top of page

'தி பிக் பென்குயின்’ - டாஸ்மேனியா


SBS Radio Tamil -இல் இக்கதையைக் கேட்க......கீழ்க்கண்ட நீல நிற இணைப்பைச் சொடுக்கவும்.

ree

த பிக் பென்குயின்

த பிக் பென்குயின் பற்றிய கதை தான் இன்றைக்குச் சொல்லப்போகிறேன். டாஸ்மேனியாவில் பென்குயின் என்ற ஓர் அழகிய கடற்கரை நகரம் இருக்கிறது. அதன் வடமேற்கு கடற்கரையில் தான் அந்த நகரம் இருக்கிறது. அதன் வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள, 1861 ம் ஆண்டுக்குப் போக வேண்டும். முதன் முதலில் குடியேறியவர்கள், மர வியாபாரத்திற்கு பெயர் போனவர்கள்.

 

1875ம் வருடம். ஒரு நாள், Ronald Campbell Gunn என்ற ஒரு Botanist அந்த கடற்கரையோரம் நடந்து போகிறார். அங்கே சிறிய அளவு பென்குயின்கள் நிறைய இருப்பதைப் பார்க்கிறார். அதே வருடம் அக்டோபர் 25 ஆம் தேதி அந்த நகரத்திற்கு ‘பென்குயின்’ என்று பெயர் வைக்கலாம் என்று அவர் தான் பரிந்துரைக்கிறார். நகர மக்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். 

 

ஆனால் 1875 ஆம் ஆண்டுக்கு முன்பு சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை நினைவு கூர்வது நல்லது. உங்களுக்குத் தெரியும். 1850களில் விக்டோரியா மாநிலத்தில் தங்க வேட்டை நடந்த நேரம். அப்பொழுது இந்த பென்குயின் நகரத்தில் அடர்ந்து காடு இருந்தது. கடற்கரைக்கு அருகாமையில் இருந்ததால், மரங்களை ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக ‘பென்குயின்’ நகரம் திகழ்ந்தது. 1870களில் வெள்ளியையும் நெப்டியூனையும் தேடி சுரங்கங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை அவ்வளவாக வெற்றிகரமான தொழிலாக அமையவில்லை.

 

பென்குயின் நகரத்திற்கு இரயில்வே

பிறகு 1901 ஆம் ஆண்டு பென்குயின் நகரத்திற்கு இரயில்வே பாதை அமைக்கப்பட்டது. அதுவரை கடல் வழி வாணிகமாக இருந்தது, அப்பொழுது தரை வழி வாணிகமாக மாறியது. 1907 ஆம் ஆண்டு, பென்குயின் நகரத்திற்கு, முதல் நகராட்சி மன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

1975 ஆம் ஆண்டு பென்குயின் நகரத்தின் நூற்றாண்டு விழா வந்தது. அதைப் பெரிதளவில் கொண்டாட வேண்டும் என்று நகராட்சி மன்றமும், நகர மக்களும் முடிவு செய்தார்கள். அப்பொழுது பென்குயின் வியாபாரிகள் சங்கத்தின் தலைவராக ஜார்ஜ் டேனியல்ஸ் என்பவர் இருந்தார்.

      “நம்ம நகரத்தின் பெயர் பென்குயின். அதன் நினைவாக பெரிய பென்குயின் சிலையை இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்ட ஆண்டில் உருவாக்கலாம். அது நம் நகரத்தின் அடையாளமாக இருக்கும்” என்ற யோசனையை முன்வைத்தார்.

 

3.15 மீட்டர் உயரமுள்ள ஒரு சிலை

R. M. Foster என்ற வடிவமைப்பாளர் டேனியல்ஸ்-ன் மகள் வைத்திருந்த குழந்தைகள் கதைப் புத்தகத்தில் வரையப்பட்டிருந்த பென்குயின் படத்தைப் பார்த்து 3.15 மீட்டர் உயரமுள்ள ஒரு சிலையை வடிவமைத்தார். Railton -ஐச் சேர்ந்த The Goliath Cement Company அந்தச் சிலையை செய்து கொடுத்தது.

