புற்று - கதை வாசிப்பு அனுபவம்
- உயிர்மெய்யார்

- Aug 7
- 6 min read
Updated: Aug 9

எழுத்தாளர் பாவண்ணன் எழுதிய “நயனக்கொள்ளை” சிறுகதைத் தொகுப்பு
சந்தியா பதிப்பகம், சென்னை. (2023)
உவமானங்களும் உவமைகளும்
கதையமைப்பும் கருத்துகளும்
புற்று
உயிர்மெய்யார்
07.08.2025
மெல்பர்ன்
முதலில் கதைச் சுருக்கம்.
பிறகு கதையில் மெல்பர்ன் வாசகர் வட்டத்தில் நாங்கள் பார்த்த உவமானங்கள், உவமைகள், கதையமைப்பு உத்திகள் மற்றும் கருத்துகளைப் பகிர்கிறேன்.
கதைச்சுருக்கம்
தன் தாத்தா கொடுத்து, தூக்கி வந்த பானை உடைந்து, அதில் இருந்த மீன்களை எல்லாம் வாய்க்காலுக்குள் அள்ளிப் போட்ட கனவை, நான்கு பிள்ளைகளுக்கு அம்மாவான தையற்காரி அஞ்சலை பார்வதியிடம் சொன்னாள். கனவை நினைத்து பயப்படும் அஞ்சலைக்கு மன ஆறுதல் கொடுக்க பார்வதி, ‘வர்ற ஆடி மாசம் அம்மனுக்கு கூழ் ஊத்து அக்கா!’ என்று சொல்கிறாள்.
இறந்து போன அஞ்சலையின் கணவன் முத்துசாமி பற்றிய நினைவுகளில் அஞ்சலி மூழ்கிப் போகிறாள்.
இரண்டு தையற் கருவிகளை வைத்து தையற்கடை வைத்திருக்கிறான் முத்துசாமி. வாடிக்கையாளர்கள் குறைந்ததால், ஒரு தையற் கருவியை விற்க முடிவு செய்கிறான். கூட வேலை பார்த்தவனும் தனிக் கடை வைக்க ஆயத்தமாகிவிட்டான். அப்பொழுது அஞ்சலையின் அண்ணன் பொன்னையன் முத்துசாமியைப் பார்த்து, இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். அஞ்சலை வைத்து புளிக்கொழம்பு அவர்கள் அம்மா வைக்கும் கொழம்பு போலவே இருக்கிறது என்று பொன்னையன் பாராட்டுகிறான்.
ஒரு தையற் கருவியை, முத்துசாமி சொல்லும் விலையோடு கூட ஐந்நூறு ரூபா கொடுத்து வாங்கிக் கொள்வதாக பொன்னையன் சொல்கிறான். விழுப்புரத்துக்குப் போய், அப்துல் சாதிக் என்பவரிடம் ரெடிமெட் துணிகள் தைக்கும் வேலையைப் பெறுமாறும் பொன்னையன் சொல்கிறான். கிளம்ப தயாராகும் போது பள்ளியிலிருந்து நான்கு பிள்ளைகளும் வந்து விடுகிறார்கள். பொன்னையன் அவர்களை விசாரிக்கிறான்.
அடுத்த நான்கு நாட்களில், பொன்னையன் ஒரு தையற் கருவியை எடுத்துச் செல்ல, முத்துசாமி அந்தக் கடையைக் காலி செய்துவிட்டு, எல்லாப் பொருட்களையும் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து விடுகிறான். அப்துல் சாதிக் வழி நிரந்தர வருமானம் வர, அஞ்சலையும் துணி தைக்கக் கற்றுக் கொள்கிறாள்.
ஒரு நாள் முத்துசாமி வயிற்றுவலி எனப் படுத்தான். அஞ்சலையே அப்துல் சாதிக்குக்கு தைத்துக் கொடுத்தாள். அப்துல் சாதிக் விசாரித்த பொழுது, ‘அவருக்கு குடிக்கிற பழக்கம் இல்லன்னா, வேறு வியாதியா இருக்கும். எதுக்கும் பாண்டிச்சேரிப் போய் காட்டுங்க’ என்கிறார்.
