அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த 100% மருந்து வரி – ஆஸ்திரேலிய மருந்துத் தொழிலுக்கு பெரிய அதிர்ச்சியா?
- உயிர்மெய்யார்

- 5 days ago
- 2 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதியன்று ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார். பேட்டன்ட் செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களுக்கு 100% வரி (100% tariff) விதித்துள்ளார். இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு மருந்து உற்பத்தியை வலுப்படுத்தும் நோக்கில் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்
ஆஸ்திரேலியாவுக்கு இது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? மெல்போர்ன் சார்ந்த CSL நிறுவனம் உள்ளிட்ட ஏற்றுமதியாளர்களுக்கு என்ன நடக்கும்? ஆஸ்திரேலியர்களின் PBS திட்டம் மற்றும் மருந்து விலை பாதிக்கப்படுமா? என்றெல்லாம் இந்த செய்தித் தொகுப்பில் காண இருக்கிறோம்.
வரலாறு – டிரம்பின் மருந்து வரி கொள்கை
டொனால்ட் டிரம்ப் முதல் முறை அதிபராக இருந்தபோதே, அதாவது 2017 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்த போதே, மற்ற நாடுகளிலிருந்து அமெரிக்கா மருந்துகளை அதிக விலைக்கு வாங்குவதால், அமெரிக்கர்கள் அதிக விலை கொடுத்து மருந்துகளை வாங்க வேண்டியதாகக் கூறினார். “அமெரிக்கர்கள் அதிக விலை கொடுக்கிறார்கள், மற்ற நாடுகள் குறைந்த விலையில் வாங்குகின்றன” என்று கூறினார்.
2025 ஆம் ஆண்டில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு MFN பாலிஸி என்கிற Most Favored Nation Policy -யை அறிமுகப்படுத்தினார். அது என்ன Most Favored Nation Policy?
தற்போது கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற OECD என்ற வளர்ந்த நாடுகளில் குறைந்த விலையில் கிடைக்கும் அதே பிராண்ட் மருந்துகளுக்கு, அமெரிக்காவில் மக்கள் மிக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. டிரம்பின் வாதம் என்னவென்றால், அமெரிக்கா உலகின் பெரும்பாலான மருந்து ஆராய்ச்சிக்கு பணம் செலவழிக்கிறது. ஆனால் மற்ற நாடுகள் குறைந்த விலையில் வாங்குகின்றன. அமெரிக்காவில் அதே மருந்துகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. இது நியாயமா எனக்கேட்டு அதற்கு தீர்வாக Most Favored Nation கொள்கையைக் கையிலெடுக்கிறார்.
அதனால், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று அமெரிக்க வர்த்தகச் சட்டம் Section 232-ன் கீழ் நூறு சதவிகித வரியை விதித்தார்.
அதன்படி உலகின் பல வளர்ந்த நாடுகளில் அதே மருந்துக்கு செலுத்தப்படும் மிகக் குறைந்த விலை அடிப்படையில் அமெரிக்க விலையும் நிர்ணயிக்கப்படும். முதலில் பெரிய மருந்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, MFN விலையில் மருந்துகளை அமெரிக்க அரசு திட்டங்களுக்கு (Medicaid போன்ற திட்டங்களுக்கு) வழங்க ஒப்புக்கொள்ளச் செய்கிறார்கள்.
காப்புரிமை செய்யப்பட்ட (பேட்டன்ட் செய்யப்பட்ட) Branded மருந்துகளுக்கு நூறு சதவித வரி விதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல அந்த Branded மருந்துகளின் மூலப்பொருட்களுக்கும் நூறு சதவித வரி விதிக்கப்படுகிறது. அப்படி ஒப்பந்தம் செய்யாத நிறுவனங்களுக்கு 100% வரி விதிக்கப்படும்.
ஆனால், MFN விலை ஒப்பந்தம் செய்து அமெரிக்காவில் தொழிற்சாலை கட்டும் நிறுவனங்களுக்கு, வரி தள்ளுபடி அல்லது மிகக் குறைந்த வரி, சில சமயம் சுழியம் சதவீதம் zero percentage வழங்கப்படும். அமெரிக்காவில் உற்பத்தி திட்டம் உள்ள நிறுவனங்களுக்கு 20% வரி விதிக்கப்படும். ஆனால், 2030-க்குள் அது 100% ஆக உயரும்.
இந்த வரி விதிப்பு பேட்டன்ட் செய்யப்பட்ட பிராண்ட் மருந்துகளுக்குத்தான். ஜெனரிக் மருந்துகளுக்கு பெரும்பாலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தம், இதன் வரிவிதிப்பின் நோக்கம், அமெரிக்காவில் மருந்து உற்பத்தியை அதிகரிப்பதும் மற்றும் மருந்தின் விலைகளைக் குறைப்பதும் ஆகும்.
ஆஸ்திரேலியாவுக்கு என்ன தாக்கம்?
ஆஸ்திரேலியா, ஓர் ஆண்டுக்கு ஏறத்தாழ 1.3 முதல் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்), 200 கோடி ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள மருந்துகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இது நமது முக்கிய ஏற்றுமதிகளில் ஒன்று. எடுத்துக்காட்டாக, மெல்பர்னைத் தலைமையகமாகக் கொண்ட CSL நிறுவனம் ஆஸ்திரேலிய ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கிறது. அது இரத்த பிளாஸ்மா மருந்துகளை உற்பத்தி செய்கிறது. அந்த CSL நிறுவனத்தின் பெரும்பாலான ஏற்றுமதி அமெரிக்காவில் இருந்து பெறப்படும் பிளாஸ்மாவால் உருவாக்கப்படுகிறது. அந்த நிறுவனம் அமெரிக்காவில் $1.5 பில்லியன், சுமார் 150 கோடி ஆஸ்திரேலிய டாலர்களை முதலீடு செய்து தொழிற்சாலையை விரிவாக்கம் செய்துள்ளது. ஆகவே இந்த வரி விதிப்பினால் ‘பெரிய தாக்கம் இல்லை’ என்று CSL நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரிவிதிப்பின் விபரங்களை நுணுக்கமாக ஆய்வதாகவும், இந்த வரிவிதிப்பின் விளைவுகளைக் காணப்போகும் மருந்துக் கம்பெனிகளின் அதாவது அமெரிக்காவுடன் ஏற்றுமதி இறக்குமதி வணிகம் செய்யும் மருந்து கம்பெனிகளின் வியாபாரம் குறித்தும் அக்கம்பெனி பணியாளர்களின் வேலை குறித்தும் அக்கறை கொண்டுள்ளோம் என்றும் இதனால் மருந்துகளின் விலையில் எந்த வித மாற்றமும் இருக்காது என்றும் சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் இது சரியான முடிவு இல்லையென்றும், வெற்றிகரமாக இருபது வருடங்களுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பங்காளியிடமிருந்து (Free Trade agreement partner-இடமிருந்து) இதை எதிர்பார்க்கவில்லையென்றும், அமெரிக்க அரசாங்கம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் குறிப்பிட்டார்.
டிரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை வலுப்படுத்தும் என்று அவர் கூறுகிறார். ஆனால் உலக வர்த்தகத்தில் அது புதிய சவால்களை உருவாக்கும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. இந்தச் சூழலிலும் ஆஸ்திரேலியா தனது PBS என்கிற Pharmaceutical Benefits Scheme திட்டத்தை விடாமல் பாதுகாப்பதன் மூலம், மருந்துகளின் விலை ஏறாமல் காத்து வருவது ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நல்ல செய்தி தான்.
********



Comments