ஆஸ்திரேலிய பிரதமர் அறிவித்த சூதாட்ட விளம்பர பகுதித் தடை – குழந்தைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையா?
- உயிர்மெய்யார்

- Apr 8
- 3 min read

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese National Press Club-ல் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சூதாட்ட விளம்பரங்களுக்கு பகுதித் தடையென்றும் இது ஆஸ்திரேலிய வரலாற்றில் மிக முக்கியமான சீர்திருத்தம் என்றும் அவர் கூறினார். ஆனால் பலர் இதை ‘போதாது’ என்று விமர்சிக்கிறார்கள். இந்தச் செய்தித் தொகுப்பில், இந்தத் தடை என்ன? ஏன் இந்தத் தடை வந்தது? இதனால் ஆஸ்திரேலிய சமூகத்துக்கு என்ன பயன் என்று பார்ப்போம்.
அப்படி என்னென்னத் தடைகளை பிரதமர் அந்தோணி அல்பானீசி அறிவித்தார்?
தொலைக்காட்சியில், காலை 6 மணி முதல் மாலை 8:30 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ‘மூன்று விளம்பரங்கள்’ மட்டுமே அனுமதிக்கப்படும். Live sports நேரடி விளையாட்டு ஒளிபரப்பு நடத்தும் போது, எந்த சூதாட்ட விளம்பரமும் அனுமதி கிடையாது என்றும்,
வானொலியில், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் நேரமான காலை எட்டிலிருந்து ஒன்பது மணிக்குள்ளும் மற்றும் அவர்களைப் பள்ளியிலிருந்து திரும்ப அழைத்து வரும் நேரமான மாலை 3-4 மணிக்குள்ளும், சூதாட்ட விளம்பரங்கள் ஒளிபரப்ப முழு தடை விதிக்கப்படுகிறது என்றும்
சூதாட்ட விளம்பரங்களில் பிரபலங்களும் (Celebrities) விளையாட்டு வீரர்களும் பங்கேற்க தடை செய்யப்படுவதாகவும், மேலும் விளையாட்டு மைதானங்களில் சூதாட்ட பிராண்டிங் போட்ட ஜெர்சி மற்றும் யூனிஃபார்ம் போன்ற உடைகளை அணிய தடை விதிக்கப்படுகிறது என்றும் பிரதமர் அந்தோணி அல்பானீசி அறிவித்தார்.
இணைய வழி சினிமா, வெப்சீரீஸ், மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் streaming platforms மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவகைளில் சூதாட்ட விளம்பரங்கள் செய்யவேண்டுமென்றால் அந்த ஊடகங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் log in செய்யவும், விருப்பமில்லையென்றால் opt out செய்து வெளியேறும் வசதியோடும் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
கூடுதலாக, Pocket pokies, ஆன்லைன் கீனோ போன்றவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன் சூதாட்டத்தை விளையாட்டுடன் இணைக்கும் விளம்பரங்களும் கட்டுப்படுத்தப்படும்.
இந்த பரிந்துரைகள், விக்டோரியா மாநில Dunkleyன் காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் Peta Murphy தலைமையிலான பாராளுமன்ற அறிக்கைக்கு (You Win Some, You Lose More) பதிலாக வந்த “பகுதி சீர்திருத்தம்” ஆகும்.
பிரதமர் அல்பானீஸ் அறிவித்த முக்கிய நடவடிக்கைகள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்.
அவை 2027 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்.
சரி ஏன் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
அதற்கு சில தரவுகளை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். உலகிலேயே ‘ஒரு நபருக்கு அதிக சூதாட்ட இழப்பு’ கொண்ட நாடு எது என்று கேட்டால் அது ஆஸ்திரேலியாவாக இருக்கிறது. ஓர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 3200 கோடி டாலர் (அதாவது 32 பில்லியன் டாலர்) சூதாட்டங்களில் ஆஸ்திரேலியர்கள் இழக்கிறார்கள்.
