விமானத் தளத்தை விற்றச் சிறுவன் - கதை - வாசிப்பு அனுபவம்
- உயிர்மெய்யார்

- May 15
- 6 min read
Updated: Jun 13

விமானத் தளத்தை விற்றச் சிறுவன் - கதைச் சுருக்கம்
அஸ்ஸாம் - ஜோர்ஹாட் - இராணுவ முகாம். அருகில் ஒரு கிராமம். பழங்குடி இன சிறுவன் - போக்கன் மாங்க் அவன் பெயர். ஜீதேன் வீட்டில் வேலை. அவரை ‘அப்பா’ என்று கூட அழைக்கிறான். ஒரு தடவை அவனது சொந்த அப்பா வந்து கூப்பிட்ட போது, ‘நான் வரமாட்டேன். இதுக்கும் அம்மாவ அடிக்க வேண்டியது தானே!’ என்று சொல்லி மறுத்துவிடுகிறான். அதிலிருந்து ஜீதேன் மிக அன்பாக வைத்திருக்கிறார்.
ஒரு நாள். லெவல் கிராஸிங்கில், வெள்ளைக்கார சிப்பாய்கள் வந்த டிரக்கில் ஏறிக்கொள்கிறான். அன்றைக்குத் திரும்பிப் போகத் தெரியாததால், அரை குறை ஆங்கிலத்தோடு, அவர்களுடனேயே ஒட்டிக்கொள்கிறான். கமாண்டர் கேட்கிறார் ‘உனக்கு என்ன வேண்டும்?’ அவன் ‘லெப்ட் ரைட்’ மார்ச் பண்ணிக் காண்பிக்கிறான். பல வேலைகளைச் செய்கிறான். பிறகு கமாண்டரின் செல்லப் பிள்ளையாகி விடுகிறான். பேசுவதற்குப் பயன்படும் சிறு இயந்திரம் குறித்து ஆர்வமாக இருக்கிறான்.
ஞாயிற்றுக் கிழமை. பக்கத்து கிராமத்துக்குப் போகிறான். மக்களோடு பேசுகிறான். வெள்ளைக்கார சிப்பாய்கள் இராணுவ முகாமை விட்டுப் போய்விட்டால் அவனது எதிர்காலம் என்னாவது? என யோசிக்கிறான். காமாண்டர் கேட்கிறார். ‘ஆர் யு சிக்?’ அவன் சொல்கிறான்: ‘உடம்புல நோ சிக். தலையில சிக்’. இராணுவ முகாமிலிருந்து எல்லோரும் வெளியேறும் காலம் வந்துவிட்டது. அந்தக் காலி இடத்திற்கும் அதில் கொட்டப்பட்டுள்ள கழிவுப் பொருட்களுக்கும் அவன் தான் சொந்தக் காரன் என்று ஒரு துண்டுச்சீட்டு எழுதிக்கொடுத்து விட்டு கமாண்டர் மற்ற சிப்பாய்களுடன் இடத்தைக் காலி செய்கிறார். கிராம மக்களிடம் பொருட்களை விற்பதா? என யோசிக்கிறான். ஒரு விவசாயிக்கு எந்த விஷயம் மிகவும் மதிப்புள்ளதாகத் தோன்றும்? நிலம் தான். அந்த விமானத் தளத்தை ரூ.500 க்கு கிராமவாசிகளிடம் விற்றுவி்ட்டு எங்கோ போய்விடுகிறான்.
விமானத் தளத்தை விற்றச் சிறுவன் - வாசிப்பு அனுபவம்
போக்கன் மாங்க் அந்தச் சிறுவனது பெயர். அஸ்ஸாம். பழங்குடி இனம். வீட்டிலிருந்து ஓடி வந்து விடுகிறான். அவனது சொந்த அப்பா வீட்டிற்குத் திரும்பி அழைக்கும் போது, மனம் வலிப்பது போல் ஒரு சொற்றொடர். “இதுக்கும் கூட அம்மாவை அடிக்கிறதுதானே நீங்க” என்கிறான். ‘அவன் எதிர்த்துப் பேசுவதைப் பார்த்து பயந்து போன தந்தை ஒரு வார்த்தைக் கூட பதில் பேசாமல் வெளியேறினார்’.
