top of page

8. பேதிக்கு போக விளக்கெண்ணெய் கொடுத்த கதை

வலங்கைமான் புதுத்தெரு வீட்டிலிருந்து காலி பண்ணி இன்னொரு வீட்டிற்குப் போனோம். அதை பசலிக்கீரை வீடு என்று சொல்வோம். ஏனென்றால் அந்த வீட்டிலும் ஒரு முற்றம் இருக்கும். ஆனால் அந்த முற்றத்தில் ஒரு பந்ல் இருக்கும். ஒரு மூலையில் பசலிக்கீரை கொடி நட்டு அது வளர்ந்து பந்தல் முழுக்கப் பரவி இருக்கும். பசலிக்கீரை பண்ணை நிறத்திலும், கொடி கத்தரிப்பூ நிறத்திலும் இருக்கும். அந்த நிறக்கலவை எனக்கு ஏனோ மிகவும் பிடிக்கும்.


மற்ற இலைகள் போல் இல்லாமல் தடித்து ‘கொழு, கொழு’ வென்று இருக்கும். கணுக்களுக்கிடையே பூ பூத்து காய் காய்க்கும். பூ வெள்ளை நிறமும் கத்தரிப்பூ நிறமும் கலந்து மனதை வருடும். பழங்கள் கருநீல நிறத்தில் இருக்கும். கொடிகள் ஒன்றுக் கொன்று பின்னி, அழகிய சொற்கள் பின்னிய கவிதை போல இருக்கும். இலைகளைத் தொட்டுத் தடவினால் வருகிற உணர்வை எழுத்தில் வடிக்க முடியாது.


அம்மா அடிக்கடி பசலிக்கீரையைப் பறித்து சாம்பார் வைப்பார்கள். ஏழு ஊருக்கு அதன் மணம் நிரம்பிக் கிடக்கும். அதன் சுவைக்கு அத்தனை உலகத்தையும் தராசில் இட்டு கொடுத்தால் கூட ஈடு ஆகாது. அம்மாவின் கைராசியா? அல்லது பசலிக்கீரையின் பண்பா? எது எப்படி இருந்தாலும் அம்மாவின் கையில் பசலிக்கீரை சேரும் போது அந்த சாம்பாருக்கு அண்டத்தின் மதிப்பே அடுத்ததாகிப் போய்விடுகிறது.


எல்லாக் கீரைகளும் ஊட்டச் சத்துக்களாக இருந்தாலும் கொடிப் பசலிக்கீரை, எனக்கென்னவோ உயரிய ஊட்டச்சத்தாகத் தெரியும். இதனுடைய சிறப்பு என்ன தெரியுமா? சிறிய தண்டை வெட்டி, மண்ணில் வைத்தால், ‘இதோ! வர்றேன்.... உங்களுக்கு ஊட்டச்சத்து தர்றதுக்காகவே சீக்கிரம் வளர்றேன்…’ எனச் சொல்லிக்கொண்டு ‘பட,பட’ வென வளரும். அதன் சிறப்பே, வெட்டி வைத்தாலும் வளரும். விதை போட்டாலும் முளைக்கும்.

இதுல நிறைய வகைகள் இருக்கு. பின்னாளில் நாங்கள் கானூரில் ஒரு பண்ணை வீடு வைத்து தோட்டம் போடும் போது, செடி பசலை என்கிற குத்துச் செடியினத்தையும், தரையில் படர்ந்து வளர்கிற தரைப் பசலையையும், கொடிப் பசலையோடு சேர்த்து வளர்த்தோம்.


அம்மா சொல்வாங்க.


“தம்பி! பசலைக்கீரையில ரொம்ப இரும்பு சத்து இருக்குப்பா. இரத்தம் ஊர்றதுக்கு ரொம்ப நல்லது. நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது. உடம்புக்கு குளிர்ச்சி. மூளைக்கு சக்தி. நல்லா வெளிக்கி போகும்.”

