top of page

7. ஒரு சொட்டுப் பால்

Updated: Jun 10, 2021

அம்மாவிடம் கேட்டேன்.

“நான் சின்னப் பிள்ளை யா, பால் குடிக்கிற வயசுல இருக்கறப்போ எப்படி இருப்பேன்? நல்லப் பிள்ளையா நடந்துக்குவேனா?”


அம்மா சொன்னார்கள்.

“நீ பால் குடிக்கிற வயசுல, தாய்ப்பால் தவிர, பசும்பாலும் குடுப்போம். உனக்கு பசிக்க ஆரம்பிச்சா, அழ ஆரம்பிச்சுருவ. உனக்கு இப்ப பசிக்கும், அழுவுவ’ன்னு தெரிஞ்சி முன்னாடியே பாலை காய்ச்ச ஆரம்பிச்சுடுவேன். ஆனா பாலு கொதிச்சு வர்றதுக்குள்ள ஒனக்கு பொறுமை இருக்காது. தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சுடுவ. சத்தம் ஏழூருக்கு கேக்கும்.”


இதைக் கேட்டுக் கொண்டிருந்த அக்கா சொன்னது:

“பாரு அப்பயிலேர்ந்து உனக்கு பொறுமை இல்ல. எதிலயும் அவசரம்.”


அம்மா தொடர்ந்தார்கள்.

“அது மட்டுமில்ல. கொதிக்கிற பாலை குழந்தைக்கு உடனே குடுக்க முடியாதுல்ல. பாலை ஆத்தனும். அப்படி ஆத்தும் போது ஒரு சொட்டு பாலு சிந்தினாலும், ‘வீல்’ லுன்னு கத்த ஆரம்பிச்சிடுல… பால் ஆத்துற கிண்ணத்த பார்ப்ப… அப்பறம் சிந்தின பால் விழுந்த தரையைப் பார்ப்ப… ‘ஓ’ ன்னு அழுவ. கண்ணுலேர்ந்து தாரை தாரையா தண்ணி வரும்.”


அக்கா இடைமறித்து,

“வேஸ்ட்’டாக குடிக்கனும்னு நினைக்கறது நல்லது தான். ஆனா ஒரு சொட்டுக்காகவெல்லாம் குதிச்சி அழறது கொஞ்சம் டூ மச் தான்.”


நான் கேட்டேன்.

“அப்ப எனக்கு எத்தனை வயசு இருக்கும்?”


அம்மா தொடர்ந்தார்கள்.

“நாலஞ்சு மாச குழந்தையா இருக்கும் போதே இந்த அட்டகாசம் தான். மூணு பொம்பள புள்ளங்களுக்குப் பிறகு, ஆம்பள புள்ளையா நீ பொறந்ததால எல்லாருக்கும் செல்லம் நீ! எல்லா அக்காவும் தூக்கி வச்சுக்குங்க. சுத்து பத்து வீட்டுலேர்ந்து வர்றவங்க தூக்கி வச்சுவாங்க. மூணு வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிச்ச.”


இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆஞா சொன்னார்கள்.

“ எங்களுக்கு கல்யாணம் ஆகி மொதல்ல ஒரு ஆம்பள புள்ள பொறந்துச்சி. ஆனா சில நாட்கள்லயே இறந்துருச்சு. அம்மாவுக்கு அப்ப 14 வயசுதான். அந்தப் பையனுக்கு ஃபெலிக்ஸ்’னு பேரு வச்சோம்.


அதுக்கப்பறம் ரெக்ஸலின் மேரி (கலைமணி அக்கா) பொறந்துச்சு. மறுபடி ஒரு மகன் பொறப்பான்னு நெனச்சோம். அடுத்து ஜூலி (அக்கா) பொறந்துச்சு. பரவாயில்லை, அடுத்தது ஆம்பள புள்ளதான்னு நெனச்சப்போ அல்போன்ஸ் (அக்கா) பொறந்துச்சு. வரிசையா மூணு பொம்பள புள்ளயா? எப்பதான் பையன் பொறப்பான்’னு நெனச்சி கவலைப்பட்டோம்.


அப்பதான் ஒரு புதுமை நடந்துச்சு. என் பெரிய தங்கச்சி மேரியோட கணவர் அருளானந்தம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரு. அவர் தான் சொன்னாரு. ஓரியூர் புனித அருளானந்தரையும் (ஆங்கிலத்தில் அருளானந்தருக்கு ஜான் பிரிட்டோ எனப் பெயர்), இளையான்குடி பக்கத்தில் உள்ள சேத்தூர் புனித வேத போதகரையும் நெனச்சி வேண்டிக்குங்க. ஆம்பள புள்ள வேணும்னு வேண்டிக்குங்க. பொறக்கும்’னார்.


