வலங்கைமானில் மொத்தம் மூன்று வீடுகளில் குடியிருந்தோம். அதற்குப் பிறகு நேராக தஞ்சாவூருக்குப் பயணம். ஆஞாவுக்குப் பணி மாற்றம்.
முதல் வீடு புதுத் தெரு வீடு.
இரண்டாவது வீடு பசலிக்கீரை வீடு.
மூன்றாவது வீடு மீரா வீடு.
அம்மா கோரையாற்றில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற போது நீந்திச் சென்று காப்பாத்தினார்களே அவர்கள் தான் மீராவின் அம்மா. அவர்களுக்குச் சொந்தமாக ஒரு வீடு மாரியம்மன் கோவில் அருகே இருந்தது. மாடி வீடு போன்று தோற்றமளிக்கும் ஓட்டு வீடு. அதற்குப் பக்கத்திலேயே ஒரு சிறிய ஓட்டு வீடு இருந்தது. அவர்கள் கண்ட பொருட்களைப் போட்டு வைக்கு வைத்திருந்த கூரை வீடு. அதை சரி பண்ணித் தருவதாக ஆஞாவிடம் சொல்லி, அதில் குடியிருக்க அனுமதித்திருந்தார்கள். அந்த வீட்டின் முன்னே ஒரு அடி பைப்பு இருக்கும்.
அங்கு குடி மாற்றி வந்துவிட்டோம்.
இங்கிருந்து ஆஞாவின் அலுவலகம் அருகில் இருந்தது. அது மட்டுமல்ல. அக்காக்களின் உயர் பள்ளிக் கூடமும் பக்கத்தில் இருந்தது. இப்பொழுது ஜூலி அக்காவும் உயர் நிலைப் பள்ளிக்கு வந்துவிட்டிருந்தார். அல்போன்ஸ் அக்காவும் நானும் ஆரம்பப் பள்ளியிலேயே இருந்தோம். ஜூலி அக்கா ஆறாவது ஏழாவது மற்றும் கலைமணி அக்கா எட்டாவது ஒன்பதாவது வகுப்பில் படித்துக்கொண்டிருக்க வேண்டும்.
மாரியம்மன் கோவிலிலிருந்து கூப்பிடு தூரத்தில் அதன் வலது புறத்தில் உள்ள சாலையில் வந்து திரும்புகிற முனையில் அந்த வீடு. படிகள் கிடையாது. சாலை உயரத்திலேயே வீடும் இருக்கும். ஒரு செவ்வக வடிவில் வீடு. செவ்வகத்தின் இடது ஓரத்தில் தெரு வாசற்படி. அதற்கு நேரே கொல்லை வாசல். செவ்வகத்தின் வலது ஓரத்தில் அடுக்களை. மற்றபடி அறைகளோ, முத்தமோ கிடையாது. அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் அருகாமையில் இருந்தால் போதும் என்பதாலோ என்னவோ ஓர் எளிய வீட்டிற்கு மாறியிருப்பார்கள் என நினைக்கிறேன். பசலிக்கீரை வீட்டிலிருந்து போகச்சொன்னதும், வேறு வீடு உடனடியாக கிடைக்காமல் இருந்ததும், ஆஞாவின் நண்பர் வீடு என்பதாலும் கூட இங்கு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
ஆனால் கொல்லை மட்டும் நீண்ட கொல்லை. அதில் ‘கோழி கொடாப்பு’ என்கிற கோழி வளர்க்கும் வீடு வைத்து நிறையக் கோழிகள் வளர்த்தது ஞாபகம் இருக்கிறது. அதனை பஞ்சாரம் என்றும் அழைப்பார்கள். எங்கள் வீட்டில் மரத்தாலும் கம்பியாலும் செய்யப்பட்ட கோழி வீடு இருந்தது. சில தென்னை மரங்கள். அப்பறம் கடைசியில் ஒரு கேணியும் கழிவறையும் இருக்கும். கொல்லையில் நின்று இடது புறம் பார்த்தால் மீரா அம்மாவின் வீடு தெரியும்.
நாங்கள் குடியிருந்த வீட்டின் வெளியே மிகச் சிறிய திண்ணை நீட்டமாக இருந்தது. கால் வைத்து உட்கார்ந்தால் திண்ணையிலும் தெருவிலுமாக குத்துக்கல்லாக உட்காரலாம்.
