top of page

அருந்தவப் பன்றி - சுப்பிரமணிய பாரதி - பாரதி கிருஷ்ணகுமார் - மெல்பர்ன் வாசகர் வட்டம் - வாசிப்பு அனுபவம் - 15.03.2026

Updated: 3 hours ago

மெல்பர்ன் வாசகர் வட்டத்தில், திரு. பாரதி கிருஷ்ணகுமார் எழுதி, 2011 ஆம் ஆண்டு, கோயமுத்தூர் த ரூட்ஸ் பதிப்பகம் வெளியிட்ட ‘அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி’ என்கிற நூலின் வாசிப்பு அனுபவப் பகிர்வு 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி, மெல்பர்னில் நடந்தது. சுமார் 16 வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட அந்த அனுபவப் பகிர்வில், இந்தியாவிலிருந்து இணையவழியாக திரு. பாரதி கிருஷ்ணகுமார் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.


திரு. பாரதி கிருஷ்ணகுமார், கடைசியாகப் பேசிய போது, இந்நூலை எழுதியதற்கான மூன்று முக்கிய காரணங்களைக் குறிப்பிட்டார்.

 

நூல் எழுத மூன்று காரணங்கள்

  1. ஏழ்மை மற்றும் கீழ்மை - பாரதியாரின் வாழ்க்கை கொடுமையான வறுமையிலும் பல ஏழ்மையான நெருக்கடிகளிலுமே நகர்ந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, பாரதியாரின் விருப்பம் இல்லாமலேயே கீழ்மை என அவர் நினைக்கும் இடங்களிலும், பணிகளிலும் தொடரவேண்டியிருந்திருக்கிறது. இந்த புற களமும், அக உணர்வும் அவரை உந்தித் தள்ளிக்கொண்டேயிருந்திருக்கிறது என்பதை விளக்க முற்பட்டதாக நூலாசிரியர் கூறினார்.

 

  1. நேர்மை மற்றும் வாய்மை - அப்படி கீழ்மையான வாழ்க்கை அனுபவத்தை மூடி மறைக்காமல், அவைகளைச் சொன்னால் தன் புகழுக்குக் கேடு விளையுமோ என்று நினைக்காமல், உண்மையை நேர்மையாக வெளிப்படுத்தும் குணம் எல்லா படைப்பாளிகளுக்கும் வருமா என்று வியந்து, பாரதியாரின் அந்த வாய்மைப் பக்கத்தை வெளிக்கொணர முயற்சித்ததாகவும் நூலாசிரியர் குறிப்பிட்டார்.

 

  1. தாய்மை மற்றும் மேன்மை - பாரதியார் காலமாவதற்குமுன் வாழ்ந்த 39 வயதிற்குள் பல தலைப்புகளில் ஏறக்குறைய 16,000 பக்களில், கல்வி, பெண்விடுதலை, தேச சுதந்திரம், மூடநம்பிக்கைகள் எனப் பல விடயங்கள் பற்றி கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல் என எழுதி, ஊரும் உலகும் உய்ய தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்திருக்கிறார் என்பதை பறைசாற்றவும் இந்நூல் எழுதப்பட்டதாக நூலாசிரியர் கருதினார்.

 

இந்தக் கட்டுரையில், மேற்கண்ட மூன்று தலைப்புகளில், என் வாசிப்பு அனுபவத்தையும், வாசகர் வட்ட நண்பர்களின் கருத்துக்களையும், நூலாசிரியரின் பதிலுரையையும் இங்கு சுருக்கமாக எழுதத் துணிகிறேன்.

 

ஏழ்மை மற்றும் கீழ்மை

 

பாரதியாரின் வாழ்க்கையில் நடந்தக் கொடுமைகளை நூலில் விரிவாக எழுதுகிறார் நூலாசிரியர்.