போக்கன் மாங்க்ன் அப்பாவிடம் கேட்டேன்: உங்கள் மனைவியை அடிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? அவள் பெண் என்பதால் நீங்கள் என்னவேண்டுமென்றாலும் செய்யலாமா? சில நேரம் போதைப் பொருட்களை அருந்தி விட்டு, கன்னா பின்னாவென்று அடிக்க உங்களால் எப்படி முடிகிறது? உங்கள் இயலாமையை இப்படி அடித்துத் தான் பிரகடனப்படுத்தவேண்டுமா? பாருங்கள். உங்கள் ஒரே மகன் ஓடிவிட்டான். என்ன செய்யப் போகிறீர்கள்?
அதற்கு அவர் அப்பா குளறியபடியே பதில் சொன்னார்: எங்கள் கிராமத்தில் முக்கால்வாசி பேர் அப்படித்தான். காலங்காலமாக அடித்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். இது தான் எங்களுக்கு வசதி. இதை விட்டுவிட மாட்டோம். சரி நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உடல் நலம் கெடுக்கும் போதைப் பொருட்களை அரசாங்கமே உற்பத்தி செய்து தங்கள் ‘குடிமக்களுக்கு’ விநியோகம் செய்யலாமா? அவர்களைப் போய்க் கேட்க உங்களுக்கு வக்கு இல்லை. என்னைக் கேட்க வந்துவிட்டீர்கள். என்று காரித் துப்பாதக் குறையாச் சொல்லிவிட்டு பயணம் ஆனார்.
எங்கள் கிராமத்தில் எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார். காலையிலேயே சாராயப்பாட்டிலின் முன் தான் கண் விழிப்பார். எப்பொழுதும் கண் சிவப்பாக இருக்கும். போதை ஏறி விட்டால், எல்லோரையும் சவட்டு மேனிக்குத் திட்டித் தீர்ப்பார். பல முறை அவரது மனைவி கை ஒடிந்து, கால் ஒடிந்து, கண்ணாபொறப்புல காணாம பொயிடுவாங்க. பிறகு வந்து சேர்ந்துக் கொள்வார்கள். அவர் ஒரு முறை என்னிடம் சொன்னார்: ‘இப்படி தெருவுல நின்னு உதார் உட்டாத்தான் எல்லோரும் நமக்கு பயப்படுவாங்க’ என்றார். ஆண்களுக்கு ‘குடி’ ஓர் ஆயுதம். அரசாங்கத்திற்கும் அது ஓர் ஆயுதம். அந்த கண்றாவியால் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும். (கொசுறு செய்தி: இப்பொழுது அவர் நடக்க முடியாமல், கல்லீரல் வீங்கி, வாரத்திற்கு இரு முறை இரத்தம் மாற்றிக் கொண்டு, பேச முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்)
போக்கன் மாங்க் கேட்ட ஒரு சிறு கேள்வி, பல எண்ணங்களைக் கிளறி விட்டது.
