ஆஸ்திரேலியாவின் காட்டு சின்னம்: டிங்கோ – வேட்டையாடி, துணை, சர்ச்சை
- உயிர்மெய்யார்

- Mar 30
- 2 min read

ஆஸ்திரேலியாவின் பன்முக நிலப்பரப்பையும், சமூகத்தையும், உயிரினங்களையும் பற்றித் தெரிந்துக்கொள்ளும் ஒரு வகையாக, ஆஸ்திரேலியாவின் சின்னமாக விளங்கும் ஓர் விலங்கு குறித்து இன்றைக்கு இன்னும் ஆழமாகத் தெரிந்துக் கொள்ளப் போகிறோம்.
என்ன விலங்காக இருக்கும்? நான் ஒரு துப்பு கொடுக்கிறேன். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். அந்த விலங்கு, மற்ற விலங்குகளை வேட்டையாடி கொன்று தின்கின்ற ஒரு Predator. ஆனால் அதே நேரம் மனிதர்களோடு கூடவே பயணிக்கும் துணை எனவும் சொல்லப்படுகிறது. இப்படி பல சர்ச்சைகளுக்கு ஆட்படுகிற விலங்கு அது. கண்டுபிடித்துவிட்டீர்களா? ஆம்! டிங்கோ – ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய காட்டு நாய், அதிபயங்கர வேட்டையாடி, பூர்வீகக் குடி மக்களின் கலாச்சாரத் துணை, சிலருக்கு சர்ச்சைக்குரிய Pest என்று அறியப்படுகிற டிங்கோ.
டிங்கோ உண்மையில் ஆஸ்திரேலியாவின் பூர்வீக விலங்கா? அல்லது வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டதா? டிங்கோ, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் காவல் மிருகமா அல்லது விவசாயிகளுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் விலங்கா? இப்படி பல மர்மங்களைக் கொண்டிருக்கும் டிங்கோவைப் பற்றிய பல தரவுகளை நாம் இன்று தெரிந்துக் கொள்ளப் போகிறோம்.
முதலில் சில அடிப்படைகள்.
டிங்கோவின் அறிவியல் பெயர் ‘Canis dingo’ என்பதாகும். அது ஒல்லியான, வலிமையான, வேகமும் திறனும் கொண்ட உடல் அமைப்பு உடையது. அதன் உயரம் ஏறத்தாழ 44 முதல் 63 செ.மீ வரை இருக்கும். அதன் எடை ஏறக்குறைய 13 முதல் 23 கிலோ வரை இருக்கும். பொதுவாக நாம் சமைக்க பயன்படுத்தும் இஞ்சியின் பழுப்பு சிவப்பு நிறத்தில் காணப்படும் டிங்கோக்களுக்கு மார்பு, கால், வால் முனை ஆகியவற்றில் வெள்ளை நிறம் காணப்படும்.
‘குரைக்கிற நாய் கடிக்காது. கடிக்கிற நாய் குரைக்காது’ என்கிற பழமொழியைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் டிங்கோ பெரும்பாலும் குரைப்பதில்லை; மாறாக, ஓநாய் போன்று ஊளையிட்டே மற்ற டிங்கோ நாய்களுடன் அது தொடர்பு கொள்கிறது.
“நாய் வாலை நிமிர்த்த முடியாது’ என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், டிங்கோவின் வால் நரியின் வாலைப் போன்று இருக்கும். டிங்கோ, வீட்டு நாய்களைப் போலல்லாமல், கூச்ச சுபாவமுள்ளவை. மனிதர்களின் அரவணைப்புக்காக ஏங்காது. ‘எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?’ என்று கேட்பார்கள். ஆனால் டிங்கோ எதையும் தாங்கும் இதயம் கொண்ட விலங்கு.
டிங்கோக்களின் வரலாறு ஆச்சரியமூட்டுகிறது. ‘நாய்க்கு வேலை இல்லை. நிக்க நேரம் இல்லை.’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல டிங்கோக்கள் ஓரிடத்தில் நிற்காமல் தேசம் விட்டு தேசம் பயணிக்கும் விலங்காக இருந்திருக்கிறது. ஆம்! டிங்கோக்கள் உண்மையில் ஆஸ்திரேலியாவின் பூர்வீக உயிரினங்கள் அல்ல. தென்கிழக்கு ஆசியாவிலிருந்து கடல் வழியாக வந்தவர்களால் சுமார் 3,500 முதல் 4,000 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டன என்று ஆய்வுகள் கூறுகின்றன. அவை, தஸ்மேனியாவைத் தவிர, ஆஸ்திரேலியா முழுவதும் விரைவாகப் பரவின.