 

பாரதியாரின் ஐந்தாவது வயதில் (5 ஆவது வயதில் - 1887 ஆம் ஆண்டில்) அன்னையின் மறைவு: பாரதியாரின் ஐந்தாவது வயதில், 1887 ஆம் ஆண்டில், அவரது அன்னை மறைந்து போகிறார். தாயில்லாப் பிள்ளையாக, சிற்றன்னையின் (வள்ளியம்மையின்) வளர்ப்பில், வளர்கிறார். இதுவே பராசக்தியை அன்னையாகப் போற்றத் தூண்டுகிறதோ? என்றும் தாய் பற்றி வரும்போதெல்லாம் பாரதி உருகிப் போகிறாரே என்றும் ஒரு வாசகர் கருத்துரைத்தார். ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று பாடிய பாரதி, சிறுவயதில் ஓடி  ஆடி விளையாடவில்லை. மரத்தில் ஏறி இறங்கி மகிழ்ச்சியடைந்ததில்லை. ஒத்த வயதினரோடு தெருவில் கூடி களித்ததில்லை. தனியாய் புத்தகங்களோடு இருந்த பாரதிக்கு தோழமை என்று ஒன்று இல்லை என்று நினைக்கும் போது மனம் வலிக்கிறது என்று மற்றொரு வாசகர் நெஞ்சில் கைவைத்து நெகிழ்ந்தார்.

 

பத்தாவது வயதில் (10 ஆவது வயதில் - 1893 ஆம் ஆண்டில்) காதல்: பத்து வயதில் ஒரு பெண்ணுடன் காதல் வயப்படுகிறார். ஆனால் அக்காதல் திருமணத்தில் முடியவில்லை. என்ன கொடுமை!

 

பதினோராவது வயதில் (11 ஆவது வயதில் - 1894 ஆம் ஆண்டில்) பிடிக்காதக் கல்வி: பாரதியாரின் பதினோரு வயதில், 1894 ஆம் ஆண்டில், திருநெல்வேலி இந்துக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் பயில சேருகிறார். ஆனால் அது அவருக்குப் பிடிக்கவில்லை. கடல் சூழ்ந்த இவ்வுலகில் எத்தனையோ மொழிகள் இருந்தாலும், இறைவனே நூல் அருளிய பெரும் சிறப்புடையது செந்தமிழ்த் திருமொழி என்று பகிர்ந்த பாரதிக்கு ஆங்கில மொழிவழிக்கல்வி பிடிக்காமல் போனது ஆச்சரியமில்லை என்று ஒரு வாசகர் கூறினார்.

 

பதினான்காவது வயதில் (14 ஆவது வயதில் - 1897 ஆம் ஆண்டில்) குழந்தைத் திருமணம்: பாரதியாரின் பதினான்காவது வயதில், 1897 ஆம் ஆண்டு, செல்லம்மாவுடன் திருமணம் நடக்கிறது. மனைவி செல்லம்மாளுக்கு வெறும் ஏழு வயது தான். வெறும் ஏழு வயதுதானா? ஏழு வயதிலும் பதினான்கு வயதிலும் குடும்பச் சுமையா? என்று ஒரு வாசகர் பதறினார்.

 

பதினைந்தாவது வயதில் (15 ஆவது வயதில் 1898 ஆம் ஆண்டில்) பிடிக்காத வேலை: பாரதியார் தன் பதினைந்தாவது வயதில், 1898 ஆம் ஆண்டில், சில காலம், எட்டயபுரம் சமஸ்தானத்தில் பணியில் சேர்கிறார்.

 

