top of page

வெள்ளைக்காரன் - கதை வாசிப்பு அனுபவம்

ree

எழுத்தாளர் பாவண்ணன் எழுதிய “நயனக்கொள்ளை” சிறுகதைத் தொகுப்பு

சந்தியா பதிப்பகம், சென்னை. (2023)

 

உவமானங்களும் உவமைகளும்

கதையமைப்பும் கருத்துகளும்

 

வெள்ளைக்காரன்

 

உயிர்மெய்யார்

11.08.2025

மெல்பர்ன்

 

ரயிலில் போய்க்கொண்டிருக்கும் போது ஜபல்பூரில் அவன் இறங்கிக் கொள்கிறான். ஓர் ஆலமரம். ரிக் ஷாக்காரர்கள். இளநீர் விற்பவன். வாய்க்கால். இவைகளைத் தாண்டி ஒரு சாப்பிடும் இடத்தில் நுழைகிறான். ஓர் அம்மா சுடச்சுட சப்பாத்தியும் உருளைக்கிழங்கு கூட்டையும் வைக்க அவனுக்கு அம்சவல்லி அம்மா நினைவுக்கு வந்தார். அம்சவல்லி அம்மா அவனை திட்டுகிறதெல்லாம் நினைவுக்கு வந்தது. ஒரு ஏழெட்டு வயது சிறுவன் தெருவோரத்தில் பசியோடு நிற்க, அவனுக்கும் சப்பாத்தி வாங்கிக்கொடுக்கிறான்.

 

பழைய நினைவுகளில் மூழ்கிப்போகிறான். இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு காலனியாதிக்கத் துரைகள் அவர் அவர் நாடுகளுக்குப் போன பிறகு, அவர்களுக்கு வேலை செய்து வந்த வேலையாட்கள் எங்கே போவார்கள்? பல இடங்களில் சுற்றித் திரிந்துவிட்டு, ஒரு பண்ணைக்கு வந்த போது அம்மா மயங்கி விழுந்து விட்டாள். அம்சவல்லி அம்மாவும், பண்ணையார் பெரிய கவுண்டரும் வந்து தண்ணீர் தெளித்து, சோறு கொடுத்து, வேலையும் கொடுக்கிறார்கள்.

 

சின்ன கவுண்டருக்கு சிங்காரத்தோப்பில் ஒரு தாசி வீட்டிற்குப் போகும் பழக்கம் உண்டு. இவன் கொஞ்சம் பெரியவனானதும் வண்டி ஓட்டக்கற்றுக் கொண்டான். சின்னக்கவுண்டர் தாசி வீட்டிற்குப் போக இவனை வண்டி ஓட்டிப் போகச் சொல்லி கட்டாயப்படுத்தினார். இவனும் வேறு வழியின்றி வண்டி ஓட்டிப் போவான். அப்பொழுது தான் அம்சவல்லி அம்மா திட்டுவார். பண்ணையில் பருத்தி விளைய வைப்பார்கள். ஒருநாள் பருத்தியை விலைக்குப் போட வண்டியில் போனார்கள் இவனும் சின்னக் கவுண்டரும். பணம் வந்து சேர சற்று நேரம் ஆகும் என்பதால், சின்னக் கவுண்டர் பணத்தை வாங்கிக் கொண்டு அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, அதற்குள் தாசி வீட்டிற்குத் தானே வண்டியை எடுத்துக் கொண்டுப் போனார். வரவேயில்லை.

 

பருத்தி விற்ற காசை எடுத்துக் கொண்டு, சின்னக் கவுண்டர் இல்லாமல் பண்ணைக்குப் போக பயந்து, ரயில் ஏறியவன் தான் இப்பொழுது ஜபல்பூரில் இருக்கிறான்.

 

வருடங்கள் பல உருண்டன. அவனோடு இருந்த சிறுவன் பெரியவனாகி, திருமணமாகி, பிள்ளைகள் பெற்றுவிட்டான். ஒரு நாள் இவன் கோயிலுக்குப் போற வழியில் ஒருவன் பஞ்சுத்திரிகளை சுருட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். எதற்காக இப்படி திரிக்கிறான் என்று கேட்க, ‘பொருள் சம்பாரிக்கிறமோ இல்லையோ, புண்ணியம் சம்பாரிக்கனும்ல’ என்று சொன்னார்கள்.

 

இவனும் பஞ்சுமூட்டை வாங்கி வந்து திரித்தான். உடலிலிருந்து உயிர் போன போது அவன் கையில் ஒரு திரி இருந்தது என்று கதை நிறைவாகிறது.