அவன் சுறுசுறுப்பானப் பையன். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவன் வேலைசெய்யும் வீட்டிற்கு சுண்ணாம்பு அடிப்பான். நான் தஞ்சையில் இருக்கும் போது, என் தந்தையார் பொங்கலுக்கு முன்பு ஒரு வாளியில் சுண்ணாம்பு வாங்கி வருவார். அதில் தண்ணீரை ஊற்றுவார். அப்பொழுது அது குழம்பு கொதிப்பது போல் கொதிக்கும். அதை குழந்தைகள் நாங்கள் ஆர்வமாகப் பார்ப்போம். பிறகு தென்னை மரத்திலிருந்து விழுந்த தென்னம் பாளையின் பின் பகுதியை நசுக்கி, ஒரு பிரஸ் போல (தூரிகை) அப்பா ஆக்குவார். ஆளுக்கொரு தூரிகை. நானும் என் அக்காக்களும் சின்ன சின்ன டப்பாக்களில் கொதித்து ஆறிய சுண்ணாம்பை ஊற்றிக்கொள்வோம். அப்பா பெரிய செவுரு. நான் சின்ன செவுறில் அடிப்பாகம். உயரத்திற்கேற்றாற் போல அக்காக்கள் இடத்தைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மண் செவற்றில் புதிதாக வெள்ளை அடித்ததும், குளித்து முடித்து பவுடர் பூசிய முகமாக, வீடு மிளிரும். அந்த வாசனை இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. இப்பொழுது அதே வீடு. அப்பா இல்லை. இரண்டு மூன்று பெயிண்டர்கள் வந்து கலர் கலராக, பிளாஸ்டிக் பிரஸ்ஸில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் புது சட்டை அணிந்து, கரும்பு தின்றுக்கொண்டே, தொலைக்காட்சியில் நடிகரின் ‘அறிவு பூர்வமான’ பேட்டியைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
கதை இந்த இடத்திற்கு வந்ததும், பழைய மற்றும் புதிய பொங்கல் நினைவுகள் வந்து, புத்தகத்தை சற்று மூடி வைத்து விட்டேன். இயற்கையோடு இயைந்த வாழ்வு, மூச்சு முட்டி பாதாளத்தில் விழுந்துக் கொண்டிருக்க, மனித குலம் நெகிழி வண்டியில் ஏறி, மூச்சு இறைக்க இறைக்க பயணிப்பதாக ஒரு காட்சி வந்தது. வலியோடு திரும்ப கதையைப் படிக்கத் துவங்கினேன்.
அமெரிக்க சிப்பாய்கள், ஒரு விமானதளத்தை, தற்காலிகமாக அவர்களது இராணுவ முகாமாக மாற்றியிருப்பார்கள். அந்த இடத்திற்கு, தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து, எதேச்சையாக டிரக்கில் ஏறியதால், போக்கன் மாங்க் போய்விடுவான். ‘உன் பெயரென்ன?’ கமாண்டர் கேட்பார். ‘நான் ஒரு நாகா’ என்று அவன் பதிலளிக்கிறான். பல நாட்களாக இந்த விடயத்தை யாரிடமாவது கேட்க வேண்டும் என்று இருந்தேன். உங்களுக்கு விபரம் தெரிந்தால் கூறுங்கள். என் கேள்வி இது தான். நாகர்கள் என்பவர்கள் தமிழர்களா?
எங்கள் தஞ்சாவூர் மன்னார்குடி அருகில் உள்ள வடகரவயல் கிராமத்தில், எங்கள் குலதெய்வம் ‘நாகமாரியம்மன்’ தான். அந்த ஊரில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அந்த ஊர் எல்லைக்குட்பட்ட பகுதியில் பாம்பு யாரையும் கடிக்காது என்பதே அந்த நம்பிக்கை. பல விவசாயிகளும், ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள பாம்பு கோவிலுக்கு பால் வார்த்துவிட்டுத் தான், நெல் விதைக்கப் போவார்கள். குளத்திலோ, வாய்க்காலிலோ, வயல் வரப்பிலோ பாம்பைப் பார்த்துவிட்டால் அதை அடிக்கக் கூடாது என்பது அந்த ஊர் மரபு. பல இடங்களில் இரண்டு பாம்புகள் சுற்றி இருப்பது போல் கல்லை வைத்து சாமி கும்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். தமிழர்களுக்கும் நாகங்களுக்கும் உள்ள உறவு தான் என்ன?
அது ஏன் தமிழகத்தில் நாகர்கோவில், நாகப்பட்டினம், நாகூர், நாகமலை புதுக்கோட்டை, நாகக்குடையான் என்ற ஊர்ப்பெயர்கள் இருக்கின்றன. அப்படியானால் நாகலாந்து போக்கன் மாங்க் எனக்கும் பேரனாவானா? இலங்கையில் நாகதீபம் என்று ஒரு தீவு இருப்பதாக அறிகிறேன். இலக்கியத்தில் தேடினேன். முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற பெயரில் ஒரு புலவர் இருந்திருக்கிறார். உதியஞ்சேரலை சேர மன்னனைப் பற்றி அவர் பாடியுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் சொன்னார்: அண்ணல் அம்பேத்கர் - குமரி முதல் இமயம் வரை, மொகஞ்சாதாரோ-ஹரப்பா முதல் மேகாலாயா- நாகலாந்து வரை பரவியுள்ள இடத்தில் நாகர்கள் வாழ்ந்தனர் என்றும் அவர்களின் தாய்மொழி ‘தமிழ்’ என்றும் குறிப்பிடுகிறார். அதனால் தமிழர்கள் என்கிற நாகர்கள் இந்தியா முழுக்க பரவி வாழ்ந்திருக்கின்றனர் என்று கூறினார்.
