ஆஸ்திரேலியாவில் தேடப்பட்டு வந்த COP Killer Desi Freeman சுடப்பட்ட கதை
- உயிர்மெய்யார்

- Apr 2
- 2 min read

ஏழு மாதக் காலமாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த டெஸி ஃப்ரீமேன் இன்று தோலோகோலோங் என்ற இடத்தில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தோலோகோலோங் மெல்பர்ன் நகரத்திலிருந்து வடக்கே நாலரை மணி நேர பயணத்தில் இருக்கும் சிறிய கிராமம். அது நியூ சவுத் வேல்ஸ் எல்லை அருகே இருக்கிறது.
அந்த விக்டோரியாவின் மலைப்பகுதியைச் சேர்ந்த டெஸி ஃப்ரீமேன், தன்னை ஒரு இறையாண்மைக் குடிமகன் (Sovereign Citizen) இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று பிரகடனப்படுத்திக்கொண்டவர். அது மட்டுமல்ல பிறரால் சதி கோட்பாட்டாளர் (Conspiracy theorist) என்று அறியப்பட்டவர்.
இறையாண்மைக் குடிமகன் என்றும் சதி கோட்பாட்டாளர் என்றும் அறியப்படுகிற டெஸி ஃப்ரீமேன் எப்படி ஆஸ்திரேலியாவின் மிகவும் தேடப்படும் தப்பியோடியாக (fugitive ஆக) மாறினார்? ஏழு மாத அதிரடி போலீஸ் வேட்டைக்குப் பிறகு எப்படி, எங்கு சுட்டுக் கொல்லப்பட்டார் என்று இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்துக் கொள்ளப் போகிறோம்.
டெஸ்மண்ட் கிறிஸ்டோபர் ஃபில்பி (Desmond Christopher Filby). அது தான் அவரது இயற் பெயர். டெஸ்மண்ட் “டெஸி” ஃப்ரீமேன், டெஸி பேர்ட் ஃப்ரீமேன் என்றும் அழைக்கப்படுவார். அவருக்கு வயது 56. விக்டோரியாவின் ஆல்பைன் (Alphine Region) பகுதியில் உள்ள ‘போர்பங்க்கா’ (Porepunkah) என்ற கிராமப்புறப் பகுதியில் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
டெஸி ஃப்ரீமேன் ஒரு ஃப்ரீலான்ஸ் புகைப்படக் கலைஞர். இளம் வயதிலிருந்தே ‘மவுண்ட் பஃபலோ தேசியப் பூங்கா’ (Mount Buffalo National Park) வில் hiking போவது தான் அவரது வாடிக்கை.
டெஸி ஃப்ரீமேன், பல ஆண்டுகளாக அரசுக்கு எதிரான மற்றும் போலீசுக்கு எதிரான கடுமையான கருத்துக்களை வெளியிடுபவராகவே அறியப்பட்டார். இறையாண்மை குடிமகன் இயக்கத்தில் உள்ளோர், நீதிமன்றங்கள், போலீஸ் மற்றும் அரசாங்கத்தின் பெரும் பகுதியின் அதிகாரத்தை நிராகரிக்கும் கருத்தியலைக் கொண்டுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் அரசின் அதிகாரம், சட்டங்கள் அல்லது விதிமுறைகளால் கட்டுப்பட்டவர்கள் இல்லை என்று நம்புவர்களாக இருப்பவர்கள் என்று தெரிகிறது.
மேலும், இணையத்தில் டெஸி ஃப்ரீமேன் அதிகாரிகளுக்கு எதிரான உள்ளடக்கங்களைப் பதிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. போலீசை “terrorist thugs” என்று மோசமாக விவரித்ததாகவும் சொல்லப்படுகிறது.
அவருடைய வாழ்க்கை இப்படியாகப் போய்க்கொண்டிருந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 26 அன்று காலையில் அனைத்தும் மாறியது.
