இனி - சிறுகதை - உயிர்மெய்யார் - 14.03.2026
- உயிர்மெய்யார்

- 3 hours ago
- 4 min read

அவள் பெயர் ஒரு விசித்திரமான பெயர்.
சென்னையில் லெட்சுமி குப்பம் என்கிற பகுதி போரூர் அருகே மிகவும் பிரசித்திப் பெற்ற இடம். சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஆற்காடு ரோட்டில் பிரிகிற ஒரு கிளைச் சாலையில் துவங்குகிற லெட்சுமி குப்பம் நீண்டு விரிந்து பரந்து கோயம்பேடு மார்கெட் வரைச் செல்லும். அந்த லெட்சுமி குப்பத்தில் தான் இருக்கிறது அவள் வீடு.
கல்யாணம் கட்டிக் கொண்டு இந்த வீட்டிற்கு வந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன. கணவன் குடித்துக் குடித்தே இறந்து விட்டதால், ஒன்பதாவது படிக்கும் மகளுடன் அவள் புகுந்த வீட்டிலேயே தான் குடித்தனம். இரண்டு வருடங்களாகத்தான் சில வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்க்கப் போகிறாள். அவளுக்கு நாற்பது வயதிருக்கும்.
*******
‘நேத்து சுட்ட இட்லியில உப்புமா செஞ்சிருக்கேன். சாப்புடு. ஆட்டோ வந்தோன்ன ஏறி இஸ்கூலுக்கு போயிட்டு, பத்திரமா வரனும். சரியா மொவளே?’ என்று சொல்லிவிட்டு, ‘அந்த பிஸ்கட் பாக்கெட் ஒன்னு குடுப்பா’ என்று பக்கத்துக் கடையில் வாங்கி, மொபைல் வைத்திருந்த சின்னப் பையில் போட்டுக்கொண்டு விறுவிறுவென்று நடந்தாள். அடுத்து நாயர் கடையில் இட்லியும் காபியும் வாங்கிக்கொண்டாள்.
*******
‘அம்மா! கார்ப்பரேஷன் பைப்புல நாலு கொடம் தண்ணி பிடிச்சிட்டு வந்து வச்சிட்டேன். வெள்ளிக்கெழமங்றதால வீட தொடச்சிட்டேன். பாத்திரம் கழுவி வச்சிட்டேன். தம்பி இன்னும் ஏந்திரிக்கல. ஒங்களுக்கு நாயர் கடையில இட்லியும் காபியும் வாங்கியாந்திருக்கேன். செட்டியார் வீட்டுக்குப் போவனும்..ஏற்கனவே நேரம் ஆச்சி…வரம்மா’ என்று சொல்லி விட்டு அவள் அவசரம் அவசரமாக முந்தானையில் கையைத் துடைத்துக்கொண்டு வெளியில் கிளம்பினாள்.
‘இந்தா! கொஞ்சம் நில்லு. ஒன்னுட்ட ஒன்னு கேக்கனும்’ வீட்டுக்கார அம்மா நிறுத்தினார்.
‘சட்டுபுட்டுன்னு கேளுங்க டீச்சரம்மா’
‘ஒன்னுமில்ல…தம்பி ஐடி கம்பெனியில வேலை செய்றான். ராத்திரி பூரா வேலை செஞ்சிட்டு காலையில நாலு மணிக்கு தான் வீட்டுக்கு வருவான். அதான் உனக்கு தெரியுமே! நல்ல சம்பளம். ஆனா வயசு முப்பத்திரெண்டு ஆயிடுச்சி…’
‘ஐயோ…சீக்கிரம் கேட்டு தொலையேன். தெரிஞ்ச கதையையே சொல்லிகிட்டு இருக்கியே..’ என்ற வாக்கியம் அவளின் முகத்தில் படர்ந்தது. ஆனால் வாயை விட்டு வெளியே வரவில்லை.
