பணிவிடை - சிறுகதை - உயிர்மெய்யார் - 26.10.2025
- உயிர்மெய்யார்

- 2 days ago
- 10 min read
Updated: 1 day ago

பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்குப் போகும் பேருந்தில் ஏறினாள் மதுமதி.
துணிமணிகள் வைத்திருக்கிற ஜிப் போட்ட பேக்கை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, சிறிய கைப்பையை இன்னொரு கையின் தோளில் மாட்டிக் கொண்டு ஏறுவது சற்றே கஷ்டமாக இருந்தாலும் ஏறிவிட்டாள். பேருந்தின் பின் சீட்டில் தான் இடம் கிடைத்தது.
அவளுக்குப் பக்கத்தில் சற்றே வயதான அம்மா, தன் எதிரே பனியன் துணிகளை வைத்து இறுக்கிக் கட்டியிருந்த மூட்டையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
மதுமதிக்கு இடம் கொடுத்து நகர்ந்து உட்காரும் போது சிறு புன்னகையை உதிர்த்தாள் அந்தப் பெண்மணி. இவளும் பதிலுக்கு ஒரு புன்னகையை பதிலாகக் கொடுத்தாள்.
திருப்பூரில் ஒரு வீடு வாங்குவது என்றால் குதிரைக் கொம்பு தான். இருந்தாலும் ஒரு சிறிய ஓட்டு வீட்டை வாங்க எல்லாப் பணமும் கொடுத்துவிட்டாள் மதுமதி. இன்னும் ஆறு மாதத்தில் எண்பதாயிரம் கட்டாவிட்டால், வீடு தன் கையை விட்டுப் போய்விடும்.
புது வீட்டை ரிஜிஸ்டர் செய்து, அம்மாவை அங்கு கொண்டு போய் வைக்க வேண்டும். அந்த ஒரு நினைப்பு மட்டும் தான் மதுமதிக்கு இருந்தது.
“புஷ்பா ஸ்டாப்பெல்லாம் எறங்கு…அடுத்து மில்லர் ஸ்டாப் தான்..”என்று கையில் வைத்திருந்த எவர்சில்வர் விசிலால் மேலே உள்ள கம்பியை அடித்துக்கொண்டே கத்தினார் கண்டக்டர்.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்மணி முகத்தில் உழைப்பின் ரேகைகள் தெளிவாகத் தெரிந்தன. அந்த அம்மாவே மெதுவாகப் பேச்சுக்கொடுத்தாள்.
“ரொம்ப தூரம் பயணம் போல இருக்கு…”
“ஆமா..தஞ்சாவூருக்குப் போறேன்…” மதுமதி தணிந்த குரலில் சொன்னாள்.
“தஞ்சாலூரு பஸ்ஸெல்லாம் புது பஸ்ஸ்டாண்டுல நிக்குமா?”
“ஆமா!…”
“வீட்டுல கோச்சிகீச்சிகிட்டு போறியா?”
“இல்ல…வேலைக்குப் போறேன்…”
“திருப்பூர்ல இல்லாத வேலையா…தஞ்சாலூர்ல இருக்கு?” என்று ஆச்சிரியமாகக் கேட்டாள் அந்தப் பெண்மணி.
“நர்ஸ் வேலை…”
“நீ நர்ஸா?...அப்படி சொல்லு...”
“நர்ஸ் இல்ல…”
“அப்பறம்?...” அந்தப் பெண்மணியின் முகத்தில் குழப்பம் அப்பட்டமாய்த் தெரிந்தது.
“வயசான அம்மா ஒருத்தருங்க தஞ்சாவூர்ல இருக்காங்க…படுத்த படுக்கையா இருக்காங்க… அவங்களப் பாத்துக்கனும். அதான் வேலை…”
“ஓ!…ஆயாம்மா மாதிரியா?” என்று ஏதோ புரிந்தது போலக் கேட்டார் அந்தப் பெண்மணி.
“ இல்ல…ஹோம் மெய்டு’ன்னு சொல்லுவாங்க…ஒரு நோயாளிய, வயசானவங்கள எப்படி பாத்துக்கறதுன்னு எங்களுக்கு பயிற்சி குடுப்பாங்க…திருச்சியில அந்த ஏஜென்சி இருக்கு…அவங்க மூலமா…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே பஸ் லட்சுமி நகர் தாண்டி, அடையார் ஆனந்த பவன் வந்துவிட்டது.
“நம்மள மாதிரி ஆளுங்க கடைசிவரைக்கும் ஒழைச்சிகிட்டேதான் இருக்கனும்….ஒம்போது பேரு ஒழைக்க..ஒருத்தன் ஒக்காந்து சாப்புடுறது தான் இங்க நடந்துகிட்டே இருக்கு…கறையான் எல்லாம் சேத்து கஷ்டப்பட்டு கட்டுனா பாம்பு அதுக்குள்ள பூந்துக்கற கதை தான்.
மத்தவன் ஒழைப்ப சொரண்டுறது எப்படீன்னு தான் பெரிய மனுஷன் எல்லாம் அலையறான்…அடுத்த தேர்தல் வரட்டும்….இங்க நா எறங்கனும்…எங்க கம்பெனி இங்க தான் இருக்கு….” என்று பல விஷயங்களைச் சொல்லிவிட்டு பஸ் நின்றதும் அந்தப் பெண்மணி இறங்கினார்.
