top of page

விசாரணை - ஈராக்கின் கிறிஸ்து - சிறுகதை தொகுப்பு - கதைச் சுருக்கமும் வாசிப்பு அனுபவமும்

Updated: Aug 2


ree

 

அஹமத் மன்சூர் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர். அவர் வீட்டில் இருக்கும் போது, அவருக்கு அந்த நாட்டு உள்துறை அமைச்சகத்திலிருந்து, ஹாத்திம் என்பவர் போன் செய்கிறார். அஹமத் தன் வகுப்பில் ஆற்றிய உரையைப் பற்றி பேச விரும்புவதாக ஹாத்திம் கூறுகிறார். வருகிற ஞாயிற்றுக் கிழமை மதியம் ஒரு மணிக்கு ஹாத்திம் இருக்கும் போலிஸ் ஸ்டேஷனில் இருவரும் சந்திப்பதாக முடிவு செய்கிறார்கள்.

 

பொருளியல் நிபுணர்களுக்குப் பதில் வெறும் அரசாங்க குமாஸ்தாக்களையே பல்கலைக்கழகங்களில் தயாரிக்கிறோம் என்பது அஹமத்தின் எண்ணம். அவர் வாழுகின்ற நாட்டில், பொருளாதார பங்கீடு குறித்து தான் உரையாற்றியிருந்தார்.

 

ஒரு வருடத்துக்கு முன்னால் அத்னான் அல்காசர் பொருளியல் துறையின் வாசலில் வைத்து தற்கொலை செய்து கொண்டான். உற்பத்திக்கும் பங்கீடுக்குமான தொடர்பு குறித்து அவன் கட்டுரை எழுதியிருந்தான். அது துறைத் தலைவர் டாக்டர் யாஹ்யாவுக்குப் பிடிக்காததால், அவனைத் தொடர்ந்து தாக்கிக்கொண்டேயிருந்தார். அதனால் தான் அத்னான் தன் தலையில் சுட்டுக்கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டான்.


மே என்பவள் அத்னானின் காதலி. மே, டாக்டர் யாஹ்யாவைத் திட்டித் தீர்த்தாள். கஸன் என்பவன் அத்னானின் நண்பன். கஸன் அத்னானின் கால்பந்தாட்ட வீரதீரத்தைச் சொல்லி பெருமைப்படுவான். அவர்கள் இருவரும் சேர்ந்து “காட்டு மந்தை” என்ற கால்பந்தாட்டக் குழுவைத் துவங்கியிருந்தார்கள். அநீதியை எதிர்த்து கேட்பவர்கள் அந்தக் குழுவில் அதிகமாகச் சேர்ந்தார்கள். அத்னான் ஒரு கவிதை எழுதியிருந்தான். காட்டு மந்தையைச் சேர்ந்த அவனது மகிழ்ச்சி, துயருரும் மந்தையைச் சேர்ந்த சோகத்தில் இருப்பவர்களுக்குப் போய் சேரட்டும் என்ற பொருண்மையில் கவிதை அமைந்திருந்தது.

 

அத்னானின் நினைவு அஹமத்துக்கு வந்து போனது. சற்று பயமாகத்தான் இருந்தது அவருக்கு. அஹமத்தின் மனைவி, அவரின் பயத்தையுணர்ந்து பாத்திரத்தில் நீர் எடுத்து வந்து காலை அமுக்கி விடுகிறாள். அவரோ அந்த உரையைப் பற்றிய எண்ணத்தில் ஆழ்ந்து விடுகிறார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் அவரது வீட்டில் சிலர் கூடி நாட்டின் போக்கைப் பற்றி கலந்துரையாடுவர். அப்படி அந்தக் கூட்டங்களில் கலந்துக் கொண்டவர்களில் அத்னானும் கஸனும் சேர்த்தி.

 

ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அஹமத் கிளம்பி, பல்கலைக்கழகம் போய்விட்டு, போலிஸ் ஸ்டேஷன் போகிறார். ஒரு மகிழுந்து தன்னைத் தொடர்வதாக நினைக்கிறார். ஹாத்திம் மிதமிஞ்சிய மரியாதையோடு அஹமத்தை வரவேற்கிறான். ஹாத்திமுக்குத் துணையாக ஹிஷாம் என்றொருவன் இருக்கிறான். பிறகு விசாரணை துவங்கியது. அஹமத்தின் அப்பா, அம்மா அவர்களது வேலைகள், பொழுது போக்குகள் பற்றியெல்லாம் ஹாத்திம் கேட்கிறான். அஹமத்துக்குக் கோபம் வருகிறது. உரையைப் பற்றிப் பேசுவதை விட்டு விட்டு தேவையில்லாத கேள்விகளைக் கேட்பதாக அஹமத்துக்குக் கோபம். அன்றைக்கு முடியாது என்றும் அடுத்த நாள் வருவதாகவும் சொல்லி அஹமத் கிளம்பி விடுகிறார்.