புதுத்தெரு வீடு போலவே இந்த வீடும் இருக்கும். ஆனால் அதைவிட ரெண்டு மூன்று படிகள் கூட இருக்கும். வீடு உயரத்தில் இருக்கும். ஆனால் திண்ணை கிடையாது. முத்தத்தில் பசலைக் கீரை பந்தல் வீட்டையே அழகாக்கும். புதுத்தெரு வீடு போல கொல்லைப்புறம் உண்டு. ஆனால் கடைசியில் வாய்க்காலோ, அதன் தொடர்ச்சியாக வயல் வெளியோ கிடையாது. மற்றபடி ஏறக்குறைய புதுத் தெரு வீடு போலத்தான்.

அந்த வீட்டில் இரண்டு நிகழ்வுகள் நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஒன்று விளக்கெண்ணெய் குடிக்காததால் ஜூலி அக்காவை சுற்றி தூக்கி எறிந்தது. இன்னொன்று ஒரு பிச்சைக்காரர் வீட்டுக்குள் வந்ததால் விறகு எடுத்து அவரை தெருவில் விரட்டி விரட்டி அடித்தது.

ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

எங்கள் ஆஞா மிகவும் அமைதியானவர். அதிகம் பேச மாட்டார். எட்டு குழந்தைகளில் யாரையும் அவரது வாழ்நாளில் தொட்டு அடித்தது கிடையாது. வார்த்தைகளால் திட்டியது கிடையாது. கோபமாக முறைத்தது கூட கிடையாது. பொறுமையின் சிகரம். அவரிடமிருந்து நாங்கள் கற்க வேண்டிய மிகப் பெரிய குணம் அது. ஆனால் கற்கத்தான் முடியவில்லை.

அப்பொழுதெல்லாம் ‘பேதிக்கு’ போவதற்கு விளக்கெண்ணெய் குடிக்கக் கொடுப்பார்கள். ‘பேதிக்கு’ போவதென்றால் வயிற்றைக் கழுவுவது. பெருங்குடலிலும் சிறுகுடலிலும் தேங்கி உள்ள நாள்பட்ட கழிவுகளை ஒரேயடியாக வெளியே அனுப்பி சுத்தம் செய்வது. விளக்கெண்ணெய் ஆமணக்கு என்கிற தாவரத்திலிருந்து வருவது தான். அதை துவக்கத்தில் விளக்குகளுக்கு ஊற்றி எரியவைக்க பயன்படுத்தியிருந்ததால்,விளக்கெண்ணெய் என்றே பரவலாக அறியப்பட்டது. இல்லையென்றால் ஆமணக்கு எண்ணெய் என்றே சொல்ல வேண்டும். அந்த விளக்கெண்ணெய் கொடுப்பது, குடும்பமாக குடிப்பது பொதுவாக எல்லார் வீட்டிலும் நடக்கிற ஒன்று தான். எங்கள் வீட்டில் கொஞ்சம் பிரசித்தம்.

அது ஒரு பெரிய சடங்கு.

ஆஞா தான் விளக்கெண்ணெய் கொடுப்பார்கள். பிள்ளைகள் எல்லோரும் வரிசையாக நிற்க வேண்டும். முதலில் கலைமணி அக்கா, அடுத்து ஜூலி அக்கா, அடுத்து அல்போன்ஸ் அக்கா. பிறகு நான். வலது கையை நீட்டிக் கொண்டு நிற்போம். அம்மா வந்து வலது கையில் ஒரு கரண்டி சர்க்கரையை வைப்பார்கள். அப்பொழுது வெள்ளைச் சீனி அறிமுகமாகாத நேரம் என்று நினைக்கிறேன்.