ஏறத்தாழ 30 இலட்சம், அதாவது 3 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் சூதாட்டத்தால் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிகிறது.
தொலைக்காட்சி, வானொலி, இணையம், சமூக ஊடகங்கள், streaming platforms, மற்றும் நேரடி விளம்பரங்கள் என்று எங்கு திரும்பினாலும் வருகிற சூதாட்ட விளம்பரங்கள் குழந்தைகளை திக்குமுக்காட வைக்கின்றன. அப்படிப்பட்ட சூழலில் வளரும் பிள்ளைகள் சூதாட்ட விளையாட்டுக்களுக்கு அடிமையாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அது மட்டுமா? குடும்பத்தில் வன்முறைகள் நடக்கவும், தனி நபர்கள் மன அழுத்தத்திற்கு ஆட்படவும், தற்கொலைக்கு அவர்களைத் தள்ளி விடவும் சூதாட்டமே பெரும் காரணமாக அமைகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
பெரியவர்கள் விரும்பினால் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடட்டும். ஆனால் திரும்பும் இடமெல்லாம் சூதாட்ட விளம்பரங்களைப் பார்க்கும் சூழல் குழந்தைகளுக்கு அமையக்கூடாது என்றும் footy விளையாட்டும் சூதாட்டமும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை என்று குழந்தைகள் நினைத்து வளர்வதை நாங்கள் விரும்பவில்லை என்றும் பிரதமர் கூறினார்.
ஆனால் சில விமர்சனங்களும் இருக்கின்றன.
Greens, சில சுயேச்சைகள், மற்றும் சூதாட்ட எதிர்ப்பு அமைப்புகள் “இந்த நடவடிக்கைகள் போதாது என்றும் முழு தடை வேண்டும் என்றும் கோருகின்றன. ஆன்லைன் விளம்பரங்களுக்கு நிறைய இடம் கொடுக்கப்படுகிறது. அவை வாயிலாகவும் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்று அவர்கள் வாதிடுகின்றனர். பெட்டா மர்பி அறிக்கை முழு ஆன்லைன் தடையைப் பரிந்துரைத்தது என்றும் ஆனால் அரசு அதை முழுமையாக ஏற்கவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட விவாதங்கள் நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் ஊடக நிறுவனங்கள் தங்கள் வருமானத்தில் இழப்பு ஏற்படும் என கவலைப்படுவதாகவும் கருத்து எழுந்துள்ளது.
பிரதமர் சூதாட்ட விளம்பரங்களுக்கு உண்மையான முழுத் தடையை விதிப்பதை முழுமையாகத் தவிர்த்துவிட்டார் என்றும் சூதாட்டத் தொழில்துறையை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் துணிவு அவருக்கு இல்லை என்றும் தேசிய அளவிலான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க அவர் தவறிவிட்டார் எனவும் Liberal senator Sarah Henderson கருத்து தெரிவித்தார்.
தமிழ்ச் சமூகம் உள்ளிட்ட ஆஸ்திரேலிய சமூகத்தில் இவை என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று சற்றுப் பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவில் பல தமிழ்க் குடும்பங்கள், கிரிக்கெட், AFL, soccer போன்ற விளையாட்டுகளை ரசிக்கின்றனர். இந்த நடவடிக்கைகளினால், சூதாட்டத்தை நினைவு கூறும் ஜெர்சி போன்றவைகளை அணியாமல் இருப்பதாலும், விளையாட்டு மைதானங்களில் சூதாட்ட விளம்பரங்கள் குறைவதாலும், வருங்கால மன்னர்களான குழந்தைகள் சூதாட்ட வலையில் சிக்காமல் போக நிறைய வாய்ப்பிருக்கிறது.
குழந்தைகள் மட்டுமல்ல, இளைஞர்கள், சிறு தொழில் செய்பவர்கள், குடும்பத் தலைவர்கள் ஆகியோர் சூதாட்டப் பழக்கம் காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்பின்றி வளம் பெறவும் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறையவும் வாய்ப்பிருக்கிறது. இது நமது அடுத்த தலைமுறையைப் பாதுகாக்கும் நல்ல தொடக்கமாகவேப் பார்க்கப்படுகிறது.
*****



Comments