எதேச்சையாக வந்த பொன்னையன் வேனில், முத்துசாமியை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி மருத்துவமனைக்குச் சென்றார்கள். பல சோதனைகளுக்குப் பிறகு வயிற்றில் புற்று இருப்பதாகச் சொன்னார்கள். முத்துசாமியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, எதிர் படுக்கை அம்மாவின் ஆதரவால், பிள்ளைகளைப் பார்க்க வீட்டிற்கு வந்தாள் அஞ்சலை. அதுவரை பக்கத்து வீட்டு பார்வதி பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒரு வருஷம் ஓடி விட்டது. ஆஸ்பத்திரிக்கும் வீட்டிற்கும் அலைந்து அலைந்து அஞ்சலை உருக்குலைந்துப் போனாள். அதற்குள் பெரியபையன் நேசமணி தைக்கக் கற்றுக் கொண்டிருந்தான். கடைசியில் உயிரற்ற உடலாகத்தான் வந்து சேர்ந்தான் முத்துசாமி. பொன்னையன் தான் காரிய செலவு எல்லாம் செய்தான். காரியம் மடிந்து சில நாட்களில் அப்துல் சாதிக் கடைக்கு அஞ்சலையும் நேசமணியும் போனார்கள். துணி தைக்க துணிகளை வாங்கிக் கொண்டு போகும் போது, அண்ணன் பொன்னையனைப் பார்த்தார்கள். இனி நேசமணி அடுத்த வருடம் தான் பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டும் என்றும் அதனால் ஒத்தாசைக்காக அவனை அழைத்து வந்ததாகவும் சொல்கிறாள். நேசமணியை அவனுக்கு உதவியாக அனுப்புமாறு பொன்னையன் கேட்கிறான். கூடவே, அதுவரை அஞ்சலைக்குச் செய்து வந்த பணஉதவியை, திருப்பி பொன்னையனின் மனைவி கேட்பதாகவும் சொல்கிறான். அஞ்சலைக்கு நாக்கு உலர்ந்து விட்டது. ‘திடீர்னு கேட்டா பணத்த எப்படிண்ண பொரட்டமுடியும்?’ என்று கேட்க, ‘ஒன்ன யாரு பணத்த பொரட்ட சொன்னா, ஒனக்கும் எனக்குமா ஆளுக்கொரு துண்டு நெலம் எழுதி வச்சாரே அப்பா, அதை எம்பேர்ல பதிவு செய்ய ஒரு கையெழுத்து போட்டா போதும். ஒன் அண்ணியோட ஒரே புடுங்கலா இருக்கு’ என்றான் பொன்னையன்.
அடுத்த வாரம் நிலப் பதிவு முடிந்தது. நேசமணியையும் அழைத்துச் சென்று விட்டான். அடுத்த ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கும் சமயத்தில் நேசமணியை அனுப்பவில்லை. கடிதம் எழுதியும், போன் செய்தும் பொன்னையன் விடவில்லை. ஒரு தீபாவளிக்கு நேசமணி வந்த போது கறுத்து ஒல்லியாக இருந்தான். அஞ்சலை கேட்ட எந்தக் கேள்விக்கும் மழுப்பலாக பதில் கூறினான். தன் தம்பிகளை நன்றாகப் படிக்கவேண்டும் என அறிவுறுத்தினான். பிறகு பொங்கலுக்கும் வரவில்லை. அஞ்சலைக்கு பொன்னையனிடம் பேசப் பிடிக்கவில்லை.
பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வந்தாள். இன்று தான் அந்த பானை உடைந்து மீன்கள் வாய்க்காலில் விழுந்த கனவு வந்த நாள். சாப்பிடத் தட்டில் சோறு போட்டு, நாலு வாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வாசலில் நேசமணி! அவனுக்கும் ஒரு தட்டில் சோறு போட்டாள். சாப்பிட்டு விட்டு கட்டுப் பணத்தை எடுத்து அம்மா கையில் கொடுத்தான். ‘இது நானா சம்பாதிச்ச பணம். நேர்மையா உழைச்சி சம்பாதிச்ச பணம். தம்பிங்க மேல்படிப்புக்கு இத சேத்து வை’ என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
அஞ்சலையின் பார்வை அவள் கணவன் புகைப்படத்தில் பதிந்தது என்று கதை நிறைவுற்றது.