மதுமதியும் அந்தத் துணி மூட்டையை இறக்க உதவி செய்தாள்.
புது பஸ்ஸ்டாண்டில் தஞ்சாவூர் போகும் பஸ் நின்றது.
ஏறி அமர்ந்து “தஞ்சாவூருக்கு ஒரு டிக்கெட் குடுங்க” என்று கேட்டு மதுமதி தன் கைப்பையிலிருந்து சில்லரையாக எடுத்துக் கொடுத்தாள்.
கண்டக்டருக்கு வாய் நிறைய சிரிப்பு. “நீ தாம்மா சரி..மத்தவங்க கஷ்டத்த புரிஞ்சிகிட்டு நடக்கற பொண்ணு மா நீ..எல்லாம் ஐந்நூறு ரூபாயா தூக்கி குடுக்குதுங்க. சில்லரைக்கு நான் எங்க போவேன்…நீயே சொல்லு..” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
மூன்று பேர் உட்கார்ந்திருக்கிற இருக்கை. மதுமதிக்கு ஜன்னல் ஓரத்தில் உட்காரப் பிடிக்காது. அதனால் முன்னாலேயே உட்கார்ந்து விட்டாள்.
பக்கத்தில் ஹிஜாப் அணிந்த ஒரு அம்மா சிறு பையனோடு வந்து உட்கார்ந்தார்.
அந்தப் பையன், “ஹையா!…ஜன்னல் கிட்ட ஒக்காந்துக்கறேன்..” என்று சொல்லி ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்தான்.
அந்த அம்மா கொண்டு வந்த இரண்டு பைகளையும் கால் இடுக்கில் வைத்துக் கொண்டு, வேர்வையை முக்காடால் துடைத்துக்கொண்டார்.
“எடம் கெடைக்குமோ இல்லையோன்னு நெனச்சேன்…அல்ஹம்து லில்லாஹ்….கெடைச்சிருச்சி” மதுமதியைப் பார்த்து புன்னகையோடு சொன்னார்.
மதுமதியும் பதிலுக்குச் சிரித்து வைத்தாள்.
அந்தச் சின்னப் பையனைக் கண்டதுமே மதுமதிக்கு உள்ளூர உற்சாகம் வந்தது. தன் மகளுக்குப் பிறந்த பேரன் மாதிரியே இருக்கிறான் என நினைத்துக் கொண்டாள். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“நான் திருச்சிக்குப் போறேன். மக வீடு. மருமகப்புள்ள சௌதியிலேர்ந்து வருது. என்னோட அம்மா என் மவளுக்கு தொணையா இருக்காங்க. எங்க வூட்டுல பிசினஸ் பண்றாரு. மாஷா அல்லாஹ்…நல்லபடியா போயிட்டு இருக்கு…அதான் திருப்பூர்ல இருக்கோம்.
இந்தப் பையன் என் மவ வயித்துப் பேரன் தான். லீவுக்கு போய் அழைச்சிட்டு வந்தேன். இப்போ அவங்க அப்பா வர்றதால கூட்டிட்டுப் போறேன்.
எங்க அம்மாவுக்கு எண்பது வயசைத் தாண்டிடுச்சி. மருமகன் திரும்பி போறாரா இல்லையான்னு தெரியல….இன்ஷா அல்லாஹ்….அம்மாவ திருப்பூருக்கு கூட்டிட்டு வந்துடலாமுன்னு இருக்கேன்…
நாம சின்னதா இருக்கும் போது நம்மள பாத்துகிட்டாங்க…இப்போ நாம தான பாத்துக்கனும்…பிஸ்மில்லாஹ்” என்று சொல்லி பாட்டிலிலிருந்து கொஞ்சம் தண்ணியைக் குடித்துவிட்டு, கிட்டத்தட்ட தன் வாழ்க்கை வரலாறைச் சொன்னாள் அந்த அம்மா.
அ்த்தோடு நிற்கவில்லை.
“ஒங்க அம்மா இருக்காங்களா?...” என்று கேட்டும் வைத்தார்.
“ம்…இருக்காங்க…வர்ற தீபாவளி வந்தா அவங்களுக்கு எண்பத்து ஆறு வயசு..என் பெரிய மக வீட்டுல தான் அம்மா இருக்காங்க…வயசுல பனியன் கம்பெனிக்குப் போவாங்க…வேலை வேலை’ன்னு அலைஞ்சிகிட்டே இருப்பாங்க….இப்போ டிபி வந்து படுத்த படுக்கையா இருக்காங்க…” என்று மதுமதி சொன்னாள்.
“அது சரி! வயசாயிட்டா…யாரோ ஒருத்தரோட தொணை தேவைப்படுறது தான்…” என்ற போது பஸ் காங்கேயத்தில் நின்றது.
யாரும் இறங்கவில்லை.
ஒரு நடுத்தர வயது அம்மா மட்டும் ஏறினார். அவர் கழுத்தில் சிலுவையுடன் கூடிய ஜெபமாலை தொங்கிக்கொண்டிருந்தது.
அவர் மதுமதி அருகில் வந்ததும், உட்கார இடம் இருக்கிறதா என்று தேடினார். உடனே ஹிஜாப் அணிந்திருந்த பெண், பையனைத் தூக்கி மடியில் உட்கார வைத்துக்கொண்டு, “அம்மா! இங்க உக்காருங்க…” என்று இடம் ஒதுக்கிக் கொடுத்தார்.