‘கல்யாணம் வேணாங்கறான்…நீயே சொல்லு…கல்யாணம் பண்ணாம ஒரு ஆம்பள எப்படி இருக்கமுடியும்?’
‘அதுக்கு நான் என்ன செய்றது…போயிட்டு வாரேன்…’ என்று சொல்வது போல, வாய் விட்டுச் சொல்லாமல், ஒரு நமட்டுச் சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு கேட்டை நோக்கித் திரும்பினாள்.
‘இந்தா…கொஞ்சம் நில்லு. அப்படி என்ன அவசரம்? நானும் ரிட்டையர் ஆகிட்டேன். அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாமா? இல்லையா? கவலையே இல்லாம அவரு போய் சேர்ந்துட்டாரு. நீயே சொல்லு. கல்யாணம் பண்றது நல்லதா இல்லையா?’
‘அம்மா! இப்ப போயிட்டு வாரேன்…சவகாசமா நாளைக்குப் பேசுவோம். நீங்க மாத்திரையை போட்டுக்குங்க. சாப்பிடுங்க..’ என்று சொல்லிவிட்டு அவள் ஓட்டமும் நடையுமாக கேட்டைத் திறந்துக் கொண்டு ஓடினாள்.
******
‘ஒனக்கு இதே பழக்கமா பூடிச்சி…அந்த ஆளு வெளியில போறதுக்கு முன்னாடி வந்துடு..வந்துடுன்னு எத்தன தடவச் சொல்றது. ஒரு வீட்டுக்குப் போனமா, வேலைய முடிச்சமா, அடுத்த வீட்டுக்குப் போனமான்னு இருந்தா தான நல்லது. யாராவது பேசிகிட்டே இருந்தா, காலங்காட்டியும் வாயப் பாத்துட்டே நிக்கறது. இல்லாட்டி கதைப் பேசிக்கிட்டே இருக்கறது. உருப்புட்டாப்புலத் தான் போ!’
செட்டியாரம்மா திட்டினாலும் இவளுக்குக் கோபம் வராது.
அவளுக்கு எதையாவது கொடுத்துக் கொண்டே இருப்பார். நேற்றையக் கொழம்பு, மீந்து போன காய்கறி, ரொம்ப நாள் ஆன மளிகைச் சாமான், பல நாள் பயன்படுத்திய தட்டு முட்டுச் சாமான்…இப்படி எதையாவது கொடுத்துக் கொண்டே இருப்பார். ஒரு தடவை பழைய பட்டுப்புடைவையைக் கூட கொடுத்திருக்கிறார்.
அதனால் மட்டும் அல்ல. அவரது மகன் ஒருவர் சினிமாத்துறையில் பின்னணிப் பாடல் பாடுபவர். முன்னணி கதாநாயகர்கள், கதாநாயகிகள், நடிகர் நடிகையர்கள் என எல்லோருடனும் பழகுபவர். அவர்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார். செட்டியார் ஒரு வட்டிக் கடை வைத்திருக்கிறார். நகைகள் மட்டுமல்ல, செம்பு பாத்திரங்களைக் கூட வாங்கிக்கொண்டு பணம் கொடுப்பார்.
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, செட்டியாரம்மா எது பேசினாலும் எதிர்த்து பேசாமல், வீட்டு வேலைகளைச் செய்வாள் அவள்.
பாத்திரங்களை டிஷ்வாஷரில் போட்டு ஓடவிட்டாள். துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு டைமரை ஆன் செய்தாள். பக்கத்தில் ரிலையன்ஸ் ஃப்ரஷ் கடைக்குச் சென்று பழையக் காய்கறிகளை வாங்கி வந்து கொடுத்து விட்டு, கிளம்பினாள்.
‘கெளம்பிட்டியா?’
‘ஆமா ஆச்சி! ஷேர் ஆட்டோ புடிச்சி வளசரவாக்கம் போகனும். நா போயி கால சாப்பாடு செஞ்சாத்தான் மாடிவீட்டுகாரங்கப் புள்ளங்க இஸ்கூலுக்குக் கெளம்பிப் போவுங்க’ முந்தானையை சரிசெய்து கொண்டு, தலைமுடியை மறுபடி பிரித்து ஒரு உதறு உதறிவிட்டு, கிளம்பினாள்.