மற்ற வீடுகளில் இல்லாத மாதிரி இந்த சாலையில் பேருந்துகளும், இரட்டை மாட்டு வண்டிகளும், ஒத்தை மாட்டு வண்டிகளும், சைக்கிள்களும் போய்க்கொண்டு இருக்கும். எனக்கு வேடிக்கைப் பார்க்கத் தோதுவாக இருக்கும். எனக்கும் அல்போன்ஸ் அக்காவுக்கும் பள்ளிக்கூடம் கொஞ்சம் தூரம் தான். இருந்தாலும் நாங்கள் இருவரும் பத்திரமாகப் போய்த் திரும்புவோம்.
அந்த வீட்டுக்கு நேர் எதிரே ஒரு நெல் அறைக்கும் மில் இருந்தது. இன்றைக்கு அந்த மில்லைப் பற்றிய கதை தான்.
1960 களில் பெரும்பாலும் யாரும் கடைக்குச் சென்று அரிசி வாங்குவது கிடையாது. ஆச்சரியமாக இருக்கிறதா? பெரும்பாலான கடைகளில் அரிசி விற்க மாட்டார்கள். நெல் வாங்குவோம். அவிப்போம். காய வைப்போம். அதனை எடுத்துச் சென்று மில்லில் கொடுத்து அரைப்போம். அரிசி தனியாக, குறுனி தனியாக, தவிடு தனியாக வரும்.
அரிசி உங்களுக்குத் தெரியும். குறுனி என்றால் உடைந்த அரிசி. அதை வைத்து கஞ்சி செய்வார்கள். தவிடு என்பது நெல்லின் மேல் இருந்த மஞ்சளான தோல். அது தனியாகக் கொட்டும். அதை கழனித் தண்ணியிலோ, அரிசிக் கஞ்சியிலோ குழைத்து மாட்டுக்கும கோழிக்கும் உணவாகக் கொடுப்பார்கள். மில்லுக்குச் செல்லும் போது அரிசையும், குறுனியையும் , தவிட்டையும் தனித்தனியாக எடுத்து வர பாத்திரம் எடுத்துச் செல்லவேண்டும்.
1960களின் பின்பகுதியில் வந்த ‘பசுமைப் புரட்சி’ திட்டத்திற்குப் பின் தான் இராட்சச நெல் அரவை மில்கள் தோன்ற ஆரம்பித்தன. தேவைக்கு அதிகமாக உபரியாக நெல்லை உற்பத்தி செய்து அதனை இராட்சச நெல் அரவை மில்களில் அரைத்து மூட்டைகளில் நிரப்பி கடைகளில் விற்க ஆரம்பித்தார்கள். அப்பொழுதிலிருந்து தான் மண்ணிற்கும் மக்களுக்கும் கெட்ட காலம் துவங்கியது என்று நினைக்கிறேன்.
நான் சொல்கிற சிறிய நெல் அரவை மில்கள் வருவதற்கு முன்னர் உரல் தான் உபயோகத்தில் இருந்தது. எங்கள் வீட்டிலும் உரலும் உலக்கையும் இருந்தன. உரல் எண் 8 போல இருக்கும். மரத்தால் செய்திருப்பார்கள். கீழே உள்ள பகுதி நிலத்தில் நன்கு ஸ்திரமாக நிற்பதற்கும், மேலே உள்ள பகுதியில் தானியங்கள் போடுவதற்கான வசதியுடன் ஒரு குழி இருக்கும். இரண்டு மூன்று அடி உயரம் இருக்கும்.
அந்தக் குழியில் நெல்லையோ, கம்பையோ, கேழ்வரகையோ போட்டு, நீண்ட மொத்த கழி போல இருக்கும் உலக்கையால் தூக்கி தூக்கி குத்துவார்கள். தானியத்தில் உள்ள தோல் பிரியும். நெல் அரிசியாகும். நானும் அக்காக்களும் உலக்கையில் அரிசி குத்தியிருக்கிறோம். உலக்கையில் மேலும் கீழும் இரும்பினாலோ, செம்பினாலோ ஆன பூண் போட்டிருப்பார்கள்.
திருவிழாக்காலங்களில் கெட்டி உருண்டை, அதிரசம், முறுக்கு போன்ற தின்பண்டங்களைச் செய்வதற்கு உரலில் தான் தானியங்களை குத்துவோம்.