அதே பதினைந்தாவது வயதில் (15 ஆவது வயதில் 1898 ஆம் ஆண்டில்) தந்தையின் தொழில் நஷ்டமும் மறைவும்: பாரதியாரின் தந்தை (சின்னச்சாமி ஐயர்) எட்டயபுர சமஸ்தான ஜமீனின் ஆதரவுடன் ‘காட்டன் ஜின்னிங் ஃபேக்டரி’ ஒன்றைத் துவங்கியிருந்தார். அதே காலக் கட்டத்தில் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரு ஹார்வி, பிராங்க் ஹார்வி இருவரும் இணைந்து ‘கோரல் மில்ஸ்’ (பின்னாளில் மதுரா கோட்ஸ்) என்கிற பஞ்சாலையை உருவாக்கினர். ஹார்வி சகோதரர்கள் துவங்கிய பஞ்சாலையால், மூலதனத்தை இழந்து, நஷ்டமேற்பட்டு, கடன் பெருகி, ஏழ்மைக்குழியில் குடும்பம் தள்ளப்படுகிறது. பாரதியாரின் பதினாறாவது வயதில், 1898 ஆம் ஆண்டில், பாரதியாரின் தந்தையார் மரணித்துப் போகிறார். ‘கொடுமையிலும் கொடுமை இளமையிலே வறுமை’ என்று சொல்வார்கள், அது போல, பாரதியாரின் வாழ்க்கை சோகம் மட்டுமே நிறைந்ததாய் காணும் போது அவருடைய ஆன்மா எப்படி காயப்பட்டிருக்கும் என்று ஒரு வாசகர் உணர்ச்சி வசப்பட்டார். காலனியாதிக்கம் இந்தியாவிற்கு என்ன நட்டத்தை ஏற்படுத்தியது என்று கேட்டால் இந்த எடுத்துக்காட்டை உறுதியாக எடுத்துச் சொல்லலாம்.

 

இன்னும் அதே பதினைந்து வயதில் (15 ஆவது வயதில் 1898 ஆம் ஆண்டில்) காசிக்கு குடிபெயர்வு: தாயார் மறைந்து, தந்தையார் இறந்து, கல்வி கற்க பொருளாதரம் குன்றி, இளமையில் திருமணம் செய்து, குடும்ப பாரம் ஏற்று, பிடிக்காத வேலையில் சேர்ந்து, சொந்த ஊரை விட்டு வெளியேறி, தன் பாட்டியுடன், காசிக்குச் செல்கிறார். ‘பொருளின்றி கல்வி வராது. கல்வியின்றி பொருள் வராது’ என்ற அவரது வாசகத்தையே மேற்கோள்காட்டி ஒரு வாசகர், பாரதியாரின் அன்றைய நிலைமையை எண்ணி மிகுந்த கவலையுற்றார்.

 

இருபதாவது வயதில் (20 ஆவது வயதில் 1903 ஆம் ஆண்டில்) எட்டயபுர சமஸ்தான வேலை: எட்டயபுர ஜமீன் கேட்டுக்கொண்டதன் பேரில் அங்குச் சென்ற பாரதிக்கு பூரணாதி லேகியமும், கஞ்சா பானமும் சாப்பிடும் பழக்கம் வந்துவிட்டது. அதுமட்டுமல்ல காமுகர்களுக்கு வேண்டிய பதங்களை தாராளமாகப் பொழிந்து பாடல் எழுதும் வழக்கம் வந்துவிட்டது. அவையெல்லாம் நல்லவேலையாக நமக்கு கிட்டவில்லை என்பது ஓர் ஆறுதல் என்று ஒரு வாசகர் எண்ணினார்.

 

இருபத்தியோராவது வயதில் (21 ஆவது வயதில் 1904 ஆம் ஆண்டில் மதுரைக்கு வருகை: கைக்கட்டி சேவகம் செய்யப் பிடிக்காமல், ஓராண்டிலேயே எட்டயபுரத்தை விட்டு வெளியேறி மதுரைக்கு வருகிறார் பாரதி. சேதுபதி பள்ளியில் சில காலம் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் எப்படிப்பட்ட தமிழாசிரியராக இருந்திருப்பார்? அவரிடம் படித்த மாணவர்கள் எப்படி கல்வி கற்றிருப்பார்கள்? என்று எண்ணி ஒரு வாசகர் வியந்தார்.

 

பிறகு, சென்னை, புதுச்சேரி, எட்டயபுரம் வாசம்: பள்ளி வேலையையும் உதறிவிட்டு சென்னை வந்து சுதேசமித்திரன் பத்திரிக்கையில் பணியில் அமர்ந்து பிறகு ‘இந்தியா’ பத்திரிக்கையைத்  தொடங்குகிறார். ஆங்கிலேயர்களிடமிருந்து கைது அச்சறுத்தல் வந்த வண்ணம் இருந்ததால் பிரெஞ்சுக்காரர்கள் ஆண்ட பாண்டிச்சேரிக்கு குடி புகுகிறார். பாண்டிச்சேரி வாழ்க்கைப் பிடிக்காமல், ஆங்கிலேய இந்தியாவிற்குள் நுழைய கடலூரில் கைது செய்யப்படுகிறார். சிறையிலிருந்து வெளி வந்து சொந்த ஊரான கடையத்திற்கு வருகிறார். இரண்டு வருடம் வாழ்க்கை சிரமமாகப் போக, மறுபடி உதவி கேட்டு சமஸ்தானத்திற்கே மடல் எழுதுகிறார்.