சென்னையில் உள்ள என் நண்பர் ஓவியர் சுமன் அவர்களிடம் இது குறித்துப் பேசினேன். அவர் சொன்னார்: இந்திய ‘ஆதிசேஷன்’ பற்றிய புராணங்களையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆதிசேஷன் வைகுண்டத்தில் திருமாலின் பஞ்சணையாகக் காட்சியளிக்கிறார். ‘வாசுகி’ திருப்பாற்கடலை கடையும் போது, தேவர்களும் அசுரர்களும் வாசுகியைக் கயிறாகக் கொண்டு அமிர்தத்தைப் பெற்றனர். வாசுகி தான் சிவன் கழுத்தில் மாலையாகவும் திகழ்கிறாள். எப்படியோ நாகம் நம்மோடு மட்டுமல்ல நம் சாமிகளோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்றார்.
திருச்சியில் உள்ள ஒரு நண்பர் பைபிளிலிருந்து எடுத்துக்காட்டு கொடுத்துச் சொன்னார்: பைபிளில் - பாம்பு ஏவாளிடம், "நீங்கள் அதை உண்ணும்போது உங்கள் கண்கள் திறக்கப்படும், நீங்கள் தேவனைப்போல நன்மை தீமை அறிந்தவர்களாவீர்கள்" (ஆதி. 3:5) என்று சொல்வதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. படைக்கப்பட்டவைகளில் பாம்பு தான் பகுத்தறிவோடு இருந்திருக்கிறது. அதோடு நிற்கவில்லை. எண்ணாகமம் 21-ல், இஸ்ரவேலர்கள் தங்கள் பயணத்தைப் பற்றி முறையிட்ட பிறகு, கடவுள் அவர்களைத் தண்டிக்க "நெருப்புப் பாம்புகளை" அனுப்புகிறார். அவை கடித்து பலரைக் கொல்கின்றன. பின்னர், மோசே ஒரு தூணில் வெண்கலப் பாம்பை உயர்த்தி வைக்கிறார், அதைப் பார்க்கும் எவரும் குணமடைகின்றனர். இன்றைக்கும் மருத்துவர்கள் சின்னம் தூணில் இருக்கும் பாம்பாகவே இருக்கிறது என்று சொல்லிவிட்டு சொன்னார், ‘ஸ்நேக்’ என்கிற ஆங்கில வார்த்தையும் ‘நாக்’ அல்லது ‘நாகம்’ என்கிற சொல்லிலிருந்து தான் வந்திருக்கவேண்டும், அதே போல நீக்ரோ என்ற வார்த்தைக்கும் ‘நாக்’ என்ற வார்த்தைக்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்றார்.