இதோடு அரைப்பதற்கு திருகை என்றொரு கல் இயந்திரமும் உண்டு. வட்டவடிவமான கல், ஏறக்குறைய ஓர் அடி சுற்றளவில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கும். உயரம் மூன்று நான்கு இஞ்ச்கள் தான் இருக்கும். அதன் நடுவில் ஒரு கம்பு ஆடாமல் அசையாமல் அடித்திருப்பார்கள். அந்தக் கீழ் கல் மேலே, மேல் கல் ஒன்று இருக்கும். அதன் ஓரத்தில் ஒரு கம்பு செருகி இருப்பார்கள். அந்த மேல்கல்லின் நடுவில் ஒரு ஓட்டை இருக்கும். அந்த ஓட்டை வழியாக மேல் கல்லை கீழ் கல்லின் நடுக் கம்பில் விட்டு செருகுவார்கள்.
இப்பொழுது மேல் கல்லின் ஓரத்தில் உள்ள கைப்பிடியைப் பிடித்துச் சுற்றினால் மேல் கல் மாத்திரம், கீழ்க்கல்லில் உள்ள அச்சை மையமாக வைத்து சுற்றும். மேல் கல்லில் உள்ள ஓட்டை சற்று அகலமாக இருக்கும். அதில் தானியங்களைப் போட்டு, கைப்பிடையைப் பிடித்துச் சுற்றினால் தானியங்கள் ஒட்டை வழியே உள்ளே போய் இரண்டு கற்களிடேயே நசுங்கி, ஓரங்கள் வழியே மாவாய்க் கொட்டும். ஒரு பெரிய தாம்பாலத்திலோ, முறத்திலோ அல்லது (பிற்காலங்களில்) செய்தித் தாளை விரித்தோ மாவை அள்ளிக் கொள்வார்கள்.
உரல் மற்றும் திருகையைப் பற்றிச் சொல்லியதால் குடக்கல் மற்றும் அம்மிக்கல்லைப் பற்றியும் இங்கு குறிப்பிட்டு விடலாம்.
குடக்கல் ஓர் அற்புதமான பொறி (இயந்திரம்). அதனை ஆட்டுக்கல் என்றும் அழைப்பார்கள். உரலில் குத்திய நெல் அரிசியான பிறகு, வெறும் மாவாக செய்ய வேண்டுமென்றால் திருவையில் (அல்லது திருகையில்) அரைக்கலாம். அதை வைத்து புட்டு, கொழுக்கட்டை, அதிரசம் போன்றவைகளைச் செய்யலாம். ஆனால் இட்லி, தோசை வேண்டுமென்றால் குடக்கல் தான் வேண்டும்.
அரிசியை நீரில் காலையில் ஊறப் போட்டு, மாலையில் குடக்கல்லில் போட்டு அரைத்தால் இட்லி மாவு வரும். குடக்கல் கருங்கல்லில் செய்வார்கள். அல்லது கருங்கல் போன்ற அழுத்தமான அதே நேரத்தில் கொத்துவதற்கு இலகுவான கற்களிலும் செய்வார்கள்.
குடக்கல்லின் அமைப்பும் ரசிக்கத்தக்கதாக இருக்கும். ஓர் அடி ஒண்ணேகால் அடி உயரத்தில் வட்டமாக இருக்கும். மேலே விரிந்து கீழே போகப் போக குறுகி இருக்கும். கல்லின் மேற்பகுதியில் சரியாக நடுவில் 5, 6 இஞ்ச் சுற்றளவில் ஒரு குழி இருக்கும். அந்தக் குழியில் உட்காருகிற அளவுக்கு ஒரு குழவி இருக்கும். அந்தக் குழவின் கீழ் பகுதி, குழியில் பொருந்துகிற அளவுக்கும், மேற்பகுதி ஒரு ஆள் கைப்பிடித்து சுற்றுகிற அளவுக்கும் இருக்கும். பிற்காலத்தில் அதன் மேல் ஒரு கழியும் சொருகி வைத்திருந்தார்கள்.