மதுமதி சீட்டின் நடுவில் நகர்ந்துக் கொள்ள, அந்த ஜெபமாலை அம்மா புன்னகையுடன், “ரொம்ப நன்றிம்மா…” என்று சொல்லிக்கொண்டே சீட்டில் உட்கார்ந்தார்.
“இதுக்கு எதுக்கும்மா நன்றியெல்லாம்…மனசு இருந்தா மார்க்கம் உண்டும்மா…எல்லாரும் வாழனும்னு நெனச்சா அமைதியா, சந்தோஷமா வாழலாம்…சுப்ஹானல்லாஹ்….இந்த உலகம் அழகான உலகம்மா..” என்று ஹிஜாப் பெண்மணி சொன்னார்.
“எங்க அம்மா அப்படித்தான் எப்பொழுதும் சொல்லுவாங்க..பிரிச்சி பிரிச்சி பாக்குறதுல என்னா இருக்கு…அணைச்சி அணைச்சி பாக்குறது தான் வாழ்க்கை’ன்னு சொல்வாங்க…இப்ப பரலோகத்துல ஆண்டவருட்ட இருக்காங்க…” என்று ஜெபமாலை அம்மா சொன்னார்.
பஸ் காங்கேயத்திலிருந்து கிளம்பியது.
சற்று நேரத்தில் பையன் அந்த அம்மாவின் மடியில் தூங்கிப் போயிருந்தான். மூவரும் வெவ்வேறு திசையை நோக்கிப் பார்த்தபடியே இருந்தாலும், அவரவர் அம்மாவின் நினைப்பில் தான் மூழுகியிருந்தார்கள்.
“தஞ்சாவூர் புது பஸ்ஸ்டாண்டு வந்திருச்சி…எல்லாம் எறங்குங்க” என்று சொன்ன போது தான், மதுமதி கண் விழித்தாள்.
திருச்சியில் அந்த ஹிஜாப் அம்மாவும் பையனும் இறங்க, தான் ஒதுங்கிக் கொண்டு வழி விட்டதும், அப்பொழுது தான் மங்கலாக நினைவுக்கு வந்தது. ஜெபமாலை அம்மா எப்பொழுது எங்கே இறங்கினார் என்று தெரியவில்லை.
மதுமதி இறங்கி ஆட்டோ பிடித்து, “ரோஹிணி ஆஸ்பத்திரி போயி…நாஞ்சிக்கோட்டை ரோடு போற பைபாஸ்ல…ஸ்டெம் பூங்கா கிட்ட போவனும்” என்று சொல்லி அந்த வீட்டுக்கு வந்து விட்டாள். போன் எடுத்து ஒரு நம்பருக்கு போன் பண்ணினாள்.
“சார் வந்துட்டேன்…வீட்டுக்கு முன்னாடி தான் நிக்குறேன்…”
********
அந்த வீட்டில் படுத்தப் படுக்கையில் ஓர் அம்மா இருந்தார்.
அவரைப் பார்த்துக் கொள்ளத் தான் மதுமதி வந்திருந்தாள். அந்த அம்மாவுக்கு வயது தொண்ணூருக்கு மேல் இருக்கும். வயது மூப்பின் காரணமாக அவ்வப்போது நினைவு தப்பும்.
அந்த அம்மாவின் மகள் ஒருத்தி ஒடிசலாகப் பின் வீட்டில் இருந்தார். அவருக்கு அறுபது வயசிருக்கும். மணிமேகலை என்று பெயர்.
மணிமேகலை, மதுமதியிடம் சில செய்திகளையும் செய்ய வேண்டிய வேலைகளையும் விவரித்தார்.
“அதோ அங்க படுத்துக்க…சூட்கேஸ், பையெல்லாம் இங்க வச்சிக்கோ…அம்மாவுக்கு ஹார்ட் ஆப்பரேஷன் பண்ணி ரெண்டு வருஷம் ஆகுது…முன்னாடியெல்லாம் கொஞ்சம் நடப்பாங்க. இப்போ நடக்க முடியாது.
தெனக்கும் காலையில அஞ்சு மணிக்கு இந்த மாத்திரையைக் குடுக்கனும். முன்னாடி தண்ணி தெளிச்சி, கோலம் போட்டுடு. வீட்ட கூட்டிடனும். மோட்டர் போட்டு தண்ணி ஏத்திடு. அதோ மோட்டார் சுவட்சு.
ஆறு மணி போல காபி வச்சி குடுத்துட்டு, டயபரை மாத்திவிட்டு, அந்த பாத்ரூமுல வச்சி குளிப்பாட்டி வுட்டுரு. தலையை சீவி, பவுடர் அடிச்சி, பொட்டு வச்சி சேர்ல ஒக்கார வையி. மாதா டிவிய போட்டுவுட்டு, இட்லி சுட்டு, சட்னி வச்சி ஊட்டி வுட்டுடு.
அப்பறம் இந்த நாலு மாத்திரையும் போட்டு படுக்க வச்சிடு. போன் பேசிக்கிட்டே இருக்கக்கூடாது…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே மதுமதியின் போன் அடித்தது.
எடுக்கலாமா என்பது போல் மதுமதி அவரைப் பார்த்தாள். “எடுத்துப் பேசு…” என்று முறைப்பாகச் சொன்னார் மணிமேகலை. சற்றே ஒதுங்கிப் போய் பேசினாள்.