ஆஞா அருகில் ஒரு கூஜாவில் விளக்கெண்ணெய் இருக்கும். அவர்கள் கையில் ‘சங்கு’ இருக்கும். அப்பொழுதெல்லாம் ஸ்பூன் என்கிற கரண்டி ரொம்ப அறிமுகமில்லாத நேரம். சங்கு சிறிய குழியுடன் ஒரு பக்கம் திரவம் வழிந்து வாயிலு ஊற்றுமளவுக்கு அகலமாக துவங்கி கூராக முடிகிற சிறு வாய்க்கால் போன்ற அமைப்புடன் இருக்கும். அது நீண்ட காம்பு பகுதி. மறுபக்கம் கட்டைவிரலை வைத்துக் கொள்ளுமளவுக்கு ஒரு பிடி இருக்கும். பொதுவாக பால் சங்கால் செய்திருப்பார்கள். அதை வெள்ளி, தங்கம், அலுமினியம் போன்ற உலோகங்களிலும் செய்திருப்பார்கள்.

தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்க முடியாதப் பிள்ளைகளுக்கு பாலை இதில் ஊற்றிக் கொடுப்பார்கள். மருந்தையும் இதில் ஊற்றிக் கொடுப்பார்கள். சங்கை எடுத்தாலே ஏதோ மருந்து என்று குழந்தைகள் திமிறுவதையும் அழுவதையும் பார்க்கலாம். அம்மா என்னை மடியில் போட்டுக் கொண்டு, தொடையை ஏற்றி இறக்கி தாலாட்டிக் கொண்டு, இடது கையில் திமிறாமல் தலையை பிடித்துக் கொண்டு, வலது கையால் வலுக்கட்டாயமாக மருந்தை ஊற்றியிருக்கிறார்கள். அழுது புலம்பினாலும் சங்கை வைத்து மருந்தை எப்படியாவது வாயில் செலுத்திவிடுவார்கள்.

இங்கு ஒரு இலக்கியக் குறிப்பு சொல்வது நலம். ‘பிள்ளைத் தமிழ்’ என்கிற தமிழ் இலக்கியத்தில், நான் வர்ணிக்கும் இந்த சங்கை, ‘பாலாடை’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. தமிழர்களின் இந்த அரிய கண்டு பிடிப்புக்கு, உலக சுகாதார நிறுவனம் உட்பட, பாலாடை என்கிற தமிழ் சொல்லாக்கத்தேயே பிற மொழிகளிலும பயன் படுத்துகின்றனர். இப்பொழுது நெகிழிக் குப்பிகள் சங்குகளாக பயன்படுத்துவது உடலுக்கு நல்லதல்ல.

சரி. கதைக்கு வருவோம்.

அப்படித்தான் ஒரு நாள் பேதிக்கு’க்கு விளக்கெண்ணெய் உட்கொள்ளும் நாள். வரிசையாக நின்றாகி விட்டது. அடிக்கடி கழிவறைக்கு போவதற்கு ஏற்றாற் போல அம்மணமாகவே நிற்கிறேன். நாலு வயது குழந்தை தானே!

ஆஞா கிணத்தடியில் உள்ள கட்டையில் உட்கார்ந்துக் கொண்டார்கள். அருகில் விளக்கெண்ணெய். அம்மா எங்கள் கைகளில் சக்கரை வைத்து விட்டார்கள். கலைமணி அக்கா குனிந்து, கண்ணை மூடிக்கொண்டு, வாயை ‘ஆ’வெனக் காட்ட, ஆஞா விளக்கெண்ணையை வாயில் ஊற்றினார்கள். விளக்கெண்ணெய் பயங்கரமாய் கசக்கும். சடாரென விழுங்கி விட்டு படாரென சர்க்கரையை வாயில் போட்டார்கள்.

அடுத்து ஜூலி அக்கா. அதுவரை வரிசையில் நின்றிருந்த ஜூலி அக்கா திடீரென ‘நான் குடிக்க மாட்டேன்’னு சொல்லிட்டு ஓடிப் போய் ஒரு தென்னை மரத்தடிக்குப் பின்னால் நின்று கொண்டது.