டெஸி ஃப்ரீமேன் மீது குழந்தை பாலியல் குற்றக் குற்றச்சாட்டுகள் இருந்தன. அது தொடர்பாக அவரை விசாரிப்பதற்காக போலீஸார் அன்று அவரது வீட்டிற்குச் சென்றனர். விசாரிக்கச் சென்ற போலீஸார் மீது, ஃப்ரீமேன் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். அதில் லீடிங் சீனியர் கான்ஸ்டபிள் நீல் தாம்சன் (Leading Senior Constable Neal Thompson) மற்றும் சீனியர் கான்ஸ்டபிள் வாடிம் டி வார்ட்-ஹாட்டார்ட் (Senior Constable Vadim De Waart-Hottart) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு அதிகாரி படுகாயமடைந்தார். இரண்டு போலீஸ் அதிகாரிகளின் மரணம் விக்டோரியா போலீஸ் படை மற்றும் பொது சமூகத்தை துக்கத்தில் ஆழ்த்தியது. அதே நேரத்தில், டெஸி ஃப்ரீமேன் மலைநாட்டின் அடர்த்தியான புதர்ப்பகுதிக்கு தப்பியோடினார்.
அதைத் தொடர்ந்து விக்டோரியா போலீஸ் தன் தேடுதலைத் துவங்கியது. நூற்றுக்கணக்கான அதிகாரிகள் அந்த சவாலான வேட்டையில் பங்கு கொண்டனர். சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. தேடுவதற்கு மோப்ப நாய்கள் அழைக்கப்பட்டன. மிகச்சிக்கலான வானிலை தடையாக இருந்த போதும் தேடல் நிற்கவில்லை.
டெஸி ஃப்ரீமேனின் மனைவியையும் மகனையும் விசாரித்தனர். போலீஸ்க்கு தகவல் கொடுப்போருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு கூட அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் போலீஸர் மனம் தளரவில்லை.
216 நாட்கள் தேடலில் ஓடியது. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள். 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை! கனமான ஆயுதம் தாங்கிய போலீஸ், நியூ சவுத் வேல்ஸ் எல்லை அருகே ‘தோலோகோலோங்’ (Thologolong) உள்ள முர்ரே ரிவர் சாலையில் (Murray River Road) உள்ள ஒரு இடத்தில் ஃப்ரீமேன் என்று நம்பப்படும் ஒரு நபரைக் கண்டுபிடிக்கின்றனர். அவர் ஒரு converted shipping container -இல் மாற்றப்பட்ட ஷிப்பிங் கொள்கலனில் தங்கியிருக்கிறார்.
போலீஸார் பல முறை எச்சரிக்கிறார்கள். அவர் சரணடைய மறுக்கிறார். 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி நடந்த மோதலில் உயிரிழந்த போலீஸ்காரர் ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட ஆயுதத்தை டெஸி ஃப்ரீமேன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
மூன்று மணி நேர மோதல்! இருதரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடந்ததாகச் சொல்லப்படுகிறது. காலை 8:30 மணிக்கு சற்று முன்பு ஃப்ரீமேன் கொல்லப்படுகிறார். அதிர்ஷடவசமாக இறுதி மோதலில் எந்த போலீஸ் அதிகாரியும் காயமடையவில்லை எனத் தெரிகிறது.
போர்பங்க்கா’ (Porepunkah) உள்ளூர்வாசிகள் இப்பொழுது நிம்மதி பெருமூச்சு விடுவதாக கூறப்படுகிறது.
ஃப்ரீமேனின் கதை இறையாண்மை குடிமகன் இயக்கத்தின் கோட்பாடுகள், தீவிரமயமாக்கல், ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் போலீசிங் சவால்கள் பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. இந்த நேரத்தில் கடமையில் உயிரிழந்த இரண்டு அதிகாரிகளான லீடிங் சீனியர் கான்ஸ்டபிள் நீல் தாம்சன் மற்றும் சீனியர் கான்ஸ்டபிள் வாடிம் டி வார்ட்-ஹாட்டார்ட் மற்றும் அவர்கள் குடும்பத்தினரையும் விக்டோரிய மக்கள் நினைவு கூர்கிறார்கள்.
******



Comments