 

அஹமத் கார் வரை ஹிஷாம் வருகிறான். ஹிஷாம் கஸனின் நண்பன் எனவும், தனது முன்னாள் மாணவன் எனவும் அஹமத்துக்குத் தெரிகிறது. தன்னிடம் படித்துவிட்டு போலிஸிடம் வேலை செய்கிறானே என்று வருந்தி அவன் கன்னத்தில் பளார் என்று ஓர் அறை விடுகிறார். வீட்டிற்குப் போகிறார். மனைவி வரவேற்கிறார். டாக்டர் யாஹியா அவளை அழைத்து போலிஸ் ஸ்டேஷனில் நடந்ததை சொல்லிவிடுகிறார்.  அஹமத் அவள் முன் அமர்ந்து அங்கு நடந்த ஒவ்வொன்றையும் விளக்குகிறார். ஓவியர் நபில் சலீமுக்கும் இப்படித்தான் செய்தார்கள். தேவையில்லாத கேள்விகளைக் கேட்டார்கள். இரண்டு வருடங்கள் ஓவியருக்கு வேலை இல்லாமல் இருந்தது. மனைவி வாயில் அடித்துக்கொண்டாள்.

 

அஹமத் தன் அறைக்குப் போகிறார். துப்பாக்கியை எடுத்து, அத்வானின் சுட்ட அதே இடத்தில், கழுத்தில் வைத்து துப்பாக்கியின் குதிரையைச் சுண்டினார்.

 

***********

கதை வாசிப்பு அனுபவம்

 

முதலில் இன்றையக் கல்வி பற்றி பேசிவிடுவோம். பிறகு அடக்குமுறைக்கு எதிராகப் பேசுதல் (பேச்சுரிமை) பற்றி பேசுவோம்.

 

என்றென்றைக்கும் அறிவு என்பது பொது சொத்தாக இருந்ததில்லை. அது அதிகாரத்தின் கையில் தான் இருந்திருக்கிறது. இருக்கிறது. பணம், அந்தஸ்து, அதிகாரம் எல்லாம் எங்கே குவிகிறதோ, அங்கு தரவுகளும், ஆய்வுகளும், அறிவும் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. அதிகாரத்தில் இருப்போர், தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்காக கல்வி முறையை பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இந்தக் கதையில், “அரசாங்க குமாஸ்தாக்களையே பல்கலைக்கழகங்களில் தயாரிக்கிறோம்” என்று கதை நாயகன் பேராசிரியர் அஹமத்தின் எண்ணுகிறார்.

 

நான் பள்ளியிலும், பிறகு கல்லூரிகளிலும், அடுத்து பல்கலைக்கழகத்திலும் பணி செய்த பொழுது, இதைக் கண்கூடாகக் கண்டேன். தொழில் மற்றும் வணிகத்திற்குத் தேவையான அறிவை திரட்டுவதும், அதற்கான அறிவையும், திறனையும் மாணாக்கர்களுக்கு அளிப்பதும், அப்படி கொடுப்பதற்கான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளிப்பதும் தான் கல்வி முறையாக பல சமூகங்களில், பல காலங்களில் இருந்திருக்கிறது.

 

ஆனால் கல்வி என்பது எப்படி இருக்க வேண்டும்?

 

இயற்கையின் உண்மையை உணர்வதே, அறிவதே கல்வி. இயற்கையின் பகுதியான மனிதன் தன்னை உணர்வே, அறிவதே கல்வி.

 

ஆனால் இன்றையக் கல்வி, ஒரு சாரார் வசதியாக இருக்க, சில தரவுகளையும், சில திறன்களையும் தெரிந்துக் கொள்வதே கல்வி என ஆக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தரம் பிரித்து, சிறந்த “அறிவாளிகளை” சிறந்த குமாஸ்தாக்களாக ஆக்கிக் கொள்கிறது இன்றைய அதிகார முறை.

 

இன்றையக் கல்வியிலல்லாது, வேறு முறைகளில் உண்மையை உணர்ந்த ‘அத்னான்’ போன்ற சிலர், அந்த உண்மையை உரைக்கும் போது, அதிகாரத்திற்கு அது பிடிக்காது. அதனால் தான் அத்னான் பேசுகிற, எழுதுகிற உண்மை அந்தத் துறைத் தலைவருக்குப் பிடிக்கவில்லை. எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் என்று மட்டும் அல்ல, ஓவியம், இசை, பாட்டு என எந்தத் துறையிலிருப்போரும் உண்மை பேசினால் அதிகாரத்திற்குப் பிடிக்காது. அதனால் தான் “அத்னான்” துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக் கொள்கிறான். ஓவியல் நபீல் சலீமையும் அழைத்து விசாரித்து தண்டனை கொடுக்கப்படுகிறது.

 

ஒழுக்கம் என்கிற பெயரில் ஒடுக்கியே வளர்கிற பள்ளிக் குழந்தைகள், பெரிதாக அடக்குமுறையை எதிர்த்துப் பேசுவதில்லை. அப்படி பேசுவதற்கு அவர்களுக்குப் பயிற்சி இல்லை. சுயசிந்தனை, சுயமரியாதை போன்ற வார்த்தைகள் அவர்கள் அகராதியில் இல்லை.

 

இந்தக் கதையில், அஹமத் தன் அறைக்குப் போகிறார். துப்பாக்கியை எடுத்து, அத்வானின் சுட்ட அதே இடத்தில், கழுத்தில் வைத்து துப்பாக்கியின் குதிரையைச் சுண்டி இறந்து போகிறார். அது தேவையா? வேறு வழி இல்லாத அளவுக்கு சூழ்நிலை இறுக்குகிறதா?

 

நம்பிக்கை கொடுப்பது போல் கதை நிறைவுற்றிருக்கலாம்.

 

*********

Comentários


© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page