‘இந்தா…போன வாரம் பையன் சாக்லேட் வாங்கிட்டு வந்தான். இதப் போயி ஓன் மகள்ட்ட குடு. அதோட ராத்திரி ராகி புட்டு செஞ்சேன். அதையும் எடுத்துட்டுப் போ ’ என்று நீட்டினாள்.
அவைகளை வாங்கிக்கொண்டு செருப்பைப் போட்டாள்.
‘ஒன்னுட்ட ஒன்னு கேக்கனும்.’
‘என்ன ஆச்சியம்மா?’
‘பையனுக்கு கழுத வயசு ஆயிடுச்சி…சினிமா, பாட்டு, அது இதுன்னு சுத்திகிட்டு இருக்கான். கல்யாணத்தப்பத்தி பேசுனா கடுப்பாயிடுறான். இந்த வயசு பையன்ங்க ஏன் இப்படி இருக்கறாங்க?’
ஒரு புன்னகையைப் பதிலாகக் கொடுத்து விட்டு நகர முயன்றாள்.
‘கால்ல சுடுதண்ணி ஊத்திட்டு தான் வருவ. பதில சொல்லிட்டுப் போ…’ஒங்க காலத்துல தான் கல்யாணம், கில்யாணம் எல்லாம்…பேசாம இருங்க’ன்னு சொல்றான்..கல்யாணம் கட்டாம ஒருத்தன் இருக்கலாமோ?’
******
ஷேர் ஆட்டோ பத்துப் பதினைந்துப் பேரை சுமந்துக் கொண்டு காற்றில் விரைந்துக் கொண்டிருந்தது. டீச்சரம்மா அவர் பையனைப் பற்றிக் கேட்டதும், ஆச்சியம்மா அவர் பையனைப் பற்றிக் கேட்டதும் தலையில் குடைய, யோசனையில் சென்று கொண்டிருந்த அவள், காற்றில் பறக்கும் தலைமயிரை ஒதுக்கியவாறு, இறங்க வேண்டிய இடத்தில் இறங்கினாள்.
மாடிப்படி ஏறினாள்.
வழக்கம் போல மாடிவீட்டு அம்மாவின் நாய் வாலை ஆட்டிக் கொண்டு வந்து வரவேற்றது. ஞாபகமாக அவள் வாங்கிவைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்துக் கொடுத்தாள். உள்ளே சென்று தோசை சுட ஆரம்பித்து விட்டாள்.
‘தஞ்சாவூர்லேர்ந்து தங்கச்சி பையன் வந்திருக்கான். அவனுக்கும் சேத்து தோசைய ஊத்து’ என மாடிவீட்டு அம்மா சொல்ல, ‘மொறு மொறுன்னா? தண்டியாவா?’ என தோசை மாவை ஊற்றிக் கொண்டே கேட்டாள்.
‘மொறு மொறுன்னே ஊத்து. நம்ம சாப்ட மாதிரியா இப்ப உள்ள பசங்க சாப்டுறானுங்க…’ என்று சொல்லிவிட்டு பிள்ளைகளைப் பள்ளிக்கு கிளப்பிவிட்டுக்கொண்டிருந்தாள் மாடிவீட்டம்மா.
தஞ்சாவூர் பையன் வந்தான். சாப்பிட்டான். குனிந்த தலை நிமிரவில்லை. ஏதும் பேசவில்லை. அவன் ரூமுக்கு போய்விட்டான். எல்லாரும் சாப்பிட்டார்கள். பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள்.
இவள் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தாள்.
‘ஏதோ வேலைக்கு இன்டர்வியூவாம். நேத்து ராத்திரி ரயில் ஏறி காலையில எக்மோர் வந்திருக்கான்.’
இவள் ஒன்றும் பேசவில்லை.
