top of page

கதை 8 - தாளில் நெருப்பும் காற்றும்


ஓர் ஊரில் ஒரு பணக்காரர் இருந்தார். அவர் பெயர் ராஜகோபால். அவருக்கு மனோகரன் என்ற மகன் இருந்தான். மனோகரன் சிறுவனாக இருந்த போதே, ராஜகோபால் இறந்து விட்டார். இறக்கு முன்பு, ராஜகோபால், தனது எல்லா சொத்துக்களையும் தன் நண்பர் மணிவண்ணன் வசம் ஒப்படைத்துவிட்டு,

“ மணிவண்ணா! என் மகன் மனோகரனை நன்றாகப் பார்த்துக் கொள். என் சொத்துக்களை நீ நிர்வாகம் பண்ணு. குறித்த நேரத்தில் என் பையனுக்கு விவரம் தெரிகிறதா என இரண்டு சோதனைகளை வை. அவைகளில் அவன் வெற்றிப் பெற்றுவிட்டால், பிறகு என் சொத்துக்களை அவன் வசம் ஒப்படை.” என்று சொல்லிவிட்டு, அவ்வாறே தான் எழுதிய உயிலை, மணிவண்ணனிடம் கொடுத்துவிட்டு, உயிர் நீத்தார்.

உரிய காலம் வந்தது.

மணிவண்ணன் இப்பொழுது மனோகரனுக்கு சொத்துக்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதற்கு முன்பு இரண்டு சோதனைகளை வைக்க வேண்டும். அதில் மனோகரன் வெற்றிப் பெற வேண்டும். ஆனால், இதுவரை அந்த சொத்துக்களை நிர்வகித்து, அனுபவித்துவிட்ட மணிவண்ணனுக்கு, அந்த சொத்துக்களை மனோகரனுக்குத் திருப்பிக்கொடுக்க மனம் இல்லை.

மனோகரனே எப்படி ஏமாற்றலாம் எனப் பல நாட்கள் திட்டம் போட்டார் மணிவண்ணன்.

“ கடுமையான, எளிதில் தீர்க்க முடியாத சோதனைகளைக் கொடுப்போம். மனோகரன் வெற்றி பெற முடியாது. உயில் பிரகாரம் சொத்துக்களை நாமே அனுபவிக்கலாம்” என எண்ணி மனோகரனை அழைத்தார். கூடவே ஊர் நீதிபதிகளையும் அழைத்துக்கொண்டார். ராஜகோபால் எழுதிக் கொடுத்த உயிலையும் கையில் வைத்துக்கொண்டார்.

மணிவண்ணன் என்ன சோதனைகளைக் கொடுக்கப்போகிறார் என்று எல்லோரும் ஆவலாக காத்திருந்தார்கள்.


“ மனோகரா! இங்க வா.. இதோ!.. இந்த உயிலின் படி, இரண்டு சோதனைகளிலும் வெற்றி பெற்று, இந்த சொத்துக்களுக்கு அதிபதி ஆகிவிடு. என் பாரமும் குறையும். என் நண்பருக்கு நான் செய்து கொடுத்து சத்தியத்தையும் நான் நிறைவேற்றி நான் நிம்மதி அடைவேன்.” என எல்லோருடைய மனமும் குளிரும் வண்ணம் ஆசை வார்த்தைகளைப் பேசினார்.

எல்லோரும் மகிழ்ந்தார்கள்.

“ ஐயா! இதுவரை எங்கள் தந்தையார் சொன்னமாதிரி என்னை நல்ல முறையில் பார்த்துக்கொண்டதற்கு நன்றி. இரண்டு சோதனைகளையும் சொல்லுங்கள் ஐயா! அதை சரியாகச் செய்து வெற்றி பெறுகிறேன்.” என்று மனோகரன் கூறினான்.

“ ஊர் மக்களே! நீதிபதிகளே! நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள். இதோ முதல் சோதனை. மனோகரா!.. இன்னும் 24 மணி நேரத்தில் ஒரு தாளில் நெருப்பைக் கொண்டு வரவேண்டும். ஆனால் தாள் எரியக்கூடாது.” என்றார்.

எல்லாரும் திகைப்புற்றார்கள்? மனோகரனுக்கு ஆச்சரியமாகி விட்டது.

“ இது மிகவும் கஷ்டமாச்சே! சரி இரண்டாவது சோதனை என்ன?” என நீதிபதிகள் கேட்டார்கள்.

“ இரண்டாவது சோதனை, இன்னொரு தாளில் காற்றைக் கொண்டு வரவேண்டும். ஆனால் தாளைப் பொட்டலம் போடக்கூடாது. இரண்டு சோதனைகளையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும்” என்று மணிவண்ணன் அறிவித்தார்.

எல்லோரும் வாயடைத்துப் போய் நின்றார்கள்.

“ நெருப்பைத் தாளில் எப்படிக் கொண்டு வருவது? முடியாதே!... காற்றை எப்படிக் கொண்டு வருவது? இயலாதே! மனோகரன் இதை எப்படி செய்யப் போகிறான்” என வாய் விட்டு எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.

மனோகரன் “சரி!” எனச் சொல்லிவிட்டு ஊரை விட்டு வெளியே போனான்.


****

ஒரு காடு.

அதில் ஒரு ஞானி இருந்தார்.

மனோகரன் அந்த ஞானியைச் சந்தித்தான். நடந்ததை எல்லாம் அவரிடம் கூறினான். ஞானி மனோகரன் காதில் ஏதோ சொன்னார். அவன் ஊருக்குத் திரும்பினான்.


****

ஊர் மந்தை.

24 மணி நேரம் முடிய இன்னும் சில மணித்துளிகளே இருந்தன. எல்லோரும் கூடியிருந்தார்கள்.

மனோகரன் ஒரு கையில் ஒரு தாளை மடக்கி வைத்து அதன் மேல் ஒரு அகல் விளக்கை கொண்டு வந்தான். இன்னொரு கையில் ஒரு தாளை மடக்கி விசிறி போல் ஆக்கி, காற்றை வீசிக் கொண்டு வந்தான்.

“ ஐயா! இதோ… நீங்கள் கேட்ட நெருப்பும் காற்றும்! தாள் எரியவில்லை. பொட்டலமும் போடவில்லை. ஆனால் எரிகிறது. காற்று அடிக்கிறது” என்றான் மனோகரன்.

எல்லோரும் கைதட்டினார்கள்.

சொத்து மனோகரன் கைக்கு மாறியது.

மணிவண்ணன் வெட்கப்பட்டுப் போனார்.


******


24 views0 comments
bottom of page