‘நாய் வேஷம் போட்டால் குரைக்க வேண்டும். பேய் வேஷம் போட்டால் ஆட வேண்டும்.’ என்று சொல்வார்கள். அது போல டிங்கோக்கள் பல வேஷங்களைப் போட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான தலைமுறைகளாக, ஆஸ்திரேலிய பூர்வீக குடிகள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவினரின் சமூகங்கள் டிங்கோ குட்டிகளை முகாம்களில் வளர்த்தனர். கங்காரு, எமு போன்றவற்றை ஓட்ட, அவர்களோடு சேர்ந்து வேட்டையாட உதவியாக அவைகள் இருக்கும். குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பாக, குளிர்காலத்தில் "உயிருள்ள போர்வையாக" அவைகள் பயன்படும். அவர்களின் சில ட்ரீம்டைம் கதைகளில் டிங்கோக்கள் அவர்களின் உறவினர்களாகவும், ஆன்மீக உயிரினங்களாகவும் இடம்பெறுகின்றன.
ஆனால் ஐரோப்பிய காலனித்துவம் வந்தபோது கதை மாறியது.
‘நாய் பட்ட பாடு’ எனச் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படித்தான் ஆகிப்போனது ஐரோப்பியர்களின் நிலைமை. ஐரோப்பியர்கள் வளர்த்து வந்த கால்நடைகள் பலவற்றை டிங்கோக்கள் கபளீகரம் செய்தன. தங்கள் கால்நடைகளின் இழப்பைப் பார்த்து, உலகின் மிக நீளமான தடுப்பு வேலியை அவர்கள் கட்டினார்கள். அதற்கு டிங்கோ ஃபென்ஸ் என்று பெயர். 5,600 கிலோமீட்டருக்கு மேல் நீளும் இந்த வேலி 1950களில் முடிக்கப்பட்டது. இன்றும் அந்த வேலி, ஆஸ்திரேலியக் கண்டத்தைப் பிரிக்கிறது.
இன்றைய 2026 ஆம் ஆண்டில் டிங்கோக்களின் நிலை என்ன?
பூர்வீகக் குடிமக்களின் பண்பாட்டு அடையாளமாக மட்டுமல்ல, டிங்கோக்கள் சக்திவாய்ந்த சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டாளர்கள் என்றும் கூறப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலுள்ள தாவர உண்ணிகளான கங்காரு, எமு, காட்டு ஆடு, முயல் போன்றவற்றை, உச்ச வேட்டையாடிகளாக இருந்து டிங்கோக்கள் கட்டுப்படுத்துகின்றன என்கிறார்கள். அதோடு நில்லாமல், நரி, பூனை போன்ற சிறு வேட்டையாடிகளையும் அவை அடக்குகின்றன. டிங்கோ இருக்கும் பகுதிகளில் பசுமை அதிகமாக இருக்கிறதாகவும், மண் ஆரோக்கியமாக இருக்கிறதாகவும், சிறிய பூர்வீக விலங்குகளும், பறவைகளும் அதிகமாகக் காணப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஆடு வளர்ப்பாளர்கள் அப்படி எண்ணவில்லை. ஆண்டுக்கு மில்லியன் கணக்கான இழப்புகளைக் காணுவதாக அவர்கள் புகாரளிக்கின்றனர். டிங்கோக்களைக் கட்டுப்படுத்தி வைக்கும் நடவடிக்கைகளுக்கு இன்னும் பல மில்லியன்கள் செலவாகின்றன என்றும் அதனால் பொருளாதார இழப்பு என்றும் விவசாயிகள் கருதுகின்றனர்
ஒரு புறம், நகர்ப்புற ஆஸ்திரேலியர்களும் சூழலியப்பாதுகாப்பாளர்களும் டிங்கோவை, பாதுகாக்க வேண்டிய ஆஸ்திரேலியாவின் சின்னமாகக் காண்கின்றனர். மறு புறம், கிராமப்புற விவசாயிகள் அவற்றை வாழ்வாதார அச்சுறுத்தலாகப் பார்க்கின்றனர். எப்படி இருந்தாலும் ‘நாயைக் கண்டால் கல்லைக்காணோம், கல்லைக்கண்டால் நாயைக் காணோம்’ என்பதைப் போல டிங்கோ என்கிற அதிசய விலங்கு வாழ்வாதார அச்சுறுத்தலாகவும், ஆஸ்திரேலியவின் சின்னமாகவும் விளங்குகிறது.
********



Comments