மதுரை போய், ரெண்டு கோயிலுக்கும் போனோம். வேண்டிகிட்டோம். அப்பறம் தான் நீ பொறந்த. அதனால வேத போதக ஜான் பிரிட்டோ’ன்னு பேர் வச்சோம்.


மொதோ புள்ள ஆம்பளபுள்ளயா பொறந்து இறந்துட்டு, பிறகு தொடர்ந்து மூணு பொம்பள புள்ளங்க பொறந்து, அதுக்கப்பறம் சாமிய வேண்டிகிட்டு நீ பொறந்ததால ரொம்ப செல்லமா வளர்த்தோம்.”


அக்கா சொல்லியது:

“அதனால தான் கீழ சொட்டுற ஒரு சொட்டு பாலுக்கு கூட வீல்’னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்க.”


நான் நினைத்துக் கொண்டேன்.


ஃபெலிக்ஸ் அண்ணன் இறந்து போன போது அம்மாவும் ஆஞாவும் எவ்வளவு துக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏன் அம்மாவுக்கு 14 வயசு ஆகும் போதே கல்யாணம் நடந்துச்சு? அந்த கதை தனி சினிமாவாக எடுக்க வேண்டிய கதை. திருப்பங்களுக்கும், சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமில்லாத கதை. அதை தனியாக ஒரு அத்தியாயத்தில் எழுதுகிறேன்.


ஃபெலிக்ஸ் அண்ணன் இறந்து போனப் பிறகு, மூன்று அக்காக்கள் பிறக்கும் போது ஓர் ஆண் பிள்ளையை எதிர்பார்த்து ஏமாந்தார்களா? தெரியவில்லை. ஆனால் அவர்களையும் சீராக வளர்த்து, ஒவ்வொருவரையும் நன்கு படிக்க வைத்து, எல்லோருக்கும் அரசு வேலை கிடைக்க வைத்தார்கள். ஆஞா அம்மாவின் தியாகத்தை எப்படிச் சொல்வது?


பால் காய்ச்சு முடிக்கிற வரையில் எனக்கு ஏன் பொறுமை இல்லாமல் இருந்தது? சிறு பிள்ளை என்பதாலா? அந்த குணம் இன்னும் தொடர்கிறதா? பல சந்தர்ப்பங்களில் பொறுமை இல்லாமல் தான் நடந்திருக்கிறேன். பொறுமையின் சிகரமான ஆஞாவுக்கும் அம்மாவுக்கும் எப்படி பொறுமை குறைவான பிள்ளையாய்ப் பிறந்தேன். ஆமாம். அது என்ன? கீழே விழுந்த ஒரு சொட்டு பாலுக்காக அழுவது? திமிர் தானே! பொறுமையாய் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல! தேவையில்லாமல் எரிச்சல் படுவதும், கோபப்படுவதும் என் இயற்கையாக இருந்திருக்கிறது. இருக்கிறது.


சாமியை வேண்டிக் கொண்டதால் தான் ஆம்பிளைப் பிள்ளையாக நான் வந்து பிறந்தேனா? எக்ஸ், ஒய் என குரோம்சோம்கள் பற்றித் தெரிந்த அறிவியலாளர்கள் இதை ஒத்துக் கொள்வார்களா? அப்படி அரிதாகப் பிறந்த நான் என் பெற்றோரின் ஆசைக்கேற்றாற் போல் நடந்துக் கொண்டேனா?


அது என்ன அவ்வளவு நீளமான பெயர். வேத போதக ஜான் பிரிட்டோ. நல்ல வேளை ‘வேத போதக’ என்கிற பகுதி ஆதியிலேயே மறைந்து விட்டது. நிறைய பேருக்கு ‘பிரிட்டோ’ எனத் தெரியும். பள்ளியில் அப்படித்தான் கூப்பிடுவார்கள். சில இடங்களில் ‘ஜான்’ என்றால் தான் தெரியும். சில நேரங்களில் எனக்கு புனைப் பெயர்களை நானே வைத்திருக்கிறேன்.


‘ஜான் பிரிட்டோ’ என்கிற போர்த்துகீசிய பெயரின் முழு வடிவம் ‘ஜான் டி பிரிட்டோ’ (John de Britto) என்பதாலும், தஞ்சாவூர் அருளானந்த நகர் இரண்டாவது தெருவில் ‘ஜான் டி பிரிட்டோ’ என்கிற பையனை எல்லோரும் ‘ஜான்டி’ என்று அழகாகக் கூப்பிடுவதாலும், என் பெயரை பல வருடங்களுக்கு ‘ஜான் டி பிரிட்டோ’ என்றே என்னை அழைத்துக் கொண்டேன்.