“இப்பத்தான் வந்தேன்…ம்…சரி…” என்று சொல்லிவிட்டு, “பெரிய மக தான் பேசுனா…நான் வந்து சேர்ந்துட்டனா’ன்னு எங்க அம்மா கேக்க சொன்னாங்களாம்…” என்றாள்.
“சரி..சரி…அதுக்குன்னு பேசிகிட்டே இருக்காத..என்று சொல்லிவிட்டு மணிமேகலைத் தொடர்ந்தார்.
“காலையில அம்மாவ சாப்பிட வச்சி தூங்க வச்சதும், நீ சாப்பிடு. அதுக்குள்ள, வீட்டுக்கு வெளிய சைடுல இருக்கற பாத்ரூமுல நீ ரெடியாயிடு. தெனக்கும் அம்மா படுக்கற பெட் மேல போட்டிருக்கற ஷீட்டெல்லாம் தொவைச்சிடனும்.
ஒனக்கும் அவங்களுக்கும் மதியான சாப்பாடு சமைச்சிடு. டிவியல ஏதாவது சினிமா கினிமா போட்டுட்டு அம்மாவுக்கு ஊட்டி உட்டுடு. அப்பறம் இந்த ரெண்டு மாத்திரையும் அந்த பாட்டில்ல இருக்கற சிரப்பையும் குடுத்துடு. கொஞ்ச நேரம் கழிச்சி படுக்க வச்சிடு.” என்று சொல்லும் போது மறுபடி மதுமதியின் போன் அடித்தது.
கொஞ்சம் பயத்தோடயே மணிமேகலையைப் பார்த்தார் மதுமதி. மணிமேகலையின் முகத்தில் சற்றே கோபம் துளிர் விட்டிருந்தது.
போன் அடித்துக் கொண்டேயிருந்தது. “ம்! எடுத்து பேசிட்டு சீக்கிரம் வை. ரொம்ப கொஞ்சிகிட்டு இருக்காத…” என்று மணிமேகலை சொன்னதும், மதுமதி போனை எடுத்து, “ம்.. வந்துட்டேன். அப்பறம் பேசறேன் வையி..” என்று சொல்லிவிட்டு, “என் சின்ன மக…அவ..”
அவர் இடைமறித்து, “சரி…சரி….மதியானம் சாப்பிட வச்சி படுக்க வச்சோன்ன…அம்மா தூங்கும் போதே நீயும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ. அப்பறம் அஞ்சு ஆறு மணி போல எழுப்பி ஒரு காப்பிக் குடுத்துடு.
தெருவ வேடிக்கைப் பாக்குற மாதிரி ஒக்கார வச்சி கொஞ்ச நேரம் ஏதாவது பேசிக்கிட்டு இரு. ஏழு ஏழரை போல ஒன்னோ, ரெண்டோ தோசை சுட்டு ஊட்டி விட்டுட்டு, இதோ இந்த நாலு மாத்திரையைப் போடனும்.
அப்பறம் எட்டு மணி போல படுக்க வச்சிடு. தொவச்ச துணிய மடிச்சி வச்சிடு. கிச்சன் எல்லாம் கிளீன் பண்ணி வச்சிட்டு நீ படுத்துக்கலாம்.” என்றார்.
அப்பொது மதுமதியின் போன் அடித்தது. உடனே ஆஃப் செய்தார்.
மறுபடி அடித்தது. மறுபடியும் ஆஃப் செய்தார்.
மறுபடி அடித்தது. “திருச்சி ஆபீஸ்லேர்ந்து பேசறாங்க…” என்று பயந்துக் கொண்டே சொன்னாள் மதுமதி.
எடுத்துப் பேசு என்பது போல் தலையை அசைத்தார் மணிமேகலை. ஊரிலிருந்து வந்து வேலையை ஒத்துக் கொண்டதாக பதில் சொல்லிவிட்டு, போனை சுவிட்ச் ஆஃப் செய்து பைக்குள் வைத்தாள் மதுமதி.
“போன் பண்ணிகிட்டு இருக்கறத பார்த்தேன்…அனுப்பிட்டு வேற ஆள வர வச்சிடுவேன். பாத்து இருந்துக்கோ.. அன்னன்னய சாப்பாட்டுக்குத் தேவையான காய்கறி, மளிகை சாமான்களை நான் எடுத்து தருவேன்.
எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் காலையில இட்லியும் சாயந்திரம் தோசையும் குடுத்துடு. மாத்திரையும் அப்பப்ப நான் ஒரு பேப்பர்ல மடிச்சிக் குடுப்பேன்….ரோட்டுல, திண்ணையில, ஹால்ல, கிச்சன்ல, கொல்லைப் பக்கம்’னு எல்லா எடத்துலயும் சிசிடிவி இருக்கு….வெளியில எங்கயும் போகக் கூடாது.
எதா இருந்தாலும் என்னுட்ட கேக்கனும்…சரியா…” என்று ஸ்ட்ரிக்டாகச் சொல்லிவிட்டு பின்னால் இருந்த அவர் வீட்டிற்குப் போனார் மணிமேகலை. அவருக்கு அவருடைய அம்மாவை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே பிரதான நோக்கமாக இருந்தது.
மதுமதிக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது.
******
மூன்று மாதங்கள் எப்படி ஓடின என்றே தெரியவில்லை.