இப்பொழுது ஊறிய அரிசியையோ, உளுந்தையோ அரவைக்கல்லில் (அதான் குடக்கல்லுக்கு இன்னொரு பெயர்) போட்டு குழவியை வைத்து சுற்றிக் கொண்டிருந்தால் பதமாக இட்லி மாவு வரும்.அதை எடுத்து மூடி வைத்து விடுவார்கள். இரவு முழுக்க அதை நொதிக்க விடுவார்கள். காலையில் அது நொதித்து பொங்கி இருக்கும். பிறகு சுடச்சுட இட்லியோ, தோசையோ சுட வேண்டியது தான். இட்லிக்கென்று தனி அரிசியும் உண்டு.
இன்னுமொரு அற்புதமான இயந்திரம் அம்மிக்கல். செவ்வக வடிவத்தில், பொதுவாக ஒன்றரை அடி நீளமும் முக்கால் அடி அகலமும், முக்கால் அடி உயரமும் இருக்கும். சில பெரிய அம்மிகளும், இதைவிட சில சிறிய அம்மிகளும் உண்டு. கருங்கல்லால் ஆன அம்மியில், அதன் மேலே அங்கும் இங்கும் போய்வருகிறாற் போல நீள் வட்ட வடிவில் ஒரு குழவியும் இருக்கும். அந்தக் குழவியின் இரு மருங்கிலும், இரு கைகளைப் பிடித்துக் கொள்ள தோதுவாக கொத்தியிருப்பார்கள். அம்மியையும் குழவியையும் அவ்வப்போது கொத்திக் கொள்ள வேண்டும். அதற்காகவே,’அம்மி கொத்தலையோ அம்மி!!!’ எனக் கத்திக் கொண்டு சிலர் தெருவில் வருவார்கள்.
இந்த அம்மியில் தான் கொழம்புக்குத் தேவையான மிளகாய் சாந்து, தேங்காய் சாந்து போன்றவற்றை அரைப்போம்.
அடுத்தடுத்த அத்தியாயங்களில் தூசு துப்பட்டை எடுக்கும் சுளகு என்கிற முறம், உட்காரப் பயன்படுத்தப்பட்ட பனையோலையால் ஆன தடுக்கு, படுக்கப் பயன்படுத்தப்பட்ட கோரைப் புல்லால் ஆன பாய் அல்லது ஓலைப்பாய், தேங்காய் துருவ பயன்படுத்தப்பட்ட துருவு பலகை (திருகு பலகை), காய்கறிகள் வெட்டப் பயன்படுத்தப்பட்ட அரிவாள்மனை, மட்பாண்டங்கள், குழந்தைகள் படுத்துத் தூங்கப் பயன்படுத்தப்பட்ட ஏணை அல்லது தொட்டி என்கிற தூளி, வயலில் உழவு செய்யப் பயன்படுத்திய ஏர் கலப்பை, நீர் இறைக்கப் பயன்படுத்திய ஏற்றம், விளையாடப் பயன்படுத்திய பம்பரம், காத்தாடி போன்றவைகளைப் பற்றிச் சொல்கிறேன்.
அவைகளை பாதுகாத்து வையுங்கள். ஒரு காலத்தில் மின்சக்தி இல்லாமல் போகும் போது இவைகள் மீண்டும் பயன்படும். தற்சார்பு வாழ்க்கைக்கு மிக முக்கிய கருவிகள் இவை.
மில்லைப் பற்றிச் சொல்லப் போக, இவைகளையெல்லாம் பற்றிச் சொல்ல வேண்டியதாகி விட்டது.
ஊரில் உள்ள பெரும்பாலானோர் நெல்லை காயவைத்து, அரைத்து அரிசியை பயன்படுத்தியதால் பத்து நாளைக்கு ஒரு தடவை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை நெல்லை ஊறவைத்து வேகவைத்து காயவைக்க வேண்டும். வீட்டில் ஊற வைத்து வேக வைத்து விடுவோம். ஆனால் காய வைப்பதற்கு மில்லில் இருந்த சிமெண்ட் போட்ட களத்தில் இடம் பிடிக்க வேண்டும்.
எப்படி தெரியுமா இடம் பிடிப்போம்?
ஒரு சிறிய கூடையில் உமியோ, தவிடோ எடுத்துக் கொள்வோம். உமி என்பது நெல்லின் மஞ்சள் நிறத் தோல். தவிடு என்பது அரிசியின் முனையில் உள்ள உயிர்ப்பகுதி. எங்களைப் போன்றே சிறு பிள்ளைகளும் சிலப் பெரியவர்களும் உமிக் கூடையுடன் வருவர்.