“வா…”

“வரமாட்டேன்…”

“அக்கா குடிச்சுது இல்ல… வா”

“வரமாட்டேன்”

“வந்து குடிச்சிக்கோ”

“குடிக்க மாட்டேன்”

“இப்ப வந்து புடிச்சேன்… அடி தான் விழும்”

“நான் ஓடிப் போயிடுவேன்.”

“மேரி!… அழைச்சிட்டு வா”

அம்மா ஜூலி அக்காவை நோக்கிப் போகிறார்கள். அதற்குள் சில தென்னை மரங்களைத் தாண்டி ஓட்டம் பிடிக்கிறார். நானும் அல்போன்ஸ் அக்காவும் தலையை இங்கும் அங்குமாக திரும்பி ஜூலி அக்கா ஓடுகிற பக்கமெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆஞாவுக்கு கொஞ்சம் கோவம் வந்துவிட்டது.

“அல்போன்ஸ், நீ குடி” எனச் சொல்லி ஊற்ற அடுத்தது நான். ஜூலி அக்காவை அம்மா வரச்சொல்லி அழைப்பதையும், ஜூலி அக்கா மறுத்து டிமிக்கி கொடுப்பதையும் பார்த்துக் கொண்டே என் வாயில் விளக்கெண்ணெய் போகுது. சர்க்கரை தின்பதற்காகவே நான் விளக்கெண்ணையை விரும்பி வாங்கிக் கொள்வேன்.

ஆஞா எழுந்தார்கள்.

ஜூலி அக்காவைப் பிடித்து விட்டார்கள். நல்லபடியாகச் சொல்லிப்பார்த்தார்கள்.

“இப்படித்தான் அன்னக்கி, காதுல எறும்பு போனதும், எண்ணைய ஊத்தக் கூப்பிட்டா, ஓடுன. இன்னக்கி, விளக்கெண்ணெய்க்கு வீம்பு புடிக்கிற. குடிச்சிடு. இல்லன்னா நடக்கறதே வேற” என பயமுறுத்தியும் பார்த்தார்கள். மாட்டவே மாட்டேன்’ என அடம் பிடித்தது அக்கா. அன்றைக்கு என்னவோ விளக்கெண்ணெய் மேல் அவ்வளவு வெறுப்பு அக்காவுக்கு.

இரண்டு கைகளையும் பிடித்து தூக்கினார்கள். ரெண்டு சுத்து சுத்தினார்கள். “அப்படியே தூக்கிப் போட்டுடுவேன்…குடிக்கிறியா இல்லையா?” என ஆஞா கேட்க கேட்க, முதலில் மறுத்த அக்கா, தூக்கிப் போட்டால் வருகிற உடம்பு வலியை எண்ணோயோ என்னவோ, கடைசியில் வழிக்கு வந்தது. ஆஞாவின் ‘தூக்கிப் போட்டுடுவேன்’ மந்திரம் வேலை செய்தது. வேண்டா வெறுப்பாக, கன்னத்தில் நீர் வழிய குடித்த அக்காவிடம் அம்மா சொன்னார்கள்.

“பாப்பா! விளக்கெண்ணெய் குடிச்சி, வெளிக்கிப் போனா, குடல் சுத்தமாயிடும். சீக்கே வராது.”

ஆஞா சொன்னார்கள்.

“ நாலு மாசத்துக்கொரு முறை பேதிக்குக்கு விளக்கெண்ணெய் குடிக்கனும்’னு நம்ம குடும்பத்துல செஞ்சிட்டு வரோம். எதுக்கு? ஆஸ்பத்திரியிலே போய் டாக்டர்கிட்ட காசை குடுக்கறதுக்கு பதிலா நாமளே நோய் வராம பாத்துக்கறோம்.”

பிறகு என்னைப் பார்த்துச் சொன்னார்கள்.

“ தம்பி! குடிச்சி அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்கப்பறம் வெளிக்கி போகும். சாதாரணமா போற மாதிரி இல்லாம தண்ணியா அடிச்சிட்டு போகும். நாலஞ்சு தடவையோ, அல்லது பதினைஞ்சி இருபது தடவையோ அப்படி போகும். பயப்படக்கூடாது. கொஞ்சம் சோர்வா இருக்கும்.”