கையில் கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டது. அதை பெரிய மருமகனிடம் அனுப்பி வீட்டிற்காகக் கொடுக்கச் சொல்லி விட்டாள்.
இன்னும் நாற்பதாயிரம் சேர்க்க வேண்டும்.
அதற்குள் அந்த வயதான அம்மாவோடு நன்கு பழகி விட்டார் மதுமதி.
“அம்மாச்சி…அம்மாச்சி…” என்று பேசுவார். அதற்கு அந்த அம்மாவும் சிரிப்பார்.
“நீ என்ன விட்டுப் போயிடாத…” என்று அந்த அம்மா சில சமயம் கொஞ்சுவார். சோறு ஊட்டி விடும் போது, அந்த அம்மா வேணாம் என்று சொன்னாலும், “இத மட்டும்…இத மட்டும்…” என்று சொல்லி ஊட்டி விட்டு விடுவார் மதுமதி.
வந்த போது இருந்த நிலையை விட, அந்த இடத்தையும் அம்மாச்சியையும் நிரம்ப மாற்றி விட்டாள் மதுமதி. கொஞ்சம் துர்நாற்றம் அடித்த இடத்தை, சுத்தமாக மாற்றி விட்டார்.
சிரமம் பாராமல் தினமும் துணிகளைத் துவைத்து, காய வைத்து, மாற்றி விடுவதால், இடம் எப்பொழுதும் சுத்தமாகவே இருந்தது. அவரை நன்கு குளிப்பாட்டி, பொட்டு வைக்கும் போது, “அழகி!…” என்று கொஞ்சுவாள்.
அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அந்த அம்மாவுக்கு நினைவு தப்பும்.
அப்பொழுது கோபமாகப் பேசுவார். “யாரு நீ? நீ ஏன் இங்க இருக்க? ஓடிப்போ...” என்றெல்லாம் பேசுவார். அதை பொறுமையாகக் கேட்டுக் கொண்டே அதையும் ஜோக்காக மாற்றிவிடுவார் மதுமதி.
ஒரு நாள்.
அந்த அம்மாவின் மகனும் மருமகளும் வெளிநாட்டிலிருந்து வந்தனர். அன்று முழுதும் கவனித்தனர். மதுமதி, அம்மாவை கனிவோடு பராமரிப்பதையும், இடத்தை சுத்தமாக வைத்திருப்பதையும் கண்டார்கள்.
அந்த மருமகள் பெயர் வள்ளி. வள்ளிக்கு மதுமதியை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. மதுமதிக்கு தலைக்குத் தேய்க்க எண்ணெய், குளிக்க சோப்பு, சாப்பிட பிரட்’னு எதையாவது வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருப்பார்.
மணிமேகலை கூட, “வேலைக்காரங்கள வேலைக்காரங்களா வச்சிக்கனும். இல்லாட்டி நம்ம தலையில மொளகா அரைச்சிப்புடுவாங்க…கண்டதையும் வாங்கிக்குடுக்காத வள்ளி…” என்று எச்சரிப்பார்.
வள்ளி அதைக் கண்டுக் கொள்ள மாட்டார்.
வள்ளி மதுமதியை அழைத்து, “மதுமதி!..ஒனக்கு முன்னாடியும் சில பேர் வந்தாங்க. ஆனா இத ஒரு வேலையா, கடமைக்குச் செஞ்சாங்க…ஆனா நீ..ஒன் அம்மா மாதிரியே அம்மாச்சிய பாத்துக்கற….இந்தா ஒனக்கு புதுச் சேலை வாங்கியாந்தேன்…நடுவுல வேலைய வுட்டு போயிடாத” என்றார்.
“அம்மா!..நீங்க கவலைப்படாதீங்கம்மா. அம்மாச்சியை அள்ளி போட்டு குழியில வக்கிற வரைக்கும் இருந்துட்டுத் தான் போவேன்…” என்று வாக்குறுதி கொடுத்தாள்.
அன்று மாலை.
மதுமதி, அம்மாச்சிக்குக் காபி போட்டுக் கொடுத்து விட்டு, வள்ளிக்கு காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.
“ஒனக்கும் காபி போட்டு எடுத்துட்டு வா..” என்று வள்ளி சொல்லி இருவரும் திண்ணையில் உட்கார்ந்தார்கள்.
“ஓன் புருஷன் போன் பண்ணுவாரா?...”வள்ளி துவங்கி வைத்தாள்.
“அத ஏன் கேக்குறீங்கம்மா…என் சோகக் கதையைக் கேட்டா ஒரு சினிமாவே எடுக்கலாம்…” என மதுமதி அலுத்துக்கொண்டாள்.
“ஏன்…என்னாச்சி?”
“மதுரையில கூடல் நகர்ல ஒரு பள்ளிக்கோடத்துல கேண்டின்ல வேல பாத்தேன். அப்போ அவரு வடை, சமோசா எல்லாம் போடுவாரு. நல்ல மனுஷன் தான். பழக்கமாயி கல்யாணம் பண்ணிகிட்டோம்.
ஆனா, பாழாப்போன கஞ்சா பழக்கம் இருந்திருக்கு. கஞ்சாவைப் போட்டுகிட்டு நிலை தடுமாறுவாரு. ஒரு நாள் மதியம் வீட்டு ஹால்ல படுத்திருந்தேன். தள்ளாடிகிட்டே வந்தவரு, என்னென்னமோ சொல்லி திட்ட ஆரம்பிச்சாரு.
