பத்தாவது நாளில் புலி - கதை - வாசிப்பு அனுபவம்
- உயிர்மெய்யார்

- Aug 18
- 2 min read

ஈராக்கின் கிறிஸ்து - உலகச் சிறுகதைகள் - தொகுப்பும் மொழியாக்கமும் - கார்த்திகைப் பாண்டியன் - எதிர் வெளியீடு - 2023.
பத்தாவது நாளில் புலிகள்
புலி ஒன்று கூண்டில் அடைபட்டுக்கிடக்கிறது. அதற்கு உணவு கொடுப்பவன் மற்றவர்களிடம், “காட்டில் புலி தன் வீரத்தைக் காட்டும். ஆனால் என் கையில் உணவு இருக்கிறது. அதனால் என்னிடம் எப்படி தன்மையாக நடந்துக் கொள்ளப் போகிறது என்று பாருங்கள்” என்று சொல்கிறான். புலி அதிகாரத்தோடு உணவைக் கேட்க, தயங்கி தாழ்ச்சியோடு கேள் என்கிறான். அது மறுக்கிறது. உணவு கொடுக்காமல் போகிறான்.
அடுத்த நாள். பசியென்பதை ஒத்துக் கொள் என அவன் சொல்ல, ஆமாம் பசிக்கிறது என புலி சொல்ல நிறைய மாமிசம் கொடுக்கிறான்.
மூன்றாவது நாள். நான் ஆணையிடுவதைச் செய்யவேண்டும் என்று சொல்கிறான். புலி மறுக்கிறது. நில் என்றால் நிற்க வேண்டும். இவ்வளவு தானே என்று புலி ‘நில்’ என்றவுடன் நிற்கிறது. மாமிசம் கொடுக்கிறான்.
நான்காவது நாள். நான் பசியோடு இருக்கிறேன். என்னை நில் என்று ஆணையிடு என்று புலி கேட்கிறது. இல்லை பூனைக்குட்டி போல் மியாவ் என்று கத்து என்கிறான். அது கேவலமாக இருக்கும். வேணுமென்றால் உறுமுகிறேன் என்று உறுமுகிறது. அவன் விடவில்லை. மியாவ் என்ற கத்த கற்றுக்கொள் என்று சொல்லிவிட்டு, புலியை பசியோடு விட்டுவிட்டுப் போகிறான். புலி காட்டை நினைத்துக் கொள்கிறது.
ஐந்தாவது நாள். மியாவ் என்று கத்தினால் புத்தம் புது மாமிசம் கிடைக்கும் என்கிறான். புலி மியாவ் என்று கத்தியது. மாமிசம் கொடுத்தான்.
ஆறாவது நாள். அவன் கூண்டருகே வந்ததுமே புலி மியாவ் என்று கத்தியது. “கழுதையைப் போல கனை” என்கிறான். நான் புலி. என்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படும். இப்படிக் கனைப்பது அவமானம் என்றது புலி. அவன் போய்விட்டான். புலி காட்டை நினைத்துக் கொள்கிறது.
ஏழாவது நாள். கழுதையைப் போல் கனைத்தால் இறைச்சி உண்டு என்கிறான். புலி கழுதையைப் போல் கனைக்கிறது. கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லி விட்டு கொஞ்சம் மாமிசம் கொடுத்து விட்டுப் போகிறான்.
எட்டாவது நாள். நான் ஓர் உரையைப் பேசுவேன். உரையில் முடிவில் கைதட்ட வேண்டும் என்றான். சரி என்றது புலி. ஏதோ ஒரு நியாயத்தைப் பற்றிப் பேசுகிறான். எனக்குப் புரியவில்லை என்கிறது புலி. இருந்தாலும் தட்டி வைக்கிறேன் என்று ஒப்புக்குத் தட்டியது. ம்ஹூம்! இது சரி இல்லை. நீ உற்சாகமாகக் கைத் தட்டவில்லை என்று சொல்லிவிட்டு உணவு ஒன்றும் தராமல் போய்விடுகிறான்.
ஒன்பதாவது நாள். ஒரு பை நிறைய வைக்கோலை வீசுகிறான். பசியில் அது சாப்பிட முயற்சிக்கிறது. அதன் சுவையில் அருவருப்புடன் முதலில் நகர்ந்தாலும், பிறகு அதற்கு பழகிக்கொண்டு வைக்கோலைச் சாப்பிடுகிறது.
பத்தாவது நாள். புலி குடிமகனாகவும், கூண்டு நகரமாகவும் மாறியது எனக் கதை நிறைவுறுகிறது.
கதை முழுவதுமே ஓர் உவமானம். சராசரி வாழ்க்கையை நினைக்கும் போது அவமானம்.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்கிற பழமொழியை இந்த அரசாங்கமும், பெரு கம்பெனிகளும், மதத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் பொய்யாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
*************



Comments