 

 

உவமானங்கள்

எடுத்த எடுப்பில் ஒரு பலூன் உவமானம். தொடர்வண்டியில் அவன் பயணம் செய்து வருகிறான். ஜபல்பூர் நிறுத்தம். இறங்கிவிடலாமா என்று யோசிக்கிறான். அப்பொழுது ஒரு பலூன் சிறுமியின் கையிலிருந்து நழுவி பறந்து செல்கிறது. அதைப் பார்க்கிறான். ஒருவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு பலூனைக் கைப்பற்றி விட ரயில்வே ஸ்டேஷனின் எல்லை வரை ஓடுகிறார். அதையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் பலூன் மறைந்து விட, அதைத் தேடிப் போனவர் ஏமாற்றத்தோடு திரும்புகிறார். அது அப்படியே அவனது வாழ்க்கையின் பிரதிபலிப்பு. அவனது வாழ்க்கையின் வசந்தம் தான் அந்த பலூன்.

 

இவன் பெயர் வெள்ளைக்காரன். கடலூர், பாண்டிச்சேரியை பிரஞ்சுக்காரர்கள் காலனியாக வைத்திருந்த காலம். அப்பொழுது வெள்ளைக்காரனின் தாய் ஒரு துரைமார் வீட்டில் வேலை செய்து வருகிறார். அப்பொழுது இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைக்கிறது. துரைமார்கள் அவரவர் நாடுகளுக்குக் கிளம்பி போகிறார்கள். வெள்ளைக்காரனின் தாய் வேலை செய்த துரையும் கிளம்பி விட்டார். சிறு பிள்ளையை (வெள்ளைக்காரனைக்) கையில் பிடித்துக் கொண்டு துரையின் பங்களாவை விட்டு வெளியேறி நடுரோட்டில் நிற்கும் போது, தெருவில் ஒருவன் ‘காவேரி இதுவரைக்கும் பங்களாவுல ஓடிச்சி, இனி சாக்கடையில ஓடப் போகுது’ என்று சொல்லிக்கொண்டே போவதாக பாவண்ணன் எழுதுவார். அவர்களின்  சூழலைப் பிரதிபலிக்க ஓர் உவமானம்.

 

பிறகு அவனும் அவன் அம்மாவும் அம்சவல்லி அம்மாவின் பண்ணையில் வேலைக்குச் செல்வார்கள். அம்சவல்லியின் மகன் சின்னக்கவுண்டர் சிங்காரத் தோப்பில் உள்ள தாசி வீட்டிற்குச் செல்வார். பிறகு அம்சவல்லி அம்மா திட்டித் திட்டி போகாமல் பண்ணை வேலைகளைப் பார்ப்பார். போவதை நிறுத்தி விடுவார். பிறகு ஆசை வந்து மறுபடி போவார். இதைச் சொல்லிவிட்டு அதன் தொடர்ச்சியாக ஒரு காட்சியை விவரிப்பார். அவன் ஜபல்பூரில் சாப்பிடும் போது தான் மேற்சொன்னதெல்லாம் ஞாபகம் வரும். சாப்பிட்டு விட்டு ஒரு சிக்னலில் நிற்பான். அங்கே பச்சை விளக்கு எரியும் போது எல்லா வாகனங்களும் போகும். சிவப்பு விளக்கு எரியும் போது, எல்லா வாகனங்களும் நிற்கும். பிறகு பச்சை விளக்கு எரியும் போது எல்லா வாகனங்களும் கிளம்பும். இது எதற்கு உவமானம் என்று நினைக்கிறீர்கள்? பச்சை விளக்கு தாசி வீட்டிற்குப் போவது. திட்டு விழுந்துதும் சிவப்பு விளக்கு. பிறகு பச்சை விளக்கு விழுந்ததும் மறுபடி தாசி வீடு. அருமையான உவமானம்!

 

முதலில் துரைமார் வீட்டில் வேலை. வாழ்க்கை இனிமையாய்ப் போனது. துரைமார்கள் கிளம்பியதும், இவர்களுக்கும் வேலையும், இருக்க இடமும் இல்லாது, நடுத்தெருவிற்கு வந்தார்கள். வாழ்க்கைத் துயரமானது. ஆனால் அம்சவல்லி வீட்டில் இவனுடைய அம்மா மாடு கன்றுகளைப் பார்த்துக் கொள்ளும் வேலை கிடைத்தது. வாழ்க்கையில் வசந்தம் மீண்டது. ஆனால் சிறிது காலத்தில் அவனுடைய அம்மா பாம்பு கடித்து இறந்து போகிறார். இவன் தனி ஆளாய் நின்றான். வாழ்க்கை கசந்தது. இந்த வாழ்க்கை வட்டத்தை ஓர் உவமானத்தோடு சொல்கிறார். “மிதிபட்டு வாடி விழுந்த செடி தற்செயலாக கிடைத்த ஈரத்தை உறிஞ்சி உயிர்பெற்று நிமிர்ந்து தளிர்விடும் தருணத்தில் மறுபடியும் மிதிபட்டு விழுவது போல்…”என எழுதுகிறார். எப்படி உவமானம்?