யாரோடயோ எனக்கு கனெக்ஷன் இருக்குன்னு பேச ஆரம்பிச்சாரு. எனக்கு கெட்ட கோவம் வந்துடுச்சி..நானும் திட்ட..அவரும் வார்த்தையில தடிக்க….என்ன புடிச்சி கீழ தள்ளி விட்டாரு. அவ்வளவு தான் எனக்குத் தெரியும். மயக்கம் போட்டுட்டேன்.
பக்கத்துல இருந்த அருவா மனைய எடுத்து என் கால்ல ஒரே போடா போட்டுருக்காரு….”
நைட்டியை சற்றே தூக்கி வலது புறக் கெண்டைக் காலில் இருந்த நீண்ட காயத்தைக் காண்பித்தாள் மதுமதி.
“ஐய்யய்யோ…” என பதறினாள் வள்ளி.
“இரத்த வெள்ளத்துல கெடந்தேன். என் அண்ணன் பேரன் தான் ஓடியாந்து மயிரை புடிச்சி இழுத்து, வெளியில கொண்டாந்து ஆஸ்பத்திரியில சேத்தாரு…”
“இப்ப என்ன பண்றாரு ஓம் புருஷன்?..”
“என்ன பண்றாரு…மேலோகத்துல போயி பாத்தா தான் தெரியும். அவரு போயி ஏழெட்டு வருஷம் ஆகுது..”
சிறிது நேரம் மௌனம் இருவரையும் தழுவிக் கொண்டது.
“இப்போ வீட்டுல யாரு இருக்கா?...”வள்ளி கேட்டாள்.
“ என் பெரிய மவ வீட்டுல தான் இருக்கேன். என் அம்மா அவ கூடத் தான் இருக்காங்க. எங்க அம்மாவும் இந்த அம்மாச்சி மாதிரி தான். படுத்த படுக்கையாத் தான் இருக்காங்க. நாங்க ஏழு பிள்ளைங்க. எல்லாரையும் ஒத்த ஆளா இருந்து ஆளாக்குனாங்க.
வாடகை வீட்டுலயே மாத்தி மாத்தி இருப்போம். ரெண்டு அண்ணன் செத்திடுச்சி. ‘பாப்பா, இந்த திருப்பூர்ல நாம சொந்த வீடு வாங்கனும் பாப்பா’னு’ என்னுகிட்ட சொல்லிகிட்டே இருப்பாங்க. அதான் வைராக்கியமா இருந்து ஒரு ஓட்டு வீட்ட ஏழு லட்சத்துக்கு முடிச்சேன்.
இங்க வேலைக்கு வந்து நாப்பதாயிரம் அனுப்பிட்டேன். இன்னும் நாப்பதாயிரம் குடுத்தா பதிவு பண்ணிடலாம்…அதுக்குத்தான் பணம் சேத்துகிட்டு இருக்கேன்…வர்ற பொங்கல்ல ரெஜிஸ்டர் பண்ணிடலாமுங்கம்மா…”
“ பண்ணு..பண்ணு…ஓன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்…”
“அதுமட்டுமில்லம்மா…என் புருஷன் போனதும் என் கொழுந்தனாரும் போயிட்டாரு…எல்லாம் சாராயம் தான் காரணம். அவரோட ரெண்டு புள்ளங்களயும் நான் தான்ம்மா வளர்க்குறேன்…
பதினைஞ்சு வயசு ஒரு பையன்…பதினொரு வயசு இன்னொருத்தன்…அவுக மதுரை அலங்காநல்லூர்ல இருக்காங்க…”
“அப்படியா? ஆச்சரியமா இருக்கு...” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று, பத்தாயிரம் பணத்தை எடுத்து வந்து மதுமதியிடம் கொடுத்தாள் வள்ளி.
“இத வச்சிக்க...அந்த புள்ளங்கள நல்லா படிக்க வையி.. அடுத்த வாரம் இன்னேரம் நாங்க ப்ளைட்டுல பறந்துகிட்டு இருப்போம்…கிறிஸ்துமஸ்க்கு வரும் போது பாப்போம்” என்று வள்ளி சொல்லிக்கொண்டிருக்கும் போதே மணிமேகலை அங்கு வந்தார்.
“அம்மாவுக்கு காபி குடுத்தாச்சா?..” என்று அதட்டலாகக் கேட்டார்.
உடனே மதுமதி எழுந்துக் கொண்டு, “குடுத்தாச்சும்மா…” என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் போனாள்.
********
கிறிஸ்துமஸ்.
அம்மாச்சியின் வீடு களைகட்டியிருந்தது. அம்மாச்சியின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தனர். வள்ளி குடும்பத்தாரும் வந்திருந்தார்கள்.
தனி ஆளாக அம்மாவையும் பார்த்துக் கொண்டு, எல்லோருக்கும் சமைக்கவும் முடியாது என்பதால் களஞ்சியம் என்ற ஒரு பெண்ணை தற்காலிக வேலைக்கு அமர்த்தியிருந்தனர்.
மதுமதியும் களஞ்சியமும் ஒரே வயிற்றில் பிறக்காத அக்கா தங்கைகளாக, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர்.
