என் தமிழே! என் உயிரே! என் உலகே!-
- உயிர்மெய்யார்
- 2 days ago
- 1 min read

பாடலாசிரியர்: உயிர்மெய்யார்
என் தமிழே! என் உயிரே! என் உலகே!
என் தமிழே! என் உணர்வே! என் அழகே!
என் தமிழே! என் உறவே! என் உயர்வே!
தை மாத விதையாக வா
கை கோர்த்து விளையாட வா
பல கால கதை சொல்ல வா
எதிர் கால வினை வெல்ல வா
- என் தமிழே! என் உயிரே! என் உலகே!
கல்வெட்டில் கருவாகி பனைஓலை உருவாகி
காலங்கள் பல உண்ட நீ!
இலக்கியம் கடலாக இலக்கணம் படகாக
காப்பியம் பல கண்ட நீ!
பழமையே உடலாக புதுமையே உயிராக
காட்சிகள் பல கொண்ட நீ!
இளமையே சிலையாக இனிமையே கலையாக
சாட்சிகள் பல வென்ற நீ!
- என் தமிழே! என் உயிரே! என் உலகே!
சங்கத்தில் செய்யுளாக மருவிட கவியாக
திமிராக பிறந்தாய் நீ!
பக்தியில் கதையாக பிற்பாடு முறையாக
பலமாக எழுந்தாய் நீ!
மையத்தில் கலப்பாக தற்போது விரைப்பாக
மாண்போடு சிறந்தாய் நீ!
ஐயமே இல்லாமல் ஐந்தாறு மொழிக்கு
அம்மாவாய் உயர்ந்தாய் நீ!
- என் தமிழே! என் உயிரே! என் உலகே!
தொல்காப்பிய அறிவாக திருக்குறள் நெறியாக
சிலம்பில் கதையாக நீ!
பல்காப்பியம் உருவாக கம்பனின் கவியாக
புராணத்தில் பண்பும் நீ
தேவார முறையாக திருவாசக வழியாக
தேனாக இனிக்கும் நீ!
ஆவாரம் பூவாக அருட்பாவில் பாகாக
ஆகாரம் ஆனாய் நீ!
- என் தமிழே! என் உயிரே! என் உலகே!
கீழடியில் கீறல் நீ கொற்கையிலே முத்தும் நீ
ஆதிச்ச நல்லூர் நீ!
மாங்குடியில் பானை நீ அழகன்குளம் ஓடும் நீ
கோவலன்பொட்டல் நீ!
பூம்புகாரில் சுவரும் நீ தொண்டி செங்கல்லும் நீ
அரிக்க மேடு நீ!
ஆனைமலை வாளும் நீ கொடுமணல் இரும்பும் நீ
பல்லவ மேடு நீ
- என் தமிழே! என் உயிரே! என் உலகே!
எழுத்தாக ஏட்டிலும் ஒலியாக பாட்டிலும்
எகத்தாளம் புரிகின்றாய் நீ!
உனக்கான தொன்மை உன் தனித்தன்மை
உண்மை தாய்தன்மை நீ!
மொழிகளின் வேராய் வரலாற்றின் சாறாய்
முளைத்திட்ட முழுநெறி நீ!
விழிகளில் விழுந்து மூளையில் எழுந்த
விண்வெளி பயணம் நீ!
- என் தமிழே! என் உயிரே! என் உலகே!
Comments