 

இதையெல்லாம் பார்க்கும் போது, மகாகவி பாரதியார் என்று போற்றப்படுகிற எட்டயபுரம் சுப்பிரமணியனும் ஒரு சாமான்ய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்று பொருள்படுகிறது என்று ஒரு வாசகர் கூறினார். இருந்தாலும் அப்பேர்பட்ட மனிதரின் வாழ்வில் இன்னும் கொஞ்சம் வசந்தம் வீசியிருக்கலாம் என்று மற்றொரு வாசகர் ஆதங்கப்பட்டார். கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, பாரதியாரின் வாழ்க்கையில் வறுமைப் புயலும், இளமையில் பெற்றோரின் இழப்பும், அக்காலத்திய வாழ்க்கை முறைமைகளின் சீற்றமும், காலனியாதிக்க வல்லான்மையும், ஜமீன் போன்றோரின் மேலாதிக்கமும் சுற்றிச் சுற்றி அடித்திருக்கிறது என்பது புலனாகிறது.

 

ஆனால், ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்; இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்’ என்று பறைசாற்றிக்கொண்ட பாரதியார், ஆறாண்டுகள் கவிதைத் தொழிலைச் செய்யவே இல்லை. அதை நேர்மையாக வெளிப்படுத்தினாரா? அவர் எந்தக் கண்ணோட்டத்தில் அதைப் பார்த்தார்?

 

நேர்மை மற்றும் வாய்மை

 

அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி

’சின்ன சங்கரன் கதை’யில் எட்டயபுர சமஸ்தான ஜமீன்தாரின் வாழ்க்கையும் அங்கு பாரதியார் பணி செய்தது பற்றியும் சொல்லப்படுகிறது. எட்டயபுரத்து ஜமீன்தாரை ‘திமிங்கல உடலும் சிறிய நாயறிவும்’ கொண்டவர் என்று கூறுகிறார். ஜமீன்தார் அரண்மனையில் நடக்கும் கோழிச் சண்டையில், சமஸ்தானத்தின் போஷணையில், சமஸ்தான கோழி இறந்து போகும் பழக்கம் போல், பாரதியாருக்கும் அந்த மந்த கதி நடக்கிறது.  போதைப் பொருளுக்கு அடிமையாகிறார். காமக் கதைகளைப் பேசி, ஊரார் உழைப்பில் தின்று கொழுக்கும் ஜமீன்தாரைத் துதி பாடி , காமக் கதைகளை சொல்லி, அண்டிப் பிழைத்த சின்ன சங்கரன் (பாரதியார்) என்று அந்தக் கதை செல்கிறது. 1898 முதல் 1904 வரை (15 வயது முதல் 21 வயது வரை) ஆறாண்டுகள் அவர் எழுதவே இல்லை. அந்த ஆறாண்டு கால வாழ்க்கையைத்தான் பன்றியுடன் ஒப்பிட்டு இழிவாகச் சொல்கிறார் பாரதியார்.

 

பொதுவாக வறுமையில் தான் படைப்பு வேலைகள் நின்று போகும் ஆனால் சமஸ்தானத்தில் வேலையில் இருக்கும் போது, பொருளாதரத்தில் மிஞ்சி இருக்கும் போதே பாரதியார் எந்த படைப்பும் படைக்காமல் இருந்தது ஆச்சரியமளிக்கிறது என்றார் ஒரு வாசகர்.