 

த பிக் பென்குயின், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று பென்குயின் கடற்கரையில் உள்ள தபால் அலுவலகத்திற்கு எதிரே திறக்கப்பட்டது. அது உடனடியாக அந்த நகரத்தின் அடையாளமாக மாறியது. பாஸ் ஸ்ட்ரெய்ட்டைப் பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்தச் சிலை, கடற்கரையில் கூடு கட்டும் சிறிய பென்குயின்களுடன் நகரத்தின் அடையாளத்தை பிரதிபலித்தது.

 

பண்பாட்டு அடையாளம்

த பிக் பென்குயின் கட்டிய பிறகு, நகரத்தின் தோற்றமே மாறி விட்டது. அது ஒரு பெரிய பண்பாட்டு அடையாளமாக மாறி விட்டது. நகரம் முழுக்க பென்குயின் மயமாக மாறி விட்டது. பென்குயின் வடிவத்தில் தடுப்புக் கம்பங்கள். பென்குயின் வடிவத்தில் குப்பைத்தொட்டிகள். பென்குயின் கொண்ட சுவர் ஓவியங்கள்.

 

Shirly Good என்ற பென்குயின்வாசியைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. கிறிஸ்மஸ், ஈஸ்டர், ANZAC நாள், NAIDOC வாரம் மற்றும் நிதி திரட்டல் நிகழ்வுகளுக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக கையால் செய்யப்பட்ட உடைகளை இந்தச் சிலைக்கு அணிவித்து வருகிறார். த பிக் பென்குயின், பென்குயின் மார்க்கெட் மற்றும் ஹெரிடேஜ் டிரெயில் போன்ற அம்சங்களால் பென்குயின் நகரம் ஒரு துடிப்பான சுற்றுலாத் தளமாக உயர்ந்துள்ளது.

 

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி, த பிக் பென்குயின் சிலைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அங்கீகாரம் கிடைத்தது. ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 150 Big Things இருக்கின்றன. குயின்ஸ்லாந்தில் உள்ள பிக் பைனாப்பிளுக்கு அடுத்தபடியாக, த பிக் பென்குயின் தான் டாஸ்மேனிய பாரம்பரிய பதிவேட்டில் ஏறிய இரண்டாவது Big Thing.

 

கடற்கரைச்சாலையில், மெயின் ரோட்டில் பெருமையுடன் நிற்கும் த பிக் பென்குயின், டாஸ்மேனியாவிலேயே அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. நீங்கள் த பிக் பென்குயின் சிலையைப் பார்க்க, பென்குயின் நகரத்திற்குப் போனால் என்னென்ன செய்யலாம் என்னென்ன பார்க்கலாம் என்று சுருக்கமாகப் பார்ப்போம்.

 

பென்குயின், டாஸ்மேனியாவின் வடமேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு அழகிய சிறிய நகரமாகும். இது சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கை அழகு, கலாச்சார அனுபவங்கள் மற்றும் உள்ளூர் வசீகரத்தை வழங்குகிறது. தி பிக் பென்குயின் சிலையைத் தவிர, பென்குயினில் பார்க்கவும் செய்யவும் பல ஈர்க்கக்கூடிய அம்சங்கள் உள்ளன.

 

ஈர்க்கக்கூடிய அம்சங்கள்

பென்குயின் ஹெரிடேஜ் டிரெயில் (Penguin Heritage Trail)

இந்த சுய வழிகாட்டி நடைப்பயணம், பென்குயின் நகரத்தின் வரலாற்றை ஆராய ஒரு சிறந்த வழியாகும். 19ஆம் நூற்றாண்டு கட்டிடங்கள், பழைய தேவாலயங்கள், மற்றும் நகரத்தின் மர வியாபாரம் மற்றும் ரயில்வே வரலாறு பற்றிய தகவல்களை இந்த பயணம் வழங்குகிறது. 