உவமானங்கள்
எடுத்தவுடன் கதை ஒரு கனவுடன் துவங்குகிறது. அஞ்சலையின் தாத்தா ஏரிக்குள்ள தூண்டில் போட்டு புடிச்சி குடுத்த மீன்களை ஒரு பானையில் தூக்கி வருகிறார் பார்வதி. அந்தப் பானை தான் அவள் குடும்பம். மீன்கள் தான் அவளது பிள்ளைகள். இரண்டு கோழிகள் முட்டி கீழே விழுகிறாள். பச்சையப்பனும் அண்ணியும் தான் இரண்டு கோழிகள். மீன்கள் கீழே விழுந்து பதறுகின்றன. அஞ்சலையின் கணவர் முத்துசாமி இறக்க, மகன் நேசமணி படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகிறான். குடும்ப உறுப்பினர்கள் மீன்கள் போல வாழ்க்கையில் பதறிப் போகிறார்கள். வாய்க்காலில் ‘பொழச்சிப் போ’ என மீன்களை எடுத்து விடுகிறாள். அப்துல் சாதிக் மூலம் தையல் ஆர்டர்கள் கிடைக்க, நேசமணி தம்பிகளின் படிப்புக்காகப் பணம் கொடுக்க, வாழ்க்கைச் சக்கரம் உருளத் தொடங்குகிறது. மீன்கள் வாய்க்காலில் விழுந்து உயிர் பிழைத்துக்கொள்வது போல.
முழுக் கதையையும் இந்த கனவில் சொல்லிவிடுகிறார் பாவண்ணன்.
புற்று என்று பெயர் வைத்திருப்பதே ஓர் உவமானம் தான். புற்று நோய், கொஞ்சம் கொஞ்சமாக பரவி, ஒரு கட்டத்தில் ஆளையே சாய்த்து விடும். அது போல அஞ்சலை வீட்டில், வறுமை முதலில் எட்டிப் பார்க்கும். கொஞ்சம் தண்ணி கெடைக்குமா என்று கேட்டு, திண்ணையில் உட்காரும். அசதியாக இருக்கிறது என்று ஹாலில் பாயைப் போட்டு படுக்கும். பிறகு, வறுமை, முற்றத்தில் உள்ள அடிபைப்பில் தண்ணியடித்து குளித்து முழுகி, அடுக்களையில் வயிறு முட்ட சாப்பிட்டு, ரேடியோவை அலற விட்டு, மோகினி ஆட்டம் ஆடும். கடைசியில் அடுப்பில் இருந்து கொள்ளிக்கட்டையை எடுத்து கூரையில் வைத்து விட்டு, தெருவழியே ஓடும். இது தான் அஞ்சலையின் வாழ்க்கையில் நடந்தது. அதனால் ‘புற்று’ என்று சரியாகத் தான் பெயர் வைத்திருக்கிறார் பாவண்ணன்.
உவமை
அஞ்சலை மிஷினை நிறுத்திவிட்டு எழுந்து நின்று கைகால்களை உதறிக்கொண்டாள். “அவள் மடிமீது விழுந்திருந்த துணிப்பிசிறுகள் கோழியிறகுகள் மாதிரி சிதறி விழுந்தன” என்று எழுதுவார். வேறு உவமைகள் ஏதும் இக்கதையில் இருப்பதாக என் கண்ணில் படவில்லை.
கதையமைப்பு
கதாபாத்திரங்களை உருவாக்குதல்
Character Arc என்கிற கதாபாத்திரத்தின் வளைவு அல்லது கதாபாத்திரத்தின் பயணம் ஒரு கதையில் மிக முக்கியம். ஒரு கதாபாத்திரம் எப்படி அறிமுகமாகி பிறகு கதையின் ஓட்டத்தில் சிறிது சிறிதாக மாறி வேறுவிதமாக நிற்கிறது என்பதை உற்று நோக்கவேண்டும். கதாசிரியர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஒரு ethical dilemma -வுக்குள் (அறநெறி குழப்பத்திற்குள்) தள்ளி விடுவார். அந்தக் கதாபாத்திரம் அறநெறி என்கிற உருண்டையில் ஏதாவதொரு புள்ளியில் நிற்கும். அல்லது ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு மாறும்.
நீங்கள் கதாசிரியராக வேண்டும் என்றால், இக்கலையை நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும். சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறேன்.