 

பாரதியார், 1909 ஆம் ஆண்டு ‘இந்தியா’ பத்திரிக்கையில் ‘கவிதாதேவி அருள்வேண்டல்’ (அல்லது ‘கவிதா தேவிக்கு வேண்டுகோள்’ ‘கவிதா தேவி - அருள்வேண்டல், ‘கவிதைக் காதலி’) என்கிற தலைப்பில் 172 வரிகளில் இரண்டு பகுதியாக வெளியிட்ட கவிதையை, 1987 ஆம் ஆண்டு, பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ‘பாரதி பாடல்கள் - ஆய்வுப் பதிப்பு’ என்கிற நூலில் வெளியிட்டது. அந்தக் கவிதையின் இரண்டாம் பகுதியில், எட்டையபுரம் மன்னரிடம் தான் பணி செய்த ஆண்டுகளில் ‘அருந்தவப் பன்றி’ போல இருந்ததாக சொல்லப்படுகிறது என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

 

அருந்தவப்பன்றி என்ற உவமானம், என்ன பொருளில் சொல்லப்பட்டது? உபநிடத்தில் உள்ள ஒரு கதையில் இருக்கிற உவமானத்தை எடுத்துக் கையாளுகிறார் பாரதியார். அந்தக் கதை இது தான். உயர்ந்த நிலையில் இருந்த ஒரு முனிவன் தாழ்வுற்று பன்றியாகிறான். அப்படி பன்றியானால் தன்னை வெட்டி விடுமாறு தன் மகனிடம் முன்பே கூறிவிடுகிறான். பன்றியான தன் தந்தையை வெட்ட மகன் வரும்பொழுது, அந்த இழிவான வாழ்க்கையே உகந்ததாக இருப்பதாகச் சொல்லி தந்தை பன்றியாக இருக்கவே முடிவு செய்கிறான். அப்படி கவிதை எழுதாமல் இருந்த சில ஆண்டுகளில் (1898-1904) தான் அந்த அருந்தவப் பன்றி போல இருந்ததாக பாரதியார் எழுதியதை வைத்து நூலாசிரியர் ஆய்வு செய்ய முனைந்திருக்கிறார். யாரும் சொல்லாத பாரதியாரின் பக்கத்தை எடுத்து கையாண்டதை பல வாசகர்கள் மெச்சினார்கள்.

 

ஆக, கீழ்மைத்தனமான வாழ்க்கை வாழ்ந்தேன் என்று ‘நேர்படப் பேசிய’ பாரதியாரின் அகத்தூய்மையும் நேர்மையும் மெச்சத்தகுந்தது என்று நூலாசிரியர் கருதுகிறார்.

 

இருந்தாலும் ஓரிரு வாசகர்கள், பன்றி என்ற விலங்கை கீழ்மைக்கு உவமானமாக கூறப்பட்டதை எடுத்துக் கையாள்வதைக் கண்டித்தார்கள். ஏனென்றால், அண்டத்தில் உள்ள உயிரினங்களில் மேலானவை இவை, கீழானவை இவை, என்றுப் பிரித்துப் பார்ப்பது சரியல்ல என்பது அவர்களின் பார்வை. எல்லா உயிரினங்களும் சமம் என்பதே சரி. எல்லா உயிரினங்களுக்கும் சமமமான மதிப்பு கொடுப்பதே சரி. தமிழ் இலக்கியங்களில் (சங்க இலக்கியங்கள் முதல் பக்தி இலக்கியங்கள் வரை), ஏறு எனப்படுகிற காட்டுப்பன்றி, வேட்டை விலங்காகவும், வீரத்தின் அடையாளமாகவும், தினைப்புனத்தை அழிக்கும் தொல்லையாகவும், திருமாலின் வராக அவதாரமாகவும் பன்முகத்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், ஓர் உவமைக்கு என்று எடுத்துக்கொண்டாலும், தவம் செய்வது உயர்வு என்றும் பன்றி வாழ்க்கை தாழ்வு என்றும் கட்டமைப்பது சரியா?என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். என் கருத்தும் அதே. ஆனால் சில வாசகர்கள், சொல்லை விட அவர் கூற வந்த நோக்கத்தையே கருத வேண்டும் எனக் கூறினார்கள்.

