பொறுமை
- உயிர்மெய்யார்

- Jun 5
- 1 min read
Updated: Jun 13

விதையைப் போட்டு தினமும் நீங்கள்
எடுத்துப் பார்த்தால் செடிகள் முளைக்காது.
அதையே மூடி பொறுமை காத்தால்
அன்பே! உனது தோட்டம் கொள்ளாது.
விறகை எரிக்க அணைக்க என்று
விளையாடி வைத்தால் உலையும் கொதிக்காது.
அருகே இருந்து அமைதி காத்தால்
அறுசுவை உணவு எங்கும் போகாது.
தூண்டில் வீசி அடிக்கடி நீங்கள்
தூக்கிப் பார்த்தால் மீன்கள் கடிக்காது.
தூண்டில் தக்கையில் கண்ணாய் இருந்தால்
துள்ளும் மீன்கள் குளத்தில் இருக்காது.
நடையும் ஓட்டமும் சேர்ந்தே விரட்ட
நந்தவனத்தில் பூச்சி கிடைக்காது.
தொடையை மடித்துத் தவமாய் இருந்தால்
பட்டாம் பூச்சி அங்கே பறக்காது.
சினமும் வெறுப்பும் தினமும் உமிழ்ந்தால்
சிக்கலாகி உறவுகள் நிலைக்காது
சிந்தனை செய்க! பொறுமை இருந்தால்
சிறிதும் வாழ்வில் நிந்தனை இருக்காது.
(31.05.2025)
மெல்பர்ன்



Comments