. Nothling, Lily. (2021 Aug 11). Cloth masks or surgical masks? Eitherway, you’ll be wearing one for ‘years to come’. ABC News. Retrieved from https://www.abc.net.au/news/2021-08-11/qld-covid-face-mask-hygiene-cloth-vs-surgical/100363746 as on 15.08.2021

  4. https://theconversation.com/coronavirus-face-masks-an-environmental-disaster-that-might-last-generations-144328

13 views0 comments
bottom of page