அட! நாகப்பாம்போடு மனிதர்களுக்கு இத்தனைத் தொடர்பா? சமீபத்தில் ஆஸ்திரேலிய பூர்வீகக் குடிகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் குறிப்பிட்ட வானவில் பாம்பு பற்றிய கனவுக் கதையை இங்கு சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆஸ்திரேலிய பழங்குடிமக்களிடையே நிலவும் ஒரு வாய்மொழிக் கதை இது. இக்கதைக் குறித்து 6000 வருடத்திற்கு முந்திய பாறைச் சித்திரங்கள் உள்ளன. கதை இது தான். அது பூமி தட்டையாக இருந்த காலம். கனவுக் காலம். அப்பொழுது பூமிக்கே வடிவம் கொடுத்த பெரிய பாம்பு இருந்தது. அதற்கு வானவில் பாம்பு என்று பெயர். அது தரையை முட்டி வெளிப்பட்டு யானை, கரடி, சிங்கம் போன்ற பல்வேறு வகையான விலங்குகளை எழுப்பிவிடுகிறது. அது வளைந்து நெளிந்து போகிற இயக்கத்தால் மலைகளையும், பள்ளத்தாக்குகளையும், சிற்றோடைகளையும், ஆறுகளையும் உருவாக்குகிறது. பூமி முழுதும் சறுக்கி விளையாடுகிறது. அதனால் பூமித்துவாரங்களை நிரப்பி, சுத்தமான நீரை வழங்குகிறது. அதன் பிறகு, பூமியை வடிவமைத்த களைப்பில் ஒரு நீர்த்தேக்கத்தில் சுருண்டு படுத்து இன்று வரை இளைப்பாறுகிறது.
அதனால் பழங்குடிமக்கள் “நீர்த்தேக்கங்களை தொந்தரவு செய்யக்கூடாது. இவைகளின் ஆற்றல் மிகப்பெரியது. எல்லாவற்றையும் உருவாக்கிய வானவில் பாம்பு இங்கு இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. அதனால் நீர்நிலைகளை மிகுந்த மரியாதையுடன் நடத்தவேண்டும்” என்று அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். சில நேரம் வானவில் பாம்பின் செய்கை கணிக்க முடியாதவாறு இருக்கிறது. வறட்சி, சூறாவளி, வெள்ளம் என்பனவற்றையும் கொண்டு வருகிறது. அதீத மழை பெய்யும் பொழுது அது தங்கியிருக்கும் நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது. அப்பொழுது சூரியன் அதன் வண்ணமயமான உடலைத் தொட, வானவில் பாம்பு எழுந்துக் கொள்கிறது. தரையில் இருந்து எழும்பி வானத்தில் உலவும் மேகங்கள் வழியாக பயணித்து மற்றொரு நீர்த்தேக்கத்திற்குப் போகிறது. அப்படி அந்த பாம்பு மேகங்களுக்கிடையே பயணிக்கும் போது பலவண்ணங்களில் வானவில் தோன்றுகிறது. “அதோ! வானவில் பாம்பு ஒரு நீர்த்தேக்கத்திலிருந்து கிளம்பி, இன்னொரு நீர்த்தேக்கத்தை நிரப்ப போய்க்கொண்டிருக்கிறது” என்று பேசிக்கொள்கிறார்கள்.
“நமக்கு எப்பொழுதும் இப்படித்தான் வாழ்வளிக்கும் நீர் கிடைக்கிறது. பெரும் வறட்சியின் போதும் சில நீரூற்றுகள் வறண்டு போகாததற்கு இதுவே காரணம்.” என்றும் “ வானவில் பாம்பு இப்படி வெவ்வேறு இடங்களுக்கு பயணப்பட்டுக் கொண்டே இருப்பதால் தான் வெவ்வேறு பருவங்கள் வருகின்றன” என்றும் “இப்படித்தான் சூரியனும், நிலமும், நீரும், காற்றும் தங்களுக்குள் உறவாடிக்கொள்கின்றன” என்றும் பழங்குடிகள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
இப்படிப் பலவேறு வாய்மொழிக் கதைகள் உலவுகின்றன. அவர்களுடைய கதைகளிலிலும், பாடல்களிலும், நடனங்களிலும், ஓவியங்களிலும் வானவில் பாம்பு இன்றும் உலா வந்துக் கொண்டே இருக்கிறது. இது போன்றக் கதைகளை பெரியவர்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் வாழ்கிற நிலமும் பொழுதும் குறித்த பிரக்ஞை, அதில் இருக்கிற நீர், காற்று, தீ, வான் போன்றவைகளின் இயல்புகள், அதில் வாழ்கிற விலங்குகள், பறவைகள், பூச்சிகள் குறித்த தரவுகள் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.
நிச்சயம் இதைப் படித்து விட்டு உங்களுக்குள் சில எண்ண ஓட்டங்கள் நிகழும். அதை என்னோடு பகிர்வீர்கள் என்ற நம்பிக்கையில் கதைக்குள் செல்வோம்.
