top of page

அரசர் ஓவியம்

Updated: 2 days ago




குமரேசன் ஓவியரு

குடிசையில வாழ்ந்தாரு

அரும்பு என்ற மனைவியோடு

  வறுமையில வாழ்ந்தாரு


 அந்த நாட்டு அரசனுக்கு

  வந்ததொரு அரிய ஆசை

 அச்சு அசலா வரையச் சொல்லி

  முறுக்குனாரு பெரிய மீசை

 

 அரண்மனையில் குமரேசன்

  அரசரையேப் பாத்தாரு

 ஒத்த கண்ணு மன்னரையே

  வரையும் வேலை ஏத்தாரு.

 

 எதிரில் வந்த சேவகரு

  எச்சரிக்கை பண்ணாரு

 ஏற்கனவே ஓவியரு

  செத்தகதை சொன்னாரு

 

 ஒத்த கண்ணு பார்வையில்லா

 மன்னரையே பாத்தவரு

 அப்படியே வரைந்ததாலே

  அடி வாங்கி செத்தாரு

 

 ரெண்டு கண்ணும் இருப்பதாக

  இன்னொருத்தர் வரைந்தவரு

 உண்டு இல்லை என்றாகி

  உயிரை விட்டு மறைந்தாரு

 

 எப்படித்தான் வரைவதோ?

  எப்படித்தான் வரைவதோ?

 குமரேசன் குழம்பினான்

  மனைவியிடம் விளம்பினான்.


 இருவருமாய் யோசிக்க

  இங்கிதமா வரைஞ்சாரு

 அரசரிடம் காண்பிக்க

  அவர் மகிழ்ந்து போனாரு.

 

 ஒத்த கண்ணை மூடியே

 மத்த கண்ணால் நோக்கியே

 அம்பு விடும் அரசரை

  அழகாக வரைஞ்சதாலே

 

 முத்துமாலை பரிசு என்ன!

முன்னூறு தரிசு என்ன!

 பொற்காசு பெருசு என்று

  குமரேசன் சொகுசு என்ன!

 

 ஒற்றுமையாய் பேசுவோமே

வித்தியாசமாய் யோசிப்போமே!

 திறமைகளை வீசுவோமே

  வெற்றிகளை நேசிப்போமே!!


 *****

 கருத்து: கூட்டு சிந்தனை, படைப்பாற்றல் சிந்தனை, அறிவு, திறமை, பிரச்னைகளைத் தீர்த்தல்

 பாடல் ஆசிரியர்: உயிர்மெய்யார்

Comments


© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page