 

சிறுவயதில் நேர்ந்த கொடுமைகளையும், பிறகு நடந்த மடமைகளையும் கழித்து விட்டுப் பார்த்தால், பாரதியார் தமிழுக்கும், தமிழருக்கும், ஏன் இந்த மானுடத்திற்கும் கொடுத்த அளப்பரிய கொடை எது? இவைகளுக்கு நடுவே தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தாரா?

 

தாய்மை மற்றும் மேன்மை

 

கல்வியில் மேன்மை

பதினோராவது வயதில் ( 11 ஆவது வயதில் 1893 ஆம் ஆண்டில்), குரு குகதாசப் பிள்ளை அவர்கள், விருதை சிவஞான யோகியாருக்கு பாரதியாரை அறிமுகம் செய்து வைக்க, யோகியார் பாரதியின் கவி புனையும் ஆற்றலைக் கண்டு ‘பாரதி’ (கலைமகள்) என்று பெயர் சூட்டியுள்ளார் என்பதை அறிகிறோம். பிறகு, பதினேழு வயதில் (17 வயதில் 1900 ஆம் ஆண்டில்) கல்வி புலத்தில் மேன்மை அடைகிறார். அலகாபாத் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மத்திய இந்துக் கல்லூரியின் நுழைவுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்கிறார். சமஸ்கிருதம் படிக்கிறார். ஹிந்தி கற்றுக் கொள்கிறார்.

பாரதியார் காலத்திய கல்வி குறித்த ஆய்வுபூர்வமானப் பார்வை பாரதிக்கு இருந்திருக்கிறது என்பது கீழ்க்கண்ட அவரது கவிதையிலிருந்து தெரிகிறது. ‘மயக்கமும், ஐயமும், செய்கை அனைத்திலும் அசிரத்தையும், வாதும், பொய்ம்மையும், நிரம்பிய விலங்குகள் வாழும் இடமே பள்ளிக்கூடம்.’ ‘நரித்தனம் மிக்க அடிமைகள், தாதர்கள், நாயைப் போலத் திரியும் ஒற்றர்கள், சோற்றைப் பெரிதெனக் கருதி உயிரையே விற்கும் பேடிகள், இச்சகம் பேசுவோர் போன்ற மாக்கள் பயில்வதே கல்வி.’ என்று எழுதுகிறார்.

 

புரட்சிகர மாற்றங்கள்

தனக்கும் தன் உறவினர்களுக்கும் நடந்த குழந்தைத் திருமணத்தைப் பற்றி கீழ்க்கண்டவாறு பாரதி எழுதுகிறார். குழந்தைத் திருமணத்தைப் பின்னாளில் ‘பெற்றோர்கள் கூடிச் செய்தக் கொலை’ என்றே குறிப்பிடுகிறார். உண்பது வானத்து அமுதம் என்று கருதி கீழான கள்ளை அருந்துவதற்கு ஒப்பானது இந்தக் குழந்தைத் திருமணம் என்று சொல்வதை ஒரு வாசகர் எடுத்துக்காட்டினார்.

பதினைந்திலிருந்து இருபதாவது வயது வரை ( 15-17 ஆவது வயது வரை, 1898-1903 ஆம் ஆண்டு வரை) காசியில் பல அக, மற்றும் புற மாற்றங்கள் நடந்தன. காசி வாழ்வின் போது பாரதியாரின் அகத்தில் விடுதலை உணர்வும், புறத்தில் குடுமி களைந்து, மீசை வைத்து, கச்சம் வைத்த வேட்டி கட்டி, வால்விட்ட முண்டாசு கட்டும் மாற்றமும் நிகழ்கிறது. அவர் சார்ந்திருந்த சாதியின் அடையாளங்களைக் களைந்து புரட்சி செய்ததைப் படிக்கும் போது நெஞ்சம் நிறைவாய் இருக்கிறது என்று ஒரு வாசகர் பகிர்ந்தார்.