பொன்னையன் கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்வோம். துவக்கத்தில் தன் தங்கையின் மேல் பாசம் காட்டுவதாக வாசகருக்குத் தெரியும். அஞ்சலையின் கணவனது தையற் தொழில் நசிந்து வருவதால், அந்தத் தையற் கருவியை அவனே வாங்கிக்கொள்வான். சிறிது கூடுதற் பணம் கூட கொடுப்பான். அவனுக்குத் தெரிந்த அப்துல் சாதிக் என்பவரிடம் ஏற்றுமதி துணி தைக்க வாய்ப்பு வாங்கிக் கொடுப்பான். கணவனை பாண்டிச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, பொன்னையன் வாகனம் தான் பயன்படும். ‘ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இல்லைனா, கூட பொறந்து என்னம்மா புரோஜனம்?” என்று கூட ஒரு தடவை சொல்வான். கணவன் இறந்த பிறகு கூட காரியத்திற்கு பொன்னையன் தான் செலவு செய்வான். இதுவரை பொன்னையன் அஞ்சலையின் காப்பாளனாக வலம் வருகிறான்.
இந்த இடத்தில் ஒரு திருப்புமுனை நடக்கிறது. கணவன் இறந்து பிறகு, அஞ்சலையே தன் பெரிய மகன் நேசமணியை அழைத்துக் கொண்டு, அப்துல் சாதிக்கிடம் துணிகளை கொடுக்கச் செல்லும் போது, பொன்னையன் நேசமணியை தனக்கு ஒத்தைசையாக இருக்க அனுப்புமாறு கேட்பான். அதோடு, அதுவரை அஞ்சலைக்கு, இதுவரை செய்து வந்த பண உதவியைத் திருப்பித் தருமாறு (தன் மனைவி கேட்பதாகக்) கேட்பான். அஞ்சலை விழி பிதுங்கி நிற்கும் போது, “ஒன்ன யாரு பணத்த பொரட்ட சொன்னா, ஒனக்கும் எனக்குமா ஆளுக்கொரு துண்டு நெலம் எழுதி வச்சாரே அப்பா, அதை எம்பேர்ல பதிவு செய்ய ஒரு கையெழுத்து போட்டா போதும். ஒன் அண்ணியோட ஒரே புடுங்கலா இருக்கு’ என்பான் பொன்னையன். நிலப்பதிவு நடந்து விடும். வாசகர் கண்களில், காப்பாளனிலிருந்து சற்றே சின்ன வில்லனாக உரு மாறுவான்.
அடுத்து, சின்ன வில்லன் என்பதிலிருந்து வில்லன் என்கிற இடத்திற்கு மாறுகிறார் பொன்னையன். பள்ளிக்கு அனுப்பவேண்டிய நேரத்திலும் நேசமணியை அனுப்பவில்லை. அவனது எதிர்காலம் படிப்பிலிருந்து குழந்தைத் தொழிலுக்கு என்று மாறி விடுகிறது. கதையின் முடிவில், பொன்னையனைப் பார்ப்பதையும் பேசுவதையும் நிறுத்திக் கொள்கிறாள் அஞ்சலை. பார்த்தீர்களா? இது தான் கதாபாத்திரத்தின் வளைவு அல்லது பயணம் என்று பொருள்.
இன்னொரு எடுத்துக்காட்டும் சுவாரஸ்யமாக இருக்கும். கதாபாத்திரத்தின் பயணத்தை புரிந்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
அது அஞ்சலையின் மூத்த மகன் நேசமணியினுடையது. பச்சையப்பன் முதல் தடவை வீட்டிற்கு வந்த பொழுது நேசமணி நன்கு படிக்க வேண்டும் என்று சொல்ல, அவன் வகுப்பில் முதல் ரேங்க் என்று அஞ்சலை சொல்வாள். பிறகு அஞ்சலை மருத்துவமனையிலிருந்து திரும்பி வரும் பொழுது, பக்கத்து வீட்டு பார்வதி மூன்று பையன்களை வரிசையாக உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருப்பாள். ஆனால் நேசமணி மட்டும் உள்ளே படித்துக் கொண்டிருப்பான். இப்படி நேசமணியை நல்ல படிப்புக்காரனாக கட்டுவார் கதாசிரியர்.