 

ஜான்சன்ஸ் பீச் (Johnsons Beach)

பென்குயினின் மையத்தில் அமைந்த இந்த அமைதியான கடற்கரை, பாஸ் ஸ்ட்ரெய்ட்டின் அழகிய காட்சிகளை வழங்குகிறது. இது நீச்சல், பிக்னிக், அல்லது ஓய்வெடுக்க ஒரு சிறந்த இடம்.  சூரிய அஸ்தமன காட்சிகள் மற்றும் கடற்கரையில் உள்ள பென்குயின் கருப்பொருள் அலங்காரங்கள். 

கோடை மாதங்களில் கடற்கரை மிகவும் பிரபலமாக இருக்கும்.

 

டயல் ரேஞ்ச (Dial Range) 

பென்குயினுக்கு அருகில் அமைந்த இந்த மலைத்தொடர், இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த இடமாகும். இது நடைபயண பாதைகள், அருவிகள், மற்றும் பூர்வீக தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்டுள்ளது.  மவுண்ட் மாண்ட்கோமரி மற்றும் ஃபெர்ன்டேல் அருவி. 

பறவைகள் கண்காணிப்பு மற்றும் புஷ்வாக்கிங்.

 

பென்குயின் மார்க்கெட் (Penguin Market) 

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் இந்த உள்ளூர் சந்தை, கைவினைப் பொருட்கள், உள்ளூர் உணவுகள், மற்றும் புதிய விளைபொருட்களை வழங்குகிறது. 

உள்ளூர் கைவினைஞர்களைச் சந்திக்கவும், டாஸ்மேனிய உணவு வகைகளை ருசிக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பு.  ஆர்னால்ட் ஸ்ட்ரீட், பென்குயின் அண்டர்கவர் மார்க்கெட்.

 

லிட்டில் பென்குயின் ஆப்சர்வேஷன் சென்டர் (Little Penguin Observation Centre) 

பென்குயினின் பெயருக்கு ஏற்றவாறு, இந்த மையம் சிறிய பென்குயின்களை (லிட்டில் பென்குயின்கள்) அவற்றின் இயற்கை வாழிடத்தில் காண ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மாலை நேரங்களில், பென்குயின்கள் கடலில் இருந்து கரைக்குத் திரும்புவதைப் பார்க்கலாம்.  வழிகாட்டப்பட்ட பயணங்கள் மற்றும் கல்வி அனுபவங்கள்.  செப்டம்பர் முதல் மார்ச் வரை இது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். முன்பதிவு பரிந்துரைக்கப்படுகிறது.

 

அங்கு சென்றால் நீங்கள் செய்ய வேண்டியவை

கடற்கரையில் நடைபயணம் செய்யலாம். மற்றும் புகைப்படம் எடுக்கலாம். பென்குயினின் கடற்கரைப்பகுதி, பாஸ் ஸ்ட்ரெய்ட்டின் பரந்த காட்சிகளுடன் புகைப்படம் எடுக்க ஏற்றது. கடற்கரையோர பாதைகளில் நடந்து, பென்குயின் கருப்பொருள் குப்பைத் தொட்டிகள் மற்றும் பிற அலங்காரங்களை ரசிக்கலாம். சூரிய உதயம் அல்லது அஸ்தமன நேரத்தில் செல்லுங்கள். அதுவே நல்லது.

 

உள்ளூர் உணவு அனுபவங்கள் 

பென்குயினில் உள்ள கஃபேக்கள் மற்றும் உணவகங்களில் டாஸ்மேனியாவின் புதிய கடல் உணவுகள், பண்ணை விளைபொருட்கள், மற்றும் கைவினை பீர் ஆகியவற்றை ருசிக்கலாம். மேட்ஸ் கஃபே (Mads Café) அல்லது உள்ளூர் பேக்கரிகளில் டாஸ்மேனிய பேஸ்ட்ரிகளை முயற்சிக்கலாம்.