 

பண்ணையில் பருத்தி விளைந்திருந்தது. பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பஞ்சு மண்டிக்கு, இவனும் சின்னக்கவுண்டரும் செல்கிறார்கள். பஞ்சு மூட்டைகளைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுக்க தாமதம் ஆனதால் சின்னக்கவுண்டருக்கு சிங்காரத்தோப்புக்கு போகவேண்டும் என்ற ஆசை துளிர் விட்டது. “நீ பணத்தை வாங்கி வை. நான் அதுக்குள்ள ஓர் எட்டு போயிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு போனவர், என்ன ஆனதோ தெரியவில்லை. திரும்ப வரவேயில்லை. இவன் பணத்தைப் பெற்றுக்கொண்டு, திரும்ப பண்ணைக்குப் போகப் பயந்து, ரயில் ஏறி ஜபல்பூர் வந்துவிடுகிறான். பல வருடங்கள் கழித்து, அவன் தத்து எடுத்த பையன் மூலமாக பேரப்பிள்ளைகள் வந்த பிறகு, ஒரு நாள், கோயிலுக்குப் போகிற வழியில் ஒரு வயதான தாடிக்காரர் பருத்தியால் செய்த பஞ்சில் திரியைச் செய்து சாமிக்கு கொடுப்பதைப் பார்க்கிறான். அவர் ஏன் அப்படி செய்கிறார் என்று கேட்டதற்கு, “பொருள் சம்பாரிக்கிறமோ இல்லையோ, புண்ணியம் சம்பாரிக்க வேணாமா?” என்று பதில் வரும். அதிலிருந்து இவனும் பஞ்சில் திரி செய்து கோவிலுக்குக் கொடுப்பான். கதையின் இறுதியில் அவன் இறந்தவிட்டபிறகு, அவன் கையில் ஒரு பஞ்சுத் திரி இருக்கும். பஞ்சை விற்றப் பணத்தோடு, ரயில் ஏறி வந்த குற்றஉணர்வு, பஞ்சித் திரி செய்து புண்ணியம் செய்வதில் முடிவடைவதாக எழுதியிருப்பது சிறப்பிலும் சிறப்பு.

உவமைகள்

ஒரு சிறுமியின் கையிலிருந்து நழுவிய பலூன் எல்லோருடைய தலைக்கும் மேலும் ஒரு பறவையைப் போல உயர்ந்தும் தாழ்ந்தும் பறந்து செல்லும் காட்சி. பச்சை நிறத்தில் ஒரு பூசணிக்காய் அளவுக்கு ஊதியிருந்தது அந்தப் பலூன் என்ற பலூன் உவமை அருமை. பலூன் உயர்ந்தும் தாழ்ந்தும் பறந்ததாம். அருமையான கற்பனை.

 

அம்சவல்லியின் முகத்தை வர்ணிக்கிறார் பாவண்ணன். ஏற்றிவைத்த விளக்கு போல சுடர்விடுகிறதாம் அவர் முகம். அபயக்கரம் காட்டி கருணை பொழியும் பார்வையுடன் நிற்கும் அம்மன் சிலை போன்ற தோற்றமாம். அவருடைய பாசக் குரலை உதறித் தள்ளிவிட்டு வந்துவிட்ட துயரம் அவனுக்கு கடலலையைப் போல் நெஞ்சில் புரண்டதாம். இந்த உவமையில், துயரம் திரும்பத் திரும்ப வந்து மோதிக்கொண்டேயிருப்பதை அழகாகச் சொல்லியிருப்பார் பாவண்ணன்.

 

அம்சவல்லியின் மகன் சின்னக்கவுண்டருக்கு சிங்காரத் தோப்புப் போக ஆசை. அங்கே தான் தாசி வீடு இருக்கிறது. அவரை காரில் அழைத்துக் கொண்டு போவதாக வேலையாட்களைத் திட்டித் தீர்க்கிறார் அம்சவல்லி அம்மா. அது தெரிந்து சின்னக்கவுண்டர் இவனைத் திட்டுகிறார். “வாழ்க்கைய ஆனந்தமா வாழனும். அதுக்கு பெண்களோட சவகாசம் வேணும். இனி பெரியம்மா சொல்றாங்க, சின்னம்மா சொல்றாங்கன்னு என் கிட்ட சொல்லாத..” என்று திட்டுவார். அந்த திட்டுகள் இவன் நெஞ்சை மாடு முட்டியது போல முட்டித் துளைத்துக் கிழித்துவிட்டன என்று பாவண்ணன் எழுதுகிறார்.