‘தங்கச்சி, தஞ்சாவூர் பெரியாஸ்பத்திரியில நர்ஸா இருக்கா.’
பாத்திரம் கழுவறதுலேயே கவனமாக இருந்தாள் இவள்.
‘அவன ரயில் ஏத்திவிட்டு ஒரு மணி நேரம் போன்ல ஒரே அழுகை’
‘என்னவாம்’ என்பது போல தலையை உயர்த்தி மாடிவீட்டு அம்மாவைப் பார்த்தாள்.
‘இவனுக்குத் தங்கச்சி ஒருத்தி இருக்கா. இவனுக்கும் கல்யாணம் ஆகல…அவளுக்கும் ஆகல. கல்யாணம் பேச்ச எடுத்தா மொறைக்கிறானாம்.’
‘இங்கயுமா!’ என்று அவள் மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டாள்.
‘கேளு! நான் அவன்ட்ட பேசனுமா? என்னத்த பேசறது..வந்ததுலேர்ந்து அவன் ஒரு வார்த்தை பேசல. உம்முன்னு இருக்கான்.’
கடைசி பாத்திரத்தைக் கழுவி வைத்து விட்டு, சேலையில் துடைத்துக்கொண்டாள்.
‘நீயே சொல்லு…கல்யாணம் பண்ணாம இருக்கலாமா?’
********
வீட்டில் டிவி ஓடிக்கொண்டிருந்தது.
சுவர் ஓரம் தலையணையைச் சாத்தி அதன் மேல் சாய்ந்துக் கொண்டு சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். மகள் வீட்டுப்பாடம் ஏதோ செய்துக் கொண்டிருந்தாள்.
‘அம்மா! பசிக்குது…’
‘ஆச்சி கேப்பை புட்டு குடுத்து உட்டாங்க. தண்ணி கொடத்துகிட்ட வச்சிருக்கேன் பாரு. எடுத்து துண்ணு’
‘நீ துண்ணல?’
‘தல வலிக்குது….பசிக்கல.’
‘அப்படியே துண்ணாம துண்ணாம இருந்து…நீயும் என்ன வுட்டுட்டுப் போயிடு…அப்பறம் நானும் இஸ்கூலுக்குப் போகாம, வீட்டு வேலை செஞ்சி, கல்யாணம் பண்ணாம…’
‘ஏய் நிறுத்து…நீயும் கல்யாணத்தப் பத்தி இழுக்காத…’
‘வேற யாரு இழுத்தா?’
‘அத ஏன் கேக்கற? டீச்சரம்மா, அவங்கப் பையனை நெனச்சி ‘கல்யாணம் பண்ணாம இருக்கறது ஒரு வாழ்க்கையா?’ன்னு கேக்கறாங்க. செட்டியார் வூட்டு ஆச்சியம்மா, அவங்கப் பையனை நெனச்சி ‘கல்யாணம் பண்ணாம இருக்கறது ஒரு வாழ்க்கையா?’ ன்னு கேக்கறாங்க. மாடிவூட்டம்மா, அவங்க தங்கச்சிப் பையனை நெனச்சி ‘கல்யாணம் பண்ணாம இருக்கறது ஒரு வாழ்க்கையா?’ ன்னு கேக்கறாங்க.’
‘மூணு பேரும் ஒரே கேள்வியத்தான கேக்கறாங்க. ஒரே பதில சொல்லிட்டு வரவேண்டியதுதான…’ என்று புட்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டே மகள் கேட்டாள்.
‘அப்படி ஒரே பதில சொல்லக்கூடாதும்மா. நான் நாலு இடம் போறதுனால, அங்கங்க பேசறத கோத்து, அவங்க அவங்க சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி பதில் சொல்லனும்.’ என்றாள் அவள்.
அவள் பெயர் அறிவு இனியாள். ஆங்கிலத்தில் Arivu Iniyal. சுருக்கமாக AI என்று அழைப்பார்கள்.
******



Comments