மதுமதி, களஞ்சியத்தைக் கூப்பிட்டு, “அக்கா! நாப்பதாயிரம் சேந்துருச்சு…இந்த மாசம் முடிஞ்சதும் திருப்பூருக்குப் போயி வீட்டை ரிஜிஸ்டர் பண்ணனும். அம்மாவை அங்க கொண்டு போயி வைக்கனும்…அப்போ ஒரு வாரத்துக்கு நீ இருந்து அம்மாச்சிய பாத்துக்குறியா…” என்று கேட்டாள்.
“வள்ளியம்மா சாரு சொன்னா…இருக்கறேன்…கேட்டுப்பாரு…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மதுமதியின் போன் அடித்தது.
“யாரு போன்ல?” என்று களஞ்சியம் கேட்க,
“என் பெரிய மக தான்...பேசிட்டு வாரேன்” னு சொல்லிக்கொண்டே கொல்லைப்பக்கம் போனாள் மதுமதி. பத்து நிமிடம் ஆகியும் காணொமே என்று தேடிக் கொண்டு கொல்லைப்பக்கம் போனார் களஞ்சியம். அங்கே தேம்பித் தேம்பி அழுது கொண்டு மதுமதி உட்கார்ந்திருந்தாள்.
“ஏன்? என்னாச்சி?...” என்று களஞ்சியம் மதுமதியின் கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கேட்டார்.
“புருஷன் சண்டை போட்டார்னு, என் சின்ன பொண்ணு, புள்ளைய அழைச்சிகிட்டு, பெரிய மக வீட்டுக்கு வந்திருச்சாம். அவன் ஒரு குடிகாரப் பய…போட்டு அடிச்சிருக்கான். முன்னாடி ஒரு வாட்டி அப்படித்தான் நடந்துச்சி. ஒன்னும் சொல்லாம போயி வுட்டுட்டு வந்தேன். இந்த தடவை நான் போயி தான் இத தீத்து வைக்கனும்….”
“வீட்டுக்கு வீடு வாசப்படி. கவலைப்படாத..இதெல்லாம் ஊரு ஒலகத்துல நடக்கறது தான்….சாருட்ட கேட்டுட்டு போயிட்டு வா…நா பாத்துக்கறேன்…” என களஞ்சியம் ஆறுதலாகச் சொன்னார்.
மதுமதி திருப்பூருக்கு கிளம்ப ஆயத்தமானாள்.
அப்பொழுது, ஹாலில் ஒரே சத்தம்.
“மாமா!..ஒடியாங்க…அம்மாச்சிக்கு மூச்சுத் திணறல் மாதிரி இருக்கு…” என்று ஒரு பேரப் பிள்ளைச் சொல்ல, எல்லோர் முகத்திலும் பதட்டம் தொற்றிக் கொண்டது.
அங்குமிங்கும் ஓடினார்கள். ஒருவர் பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணினார். ஒருவர் ஆட்டோக்காரருக்குப் போன் செய்தார்.
அம்மாச்சியை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். திருப்பூருக்கு கிளம்ப இருந்த மதுமதி அம்மாச்சியின் மருந்து மாத்திரைகளையும், துணி மணிகளையும் எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றுவிட்டாள்.
களஞ்சியம் வீட்டு வேலைக்காக வீட்டிலேயே இருந்துவிட்டார்.
மணிமேகலையும், வள்ளியும் மற்றவர்களும் மாற்றி மாற்றி ஆஸ்பத்திரிக்கும் வீட்டிற்கும் அலைந்தார்கள். இரவு எட்டு மணியானதும், அம்மாச்சியின் இன்னொரு மகளும் மதுமதியும் மட்டும் ஆஸ்பத்திரியில் தங்கினார்கள். மற்றவர்கள் வீடு திரும்பிவிட்டார்கள்.
இரவு பதினொரு மணி இருக்கும். அப்பொழுது மதுமதியின் மொபைல் ஒலித்தது. எடுத்துப் பேசப் பேச மதுமதியின் முகம் மாறிக்கொண்டேயிருந்தது.
“என்ன?..” என்று கூட இருந்த அம்மாச்சியின் இன்னொரு மகள் கேட்டார்.
“ எங்க அம்மாவுக்கு ஒடம்பு முடியலயாம்…ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகனுமாம்…பெரிய மவ போன் பண்றா…”
“என்ன செய்யப் போற?...”
மறுபடி மதுமதியின் போன் அடித்தது.
“ பாப்பா! ஒரு ஆம்புலன்ஸை கூப்பிட்டு பெரியாஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போ…ஒன் போனுக்கு இருபதாயிரம் பணம் அனுப்பி வைக்கிறேன்…மதுரை மாமாவுக்கு போன் பண்ணி வரச் சொல்லு…நான் இப்போ இங்கிருந்து வர முடியாது. அம்மாச்சி இழுத்துக்க பறிச்சிக்கன்னு இருக்காங்க…” என்று சொல்லி விட்டு, முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள் மதுமதி.
வீட்டை ரிஜிஸ்டர் பண்ணுவதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை அனுப்பி வைத்தாள்.
மனம் அல்லாடியது.
அம்மாச்சிக்கு கையில் ஏறிக்கொண்டிருந்த மருந்து பாட்டில் தீர்ந்து போக, அதை ஒரு நர்ஸைக் கூப்பிட்டு மாற்றச் சொன்னாள்.
இரவின் அமைதி அவளின் உள்ளத்தின் பதற்றத்தைக் குறைக்கவில்லை.