அப்பா பெயர் ‘பரிசுத்தம்’ என்பதால் எனது இனிஷியல் P என வரும். அதாவது P. ஜான் டி பிரிட்டோ. அதை சுருக்கி ‘P. ஜான் டி’ என ஸ்டைலாக வைத்துக் கொண்டேன். என்ன நினைத்தேனோ தெரியவில்லை, P. ஜான் டி என்பதை கொஞ்சம் மாற்றி ‘பூச்சாண்டி’ என்கிற பெயரில் கதை கவிதைகளை எழுதினேன். பூச்சாண்டி என்று ரப்பர் ஸ்டாம்பு அடித்து வைத்துக் கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


பெயர் பற்றிப் பேசுவதால் இதையும் சொல்லிவிடலாம்.


பூச்சாண்டி என்கிற பெயர் சிலருக்குப் பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில், கொஞ்சம் கவித்துவமாக ‘திரிகூட ராசப்ப கவிராயர்’ என்பதற்கு முன்னால் தஞ்சை எனச் சேர்த்து, தஞ்சை திரிகூட ராசப்ப கவிராயர் என பள்ளி கல்லூரி வாழ்க்கையின் போது எனக்கு நானே புனைப் பெயர் வைத்துக் கொண்டேன். பூச்சாண்டி எங்கிருக்கிறது. தஞ்சை திரிகூட ராசப்ப கவிராயர் எங்கிருக்கிறது. எதிர்பாராததை எதிர்பார்க்கும் குணத்தோடயே இருந்திருக்கிறேன்.


பிறகு ஒரு கட்டத்தில் கல்லூரி முடிந்து, வேலைக்குப் போன காலத்தில், பூச்சாண்டி, திரிகூடராசப்ப கவிராயர் என்று சொன்னால் சிரிப்பார்கள் என நினைத்து, சுருக்கமாக ‘குரு’ என்று வைத்துக் கொண்டேன். அப்பொழுது அறிமுகமான சிலர், இன்னும் என் பெயர் குரு என்று தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒரு மறைமுக ஆசை ஒளிந்து இருந்தது. குரு என்றால் தானாக ஒரு மரியாதை வந்து சேருமல்லவா! அதெல்லாம் 20, 25 வயசாகும் போது வந்த நினைவு.


தஞ்சையில் தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் சேரும் போது P. ஜான் பிரிட்டோ என்கிற பெயரை சுருக்கி P. J. பிரிட்டோ என்று அட்மிஷன் ரிஜிஸ்டரில் எழுதி விட்டார்கள். அது நான் டாக்டரேட் முடிக்கும் வரை எல்லா கல்வி நிறுவனங்கள் மற்றும் சான்றிதழ்களில் தொடர்ந்தது. என் மனைவியின் வோட்டர் ஜடி’யில் ஜான் பிட்சர் என்று தவறாக அச்சடிக்கப்பட்டது. மாற்றக் கோரினோம். என் வோட்டர் ஜடி’யில் தமிழில் ஜான் பிரிட்டோ எனவும் ஆங்கிலத்தில் John Ferito எனவும் தவறாக அச்சடிக்கப்பட்டது.


இதையெல்லாம் தாண்டி ஆஸ்திரேலியாவுக்கு Permanent Resident Visa கிடைத்து migrate ஆன போது surname Parisutham அதிக முக்கியத்துவம் பெற்று என்னை Mr. Parisutham என அழைத்தார்கள். John Britto Parisutham என்றோ John B. Parisutham என்றோ போட வேண்டி இருக்கிறது. என் ரோட்டரி கிளப்பில் John Parisutham என்று Britto என்பதையே வெட்டிவிட்டு போட்டார்கள். எனது Facebook கணக்கில் கூட John Parisutham எனப் பெயரை மாற்றினேன்.


என் புத்தகங்களில் ஆசிரியர் பெயர் P. ஜான் பிரிட்டோ எனப் போட்டு வந்தேன். மலேசியாவில் ஒரு நண்பர் ‘ஏன் உங்களுக்கு ஆங்கில இனிஷியல் தேவையா?’ என வினவினார். அது வரை அதைப்பற்றி யோசிக்காத நான் ‘ஆமாம்! ஏன் ஆங்கிலத்தில் இனிஷியல் போடுகிறோம்?’ என என்னையே கேட்டுக்கொண்டேன். அடுத்த புத்தகத்தில் ‘பரிசுத்தம் ஜான் பிரிட்டோ’ எனப் போட்டேன். இந்தியாவில் ஒரு நண்பர் கேட்டார். ‘பரிசுத்தம்’ என்பது வடமொழி. தூயவன் என்பதே தமிழ். ஜான்பிரிட்டோ ஆங்கிலப் பெயர். என்றார். ஒரு நல்ல தமிழ்ப் பெயராக மாற்றிக் கொள்ளலாமா என பல நாள் நான் நினைப்பதுண்டு.


பெயரில் என்ன இருக்கிறது?


பெயரில் எல்லாம் இருக்கிறது.


*****

14 views0 comments

Comments


bottom of page