அப்பொழுது அம்மா இடைமறித்தார்கள்.

“அதுக்குத்தான் அரிசி கஞ்சி உப்பு போட்டு வச்சுருக்கேன். வெண்ணெய் எடுத்த மோர் அந்த சட்டியில வச்சுருக்கேன். அப்பப்ப நான் குடுக்கறேன். குடிச்சிக்கனும். என்ன?”

சரி என்பது போல் தலையாட்டினேன்.

“நேத்து தலைக்கு எண்ணெய் தேய்ச்சி குளிச்சோம். இன்னக்கி வெளக்கெண்ணெய் குடிக்கிறோம். எங்க கிளாஸ்ல இருக்க கமலா கூட அவுங்க வூட்டுல இப்படித்தான் பண்ணுவாங்கன்னு சொன்னா” என அல்போன்ஸ் அக்கா சொன்னார்.

“ஆமா! நேத்து எண்ணெய் தேச்சி குளிச்சோன உடம்பு உஷ்ணம் போயிடும். இன்னக்கி வயித்துல உள்ள அசடெல்லாம் போயிடும். ஒடம்புக்கு ஒரு வியாதியும் வராது.” என அம்மா சொன்னார்கள்.

ஆஞா தொடர்ந்தார்கள்.

“எல்லாரும் நல்லா போனப்பிறகு, கிணத்துலேர்ந்து தண்ணி எறைச்சி ஊத்துறேன். குளிச்சிடலாம்…. ஆமா! மேரி…. மதிய சாப்பாட்டுக்கு என்ன பண்ணி இருக்க?”

“ சோறை நல்லா குழைச்சி வடிச்சிருக்கேன். மிளகு ரசம் வச்சுருக்கேன். ராத்திரிக்கு இட்லி சுட்டுக்கலாம். மோரை தொட்டுகிட்டு திங்கலாம்.”

அதற்குள் ஒவ்வொருத்தராக ‘வெளிக்கி’ப் போனோம். நீ போ, நா போ’ வென ஒரே கூத்தாகத்தான் இருக்கும்.

விளக்கெண்ணெய் குடிக்கும் நாட்களில் சீக்கிரமாகவே தூங்கிவிட வேண்டும்.

இங்கு ஒரு இலக்கியக் குறிப்பைக் கொடுத்து விடுவோம். தேரையர் சித்தர் எழுதிய ‘பதார்த்த குண சிந்தாமணி’ என்கிற நூலில் உள்ள பாடல்.


நன்புபெறவுண்டபின் புகுறு நடையிங்கொள்ளோம்

நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே. (1507)


ஆறுதிங்கட்கொரு தடவை மனமருந் தயில்வோம்

அடர்நான்கு மதிக்கொருக்காற் பேதியுறை நுகர்வோந்

தேறுமதியொன்றரைக்கோர் தரநசியம் பெறுவோந்

திங்களரைக்கிரண்டு தரஞ்சவளவிருப்புறுவோம் (1508)


இதன் பொருள்.


நல்ல உணவுக்குப் பிறகு சிறிது நடை நடப்போம். ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை வாந்தி மருந்து உண்போம். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து உண்போம். ஒன்றரை மாதத்திற்கு ஒரு முறை மூக்கிற்கு மருந்திட்டுக் கொள்வோம். வாரம் ஒரு தடவை முகச் சவரம் செய்து கொள்வோம். நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்.

இப்படியாக, பேதிக்குப் போக விளக்கெண்ணெய் குடித்த நிகழ்வு முடிந்தது. அடுத்தது, எதிர்பாராமல் வீட்டிற்குள் புகுந்த பிச்சைக்காரரை, வீதி வரைச் சென்று விறகால் அடித்த கதை.


*****


27 views0 comments

コメント


bottom of page