‘உன் பெயரென்ன?’ என்று கமாண்டர் கேட்டதற்கு போக்கன் மாங்க் ‘நான் ஒரு நாகா’ என்று பதிலளித்ததால் வந்த வினை சென்ற சில பத்திகள். கதைத் தொடர்கிறது.
வாசகர் வட்ட நண்பர் சொன்னது போல அவன் ஒரு street smart. கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இராணுவ முகாமில் தவிர்க்கமுடியாத ஓர் ஆளாக ஆகிவிடுகிறான். ஆனால் போர் முடிந்து வெள்ளைக்கார சிப்பாய்கள் நாடு திரும்புகிற நேரம் வந்துவிட்டது. இப்பொழுது கமாண்டர் ‘அந்த விமானத் தளம் உனக்குத்தான். அதோடு கிடக்கிற கழிவுப்பொருட்களும் உனக்குத்தான்’ என்று எழுதி ஒரு பேப்பரை அவன் கையில் செருகிவிட்டு, எல்லோரும் முகாமை விட்டு சென்று விடுகிறார்கள். அதற்குள் அவன் பக்கத்தில் இருக்கும் கிராமத்தினரோடு பழகியிருப்பான். வெள்ளைக்காரர்களோடு பழகுபவன் என்பதால் அவனுக்கு அவர்கள் மத்தியில் ஒரு மரியாதை. அடுத்து என்ன செய்வது என்று அவன் யோசிப்பான். பழுதாகிப் போன பழைய விமானத்தின் கழிவுப் பொருட்களை அந்த கிராம விவசாயிகளுக்கு விற்கலாமா என ஒரு கணம் யோசிப்பான்.
ஒரு விவசாயிக்கு எந்த விடயம் மிகவும் மதிப்புள்ளதாகத் தோன்றும்? என்ற கேள்வியை கதாசிரியர் கேட்டுவிட்டு பதிலாக ‘நிலம்’ என்று எழுதுகிறார். ஆகவே, அந்தச் சிறுவன் அந்த விமானத்தளத்தை கிராம மக்களுக்கு விற்றுவிடுவது என்று முடிவெடுக்கிறான். நிலம்! தொல்காப்பியர் சொல்வது போல முதற்பொருள் நிலமும் பொழுதும். நிலம் ஐம்புலன்களால் உணரக்கூடியது. பொழுது ஆறாவது புலனால் அறியக்கூடியது.
அந்த நிலத்தை ஐநூறு ரூபாய்க்கு விற்றுவிட்டு முன்பின் அறிமுகமில்லாத ஓர் இடத்தை நோக்கிக் கிளம்பிவிட்டான் போக்கன் மாங்க். சில நாட்கள் கழித்து அரசாங்கத்திலிருந்து பெரிய அதிகாரி வந்து கேட்டபோது, சிறுவன் கொடுத்த ஆவணத்தைக் காண்பிக்க அவர் சிரிக்கிறார். அப்படியெல்லாம் அதை அவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்ற போது, மக்கள் வெட்கத்தோடு தலையைத் தொங்கப் போட்டார்கள் என்று கதை முடிகிறது. வாசகர் வட்ட நண்பர் ஒருவர் கேட்டார்: அது எப்படி? அந்தக் கிராமத்து மக்கள் அவ்வளவு முட்டாளாகவா இருந்தார்கள்?
எப்பொழுது நாம் முட்டாளாக இல்லை!
உயிர்மெய்யார்
(பேரா. முனைவர். ஜான் பிரிட்டோ பரிசுத்தம்)
15.05.2025
மெல்பர்ன்
என் தலைக்கு மேல் சரக்கொன்றை - சிறுகதைத் தொகுப்பு
(ஆசிரியர் - டெம்சுலா ஆவ்; தமிழில் - எம்.ஏ. சுசீலா; முதல் பதிப்பு - 2009; தமிழில் முதல் பதிப்பு - 2022; நற்றிணைப் பதிப்பகம்)
*********



Comments