அடுத்த நாள்.
வள்ளியின் கணவர் ஆஸ்பத்திரிக்கு வந்து, விஷயத்தைக் கேள்விப்பட்டு, “நீ திருப்பூருக்குப் போய்…உன் அம்மாவைப் பார்…வீட்டை ரிஜிஸ்டர் செய்து விட்டு வா…” என்று சொல்லியும், மதுமதி
“இல்ல சார்…அம்மாச்சிய வீட்டுல விட்டுட்டு வேணா நா அப்பறம் போறேன்..” என்று சொல்லிவிட்டாள்.
மூன்று நாட்கள் கழித்து அம்மாச்சி, ஒரு மாதிரியாக தேறியதும், வீட்டுக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் முந்தைய மாதிரி இல்லை. தூங்கிக் கொண்டேயிருந்தார்.
வள்ளி, “மதுமதி! நீ கெளம்பு. இந்தா இருபதாயிரம் வச்சிக்க…உன் சின்ன மவ பிரச்னையைத் தீர்த்துட்டு, வீட்டை ரிஜிஸ்டர் செஞ்சிட்டு, அம்மாவை கவனிச்சிட்டு மெதுவா வா…” என்று சொல்லி மதுமதியை திருப்பூருக்கு கிளப்பிவிட்டார்.
********
திருப்பூர்.
வீடு ரிஜிஸ்டர் நல்லபடியாக முடிந்தது. சின்ன மகளின் மாமனாரை அழைத்து, பிரச்னையைப் பேசி, மருமகனை கண்டிக்க வைத்து, மறுபடி குடும்பத்தோடு சேர்த்து விட்டாள்.
வாங்கிய புது வீட்டில் கொஞ்சம் மராமத்து வேலை இருப்பதால், அம்மாவை பழைய வாடகை வீட்டிலேயே இருக்க வைத்து விட்டு தஞ்சாவூருக்கு கிளம்பி வந்தாள்.
அம்மாச்சி அதிக நேரம் தூங்கிய படியே இருந்தார்.
டாக்டரை வீட்டிற்கே அழைத்து சோதனை செய்தார்கள். அவர் சில மாத்திரைகளை மாற்றி எழுதிக் கொடுத்தார்.
அம்மாச்சி தூங்கிக் கொண்டிருக்கும் போதே, மதுமதி சாப்பாட்டை பிசைந்து வாயில் வைத்து திணித்து ஊட்டி விட்டார். தூங்கிக் கொண்டிருக்கும் போதே, குளிப்பாட்டி விட்டார்.
மதுமதி கவனிப்பில் அம்மாச்சி மறுபடி நன்றாக விழித்து, நன்றாக உணவு உண்டு, நன்றாக பேசும் நிலைக்கு வந்தார்.
அம்மாச்சியின் பிறந்த நாள் வந்தது. அதைக் கொண்டாடுவதற்காக அவரது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்தனர்.
அம்மாச்சிக்குப் பிடிக்கும் என்று மட்டன் கொழும்பு வைத்தார்கள். மற்றவர்களுக்கு மட்டன் பிரியாணி. நண்டும் இராலும் வறுத்திருந்தார்கள்.
மதுமதி கொஞ்சமாக சாப்பாட்டைப் போட்டு, மட்டன் கொழம்பு ஊற்றி, அம்மாச்சிக்குப் பிடிக்கும் என்று சிறிய எலுமிச்சை ஊறுகாயை வைத்து, கடிக்க முடிகிறாற் போல சில மட்டன் துண்டுகளை வைத்து, அம்மாச்சியை எழுப்பினார்.
அம்மாச்சி எழும்பவில்லை.
“சார்ர்ர்ர்ர்!…..” என்று கத்த, தட்டு கீழே விழுந்து மட்டன் கொழம்பு ஊற்றிய சோறும் மட்டன் துண்டுகளும் தரையில் சிதறியது.
கோயிலுக்கும், கல்லறைக்கும், பந்தலுக்கும், ஃப்ரீசர் பாக்ஸ்க்கும், மாலைக்கும், நாற்காலிக்கும் என ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.
அம்மாச்சியின் கால்மாட்டில் மதுமதி உட்கார்ந்திருந்தாள். மதுமதியின் கன்னத்தைத் தொட்டு கொஞ்சும் அம்மாச்சி இல்லை என்று உணர்ந்து, கண்ணீர் தாரை தாரையாக ஊற்றிக் கொண்டிருந்தது.
அப்பொழுது மதுமதிக்கு போன் வந்தது. பெரிய மகளிடமிருந்து போன் வந்ததால் போனை எடுத்துக் கொண்டு கொல்லைப் புறம் போனாள் மதுமதி.
“அம்மா!…அம்மாயி….செத்துட்டாங்கம்மா…”
மதுமதி தலை சுற்றி அப்படியே மண்ணில் உட்கார்ந்தாள். போன் ஆன் பண்ணியே இருந்தது, “அம்மா…அம்மா…அம்மா..” என்றபடி இருந்தது. எடுத்து, “அம்மாவை புது வீட்டுல கொண்டு போயி வையி. எல்லாருக்கும் போன் பண்ணு…” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் வந்தாள்.
அம்மாச்சியை அடக்கம் செய்த மூன்றாம் நாள் தான் திருப்பூருக்கு பஸ் ஏறினாள்.
*********



Comments