முற்றிலும் பெண்களுக்கான ‘சக்கரவர்த்தினி’ எனும் பத்திரிக்கையின் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தார். பெண் விடுதலை பற்றி பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளுகிறார். நண்பர் கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்து புரட்சி செய்கிறார். காங்கிரஸ் மாநாடுகளில் பங்கேற்கிறார். உணர்ச்சி ததும்பும் விடுதலை உணர்வுப் பாடல்களை எழுதிப் பாடுகிறார். சுதேச கீதங்கள் என்னும் நூலை வெளியிடுகிறார். காந்தியடிகள், விவேகானந்தரின் சீடர் நிவேதிதா போன்றோரைச் சந்திக்கிறார். பாண்டிச்சேரியிலிருக்கும் போது பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு போன்ற காவியங்களை எழுதுகிறார்.

பல கஷ்டங்களையும் அனுபவித்து, ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற சொற்றொடருக்கு ஏற்றாற்போல அவர் மேன்மையுடன் வாழ்ந்து மறைந்தது நெகிழ்வாக இருக்கிறது என்று ஒரு வாசகர் மனம் உருகினார்.

 

இறுதியாக

மொத்தத்தில் இந்த நூல், பல குறிப்புகள் கொண்ட ஒரு reference book என்று ஒரு வாசகர் எண்ணினார். இன்னொரு வாசகர், நூலின் உள்ளடக்கமே சிறப்பாக இருக்கும் போது, முன்னும் பின்னும் அறிமுகஉரைகளும், பல மதிப்புரைகளும் தேவையில்லாத ஒன்றாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்தார். அதற்கு நூலாசிரியர், தன் முதலாவது பதிப்பில், அவரது முன்னுரை மட்டுமே இருந்ததாகவும், இந்த நாலாவது பதிப்பில் சிலர் வேண்டிக்கொண்டதால் மதிப்புரைகளை சேர்க்க வேண்டி இருந்ததாகவும் கூறினார். அதோடு நில்லாமல், முதல் பதிப்புக்கும் இரண்டாம் பதிப்புக்கும் இடையே இருந்த காலத்தில் பல அறிஞர்கள் காத்த கள்ள மௌனத்தை, நூலாசிரியர் சுட்டிக்காட்டி, இந்த மதிப்புரைகள் வலு சேர்க்கும் என்று எண்ணியதாகக் கூறினார்.

ஒரு வாசகர், பாரதியாரின் வாழ்க்கையைப் பற்றி எளிமையான முறையில் தெரிந்துக் கொள்ள நூல் உதவியதாகச் சொன்னார். மற்றொரு வாசகர், ஒரு படைப்பாளியின் யதார்த்த வாழ்க்கையும், அதன் சிரமங்களும் அவனது படைப்பு வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்கிற கண்ணோட்டத்தில் பார்க்கலாம் என்றும் அல்லது, அந்த வலிகளும், அனுபவங்களும், அவமானங்களும் அவனது படைப்புக்கு தூண்டுகோலாய் எப்படி அமைகிறது என்கிற கண்ணோட்டத்தில் பார்க்கலாம் என்றும் கூறினார்.

நூலாசிரியர் குறிப்பிடும் போது, பாரதியார் கவிதையே எழுதாத எட்டு ஆண்டுகள் “Writers Block” என்கிற எழுத்தாளர்களுக்கு வருகிற எழுத்துத் தடை இல்லையென்றும், அது “Separation” என்கிற பிரிவு என்றே கருதவேண்டும் என்றும் உரைத்தார். அந்த எட்டு ஆண்டுகளில் கவிதா தேவி பாரதியாரிடமிருந்து பிரிந்து சென்றிருந்தாள் என்றும், மதுரை வந்த பிறகு பாரதியார் வலிந்து அழைத்தஉடன் வந்து சேர்ந்தாள் என்றும் மேலும் கூறினார். தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடியைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த வாசகர்கள், பாரதியாரின் சொந்த ஊருக்கு அருகாமையிலிருந்து வருவதாகப் பூரித்த போது, ஒரு மதுரையை பூர்வீகமாகக் கொண்டிருக்கும் வாசகர், கவிதாதேவி மீண்டு வந்து பாரதிக்கு மறுவாழ்வு கொடுத்த மதுரையிலிருந்து தான் வருவதாக புளகாங்கிதம் அடைந்தார். ஒரு ஓவிய வாசகர், அட்டைப்படத்தில் வரைந்திருந்த பாரதியாரின் ஓவியத்தைப் பல தடவை வரைந்துள்ளதாகவும், எழுத்தாளரின் ஓவியம் கூட சிறப்பாக இருப்பதாகவும் மெச்சினார்.

சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்ட, பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நூலை, பல்கலைக்கழகம் விரைவில் முடித்து தரவேண்டும் என்று ஒரு வாசகர் வேண்டுகோள் விடுத்தார். கேலியும், கிண்டலும் நிறைந்த ‘சின்ன சங்கரன் கதை’ காணாமல் போய்விட்டது என்று தெரியும் போது நெஞ்சில் முள் தைக்கிறது என்று மற்றொரு வாசகர் குறிப்பிட்டு, அது மீண்டும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பெருமூச்சு விட்டார்.

 

மெல்பர்ன் வாசகர் வட்டத்தில் நடைபெற்ற இந்த அருமையான வாசிப்பு அனுபவப் பகிர்வு, பாரதி கிருஷ்ணகுமாரின் ‘அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி’ நூலை மையமாகக் கொண்டு, மகாகவி பாரதியாரின் வாழ்வின் ஆழமான, மறைக்கப்பட்டப் பக்கங்களைத் திறந்து காட்டியது. ஏழ்மை மற்றும் கீழ்மையின் கொடுமையான அனுபவங்கள், அவற்றை நேர்மையாகவும் வாய்மையாகவும் வெளிப்படுத்திய பாரதியாரின் துணிச்சல், 39 வயதுக்குள் 16,000-க்கும் மேற்பட்ட பக்கங்களில் தாய்மையையும் மேன்மையையும் பரப்பிய அவரது தொடர்ச்சியான இயக்கம்—இம்மூன்று கோணங்களும் நூலாசிரியரால் திறம்பட விளக்கப்பட்டிருந்தன.

வாசகர் வட்ட நண்பர்களின் கருத்துக்களும், நூலாசிரியரின் நேரடி பதிலுரையும் சேர்ந்து, இந்நூல் வெறும் சரிதை அல்ல; பாரதியாரை முழுமையாகப் புரிந்துகொள்ளும் ஒரு முக்கிய ஆவணம் என்பதை உறுதிப்படுத்தின. பாரதியாரின் வாழ்க்கையில் கவிதாதேவி விலகியிருந்த காலகட்டத்தை 'அருந்தவப்பன்றி'யின் உருவகத்தோடு இணைத்து ஆராய்ந்த அணுகுமுறை, நம்மை ஆழ்ந்த சிந்தனைக்கு அழைத்துச் சென்றது.

முடிவாக, இந்நூல் பாரதியாரைத் தெய்வீகக் கவிஞராக மட்டுமல்லாமல், மனிதராக—வறுமையில் தவித்து, தவறுகளைச் செய்து, ஆனாலும் உண்மையைத் தழுவி, தொடர்ந்து மானுட மேம்பாட்டுக்காகப் போராடிய ஒரு உயிருள்ள மனிதராக—நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இத்தகைய நேர்மையான, ஆழமான நூல்கள் மூலமே நாம் நம் இலக்கியப் பாரம்பரியத்தை முழுமையாக உணர முடியும்.

இந்த வாசிப்பு அனுபவம் அனைவருக்கும் ஒரு புதிய பார்வையைத் தந்திருக்கும் என நம்புகிறேன். பாரதி கிருஷ்ணகுமாரின் இந்த முயற்சிக்கு மெல்பர்ன் வாசகர் வட்டம் சார்பாக நன்றியும், வாழ்த்துகளும்.

இறுதியில், நூலாசிரியர் திரு. பாரதி கிருஷ்ணகுமார், பதினைந்து ஆண்டுகள் கழித்து பதினைந்து பதினாறு பேர் தன் நூலை வாசித்து, வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துக்கொண்டது தனக்கு மிக்க மகிழ்ச்சி தருவதாகக் கூறி, இன்னும் இரண்டு வருடங்களில் இன்னும் ஒரு நூல் வெளிவரும் என்றும் உறுதியளித்தார்.

 

********   

 

 

 

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page