மில்லின் பெரிய கேட் மூடியிருக்கும். எல்லோரும் வெளியே காத்திருப்போம். நான் அந்த கேட்டை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறு கையால் உமிக்கூடையைப் பிடித்திருப்பேன். இல்லையென்றால் யாராவது ஒரு அக்கா உமிக்கூடையை இடுப்பில் வைத்திருப்பார். மூன்று அக்காக்கள் இருந்தது எவ்வளவு சௌகரியம் பாருங்கள்.
மில்லின் உள்ளே இருந்து ஒருவர் வந்து கேட்டின் பூட்டைத் திறப்பார். நாங்கள் வேகமாக ஓடுவோம். அந்த சிமெண்ட் தளத்தில், உமியை வைத்து எல்லைக் கோடு போடுவோம். இது நாடு பிடிக்கும் போர் போன்ற அவசரகால நிலை உணர்வைக் கொடுக்கும். வேக வேகமாகப் போடுவோம். சில நேரம் செவ்வகமாக வரும். சில நேரம் சதுரம். பல நேரம் நெளிந்து வளைந்து ஒரு மாதிரியாக வரும். நாங்கள் கோட்டை இழுத்துக் கொண்டு வரும் போது மற்றவர் வந்து இடித்தால் இருவரது கோடும் கொஞ்சம் நெளிந்து போகும். அந்தக் கோட்டிற்குள் தான் பிறகு நெல்லைக் கொண்டு வந்து காயப் போட வேண்டி இருப்பதால், ஆளாளுக்கு பெரிய நாட்டை பிடிக்க போராடுவோம்.
இது எனக்கு பெரிய விளையாட்டு போல இருக்கும். போட்டி தான். ஆனால் சண்டை வராது. சிரிப்பொலிகள் தான் கேட்கும். யார் அதிக அளவு இடத்தைப் பிடிப்பது என்கிற போட்டி இருக்கும். என் சிறு வயதில் அந்தக் களம் மிகப் பெரிய கால்பந்தாட்ட மைதானம் போல் ஒரு பிரமை.
ஆனால் என்னுடைய 50வது வயதில் அக்காக்களோடு மறுபடி வலங்கைமான் சென்று எல்லா இடங்களையும் பார்த்த பொழுது அந்த மில்லுக்கும் போனோம். அப்பொழுதும் அந்த கேட் சாத்தியிருந்தது. வெளியில் நின்று பார்த்தோம். அந்த சிமெண்ட் களம் அப்படியே இருந்தது. அங்கங்கே பல வெடிப்புகள் இருந்தன. மில் ஓடவில்லை. பல வருடங்களுக்கு முன்பே மூடிவிட்டதாகச் சொன்னார்கள். இப்பொழுது அந்தக் களம் 25 அடிக்கு 10 அடி அகலத்தில் தான் இருந்தது. என்ன! இவ்வளவு சின்னதா? என எல்லோரும் வியந்தோம்.
சின்ன வயதில் பெரிது பெரிதாக தோன்றும் இடங்கள், நிகழ்வுகள், ஆட்கள், பிறகு பார்க்கும் போது அளவில் குறைந்து போகிறதே. ஏன்? சின்ன வயதில் மிகவும் உயரமாகவும், மிகவும் ஆழமாகவும், மிகவும் பெரியதாகவும், மிகவும் நீளமாகவும் தெரிகிறது. பிறகு மாறுகிறது.
இப்படித்தான் நம் வாழ்க்கையைப் பற்றிய, உலகத்தைப் பற்றிய புரிதலும் இருக்குமா?
*****
Picture courtesy:
கோழி பஞ்சாரம் https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.jpg
வலங்கைமான் கோவில் https://www.ullatchithagaval.com/2018/03/25/32757/
அடி பம்பு https://pambanmuprasanth.blogspot.com/2019/10/blog-post.html
அரவை இயந்திரம் By தகவலுழவன் - சொந்த முயற்சி, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=17492976
ஆட்டுக்கல் By Ravidreams at தமிழ் விக்கிப்பீடியா - Transferred from ta.wikipedia to Commons., Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=44068399
Comentarios