 

அப்படி இருந்தும் அம்சவல்லி அம்மா திட்டி திட்டி சில காலம் சிங்காரத் தோப்பிற்குப் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார் சின்னக் கவுண்டர். ஆனால் திடீரென ஒரு நாள் சிங்காரத் தோப்பிற்குப் போகலாம் வா என இவனை வண்டி ஓட்டச் சொல்லி விட்டு கிளம்பிவிட்டார். அப்பொழுது ஓர் உவமை. “அங்க பாரு…..கல்யாண முருங்கை மரங்களை வெட்டி, தூண் போல நிக்குது. ஆனா அதுல கூட சின்ன சின்ன துளிர்கள் துளிர்த்துட்டு வருது…அது போலத் தான் என் ஆசையும்…” என்று சி்ன்னக் கவுண்டர் சொல்கிறார். எல்லாக்கிளையும் வெட்டி விட்ட மரத்தில் துளிர் போன்ற ஆசை என்று உவமை.

 

சிங்காரத்தோப்பிற்குச் சென்ற சின்னக்கவுண்டர் ஏதோ காரணத்தால் திரும்ப வரவில்லை. இவன் பருத்தி விற்றப் பணத்தை கையில் வாங்கிக்கொண்டு நிற்கிறான். சின்னக்கவுண்டருக்காகக் காத்திருக்கிறான். அப்பொழுது அந்தி முடிந்து இரவு வரத் துவங்கிவிட்டது. அப்பொழுது ஒரு குழந்தை தவழ்ந்து வருவது போல நிலா மெல்ல மெல்ல ஊர்ந்து உச்சிக்கு வந்த சேர்ந்ததாம். சின்னக்கவுண்டர் வரவேயில்லை. சின்னக்கவுண்டர் இல்லாமல் பண்ணைக்குத் திரும்ப முடியாது என்று தெரியும். அப்பொழுது பக்கத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்கிறான். அந்த ரயில்வே ஸ்டேஷன், பால் போல் வெளிச்சத்தைப் பொழியும் விளக்குக் கம்பங்களுக்குக் கீழே ஒரு தீவு போலக் காணப்பட்டதாம். உவமைக்கு மேல் உவமைகள்.

 

கடைசியில் அவன், வயதாகி இறந்து போன போது, அவன் எடுத்து வளர்த்த அமர் என்ற பையன், காலையில் காபி எடுத்துக் கொண்டு அறைக்குள் போகிறான். அவன் அசையாமல் இருக்கிறான். அமர் அவனைத் தொட்டதும், “அவனுடைய உயிர் பிரிந்த உடல், ஒரு பஞ்சு மூட்டை போல சரிந்தது” என்று உச்சக்கட்ட உவமையோடு கதையை முடிக்கிறார்.

 

கதையமைப்பு உத்திகள்

இன்றைக்கு நடப்பதைச் சொல்லிக்கொண்டே வருகிறார். சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் போது, முன்னால் நடந்த நிகழ்வைச் சொல்லுவார். பிறகு சாப்பிட்டு விட்டு நடந்துக் கொண்டே இருப்பான். அதை விவரித்துக் கொண்டே வருவார். திடீரென நிறுத்தி முன்னால் நடந்த இன்னொரு நிகழ்வைச் சொல்லுவார். இப்படி நிகழ்காலத்திற்கும், இறந்த காலத்திற்கும் முன் பின் சென்று கதையை நகர்த்தும் பாணி மிகச் சிறப்பு.

 

கருத்துகள்

ஒரு வாசகர் சொன்னார்: “ஒருவருடைய வாழ்க்கைப் பயணம் நமக்குத் தெரியாது. சற்றே அருகே சென்று, நேரம் செலவழித்து, தெரிந்துக் கொண்டால் தான் உண்டு. அவர்கள் வாழ்வில் எதிர் கொண்ட சவால்கள், பெற்ற அனுபவங்கள், கற்ற அறிவு, சந்தித்த மனிதர்கள், பட்ட அவமானங்கள், கொண்ட குற்ற உணர்வுகள் எல்லாம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆகவே, சக மனிதர்களை, நாம் சந்திக்கும் மனிதர்களை மதிப்பும் மரியாதையோடும் நடத்துவதே நல்லது”. எவ்வளவு சரி!

 

********

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page