அப்பொழுது வரும் அந்தத் திருப்புமுனை. பொன்னையன் அவனை ஒத்தாசைக்காக, விடுமுறை நாட்களில் அழைத்துப் போவான். அதுவே அஞ்சலைக்குப் பிடிக்காது. பிறகு அவன் பள்ளிக்குப் படிக்க அனுப்பப்படாமல், தொடர்ந்து தொழிலிலேயே ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுவான் பொன்னையான். கதையின் பின்பகுதியில் நேசமணி தன் தம்பிகள் நன்றாகப் படிக்கவேண்டும் என்று பணம் சேர்த்து வந்து அம்மாவிடம் கொடுப்பான். எதும் பேசமாட்டான். கொடுத்து விட்டு தொழில் செய்யப் போய்விடுவான். இப்படி முதல் ரேங்க் வாங்கி நன்கு படிக்கும் படிப்பாளி கதாபாத்திரத்திலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து குழந்தைத் தொழிலாளி ஆகி, தன் தம்பிகள் நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக, முழுநேர வேலை செய்யும் ‘அப்பா’ வாக அந்தக் கதாபாத்திரம் மாறிவிடும்.
கருத்து
இன்னொருவர் வீட்டில் சில காலம் வாழ்ந்து பார்த்திருக்கிறீர்களா? எனக்குத் தெரிந்த ஓர் உறவுக்காரப் பையனைப் படிக்க வைக்கிறேன் பேர்வழி என்று ஒருவர் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். (ஏனென்றால், அவர் அந்தப் பையன் வீட்டில் இருந்துதான் படித்தார். அதன் நன்றிக்கடனாக, அந்த வீட்டுப் பிள்ளைகளில் ஒருவரை தான் செலவு செய்து படிக்க வைக்கிறேன் என்று அழைத்துச் சென்றார்). அந்தப் பையனுக்கு தட்டில் சோறு போட்டு, கதவைத் தாண்டி வைப்பாள் அவரது மனைவி. போட்டுக்க வருடத்திற்கு ஒரு முறை துணி வாங்கிக் கொடுப்பார். அதனால் பழைய கால்சட்டையில் பொத்தான் போடாமல், இரண்டு முனைகளையும் இழுத்து முடிச்சி போட்டுக்கொண்டுதான் பள்ளிக்கூடத்திற்கு அவன் போவான். காய்ச்சல் வந்தால், தானாக போர்வையை போர்த்திக் கொண்டு, சுவர் ஓரம் ஒண்டிப்படுத்துக்கொள்வான். வயிறு வலி என்றாலும் அவர்களது வீட்டில் அவன் அதை சொல்லமாட்டான். இது நிஜத்தில் நடந்தது. இதைப் போலத்தான் நேசமணி, அவனது மாமா வீட்டில் கஷ்டப்பட்டிருப்பான் போல. கூடுதலாக தொழில் வேறு. அதனால் அவன் வீட்டிற்கு வந்த போது, அம்மா கேட்கும் கேள்விகளுக்கு மௌனமே பதிலாக இருக்கும். வீடு என்றால், அவர்வர் வீடு தான் வீடு!