 

நடைபயணம் மற்றும் இயற்கை ஆய்வு 

டயல் ரேஞ்சில் உள்ள பல்வேறு நடைபயண பாதைகளை ஆராயுங்கள். இவை எளிதான நடைப்பயணங்கள் முதல் சவாலான மலை ஏறுதல் வரை உள்ளன. 

மவுண்ட் மாண்ட்கோமரி நடைப்பயணம், நகரத்தின் முழு காட்சியை வழங்குகிறது.

 

பென்குயின் பொது நூலகம் மற்றும் வரலாற்று மையம்

உள்ளூர் வரலாறு மற்றும் பென்குயினின் மர வியாபார காலத்தைப் பற்றி அறிய இந்த சிறிய மையத்தைப் பார்வையிடலாம்.  பழைய புகைப்படங்கள் மற்றும் கலைப்பொருட்கள் அங்கே இருக்கின்றன.

 

சைக்கிள் ஓட்டுதல் 

பென்குயினின் கடற்கரையோர பகுதிகள் சைக்கிள் ஓட்டுவதற்கு ஏற்றவை. உள்ளூர் கடைகளில் சைக்கிள்களை வாடகைக்கு எடுக்கலாம். கடற்கரையை ஒட்டிய பாதையில் சைக்கிள் ஓட்டி, அருகிலுள்ள உல்வர்ஸ்டோன் வரை செல்லலாம்.

 

பிற ஈர்க்கக்கூடிய அம்சங்கள்

பென்குயின் கருப்பொருள் அலங்காரங்கள்

நகரம் முழுவதும் பென்குயின் கருப்பொருள் குப்பைத் தொட்டிகள், பெஞ்சுகள், மற்றும் தெரு அலங்காரங்கள் உள்ளன. இவை பயணிகளுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றன. இவற்றை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிரலாம்.

 

நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் 

பென்குயின் ஆண்டு முழுவதும் உள்ளூர் நிகழ்வுகளை நடத்துகிறது, குறிப்பாக கோடைகாலத்தில். 

பென்குயின் ரெகாட்டா (கோடைகாலத்தில்), இதில் உள்ளூர் சமூகம் ஒன்றிணைந்து படகுப் போட்டிகள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

 

அருகிலுள்ள ஈர்ப்புகள் 

பென்குயினுக்கு அருகில் உள்ள உல்வர்ஸ்டோன் (10 நிமிட பயணம்) மற்றும் பர்னி (20 நிமிட பயணம்) நகரங்களை ஆராயலாம். 

உல்வர்ஸ்டோன்: லெவன் கேன்யன் மற்றும் உள்ளூர் கஃபேக்கள். 

பர்னி: பர்னி பார்க் மற்றும் விஸ்கி டிஸ்டிலரிகள்.

 

பயண குறிப்புகள்

 பயண நேரம்: கோடைகாலம் (டிசம்பர்-பிப்ரவரி) பென்குயினைப் பார்வையிட சிறந்த நேரமாகும், ஏனெனில் வானிலை சூடாகவும், பல நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் இருக்கும். 

 

1875 ஆம் ஆண்டு பென்குயின் நகரம் தோன்றியது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 1975 ஆம் ஆண்டு அதன் நினைவாக த பிக் பென்குயின் சிலை வடிவமைக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டு மேற்சொன்ன அங்கீகாரம் பென்குயின் சிலைக்குக் கிடைத்துள்ளது. நகரத்தின் 150 ஆவது ஆண்டு விழாவை இந்த வருடம் மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். உள்ளூர் மக்கள் கருப்பு-வெள்ளை உடைகளை அணிந்தனர். கூடுதலாக பென்குயின் முகமூடிகளை அணிந்து வலம் வந்தனர்.

 

*******

Comments


© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page