‘பங்கு’ என்ற கதையிலும், இந்த ‘புற்று’ என்ற கதையிலும் பெண் கதாபாத்திரங்களே குடும்பச் சொத்தை இழக்கிறார்கள். இரண்டு கதையிலும் பெண் கதாபாத்திரங்கள் அவர்களுக்கு எதிராகச் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆண்கள் அந்தப் பெண்களைப் பயன்படுத்தி அபகரித்துக் கொள்கிறார்கள். பெண் கதாபாத்திரங்களாவது ‘நேர்மையாக’ வில்லன் கதாபாத்திரங்களைச் செய்கிறார்கள். ஆனால் ஆண்கள் ‘கோழைகளாக’ இருந்து கொண்டு, ஏமாற்றி, பெண்களைக் காரணம் காட்டி, தாங்கள் தப்பித்துக் கொண்டு, அதே வேலையைச் செய்கிறார்கள். பங்கு கதையி்ல் தனலெட்சுமியின் அம்மா, அண்ணிகள். அண்ணன்கள் அமைதியாக இருந்து காரியத்தைச் சாதிக்கிறார்கள். புற்று கதையில் பச்சையப்பன், அண்ணியின் பெயரைச் சொல்லிக் காரியத்தைச் சாதிக்கிறான். இப்பொழுதெல்லாம் இது போன்று நடக்காது என்றே நினைக்கிறேன். தனலட்சுமி போல (பங்கு கதையில்) வேறு சாதி திருமணம் செய்தாலும் சரி, அஞ்சலை போல (புற்று கதையில்) வறுமையில் வாடினாலும் சரி, தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
பொருளாதார நோக்கில், இந்தக் கதையை அணுகிப் பார்க்கலாம். நாங்கள் பள்ளிக்குப் போகும் சின்னப் பையன்களாக இருந்த சமயத்தில், ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும், திருவிழா சமயத்தில், அப்பா எனக்கும் என் தம்பிகளுக்கும் கால்சட்டை, சட்டை வாங்க துணி எடுத்து, தையற்காரரிடம் கொடுத்து தைக்க வைப்பார். வருடத்திற்கு ஒரு கால்சட்டை, ஒரு சட்டை. அப்பொழுது துணிகளாக வாங்கி, நம் அளவுக்கு தைத்துக் கொள்ளவேண்டும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமும், இயந்திர மயமும், தாராளமயமும், உலகமயமாக்கலும் இந்த உலகத்தை தொண்ணூறுகளில் விழுங்கிய போது தையற்காரர்கள் மறைந்து போனார்கள். ரெடிமேட் ஆடைகள் குவியத்தொடங்கின. பெரிய முதலீடு போட முடிந்தவர்கள் மட்டுமே அந்த வெள்ளத்தில் நீந்தி கரையேற முடிந்தது. தனியாக தையற்கடை வைத்து முதலாளியாக இருந்தவர்கள், ஆயிரத்தில் ஒருவராக, பெரிய ஹாலில் உட்கார்ந்து தொழிலாளியாக ஆனார்கள். இதையும் நாசுக்காக பாவண்ணன் வெளிப்படுத்தியிருப்பார்
ஆமாம்! வார்த்தைகள் வழியே இதயத்தைத் தொட்டு, மூளையை அதிர வைக்கும் வித்தைத் தெரிந்தவர் பாவண்ணன்.
*********



பொருளாதார நோக்கில், இந்தக் கதையை அணுகிப் பார்க்கலாம். நாங்கள் பள்ளிக்குப் போகும் சின்னப் பையன்களாக இருந்த சமயத்தில், ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும், திருவிழா சமயத்தில், அப்பா எனக்கும் என் தம்பிகளுக்கும் கால்சட்டை, சட்டை வாங்க துணி எடுத்து, தையற்காரரிடம் கொடுத்து தைக்க வைப்பார்.
...ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமும், இயந்திர மயமும், தாராளமயமும், உலகமயமாக்கலும் இந்த உலகத்தை தொண்ணூறுகளில் விழுங்கிய போது தையற்காரர்கள் மறைந்து போனார்கள். - எவ்வளவு பெரிய கொடுமை. எவ்வளவு எளிதாக அரங்கேற்றப்பட்டுவிட்டது. வேதனைதான்.
படித்து முடித்துவிட்டேன் குரு.
பெண் கதாபாத்திரங்களாவது ‘நேர்மையாக’ வில்லன் கதாபாத்திரங்களைச் செய்கிறார்கள். ஆனால் ஆண்கள் ‘கோழைகளாக’ இருந்து கொண்டு, ஏமாற்றி, பெண்களைக் காரணம் காட்டி, தாங்கள் தப்பித்துக் கொண்டு, அதே வேலையைச் செய்கிறார்கள்.
இந்தக் கருத்தில் நான் சற்று மாறுபடுகிறேன். ஏமாற்றுவதிலும், வில்லத்தனத்திலும் ஆண் பெண் நேர்மையான ஏமாற்றுதல் என்பதெல்லாம் இல்லை.
இன்றைய காலகட்டத்தில், அன்பும் இரக்கமும் காட்டும் எவரையும் ஒரு கட்டத்தில் எப்படி ஏமாற்றலாம் என்றே எண்ணுகின்றனர். ஏமாற்றுவதில் ஆண் பெண் சிறியவர்கள், பெரியவர்கள் என்ற வேறுபாடு இல்லை.
இவை கதையின் மீதான என் கருத்துகள்.